ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி !
பார்த்திபன் கனா 13
சாளரம் வழியே எட்டிப் பார்த்த கதிரவன் கதிர்கள் மெல்ல மெல்ல போர்வைக்குள் நுழைந்து மன்னவன் முகம் பார்த்துவிட முயல… அவனே போர்வை விலக்கி தன் திருமுகம் காட்டினான்.
பார்த்திபன் பார்வை பக்கத்து மேஜையில் இருந்த அவன் மங்கையிடம் தஞ்சம்..! 
மணக்கோலத்தில் அலர்ந்த அகத்துடன் மலர்ந்த முகத்துடன் விழிகள் பார்த்திபன் மேல் படித்திருக்க….. அப்படியே பிடித்து புகைப்படத்தினுள் போட்டிருந்தான் விஷ்ணு..!
மெல்ல நீண்ட அவன் விரல்கள் வஞ்சியவளை வருடிக் கொடுக்க… இதழோ யாழ் மீட்டியிருந்தது.
“காபி வேணுமா…?” கிட்சனில் இருந்தே அவள்.
‘இல்ல… நீ தான் வேணும்’ சத்தியமானாலும் சத்தமாய் சொல்லிட முடியாதே..! அவன் தாய்.. தங்கை இருக்கக் கூடும்.  
“மங்கம்மா!!!!!!!” இது அவன் கோட் வோர்ட். கட்டாயம் வொர்க் அவுட் ஆகும்..!
“ஒரு அஞ்சு நிமிஷம்…” அவள் அங்கிருந்தே..!
“ம்ம்…” என மெத்தையில் முகம் புதைத்துப் படுத்தவனுள் மெல்ல வந்து மோதி நின்றன உயிர் கொண்ட நினைவு அலைகள்!!!!!
அதன் சுகத்தில்… அவன் இருக்க.. அவன் மங்கையும் வந்து சேர்ந்தாள்.
“ராஜா!!!!!” 
எழுந்தவன் தன்னவளை இழுத்து தன் மீது இருத்திக் கொண்டு… “இன்னிக்கு என்ன நாள்..?” ரொமான்ஸ் ராஜாவாக கேட்டு வைக்க…
“வெள்ளிக்கிழமை டா” ‘இது கூட தெரியாமையா எழுந்து கோலம் போட்டு கோவிலுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கேன்..’ என்ற ரேஞ்சில் இவள்.
“சரி எழுந்துக்கோ… இதைக் கேக்க தான் கூப்பிட்டேன்..” முகம் மாறாமல் இருக்க பிரம்ம பிரயத்தனம் பார்த்திபனிடம்.
இதழ் முகிழ்த்த புன்னகையை இதழ் கடித்து மறைத்தவள்… “நான் போகவா…?” எனக் கேட்டு வைக்க..
கதவருகே நின்றவளை நோக்கி தலையணை பறக்க… ‘கண்டு பிடிச்சிட்டானே!!’ மங்கை மனவோட்டம்..!
பிரஷ் செய்து வெளியே வர..  
   
“ராஜா என்னாச்சுடா??? முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு… சரியா தூங்கலையா…?” தாயின் வாஞ்சை அவனை வருடிச் செல்ல.. அவள் மடி சாய்ந்தான். 
“ம்மா…..” 
“ம்ம்…” 
“உன் பையனை ஒருத்தி வேணாம்னு சொல்லிட்டாமா……” 
இவன் உளறலில் பார்வதி வேகமாக யாழ் பக்கம் பார்க்க… அவள் முறைப்புடன் முன்னறைக்கு வந்தாள். 
“டேய்!!!!! நல்லா தான இருக்க….” 
“பாரு….. இப்ப ஏன் இப்படி ஒரு சந்தேகம் உனக்கு..??” அவள் நாடி பிடித்துக் கேட்க.. 
“நீ பேசுறது பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது…”
மீண்டும் அவர் பார்வை யாழை தொட்டு வர… இம்முறை அவன் பார்வையும் அவளை தொட்டு தொக்கி நின்றது.
“ம்மா… முழுசா கேட்டுட்டு நியாயம் சொல்லும்மா…” என்றவன் 
“இதே நாள்….. ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி…” 
“ராஜா…. எனக்கு வேலை இருக்கு.. அம்மா இன்னொரு நாள் கதை கேட்கவா…” கனிவு கிஞ்சித்தும் இல்லை… கிண்டல் தான் கொட்டி கிடந்தது. 
“பாரு!!!!” என பல்லைக் கடிக்க…
“சரி சரி சொல்லு….” 
“போ…. நான் சொல்ல மாட்டேன்…” முறுக்கிக் கொள்வது இவன் முறையானது. 
“சரி… போ…” 
“ம்மா….. என்னமா நீ???? டக்குன்னு இப்படி சொல்லிட்ட…” அவன் குரல் இறஙகி வர… 
“சரி சொல்லுடா ராஜா….” பார்வதி பர்பெக்ட் அம்மா அவதாரம் எடுக்க.. யாழிடம் விழிகளை வைத்து சொல்ல ஆரம்பித்தான். 
யாழகத்தினர் அங்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்திருந்த தருணம் அது. 
அந்தி மாலை நேரத்தில்… அலுவல் முடித்து வந்த பார்த்திபனிடம் வந்து நின்றார் பகவதி. 
“அத்த… சொல்லுங்கத்த…” 
“ராஜா… யாழ் காலேஜ் வரைக்கும் போயிட்டு வர முடியுமா??” சோர்வான அவன் தோற்றமே அவரிடம் தயக்கம் சேர்த்தது. 
“என்னாச்சு அத்த….” கேட்டவாறே பைக் சாவியை கையில் எடுத்திருந்தான்.
