Advertisement

உ 
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி !
 
பார்த்திபன் கனா 12
எட்டுத் திசையும் எமக்கே என்ற எண்ணமோ என்னவோ… மூவரும் மாற்றி மாற்றி பார்த்து வைத்தார்கள்… 
யாழ் மங்கையிடம் பிடிபட்டு நின்ற பொறுமை… இதோ… போகப்போகிறேன்.. இதோ… என இவளிடம் இருந்து விடை பெற ஆயத்தமாகியிருந்தது. 
பார்வதி ஆரம்பிப்பார்… பார்த்திபன் ஆரம்பிப்பான்… என இவள் பார்த்து நிற்க… அவர்கள் மௌனம் களைய மறுத்து அமர்ந்திருந்தனர். 
இனி இறங்க விடவேண்டியது தான் களத்தில் என முடிவெடுத்தவள் “என்னங்க…. இனிமே நாம எல்லாரும் இங்க தான் இருக்கப் போறோம்..” என்றாள். 
அவன் அதிரவெல்லாம் இல்லை.. அவன் தான் அறிவானே..!! அதை மட்டுமே அவள் சொல்லி வைத்திருந்தாள் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல்…. 
இதை தவிர இன்னும் சொல்வாளோ என்று முகம் பார்த்தான்… அவளுக்கு அது போல் எண்ணம் எதுவுமில்லை என எடுத்துக் காட்டியது. 
இப்போது பார்வதியை பார்த்தான்.. தான் தான் பேச வேண்டும் என புரிந்தது. 
“ம்மா… இது என் வீடு இல்ல.. நம்ம வீடு… இங்க இருக்க என்கிட்ட எதுக்கு கேக்கற??” அவர்களின் தயக்கம் அவனை ஏதோ செய்தது.. 
“மாமா…. நீங்க இவர்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னீங்க??”
காலை நடந்த நிகழ்விற்கு பின் மொத்தமாய் தனக்குள் சுருங்கி இருந்தவரை இவள் தான் இழுத்து இழுத்து பேச வைக்கிறாள்.
மெல்ல ராஜ பார்த்திபனை நோக்கி பார்வையை நிமிர்த்தினார். 
“ராஜி கல்யாண விஷயமா..??” இதுவரை இவன் இவரிடம் மட்டும் காத்து நின்ற மௌனத்தை களைத்தான். 
இவர்கள் இனிமேல் இங்கே தான் இது போதாதா இவனுக்கு புரிய வைக்க… 
‘ஆம்’ என்பதாய் தலையசைத்தவரை தொடர்ந்த பார்வதி “மாப்பிள்ளை வீட்ல பேச முடியுமா… கல்யாணத்த தள்ளி வைக்க…” 
அவரை முடிக்க விடவில்லை…
“ ம்மா….. என்ன பேசற நீ… ஏற்கனவே விஷ்ணு அப்ராட் போனதால மேரேஜ் இவ்ளோ தள்ளி வந்திருக்கு.. அவங்க நிச்சய தேதி கூப்பிட்டு சொல்றாங்க… அவங்க கிட்ட போய்… ஆமா இப்ப அதுக்கு அவசியம் என்ன??”
“ராஜா…. சின்னவங்க இரண்டு பேரும் சாயந்திரம் போல இங்க வந்திருந்தாங்க… வந்து பயங்கர சத்தம் போட்டுட்டு சொத்து அது இதுன்னு அங்க வந்துடாதீங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க…”
ஓ….. உடன் நிறுத்திக் கொண்டவன் விழிகள் தந்தையின் தடத்தில்..! 
கொடும் ஏமாற்றமும் அது கொணர்ந்த வலியும் அவர் அங்கமெங்கும்..! தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன் தம்பிகள்… தங்கைகள்.. என கொடுத்துவிட்டு பாசத்தை மட்டும் கொண்டவருக்கு… திருப்பி கிடைத்ததை ஏற்க முடியா நிலை..!
