Advertisement

ஓம் வெண்நீறனியும் விசாகா போற்றி !
பார்த்திபன் கனா 15
மெல்ல.. மெல்ல… இருள் விடை கொடுத்து கொண்டிருக்க… விடியல் வந்து கொண்டிருந்தது கொண்டாட்டத்துடன். 
அதற்கு கொஞ்சமும் குறையாமல் கொண்டாட்டமும் கோலாகலமுமாய் திருவிழா போல் திருமணம். 
விஷ்ணு வெட்ஸ் லஷ்மி… 
நுழைவாயில் அருகில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டு மின்னலாய்… மிளிரும் வகையில்..!
புன்னகையுடன் அதைக் கடந்து உள்ளே நுழைந்தால்….
வேணு கானம் வழங்கிட வேய்ங்குழலோடு கோகுலநந்தனும் அவன் கோதையும் வெண் பளிங்கில்.. 
பிரியமில்லாமல விழிகளை பிரித்தெடுத்து… வேறு பக்கம் வைத்தால்.. 
வெண்பட்டிலும் வித விதமான வண்ணப் பட்டிலும் உற்சாகமாய் உறவுகள்…. பேசி… பகிர்ந்து.. மகிழ்ந்து.. என ஒருபுறமிருக்க… குட்டி குட்டி இளவரசிகளும் இளவரசர்களும் இன்று கண்டிருந்த நட்புக்களுடன் படை அமைத்து மண்டபத்தை வலம் வந்தபடி இருந்தனர்.
“ஹலோ…. உங்கள பாஸ் வர சொன்னாங்க…” வராத விரைப்புடன் வந்து நின்று அழைத்த அகிலை முதுகில் ஒரு தட்டு தட்டியவன் 
“யாருக்குடா பாஸ்….”
“உங்களுக்குத் தான்!!!!”
“உன் அட்டகாசம் தாங்கல டா… வந்து பேசுறேன் இரு…” என்றபடி யாழ் மங்கையை நோக்கி சென்றான் ராஜ பார்த்திபன். 
ராஜி இருந்த அறை அருகில் வந்தவன் உள்ளே செல்லத் தயங்கி நின்றுவிட… அவ்வழி வந்த நிதி
“மாமா.. இங்க ஏன் நிக்கறீங்க??” 
“உன் அக்கா உள்ள இருந்தா வர சொல்றியா நிதி” என்று கேட்க..
“அக்கா அந்த அறைல இருக்கா.. அவ மட்டும் தான் இருக்காங்க.. நீங்க போய் பாருங்க…” 
“தேங்க்ஸ் டா…” என்றவன் அடுத்திருந்த அறைக்குள் நுழைந்து விட… கிடைத்தது அவன் தேவி தரிசனம். 
இள மஞ்சளும் இளஞ்சிவப்பும் எடுத்து  நெய்திருந்த பட்டில் மங்கையவள் மிளிர்ந்து கொண்டிருந்தாள். 
இவன் வரவை உணர்ந்தவள் நிமிர்ந்து புன்னகைத்து.. இமை தாழ்த்தி தன் பாதம் முதல் தலை வரை பார்த்து பின் தன்னவனைப் பார்க்க… தலைவன் குறிப்புணர்ந்து விழிகளில் மெச்சுதலையும் இதழ்களில் மென்னகையும் கொடுத்தபடி இவளிடம் வந்தான். 
இருவரிடையே இருந்து வந்த பனிப்போர் உடன்பிறந்தவளின் திருமணத்தால் உடன்படிக்கை இன்றியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
அவள் வைத்திருந்த செம்முல்லை சரத்தின் மீது பார்வை படிய.. அவன் கைகளில் கொடுத்து திரும்பி நின்றாள். 
தலைவியின் தலையில் முல்லைச் சரத்தை சூடியவன்.. அடுத்து அங்கிருந்த குங்குமத்தை எடுத்து வகிட்டில் வைத்து விட்டான்.
இது அவன் தேவியின் கட்டளை. மன்னவன் தான் மங்கைக்கு மலர் சூட வேண்டும்…. அவன் தேவியின் கட்டளையே அவனுக்கு சாசனம்!!!!! 
அப்படியே தன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன்…. “நெஞ்சை அள்ளிட்டு போறளவு அழகா இருக்கடி மங்கம்மா…..” என இதழ் கொண்டு எழுத துவங்க..
“டேய்!!!!!” என சட்டென விலக்கி விட்டு நின்றவளை முறைத்தான் அவன். 