“எப்பவும் காலேஜ் முடியவும் மூணு மணி போல வந்திருவா… இன்னிக்கு இன்னும் வரல… அவகிட்ட போனும் இல்ல…” 
அவன் பார்வை சட்டென குற்றம் சாட்ட… 
“அவங்க காலேஜ்ல அதெல்லாம் கொண்டு போக கூடாதுப்பா…” என்றவர் 
“ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பிரச்சினை போல… அவங்க காலேஜ் இருக்க பக்கம் தான்… அதான் கொஞ்சம் பயமா இருக்கு.. நிரஞ்சனுக்கு கூப்பிட்டா அவன் எடுக்கல.. அதான்….” 
அவர் முடிக்கும் முன் வண்டியை கிளப்பியிருந்தான். அவர்கள் ஊரில் கட்சி கலவரம் வழக்கமான ஒன்று தான்.. ஆனால் அதன் விளைவுகள் ஒவ்வொரு முறையும் வேறாக வீரியமாக இருக்கும். 
வேகம்…. வேகம்…. பல்சர் பறந்து கொண்டிருந்தது. 
அவள் கல்லூரி பக்கம் வந்து சேரும் போதே சேதாரம் அவனுக்கு கலக்கம் கொடுத்தது. 
பேருந்து.. ஆட்டோ.. என எல்லா வகை போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. நிச்சயம் அவள் கல்லூரியினுள் தான் இருக்க வேண்டும் என்ற அவன் எண்ணத்தை உடைத்துப் போட்டிருந்தாள் அவள். 
கல்லூரியில் அவளை காணவில்லை. 
அடுத்து என்ன?? அறியாதவனாய் அப்படியே அமர்ந்துவிட்டான். 
வரும் வழியெங்கும் தேடல் தொடரவே அவ்விடம் வந்து சேர்ந்தான். எங்கும் அவளில்லை.. 
மழை முகில்கள் வேறு முத்தமிட்டு முகிழ்த்த விழைந்து சூழ்ந்து கொண்டிருந்தன. 
“மங்கம்மா…… எங்கடி போன…??” அவனுக்குள் இருக்கும் அவளிடம் கேட்டான். 
ஆம்!!!!! அவள் அவன் அகத்தினுள் நுழைந்து நாட்கள் பல ஆகின்றன.. 
இப்படி… இதனால்… இவள்… இதயத்தினுள் நுழைந்தாள்… என சொல்லிவிட முடியவில்லை அவனால். 
ஆனால் அவனுள் தாய்மை.. தோழமை… நல்துணை…அறிமுகம் செய்து அனுபவிக்க அனுமதி கொடுத்திருந்தாள். 
பார்வதி தேவியிடம் இருந்து அழைப்பு அவள் மைந்தனுக்கு… 
“ம்மா…” 
“…….” 
“நான் அங்க தான் இருக்கேன் மா.. பார்த்திட்டு இருக்கேன்.. கொஞ்ச நேரத்தில கூப்பிடுறேன்…” அழைப்பை துண்டித்து அங்கிருந்து புறப்பட்டான். 
வழியின் இருபுறமும் விழிகளை சுழற்றியபடி வந்தவன் ஓரிடத்தில் ஓங்கி உயர்ந்து நின்ற கட்டிடத்தை பார்த்ததும் சட்டென நின்றான். 
புத்தக பூங்கா!!!!! 
இறங்கி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். தரை தளத்தில் விழிகளால் அவசர அலசல்.. அங்கிருக்க வாய்ப்பில்லை என அறிந்தே!!! 
வலப்புறம் இருந்த மர படிகளில் இவன் தாவி ஏற… 
தட்… தட்… தட்…. தாளத்தில் தரை தளத்தில் இருந்தவர்கள் சற்றே எரிச்சலுன் நிமிர… 
“சா… சாரி…” என்றுவிட்டு மெல்ல நடந்தான். 
எங்கே???? எங்கே???? 
எங்கே நாவல் பிரிவு இருக்குமோ அங்கே அவன் நங்கையும் நிச்சயம் இருப்பாள். 
அதோ….. இருள் கவிழ்ந்த அந்த இடத்தில் சாளரத்தின் அருகில்… 
மூழ்கிப் போயிருந்தாள்.. 
வெளியே நிலவும் சூழ்நிலையின் தாக்கம் சிறிதளவும் தென்படவில்லை அவளிடம்… பொறுப்பில்லாமல் புத்தகத்தினுள் புதைந்து போய் கிடப்பவளிடம் கொஞ்சமும் கோவம் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது அவனுக்கு.
எப்படி வரும்???? காதல் கொண்ட உள்ளத்திற்கு கொஞ்ச மட்டும் அல்லவா  வரும்..? 
மெதுவாக எட்டு வைத்து அவள் முன்பு போய் அமர்ந்தான். அரவம் எல்லாம் அவள் செவிக்குள் செல்லவே இல்லை. 
வலப்புற கையைக் கொண்டு சற்றே தலை சாய்த்து பிடித்து… சாளரக் கதவில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். 
விழி எடுக்கவில்லை அவன்.. விருப்பமுமில்லை அவனிடம். 
அவள் அசைவுகளையெல்லாம் அப்படியே… அப்படியே அவனுக்குள் அனுமதித்து அனுபவித்துக் கொண்டிருந்தான். 
நெற்றி சுருங்கி புருவங்கள் முடிச்சிட்டது… கதைக் களத்தின் தீவிரத்தை காட்ட.
இதழ் மடல்கள் மலர்ந்து விரிந்தன வஞ்சனை இன்றி… கதையின் காமெடி செக்ஷன். 
இதழ் கடையோரம் இடிபடுகிறது இவள் பற்களில்… அநேகமாக இப்போது ரொமான்டிக் சீன் போய்க்கொண்டு இருக்கும்.
சட்டென அவள் முகத்தில் அதுவரை இருந்த ரசனைகள் ஒதுங்கி… அதிர்ச்சி… அவள் எதிர்பாரா ஏதோ ஒன்று கதை களத்தில்..! 
