Advertisement

ஓம் உமையவள் மகனே போற்றி !
பார்த்திபன் கனா 16
இருள் அந்த அறையினுள் கவிழ்ந்து கிடக்க.. அதை விரட்டும் பொருட்டு விளக்கு ஒளிர வைக்கப்பட்டது. 
சூழ்ந்திருந்த மொத்த இருளையும் இமைக்கும் நொடியில் விரட்டிய விளக்கு.. வெற்றிப் புன்னகையை தவழ விட்டது அறையினுள்.
“ப்ச்..” 
தும்பை நிற தூய மெத்தையில் விழுந்து படுத்துக் கிடந்தவன் இமைகளை பிரிக்காமல் இதழ் பிரிக்க… சட்டென இருளுக்கு இடம் கொடுத்து விலகியது விளக்கு.
மெல்ல அடியெடுத்து வைத்து அவனிடம் வந்தவர் இடப்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். 
சாளரத்தின் வழியே வந்த நிலா வெளிச்சத்தில் அவன் முகத்தில் நிறைந்து கிடந்த நிம்மதி காட்சி கொடுத்தது அவருக்கு. 
மெல்ல…. மென்மையாக அவன் தலையை வருடிக் கொடுத்தார். 
இத்தனை வருடங்களாக அவருக்கு கிடைக்காத வரம் இன்று தான் கிடைத்திருக்கிறது. 
இருவரில் பிழை புரிந்தவர் யாரென இன்னமும் புலப்படவில்லை அவருக்கு. என்ன காரணத்திற்காக இருவரும் பிரித்து வைக்கப்பட்டனரோ அதுவும் புரியவில்லை.
ஏனென்று தெரியாமல் எதற்கென்று புரியாமலே… விதி விளையாடி வேடிக்கை பார்த்து விட்டது இவர்கள் வாழ்க்கையில்..!
இப்படி ஒரு மகன் கிடைக்க.. எப்பிறவியில் என்ன புண்ணியம் செய்தாரோ..?? இதுநாள் வரை இவரை ஒரு சொல்… எடுத்தெரிந்து பேசியதில்லை. 
அவன் கண்ணீர் சுமந்த பொழுதில் கூட இவரை காயப்படுத்தியதில்லை. 
விழிகளில் திரண்டிருந்த துளிகளில் ஒன்றிரண்டு அவனை தொட்டு விட அவசரமாக துடைத்து எழுந்தார். 
இரு வாரங்களாக நித்திரை என்பதை நினைவில் கொள்ளாமல் அவன் தங்கை திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறான்.
நிச்சயம் ஓய்வு தேவை என்பதை உணர்ந்து அவர் எழுந்து நிற்க.. அவன் துயில் களைந்து எழுந்தமர்ந்தான்.
இருவரது பார்வையுமே தழுவி நிற்க.. மொழி மௌனம் காத்தது.
“அப்பா..” அவன் இதழ் உதிர்த்தலில் அவர் உடைந்து இருக்க…
“உங்களுக்கு திருப்தி தானே.. நம்ம ராஜி கல்யாணம் நீங்க நினைச்ச மாதிரி ஓரளவு நடத்திட்டேன்னு நினைக்கிறேன்..” 
மொழி மறக்க வைத்திருந்தான் மைந்தன் அவன்..!
“ராஜா..!!!!!” தழுதழுத்த தொனியில் சற்றும் தாமதிக்காமல் அவரைத் தழுவியிருந்தான் தனயனவன்.
இருவருக்கிடையே இத்தனை காலம் இருந்த இடைவெளி.. தயக்கம்… தவிப்பு… ஏக்கம்…. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி இட்டிருந்தான்.
“லைட்டு கூட போடாம என்ன பண்றான் இவன்..??” கேட்டுக் கொண்டே இவர்கள் இருந்த அறைக்குள் வந்த பார்வதியின் விழிகளில் இருட்டிலும் இக்காட்சி விழுந்தது. 
இப்படியொன்றைக் காணவல்லவா இத்தனை காலம் அவர் ஏங்கியிருந்தது. 
பார்வதி மைந்தனும் நாதனும் நின்ற தோற்றம்… அவரையும் கரைத்திருக்க.. கண்ணீராக வந்தது.
இருவருக்கும் இடையூறு செய்யாமல்…வந்த வழியே திரும்ப… 
“அத்த…” என்று வந்த யாழை வாய் பொத்தி அழைத்து வந்து காண்பித்தார். 
