Advertisement

ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி !
பார்த்திபன் கனா 6
விஷ்ணுவர்த்தன்… ராஜலஷ்மியை மணம் முடிக்கவிருக்கும் மணவாளன்.. பொறியியல் முடித்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை கோவையில் நடத்தி வருபவன்.. வந்த வரன் வரமாய் அமைந்து விட நிச்சயத்திற்கு நாள் குறித்தனர் பெரியோர்.
மாப்பிள்ளை வீட்டினர் விடைபெற்று கிளம்ப… விஷ்ணு “நான் அவர்கிட்ட பேசிட்டு வரேன்…” என்றபடி ராஜாவிடம் வந்தான்.
வந்தவர்களை வரவேற்றவதோடு தன் அறைக்குள் அடைந்து கொண்டான்… தன்னால் சங்கடம் எதுவும் விளைவதில் அவனுக்கு சற்றும் விருப்பவில்லை. விடை கொடுக்கவென வந்தவனைப் பார்த்து விஷ்ணு இவ்வாறு சொல்லிட… அவன் வீட்டினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
விஷ்ணுவின் விழிகளில் இக்காட்சி விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் ராஜாவைத் தள்ளிக் கொண்டு போனான் தோட்டத்துப் பக்கம்.
“எங்கடா போய்த் தொலைஞ்ச இத்தனை நாளா????” வாகாய் வயிற்றில் ஒரு குத்து விட..
“டேய் மா…மா…. நான் சொல்ற…த கொஞ்..சம் கேளு….” தலைவன் தடுத்திட முயல..
“கேக்க முடியாது டா….” என்றவன் இன்னும் இன்னும் குத்துகளைக் கொடுக்க.. கொள்முதல் செய்து கொண்டான் தோழனவன்.
அதன் பின் அவனைத் தழுவிக் கொண்டவன் “எப்படி டா இருக்க..” என்றான்.
“நீயே பார்த்து சொல்லேன்!!!” இமை தட்டியும் இதழ் முகிழ்த்தும் சொல்ல..
“நா வந்தது பொண்ணு பார்க்க…”
“அடச்சீ!!!!!” எதிரில் நிற்பவன் எண்ணம் புரிந்து இவன்.
“ஹாஹாஹா!!!!!!!!! நான் அப்படி மீன் செய்யல டா மாமா..” என்றவன்
“ஏன்டா இப்படி பண்ணின… யாருகூடவும் கான்டாக்ட்ல இல்ல… பசங்க உன்மேல கொலைவெறில இருக்காங்க…” என்றவனுக்கு முகிழ்நகை மறுமொழியாக.
ராஜாவும் விஷ்ணுவும் கல்லூரி நண்பர்கள்… பொறியியல் முடித்ததும் விஷ்ணு எம்பிஏ முடித்து தொழிலில் அடியெடுத்து வைத்தான். ராஜா… பொறியியல் முடித்ததோடு தோழர்களுடனான உறவையும் முறித்துக் கொண்டான்.
யாரும் எவ்வழியிலும் இவனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை… என்ன செய்கிறான்… எங்கிருக்கிறான்… எதுவும் தெரியவில்லை. இன்று இவனை இங்கே கண்டதும் கரை புரண்டு ஓடியது இன்ப வெள்ளம் விஷ்ணுவினுள்.
இவன் ராஜா என அழைக்கும் முன் பார்வையாலே தகவல் பரிமாற்றம் செய்து தடுத்துவிட்டான் பார்த்திபன். அதன் பிறகும் காணாமல் போய்விட.. இறுதியில் கிடைத்த வாய்ப்பை இழக்காமல் இங்கே இழுத்து வந்தான் விஷ்ணு.
“சரி அதை விடு… இங்க ஏன்டா உன்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்னு சொன்ன…” இவன் கேட்க
“ராஜி என் தங்கச்சி டா….” என்றான் அவன்.
“என்னடா சொல்ற???” என்றவனுக்குள் அதிர்வலைகள் அங்குமிங்குமாய்…! அவனிடம் அண்ணனைப் பற்றி யாருமே சொல்லியிருக்கவில்லை.. அவ்வளவு ஏன் அண்ணன் இருப்பதாகவே சொல்லவில்லை.