இதில் இவன் செய்ய எதுவுமில்லை.. ஆனால் இனி இவன் செய்ய இருக்கின்றது நிறைய… நிறைய..!  
ஆறுதல் அளிக்க அலையாய் எழுகிறது அகம்..! ஆனால் தடையாய் எதுவோ ஒன்று.. அடக்கி ஆளுகிறது. ஆராய்ந்து தெளிவோம் என ஒதுக்கி.. 
“இப்ப இங்க இருந்து யாரு எதுக்கு அங்கே போய் நிக்கப்போறோம்… விடும்மா… நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் இருக்கு… அத மட்டும் தான் நாம யோசிக்கணும்..” 
“யாழ் இங்க இருக்கட்டும்… நான் மூணு நாள் மட்டும் அங்க போய் துளிர் பார்த்துக்கிறேன்.. அகில் இருக்கான் சமாளிச்சிருவான்.. நான் விஷ்ணு கிட்ட பேசி நிச்சய தேதி கன்பார்ம் பண்ணிக்கிறேன்.. அப்புறம் பத்திரிக்கை ஒரு வாரத்தில வந்திடும். யாருக்கு கொடுக்கணும்னு லிஸ்ட் போட்டு வைங்க… அடுத்த வாரத்தில இருந்து கொடுக்க ஆரம்பிச்சுடலாம்…. 
யாழ்… நீ நிரஞ்சன் கார் அரேஞ் செய்ய முடியுமான்னு பாரு.. அவர் அப்பப்போ எடுத்து யூஸ் செய்துக்க சொன்னாரு… நீ உங்க பெரியம்மாகிட்ட பேசிட்டா.. கல்யாண வேலைக்கு நாம எடுத்துக்கலாம். 
அப்புறம்….” என அடுக்கிக் கொண்டு போனவனை நிறுத்திய பார்வதி 
“ராஜா….. இரு… இதெல்லாம் செய்யும் முன்ன நமக்கு வேண்டியது… பணம்.” தயங்கியே அவர் சொல்ல..  
“நான் அத யோசிக்க மாட்டனாம்மா??” நிதானமாக கேட்டான். 
“ராஜா… உன்கிட்ட எப்படி இருக்கும்.. இப்ப தான் உன்னோட கல்யாணத்துக்கு செலவு பண்ணின… அதுவுமில்லாம…”
“ம்மா….. நான் பார்த்துக்கிறேன்.. பணத்த பத்தின கவலையை என்கிட்ட விட்டுடுங்க…..” அவருக்குள் ஆறுதலை படர விட முயல..
“இல்ல டா… நான்” அவர் அனுமதிக்க மாட்டேன் என நிற்க..
“ம்மா……” என்றவன் தொனி இதை தொடராதே என்பதாய் இருக்க… அமைதியானார் பார்வதி. 
பெரிய சாமியை பார்த்தவன்… “நீங்க இதுவரை ராஜி கல்யாணத்துக்கு போட்டு வெச்சிருக்க ப்ளான் எனக்கு வேணும்..” என்றான்.
“இன்னும் எதுவும் போடல… மண்டபம் மட்டும் பாதி தொகை கொடுத்து புக் பண்ணிருக்கு..”
“சரி… அப்ப நாளைல இருந்து நாம பண்ண ஆரம்பிச்சுடலாம்…” என்றவன் எழுந்து சென்று விட..
“அத்த… அவர் இருக்க வரை நீங்க எந்த கவலையும் பட வேண்டியதில்ல… மாமா உங்களுக்கும் தான்.. நிம்மதியா படுத்து தூங்குங்க..”
இருவரும் மென்மையான புன்னகை ஒன்றை பதிலாக தர.. இவள் இன்பனைத் தேடி வந்தாள். 
மேல் மாடத்தில் இரு கைகளையும் தலைக்கு கொடுத்து விண்மீனில் பார்வை வைத்து படுத்திருந்தான் பார்த்திபன்.
