Advertisement

ஓம் வேதப் பொருளே ! வேந்தே போற்றி !
 
பார்த்திபன் கனா 11
“தப்பு செஞ்சுட்டோம்னு உணர்ந்தா மட்டும் போதாது… அதை சரி செய்யவும் வேணும் மாமா…” சிறு தயக்கம்… தடுமாற்றம் இன்றி தனக்குள் தோன்றிய கருத்தை தன் முன்னே அமர்ந்திருந்த தன் மாமானாரிடம் வைத்தாள் யாழ் மங்கை.
மங்கை மொழிக்கு மறுப்பின்றி மெல்ல தலையசைத்தார் பெரியசாமி. பார்வதி பார்வையாளராக மட்டும் இருக்க… அவரை நோக்கியவள்..
“அத்தை உங்க அமைதி தான் உங்களைக் கொண்டு வந்து இப்படி ஒரு நிலைல நிறுத்திருக்கு…” நிச்சயம் அவரை குற்றம் சொல்லவில்லை… ஆனால் நிஜம் அது தானே..! 
காலத்தைப் பொறுத்து மௌனம் காக்க வேண்டியது கட்டாயம் தான்… ஆனால் காத்து நின்ற மௌனம் காயத்தையும் கொடுக்கும் சில சமயம். 
மறுமணத்தின் போதும்… அதன் பின்னோடான பொழுதுகளிலும் பார்வதியின் மௌனம் அப்படிப்பட்ட ஒன்று தான். 
“போதும் அத்தை… அவர் அனாதை மாறி இவ்வளவு நாளும் இருந்தது..” உடையவன் வேதனையை உணர்ந்தவளின் குரலும் உடைந்தது.
அனாதை என்ற பதம் பார்வதியையும் அவர் நாதனின் அகத்தையும் வாளின்றி வெட்டிக் கிழித்தது… ஆனால் அது உண்மை..! ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர்.
“என்னைப் பொருத்தவரை வாழ்க்கையில சில இடங்களை நிரப்ப யாராலும் முடியாது.. அம்மா.. அப்பா.. அப்படிப்பட்ட இடம் தான்… நீங்க மட்டும் தான் அதை செய்ய முடியும்..”   
அம்மா… அப்பா என்ற அத்தியாயத்தில் இருக்கும் தவறுகளில் திருத்தங்கள் அவர்களே செய்ய வேண்டும் என்பதே அவள் கருத்து.   
இத்தனை நாள் செய்யாததை இனியாவது செய்யுங்கள் என்று இவள் நிற்க.. இவளவன் உள்ளே நுழைந்தான்.
காலைப் பொழுதில் அவன் பாசத்திற்கு பாத்திரமான அம்மா.. அப்பா.. ராஜி இவன் வாசல் வந்து சேர.. அகம் தனில் அதிர்வு சேர ஓர் ஆனந்தம்..!
இதுவரை வராதவர்.. இவனிடம் வந்து சேர்வது.. தனக்கான தந்தையின் தேடல் அல்லவா..? மனம் தழைத்து நின்றான்.
சிறுபொழுதில் அவன் அலைபேசி சிணுங்க.. அழைப்பை ஏற்றவன் அப்பொழுதே விடைபெற்று விட்டிருந்தான் அவர்களிடமிருந்து.  
மன்னவன் வந்தான் மங்கையை நோக்கி.
இப்போதெல்லாம் சிறுநகை ஒன்றை இவன் இதழ்கள் சிறை செய்து வைத்திருக்கிறதே….! என்ற மனவோட்டத்துடன் மங்கையவள் மன்னவனைக் கண்டாள்.
இவளருகில் வந்தமர… இவளுக்கென்று எடுத்து வந்த தேநீரைத் தர.. 
“யாழ் டீ வேண்டாம்….” மறுத்துவிட.. மங்கை தலையசைத்து விட்டு  பருகினாள்.
காபி எதிர்பார்த்துக் காத்திருக்க… அவன் கண்மணியோ அவனைக் கண்டுகொள்ளவில்லை.
“எனக்கு காபி வேணும்…..” கேட்டே விட்டான்.
“குட்… இப்படித் தான் உங்களுக்கு என்ன வேணுமோ அதை நீங்க கேட்டா தான் கிடைக்கும்.. தனக்கு ஒன்னு வேணுமின்னா கேக்குறது தப்பில்ல…” தத்துவம் பேசிச் செல்ல… பார்வதியும் பெரியசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஒரு காபி தானடி கேட்டேன்…….” முணுமுணுத்த பார்த்திபன் எழுந்து சமையலரைப் பக்கம் சென்றான்.
