Advertisement

ஓம் ஓம்கார சொருபனே போற்றி..
பார்த்திபன் கனா 5
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…….
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்…….
சுவர்ணலதாவின் குரல் காற்றில் கசிந்து கொண்டிருக்க….. மெல்ல மெல்ல அதனுள் கரைந்து.. தொலைந்து போகவிருந்தவளை மீட்டெடுத்தது அந்தக் குறுஞ்செய்தி…! ஓர் அறிமுகமில்லா எண்ணிலிருந்து…!
ஒரு முகவரியை குறிப்பிட்டு உடனடியாக அவ்விடம் வரவேண்டும் யாழ் என்றிருக்க….. ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனை யாழிடம்.
“என்ன யாராக இருக்கும்????” என்றபடி கல்லூரி முடித்து உள்ளே வந்தாள் நிதி.
“வாடி… இன்னிக்கு லேப் எப்படி..?? வைவா சமாளிச்சுட்டள்ள….” அக்கறையுள்ள அக்காவாய் இவள்.
“லேப் ஒகே தான் அக்கா….. வைவா தான்……..” என இழுக்க..
“ஏன் சொதப்பிட்டியா……??” இவள் கேட்க….
இதழ் நிறைத்த புன்னகையுடன்… “ம்ஹும்…. இன்னிக்கு உன் நிதிக்குட்டி கலக்கிட்டா… சரி எக்ஸ்டர்னல் யாருன்னு தெரியுமா??” விழிகளில் வீடெடுத்த ஆவலுடன் கேட்க
“யாரு……” அவள் இதழ் புன்னகை இவளிடம் இளஞ்சிரிப்பாக.
“மிஸ்டர் ஹன்ட்சம்…. மிஸ்டர் பெர்பெக்ட்… தி மோஸ்ட் ஸ்டைலிஷ்…. இப்படி எல்லா டைட்டில்கும் சொந்தமானவரு…” என்றதும் மங்கையின் முறுவல் முறைப்பாக மாற..
“நீ முறைக்கிறன்றதுக்காக எல்லாம் என்னால சொல்லாம இருக்க முடியாது மங்கா… அவரை பார்த்ததும் நாடி நரம்பில எல்லாம் மின்னல் ஒன்னு வந்து போக… அதில என் மண்டைல இருந்த பல்ப் எரிய… டக் டக்னு பதில் சொல்ல… அதுல மாமா மெர்சலாகிட்டாருன்னா பார்த்துக்கோயேன்” இடது இமை மட்டும் பூட்டித் திறந்து சொல்ல…
“நிதி!!!!! அவரு உன் குரு…” காட்டமான கண்டிப்பு.
“யாரு இல்லைன்னு சொன்னா…. ஆனா அந்த குரு என் ஆளு..!!!” நெஞ்சாங்கூட்டில் கரம் கூட்டி… அக்காவின் எரிச்சலை இன்னுமாய் கூட்ட.. அவளை நோக்கி யாழ் தலையணை அனுப்ப.. தப்பித்து ஓடிவிட்டாள்.
“என்ன கிளம்பிட்டியா?” மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி அதே இலக்கத்திலிருந்து.
“ஹலோ…. ஹூ இஸ் திஸ்???” இவள் இப்படி கேட்டு அனுப்ப… அரை நொடியில் திரையில் வந்து விழுந்த பதிலில் இவள் திருதிருத்தாள்.
“ம்ம்…. உன் புருஷன்…” இதே இதே…. இவளைத் தெறிக்க வைக்க வந்த பதில்.
வந்த ஒரு பதில்… இவள் வள வள கேள்விகளுக்கெல்லாம் விடையாக இருந்திட… அகத்தில் அர்ச்சனையை போட்டபடி கிளம்பிச் சென்றாள்.
அவளை அவன் வரச் சொல்லியிருந்த இடம் சூர்யா பைக்ஸ்…. பைக் ஷோ ரூம்.