இதுநாள் வரை தன்னைப் பற்றி யாரிடமும் எதுவும் தெரிவித்ததில்லை இவன்.. மறைக்க நினைக்கவில்லை… தக்க தருணம் வரவில்லை. தற்போது வந்திருந்ததால் தன்னை தெரியப்படுத்தினான்.
“உங்க வீட்ல யாருக்கும் என்னைப் பத்தி தெரியாதுன்னா அப்படியே இருக்கட்டும் விஷ்ணு…” அத்தனை வலி அவன் வதனத்தில்.. அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது.
அடையாளத்தை மறைக்கும் அளவிற்கு அவன் என்ன தவறு செய்துவிட்டான்.. புரியவேயில்லை அவனுக்கு…!
“டேய்!!! என்ன பேசுற நீ?? உன் தங்கச்சி டா அவ. அவளுக்கு செய்ய வேற எவனுக்கும் உரிமை இல்ல… நீ தான் உன் தங்கச்சி கல்யாணத்த முன்னாடி நின்னு செய்யுற…”
“அதில்ல டா…”
“வாய மூடு…. ஆனா நீ மட்டும் இனி ஓடி ஒளிஞ்ச…. தேடி வந்து உதைப்பேன்..” அன்பு மட்டுமே அவன் வார்த்தைகளில்..!
மென்முறுவலுடன் தலையசைத்தான் தலைவன். இனி தப்பிப் போக வழியில்லை… தடை விதித்திருக்கிறானே தலைவனின் துணைவன் !
விஷ்ணு விடைபெற்று விட… ராஜா உள்ளே நுழைய வாசல் பக்கம் அவன் தாய் திரண்டிருந்த கண்ணீர்த் துளிகளுடன்.
“சா….. சாரிடா ராஜா…” ஏனோ தான் அவனுக்கு அநியாயம் செய்வதாக இருந்தது அவருக்கு.
“ம்மா…. என்னம்மா நீ….??? இங்க இருக்கவங்க பத்தி தெரியும் தானே… அப்புறம் என்ன..?? இதுக்கெல்லாமா அழுவாங்க…?? வர வர நீ பாப்பாவா மாறிட்டு வர பாரு….” என தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“மாப்பிள்ளை உன் ப்ரெண்டா…..”
“ம்ம் ஆமாம்மா.. நம்ம ராஜி சொல்லும் போதே தெரிஞ்சது… ரொம்ப நல்லவன் மா.. நம்ம ராஜியை நல்லா பார்த்துப்பான்… நம்ம வீட்ல எப்படியோ அப்படித் தான் அங்கயும் ராஜிம்மா ராஜ்ஜியம்மாத் தான் இருக்கும்….”
அவன் சொல்லச் சொல்ல… அத்தனை நாள் மனதை அரித்த விடயம் நீங்கி மலர்ந்தது மகிழ்வு. அவருக்கும் பார்த்துப் பார்த்து தானே திருமணம் செய்தார்கள்.. ஆனால் மாப்பிள்ளை பிழையாகி… அவர் வாழ்க்கையே பிழையாகியது. அவரது மட்டுமா?? அவர் மாணிக்க மைந்தனின் வாழ்க்கையும் அல்லவா??
“ம்மா….”
“சொல்லுடா…”
“அவருக்கு ஏதும் பிரச்சனையா???”
“யாருக்கு…”
“ம்ம்.. உன் பிராணநாதனுக்கு…”
அவர் முறைக்க…. “ப்ச்… சொல்லும்மா…..”
“அவருக்கு என்னடா பிரச்சனை??? ஒண்ணுமில்லையே..”
படிந்த யோசனையுடன் பார்வதியைப் பார்த்து “உடம்புக்கு…??”
“ஒண்ணுமில்லையே ராஜா…..” என்றவரும் யோசனையுடன் அவனைப் பார்க்க…
“இல்ல மா… நீ அவர்கிட்ட பேசு…. ஆள் ஒரு மாதிரி இருக்காரு… என்னனு கேளு..”