இன்ப அலையொன்று வந்து இதயத்தை சட்டென தாக்கியது போல் இருக்க… பார்வதியை கட்டிக் கொண்டாள். 
அவனை… அவனுள் புதைந்து கிடந்த பாசத்தை அவள் அறிவாளே!!! 
இவர்கள் வருகையை உணராமல் இன்னமும் அப்படியே தான் இருந்தனர் இருவரும். 
“வாங்கத்த நாம இங்க இருக்க வேணாம்..” என காதில் கிசுகிசுத்தவள் அவருடன் நகர்ந்தாள். 
சிறகு விரித்து பறக்கவிருக்கும் பாவையின் படலம்..
“நிதி கிளம்புவோமா..?”
பார்த்திபனிடம் தலையசைத்தவள் முன் நின்ற மங்கையை தழுவிக் கொண்டாள்.
விழிகளில் கோத்திருந்த முத்துகள் ஆனந்தத்தின் அடையாளமாய்..! கணங்கள் பல கடந்தும் இருவரும் அப்படியே நிற்க..
“யாழ்!!” மீட்டினான் ராஜா.
தன்னவன் அழைப்பில் தெளிந்தவள்.. நிதியை பிரித்தெடுத்து நெற்றியில் பாசம் பதித்து “பார்த்து இருந்துக்கோ.. ஒரு வருஷம் தானே… ஓடிடும்..! ம்ம்..” தனக்குமாய் சொல்லிக் கொண்டு விடை கொடுத்தாள்.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம்..!
டெல்லி செல்லும் விமானத்திற்கான அழைப்பு வந்து சேர.. அருகில் நின்ற பார்த்திபனைப் பார்த்தாள் நிதி.
விழிகளில் தேங்கி நின்ற துளிகள் ஒவ்வொன்றும் நன்றி மடல் நீட்ட… மறுப்பாய் தலையசைத்து அவள் தலை வருடியவன் 
“கனவு காணலாம்.. தப்பில்ல.. ஆனா அது கனவா மட்டுமே இருந்திடக்கூடாது. அதுக்காக யாரையும் எப்பவும் எதிர்க்கலாம்.. நியாயமா இருந்தா..! ஆனா எதிர்பார்க்கக்கூடாது.. ம்ம்..?”
துளித்த விழிகளும் துளிர்த்த இதழ்களுமாய் இவள் ஏற்றுக்கொள்ள.. அவள் கனவை நனவாக்க.. அனுப்பி வைத்தான்.
மரம் சாட்சியாய்.. மனிதம் சாட்சியாய்.. சக உயிர்கள் சாட்சியாய் மண்ணில் வைத்து முத்தமிட்ட மழை மேகத்தை…. சந்திரிகை சாட்சியாய்.. தாரகை சாட்சியாய்.. விண்ணில் வைத்து முத்தமிட இருக்கிறாள் யாழ் நிதி..!
இன்னும் ஈராறு மாதங்களில் அவள் கமர்சியல் பைலட்!!
விமான இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளின் சிந்தனையில் சரசரவென வந்து விழுந்தன கடந்த கால நிகழ்வுகள் நினைவுகளாக..!
நினைவுகள் தான்..! என்றும் நெஞ்சம் ஏற்று நிற்கும் இனிமைகள்..!
கல்லூரி நாட்கள் கழிந்த பின்.. கனவை கண்ணுக்குள் வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள் நிதி.
பைலட்!!
பிள்ளைப் பருவத்தில் நிமிர்ந்து பார்த்துப் பழகிய புதிதில் நிரஞ்சன் இவளுக்கு அறிமுகம் செய்து வைத்த ஒன்று ஏரோபிளேன்..!
‘அது எப்பினா அங்க பறக்குது..?’
‘பாப்பா தல மேல விழாதா..?’
‘நம்மளும் அதுல போலாமா..?’
இப்படி நிறைய நிறைய கேட்டு ‘எனக்கு அது வேணும்’ என்பதில் வந்து நின்றது.
அடம்.. அதை மீறிய அழுகை..! 
பொம்மை ஏரோபிளேன் வாங்கி வீட்டினில் நிறுத்தி வைக்க.. அடுத்த நாளே அது ஆபரேஷன் செய்யப்பட்டு அத்தனை பார்ட்ஸும் சிதறி கிடந்தது. 