‘இங்க எதுக்கு வர சொல்லிருக்கான்…..’ தனக்குள் வினவிய வினாவிற்கு விடை… தத்தையின் மொபைல் திரையில்…!
இவள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே…. ஷோ ரூம் சேல்ஸ் மேன் ஒருவன் வந்து, “ஹலோ மேம்… சார் நீங்க வருவீங்கன்னு சொல்லிருந்தாரு…. உள்ள போலாம் வாங்க…!” முழு மரியாதையை மங்கை முன் வைத்தான்.
“இல்ல அது…” எனும் போதே கைப்பேசியில் அழைத்திருந்தான் அவன்.
“எக்ஸ்கியுஸ் மீ..” என்றுவிட்டு அவ்விடம் விட்டு அகன்று…
“ஹேய்…. என்ன பண்ணி வெச்சுருக்க… நான் கேட்டேனா உன்கிட்ட…” எடுத்ததும் போர் தொடுக்க..
“நீ தான் எதுவும் கேக்க மாட்டேங்குறியே…….” சட்டென சரண்டர் செய்யும் குரலில் அவன் சொல்ல…
சில நொடிகள் மௌனம் மங்கையின் மொழியாக… பின் “எனக்கு வண்டியெல்லாம் வேணாம்…. அதுக்கு இப்ப எந்த அவசியமும் இல்ல”
“விஜய்… உன்னை தேடி வந்திருப்பானே…. அவனே உன்னை கைட் பண்ணுவான்… எல்லா ப்ரசீஜரும் முடிச்சுட்டு எனக்கு கூப்பிடு..”
“நான் எதுவும் பண்ண மாட்டேன்… எனக்கு வண்டி வேணாம்….”
“அப்போ உனக்கு அந்த வேலையும் வேணாம்.. விட்டுடு..” அவள் மறுப்பிற்கு அவன் தந்த மறுமொழியில் அழைப்பை துண்டித்து விஜயுடன் உள்ளே சென்றாள்.
அவள் கேட்டிருக்கலாம்…. அதைச் சொல்ல நீ யாரென??? கேட்டாலும் அவன் பதில் தர மாட்டான்…. தான் யாரென புரிதலைக் கொடுத்திருக்கிறானே…!
விஜய் அழைத்துச் சென்று புதிதாக வந்திருந்த மாடல்களைக் காட்ட… அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை… பழைய மாடல்களைக் காட்ட அதில் நாட்டமில்லை.. சேல்ஸ் மேனேஜெரின் ஓரப் பார்வை வேறு அவ்வப் போது விஜயினைத் தீண்டி அவனைக் கலவரப்படுத்தியது. இறைவனிடம் முறையிட  முயன்று கொண்டிருந்தான். அதற்குள்
“அண்ணா…. எனக்கு எதுவுமே பிடிக்கல…. நீங்க உங்க சார் கிட்ட சொல்லிடுங்க… புது மாடல் வந்தா சொல்லுங்க.. அப்போ வரேன்” என்றுவிட்டு விடை பெற.. அவன் அடித்துப் பிடித்து பார்த்திபனை அழைத்தான்.
ஷோ ரூமை விட்டு வெளியே வரும் முன் அழைப்பு வந்திருந்தது அவளுக்கு. மாயம் செய்தானோ மன்றாடல் செய்தானோ… மங்கை திரும்பி வந்து யமஹா பாசினோவை தேர்வு செய்தாள்.
“மேம்…. இப்போ இனிஷியல் பேமண்ட் சார் பண்ணிட்டாரு…. மன்த்லி மன்த்லி நீங்க பண்ண வேண்டி வரும்… கேஷா கார்டா…??”
“கேஷ்…..” என்றாள் பொறுமையைப் பிடித்துக் கொண்டு.
