ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி !
பார்த்திபன் கனா 4
“மேடம்…. இன்டர்வியு செட்டியூல் பண்ணின நேரம் முடிஞ்சிடுச்சு… ஆனா நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல… இன்னமும் எவ்வளவு நேரம் தான் எங்களை காத்திருக்க சொல்லிட்டே இருக்கப் போறீங்க….” யாழ் மங்கை குரலின் சத்தம் சற்றே கூடியிருக்க.. அந்த வரவேற்பு கூடத்தை கடந்து சென்றவர்களின் விழியோரப் பார்வை வந்து சென்றது இவர்கள் புறம்.
கன்னியவள் கண்கள் அதைக் கண்டும் கணக்கில் எடுக்காதிருக்க… இவள் எதிரில் நின்ற ரிஷப்சனிஸ்ட்டிடம் சங்கடத்தின் சாயல்.
‘அக்குவா’ என்ற மினரல் வாட்டர் நிறுவனத்தின் நேர்முகத்தேர்விற்கு வந்திருந்தாள் யாழ். மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என சொல்லப்பட்டிருந்தது. இப்போது நேரம் ஆறு.. வானவன் மேற்குச் சாரலில் மறையத் தொடங்கியிருந்தான்… ஆனால் தேர்வுக்கான எந்த ஆயத்தமும் அங்கிருக்கவில்லை.
இவளோடு சேர்த்து இன்னும் இரு ஆண்கள்… வினா மாறாமல் இருப்பதாலோ என்னவோ விடையும் மாறாமல் இருந்தது அவர்களுக்கும்.
‘கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க… எம்.டி வந்துட்டே இருக்காரு…’ மணிக்கூறு பல கடந்தாலும் மாறாமல் வந்த கூற்று இதுவே.
முல்லை மலர் மலரும் மாலைப் பொழுதில்…. ஏழ்பரியோன் ஏற்கனவே பவனி முடித்து அகம் அடைந்திருக்க… அவனியில் இருள் கவிழத் தொடங்கியிருந்தது.. அந்த நிறுவனம் அடர் வனத்தின் நடுவே அனாதையாகத் தான் நின்றிருந்தது. பேருந்து வசதியும் பெயரளவில்… ஆட்டோ அழைத்தால் வரும்.
யாழ் வரும் போதே ஆட்டோவில் தான் வந்திருந்தாள்.. இப்போது எப்படி கிளம்பிச் செல்வது? யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
இதில் அவளது அலைபேசி அணைந்து போய்க் கிடந்தது. இரு முறை பூந்தொட்டியிலும் மீன்தொட்டியிலும் நீச்சலடிக்க வைத்திருந்தாள்… அதிலிருந்தே அதற்கு மூட் இருந்தால் ஆன் மோட் இல்லையென்றால் ஆப் மோடில் தான் இருக்கும். இன்று மூட் சரியில்லை போல… ஆன் ஆகமாட்டேன் என அடம் பிடித்தது. இவளுக்கோ பகவதியை நினைத்து பயம் பிடித்தது.
அவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே சேரச் சொல்லி அழைத்தார்.. அவர்கள் வீட்டிலிருந்து பக்கமும் கூட.. மங்கை தான் நான் படித்த படிப்பு வேறு.. இது வேறு என பக்கம் பக்கமாக பேசி அவரை சரி செய்து இங்கே வந்திருந்தாள்.
நேரம் ஏழை எட்ட வேக எட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க… இவள் மீண்டும் எழுந்து சென்று ரிஷப்னிஸ்டிடம் கேட்டாள்.. மறுமுறையும் அவள் விரும்பா வார்த்தையை வழங்க விரும்பாமல் அவள் மௌனமாக நிற்க… சரியாக எம்.டி உள்ளே நுழைந்தார்.
“சாரி மிஸ்… என்னால தான் லேட்.. ஒரு மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன்… அகைன் சாரி பார் தி டிலே… இப் யூ விஷ்… வி ஸல் ப்ரொசீட்… வாட் டூ யூ செ???” வரும் போதே யாழை கவனித்து வந்திருந்தார்.
இவ்வளவு நேரம் இருந்திட்டோம்… இன்னும் கொஞ்சம் நேரம் தானே என இவள் தலையசைத்தாள். இவள் நேரம் இவளுக்கு முன்பு போய் அமர்ந்துவிட்டது போல… முதலில் மற்ற இருவரையும் தான் அழைத்தார்கள்… அடுத்த ஒரு மணி நேரம் கழிய.. இவள் உள்ளே அழைக்கப்பட்டாள்.