“நீ இப்போ… கார் எடுத்திட்டு பஸ் ஸ்டான்ட் போகணும்… அத சொல்ல தான் கூப்பிட்டேன்” 
“ஆனா நான் அதுக்கு வரலையே….” என்றபடி இவன் இவனவளை இழுக்க…. 
இவன் ஆகத்தில் அடைக்கலம் ஆகியிருந்தாள். 
விழி மலர்த்தி இவனைப் பார்த்தவளின் இமைகளில் இதழ் சேர்த்தவன்.. “ஓவரா எக்ஸ்பெக்ட் பண்ணாத… இத மட்டும் தான் நான் செய்ய நினைச்சேன்..” என்று விட்டு
“ஆனா நீ ஆசைப்பட்டதை நிறைவேத்தாம நிறுத்த மனசு வரலயே…” குறும்புடன் குனிய
“ஒன்னும் வேணாம் போடா!!!!” என தள்ளிவிட்டு அறை வாசலை அடைந்தவள்… 
“சீக்கிரம் கிளம்பு… நமக்கு வேண்டியவங்க தான் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…” என தகவலை தந்துவிட்டு சென்றாள். 
“ஹேய் யாருன்னு சொல்லிட்டு போ!!!!” 
“பார்த்து தெரிஞ்சுக்க…” அவள் குரல் மட்டும் வந்தடைந்தது.
யாராக இருக்கும் என்ற யோசனையில் வந்தவன் சர்வ நிச்சயமாய் அங்கிருந்தவர்களை எதிர்பார்க்கவில்லை. 
அவன் சித்தப்பாக்கள்… அத்தைகள் பெற்ற மாணிக்கங்கள்.. 
அந்த வீட்டு பெரிய மனிதர்கள் யாரும் எடுத்து.. வளர்த்த.. பிள்ளையை வாழ்த்தும் அளவு பெரிய மனம் படைத்திருக்கவில்லை.. பாசமும் பார்வையில் படவில்லை..
புரியும்..! ஒரு நாள் புரியும்.. அன்று புலரும் புது பாசம்.  
பார்த்திபனைப் பார்த்ததும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டு… பின் கோரஸாய் “சாரி அண்ணா!!!” என்றனர். 
தடுமாறினான் தமையன் அவன்..!
இவன் மௌனம் அவர்கள் முகம் கசங்கச் செய்ய…. மறுபடியும் மன்னிப்பு கோரினர்.
அவன் எதிரில் நின்றிருந்தவர்கள் எல்லோருமே இவனுக்கு இளையவர்கள்.. இத்தனை வருடங்களில் இவர்களின் பெயரைக் கூட மறந்திருந்தான் இவன். 
இப்போது இவர்களை எப்படி ஏற்பது எனத் தெரியாமல் நின்றான். 
சட்டென்று அவனவளிடமிருந்து அழைப்பு!!!! 
“யாழ்..!!!!!” 
“அவங்களும் உங்க தம்பி தங்கைங்க தான்… ஏத்துகோங்க.. இவ்ளோ நாள் ஒதுங்கி ஒதுக்கி வெச்சது போதும்..!” 
“ம்ம்…” 
இப்போது எதுவும் பேசிடும் நிலையில் அவன் நிற்கவில்லை… அழைப்பை துண்டித்து விட்டு அவர்களை நோக்கினான். 
இம்மியளவும் புன்னகை இருக்காத இதழ்களில் மெல்ல மெல்ல புன்னகைக்கு இடம் கொடுத்தான். 
அவ்வளவு தான்…….. அடுத்த நொடி அவன் தம்பிகள் இருவரும் இறுக்கி அணைத்து இருந்தனர். தங்கைகள் அவன் கை பற்றிக் கொண்டு நின்றனர்.
அந்த நிமிட அவன் உணர்வை இதுவரை அவன் அனுபவித்ததில்லை.. இப்படிப்பட்ட உறவுகளுக்காக எத்தனை நாள் ஏங்கித் தவித்திருப்பான்.. சட்டென இந்தப் பொழுதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆனால் அவனிடம் அதற்கான அவகாசமும் இல்லை.. 
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவன்…. போலாமா???? எனக் கேட்க… மலர்ந்து தலையசைத்தனர். 
அவர்களுடன் உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் பார்வதி ஆனந்த அதிர்வுடன் அவனை நோக்க… இமை பூட்டித் திறந்தான். 
அவன் தங்கைகளை அவருடன் அனுப்பி விட்டு தம்பிகளை விஷ்ணு அறைக்கு அழைத்து சென்று விட்டவன்… அவன் மங்கையை தேடிய படி வந்தவன் செவிக்குள் வந்து விழுந்தது அது.