“இந்தாங்க மேம் கீ….. சார் டிஜிட்டல் தான் சொன்னாரு… நீங்க கார்ட்லையே பண்ணிருங்க.. இங்க வர அவசியம் இருக்காது…” முறுவலுடன் சொன்னவனை முறைத்துவிட்டு சாவியை வாங்கி வெளியே வந்தாள்.
“பக்கத்துல கோவில் இருந்தா போய் பூஜையைப் போடு….” அதுவும் அவனே… அவனே..!
“டேய்!!!!!! நீ மட்டும் என் முன்னாடி இருந்த…. உனக்கு போட்டிருப்பேன் பூஜையை…..” திரையில் பார்த்திபன் பெயரைப் பார்த்து மிரட்டியவள் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் நிதியிடமும் பகவதியிடமும் என்ன சொல்லி.. எப்படி சமாளிக்க என படம் ஓட்டி முடித்தாள்.
ஆனால் அனைத்தும் அவளுக்கு எதிராக… பகவதியும் சரி நிதியும் சரி… ஏனென்று கேட்கவில்லை… கலர் நல்லாயிருக்கு… மைலேஜ் எவ்ளோ… டியு எவ்ளோ என்பதோடு முடித்துக் கொள்ள… யாழ் மங்கைக்குள் ஆச்சரியக்குறி!
“ராஜா…… இந்த வாரம் ஊருக்கு வந்திட்டு போடா…” பார்வதி.. மைந்தனிடம் பாசமாய் கேட்டிட
“ம்மா…. நீ இப்போ தானே வந்து பார்த்திட்டு போன… அதுக்குள்ள என்ன?” இப்படிக் கேட்டு வைத்தான் இவன்.
“ஏன் எனக்கு திரும்ப உன்னை பார்க்கனும்னு இருக்காதா…??” ‘அதானே..!’
நிச்சயம் இருக்கும்… அது அவனுக்கும் தெரியும்.. ஆனால் இப்போது பார்வதி அழைப்பது பார்வதிக்காக அல்ல… அந்தப் பார்வதி நாதனுக்காக.. அதனால் தான் அவன் தவிர்க்கிறான். இருந்தும் இழுத்துப் பிடித்து அந்தக் குடும்பத்தோடு இணைக்க விழைகிறார் அவன் அம்மா..
இன்று மட்டுமல்ல… என்றுமே அது நடக்காத ஒன்று என்பது இவனுக்குத் தெரியும்.. புரியும்.. அவன் அம்மாவிற்கு??? மனதோரம் மிச்சம் இருக்கிறது நம்பிக்கை வித்து. அது தான் அவன் விரும்பாவிட்டாலும் வற்புறுத்தி அழைக்க வைக்கிறது அவன் தாயை.
“ராஜா….”
“ம்மா…. நீ இங்க வரியா???”
அவர் அழைப்பை ஏற்று அவன் அங்கு சென்றால் அதன் பின் அரங்கேறும் விடயங்கள் அவரைத் தான் வருத்தும். அவர் வருத்தம் அவனை வதைக்கும்… அதன் பின்…. பார்த்திபனின் பொறுமைக்கும் பங்கம் விளைந்துவிடும். அதைக் கொண்டே அவன் தவிர்க்கிறான்.
“அப்ப நீ வர மாட்ட…. சரி விடு.. ஆனா இனி நானும் அங்க வர மாட்டேன்… உனக்கே இவ்ளோ பிடிவாதம்னா நான் உன் அம்மா டா….” என்றுவிட்டு வைத்து விட இவனுள் எரிச்சல் எவரஸ்ட் ஏறியது.
அப்படியென்ன அங்கு அவன் அடி எடுத்து வைத்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்கவா போகிறார்கள்??? அவர்கள் சொத்தை சுருட்ட வந்தவன் போல் நடத்துவார்கள்… இல்லையெனில் இரந்து வாசல் வந்தவனைப் பார்க்கும் ஏளனப் பார்வை தான் எஞ்சி நிற்கும்?? இதை மட்டுமல்ல… இம்மியளவு மரியாதை குறைவையும் ஏற்க முடியாது இவனால்..!