இவளைக் காத்திருக்க வைத்ததிற்கு மீண்டும் ஒரு முறை அவர் மன்னிப்பை யாசிக்க… மங்கை மனதில் அவருக்கென்று மதிப்பும்… மரியாதையும்.. இவர்களது நிறுவனம் பற்றி கேட்கப்பட… தனக்குத் தெரிந்தவற்றை தெளிவாகச் சொல்லிவிட… முந்தைய நிறுவனத்தின் ரிசைனிங் குறித்து கேட்கப்பட… பர்சனல் என முடித்துவிட்டாள்.
துறை சார்ந்த வினாக்களுக்கு துல்லிய பதில்கள் துள்ளி வந்து விழ… ஆபர் லெட்டர் அவள் முன் வைக்கப்பட்டது.
விடுதலை வாசம் இவள் மனவயல்களில்… ஒரு திங்களாய் தவிக்க வைத்த வீட்டுச் சிறை வாசத்திலிருந்து.
ஆனந்தமாய் ஆட்டோவிற்கு அழைப்பு விடுக்க… அது ஏற்கப்படவில்லை.. ஆட்டோ ஓட்டுனர்… அறுவது வயது தாத்தா… இவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு உறவினர்… அந்த நம்பிக்கையில் தான் நங்கை வருகை தந்ததே இவ்வனத்திற்கு.
மீண்டும்… மீண்டும் அழைப்பு விடுத்தாள்… ம்ஹும்… எதிர்பக்கம் அழைப்பை ஏற்கவில்லை.. அருகில் இருந்தவரிடம் நன்றி நவிழ்ந்து வெளியேறினாள்.
அந்தக் கிளைச் சாலையிலிருந்து முக்கிய சாலை இரண்டு மைல் தொலைவு….. விறுவிறுவென இருளில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
அரை மைல் தூரம் தொட்டிருப்பாள்… அதுவரை அவள் பிடித்து வைத்த தைரியம் தப்பித்துக் கொண்டு ஓடியிருந்தது. அடர்ந்த காரிருள் அச்சத்தை அருளிக் கொண்டிருந்தது. அவளது நிறுவனம் சற்று தொலைவில் தொடர்பில்லாமல்… தப்பு செய்துவிட்டோம்….! என்பதே தத்தை மனதின் தடம் பதித்த வரிகள்.
திரும்பிச் செல்ல அகம் ஒப்பவில்லை… முன்னேற புறம் ஒத்துழைக்கவில்லை.
இங்கு வந்திருக்கக் கூடாது…. துளிர் விட்ட சிந்தனை… ஆனால் அதைத் தவிர அவளுக்கு ஆப்ஷன் வேறு இருக்கவில்லை. இரு நிறுவங்களில் இவள் தேர்வாகவில்லை… ஒன்றில் ஒப்பந்தம் பற்றி பேச இவள் நிராகரித்திருந்தாள். இது நான்காவது ஒன்று… வீட்டில் முடங்கி இருப்பது என்பது முடியாத காரியம் மங்கைக்கு. அதனால் தான் அன்னையையும் சமாளித்து தன்னையும் சமாதானம் செய்து கொண்டு இந்த லேப் டெஸ்டிங் பணிக்காக வந்திருந்தாள். அசட்டுத் தைரியம் எங்கு இழுத்துச் சென்று நிறுத்தும் என்பதை அறியவில்லை அப்பாவை.
நிமிர்ந்தவள் பார்வை நீருபத்தில்(வானம்) நிலைத்து நின்றது. முகில் போர்வை விலக்கி.. நானும் துணை வருகிறேன் என்று வந்து நின்றது நிலா.
“காக்க… காக்க…” கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தாள். இப்பொழுது என்றில்லை எப்பொழுதுமே அந்த சரவணன் தான் சர்வமும் அவளுக்கு.. அவனிருக்க பயமென்ன…..?? பாதித் தொலைவை தொட்டிருந்தாள்.
அதுவரை எந்தவொரு வாகனமும் அவ்வழி வந்திருக்கவில்லை.. அவளையும் சோதிக்கவில்லை. அவளது கெட்ட நேரம் கெஸ்ட் ரோல் செய்ய நுழைந்தது ஆம்னியில்.