அவன் பெண்மீன் அருகில் வந்தமர சட்டென அவள் மடி சாய்ந்து கொண்டான்.
தென்றல் வந்து தலைகோதிச் செல்ல… அதை அனுமதிக்காமல் அவளே அவனுக்குச் செய்தாள்.
“மங்கம்மா…… தேங்க்ஸ்டி…!!” 
‘எதற்காம்’ என்பதாய் இவள் பார்வை நிற்க..
“ஏன்னு மிசஸ்.ராஜபார்த்திபனுக்கு தெரியாதா??”
மங்கையவள் மறுப்பாய் தலையசைத்தாலும் அவள் முகத்தின் குறுக்கே ஓடிய குறும்பு காட்டிக் கொடுத்து கதை சொல்கிறதே..!
“அப்படியா….. அப்போ இதை தெரியவைக்கிற தவிர்த்து தலை போற முக்கியமான விஷயம் ஏதும் இல்ல எனக்கு..” சொல்லவும் செய்தான்.. செய்யவும் செய்தான்.. இவன் இதழ் கொண்டு…..!
மன்னவன் மனதின் மகிழ்ச்சியின் சாரலில் மங்கையவள் நனைந்து சிலிர்த்துப் போயிருந்தாள். 
அவள் தான் அவன்…..! அவன் தான் அவள்…..! அர்த்தம் ஆகி நின்றது அவ்விடம்..!
எத்தனை நாள் ஏக்கம் அவனது…! அவன் நெஞ்சம் நிறைத்து வைத்திருக்கும் நேசத்தை அன்னை… தந்தை… ராஜியுடன் பகிர்ந்து அவர்கள் அன்பில் திளைத்து பூரண வாழ்க்கை வாழ வேண்டும் என..!
இன்று அவன் அம்மா அவனுடன்…! செல்லம் கொஞ்சவென குட்டித் தங்கை அவனுடன்…! விரும்பியோ விரும்பாமலோ அவன் அப்பா அவனுடன்…! இவர்களெல்லாம் உடனிருக்க காரணம் இவன் உடையவள்…!
நிச்சயம் மங்கை மாயம் செய்திருப்பாள்…..! இவன் மனம் சொல்கிறதே…! 
“தேங்க்ஸ் எதுக்குன்னு தெரிஞ்சுடுச்சா…….” 
அவனது பெண்மீன் சிதறவிட்ட வெட்கம் தனில் தலைவனுக்கு தன்னவளை தனக்குள் புதைத்துக் கொள்ள பேராவல் ஒன்று புறப்பட்டு வருகிறதே..!  
அதெற்கெல்லாம் முன் வந்து நிற்கின்றது அவளிடம் தெளிவு படுத்த தெரியப் படுத்த வேண்டிய விடயங்கள்…!
மாற்றம் கண்டது மன்னவன் மனம்..!
“யாழ்…..” 
பாவையைத் தொட்ட அவன் பதம்.. தொனி.. சற்று முன்னிருந்த நிலவர மாற்றத்தை.. மன்னவன் மனத்தை உணரச் செய்ய.. சட்டென மீண்டு கொண்டாள். 
“காலைல அம்மா ராஜி எல்லாம் வந்திருந்தப்ப.. விஷ்ணு தான் கூப்பிட்டிருந்தான்.. ராஜி இங்க நடந்ததை சொல்லிருப்பா போல.. இங்க இருந்தா இன்னும் நா பீல் செய்வேன்னு நினைச்சு அங்க கூப்பிட்டிருக்கான்..”
“ஓ…”
“அங்க போனா.. சர்ப்ரைஸ்னு சொல்லி என் பேட்ச் எல்லாரையும் வர வெச்சிட்டான்… மூட் மொத்தமா மாறிடுச்சி..” அந்த ஆனந்தத்தின் மிச்சம் இன்னமும் கூட அவனிடம்.