“எதுக்கு அப்படி பேசின…”
“எப்படி..??”
“ப்ச்…. யாழ்….”
“என்ன ராஜா…………”
“பாரு….. இங்க வந்து பாரு… உன் மருமக புருஷன பேர் சொல்லி கூப்பிடுறா….” இவன் இங்கிருந்து கத்த..
“கூப்பிடுறதுக்கு தானே டா பேர் வெச்சேன்…” அம்சமான ஆன்சர் அவன் அம்மாவிடமிருந்து.
அத்தனை காலம் இருந்த கனம் கரைந்து இலகுநிலை இடையில் வந்தது போல் இருந்தது அவனுக்கு.
“ இப்போ என்ன ராஜா சொல்ற….. ம்ம்ம்” மலர்ச்சியுடன் மங்கை கேட்க.. சட்டென அவள் இடையோடு இழுத்து அணைத்தவன்… அதரங்களை அவள் நெற்றியில் பதித்து…
“நெறைய சொல்லணுமாம் ராஜாக்கு…. சொல்லவா….” குட்டிக் குறும்புடன் கேட்க…
“சொல்லு… எவ்ளோ வேணாலும் சொல்லு.. கேக்குறேன்.. ஆனா இப்போ இல்ல…” அவனை தள்ளி நிறுத்த… அவன் தனக்குள் நிறுத்தி 
“வேற எப்போ….” என்று கேட்டான்.
“நான் சொல்ற கண்டிஷனுக்கு ஒகே சொல்லும் போது….” 
“இன்னும் என்னடி கண்டிஷன் வெச்சிருக்க……” அகம் அதிர்வை காட்டிக் கொள்ளாமல் மறைத்தாலும் கண்களில் காட்சி கொடுக்கின்றதே இவளுக்கு..!
“பயம் வேண்டாம் பார்த்திபா….” சட்டென்று சங்கத்தமிழுக்கு மாறிவிட… முறைத்து வைத்தான் அவன்.
“அப்படி ஓரமா போய் நின்னு சைட் அடி… உனக்கு காபி போட்டு தந்திட்டு நான் சமைக்க ஆரம்பிக்கணும்….” 
இதன் பின்னும் அவன் நகருவான்..?? அழகாய் அவனுள் அரஸ்ட் செய்து வைத்துக் கொண்டான்.
“ராஜா… என்ன பண்ற நீ?? அத்தை வந்திடப் போறாங்க….” மெல்லிய பதற்றம் பாவைக்குள்.
“வரட்டுமே!!!” அவனுக்கு அப்படியெல்லாம் இல்லை போல.
“உனக்கு காபி வேணுமா வேண்டாமா???” காபியை வைத்து கார்னர் செய்தாள் காரிகை.
“வேண்டாம்….” 
காபியா..? காதலா..? அவன் காதலென்றான்.. காதல் தானே…? 
“எனக்கு வேணும்!!!!!” அவள்.
“வா சேர்ந்தே போடுவோம்….” ‘மிஷன் காபி’ யில் களமிறங்கி விட்டான்.
இவள் விதைத்த வம்பை அவன் வளர்ந்தான் அவ்வளவே.
அடுத்தென்ன காதல் கணவனும் அவன் கண்மணியும் சேர்ந்தே காபி செய்ய… அவனோ சுக அனுபவத்தில்…! அவளோ சுக அவதியில்..!  
“காபியை எடுத்துட்டு கிளம்பு டா…” கெஞ்சலில் இறங்க வேண்டிய கட்டாயம். 
“திஸ் இஸ் நாட் பேர் மங்கம்மா… காபி வித் காதல்… கேள்விப்பட்டதில்ல…” பாடம்.. காபிக்கா காதலுக்கா தெரியவில்லை.
“அதுக்கு??????” அடுத்தென்ன வரும் என்பதை அறிவாளே..!
“வா சேர்ந்தே குடிப்போம்…..”  காதலுக்குத்தான் போலும்..!
“ராஜா….. ப்ளீஸ்…. வெளில போ முதல்ல… அத்தையும் மாமாவும் இருக்கும் போது… இது சரியில்ல..” சீரியஸ் மோடில்.
“நான் வேணும்னா போய் அவங்கள அனுப்பிட்டு வரட்டா…..” சிரிப்பு மோடில்.
“டேய்!!!!!” அவன் காரிகை காளியாக மாறும் முன் இடத்தை காலி செய்திருந்தான்.
கடந்து வந்த காலைப் பொழுதின் தடயம் தன்னவனிடம் சிறிதும் இல்லை என்பதை உணர்ந்தவளின் நெஞ்சத்துள் நிம்மதி பிரவாகம்..!