இவளுக்கு பின்னே சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த வண்டியைப் பார்த்ததும் இவளுள் எச்சரிக்கை உணர்வொன்று புறப்பட… எச்சில் விழுங்கியபடி சாலையோர முட்புதரில் புகுந்தாள். அந்த வண்டியானது இவளைக் கடந்து சென்ற பின்னே சுவாசத்திற்கு இட்டிருந்த தடையை விளக்கினாள். புதர் முட்கள் அவள் வதனத்தில் கோலம் போட முனைந்ததில்…. மச்சம் போல் மிச்சமாய் சிறு புள்ளிகள்.. அதில் அவள் உதிரம்.. இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறதோ? என்றபடி கண்களைத் துடைத்து நடக்க ஆரம்பித்தாள்.
கடந்து போனதாய் நினைத்திருந்த ஆம்னி இந்த அம்மணிக்காகவே சத்தமின்றி காத்திருந்தது சற்று தொலைவில்.. இவள் புதர் புகும் முன்னே கயவர்கள் ஹெட்லைட் வெளிச்சத்தில் இவளைக் கண்டிருந்தார்கள்.. கயவர்கள் தான்… நாமென்ன ராம ராஜ்ஜியத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்… பொன்னைக் கண்டாலும் பெண்ணைக் கண்டாலும் விட்டுச் செல்ல… பொன்னுக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும் கொண்ட ராமன் இருப்பதற்கு.
இங்கு பாதிக்கும் மேல்… துகிலுரியும் துச்சாதனனை விடக் கொடுமையான பாதகர்களே பரந்து கிடக்கிறார்கள் அல்லவா? இவள் அருகில் நெருங்கியதும் வண்டியின் முன்விளக்கு.. இருளை விரட்ட ஒளிரப் பட… அதுவரை உணரப்படாத உண்மை உரைக்க.. உயிர் உறைந்தது.
அச்சமில்லை… அச்சமில்லை… எனும் பாரதியின் புதுமைப் பெண் தான் இவள்… ஆனால் நிராயுதபாணியாக நிற்கும் சூழலில்… அடுத்து என்ன நடக்கும் என அறியா சிறு பிள்ளையா? நாற்திசையும் நடுங்கிப்போய் பார்த்தாள்.. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இழி நிலை…?? வாதம் செய்யும் எண்ணமுமில்லை காலமும் இல்லை காரிகையிடம்.
“ஏதாவது செய் யாழ்… உனக்காக அம்மாவும் நிதியும் இருக்காங்க…. உன்னையே நம்பி இருக்காங்க…. அவங்களுக்கு நீ வேணும்…..” இமைக்கும் இடைவெளியில் திரும்பி ஓடத் துவங்கினாள்.
எத்தனை தொலைவு கடந்திடுவாளோ… அறியவில்லை.. அவர்கள் இவளிடம் சமீபிக்கும் முன் அந்த நிறுவனத்தை எட்டிவிடுவாளா… தெரியவில்லை.. ஆனால் கோழைத்தனத்திற்கு இவள் பெயர் கொடுக்க விரும்பவில்லை. ஓட ஆரம்பித்தாள் முழு சக்தியையும் சேர்த்து உடன் சரவணபவ ஓம்…!
இவள் ஓட்டம் எடுத்த அடுத்த மணித்துளி இருவர் இறங்கி இவளைத் துரத்தத் துவங்கினர்… ஒருவன் காரை திருப்ப முனைந்து கொண்டிருந்தான். சற்று குறுகலான பாதை தான்… பாவை மனதில் திட்டம் போட திடல் அமைத்துக் கொடுத்தது.
காலை நேரத்து சந்தகையும் மாலை நேரத்து தேநீரும் திடம் கொடுத்தது இத்தனை நேரம்.. இப்போது மெல்ல கால்கள் துவளத் தொடங்கினாலும்… மானம் மங்கைக்கு மனத்திடம் கொடுத்தது.
“ஓடு… ஓடு… எவ்ளோ தூரம் முடியுமோ அதையும் பார்க்கலாம்….” பரிகாசத்தின் வாசனை பின்தொடரும் வஞ்சகர்களிடம்.
