Advertisement

சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
பார்த்திபன் கனா 3
நிசப்தம்…. நிசப்தம்… நிசப்தம்.. மட்டுமே நின்று கோலோச்சிக் கொண்டிருந்தது அவ்விடத்தில்! நிதானமாக சுதந்திரம் பெற்ற சுவாசக்காற்றின் சத்தம் சுவர்களில் பட்டு தெறித்தது.
பகவதி ஒரு பக்க மூலையில் சாய்ந்திருக்க… யாழ்நிதி அவர் மடி சாய்ந்திருந்தாள். தொலைக்காட்சி தொல்லை கொடுக்காமல் இருக்க, மௌன மொழி மட்டுமே அங்கு பேசியபடி.. நிரஞ்சனின் அப்பா அதில் தொலைந்து போயிருக்க… நிரஞ்சன் வரவேற்பறை சோபாவில் தற்காலிக தஞ்சம்.
குளித்து வந்த அவன் அம்மா… இவர்களின் மௌன ராகம் சகியாமல் தானே பாட ஆரம்பித்துவிட்டார்.
“இங்கென்ன எழவா விழுந்துச்சு… ஆளாளுக்கு எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்த தூக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க…” பொதுவாய் கேட்டு வைக்க..
‘என்ன பேச்சு இது’ என்பதாய் அவர் கண்ணாளன் கண்கள் இவர் பக்கம் திரும்ப
“ம்ம்மா……..” கத்திவிட்டிருந்தான் நிரஞ்சன்.
விதியின் வஞ்சகத்தில் வெம்பி புண்பட்ட நெஞ்சாங்கூட்டை இவர் பேச்சு இன்னும் வதைக்கும் என தெரிந்தே பேசும் தாயினால் தலைக்கேறியது இவன் கோவம்.
“உங்ககிட்ட ஒன்னே ஒன்னு சொல்லிக்க நினைக்கிறேன்… முடிஞ்சா அடுத்தவங்க மனசு கஷ்டப்படாத மாதிரி பேசுங்க… இல்ல வாயை பூட்டிகோங்க.. புண்ணியமாவது கிடைக்கும்..” நிதானத்திற்கு வந்திருந்தான் நிரஞ்சன்.
“நா சொன்னதுல என்னடா தப்பு… இந்த வீடு பார்க்க அப்படித்தானே இருக்கு.. இப்ப என்ன நடந்ததுன்னு எல்லாரும் இப்படி இருக்கீங்க..”
தாயின் மடியிலிருந்து நிமிர்ந்த நிதி… இனியும் தான் அங்கே நிலை கொண்டிருந்தால் நிலைமை நிச்சயம் எல்லை கடக்கும் என உணர்ந்து உள்ளே சென்றுவிட்டாள்.
நிரஞ்சனுக்கு தன் தாயிடம் பேசத் தயக்கம்… இப்போது மட்டுமல்ல.. எப்போதும். காரணம் அவர் பேச்சு… வார்த்தைகள் தீ வார்க்கும் அடுத்தவரின் அகத்தில். அதிலும் அவன் சித்தி… வாழ வந்து சிக்கிக்கொண்ட ஜீவன்.
இவர்களது பூர்விகம் வீரபாண்டி… உதகைச் சாரலில் இருந்து சற்று நேரமெடுக்கும். யாழின் அப்பா பரதன்.. அவரோடு பாசம் பகிர்ந்துகொள்ள அண்ணன்.. இரு தங்கைகள். நன்செய் புன்செய் நிலம் பெற புண்ணியம் ஏதும் செய்திருக்கவில்லை போல… சொந்தமாக ஒரு வீடு மட்டுமே சொத்தென்று சொல்லிக்கொள்ள. சகோதரர்கள் இருவரும் தங்கைகளுக்கு மணம் முடித்து பின் தங்கள் மண வாழ்வில் அடியெடுத்து வைத்தனர்.
பரதன் இல்லறம் நல்லறமாக சிறக்க… இன்னும் சிறப்பாக்க யாழ் மங்கையும் யாழ் நிதியும் வரமாக வந்தனர். பரசுவிற்கு நிரஞ்சன் மட்டுமே.