விழிகளில் மெச்சுதல் வந்து போகிறது… இது கதாசிரியருக்கானது. 
இப்படி… அவளோடு சிரித்து… அதிர்ந்து.. திகைத்து… ரொமான்ஸ் செய்து… ட்விஸ்ட் அடித்து… அவளை படித்துக் கொண்டிருந்தான்.
அதுவரை நாழிகைகள் நகராமலா இருக்கும்??? 
ஒரு மணி நேரம் உருண்டு ஓடியிருந்தது. 
இப்போது புரட்டிய கடைசி பக்கத்தை படித்து முடித்தாள் புன்னகையுடன். நிறைவு அவள் முகத்தில் நிலைத்து நிற்பது இவனுக்கு புரிகிறது. 
“யாழ்…..” மென்மையாய் அவன் இதழ் கொண்டு அவளை மீட்டினான். 
இதே போலத் தானே அன்றும் பல்லவர் நரேந்திரவர்மரின் காதலில் தன்னைத் தொலைத்து.. இடம் பொருள் ஏவல் இன்றி.. இவனுக்கு தாய்மடி சுகம் தந்திருந்தாள். 
அவனுள் விரிந்து நின்ற அக்காட்சியில்.. கனிகிறது அவன் முகம்.. களிக்கிறது அவன் அகம்.. கனவு காண்கிறது காதல் கண்ட மனம் பாவையோடான பொன் நாழிகைகளை..! 
அவளோ அந்த கதையிலிருந்து இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. பார்த்திபன் தான் பாவையைப் படித்துப் பழகியிருந்தானே..
“யாழ்!!!!” சற்று சத்தம் கூட்டி அழைக்க.. அப்போது தான் அவனைப் பார்த்தாள். 
“ஹேய்!!!!!”  அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை. 
“போலாமா????” 
இப்போது தான் அவளுக்கு நேரம் பார்க்க நினைவு வருகிறது.
“அச்சோ…” என்ற பதமும் வருகிறது தவிப்புடன். 
வா… என்றுவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான். 
வெளியே வந்து நின்றவனை காத்திருக்க வைத்து விட்டு தான் வந்து சேர்ந்தாள் அவன் காந்தை.. 
இருள் ஈராயிரம் கரம் கொண்டு அணைத்து நின்றது அவர்களை. 
அவள் வரவும் இவன் வண்டியை கிளப்ப… இப்போது தயக்கம் அவளிடம் புதிதாக முளைத்தது. 
அவனையும் பல்சரையும் மாறி மாறி பார்க்க.. 
“என்ன நிக்கிற… சீக்கிரம் ஏறு.. இப்போ தான் கொஞ்சம் அடங்கிருக்கு கலவரம்.. அடுத்து வரதுக்குல இங்கிருந்து போகணும்” அவன் அவசரப்படுத்த.. 
“நான் ஆ… ஆட்டோல வரேன்…” என்கவும் சுறுசுறுவென ஏறுகிறது எரிச்சல் அவனுக்கு. 
அவளுக்காக அவன் காத்து நிற்க.. அவள் அசால்ட்டாக ஆட்டோவில் வருகிறேன் என்றால்?? அதை விட அவனோடு வர அவள் காட்டும் தயக்கம்.. பிடித்தமில்லை அதில்.
“யாழ்.. இப்போ ஆட்டோ எல்லாம் எடுக்க முடியாது… நான் உன்னை கூப்பிட தான் வந்தேன்.. வா போலாம்..” நிறுத்தி நிதானமாக எடுத்து சொன்னான். 
“இப்போ கபிலன்(பேருந்து) இருக்கே…” 
அவ்வளவு தான்… 
“ஏய்…. ஏறுடி… அது எனக்கு தெரியாது பாரு.. சொல்ல வந்துட்டா…” என எரிந்து விழ.. 
“போடா…” என்று விட்டு அவள் விருவிருவென வெளியேறி இருந்தாள்.
“கொழுப்பு கூடிப் போச்சு டி உனக்கு..” என்றவன் 
அவளுக்கு குறுக்காக வந்து நிறுத்தி.. 
“என் கூட வரதுல உனக்கு என்ன பிரச்சனை..??” அமைதியாக கேட்டான். 
“அ..அது நிரஞ்சன்னா தவிர வேற யார் கூடவும் போனதில்ல…..”
ஓ… என்ற அவன் தொனி… அவன் புரிதலை பிரதிபலிப்பது போல் இருக்க…. அப்பாடா… என்ற ஆசுவாசம் அவளிடம். 
அடுத்த கணம் வண்டியை நிறுத்தி கீழே இறங்கியவன் அவளிடம் சாவியை கொடுத்து அதிர வைத்தான். 
“நீ ஓட்டு… நான் உன்கூட வரேன்.. எனக்கொன்னும் பிரச்சனை இல்ல..” 
விளக்கம் வேறு… 
டேய்!!!!! என இவள் பல்லை கடிக்க.. 
“யாழ்… உனக்கு விருப்பம் இல்லாதத பண்ண எனக்கும் விருப்பம் இல்ல.. புரிஞ்சுக்கோ..”
இவ்வளவு இறங்கி வந்து பேசுபவனிடம் மறுப்பு மொழி பேச இயலவில்லை. 
அழைத்தே வந்து விட்டான் வீட்டிற்கு. 
ஆனால் அதன் பிறகு அவனை ஆட்கொண்டு விட்டது அவள் சிந்தனை துளிகள். 
அவனுடன் வர அவள் காட்டிய தயக்கம் அவனை யோசனையில் தள்ளிவிட்டு நிற்கிறது. 
அவளிடம் காதல் சொல்ல வேண்டும்… ஆனால் இப்போது அல்ல.. அதுவரை காத்திருக்க வேண்டும்.. அவனால் அது முடியுமா??? அவனிடம் பதிலில்லை. 