இன்னும் சில எட்டுக்களில் அவளை எட்டிவிட என்றிருக்க…. முன்னேற முடியாது மங்கையவள் மனம் விட்டிருக்க.. தன்னால் இனியும் போராட முடியாதென்றறிந்த அடுத்தநொடி அஸ்தினாபுரத்தில் திரௌபதி அழைத்திருந்தாள் கோவிந்தனை. அடர்ந்த வனத்தில் மங்கை அழைத்திருந்தாள் அழகனை.
அழைத்த அழைப்பிற்கு மயில்வாகனன் மயிலேறி வந்தது போல் சரியாக அங்கே ஆஜரானான்.
பார்த்திபன்… ராஜ பார்த்திபன்!!!!!
வேந்தன் விழிகளில் விழுந்தவை என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அவனுள் அரங்கேற்றம் செய்ய… வேல் போல் பாய்ந்து வந்தது பல்சர். பார்த்திபனைப் பார்த்ததும் கயவர்கள் கால்களுக்கு கட்டுப்பாடு விதிக்க… யாழோ இன்னும் வேகத்தை விட்டிருக்கவில்லை.
மங்கை அருகில் வந்த மன்னவன்… அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டு வந்த வழியே வண்டியைத் திருப்பினான்.
அசுரனை வேட்டையாடும் வேட்கை அவனுள் வேள்வி செய்கிறது தான்… ஆனால் நிதர்சனம் நிலை உரைக்க… யாழுடன் நகர்ந்தான்.
யாழ் வந்திருந்த நிறுவனத்தின் அருகில் வண்டியை நிறுத்தியவன்.. அங்கிருந்த காவலாளியிடம் தண்ணீர் எடுத்து வர அனுப்பிவிட்டு அவளை அங்கிருந்த இருக்கையில் அமர்த்தி ஆசுவாசப் படுத்தினான். தண்ணீர் வந்ததும் தன் தடுமாற்றம்… தாகம் போக்கியவள்.. நடுங்கிக் கொண்டிருந்த கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
கால்களுக்கு கால அவகாசம் கொடுத்து நடுக்கம் நிறுத்திய பின் நிமிர்ந்து பார்த்திபனைப் பார்த்தவள் “தேங்க்ஸ்” என்றாள்.
அவ்வளவு தான்… அதுவரை அவன் கைகளுக்கு விலங்கிட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தவன்… இழுத்து ஒரு அறை வைத்தான் காரிகையின் கன்னத்தில்! அவன் ஸ்பரிசத்தில் அவள் காதுகளும் கண்களும் கதவடைத்துக் கொள்ள… மலர் வதனமோ வண்ணம் வேறானது.
அவளது நிலை கண்ட காவலாளி ‘தம்பி’ என தடுக்க… அவன் பார்வை தள்ளி நிறுத்தியது அவரை.
“சொல்லுடி… இங்க எதுக்கு வந்த…” உறுமினான்…. உள்ளுக்குள் உதித்த உதறலை மறைக்க… பதறிக் கொண்டிருக்கிறது பார்த்திபன் மனம்… அவன் மங்கைக்காக… அவன் வந்திருக்காவிடில்…?? சிந்தனையே அவன் உயிரை சிதைய வைப்பதாய் இருந்தது.
தத்தை அமைதியை தத்தெடுத்திருக்க…. தாறுமாறாக ஏறிய இவன் கோவம் பக்கத்தில் நின்ற பல்சருக்கு உதை பெற்றுக் கொடுத்தது.
“வாயைத் திறந்து சொல்லு…………………..”
அவன் கத்தலில் கடகடவென ஒப்பித்தாள் காந்தை.. அவள் முடித்ததும் மறுமுறை அவள் கன்னம் தாக்கி வந்தது அவன் கை…
எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டாள்… இன்டர்வியூ வந்தேன்… நேரமாகிவிட்டது என.. அவளுக்கு ஏதேனும்…… நினைக்க நினைக்க ஆத்திரம் எல்லை உடைத்தது. உரியவளிடம் காட்டிட இயலாமல் உருப்பெற்று நின்ற கல்தூணிடம் காட்டினான்.
“அறிவிருக்காடி….. அறிவிருக்கா… நான் வரலைன்னா கொன்னு புதைச்சிருப்பானுங்க……” அவளை உலுக்க… அதுவரை அழுத்தி வைத்திருந்த அழுகை வெடித்தது அவளிடம். அவள் அழுகையில் அரை நொடி அரண்டுவிட்டான் அவன்.