பரசு, பரதன் இருவருக்குமே நூற்பாலையில் வேலை. இறைவன் திருவருளால் மகிழ்ச்சியின் மணம் மாறாமல் இருந்தது அவர்களின் மனதில்… பரதனை அவர் தன்னுடன் அழைத்துக் கொள்ளும் நாள் வரை. ஆலையில் நடந்த தீயிற்கு திரியாகி பலரின் வாழ்விற்கு ஒளி கொடுத்துவிட்டு மறைந்திருந்தார் அவர். அதுவரை மறைந்துகிடந்த பிரச்சனைகள் எல்லாம் முழுவேகத்தில் முளைத்து வந்தன நிரஞ்சனின் அம்மாவினால்.
முளைத்து நின்ற பிரச்சனையின் வேரை கிள்ளி எரிய பகவதி மங்கையுடனும் நிதியுடனும் விலகிச் சென்றுவிட்டார்.
அப்போதும் சரி இப்போதும் சரி ஆரம்பம் இவன் தாயிடமே… வளர்ந்த பின் நிரஞ்சன் தட்டிக் கேட்கிறான்.. தடுக்கிறான்.. எல்லை உண்டே எல்லாவற்றிற்கும்! அம்மாவாயிற்றே… அடங்கித் தான் போக வேண்டியிருந்தது.
“ம்மா…. நீ பேசுறது சரியில்லமா..”
“நான் சரியா தான் பேசுறேன்…”
இவன் மறுத்து மொழியும் முன் மங்கை
“அண்ணா… பெரியம்மா சொல்றது சரி தானே..” என்றபடி அவ்விடம் அமர்ந்தாள்.
பகவதியின் பார்வை அவளை நோக்கிப் பாய…
“என்ன பார்க்கறீங்க… நடந்த விஷயம் புதுசு கிடையாது… இப்ப எல்லாம் மண்டபம் வரை வந்தே நிறைய கல்யாணம் நின்னு போகுது.. இங்க கொஞ்சம் வித்தியாசமா ரெஜிஸ்டர் ஆபிஸ் வரை வந்து நின்னிருக்கு.. அதுக்கு நீங்க சந்தோசப்படனும்.
அப்புறம்… எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ.. அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ.. அதுவும் நன்றாகவே நடக்கும்” தத்தை தத்துவத்தில் முடித்தாள்.
திருமணம் நின்றுவிட்டது… நிறுத்தபட்டு விட்டது மாப்பிள்ளை வீட்டினரால்… நளன் வந்தான்… நங்கையிடம் மன்னிப்பு நவிழ்ந்தான்… கிடைத்துவிட நன்றியுரைத்து நகர்ந்திருந்தான்.
அதைத் தொடர்ந்து வந்த பொழுதுகள் கனம் தாங்காமல் கதறிக் காணாமல் போயிருந்தன… பெரியம்மா… யாழ்மங்கை மட்டுமே நிதர்சனத்தை நிந்திக்காமல் ஏற்று நின்றிருந்தனர்.
பகவதி எது நடந்துவிடுமோ… பயந்தாரோ அதுவே நடந்து முடிந்து படம் காட்டிக் கொண்டிருந்தது. நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் வல்லமை எதிர்மறை எண்ணங்களுக்கு உண்டு!
யாழ் திருமண நாளன்று உறக்கம் விழிக்கும் வைகுறு விடியலில் பரதனின் குரல் கேட்டது.. ‘அவசரப்பட்டுட்ட பகவதி….’ அத்தனை நாள் அவர் காத்த  அமைதி கரை உடைத்து மனையாளின் உள்ளம் உதற வைத்தது. யாழ் மங்கை நளனோடு கை கோக்க மாட்டாள் என நினைத்தார்.. அதுவே நிகழ்ந்தேறியது.