‘யாரை ஏமாத்த பாக்குறீங்க..? ம்ம்..?’
அதிர்ந்து போன அப்பாவைப் பார்த்து இவள் அதரங்களை விரித்து வைக்க.. அப்படியே அள்ளிக் கொண்டு போய் அமர்த்தி.. ‘ஏரோப்ளேன் வாங்கவெல்லாம் முடியாது பாப்பா.. ஆனா ஓட்டலாம்.. அதுக்கு நீங்க பைலட் ஆகணும்..’ என்று சொல்லி வைக்க… வேர்விடும் விதையாய் அது அந்த தளிர் மனதில்..!
‘பெரியவளா ஆனதும் நான் பிளைட் ஓட்டுவேன்..!’ சொல்லிக் கொண்டே வளர்ந்தாள். 
ஆனால் வளரும் பருவத்திலே… நிதர்சனம் ஒன்று அவளுடனே வர.. கனவை கனவாகவே விட்டுவிட முடிவெடுத்தாள்.
விட்டும்விட்டாள்..! அப்படித்தான் நினைத்திருந்தாள் அவன் வரும் வரை..!
ராஜபார்த்திபன்..! அவளது டியூஷன் மாஸ்டர்.. அப்படித்தான் சொல்லிக் கொள்வாள். 
பள்ளிப் பருவத்தில்.. அவனோடான அவளது அதிகப் பேச்சுக்கள் அவள் கனவினைப் பற்றியதாகத் தான் இருக்கும்.
இடையில் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லை.. இவள் கல்லூரியில் இருக்க.. மீண்டும் அவன் அவர்களோடு.. ஆனால் எதையும் அவன் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் கல்லூரி முடிந்ததும் அவன் ஆரம்பம் செய்தான். என்ன செய்து வைத்துள்ளாய்..? என்ன செய்யப் போகிறாய்…? காய்ச்சி எடுத்தல் படலம் அரங்கேறியது.
லட்சங்கள் பல தேவை..! இதை எப்படி அவனிடம் சொல்ல என மௌனம் காத்து நிற்க.. மொழி பெயர்த்தாள் அவள் அக்கா.
அவள் அம்மா… எடுத்ததும் தடை..! அவரது உலகம் பிள்ளைகளோடு நின்று விட.. நிதியை உலகை சுற்றி வர அனுப்பி வைக்க அவரது பயம் தடையாய்..!
“அத்த.. இந்த உலகத்துல வாழறதுக்கு படிப்பு முக்கியம்.. படிப்பு தற்காப்பு கலை.. அத உங்க பொண்ணுக்கு நீங்க கொடுத்துட்டீங்க.. இனி நீங்க வேடிக்கை மட்டும் தான் பார்க்கணும்..” என்றவன் 
அரைக்கோடியை அள்ளிக் கொடுத்து.. யு.எஸ்.. ப்ளையிங் ஸ்கூல் அட்மிஷனோடு வந்து நின்றான். 
அதிர்ந்து போய் நிற்க.. “என் தங்கச்சி சிறகு விரிச்சு பறக்க ஆசைபட்டு நிக்கும் போது நான் என்ன பண்ணணுமோ அதை தான் பண்றேன்” என்றுவிட.. இதோ இப்போது பறந்து கொண்டிருக்கிறாள்.
ஆறு பொழுதுகளும் கார்காலம் குளிர்காலம் தனில் நனைந்து.. முன்பனி பின்பனிக் காலங்களில் சிலிர்த்து.. இளவேனில் தனில் செழித்து.. முதுவேனில் காலம் தொட்டிருக்க..
“ராஜா….” யாழ் துயில் கொண்டிருந்த தன்னவனை தட்டி எழுப்ப…
“ம்ம்..”
“எழுந்துக்கோ.. எல்லாரும் ரெடி ஆகிட்டாங்க..”
“மங்கம்மா…. ப்ளீஸ்…. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்டி” இமை திறக்காமல் அருகில் நின்றவளையும் இழுத்து அணைத்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான்.
“ப்ளீஸ் டா ராஜாக்குட்டி.. நாம அங்க போயிட்டு வந்ததும் தூக்கத்த கன்டினியூ பண்ணுவோம்.. இப்போ எந்திரிச்சுக்கோயேன்..” 