அவளைப் பற்றிய அக்கறையில் அவனுக்கே அத்தனை ஆத்திரம் என்றால்… பெண்ணாக அவளுக்கு?
அச்சம்.. அழுகை… இயலாமை.. கவலை… கோவம்… வெறுப்பு.. பதற்றம்.. குற்றம்… களைப்பு.. ஒட்டு மொத்த உணர்வுகளும் ஒன்று சேர்ந்து உள்ளுக்குள் புரட்டி எடுக்க…. அத்தனையும் சமாளித்து மானத்தைக் காக்க போராடியவளை இவன் பேச்சு…. உடையச் செய்தது.
அவள் வேண்டுமென்று செய்யவில்லை…. ஏதோ அசட்டுத் துணிச்சலில் செய்துவிட்டாள்… ஆனால் அதை நினைத்து அழுகை மட்டுமே வந்தது இப்போது. அவளைப் பார்த்திருந்தானே தவிர… அழாதே என சொல்லக் கூட மனம் முன் வரவில்லை. அப்படியே அவளருகே அமர்ந்து கொண்டான்.
காவலாளி உள்ளே சென்று தேநீருடன் திரும்பியிருக்க… அதைப் பெற்று அவளிடம் நீட்டினான். அவள் மறுப்பை முன் வைக்க…
“இப்போ நீயா வாங்கிக் குடிக்கல…. நான் பிடிச்சி வாய்ல ஊத்தி விடுவேன்…” அவன் அதட்டல் மொழி அவள் இதழ்களை தேநீரைத் தீண்டத் தூண்டியது.
அவன் அதற்குள் காவலாளியிடம் முதலாளியைப் பற்றி விசாரித்து வசை பாடிட… பூவைக்குள் பயம் பட்டம் விட்டது… இருக்கும் வேலையும் இல்லாமல் போய்விடுமோ என்று.
தேநீரை வேகமாக வாயினுள் கவிழ்த்து விட்டு.. “போலாம்” என்றாள்.
அவன் எழுந்து பல்சரை ஸ்டார்ட் செய்ய… இவள் அப்படியே அமர்ந்திருந்தாள்… அவன் ஓரப்பார்வை இவளை உரசிவிட்டு வண்டியை உறும விட.. ‘அட இருடா அவசரத்துக்கு பிறந்தவன் போல…’ என மனதில் வைதது வாட்ச்மென். யாழ் மெல்ல எழ முயன்றாள்… முயன்றாள் அவ்வளவே.. கால்களை அசைக்கக் கூட முடியவில்லை.
“நான் வரவா… தூக்கி உக்கார வைக்க…” நக்கல் மொழி நங்கையை நோக்கி..
அறிந்தும் அறியாதது போல் அவள் தலையசைக்க…. “என்ன???” வியப்பு அவன் புறம்.
“என்னால சுத்தமா முடியல… காலெல்லாம் என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது..” மென் குரலில் மங்கை மொழிய…
“முதல்ல நீ சொன்ன பேச்சு கேட்கறியாடி…..” என்றபடி வண்டியை சென்டர் ஸ்டாண்ட் செய்துவிட்டு வந்தவன் அவளை அப்படியே தூக்கி பல்சர் பில்லியனில அமர வைத்துவிட்டு காவலாளிக்கு ஒரு தலையசைப்பைக் கொடுக்க… ‘நல்ல பசங்க…’ ஒரு சிரிப்பை உதிர்த்து விடை கொடுத்தார்.
பஸ் ஸ்டாண்ட் அருகே வந்ததும் “இங்கயே இறங்கிக்கிறேன்… பஸ் வர்ற நேரம் தான்…” என்று அவள் சொல்ல..
“பேசாம வா… இல்லை பல்லை உடைச்சிடுவேன்…” என்றுவிட்டான்.
சிறு பொழுது சென்றிருக்க… “வழி சொல்லு… உன் வீட்டுக்கு” என்று கேட்க.. மங்கை விழிகள் மிரரில் தஞ்சம். மன்னவன் விழிகளும் அதன் வாசல் சேர.. வாய்க்கு பூட்டு போட்டுள்ளதாக பூவையவள் பாவனை காட்ட… அத்தனை நேரம் இருந்த இறுக்கம் இவளின் இச்செயலால் இதமாய் மாறிட…
குரலில் கொஞ்சம் குறும்பைக் கூட்டி “எனக்கொன்னும் பிரச்சனை இல்ல… பக்கத்துல தான் என் வீடு. யோசிச்சுக்கோ… ஒரு வயசுப் பையன்… ஒரு வயசு பொண்ண…” என்றவனை அவளது நோஓஒ நிறுத்தியது.