இது தான் ராஜா…. அவரது சிப்பிக்குள் உதித்த உன்னதமான முத்து. அவருக்கும் கண்ணில் பட்டது அவர் கண்ணாளனின் இளைத்த தோற்றம்.. கருத்தில் பதியவில்லை. ஆனால் இவன்… அவரை ஒதுக்கி வைத்தாலும் அவருக்கு ஒன்றென்றால் முன் நிற்பான். இப்போது கூட யாருக்கும் எதுவும் கருத்தில் பதியவில்லை. ஆனால் இவன் ??? இவன் விலகிட நினைத்தாலும் பந்தமும் பாசமும் இவனை விலகிட விடாது.
எதுவும் பேசாமல் பார்த்திபனைப் பார்த்திருக்க…
“ம்மா….”
“நீ நல்லா இருக்கணும்டா ராஜா…..” என்றபடி உச்சி முகர்ந்திட… இவன் உள்ளத்தில் அவள் தாய்மையின் ஈரம்..!
“எனக்கென்னம்மா… நான் இப்போவே ராஜாவா தான் இருக்கேன்….” கன்னம் கொஞ்சினான்.
நிச்சயம் அவன் ராஜா தான்… அன்பால் அத்தனையையும் ஆளுகையில்…!
“சரிம்மா… நான் அந்த வீட்டுக்கு போயிட்டு வரேன்..”
“அங்க எதுக்குடா?? பூட்டியே கிடக்கு… சுத்தம் கூட செய்யல… ஆள் அனுப்பி விடவா…??”
“இல்ல நானே பார்த்துக்கிறேன்….” என்றவன் கிளம்பி அவன் வசந்த மாளிகை வந்து சேர்ந்தான்… அந்த ஊருக்கு சென்றால் அங்கு தான் அவன் வாசம்.
இரண்டு தளங்களைக் கொண்டது… முதல் தளத்தில் தான் ராஜா தங்கியிருந்தான் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது. மேல் மாடத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் அங்கிருந்து அகன்றதும் ராஜா தனதாக்கிக் கொண்டான். அதன் பின் யாரையும் குடியமர்த்தவில்லை.
வலப்பக்கம் வரவேற்ற படியேறி மேல்மாடம் சென்றான்… கீழிருந்து வேம்பு மரம் கிளை விரித்து அங்கு வரை வளர்ந்திருந்தது. அழகாய் நிழற்குடை பிடித்திருக்க… அப்படியே படுத்துவிட்டான்.
நிறைய… நிறைய ஆசைகள்.. ஏக்கங்கள்.. கனவுகளாக அவனுள்… எதுவுமே நனவாகவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்தப் பார்த்திபனின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை நெஞ்சம் நிறைத்திருந்தது.
வாடைக் காற்று வசந்ததூதம் பாடி அவனை வருடிச் செல்ல… வெகு நாள்களுக்குப் பின் நிம்மதியான நித்திரை !
“யாழ்…. என்ன இங்க வந்து உக்கார்ந்துட்ட??”
“வாங்க சுபாக்கா…. தலைவலியா இருந்துச்சு.. அதான் பத்து நிமிஷம் ப்ரேக் எடுத்து வந்தேன்…”
“காபி எடுக்க போறேன்… உனக்கும் கொண்டு வரவா???”
“என் தலைவலியே இந்தக் காண்டீன் காபியால தான்……. நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்து வாங்க..”
சுபா தனக்கு மட்டும் எடுத்து மங்கையிடம் வந்து அமர…
“நீங்க எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க அக்கா…”
“நான் இந்த கம்பனில சேர்ந்து எட்டு வருஷம் ஆச்சுடா… கல்யாணம் பண்ணி வந்ததும் ஜாயின் பண்ணது…”
“ம்ம்…” என கேட்டுக் கொண்டவளுக்குள் அடுத்த கேள்வியை கேட்கவா வேண்டாவா என்ற வாதம்… கேட்டே விட்டாள்.
அவளது கேள்வியில் சுபாவின் விழிகள் முன்னூற்று அறுபது டிகிரி சுற்றி.. “எல்லாம் பணம் தான் யாழ்… இங்க எல்லாத்துக்கும் எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு.. அப்புறம் என்ன?” என்றாள் கசப்புடன்.