அதனால் தான் யாரும் வேண்டாம்… எதுவும் வேண்டாம் என விட்டுவிட்டு வந்துவிட்டான்.. ஆனால் அம்மாவை மட்டும் விடவில்லை.. விடவும் முடியாது அவனால்.
“ம்மா… அண்ணா என்னம்மா சொன்னாங்க…” அருகில் வந்து அமர்ந்த மகளிடம் உண்மை உரைத்து வருத்த வேண்டாமென
“அவனுக்கு நாளைக்கு முக்கியமா வேலை இருக்காமாடா… வந்துட்டு போறேன்னு தான் சொன்னான்… நான் தான் அலைச்சலா இருக்கும்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டேன்…” அழகாய் சமாளித்தார் பார்வதி.
“அப்போ அவங்க வரப்போ… அண்ணா கூட இருக்கமாட்டானா???” அவள் வதனம் வாடிவிட
“நாளைக்கு இல்லைனா என்னடா நிச்சயத்துக்கு கண்டிப்பா இருப்பான்…” என கன்னம் வருடிட..
“இல்ல…. அண்ணன் வர மாட்டான்… எனக்கு அவனைப் பத்தியும் தெரியும் நம்ம வீட்டப் பத்தியும் தெரியும்.. நீங்க என்னை சமாளிக்க சொல்றீங்க” என்றபடி அவள் எழுந்து போய் விட பார்வதி அப்படியே அமர்ந்துவிட்டார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்களுக்காக தன் வாழ்க்கையை பணையம் வைக்க… இன்று தன் மகனை தள்ளி வைக்க வேண்டிய நிலையை அந்தத் தாய்க்கு தந்திருந்தது.
பார்வதி அவரது வீட்டின் முதல் மகாலஷ்மி… அவரை அடுத்து இரட்டையர்கள் அவர்களும் பெண்களே… உரிய வயதில் உறவில் நல்ல வரன் வர.. கைப்பிடித்துக் கொடுத்து தம் கடமையை முடித்துக் கொண்டனர் பெற்றவர்கள்.
ஆனால் அவர் வாழ்வில் ஆதவன் அஸ்தமன அத்தியாயம் ஆரம்பித்து இருந்தது.. நல்ல குடும்பம்… நல்ல வேலை.. என அமைந்த அவர் மணாளனுக்கு நல்ல நண்பர்கள் அமையவில்லை.. விளையாட்டாய் ஆரம்பித்த குடிக்கு அடிமை ஆகியிருந்தார். கேட்டது அனைத்தும் கிடைத்ததாலோ என்னவோ ஆலகால விடம் ஆனந்த வெள்ளமாய் அவருக்கு….! அவர் அறியாமலே அடித்துச் சென்றிருந்தது அது.
கருவில் உதித்த தன் கண்ணனோடு தாய் வீடு வந்து சேர்ந்தார் பார்வதி. தனக்கென ஒரு வேலை அமைத்துக் கொண்டு தன் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்று அவர் நினைக்க… இறைவன் இன்னொன்று நினைத்து விட்டான். பார்வதியின் தங்கைகளைக் கண்ணில் காட்டி கருத்தில் பதித்து மறுமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இவரது மறுப்பு மொழியெல்லாம் மௌன மொழியாகியது அங்கே…!
அவரது வாழ்வின் தளிராக வந்துதித்தான் தலைவன்… ஆட்டக்களத்தில் அவனும் இழுக்கப்பட்டான். அவன் எதிர்காலம் பார்வதியின் நிகழ்காலத்தில் மாற்றம் செய்தது. மறுமணத்திற்கு இசைந்து கொடுத்தார் தன் பிரியமான புதல்வனுக்காக… ஆனால் அதுவே அவர்களைப் பிரித்தும் வைத்தது.