நிம்மதிப் பிரவாகமா??? அதில் கப்பல் விட மீண்டும் வந்தானே அவன்.
“இப்போ என்ன?????” 
“கத்தாதடி….. காபி ஒகே… கண்டிஷனை சொல்லல…”
“நீ எங்க சொல்லவிட்ட….”
“நான் என்னடி பண்ணினேன்…..” கேட்டபடி அங்கிருந்த மேடையில் தாவி ஏறி அமர…
கைகளை கட்டிக் கொண்டவள்… “மாமா மாத்திரை சாப்பிடனும்… அதுக்கு முன்னாடி சாப்பாடு சாப்பிடனும்… அதுக்கு முன்னாடி நா சமையல் செய்யணும்.. நீ இப்ப வெளில போகல….” இவள் முடிக்கும் முன்பே அதை செய்து முடித்திருந்தான் அவன்.
கோவம் கொண்டானோ??? அவன் பாவனை படிக்கும் முன் வெளியேறியிருந்தான்.
வஞ்சியவள் சிறு வாடலுடன் சமைக்க ஆரம்பிக்க… சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தவன் “நீயும் கொடு… கோவம் போயிடும்..” என்றான்.
அவள் வாடலுக்குப் பின்னான அவன் வருத்தம்… அதை போக்க அவன் படும் பிரயத்தனம்… பார்த்திபனின் பாவைக்கு புரிகிறதே…! புரிதல் பனித்தூறல் இன்பத்தை கொடுக்கிறதே…!
இவள் இன்பனுக்கும் அதைக் கடத்திட….. கன்னத்து முத்தமொன்றை கொடுத்தாள்.
அவள் நெற்றி முட்டியவன் “கோவம் இருந்தா தானே போக…” என்றுவிட்டு பறந்து விட்டான்.
அடுத்ததாக அவன் சென்றது அன்னையிடம்..! 
பருவம் பல கடந்து விட்டான் தான்.. ஆனால் அழுத்தமானாலும் ஆனந்தமானாலும் அகம் அன்னையைத் தான் தேடிடும் அவனுக்கு..!
அதில் ஆறுதல் அவனுக்கு மட்டுமல்ல.. அன்னைக்கும் தான்.
“பாரு..  காபி..?” அவர் தோளில் சாய்ந்தான் தலைவன்.
“டீ குடிச்சுட்டேன் டா..” 
“ம்ம்..”
பார்த்திபன் பார்வை அவன் தந்தையை தீண்டி தாயிடம் வந்து சேர்ந்தது. இருவரின் முகமும் அகம் காட்டி நிற்க.. அதில் நின்ற வருத்தம் படித்தான்.
“ம்மா.. உங்க வருத்தம் எனக்குப் புரியுது.. ஏன் எனக்கும் கூட வருத்தம் தான்.. உங்களை விட!!”
பார்வதியின் விழிகளில் மழைக்கான மேகமூட்டம்..! இமை மூடி இருந்தாலும் இவன் பேச்சைக் கேட்ட பெரியசாமியின் அகத்தினில் அடி..
“ஆனா நாம அதையே நினைச்சிட்டு இருந்தா எப்படி.. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கணும்.. நான் யோசிச்சுட்டேன்..” என்று நிறுத்தினான்.
புலப்படவில்லை அவர்களுக்கு. 
“இதை தவிர நம்மகிட்ட வேற ஆப்ஷனும் இல்லமா..” 
“என்ன ராஜா…?” 
‘என்ன வரப்போகிறதோ..?’ என்று இருவரும் பார்த்திருக்க.. தான் நினைத்ததை சொல்லாக்கினான் ராஜா.
“பேசாம சக்தி ஹோட்டல்ல பொங்கல் ஆர்டர் பண்ணிடலாம் மா..”  
“…………????????”
“ஆமா மா.. இனிமே போய் தேவையான திங்க்ஸ் வாங்கி.. மங்கம்மா ட்ரையல் அண்ட் எரர் செக் செஞ்சு.. நாம எப்ப சாப்பிடுறது.. நீங்க வேற கோவில்ல செஞ்சத கோவத்துல அங்கயே விட்டுட்டு வந்துட்டீங்க.. எனக்கும் பொங்கல் சாப்பிடனும்னு மூட் செட் ஆகிடுச்சு.. உங்களுக்கும் அப்படி தான் போலவே..” 
‘ஏன்டா இப்படி..?’ என்பதாய் அவன் தாய். 
எதை எதையோ எதிர்பார்த்தவர்களுக்கு.. இந்தப் பொங்கலை எப்படி எதிர்கொள்ள எனத் தெரியவில்லை.