நிதியோ தன் மாமா… அக்கா.. மேட் பார் ஈச் அதர் என்ற நினைவில் உலா வந்து கொண்டிருந்தாள். இப்போதைய உண்மையை உரக்கச் சொன்னாலும் உள்ளம் ஏற்கவில்லை. அக்காவின் வாழ்வில் அடுத்தென்ன? சித்தம் அடுத்த கட்டத்தை சிந்தனை செய்ய ஆரம்பித்திருந்தது.
பெரியப்பாவைப் பொறுத்தவரையில்.. அகத்தை வருத்தம் வாட்டியது.. உடன் பிறப்பின் உதிரத்து உறவல்லவா?? பாசம் இன்னும் படிந்து தான் இருந்தது.
நிரஞ்சன்… அவன் அகத்தில் அதிர்ச்சியின் ஆட்சி தான்… நளன்… அவன் தங்கைக்கு மிகச் சரியான தேர்வு… அவனைப் பொறுத்தவரையில். பதிவு திருமணம் தவிர முரணாக முன்னேதும் நிற்கவில்லை. இப்படியிருக்க… இனி இந்த திருமணம் இல்லை… என்ற உண்மை அவனையும் மௌனியாக்கியது.
அடுத்த வாரம் யாழ் மங்கையை அமெரிக்கா அனுப்பிவிட்டு… அவனும் ஆன் சைட் செல்லவதற்கான அத்தனை பணிகளையும் முடித்திருந்தான். இப்போது அதெல்லாம் இல்லை என்றாகிவிட இனி என்ன? என்பதில் தான் இவனும்.
அகத்தினர் அத்தனை பேரும் ஆழ்ந்த துக்கத்தை அனுசரித்து வைக்க… பெரியம்மா பொங்கி விட்டார். அவருக்கும் வருத்தமே… ஆனால் வெளிக்காட்ட விரும்பவில்லை.
யாழ் மங்கை… மங்கையவள் மனதினில் மழையின் சாரலும் மகிழ்வின் சங்கீதமும் தான்… விலங்கிடும் முன்னே விடுதலை பெற்று சுதந்திரத்தின் சுகத்தை சுகித்துக் கொண்டிருந்தது பெண்ணவள் உள்ளம்.
இந்த பந்தம்… பகவதிக்காக.. அவர் கொடுத்த வாக்கிற்காக… தலை மகளாய் தலையசைக்க வைத்து அவள் கொண்ட கொள்கையை கொல்லவிருந்தது.  
ஆம்… கொள்கை தான்… கன்னி மனதில்… பிழைப்புகாகக் கூட பிறந்த மண் விட்டு அகல்வது குற்றம்… என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? இது தான்.. அப்படிப்பட்டவளை உன் உரிமையை உறவை விட்டு என்னோடு வந்துவிடு என்றால்…? நிச்சயம் முடியாது.
பகவதியிடம் பகிர அவசியமே இல்லை… அவரே அனைத்தும் அறிவார். அப்படியிருந்தும் நளனை அவர் தெரிவு செய்தால்?? இவள் பிடித்த பிடிவாதம் மறுப்பை கூட மொழியாமல் மௌன மொழி பேசியது. அவளது கடும் கோவம் வெளிப்படும் கோலம் இப்படி தான்… நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்… உன் விருப்பம்.
தாயவள்.. தலைவியின் குணம் அறிந்ததால் தலையைக் கொடுக்க விரும்பாமால் அமைதி காத்தார். எந்தவொரு சூழலிலும் சுடர்க்கொடியின் திருமணம் நடக்க வேண்டும் என்பதே அவர் சிந்தனை… செயல்.. யாழுக்கு இரு வருடங்களாக வரன் பார்த்து வருகிறார்.. எல்லாம் சரியாக வந்தால் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பு இவர்களின் எல்லையிலேயே இல்லை. இப்படியாகத் தள்ளிப்போக.. தள்ளிப் போக.. இவருள் வேர்விட்டது பய வித்து. தன்னைப் போலவே தன் மகளுக்கும் சூழ்நிலை அமைந்துவிடுமா?