பெரியநாயக்கன் பாளையத்தில் பெயர் சொல்லும் குடும்பம் சாமியினுடையது. முதல் தலைமுறை நல்லசாமி… அடுத்த தலைமுறை பெரியசாமி.. முத்துச்சாமி.. ஆறுச்சாமி.. இவர்களோடு இரு பெண்கள்.
அனைவரும் திருமணம் முடித்து அப்படியே அப்படியே இருந்துவிட அது ஆயிரம் ஜன்னல் வீடு… அன்பு வாழும் வீடாகியது.
தலைமகன் பெரியசாமிக்கு மட்டும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்க… அவர் தன் தம்பி தங்கைகளுக்கு முன் நின்று முடித்து வைத்தார்.. முப்பத்தி ஐந்தாம் அகவையில் தான் அவர் வாழ்வில் அடியெடுத்து வைத்தார் பார்வதி. வீட்டினர் மறுக்க மறுக்க மணம் செய்து கொண்டார்.
பெரியசாமி… பெயரைப் போலவே அவர் மனதும் பெரியது தான்… ஆனால் அவரைத் தவிர அவ்வில்லத்தில் அனைவருமே நாக்கில் நஞ்சு தடவியவர்கள். பார்வதி மறுமணம் செய்து கொண்டதை சொல்லிச் சொல்லி மறுக வைத்தனர். இனி… இங்கே தான்… இப்படித் தான்… தன் வாழ்க்கை என்ற புரிதல் அவரை புது பந்தத்தை பொறுத்துப் போக வைத்தது.
இந்த மறுமணத்தில் மறுகி நின்ற மற்றொரு தளிர் மனம்… ராஜா… தங்கள் வீட்டுக் குழந்தைகளுடன் பேசக் கூடாது… தொடக் கூடாது… அதைச் செய்யக் கூடாது… இதைச் செய்யக் கூடாது… கல் நெஞ்சம் கொண்டவர்களின் கட்டுப்பாடுகள் கரை உடைத்து… அந்தப் பிஞ்சின் உள்ளம் உடைத்து நின்றது.
பார்வதியின் பாலை வனத்திற்கு பால் மழையாக வந்து உதித்தாள் ராஜ லக்ஷ்மி… அந்த இல்லத்தின் கடைக்குட்டி… இளவரசி தான்… கொண்டாடப்பட்டாள் அகத்தினரால். அதன் பின் பார்வதிக்கு பேச்சு குறைந்தாலும் நிற்கவில்லை.
ராஜா.. அவனைப் பொறுத்தவரையில் அவர்கள் மாறவில்லை…. ஆனால் அவன் மாறியிருந்தான்.
தன்னைப் பேசுபவர்களுக்குத் திருப்பிக் கொடுத்தான்… யாரையும் வைத்துப் பார்க்கவில்லை அவன் அம்மாவைத் தவிர. அவன் கட்டிக் காத்த பொறுமையும் காணாமல் போகும் நாள் வந்தது. அன்றே அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். ராஜியின் பிறந்த நாள் அன்று மட்டும் அவன் தங்கைக்காக தன்னை.. தன் கட்டுப்பாட்டை.. தளர்த்திக் கொண்டு அவளைப் பார்த்து வருவான்.
விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்க்கச் சென்ற மனைவியைக் கண்டு மனம் வெதும்பி அமர்ந்திருந்தார் பெரியசாமி.
தான் எங்கே தவறினோம்????? என்று இன்னமும் அவருக்குத் தெரியவில்லை.. ராஜ பார்த்திபனால் மட்டுமே அதை உணர வைக்க முடியும்.. ஆனால் அவன் அதைச் செய்ய மாட்டான்.
பெருமூச்சுடன் அவர் எழுந்து வெளியே வர… உள்ளே நுழைந்தான் அவன்.. பார்த்திபன்….. ராஜ பார்த்திபன்.   
‘ராஜா…..’ குரல் கரகரத்து நிற்க… மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.