இவள் கொஞ்சலை கையில் எடுத்திருக்க.. 
“அடிச்சுக் கூட எந்திரிக்க சொல்லு ஏத்துக்குறேன்… ஆனா இப்படி நாய்க்குட்டிய கொஞ்சுற மாதிரி மட்டும் சொல்லாதயேன்..” என்ற கேலியில் அவன் இறங்க
தலையணை தடியடி தலைவியின் அடுத்த ஆயுதம் அட்டாக்!!!!! 
அவளிடமிருந்து தப்பி எழுந்து ஓடி குளித்து வர…  இட்லியுடன் வந்தாள் அவன் இல்லாள். 
அவன் கிளம்ப எடுத்துக்கொண்ட நேரத்தில் அவனுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டு தலைவனுடன் புறப்பட்டாள் அவள். 
“இரண்டு வாரமா பங்ஷனுக்கு போகணும் போகணும்னு பாருவும் நீயும் சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனா என்ன பங்ஷன்னு இப்ப வரைக்கும் சொல்லல..” 
“இனி மேலும் நான் சொல்றதா இல்ல..” அவனுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு விட… 
“அப்படியா,,??” என்றவன் பல்சரின் வேகத்தை சற்று குறைத்து சாலை ஓரமாய் நிறுத்திவிட்டு.. 
“நீ சொல்லாம.. பார்த்திபன் பல்சர் இந்த இடத்த விட்டு நகராது” 
‘யாருகிட்ட…’ என்பதாய் இவன் பார்வை பாவையை தொட 
“அப்ப உன் சர்வீஸ் வேணாம்… நான் நடராஜர் சர்வீஸ் செய்துக்கறேன்..” என்றுவிட்டு
இவர்கள் நின்றிருந்த சாலையில் மறுபக்கம் பிரிந்து சென்ற கிளை சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
வாங்கிய பல்ப் பிரகாசமாக இருக்க.. கறுப்பு கண்ணாடி எடுத்து அணிந்தவன் அவளைத் தொடர்ந்தான். 
அவளின் குறுக்கே பல்சரை பார்க் செய்ய… புன்னகையுடன் ஏறிக் கொண்டவள் 
“ஸ்கூல் ஸ்டூடன்ஸ் வெச்சு கீரின் இந்தியா திட்டத்துக்காக ஒரு ப்ரோக்ராம் நடக்குது இங்க… என் ப்ரண்ட் ஒருத்தங்க தான் அத ஆர்கனைஸ் பண்றாங்க..” என்றாள். 
“அதுல நாம என்ன செய்ய போறோம்..??” 
“அத அங்க போய் தெரிஞ்சுக்கலாம்..” என்றவள் “இனி வர ரைட் எடு” என வழி சொல்ல… வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
நிழலில் பல்சரை நிறுத்திவிட்டு நிமிர்ந்தவனுள் அதிர்வலைகளும் ஆனந்த அலைகளும் தேன் தூறல்களும்!!!!!
துளிர்…………!!!!!!!!!!!!! துளிர் விட்டிருந்தது அங்கே..!
இடப்புறம் நின்ற இவளைப் பார்த்தான் பரவசத்துடன்.
அவன் கை எடுத்து தன்னோடு கோத்துக் கொண்டவள் 
“உள்ள போலாம்.. ஏற்கனவே கொஞ்சம் லேட் நம்மால” விளக்கம் கொடுத்தபடி அவனை அழைத்துச் சென்றாள்.
இளஞ்சிட்டுகள் இரு நூற்றுக்கும் மேல் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களுடன் இன்னும் சிலர் ஊடகத்துறை சார்பில்..! 
எதிரே அமைக்கப்பட்டிருந்த விழா மேடை விவரிக்கிறது விடயத்தை இவனுக்கு. 
கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பசுமை இந்தியா திட்டத்திற்காக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் துளிர் நாற்றுப் பண்ணை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட இருக்கின்றது. ஆட்சியர் அந்த விழாவினை துவக்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்ற இருக்கின்றார். 
இது தான்!!!!!
“ராஜா…” வந்து நின்ற பார்வதியிடம் 
“ம்மா…. என்னமா இதெல்லாம்???” என்று கேட்டு வைத்தான். 