“ஒரே ஒரு விஷயம் புரிஞ்சது யாழ்மா.. கடவுள் நமக்கு எப்பயுமே பெஸ்ட்ட தான் கொடுக்கிறாரு. அதை எப்படி வெச்சுக்கனும்ங்கறது நம்ம கைல தான் இருக்கு” என்று சொல்லி அவள் முகம் பார்க்க..
“ஒரு சின்ன சேஞ்.. கடவுள் நமக்கு கொடுக்கிறதுல நமக்கு எது வேணும் எது வேணாம்னு டிசைட் பண்ற பொறுப்பையும் நம்ம கிட்ட தான் கொடுக்கிறாரு.. நம்ம கையில தான் எல்லாமே.. 
எது வேணும்.. எது வேணாம்.. நம்ம தான் தெளிவா சூஸ் பண்ணனும்.. அப்போ தான் நம்ம சந்தோஷம் நம்மகிட்டயே இருக்கும். அதை விட்டுட்டு அடுத்தவங்களை குத்தம் சொல்லக் கூடாது..” இவள் எப்படிப் பார்க்கிறாள் என்பதை எடுத்துச் சொல்ல.. இவனுக்கும் இவன் நிலை தெளிவாகப் புரிகின்றது..!
  
இவன் தானே விலகிச் சென்றான்… இவன் நினைத்திருந்தால் அம்மா.. தங்கை உடன் இருந்திருக்கலாம். ஆனால் அதற்குத் தடையாக பார்த்திபனின் அகத்தில் பொறுமையின் பக்கங்கள் பொருத்தப்படவில்லை.
முழு மௌனம் அவனிடம்…! 
அதன் சத்தம் பொறுக்காது இவள் சட்டென அவன் கன்னத்தில் இதழ் பதிக்க.. முத்தத்தின் இசை..!
இவள் மீட்டிய இசையில் இவன் இதயப் பூக்கள் மலர்ந்திட.. மலர்வாசம் மங்கையின் மேல் காதல் வாசமாக…!
கணங்கள் காதலின் கானத்தோடு காற்றினில் கரைந்து கொண்டிருக்க… யாழ் மீட்டினான் இவன்.
“யாழ்…..” 
“ம்ம்….”
“இன்னும் கொஞ்ச நாள்… ராஜிம்மா கல்யாணம் வரை நான் பிஸி ஆகிடுவேன்… நமக்கான டைம் ரொம்பவோ கம்மியா இருக்கும்…. நீ தான் அட்ஜஸ்ட் செய்துக்கணும்..”
“மாட்டேன்……” 
அவள் மறுப்பில் அவன் முகத்தில் முறுவல் முளைத்தது.
“வேற என்ன பண்ணுவ….” 
“அதெல்லாம் சொல்ல முடியாது…” என்றவள் அவன் முன்னுச்சி முடியில் முடிச்சிட முயன்றாள்.
“மங்கம்மா….. விளையாட்டல்ல டி இது…” 
“நானும் விளையாடலயே!!!!” அவளது கிளிப் உருவி அவனுக்கு மாட்டிவிட்டு அழகு பார்த்தவளை என்ன செய்வது என்று சத்தியமாய் அவனுக்கு தெரியவில்லை.
“யாழ்…….” அவன் தொனி தீவிரத்தை தொட்டிருக்க..
“சரி… சரி….” என்றவள்… “நம்ம பட்ஜெட் எவ்வளவு வரும்???”  
“25 லட்சம்….”
மென்மையாய் அதிர்வு அவள் அகத்தில்!!! அதை கண்களினால் கொண்டவனுக்கு கடத்திட…
“சமாளிச்சுக்கலாம் யாழ்மா….. என்கிட்ட கொஞ்சம் இருக்கு… மீதி வெளில வாங்கி பண்ணிக்கலாம்…” அவன் வார்த்தைகள் அவளுக்கு சற்றும் தேற்றம் கொடுக்கவில்லை. 