விழிகள் குழிந்து கன்னத்து எலும்புகள்… கழுத்து நரம்புகள் எழுந்து நின்று காட்சி கொடுக்க… ஓய்ந்து போன தோற்றம் அவரிடம். அவன் அவரைப் பார்த்தே பல வருடம் இருக்கும்.. இங்கு வருவான்… யார் முகத்தையும் பார்க்க மாட்டான்.
இன்று விழிகள் கலங்கி நின்ற தோற்றம் அவனுள் மாற்றம் செய்ய…
“தோட்டத்துக்கா கிளம்பிட்டீங்க???” என்று கேட்டான்.
அதை உணர அவர் உணர்வுகள் அனுமதிக்கவில்லை… அவனை தன்னுள் நிரப்பிக் கொண்டிருந்தார். அதற்குள் அவ்விடம் வந்த ராஜி ‘அண்ணா….’ என ஓடி வந்து கை பிடித்துக் கொள்ள ஆதுரமாக அவள் தலை மேல் கை வைத்தான். பார்வை மட்டும் அவரிடமே…!
ராஜலஷ்மியின் சத்தத்தில் பார்வதியும் தேவியும் அவ்விடம் வந்து சேர… பார்த்திபன் பார்வையில் குற்றக் கோடுகள் அவரை நோக்கி. தங்கையிடம் பேச்சுக் கொடுக்க… பெரியசாமி தோட்டப் பக்கம் சென்று இளநீருடன் திரும்பினார்.
உண்மையில் பார்வதியின் உள்ளம் குளிர வைத்திருந்தான் அவள் மைந்தன். அவன் வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை…
வெளியே சென்றிருந்த சித்தப்பா… மாமா.. அத்தை… அவரது மக்கள் வீடு வந்துவிட.. ராஜா வீட்டின் பின்பக்கம் சென்றான்… அன்னைக்கு அழைப்பு விடுத்து விட்டுத்தான்.
“ராஜா கூப்பிடுறான்… நீங்களும் வாங்களேன்..” கணவரையும் அழைக்க… அவர் மறுத்து
“நீ போய்ப் பேசு… புள்ள எவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கான்… ராஜியையும் கூட்டிப் போ…” என்றுவிட்டார்.
ராஜியும் பார்வதியும் ராஜாவிடம் வந்து சேர… அவன் அங்கு வேலை பார்ப்பவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் வருவதைக் கண்டவன் எழுந்து வந்து
“கங்க்ராட்ஸ்…… ராஜிம்மா…” என்று தோளோடு தோள் சேர்த்து அணைத்தான்.
வியப்பு விழிகளுடன் அவனைப் பார்க்க.. “இப்போ தான் வேலண்ணா சொன்னாரு மா…” என்றுவிட்டு
“நம்ம வீட்டு ராஜகுமாரி இன்னொரு வீட்டு ராணியாகப் போறளவு வளர்ந்திட்டா இல்லம்மா???” என்றவனுக்கு ராஜியின் மீது அத்தனை அன்பு. அவன் தங்கை அவள்… அவள் விடயத்தில் அதை மட்டுமே பார்ப்பான்… ஆனால் அவளுடன் வளரத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்ற ஏக்கம் எப்பொழுதும் அவனிடம் உண்டு.
“மாப்பிள்ளை யாரு… என்ன பண்றாரு” அவளிடம் கேட்க..
“அவர் பேரு விஷ்ணுவர்த்தன் அண்ணா…. காந்திபுரத்துல தான் கம்பனி வெச்சிருக்காரு… விவி சொல்யுஷன்ஸ்… நான் கூட இம்பிளான்ட் ட்ரைனிங் அங்க தான் போயிருந்தேன்…” என விஷ்ணு புராணம் படிக்க…
“ஏன்டா… எனக்கொரு டவுட்???”  குறுக்கிட்டான்.
“என்னண்ணா???”