‘பணம்…..’ யாழ் மங்கைக்கு எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தை.. அந்தப் பணத்தின் மீது பற்று கொண்டு ஓடித்தானே இன்று பல உறவுகள் உடைந்து போய்க் கிடக்கின்றன.  மனிதருக்குள் மனிதநேயம் மரித்துப் போய்க் கிடக்கிறது.. முதியோர் இல்ல முற்றங்கள் நிரந்தரமாக திறந்து கிடக்கின்றன. உறவுகளுக்குள் பாசம் மறந்து போய் வேஷம் நிறைந்து கிடக்கின்றது.
அதனால் தான் என்னவோ பணம் என்றாலே பாகற்காய் தான் பாவைக்கு…! ஆனால் இன்று இவ்வுலகில் பணம் இல்லையேல் இருக்க தகுதியே இல்லையே..!
“என்ன யாழ் யோசனை….” சுபாவின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவள் எழுந்து போய் வேலையைத் தொடர்ந்தாள்.
அன்றைய வேலையை முடித்து வீடு வந்து சேர.. நேரம் எட்டை எட்டியிருந்தது.. குளித்து வர.. பகவதியும் வந்திருந்தார்.
“என்னம்மா இப்போ எல்லாம் லேட் ஆகுது…..”
“வந்து சொல்றேன்…. நிதி எங்க??” என்றபடி அவர் அறையினுள் செல்ல…
“அவ பசங்களுக்கு டியுஷன் எடுத்திட்டு இருக்கா… நாளைக்கு எக்சாம் இருக்காம்… அதான் இன்னிக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ்…”
மங்கையின் மொழிகளை கேட்டுக் கொண்டே… தன்னை சுத்தம் செய்து வந்தவரின் முகத்தில் துளியளவும் தெளிவில்லை.. அவரே சொல்லட்டும் என காத்திருந்தாள்.
மெல்ல ஆரம்பித்தார்… “யாழ்மா… கம்பனி க்ளோஸ் ஆகுற மாதிரி பேசுறாங்க டா..” வார்த்தைகளில் வருத்தம் வாசம் செய்தது.
“என்னம்மா சொல்ற???” மென் அதிர்வு அலைகள் அவள் மனதினுள்.
“கொஞ்ச நாளாவே லாஸ்ல தான் ஓடிட்டு இருக்கு… ப்ரடக்ஷன் ரேட் அதிகம் வந்தா நிலைமை சரியாகிடும்னு நினைச்சோம்…. ஆனா அப்படியில்ல போல.. அதான் இழுத்து மூடுறத பத்தி பேச்சு வாரத்தை போயிட்டு இருக்கு… இன்னும் ஒரு மாசம் தான் ஓடும் போல…” என்றவர்..
“யாழ் உங்க கம்பனில ஏதும் வேலை ஏற்பாடு பண்ண முடியுமா???” என்றவுடன்
“ம்மா…. அதெல்லாம் ஒத்து வாராது…” மங்கை மறுப்பை மறுவார்த்தையில் மொழிய..
“சம்பளம் குறைஞ்சு இருந்தாலும் பரவா இல்லடி.. இப்போதிக்கு ஒரு வேலை வேணும்..”
“ம்மா… புரிஞ்சுக்கோ… அங்க வேணாம்… நா உனக்கு வேற ஏற்பாடு பண்றேன்…” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.
அறைக்குள் வந்ததும் அழைப்பு விடுத்தாள் அவனுக்கு…! மறுபக்கம் இவள் அழைப்பு மறுக்கப்பட… அலைபேசியை வைத்துவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தாள்.. அதன் ஆயுள் அடுத்த ஐந்து மணித்துளிகள் தான். அழைத்திருந்தான் அவன்.
அழைப்பை ஏற்க மறுத்து இவள் நிற்க… துள்ளி வந்து திரையில் விழுந்தது ஒரு குறுஞ்செய்தி !
‘கால் அட்டென் பண்ணு.. இல்ல நேரா வருவேன்..’
அவனை அலட்சியம் செய்து அலைபேசியை அணைத்துப் போட.. பகவதி அழைக்கவும் சாப்பிட அமர்ந்தாள்.