அவனிடம் எவ்வளவு இருக்கும்…. அதிகபடியாய் ஒரு ஐந்து லட்சம் இருக்கும்… இப்படி ஒரு காலம் வந்து நிற்கும் என இரு நாள்களுக்கு முன்னால் தெரிந்திருந்தால் இவர்கள் திருமணத்தை எளிதாக முடித்திருக்கலாம். 
இவள் யோசனையுடன் “உன்கிட்ட எவ்வளவு இருக்கு…..” 
“அத விடு….”
“ப்ச் சொல்லு….” அவள் அதட்ட
“ஏழு லட்சம் இருக்கு… பரத்துக்கு ஒரு அஞ்சு லட்சம் கொடுத்திருக்கேன்.. ஆனா அது இப்ப வாங்க முடியாது”
“அதை விடு….. என்கிட்ட ஒரு பத்து லட்சம் இருக்கு… சேர்த்தா பதினேழு… இன்னும் ஒரு எட்டு மட்டும் ரெடி பண்ணணும்… லோன் ஏதும் ட்ரை பண்ணுவோமா??”
அவள் வார்த்தைகளுக்கு முறைப்பை வழங்கினான்…
“என்னாச்சு????” 
“உன்கிட்ட இருக்கிறது நிதிக்காக நீ சேர்த்தது… அத பத்தி எப்பவுமே நினைச்சு பார்க்காத…” கடும் கண்டனம் அவன் குரலில்.
“ஹேய்… அவளுக்கு இப்போ தான் இருபது… அவளுக்கு பண்ண அஞ்சு வருஷமாவது ஆகும்… அதுவரை இந்த பணத்தை என்ன பண்ண போறோம்??”
பாவைக்கு பார்த்திபனைப் படிக்கக் கூடிய பக்கங்கள் இன்னமும் உண்டு என்பதை இதுவே சொல்கிறதே..!
யாழின் இந்தக் கடமை தானே இவன் காதலுக்கு காத்திருக்க காலம் சொல்லி.. இழப்பின் வலியை சொல்லிக் கொடுத்தது. நிச்சயம் இவன் அந்தக் கடமையை வெறுக்கவில்லை.
இவனுக்கு ராஜி என்றால்.. யாழிற்கு நிதி…..! இதில் இவன் சொல்ல எதுவுமில்லை. ஆனாலும் இவன் காதல் இவள் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. இதுவும் ஒரு காரணம்..! 
“யாழ் இத்தோட இந்த பேச்சை விட்டுடு… அம்மாக்கு சொன்னது தான் உனக்கும்… பணம் பத்தி நினைக்க வேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன்.”
“ஏன்???? நான் கொடுத்தா என்ன?? என்கிட்ட வாங்கிக்க ஈகோ பார்க்கறியா ராஜா???” அவள் வேறு விதமாக எடுத்துக்கொண்டு வருத்தத்தை வதனத்தில் படரவிட்டிருக்க..
எழுந்து அமர்ந்தவன் தன்னவளின் முகத்தை தன் கைகளில் தாங்கிக் கொண்டு…. 
“யாழ் வேற ராஜா வேற இல்லடி…. நீ தான் நான்… நான் தான் நீ…. இது வெறும் வார்த்தையல்ல… இதான் வாழ்க்கை!!!!!” என்றுவிட்டு நெற்றி வாயிலாக நேசத்தை கடத்த….. திகட்ட திகட்ட தன்னவனை காதலில் திளைக்க வைக்க… தவம் கொள்கிறது தத்தையின் மனம்!
அதன் முதல் துளியாக இவள் விழிகளில் துளிர்க்கின்றன இரு துளிகள்…! இவன் காதலுக்கு இதுவரை இவள் செய்ததற்கான தவிப்பின் துளிகள்..!
எத்தனையாய் வலித்திருக்கும் இவளை இன்னொருவன் கரம் பிடிக்கவிருந்ததை கண்ட பொழுது..! அந்த கணம் அவன் அனுபவித்த அந்த வகை வலியை… அதன் வேகம் மாறாது அப்படியே இந்தக் கணம் இவள் அனுபவித்தாள்.      