பகவதிக்கு திருமணத்தின் போது வயது 30… பரதனுக்கும் இவருக்கும் சம அகவை. திருமண வயதைத் தாண்டிய எந்தவொரு பெண்ணுக்கும் நிகழ்காலம் நிம்மதிக்காலமாக அமைந்துவிடாது. இன்னும் அமையலையா?? கேள்வியாய்… கேலியாய்… பரிதாபமாய்… விதவிதமாய் வெறுப்பை விரக்தியை விளைத்துச் செல்லும்.
அதையெல்லாம் கடந்து தான் பரதனைக் கரம் பிடித்தார்… பதினைந்து ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை.. அதுவே போதும் என புறப்பட்டிருந்தார் அவர்.
இதெல்லாம் தான் பகவதி தன் மகளின் திருமணத்தில் பிடிவாதம் பிடிக்கக் காரணம்… இப்போது திருமணமே இல்லையென்று ஆகிவிட இயல்பைத் தொலைத்து நிற்கின்றார்.
“உன்ன மாதிரி எங்களால எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்க முடியல யாழ்…” தாயின் குரல் தளர்வுடன் தன்னை நோக்கி வரக் கண்டு
“நான் ஈசியா எடுத்துக்க சொல்லல மா… எதார்த்தத்த ஏத்துகோங்கன்னு சொல்றேன்… இந்த வரன் ஒத்து வரல… அவ்ளோ தான்.. விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கணும்..” என்றவள்
“நீங்க எல்லாரும் பீல் பண்றத பார்த்தா… எனக்கு கல்யாணமே நடக்காம ஔவையாராவே இருந்திடப் போற மாதிரி இருக்கு….” என்றதும்
“யாழ்ழ்ழ்ழ்ழ்ழ்………….” பகவதி, நிரஞ்சன்.. பெரியம்மா… பெரியப்பா…. அதட்டலில் அமைதியானாள்.
“என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசு… ஆள் வளர்ந்த அறிவு வளர்ந்தா மாதிரி தெரியல…” பெரியம்மா அதட்ட..
“இல்ல நா….” விளக்கிட முயல..
“வாயை மூடு… உள்ள போய் சமைக்க என்ன இருக்கு.. இல்லைன்னு பார்த்து சொல்லு.. கடைக்கு போய் வரேன்..” பகவதி பொரிய..
“என்ன சொல்லிட்டேன்னு… இப்படி ஆளாளுக்கு அதட்டுறாங்க…” முணுமுணுத்துவிட்டு அவள் அகல..
“சித்தி கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாணப் பேச்சு வேணாம்… வெளில யாருகிட்டயும் எதையும் சொல்லவும் வேணாம்.. பொறுமையா பண்ணலாம்.. இந்த தடவை பண்ணின தப்பை இனியும் பண்ண வேணாம்…” நிரஞ்சன் உறுதியாய் மொழிய..
‘அப்போ… நான் பண்ணது தப்பா..’ உள்ளுக்குள் உதயமான கேள்வியை கேட்டு அவனை சங்கடப்படுத்த விரும்பாமல் சரியோடு நிறுத்திக் கொண்டார்.
மாலையில் நிரஞ்சனும் அவன் பெற்றோரும் ஊர் திரும்புவதாக இருக்க.. நிரஞ்சன் இருக்கும் போதே பேசிவிடலாம் என எண்ணிய யாழ்
“நான் வேலைக்கு போலாம்னு முடிவு பண்ணிருக்கேன்…” என்றாள்.
“அந்த வேலையை தான் விட்டாச்சுல்ல… வேலைக்கு போனது போதும்.. வீட்லயே இரு.. நீ வேலைக்கு போகணும்னு எந்த அவசியமும் இல்ல…” அப்ஜெக்ஷன் ப்ரம் அவள் அம்மா…
“ஏன் அவசியம் இல்ல… நமக்கு சண்முக நதிக்கரையோரம் இரண்டு ஏக்கராவும் மலை அடிவாரத்துல நாலு ஏக்கர் தென்னையுமா விளையுது… உன் வேலையை வெச்சு மட்டும் சமாளிக்க முடியாது மா..”