துளிரை அவன் விட்டு வந்து ஏழு எட்டு மாதங்களுக்கும் மேல் ஆகின்றது. ராஜ பார்த்திபனும் யாழ் மங்கையுடன் இங்கே வாசம் செய்ய விரும்பி கோவையிலேயே வேலையில் சேர்ந்து விட்டான் ராஜி திருமணத்திற்கு பிறகு.
திரும்பவும் துளிரை ஆரம்பிப்பது பற்றி யாழ் பேச… மறுத்திருந்தான். அச்சமயம் அவனுக்கென அவனிடமிருந்தது அவர்களின் வீடு மட்டுமே. அதை வைத்துக்கொண்டு மறுபடியும் முதல் புள்ளியில் இருந்து தொடங்குவது அத்தனை எளிதல்ல… அவனுக்கு அதில் விருப்பமுமில்லை.
துளிருக்கு முன்பாக அவன் துறையில் தான் இருந்தான். அதையே தற்போது தொடர்ந்தும் வருகிறான். 
இது தான் வாழ்க்கை… மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் வந்து சேரும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தான்.
இப்போது இவள் இப்படி நிற்க வைத்திருப்பது எப்படி இருக்கிறதாம்..??? 
தித்தித்தக்க திம்தா……. தித்தித்தக்க திம்தா…….
இவன் யாக்கையின் மென் நரம்புகளிலெல்லாம் மெல்லிசைச் சத்தம்! 
 
“அத்த நீங்க பேசிட்டு இருங்க… நான் என் பிரண்ட பார்த்திட்டு வந்துடறேன்” என்றுவிட்டு தன் தலைவனிடமும் தலையசைத்து விலகிச் செல்ல பார்வதியை பார்த்தான் மைந்தன்.
“நீ துளிர வித்ததுல அவளுக்கு ரொம்ப வருத்தம் ராஜா…. அவகிட்ட இருந்து பணம் வேணாம்னு சொல்லிட்டியாம்.. அதான் என்கிட்ட கேட்டா இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு இந்த பணம் என்கிட்ட தான் இருக்கும் அத்த… நாம ஏன் இங்க பக்கத்தில இடம் வாங்கி திரும்பவும் ஆரம்பிக்க கூடாதுன்னு.. 
அப்பாவுக்கும் கடைசி நேரத்தில எல்லா பொறுப்பையும் உன் தோள்ல சுமத்தி கஷ்டப்படுத்திட்டோமேன்னு கவலை.. 
அதான் சரின்னு சொல்லிட்டோம்.. யாழ் கொஞ்சம் போட்டு… பேங்க்ல கொஞ்சம் வாங்கி தான் ஆரம்பிச்சிருக்கு. 
உன்கிட்ட சொன்னா நீ கோவப் படுவியோன்னு பயத்துல உன்னை சமாளிக்கற பொறுப்ப என் கிட்ட கொடுத்திட்டு போயிருக்கா..” 
“யாருக்கு?? அவளுக்கு பயமா..?? ஏன் மா நீ காமெடி பண்ணிட்டு இருக்க.. அவளுக்கு பயப்படுற மாதிரி நடிக்க கூட வராது” 
பார்த்திபனின் பதத்தில் பார்வதியிடம் புரிதல் அவன் அகம் பற்றி..! 
“அப்பா எங்கம்மா..??”
“இங்க தானே இருந்தாரு..” என விழிகளை சுழற்றியவர் “அதோ அங்க இருக்காரு பாரு” என்ற திசையில் 
ஐந்து வயது இருக்கும் ஒரு இளம் சிட்டை எடுத்து மடியில் வைத்தபடி காட்சி கொடுத்தார் பெரிய சாமி.
அவரிடம் வந்து அமர்ந்தான்.
நிமிர்ந்து பார்த்தவர் புன்முறுவலுடன் அந்த குழந்தையிடம் 
“இந்த மாமாகிட்ட கேளு… உனக்கு என்ன மரம் வேணும்னாலும் எடுத்து கொடுப்பாரு” என்றார். 
“அங்கிள்….. எனக்கு மேங்கோ ட்ரீ கொடுக்கறீங்களா??? எங்க வீட்டில தான் மேங்கோ ட்ரீ இல்ல.. என் ப்ரண்ட்ஸ் எல்லார் வீட்டுலயும் இருக்கு..”