காதல்…..! இவள் அகத்தில் இவளவன் வலியை கடத்தியது இவள் கொண்ட காதல்…..! 
இத்தனை நாளாக இவளுள் குத்தி நின்றது குற்றக் கோடுகள் மட்டுமே.. ராஜாவின் தோழியாக… பார்த்திபனைப் புரிந்தவளாக… அவன் உணர்வுநிலை தெரிந்தவளாக… இவளுள் இழைத்த தவறுக்கான தவிப்பு மட்டுமே..!
இன்று… இவள் உடையவன்…! இவள் உயிரில்.. உணர்வில்.. உறைந்து நிற்கும் உறவு…! 
அவன் உயிரைத் தொடும் எதுவும் இவளைத் தொடும்…! அவன் உணர்வைச் சுடும் எதுவும் இவளைச் சுடும்…..!
அவனையும் சுட்டது… அவனது சுடர்க்கொடியின் சுடுநீர் முத்துக்கள்…! 
“மங்கம்மா………” அதிர்வின் அடையாளம் அவனிடம்.
அவன் ஆகத்தில் அடைக்கலம் அடைந்தவளை பிடிவாதமாக பிரித்தெடுத்தான்.. 
“யாழ் என்னடி….?” 
மன்னவனுக்கு மௌனம் மட்டும் மறுமொழியாக மங்கையிடமிருந்து..
“யாழ்ழ்ழ்……..” அவன் அதட்டல் கூட தடை செய்யவில்லை தலைவியின் கண்ணீரை..!
அவள் கண்ணீருக்கு காரணம் தேடி அவன் தேடல் தொடங்கியது…! அவன் வார்த்தைகள்….. வஞ்சியவளை வாட்டும் விதமாக எதுவும் வரவில்லை. வேறென்ன…..? வேறென்ன…..? இவன் சிந்தனை வேகம் பிடித்தது.
நாழிகள் மட்டும் கடந்தன… காரணம் கிடைக்கவில்லை…! அவள் மௌனமும் உடைக்கவில்லை…! 
“யாழ்…..” அழைத்துப் பார்த்தான். பார்த்திபனுடன் பார்வை கோர்க்கவில்லை பாவை. 
அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க அவன் அகம் அனுமதி கொடுக்கவில்லை.. அவள் கண்ணீரும் தான்..!
இவன் எழுந்து கொள்ளப் பார்க்க… அவள் அனுமதிக்கவில்லை..! சட்டென அவனை இழுத்தமர்த்தி அவன் மீது அமர்ந்துகொண்டாள்.
“மங்கம்மா…….” மலரிதழ் வருடலின் மென்மை..! பார்த்திபனின் இந்தப் பதத்தில் பாவைக்குள் பனித்தூறல்..! இன்னும் இன்னும் அவனோடு ஒட்டிக் கொள்ள… தன் மீது சாய்த்துக் கொண்டான். 
அவள் ஆறுதல் அவனிடம் தானே..! அழகான புரிதல் பார்த்திபனிடம்…!
பல மணித்துளிகள் கரைந்திருக்க… காரணம் கிடைத்தது ராஜபார்த்திபனுக்கு.
மாடத்தில் உதிர்ந்து கிடந்த வேம்பு மலர்கள் வைத்து இவள் ஏதோ செய்ய… எட்டிப் பார்த்தான்.
‘சாரி’ 
இந்த ‘சாரி’க்குப் பின் சாய்ந்து கிடக்கும் காரணம் தானே அவள் கண்ணீருக்குக் காரணம்..!
இதுவரை இவள் சாரி கேட்கவில்லை…! இவள் கேட்க அவன் விடவில்லை…! அவளது விளக்கங்களைக் கேட்கக் கூட அவன் விரும்பவில்லை.