உள்ளிறங்க மறுத்தது உணவு… ஒரு தோசையுடன் எழுந்தவள் மேல் மேடம் வந்துவிட்டாள். தான் தவறு செய்துவிட்டோமோ??? ஒரு பக்கம்… சுயநலமாய் இருந்துவிடாதே ! மறுபக்கம். மாறி மாறி மங்கையவள் மனம் சமரம் செய்து கொண்டிருக்க… சமரசம் செய்ய வந்து சேர்ந்தான் மன்னவன்.
‘இவன் எங்க இங்க???’ இவள் அதிர்ந்து நிற்க… அவன் அவளை அழைத்தான்.
‘டேய்!!!!!!!!!’ என்றவள் அலைபேசியை உயிர்பித்து அழைப்பு விடுக்க… அவன் ஏற்கவில்லை.
‘போன் எடு…’ இங்கிருந்தே இவள் சொல்ல… அவன் இதழ் முறுவல் மறுப்பை சொல்லியது. சாலையோரம் பல்சரை பார்க் செய்தவன் அதில் அமர்ந்தும்  கொண்டான்.
ராஜ தோரணை ராஜவிடத்து…! மங்கையவள் மனமொழி இதுவே…!
அதற்குள் நிதர்சனம் நின்று பேச…. இவள் ப்ளீஸ் போட… அவனே அழைத்தான்.
“இங்க என்ன பண்ற… யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க… ப்ளீஸ் போ… நான் உன்கூட போன்ல பேசுறேன்…”
அவள் மொழிகளில் அரை நொடி மௌனித்தவன்… “அந்த ஆப்ஷன் அரை மணி நேரம் முன்னாடி கொடுத்தது… அதை நீ அச்செப்ட் செய்யல.. இப்ப இருக்க ஒரே ஆப்ஷன் நீ கீழ வந்து பேசு… இல்ல நா உள்ள வந்துடுவேன்..” வார்த்தைகளில் தெறித்த திமிர்… இவளைச் சுட்டுவிட..
“போக்கிரி மாதிரி பேசாத ராஜா… கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்….” அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டிருந்தது.
‘இறைவா என்ன வார்த்தை…..’ இவள் தலையில் அடித்து கீழே எட்டிப் பார்க்க… அவள் சாலையைக் கடந்து இவள் இல்லம் நோக்கி வந்து கொண்டிருந்தான்.
இந்த இரவு நேரத்தில் இவள் என்ன பேசினாலும் இங்கிருப்பவர்களுக்குத் தவறாகத் தான் தெரியும்.. பகவதி நிற்க வைத்து பூஜை செய்து விடுவார்..
“யாழ் அவன் போய் அஞ்சு நிமிஷமாச்சு… உள்ள போயி பாரு…” அறிவு அவசரமாய் அறிவுறுத்த… இறங்கி வீட்டினுள் சென்றாள்.
இவள் பயந்து… பதைபதைத்து… பதுங்கி வீட்டினுள் வர… பார்த்திபனோ பகவதி மற்றும் நிதியுடன் ராஜ தர்பாரில் ஈடுபட்டிருந்தான்.
“என்னடா நடக்குது இங்க???” என்று இவள் பார்த்திருக்க… இவளைப் பார்த்த நிதி தான் உள்ளே அழைத்தாள்.
“யாழ்…. நம்ம ராஜா…” பகவதி சொல்ல..
இவள் தெரியும் என்பதாய் தலையசைத்து வைக்க..
“யாழ பார்க்க தான் அத்தை வந்தேன்…” என்றுவிட இவள் இதய தாளம் தடம் புரண்டது.
‘உனக்கு நான் என்னடா பண்ணினேன்….’ என்று இவள் பார்த்து நிற்க… பகவதியின் விழிகளில் அவளுக்கான வினா.
இவள் மூளைக்குள் இருந்த நியுரான்களை முடுக்கி… அன்னையின் கேள்விக்கு பதிலைத் தேடிட… அவனே தந்தான்.