ராஜாவின் பார்வை கடிகாரத்தின் பக்கம்.. நேரம் ஒன்பதை நெருங்கியிருந்தது. 
இவன் தெளிவில்லாமல் திணறும் பொழுதில் தென்றல் காற்று தழுவ வழி விட்டு மாடத்தில் அமர்ந்து கொள்வான். 
இயற்கையை விட வேறு வழிகாட்டி வேண்டுமா என்ன?? அத்தனைக்கும் விடை கிடைக்கும்.. 
ஒன்பது மணிக்கு முன்னால் மேல் மாடம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது அவனுக்கு. வேறு யாராக இருக்க முடியும்??? அவன் மங்கையைத் தவிர.
அவர்கள் இங்கு வந்த இரு நாட்களிலேயே இவனிடம் வந்து நின்றவள் 
“இங்க பாருங்க.. நாங்க டியூஷன் எடுப்போம் மேல.. அப்போ யாரும் டிஸ்டர்ப் செய்யறத விரும்ப மாட்டோம்..அதனால நீங்க ஒன்பது மணிக்கு மேல.. மாடம் வந்துக்கோங்க…” என்று விட்டாள். 
அவள் வந்து அழைத்தால் மட்டுமே அவ்விடம் செல்வான். அதுவும் டவுட் கிளாரிபிகேஷன் அலோன்.. 
இரவு உணவாக புட்டு என்ற பெயரில் எதையோ முயற்சித்திருந்தான் முதல் முறையாக… அதை தட்டில் எடுத்துக்கொண்டு மேல் மாடம் வந்தமர்ந்தான். 
அழகாய் ஓர் அதிர்ச்சி அவ்விடம் அந்த ராஜ குமாரனுக்காக..
“ஐ லவ் ராஜா….. ஐ ஹாவ் பாலன் இன் லவ் வித் ராஜா……….” காதல் கனிந்து கசிகிறது காரிகை குரலில்.
புறப்பட்டு போய் கொண்டிருந்த புட்டு நடு வழியில் நின்றது விக்கலுடன் இவனுக்கு!!!! 
‘மங்கம்மா…..?????????’
“என் மனசுல எப்பயும் யாரையும் அனுமதிக்க மாட்டேன்.. ஆனா இவன் எப்படியோ வந்துட்டான்டி..” 
விக்கல் விடை கொடுத்து விட புரை ஏறுதல் என்ட்ரி..
“இதுவரை க்ரஷ்னு கூட எவனும் இருந்ததில்ல.. ஆனா இவன் லவர் பாயா டைரக்ட் போஸ்ட் ஆகிட்டான்டி…”
தலையை தட்டி கொடுக்கவும் நிதானம் திரும்புகிறது தலைவனுக்கு!! 
“இந்த மதுனால நான் பேட் கேர்ள் ஆகிட்டேன்டி…” 
‘மது யாரு????’ 
“அவ எவ்ளோ லக்கில….. என் ராஜா மாதிரி ஒரு ஹப்பி கிடைக்க…” 
‘என்னது கல்யாணமா????’ ஆயிரம் வோல்ட் அவனுள் இறங்கினாலும் அசராமல் நின்று அவன் கருத்தை முன்வைக்கிறான்.
‘அம்மா சத்யமா எனக்கின்னும் கல்யாணம் ஆகலடி….’
“புரியுது தான்….. ஆனா என்னால எதுக்காகவும் என் ராஜாவ விட்டு கொடுக்க முடியாது..”
‘உன்கிட்ட யாருடி கேட்டா…..??’ அப்கோர்ஸ் அவன்.
“ஹேய்!!!!!! அவன் உனக்கு அண்ணன் டி… அவனை போய்…. ச்ச..ச்ச… டூ பேட் சீத்து இதெல்லாம்…”
‘யாரு யாருக்குடி அண்ணன்??? சீத்து… அந்த சீனிவெடி சைஸ்ல ஒன்னு இவ வீடு வந்து போகுமே… அதுவா???’ ஆராய்ச்சியில் அவன்.
“ம்ம் அது……. அடுத்து என்னவா??? ராஜாவ எனக்கே எனக்கு கொடுத்த என் டார்லிங்க்கு ப்ரியங்களுடன் ஆயிரம் முத்தங்கள் அனுப்பனும்…” துள்ளலுடன் அவன் துணை. 
முற்றிலுமாய் குழம்பிய நிலையில் நாயகன்.. 
‘ஆல்ரெடி மது யாருன்னு இன்வஸ்டிகெட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான். இதில் எக்ஸ்ட்ரா என்ட்ரி கொடுக்கும் இவ டார்லிங் யார்???’ 
“ஹேய்!!!!! உன்கிட்ட இத சொல்ல மறந்துட்டேன்… இரு இரு படிச்சே காட்டுறேன்.” 
இருவரிகள் அவள் இதழ் வாயிலாக அவன் செவிக்குள் வந்து விழுகிறது.
அவன் புரிதலில் ஏதோ தவறு புதைந்திருப்பது தெரிகிறது. அதை தெளிய வைத்தாள் அவன் தெரிவை.
“அந்த இடத்தில… அவன் கண்ணீர்ல தான் நான் காதல்ல விழுந்திட்டேன்டி.. எவ்ளோ வலிச்சிருக்கும் அவனுக்கு…” அதை தொடர்ந்து…. வந்தவை எல்லாம் அவனுக்கு விடயத்தை விளங்க வைக்க போதுமாய் இருந்தது.
“ம்ம்…. சரிடி… நான் இன்னிக்கு மறுபடியும் படிச்சிட்டு நாளைக்கு கொண்டு வந்து தரேன். ஆனா ஒரு கண்டிஷன் அவன நீ அண்ணனா அக்சப் செய்துக்கனும்… ஓகே..”