“கல்யாணம் பத்தி பேசும் போது இந்தப் பொண்ணுங்க எல்லாம் வெக்கப்படுவாங்களாமே…. உனக்கு அப்படி ஏதும் பீல் ஆகுது??”
“இல்லையே… எனக்கு அப்படி ஏதும் பீல்……” அவன் கேட்டது புரியவும்.. நிறுத்தி விட்டு அவன் முதுகில் இரண்டு அடிகள் வைக்க..
“ஏய்…. அவனை எதுக்குடி அடிக்கிற… அவன் கேட்டதுல என்ன தப்பு… என் கல்யாணப் பேச்சு எடுக்கவும் என்னால யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியல.. நீ என்னன்னா….” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே
“எந்தக் கல்யாணம்??? உனக்கு தான் ரெண்டு கல்யாணம் ஆச்சே!! முதல் ஒன்னா… இல்ல இரண்டாவதா??” விடம் தோய்த்த வார்த்தைகளை ராஜியின் பெரிய அத்தை விட.. பார்வதி இறுகி நின்றார். ராஜா எழுந்துவிட்டான்.
அவர் வருகை தொட்டே இந்தக் குத்தல் பேச்சுகள்… அதனால் தான் அவன் வருவதே இல்லை…!
“இங்க பாருங்……” என இவன் ஆரம்பிக்கவுமே இறைஞ்சலுடன் இவனைப் பார்த்தார் பார்வதி. அவ்வளவு தான்… அருகே கிடந்த இளநீர் மட்டையை புட் பாலாக்கி விட்டு நகர்ந்தான். வந்த வேலை முடிந்ததென அத்தையும் அங்கிருந்து நகர… ராஜி தன் அம்மாவை சமாதானம் செய்தாள்.
துலாதரன் தூங்கும் நேரம் தாண்டித் தான் வீடு திரும்பினான் பார்த்திபன். அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றிருக்க… பெரியசாமி.. பார்வதி.. ராஜி மட்டும் அவனுக்காகக் காத்திருந்தனர்.
பார்த்திபனைப் பார்த்ததும் “வா ராஜா… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என அவன் அம்மா எழ..
“வெளில சாப்பிட்டேன் மா…. நீ படுத்துக்கோ..” என்கவும்
“அண்ணா…. இன்னும் நாங்க யாரும் சாப்பிடலை…” அருமைத் தங்கை அவனிடம் அறிவிக்க..
“இது என்ன புதுப் பழக்கம்…?? மணி என்ன ஆச்சு… நேரமே சாப்பிட்டு படுக்க மாட்டீங்களா..??” கடிந்து கொண்டே டைனிங் ரூம் செல்ல.. மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
“மூணு பெரும் உக்காருங்க… நா எடுத்து வைக்கிறேன்…”
“மா நீயும் உக்காரு… நா சாப்பிட்டு தான் வந்தேன்..” அம்மாவை அமர வைத்து அன்னமிட்டான்.
“நீயும் கொஞ்சம் சாப்பிடுடா…. உனக்காக தான் இத செஞ்சேன்…” அவர் சொல்ல.. அவனும் அவர்களோடு அமர்ந்தான்.
பார்வதிக்கு மனம் நிறைவாய் இருந்தது… அவரது எத்தனை நாள் ஏக்கம் இது… இப்படியாக அவர்கள் குடும்பமாய் அமர்ந்து உணவு உண்ணுவது. இன்று தான் இடையூறே இல்லாமல் இவர்கள் மட்டுமாய் இருப்பது…! அதை ராஜி மொழியவும் செய்தாள்.
“இன்னிக்கு தான் நம்ம பேமிலி கம்ப்ளீட் பேமிலியா இருக்கு…..”
சட்டென பெரியசாமியின் பார்வை ராஜாவின் பக்கம் சாய்ந்தது… அவனும் அவரைத் தான் பார்த்திருந்தான். அவர் தவறிய தடத்தை அறிந்து கொண்டாரோ???
கனவு நனவாகும்…….

Advertisement