“பெரிய சாமி வீட்டு விஷேசம்… சிறப்பா செஞ்சுட்டான்..” 
“ஆமாமா… ஏதோ அண்ணன் தம்பி சண்டைன்னு கேள்வி பட்டேன்… சொத்தும் பிரச்சினைல இருக்கு எப்படி நடத்தப் போறான்னு நினைச்சேன்… சும்மா ஜாம் ஜாம்னு பண்ணிருக்கான் பாரு… இவங்க அழைப்பு மட்டும் ஆயிரம் இருக்கும் போல.. இதில்லாம மாப்பிள்ளை வீட்டுப் பக்கம் இருந்தும் இருக்கு..”
“சொத்து இல்லன்னா என்ன??? அவனுக்கு தான் ராஜா மாதிரி மகன் இருக்கானே!!! அப்புறம் என்ன கவலை??? பொம்பளப்பிள்ள வெச்சிருக்க நாம தான் கவலைப்பட்டு இருக்கணும்.. சாமிய பாரு… எந்த கவலையும் இல்லாம சம்பந்தி கூட உட்கார்ந்திருக்கான்…”
ராஜாவின் பார்வையும் பெரியசாமி இடத்தில் தான்!!! அவருடன் அவன் அம்மாவும்…. துளியிலும் கவலை… கலக்கம்… இன்றி… மகிழ்வாய் !!! இதை தான் அவன் எதிர்பார்த்தான்… இந்த நிம்மதியை அவர்களுக்கு வழங்கிட இவன் இன்னமும் செய்வான்.. எதுவும் செய்வான்… 
நெஞ்சில் நிறைவு நின்றிருந்தது!!!!
நிலைக்கவிடுவோமா என்ன??? என்பதாய் அடுத்த பேச்சு…. 
“அவனுக்கென்ன…. நம்மள மாதிரியா பெத்து வளர்த்து படிக்க வைச்சு… அவன் கல்யாணம் பண்ணும் போதே கன்னுகுட்டியோட தானே பண்ணிகிட்டான்.” 
அள்ளித் தெளித்தது அமிலத்தை அவன் அகத்தில் அவ்வார்த்தைகள்… இத்தனை வருடம் கழித்தும் இவ்வஞ்ச வார்த்தைகள் அவனைத் துரத்தத் தான் செய்கின்றன.
இமை மூடி இவனுக்குள்ளேயே பொங்கிய சினத்தை புதைக்க முயன்றவனை சட்டென இழுத்து கொண்டு சென்றாள் யாழ் மங்கை… 
“ராஜா..!!” தன்னவனுக்காய் தவிப்பும் துடிப்பும் தஞ்சம் புகுந்திருந்தது அவளிடம். 
அவள் தவிப்பில் அவனுள் அப்படியே தளர்ந்து போனது தலைக்கேறிய உணர்வுகள் அத்தனையும். 
“ஹேய்!!!! என்ன நீ??? அவங்க பேசுறதை எல்லாம் எடுத்துகிட்டா நம்ம நிம்மதி போயிடும்… இதெல்லாம் எனக்கு கேட்டு பழகிடுச்சு…” 
இவளை இயல்பாக்க…இலகுவாக சொன்னாலும் இவன் அனுபவித்த… அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனை அவளை தாக்குகிறதே!!! 
இவள் கசங்கிய முகம் கண்டவன்.. “மங்கம்மா… சில விஷயங்களை இந்த காதில வாங்கி அந்த காதில் விடணும்னு.. சில விஷயங்களை காதில வாங்கவே கூடாது… அப்படிப்பட்ட விஷயங்கள் தான் இது.. பேசறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க.. ஏன்னா அவங்களால அது மட்டும் தான் முடியும்!! இதையெல்லாம் கடந்து போனா மட்டும் தான் நமக்கான வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.. சரியா..??” 
காலம் கற்றுக் கொடுத்த பாடம்..! கற்பித்தான் அவன் காதலுக்கு..!
அவள் இன்னும் தெளியாதிருக்க… முன்னெற்றியில் முத்திரை பதித்தவன் “இப்போ..??” எனக் கேட்க.. 
அவன் செயல் அவன் இயல்பிற்கு திரும்பிவிட்டான் என்பதை இவளிடம் தெரிவிக்க.. இவளும் தெளிந்தாள். 
“ஆமா… எப்படி அவங்க வந்தாங்க???” 
“யாரு….”
“அதான்… அவங்க…” அவர்களை எப்படிச் சொல்ல எனத் தெரியாமல் இவன் நிற்க..
“எவங்க???” என்றாள் அவள்.