“ம்ம். வெரி குட் கேர்ள்…” அழைப்பை துண்டித்து திரும்ப அவள் முன்பு நின்றிருந்தான் அவன்.
“என் மேல காதல் வந்தா அத என்கிட்ட தானே சொல்லனும்??? அதைவிட்ட அந்த அரை டிக்கெட் கிட்ட சொல்லிட்டு இருக்க??? ம்ம்???” 
இதழில் இடம் பெற்ற இளஞ்சிரிப்பும் குவித்து வைத்த குறும்புமாய் அவன் கேட்க… இவளுக்குள் இறங்கி ஒடுகிறது இன்னதென்று புரியாத உணர்வொன்று. 
“எ… என்ன…??” 
“என்ன என்ன???” ஏதுமறியா பிள்ளை பாவனை ஏறியிருந்தது அவனிடம்.
“அ…அது.. நீ… ராஜா…” முதல் முறையாய் அவளிடம் தடுமாற்றம் காண்கிறான். 
அவன் மங்கை தடுமாறுவதா???  தன்னவளின் தடுமாற்றத்தில் தலைவனிடம் தலைதூக்கி நிற்கிறது ரசனை
“மங்கம்மா…… நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்.. நீ பண்ணது தப்பு தான்..”
“இ..இல்ல..”
“என்கிட்ட தானே நீ சொல்லிருக்கனும்… என்ன தான் உன் பெஸ்ட் ப்ரெண்ட்னாலும் ப்ச்..” அவன் அதிருப்தியை அப்பட்டமாக காட்ட.. எப்படி இருக்கிறதாம் அவளுக்கு. 
அடேய்!!!! அலறிவிட்டாள். 
“என்னது டேயா?????” அவன் முறைக்க… 
“ஆமா… நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டே இருக்க..” ‘பதறுதா இல்லையா..?’ 
“நான் எங்க சொன்னேன்.. இவ்வளவு நேரமும் நீ தான் சொன்ன… நிறைய சொன்ன…” கொஞ்சும் காதல் மொழிகள் மன்னவனிடம். 
“ஹேய் ராஜா…….” என்றவள் சட்டென்று அவள் வைத்திருந்ததை அவனிடம் நீட்டினாள். 
‘ராஜா ராணி!!!!!!!!!’ 
“என்ன இது?????” புரியாத பாவம் இப்போது. 
“கதை புக்… இதைப் பத்தி தான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன்…” 
“ராஜா… இந்த கதையில வர ஹீரோ… இவ..” 
கீழிருந்து பகவதி அழைத்து விட அவனைப் பார்த்தாள்… அவன் போ என்பதாய் தலையசைக்க.. அவள் கீழே சென்றுவிட்டாள். 
கையிலிருந்த புத்தகத்திடம் “யாருடா நீ??? எனக்கு வில்லனா???” பேசியபடி அவனும் இறங்கிவிட்டான். 
அடுத்த நாள்… அதே நேரத்தில்… அதே இடத்தில்… அவன் காதல் சொன்னான் காரிகையிடம்.
“உனக்கு எப்படி ராஜா மேல காதலோ.. எனக்கும் ராணி மேல காதல். ஆனால் என்னோட ராணி கற்பனை கதாபாத்திரம் கிடையாது.” 
இவள் விழிகள் வியப்பில் விரிய.. 
“இந்த ராஜாவோட ராணியா நீ வந்திடறியா…. வாழ்க்கை முழுவதும்..” 
எதிர்பார்ப்பை ஏற்று நின்ற அவன் விழிகள் திகைப்பை தத்தெடுத்த அவள் விழிகளில் சங்கமித்தன.
“ராஜா…..” என்றவள் சற்றும் எதிர்பாராத ஒன்றை சந்திக்க முடியாமல் நின்றிருந்தாள். 
எதிர்பார்ப்புடன் நிற்பவனுக்கு ஏமாற்றம் தர இயலவில்லை.. ஆனால் இவள் செய்தே ஆக வேண்டும். 
சட்டென தன்னை மீட்டிக் கொண்டு… 
“நான் லவ் ஸ்டோரி படிக்கிறத வெச்சு நீ தப்பா புரிஞ்சிட்ட..” 
அவன் மறுத்து மொழிய முயல… 
“நான் சொல்லிடறேன்… எனக்கு லவ் பிடிக்கும்…!! ஸ்டோரில மட்டும்..! என்னோட ஸ்டோரில அதுக்கு இடம் தர மாட்டேன். என்னை பொறுத்தவரை கல்யாணம் முன்ன காதல்னு ஒன்னு இல்லவே இல்லை… எனக்குன்னு எங்கயோ ஒருத்தன் பிறந்திருப்பான்.. அவன் முறைப்படி என்கிட்ட வந்து சேரும் போது காதல் செய்வேன் அவன் துணையாக இருந்து…”
“சோ… சாரி…” அவன் முகம் காண முடியாமல் குனிந்திருக்க..
“நிமிர்ந்து பாரு மங்கம்மா….” என அவள் முகம் நிமிர்த்தியவன் 
“நான் என்னோட காதல சொன்னேன்.. அவ்வளவு தான்.. உனக்கு எந்த கட்டாயமும் இல்ல.. இப்ப என்ன?? கல்யாணம் பண்ணிட்டு காதல் செய்வோம்..” இலகுவாய் இவன் பேச.. பேச இயல்பு தொலைகிறது அவளுக்கு. 
“இல்ல ராஜா… எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு…என் அம்மா… நிதி படிப்பு… சொந்த வீடு… அவ கல்யாணம்.. இதெல்லாம் என்னோட பொறுப்புகள் தான்…” 
“நான் இல்லைன்னு சொல்லல.. இத எல்லாம் முடிக்க வரை நான் காத்திருக்கேன்… இப்பவும் நான் சொல்லிருக்க மாட்டேன்.. சொல்ல வெச்சது நீ தான்.”