“வேலை விஷயமா தான் பார்க்க வந்தேன் அத்தை…” என்கவும் வஞ்சிவள் விழிகள் வியப்பில் விரிய… மென் அதிர்வும் மின்னலாய் அவள் அகத்தில். அவள் அவனை அழைத்ததும் அது குறித்து பேசத்தானே..!
“ஓ… யாழ் சொன்னாளா… கம்பனி இப்படி முடிவெடுப்பாங்கன்னு யாருமே நினைக்கல ராஜா… கிட்டதட்ட ஐநூறு பேர் இருக்கோம்… திடீர்னு இனி வேலை இல்ல… வேற வழி பார்த்துகோங்கன்னு சொன்னா எப்படி இருக்கும்.. அதை யாருமே யோசிக்க மாட்டேங்குறாங்க….” என்ற அத்தைக்கு ஆறுதல் அளித்தான்.
“உனக்கு தெரிஞ்ச இடத்தில ஏதும் வேலை இருந்தா சொல்லு ராஜா.. பக்கமா இருந்தா பரவாயில்ல..”
அவன் பதில் கொடுக்கும் முன்..
“வேணாம்… அம்மாக்கு வேலை வேணாம்… எனக்கு என்னோட குவாலிபிகேஷனக்கு தகுந்த மாதிரி வேலை இருந்தா சொல்லு….” என்றதும் ‘என்னதிது’ என்பதாய் பார்வை பாவை மீது படிய…
“ம்மா… இதுநாள் வரை நீ வேலைக்கு போனது போதும் மா… இன்னும் மூணு மாசத்துல நிதியும் படிப்பை முடிச்சிடுவா… நாங்க ரெண்டு பேர் இருக்கோமே.. சமாளிச்சுக்கலாம்… நீ ரெஸ்ட் எடு…” இவள் முடிக்கவும்
“அது மட்டும் தானா….” என்று அவன் கேட்க..
“என்ன….??”
“இல்ல அது தான் காரணமான்னு கேட்டேன்…” அவன் கூர் விழிகள் இவளுள் இறங்கி நிற்க… அசத்தியம் அசாத்தியம் ஆனது அவளுக்கு.
“நீங்க என்னத்த சொல்றீங்க….???”
“அவ சொல்றது எல்லாம் சரி வாரது ராஜா… நீ எனக்கு தகுந்த மாதிரி பார்த்து சொல்லு…” என எழுந்து அவனுக்கு காபி எடுத்து வர சொல்ல… நிதியும் அறைக்குள் சென்றுவிட… தனித்துவிடப்பட்டது தலைவனும் தலைவியும் மட்டுமே !
“சாரி…….”
‘எதற்காம்??’ இவன் அமைதியாகப் பார்த்திருக்க..
“போன்ல…. வாய் தவறி அப்படி சொல்லிட்டேன்… நீ ரொ… ரொம்ப டென்ஷன் பண்ணிட்டயா அதான்… சத்தியமா சொல்லனும்னு சொல்லல…. ஒரு வேகத்துல…” அவள் உதிர்த்த சொல்லை அவளாலே தாள முடியவில்லை.
அவள் தவிப்பும் தடுமாற்றமும் பார்த்திபனிடம் ரசனை சேர்க்க.. பார்வையில் படர விடாமல் அமர்ந்திருந்தான்.
அவள் மாப்பிற்கு மறுமொழி வராமல் இருக்க… நிமிர்ந்து பர்ர்த்தாள். மெல்ல அவளிடம் வந்தவன்.. இருபுறமும் இருக்கையில் கை ஊன்றி அவள் விழிகளை ஊடுருவ…
“எ… என்ன???” தாய்மொழி தடுமாறியது தத்தையிடம்.
“சா……ரி அக்சப்டட்……” என்றுவிட்டு சட்டென நகர்ந்துவிட நங்கைக்குள் நிதானம் பெற்றது சுவாசம்.
பகவதி வந்துவிட.. காபி அருந்திக் கொண்டே அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும்.. பார்வை பாவையிடம் தான்.. வேல் விழிகள் வேந்தனின் விழிகளுடன் வாளில்லாமல் சண்டையிட்டன.. சத்தமின்றித் தான்..!
கனவு நனவாகும்…….
  

Advertisement