பார்த்திபன் பார்வை அவளது ‘சாரி’யின் மேல் படிந்ததைப் பார்த்தவள்.. அதைத் தொடர்ந்த அவன் மௌனத்தை மொழி பெயர்க்க முயன்றாள்.
ம்ஹும்….. அவனாகத் தான் சொல்ல வேண்டும்.
அவன் சொல்லவில்லை…..! அவன் அணைப்பு சொல்லியது… அவன் பேரன்பை… புரிதலை…!
அவன் கண்டு கொண்டதில் காரிகை உள்ளத்தில் இதுவரை இல்லா காதல் மழையும் வியப்புத் தூவலும் நிம்மதி நதியும்.
அந்த சுகத்தில்… அதன் சிலிரிப்பில் இவள் இருக்க… யாழ் மீட்டினான் இவளவன்.
“யாழ்…..”
“ம்ம்..”
“நான் உன்கிட்ட இதை எதிர்பாக்கல….. ஒரு தரம் தப்பு பண்ணின ஓகே… மறுபடியும் தப்பு பண்ணினா…..?”
சத்தியமாய் மங்கைக்கு இலங்கவில்லை இவன் என்ன சொல்ல வருகிறான் என்று..!
மன்னவன் நெஞ்சத்தில் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனை நோக்க… “புரியலையா….?” என்று கேட்டான்.
ஆம் என்பதை தலை அசைத்து வைக்க… “அப்ப…. பண்ணினது தப்புன்னு கூட தெரியாம தான் தப்பு பண்ணிருக்க….” அவன் தொனியிலிருந்து இவளுக்கு எதுவும் தெரியவில்லை… தெளியவில்லை. 
“சொல்லு யாழ்….” 
‘என்ன சொல்ல.. எதாவது புரிந்தால் தானே எதுவும் சொல்ல முடியும்’ பாவை பார்வை பதிலாக.
“புரியல…….?” மீண்டும் இவன்.
‘என்ன இவன் முதல்ல இருந்து வரான்…?’ 
“அப்போ என்ன தப்பு பண்ணினன்னு முதல்ல புரிஞ்சுக்கோ… அப்புறம் நான் சொன்னதும் புரியும்” என்றுவிட
“புரிஞ்சிடுச்சு…” என எழுந்து அமர்ந்தாள்.
‘இருக்காதே…. நாம புரியற மாதிரி எதுவும் சொல்லி வைக்கலையே.. அப்புறம் எப்படி..?’ என்பதாய் யோசித்து இவன் பார்க்க…
“உன்கிட்ட போய் சாரி சொன்னேன் பாரு.. அதான்…” 
“ஹேய்!!!”
“போடா… ஒருத்தி பீல் பண்ணி சொல்றாளே… அதை கொஞ்சமாவது கன்சிடர் பண்ணுவோம்னு தோணுதா உனக்கு…?” சட்டென சண்டை மோடிற்கு செல்ல… சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயம் இவனுக்கு.
“மங்கம்மா அப்படியில்லடி….”
“போதும் ராஜா….. நா பண்ணினது ரொம்ப பெரிய தப்பு… உனக்கும் உன் காதலுக்கும்..! அதோட வலி எப்படி இருந்திருக்கும்னு இன்னைக்கு என்னால உணர முடியுது.. அதான் சாரி கேட்டேன்… முன்னாடியே கேட்டிருப்பேன்.. ஆனா நீ கேக்க விடல..” என்று இவன் முகம் பார்க்க..
“இன்னும் நீ என்ன தப்பு பண்ணினன்னு உனக்கு புரியல…” இவன் அந்த தப்பை விடுவதாய் இல்லை.
“புரியவே வேணாம்..!” என்று எழுந்து சென்றவள்.. நடை தடை செய்து.. குளிர் காற்றை கொண்டு வந்த தென்றல் அவனைத் தழுவும் முன் இவள் செய்திருந்தாள்.