“நான்..??” 
“ம்ம்.. நீ தான்… நேத்து அந்த ராஜாவ பத்தி பேசி என்ன பேச வச்சிட்ட..”
மென்முறுவல் மங்கையிடம்…! மென்சாரல் மன்னவனிடம்…!
அதைத் தொடர்ந்து வந்த பொழுதுகளில் தொடங்கி.. தொடர்ந்தது.. கண்ணாமூச்சி ஆட்டம்…..!  
‘யாருக்கிடையே….?’ அப்கோர்ஸ்… ராஜாக்கும் அவன் ராணிக்கும் இடையில்..!
காதலைச் சொன்ன கணம் கண்டது தான் அவன் கண்மணியை.. அதன் பிறகு காட்சி கொடுக்கவில்லை. அவள் ஆட்டம் தொடர்கதையாகி விட… அதற்கு எண்டு கார்டு போட.. பாவையைப் பிடித்து நிற்க வைத்தான் பார்த்திபன்.
“சொல்லு….” காரிகையை கணித்து வைத்திருந்தான்… கன்பார்ம் செய்யவே.. இது.  
மௌனம் மட்டுமே மங்கையிடம்..!
“நான் நாளைக்கு ஹைட்ரபாத் கிளம்புறேன்… அடுத்த ரெண்டு வருஷம் அங்க தான்..”
தலைவியிடம் தலையசைப்பு மட்டுமே..!
“ஒரு பேச்சுக்காவது ஏன்னு கேளுடி…?”
அவனளவு புரிதல் இல்லை தான்… ஆனாலும் அவனைப் பற்றிய புரிதல் இருக்கிறதே இவளிடம்..! 
பார்த்திபனிடம் பாசம் காட்டுவாள்… சண்டை இடுவாள்… கோபம் கொள்வாள்… எல்லாம் நட்பென்ற எல்லை வரை தான்..! அவனுடனான அவள் நட்பிற்கு முதல் காரணம் பார்வதி..!
பகவதி சொல்லி அவரைப் பற்றி நிறைய கேட்டிருக்கிறாள்… அம்மாவின் பள்ளிக் கால தோழியாக பிடிக்கும்..! இங்கு வந்த பிறகு அவர் ராஜாவைப் பார்க்க வருகையில்.. இருவருக்குமிடையே நட்பிழை துளிர் விட்டிருந்தது.
பார்வதிக்கு பார்த்திபனை பிடிக்கும்..! அப்படித் தான் மங்கைக்கும் அவனைப் பிடிக்கும்..!
ஆனால் நட்பு…! யாழ் மங்கைக்கும் ராஜ பார்த்திபனுக்குமிடையில் அதுவாய்… அழகாய்… மலர்ந்துவிட்டிருந்தன நட்பு மலர்கள்…! 
மலரிதழின் மென்மை இருக்கும் அவனிடம்…! உணர்ந்தவர்களுக்கே தெரியும்… புரியும்..!
யாழ் அதை உணர்ந்திருந்தாள்…! அவன் உணர வைத்திருந்தான்…!
அவன் காதல் சொன்ன கணம் மங்கை மறுக்காமல் நிற்க முதல் காரணம் இது தான்..! இரண்டாவது காரணமும் அவன் தான்..! அவனது புரிதல் தான்…! அவன் அகத்தில் கொட்டிக் கிடக்கும் அன்போடு இந்தப் புரிதல் இழைந்தால்… இசையும் இதமும் தானே.. இவர்கள் இணைவில்..!
இதை பார்த்திபனை விட யாரால் இவளுக்குக் கொடுத்திட முடியும்…? 
அவனுக்கு அவன் காதல்…..!
இவளுக்கு இவள் கல்யாண கண்டிஷன்…..! 
இப்படி ஏதேதோ யோசனை இவளிடம்… அவனுக்கான சம்மதம் இவளிடம்…
ஆனால்…! பார்த்திபனை முன்னெப்போதும் போல பார்த்திட… பழகிட… கடந்திட முடியவில்லை… தடையாய் ஒரு தயக்கம்..!
அவனைக் கண்டால் கண் முன் வந்து நிற்பது காதல் விழிகளும் அதன் மொழிகளும் தான்..! 
அந்தக் கண்களால் தான் இவள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்.. இத்தனைக்கும் அவன் அன்றைய நாளிற்கு பிறகு இவளைப் பார்க்கவில்லை… 
பார்த்திபன் பார்த்திபனாகத் தான் இருந்தான்…! அவன் மங்கை தான் முன் போல் இல்லை..!
தலைவனைத் தவிர்த்திட தனக்குள் முடிவு செய்தாள். அதைத் தொடரவும் செய்தாள். அது தான் இப்படி இவளை இழுத்து அவன் முன் நிறுத்தியிருக்கிறது.
இருவரிடமும் இன்னமும் நட்பின் வாசம் இருக்கிறது தான்… ஆனால் இடையில் வந்த காதலை ஓரம் வைத்துப் பார்க்க அவளால் முடியவில்லை.. ஆம்..! அவளால் தான் முடியவில்லை. 
அகத்தினில் புதியதாய் ஓர் அச்சம் அறிமுகம்..! அகம் காதல் வசம் சேர்ந்திடுமோ என்று..! தலைமகளாய் தாய்க்கும் தங்கைக்கும் தன் கடமையை செய்த பிறகே தனக்கான தேர்வு என்பதில் அவள் திண்ணம்..! அதன் திடம் தளர்ந்து போய் விடுமோ என்ற எண்ணம்..!
அதை புரிந்தே… உணர்ந்தே… அவளை விட்டு விலகியிருக்க… முடிவு செய்து புறப்படுகிறான் பார்த்திபன்.
இதை மட்டுமே அவனால் செய்ய முடியும்..! 