யாழ் முதுகலை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தாள். திருமணத்தை முன்னிட்டு ஒரு திங்கள் முன்பு தான் வேலையை விட்டிருந்தாள்.
பரசுவும் அவர் பத்தினியும் இதில் தாங்கள் கருத்து சொல்ல எதுவுமில்லை என ஒதுங்கியிருக்க… நிரஞ்சன்
“அவ போகட்டும் சித்தி… இவ்ளோ நாள் பிசியா இருந்திட்டு இப்போ வீட்ல அடைஞ்சு இருக்க சொன்னா ரொம்ப கஷ்டம்…” என்றான்.
‘அண்ணன் டா….’ என அவனுக்கு விழிகளால் பாராட்டு விழா நடத்த..
“எங்க ஜாயின் பண்ணலாம்னு இருக்க யாழ்… அதே கம்பனியா??” என்று கேட்க..
“இல்லண்ணா… திரும்பவும் அங்க போறது சரி வராது… எனக்கு விருப்பமும் இல்ல.. வேற பக்கம் தான் பார்க்கணும். இரண்டு மூணு இடத்துல ரெசியும் கொடுத்திருக்கேன்… அவங்க கால் பண்ணுவாங்க..” என்றதும்
‘இது எப்போ…’ என்பதாய் பார்வை அவள் மீது படிய..
“நேத்து தான்… அவங்க விளம்பரம் பார்த்து மெயில் அனுப்பிருக்கேன்…” அவள் இயல்பாகச் சொல்ல இவள் தாயிடம் தலை தூக்கியது நிம்மதி இவளின் திடம்.. தெளிவு கண்டு.
அந்திப் பொழுதில் நிரஞ்சன் கிளம்பிவிட… யாழகம் இயல்பை மீட்டு எடுத்திருந்தது… மீட்டி இருந்தாள் யாழ்.
வீட்டின் இடப்புறம்… அழகாய் ஒர் நந்தவனம்… முல்லை… மல்லிகை.. சாமந்தி பூக்காடோடு… பகவதி நைட் ஷிப்ட் என்று கிளம்பியிருக்க.. நிதி ரெக்கார்ட் ஒர்க் செய்ய… இவள் பூப்பறிக்க வந்திருந்தாள்.
வீட்டின் முன்பக்கம் வந்து நின்ற வாகனத்தின் சத்தத்தில்.. “நம்ம வீட்டுக்கு யாரு வரா… அதுவும் டூ விலர்ல..” என்றபடி வந்தவள் வாசல் புறம் நின்ற பார்வதி தேவியையும் அவர் மைந்தனையும் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.
   
ராஜ பார்த்திபனை பார்த்துவிட பாவையிடம் தயக்கம்… தடுமாற்றம்… தவிப்பு.. அகத்தினில் அங்குமிங்குமாக குற்றக் கோடுகள்… ஆழமாக அழியாமல்…!
அவள் அன்னை வாக்கை காப்பாற்ற அவள் வாக்கை அல்லவா வதைத்திருந்தாள்.
ஆம்… வாக்கு கொடுத்திருந்தாள் ராஜ பார்த்திபனுக்கு….. அவன் கேட்டிருந்தான்.. அவள் கொடுத்திருந்தாள்…
ஆனால் அவனா? அம்மாவா? என்று வந்து நிற்கையில் காரிகையின் மனம் கண்ணை மூடிக் கொண்டு.. அன்னையை அல்லவா கை காட்டியது.
அம்மா… அவர் மரியாதை… அவர் கொடுத்த வாக்கு… இவையெல்லாம் தான் பார்த்திபன் மனதைக் கொல்ல வந்த ஆயுதம் அவளிடம்.  
அவனுக்கும் அவன் காதலுக்கும் இவள் செய்தது?
தவறு செய்துவிட்டாள் யாழ் மங்கை… தண்டனை?????? நிச்சயம் உண்டு தலைவனிடத்தில்.
கனவு நனவாகும்…..
            

Advertisement