அபிநயத்துடன் அவள் கேட்க அப்படியே அள்ளிக் கொண்டவன் அவள் நெற்றியில் முத்திரை பதித்து “கண்டிப்பா தரேன்… வீட்டுக்கு போகும் போது வாங்கிட்டு போ” என்றதும்
“தேங்கஸ் அங்கிள்… நான் என் ப்ரண்டஸ்கிட்ட போகட்டுமா..??” எனக் கேட்க சரியென்று சம்மதித்து இறக்கிவிட்டான்.
“அப்பா..”
“சொல்லுப்பா..” 
“நீங்க இன்னும் என்னை உங்க மகனா ஏத்துக்கல போல..”
“ராஜா..!!” என்றவர் திகைத்து போய் அமர்ந்திருக்க
“அப்புறம் ஏன்பா ராஜிக்காக பண்ணது பத்தி யோசிச்சு கவலைப்பட்டு இருக்கீங்க… ராஜிம்மா என் தங்கச்சிப்பா… நான் செய்யாம அவளுக்கு யார் செய்வா??” சற்றே கோபம் துளிர்விட்டு விட.. 
மென் முறுவல் ஒன்று அவரிடம்.. என்னவோ ஏதோ என பயந்தவருக்கு இவன் பாசமும் கோவமும் இதமாக.
“அது அப்படியில்ல ராஜா… எந்தவொரு அப்பாக்கும் தன் பையன் சிரமப்படுறது பார்த்து வர வருத்தம் தான் எனக்கும்” 
“எனக்கு எந்த சிரமமும் இல்ல… நீங்களும் அம்மாவும் சந்தோஷமா இருந்தாலே போதும் ப்பா… அது மட்டும் தான் எனக்கு வேணும்”
முன்பு எப்படியோ இப்போது இருவருக்கும் இடையில் இருப்பது இலக்கணம் மாறா புரிதல் மட்டுமே..! 
மெல்ல அவன் தலையை வருடியவர் “எனக்கு எந்த கவலையும் இல்லப்பா.. நானும் அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்… எங்களை நினைச்சு நீ கவலப்படாம இரு..” என்றார்.
அவரது கையை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.
அடுத்து மாவட்ட ஆட்சியர் வருகை… அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு அவர்களை வைத்தே சாலை ஓரங்களில் நடப்பட்டு துளிரின் பசுமை இந்தியா திட்டத்தில் சிறு விதை சிறப்பாக விதைக்கப்பட்டிருந்தது.
“ராஜா… கொஞ்சம் வாயேன் என்கூட..” என்றவளின் அழைப்பை ஏற்று அவளுடன் சென்றான்.
நாற்றுப் பண்ணை சிறு மாற்றமின்றி அவனது துளிரைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றவள் 
“அங்க இருக்க… அட்டைப் பெட்டியை எடுத்துக் கொடு..” என்றாள்.
அதை எடுத்துக் கொடுத்தவன் “என்ன இருக்கு இதுல..?” என்று கேட்க..
“இதுல விதைகள் மடிச்சு வெச்சிருக்கோம்.. இங்க வந்திருக்க எல்லாருக்கும் இதை தான் கொடுக்கப் போறோம்.. அவங்க வெளில போகும் போது ரோட் சைட் இத தூவிட்டு போனா போதும்… மிச்சத்தை மழை பார்த்துக்கும்.. மாமாவோட ஐடியா இது… எப்படியிருக்கு..??”
மெச்சுதலை மென்னகையோடு மொழிந்தான்.
அதன் பிறகு விழாவிற்கு வந்தவர்களுக்கு நன்றி உரைத்து விதைகளை பரிசாக கொடுத்து அனுப்பிவிட்டு இவர்கள் மட்டுமாக இருந்தனர்.
“அண்ணா… இந்தாங்க அண்ணி வாங்கிட்டு வர சொன்னாங்க..” அகில் அவனிடம் கொடுக்க… அதில் அவர்களுக்கான உணவு இருந்தது.
“அண்ணா நான் அப்ப கிளம்பவா?? அம்மா ஊருக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க… ரயில்வே ஸ்டேஷன் வரை கொண்டு போய் விட்டுட்டு வரணும்..” 
“சாப்பிட்டு போடா”
“இல்லண்ணா லேட் ஆகிடும்… நான் கிளம்புறேன்” என அவன் புறப்பட
“அகில்” என்றழைத்தவன் அவனைத் தழுவிக் கொண்டு நன்றி நவில்ந்தான்.