“ஆயக்குடி போய்த்தொலை…. ஆனா நீ மட்டும் வாயத் திறந்த.. நா எட்டி குதிச்சிடுவேன்…” அவள் மிரட்டலில்
“நீ முதல்ல நேரா நில்லு… அப்புறம் ஸ்டன்ட் பண்றது பத்தி யோசிக்கலாம்…” என்றவன் அதன் பின் வந்த பொழுதில் வம்பிழுக்காமல் வண்டியைச் செலுத்தினான்.
வஞ்சியவள் வழி சொல்ல… தலைவனிடம் தலையசைப்பு மட்டுமே..! அவன் அடக்கம் அவளிடம் ஆச்சரியம் சேர்க்க… அவளை வீடு சேர்த்தான் அவன்.
“ஹேய்… நீ இங்கயா இருக்க…..??”
“இது என் வீடு.. அப்போ நான் எங்க இருப்பேன்…” அவள் அமர்த்தலான பதில் அவனுள் எரிச்சலை ஏற்றி வைக்க…
“திமிரு…. உடம்பு முழுக்க திமிரு தான்…” என முணுமுணுத்தவனின் பார்வை  ‘யாழகம்’ பக்கம்..
‘அன்னிக்கு எப்படி இதை கவனிக்காம போனேன்… பாரு கூட இவங்க பேமிலி இங்க இருக்கிறத பத்தி சொல்லல…’ தனக்குள்ளே தர்பார் செய்து கொண்டான்.
பகவதியும் பார்வதியும் பள்ளிக் கால தோழிகள்… ஒரே ஊரும் கூட… திருமண வைபோகம் வாழ்வில் வந்து இருவரையும் பிரித்து வைத்தது… இவர்களது பிரிவு பருவங்கள் பல பார்த்திருந்தாலும்… பாசம் மாறாமல் காத்திருந்தது.
அன்று பார்வதியுடன் வந்தவன் யாழ் மங்கை வாயில் பக்கம் வரும் முன்னே அன்னையிடம் விடைபெற்றிருக்க… அழகாய் தவிர்க்கப்பட்டிருந்தது தலைவன் தலைவி சந்திப்பு!
“உள்ள வரியா???” என்ற அவளது விருந்தோம்பலில்.. முறைப்பை முன் வைத்து மறுப்பை மொழிந்தான் பார்த்திபன்.
அதைக் கூட உணரவில்லை அவள்… அவள் சிந்தனையை சிறை செய்து வைத்திருந்தனர் நிதியும் பகவதியும்.
“கேள்விப்பட்டேன்….. அந்த வெள்ளைக்காரன் விட்டுட்டு ஓடிப் போய்ட்டானாமே..!” பார்த்திபனின் குரலில் குதூகலம் குத்தாட்டம் போட்டிருந்தது.
‘வெள்ளைக்காரனா….. ஓ நளனா??? ஹா ஹா… உனக்கு பொறாமை டா…’ எட்டு வருட அமெரிக்க வாசம் நளன் வதனத்தில் வாசம் வீசும்..
வாசல் கதவோரம் நின்றவள் மெல்ல மெல்ல நடந்து வந்து அவன் நயனங்களில் தன் நயனங்களை நங்கூரமிட்டு “அவன் ஓடிப் போகல…. நான் ஓடிப் போக வெச்சிட்டேன்…..” என்றவள் அவன் கழற்றி வைத்திருந்த தலைக்கவசத்தை எடுத்து அவன் தலையில் கொட்டு வைத்து கவிழ்த்துவிட்டு உள்ளே செல்ல…
“மங்கம்மா………..” பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது மனதில் கொண்டவனால்.
யாழ் உரைத்துச் சென்ற உண்மை உணர்ந்தவன் உள்ளத்தில்….. சினம் தணிக்கும் சில்லென்ற சாரல்…! காதல் மீட்டும் கவின்மழை…!
இதழில் முகிழ்ந்தது மகிழ் முறுவல்…..!
கனவு நனவாகும்…………………..