“அ… அதான் அந்த பசங்க….” 
“எந்த பசங்க..??” 
“யாழ்!!!!!” 
“எஸ் மிஸ்டர். யாழ்..” 
அவள் பதம் அவனுள் இதத்தை விதைக்க… 
“மிஸஸ்.ராஜ பார்த்திபனுக்கு நான் சொல்லனுமா என்ன..??” 
“நீ சொல்லு… சொல்லாம விடு… இப்போதைக்கு என்னை விடு.. நான் ராஜிகிட்ட போகணும்..” 
“சொல்லாம விடமாட்டேன்”
“சொல்ல மாட்டேன்…”
“மங்கம்மா சொல்லுடி.. நானும் விஷ்ணுகிட்ட போகணும்..” 
“அதுக்கெல்லாம் செலவாகுமே ராஜா..”
“நேரம்டா ராஜா..” என்றவன் “சொல்லுங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..” என்றான்.
“நீங்க நினைக்கிற செலவில்ல.. சார் ஒரே ஒரு சத்தியம் பண்ணனும்…” 
அவள் கை நீட்ட.. சற்றும் சிந்தனை செய்யாமல் அவள் சிரம் மேல் சத்தியம் மேற்கொண்டான்.
அதிர்வுகள் அவளை தொட்டுச் செல்ல… பாவை பார்வை அப்படியே அவனுக்கு அதை கடத்த…
“உன் மேல செய்திருக்கேன்… விளையாட்டில்ல.. நீ என்ன சொன்னாலும் செய்வேன்… இப்ப சொல்லு” 
எதுவும் செய்வான் என்னவன் எனக்காக..! கர்வத்தின் கால் தடம்.. ராஜாவின் ராணியிடம்..! 
“இரண்டு நாள் முன்னாடி நரசிம்மர் கோவில் போயிருந்தோம் நானும் ராஜியும்.. அங்க உங்க மத்த இரண்டு தங்கச்சிங்களும் பெரிய தம்பியும் வந்திருந்தாங்க… 
ராஜி… அவங்கள பார்த்ததும் ஓடிப் போய் பேச… அவங்க யாரும் பேசல.. 
இவ அழ ஆரம்பிச்சிட்டா… ராஜி அழுததும் நான் கொஞ்சம் டென்ஷன் ஆகி சத்தம் போட்டுட்டேன்…. அதுல தான் பசங்க சரண்டர்” விழிகளும் அவள் வதனமும் பேசும் மொழி உவகை..!    
சத்தமில்லாமல் சாதனை செய்து வந்திருக்கிறாள்… சன்மானம் இல்லாமலா அனுப்பி வைப்பான்..?? 
விஷ்ணுவின் அறைக்குள் நுழைந்தவன்… அவன் அங்கில்லாமல் இருக்க…  “மாப்பிள்ளை எங்கடா…” என அங்கிருந்த மற்ற நட்புக்களிடம் வினவ.. வெடித்துச் சிதறியது சிரிப்பலை ஒன்று. 
“என்னாச்சுடா…??” இவன் குழப்பத்தில் கேட்க…
“மிஸ்டர் மச்சான்….. நீங்க அந்த கேள்வி கேட்டதே மரியாதைக்குரிய மாப்பிள்ளையாரிடம் தான்…” – நட்பு நம்பர் 1.
வந்த பதிலில் இவன் திகைத்து திரும்பி பார்க்க… விஷ்ணு வேறு அவதாரத்தில் இருந்தான்… சத்தியமாய் மானிட அவதாரமில்லை.. 
முகத்தில் இருக்கும் இடம் அனைத்திலும் என்ன தோன்றியதோ அதை செய்து வைத்திருந்தார்கள். தலை… தனி டெக்னிக் கையாளப்பட்டு குதறி வைக்கப்பட்டிருந்தது. 
“ஏன்டா இப்படி..??” சிரிப்பு அடக்கியும் வந்து தொலைத்தது அவனுக்கு. 
“மச்சி… கல்யாணமெல்லாம் வாழ்க்கை மறக்க முடியாத விஷயம் டா…. அத சம்திங் ஸ்பெஸலா பண்ணலாம்னு ட்ரை பண்ணினோம்… வொர்க் அவுட் ஆகிட்டு தான் போல!!!!” – நட்பு நம்பர் 2. 
“ஆமா… ஆமா…. வாழ்க்கையில நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு தான் வந்திருக்கு.” என்றவன் 
“இவனுங்க கிட்ட தலையை ஏன்டா கொடுத்த..?” வெம்பி நின்றவனிடம் வெறுப்பை கிளறிவிட்டான்.