‘தப்பு பண்ணினா சாரி கேக்க கூடாது.. சரி செய்யணும்’ இவளவன் கூற்று. சரி செய்யத் தான் செயலில் இறங்கினாள் மங்கை.
தழுவிய தன்னவளை தன்னோடு சேர்த்துச் சுற்றி இறக்கியவன் “புரிஞ்சிடுச்சா என் மங்கம்மாக்கு..” என்றபடி நெற்றி முட்ட..
“ம்ம்ம்ம்…..” என்றவள் அவனுள் முகம் புதைக்க… விலக்கி நிறுத்தியவன்
“ம்ம்.. ராஜா ரெடி… ஸ்டார்ட்…!” என்றான்.
“ராஜா ப்ளீஸ்….. இன்னொரு நாள்…” தயக்கமும் அதைத் தாண்டிய தனி வெட்கமும் தத்தையிடம்.
வெட்கப் பூவின் சுகந்தத்தை சுகித்தவன் “ம்ஹும்….. என் மூட் செட் ஆகிடுச்சு… மாத்துறது கொஞ்சம் கஷ்டம்”
“நா வேணா மூட மாத்தி விடட்டா…” ஆவலாய் கேட்டிட..
“ம்ம் மாத்து… ஆனா உனக்கு தான் கஷ்டம்” என்றுவிட 
“வேணாம்… வேணாம்…” என்றாள் வேகமாய்.
‘அது…’ என்பதாய் ஒரு பார்வை பார்த்திபனிடம்.  
‘இறங்கி போனவ அப்படியே போயிருக்கலாம்… எமோஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனதுல வான்ட்டடா வந்துட்டேனே…’ மங்கையின் மனமொழி.
“யாழ்….. சீக்கிரம்.. எனக்கு தூக்கம் வருது.”
“அப்போ வா..! போய் தூங்கலாம்… இது நாளைக்கு வெச்சிக்கலாம்.. ம்ம்..?” இவள் அங்கிருந்து அகலப் போக.. இழுத்து நிறுத்தியவன் 
“எனக்குத் தூக்கம் வரல…”
“எனக்கு வருதே…!”
“மங்கம்மா…..” 
“ராஜா…..” சின்னதாய் சிணுங்கலுடன் நின்றவளை சிறை செய்தவன் 
“காதலை சொல்றதுல உனக்கென்னடி கஷ்டம்…?” இவள் செவியோரமாய் அவன் இதழ் தீண்டிச் சொல்லியது.
பாவையிடம் பார்த்திபனின் கண்டிஷன் இது தான்… காதல் சொல்வது..!
அவன் காதலை சொன்ன கணம்… அவன் கண்மணி ஏற்றுக் கொள்ளவில்லை.. அவனுக்கு கொடுத்த வாக்கு..! அதைத் தொட்டு தொடர்ந்த பிரச்சனை தான் இவளது திருமணம். அதையும் இவளே நிறுத்திவிட்டாள். இருந்தாலும் தவறு தன்னவளிடம் தானே..!
அது தான் அதை அவளே சரி செய்ய வேண்டுமென… இப்படி இளநிலா பொழிவில் நனைந்து கொண்டு காதல் சொல்ல சொல்கிறான்.
மங்கையவள் மனம் மன்னவன் உணர்ந்தாலும் வாய்மொழியாய்  கேட்டு விட துளி ஆசை..!  
“கஷ்டமா…..? காதலை சொல்றது கஷ்டம் கிடையாது… அதை சொல்லவே முடியாது…!” மங்கையவள் சிலிர்த்து நிற்க…
“அப்படியா…….?”
“ம்ம்… ம்ம்…”
“ப்ச்… உனக்கு யாரோ தப்பு தப்பா சொல்லிருக்காங்கடி… வா நான் காதல் சொல்லிக் கொடுக்கிறேன்” கடத்திச் சென்றான் காதல் சொல்ல..!
கனவு நனவாகும்…….

Advertisement