  
“பார்த்துக்கோ அம்மாவையும் தங்கச்சியையும்… அப்படியே உன்னையும்..”
“ம்ம்..”
“அப்புறம்…” என்றவன் நிறுத்த..
“உன் பாருவையும்!!!!!” இவள் சொல்ல… அவன் இதழும் இதயமும் நிறைந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவன் வந்தான்… ஆனால் வரவேற்க அவன் மங்கை அங்கில்லை.
அவர்கள் இருந்த வீட்டை காலி செய்திருந்தனர். நிதியின் படிப்பிற்காக பழனிக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
இவனுள் ஒரு கோபம்…! இவனிடம் மங்கை சொல்லியிருக்க வேண்டும் என.. பார்வதிக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியும்.. ஆனால் கேட்டுக்கொள்ளவில்லை.
அவளாக அவனை அழைக்கட்டும்..!  அவனுக்காக அவள் தேடல் தொடங்கட்டும்..!
அப்படி ஒன்று தான் நடக்கவே இல்லை…!  
இருவரும் இரு வேறு வழியில் சென்றுவிட… காதல் காலம் பார்த்து இருவரையும் கை கோத்து வைத்தது. 
இவர்கள் கதையின் இறுதி பகுதியினை அவள் மறுத்ததோடு முடித்துக் கொண்டவன்
“கேளும்மா உன் மருமக கிட்ட..?? ஏன் என் பையனை வேண்டாம்னு சொன்னேன்னு?? நீ கூட ஏன்டா தாடி வெச்சிருக்கன்னு கேட்டல்ல.. அதுக்கு அவதான் காரணம்… என்னன்னு கேளுமா…” 
“இதுல கேக்க என்னடா இருக்கு.. எனக்கே புரியுதே!!”
“என்னம்மா…?” ஏதோ எதிராக வரப்போவது புரிந்தே இருந்தது.
“அவ இப்ப ஓகே சொல்லணும்னு தான் அப்ப நோ சொல்லிருப்பா…” யாழுடன் ஹைபை தட்டிக் கொள்ள..
“பார்வதி… நீங்க எங்கயோ போயிட்டீங்க…..” என்றவன்
‘எனக்கு வந்திருக்காங்க பாரு.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டிசைன்’ என முணுமுணுத்தும் மனையாளை முறைத்தும் செல்ல..
“ராஜா கோவிச்சுகிட்டியா….?” இவன் இணையே..
இதற்கு இவன் என்ன சொன்னாலும் எடக்காகத் தான் பதில் வரும் என்பதை அறிவானே..!
‘மொதல்ல இவங்க இரண்டு பேரை பிரிச்சு வைக்கணும்… இல்லைனா பார்த்திபன் நிலைம பாவம் ஆகிடும்!!’
மன்னவன் எண்ணம் மங்கை அறியாமலா…? பக்கத்தில் இருந்த பார்வதியை இழுத்து கன்னத்தில் முத்தமொன்றைக் கொடுத்து… ‘லவ் யூ பாரு…’ சொல்ல.. 
ராஜாவிற்கும் அவன் ராணிக்கும் இடையில் கபடி ஸ்டார்டட்…!!!!!
ஒரு மஞ்சள் மாலை நேரம்..
துளிர் பொறுப்பை அகிலிடம் விட்டுவிட்டு கோவை வந்திருந்தான் பார்த்திபன். விஷ்ணு ராஜி திருமணத்திற்காக.. யாழை அங்கேயே இருக்கச் செய்து.. இவன் மட்டுமாய் பழனி சென்று.. வார இறுதி நாட்களில் வந்து போய்க் கொண்டிருந்தான்.    
‘ஹேய் ஸ்டாப்ப்ப்ப்பப்பப்ப்ப்ப்!’ வீட்டினுள் அடியெடுத்து வைக்கவும் வந்து விழுந்த வார்த்தையில் அப்படியே நின்றுவிட்டான்.
எழுபது மணி நேரம்.. எப்படியோ கடந்து.. எப்போதடா பார்ப்போம் என காத்திருந்து.. பல்சரை பறவையாக்கி பார்த்திபன் வந்தால்.. வராதே என்றா வரவேற்பாள்..?
முளைத்த முறைப்புடன் அவன் கண்மணியை கண்டால்.. அவள் எங்கே இவனைக் கண்டுகொண்டால்..?    
“ஜஸ்ட் மிஸ் மாமா.. இல்லன்னா இன்னொரு போர்..!!” தப்பி பிழைத்த தொனியில் அவள் சொல்ல..
“அந்த தம்பி நல்லா விளையாடுவாரு மா.. அவரு அங்க நிக்கும் போது பந்து அவரைத் தாண்டி போக வாய்ப்பேயில்லை..” தன் கணிப்பை கான்பிடேண்டுடன் சொல்லும் அவன் அப்பா.
மட்டையிலிருந்து ஆவேசமாய் புறப்பட்ட பந்து பவுண்டரி லைனை நோக்கி பாய்ந்து வர.. பார்த்துக் கொண்டா  நிற்பார் ‘சர்’ ஜடேஜா. 
பந்து புறப்பட்ட கணமே.. தானும் நின்ற இடத்தை தியாகம் செய்து.. சுழல் காற்றை விஞ்சும் அசுர வேகம் கொண்டு.. பந்தை சிறை பிடித்து.. அனுப்பி வைத்தார் ‘தல’ தோனியை நோக்கி.    
இந்தியா-நியுசிலாந்து இடையேயான உலகக்கோப்பை அரையிறுதி.. விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இல்லாமல் சுட சுட..
‘ஹேய்!! விக்கெட்..’ ‘ப்ச் போர்..’ ‘ஒ காட் சிக்சர்’ ‘செம காட்ச் மாமா’ இது போல பதங்கள் அவன் பாவையிடமிருந்து.  