“வேண்டுதல் டா..” என்றவன் “முதல்ல இவனுங்களை எல்லாம் புடிச்சிட்டு போடா…. இப்படியே வந்தேன்னா ஐயர் எந்திரிச்சு ஓடிருவாரு..!” என கிடைத்ததை கொண்டு அவர்களை நோக்கி பௌல் செய்ய… 
“போறோம் டா… இனியாவது வந்த வேலையை பார்க்கணும்ல” என்றபடி ஒருவன் கிளம்ப..
“அது என்னடா..??” பார்த்திபன் தான். 
“விஷ்ணுவோட வீட்டுப் பக்கமிருந்து பைங்கிளிகள் பல வந்திருக்கிறதா…” என்ற போதே விஷ்ணு பெல்ட் எடுக்க…. 
“வன்முறை வேணாம்டா மாப்பிள்ளை..” என்றபடி ஓடிவிட்டனர்.
இதோ….இதோ… என இனிதான பொழுதும் வந்து சேர… ராஜலஷ்மியை தன் சரிபாதியாக சம்பிரதாயப்படி ஏற்றுக் கொண்டான் விஷ்ணுவர்த்தன். 
முகத்தினில் முறுவலும் அதை முந்திக் கொண்டு துளித்திருந்த கண்ணீர் துளிகளோடும் தன் மங்கையுடன் சேர்த்து மணமக்களை வாழ்த்தினான் ராஜபார்த்திபன். 
ஒரு தமையனாக தன் கடமையை தவறில்லாமல் நிறைவேற்றி வைத்த நிறைவும் மகிழ்வும் மன்னவன் மனதினில்!!!!!
தன் அண்ணனைப் பார்த்த பொழுதில்… அதுவரை பின்னுக்கு போயிருந்த பிரிவின் நினைவுகள் முன்னால் வந்து நின்று விட.. “அண்ணா..!!!!” என கலங்கி நின்றவளை தன்னோடு சேர்த்த அணைத்து ஆறுதல் அளித்தவன்.. 
விஷ்ணுவிடம்…
“விஷ்ணு…” 
“இருங்க மச்சான்… நானே சொல்றேன்..” என்றவன் 
“என்னை நம்பி உங்க தங்கச்சிய அனுப்பி வைக்குறீங்க… அதுல ஆனந்த கண்ணீர் மட்டும் தான் பார்க்கணும்.. அதானே..??” விளையாட்டு தான் விஷ்ணுவிடம்.
“இல்ல…. இந்த கல்யாணம் நல்லபடியா நடந்தா உன்ன விரதம் இருக்க வெச்சு… காசிக்கு கூட்டி வர்றதா விஷ்வேஸ்வரர்கிட்ட வேண்டிருந்தேன்…. போலாமா..??” என நக்கல் தெறித்தது அவன் நாவில். 
“டேய்!!!!! காசிக்கு கூட்டி போறவன் கல்யாணம் ஏன்டா பண்ணி வைக்குற..” என அலறியவன் 
“ராஜிம்மா…. நீ இந்தப் பக்கம் வந்திடுடா…. அவன் பேட் பாயா இருக்கான்..” என தன்னவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டான். 
அதை தொடர்ந்து அழகாய் அரங்கேறியது வரவேற்பு. 
“அண்ணா…. போட்டோ எடுக்க பெரியம்மா வர சொன்னாங்க…” என்றபடி வந்து நின்ற அவன் தங்கையோடு மேடை ஏறியவன் யாழ்… நிதி.. பகவதியையும் அழைத்து நிற்க வைத்துக் கொண்டான். 
அடுத்ததாக… அவனும் யாழும் பார்வதியும் அவர் நாதனும் மட்டும் மணமக்களோடு. 
யாழ் விஷ்ணுவை பார்க்க… அவன் மெல்ல தலையசைத்து விலகி நின்றான் அவளைப் போலவே!! 
பார்த்திபன் என்னவென்று பார்க்க… அவர்கள் நால்வர் மட்டும் குடும்பமாக…! 
பெரியசாமி… பார்வதி… ராஜபார்த்திபன்… ராஜலஷ்மி…
இதுவரை இப்படியான தருணம் அவர்கள் வாழ்வில் வந்ததேயில்லை.. காதலும் கனிவுமாய் அவன் காரிகையை பார்த்தான். இதழ்களில் தவழவிட்ட புன்னகையோடு இமை மூடித் திறந்தாள். 
நிறைவாய் நிகழ்ந்தேறியது திருமண வைபவம்….
கனவு நனவாகும்…….

Advertisement