யாழ் மங்கையுடன் கை கோத்து துளிரை மீட்டிருக்கிறானே..!
“அண்ணா… என்னண்ணா நீங்க.. எனக்கு போய் நன்றி சொல்லிட்டு. நான் உங்களை என் அண்ணணா தான் பார்க்கிறேன்.. தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதீங்க ப்ளீஸ்..!!”
“சரிடா.. இனிமே சொல்லல… இந்தா இதை வெச்சிக்க..” என அவன் மறுத்தும் பணம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு வந்தான்.
அவர்களின் பண்ணையிலே எல்லையாக ஆலமரங்களும் வேப்பமரங்களும் தான் நின்று காவல் காத்துக் கொண்டிருந்தன.
ஆலமரத்தின் அடியில் நிழலில் அவன் அகத்தினர் அமர்ந்திருக்க… அவர்களோடு சேர்ந்து கொண்டான். 
மதிய உணவை உண்டு விட்டு சற்று நேரம் நடப்பதாகச் சொல்லி பெரியவர்கள் அங்கிருந்து அகன்றுவிட…. தன்னவளை தனக்குள் புதைத்துக் கொண்டான்.
அதுவரை அவன் அனுபவித்த வந்த அத்தனை மென் உணர்வுகளையும் அவளுக்குள் கடத்தினான். 
“என் மேல கோவம் ஏதும் இல்லையே..” நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கேட்க
“ஏன் இல்ல….. நிறைய இருக்கே…!!” என்றபடியே அவள் முன்னெற்றியில் முத்தமிட..
“கோவமா இருக்கிறவங்க பண்ற வேலையாடா இது..???” அவன் நெஞ்சில் முட்ட..
“நான் பண்ணுவேனே… இது மட்டும் இல்ல இன்னும் பண்ணுவேன்…” குறும்பும் குறுநகையுமாய் அவன் கூற…
சட்டென அவனைத் தள்ளிவிட்டு அவள் ஓடப் பார்க்க… அழகாய் அவள் முயற்சியை முறியடித்தவன்
“மங்கம்மா.. இப்படியே கொஞ்ச நேரம் இருடி” என்று விட மங்கையும் மன்னவனுமாய் மையலோடு கழிந்தது சிறு பொழுது!!!!!
பார்வதியும் அவர் நாதனும் வந்துவிட நால்வருமாய் விஷ்ணு ராஜிக்காக அங்கேயே காத்திருந்தனர்.
மாலைப் பொழுதின் முன் வேளையில் வந்தனர் விஷ்ணுவும் ராஜியும்.
இவர்களைத் தேடி வந்த ராஜி… கண்ட காட்சியில் இடையில் கை வைத்து முறைத்து நிற்க… அவளோடு வந்த விஷ்ணு புன்னகையுடன் அவளைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்தான்.
காட்சி இதுவே…..
ஆலம் நிழலில் தலைவன் தன் தந்தை மடி சாய்ந்திருக்க… தலைவி அவன் தாய் மடி சாய்ந்திருந்தாள்.
“வாங்க மாப்பிள்ளை…. வா ராஜிம்மா..” பெரியவர்களின் வரவேற்பில் இமை திறந்த பார்த்திபன் இன்பமாய் அதிர்ந்தான்.
அன்றொரு நாள் அவன் கண்ட கனவு நனவாகி அவன் முன் காட்சியாக!!!!! உள்ளத்தில் பேருவகையும் நிறைவும் சரி பாதியாக.. 
அவனருகில் இருந்த காரிகையுடன் கை கோத்துக் கொண்டான்.
அவனுக்கென அம்மா உண்டு.. அப்பா உண்டு.. தங்கை உண்டு.. அத்தனை உறவுகளும் உண்டு. ஆனால் அவனுக்கென குடும்பம் இருந்ததில்லை. இப்போது அவனுக்கென இருக்கும் அன்புக் கூட்டில் அவனும் அவனவர்களும்..!!
சாத்தியமானது அவன் வாழ்வின் சங்கீதமான சரிபாதியால்..!
யாழ்.. அவன் ஆனந்த யாழ்.. அவன் காதலின் கீதம்..! அவளின் ஆனந்த மீட்டல் தான் அவன் பாசக் கூடு.. பார்த்திபன் கனவு..! 
பார்த்திபன் கனவு நிறைவேறியது!!!!!

Advertisement