கவாஸ்கர் கால கிரிக்கெட் நினைவுகளை சுமந்தும் யாழ் மங்கையிடம் சொல்லியபடியும் அவன் அப்பா. 
பார்த்து நின்றான் பார்த்திபன் துளிர்த்த இதழ்களுடன். 
 
அவன் அப்பாவுடன் அவன் எப்படி இருக்க நினைத்தானோ அப்படியே அவன் யாழ்.. அவன் இடத்தில்..!
அவனால் மட்டும் முடியவில்லை.. தடுக்கும் தயக்கம்.. தவிர்த்து.. தவிக்க.. விடுகிறது அவனை.
‘அவரை நீ உன் அப்பாவா ஏத்துக்கணும்’ அவன் மங்கை அவனிடம் கேட்ட.. போட்ட கண்டிஷன்.
மெய் தான்..! 
அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் இடையில் இருக்கும் அவனிகை(திரை) இது தான்..!
அவன் விடுதி வாசம் காரணமாக அவர் மேல் கோபம் கொண்டது தான் அவன் அகம். ஆனால்.. எங்கோ.. எப்படியோ.. அவன் அறியாமலே அவர் தன் அப்பா இல்லை.. தனக்கு மட்டுமான அப்பா இல்லை.. என்ற எண்ணம் ஆழமாக அமர்ந்து கொண்டது.
ராஜியின் அப்பாவாக.. பார்வதியின் நாதனாக மட்டும் பார்க்க ஆரம்பித்தான். விரும்பாவிடினும் விலகல் இருவருக்குமிடையில்..!      
சட்டென அவரை உறவாக.. உள்ளத்தில்.. உட்கார வைக்க முடியவில்லை அவனால்.. உரிமையையும் எடுக்க முடியவில்லை.. கொடுக்க முடியவில்லை.
பார்த்திபனைப் படித்த பாவை.. அவனுக்காக அவனிடமே கண்டிஷன் போட்டு வைத்தாலும்.. அவனால் அவன் வகுத்துக் கொண்ட எல்லையை எடுத்துவிட இயலவில்லை. ஆனாலும் அதை மாற்றிட மனம் விரும்புதே.. நிலையில் தான் நின்றிருந்தான் ராஜ பார்த்திபன்.
“அம்மிணி…” 
இவனைப் பார்த்துவிட்ட இவன் அப்பா.. மங்கையை அழைக்க.. உள்ளே நுழைகிறான் பார்த்திபன்.
“ஹேய்…. போடு…. போடு… அவுட்!!!” இந்திய பந்து வீச்சாளர் பூம்ரா ரன் அவுட் செய்ய.. பாலில் பார்வை வைத்தபடி யாழ்.
பாலா..? பார்த்திபனா..? அவள் கவனம் பாலிடம் தான்.
பார்த்துக் கொண்டு நின்றால் அவன் பார்த்திபனல்லவே.. கையில் எடுத்துக் கொண்ட ரிமோட்டில் கன்னாபின்னாவென பட்டன்களை தட்டி வைத்தான்.
‘ஏய்!!! என்…’ அதிர்ந்து.. குழம்பி.. பார்வையை விலக்க.. பார்வையில் படுகிறான் பார்த்திபன்.
“ராஜா!!!!” கொஞ்சம் காதலாய்.. கொஞ்சம்  கனிவாய்.. ம்ஹும்…. 
‘என்ட்ரி கொடுத்ததே ராங் டைமிங்ல.. இதுல என்ன வேலை டா பார்த்து வெச்சிருக்க..’ இப்படித்தான் இருந்தது.
“ராஜா!!! மேட்ச் போயிட்டு இருக்கு… ரிமோட் கொடுங்க..” மாமா இருக்கிறாரே என மரியாதையாய் சொல்லி வைத்தாள்.
புரிந்தவன் இதழ் புன்னகையை புதைத்துக் கொண்டு.. “ தலை வலிக்குது யாழ்.. சூடா ஒரு கப் காபி.. கொஞ்சமா பக்கோடா பொரிச்சு கொண்டாயேன்”
இவள் மறுத்து விடுவாளோ என “போமா..” வை சொல்லி வைத்தார் இவள் மாமா. 
அவரிடம் தலையசைத்தும் இவனிடம் விழியில் வாள் வீசியும் விட்டு செல்ல.. பெரியசாமியும் வெளியில் செல்ல எழ..
“இருங்க.. நீங்க மேட்ச் பாருங்க..” என போட்டு விட்டவன் அவர் அருகில் அமர்ந்தும் கொண்டான்.
அவன் விழிகள் மேட்சில்.. அவர் விழிகள் மகனில்..  
“சேஸ் பண்ணிடுவாங்களா என்ன..? நம்ம சைட் இன்னும் இருபது ரன் இருந்திருக்கலாம்…” பார்த்திபன் ப்ரெடிக்ஷனைச் சொல்லி அவர் பார்வையை எதிர்பார்க்க..
 
மென் அதிர்வும் வன் மகிழ்வும் சூழ.. மௌனம் ஆள.. பெரியசாமி மகனைப் பார்த்திருக்க.. பார்த்திபன் பார்வை அவரிடம் சேர்ந்தது.
  
“இந்த தடவ கப்பு நம்மளுது தான் தம்பி..” அனிச்சையாக அவர் அதரங்கள் சொல்ல..
“இத தான் அன்னிக்கும் சொன்னீங்க… லீக் மேட்சிலையே வெளிய வந்தோம்.. ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸ்..” சிறு முறுவலும் துளி கிண்டலும். 
பால பருவத்தின் நாட்களை நினைத்துப் பகிர.. அவரிடம் மொத்த முறுவல்.
காபி வித் பக்கோடாவோடு வந்த பார்த்திபன் மங்கை மனம் முழுவதும் மகிழ் மாருதம்.. காதல் வாசம்..!
  
கனவு நனவாகும்…….