இவன் முகம் பார்த்து… தெரிந்து.. தெளிந்தார்கள். 
கோவில் நிகழ்வில் தனக்கேதும் நகழ்வில்லை..(வலி) என்பதை தாங்கி நின்றது தலைவன் வதனம். 
மெய் தான்..! ராஜாவின் மனம் தனில் வாட்டம் துளியளவும் இல்லை… யாரோ என்கிற எல்லையில் நிற்பவர்களின் யாதொரு சொல்லும் அவனை ஆள அவன் அனுமதிப்பதில்லையே..!  
பொங்கலை வைத்தே அவன் நிலையை உணர்த்தி.. அவர்களுக்குள் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை அடக்கி.. இதம் படர விட்டான் பார்த்திபன்.
இனி… தந்தா னானே.. தானானே… ஆனந்தமே…! ராகத்திற்கு மட்டும் தான் இடம் அவர்கள் வாழ்வில்.. தலைவன் தன் அகக் கல்வெட்டில் பதித்துக் கொண்ட ஆணை. 
மதியப்பொழுதில் தோழி வீட்டிற்கு சென்றிருந்த ராஜ லஷ்மியும் வந்து விட அன்னமிடும் படலம்.
பெரியசாமி உணவை அளந்து கொண்டிருக்க… “மாமா… இப்படி சாப்பிட்டா எப்படி… வயசு ஆக ஆக நமக்கு தேவையான அளவு சாப்பாட்டை எடுத்து கிட்டே ஆகணும்..” என்று பரிமாற..
“வேணாம்மா… சாப்பிட முடியலை…” அவர் மறுக்கவும்..
“நான் சொன்னதுக்காக கொஞ்சம் வெச்சுக்கோங்க மாமா… ஒரு வேலை நான் சாப்பிடற மாதிரி செய்யலையோ…..” இவள் இப்படிக் கேட்கவும்
“அருமையா இருக்கு மா.. நீ அப்படியெல்லாம் நினைச்சுக்க வேண்டாம்.. கொஞ்சமா வை… உனக்காக சாப்பிடுறேன்…” என்றார் அவர்.
இருவரிடையேயான இயல்பான உரையாடலைக் கண்ட ராஜ பார்த்திபன் மனம் மறுமுறையும் சொன்னது… தானும் ஒதுங்கிப் போகாமல் இருந்திருக்கலாம் என.
அவன் சிந்தனை கண்டு பார்வதி “ராஜா… சாப்பிடாம என்ன யோசனை…” என்று கேட்க.
மென்னகையுடன் ஒன்றுமில்லை என மறுத்தவன்… உணவை முடித்துக் கொண்டு மங்கையிடம் கண்களால் அறையைக் காட்டி விட்டு எழுந்தான்.    
மறுத்துச் சொல்ல முயன்றாள் தான்… அதைப் பார்க்க பார்த்திபன் வேண்டுமே..! 
அவளும் உணவு உண்டு விட்டு அவள் அத்தையுடனும் ராஜியுடனும் அமர்ந்து அளவளாவ… அழைத்தான் அவன் அலைபேசியில்.
அழைப்பை துண்டிக்கும் தவறை மட்டும் செய்துவிட்டால் அடுத்து நிகழ்வதற்கு அவன் பொறுப்பேற்க மாட்டான்… அறிக்கை விடுத்திருக்கிறான் ஏற்கனவே..!
அழைப்பை ஏற்றவள்… “ஹெலோ… எங்கத்த.. மாமா எல்லாம் வந்திருக்காங்க.. நான் கொஞ்சம் பிஸி… ப்ரீ ஆகிட்டு நானே கூப்பிடுறேன்… பை பை..” அவனுக்கு வாய்ப்பே அளிக்காமல் பேசி முடித்து அணைத்து வைத்தாள்.
“யாரு யாழ்…”
“ப்ரெண்டு அத்தை…” 
“ஒரு காலத்தில ப்ரென்ட்… அப்படித்தானே அண்ணி…..” கேலி தான்.
‘பார்த்திபன் தங்கச்சி பார்த்துட்டா போலவே…!’    
“ஹி… ஹி… ஆமா ராஜி…” 
    
“எடுத்து பேசுங்க அண்ணி… கோவிச்சுக்கப் போறாங்க…”
“ச்ச… ச்ச… அவங்களுக்கு கோவமே வராது என் மேல…” 
“யாருக்கு அண்ணி…”
“ப்ரெண்டுக்கு தான்…” விழிகளாலே மிரட்டல் விடுக்க… அவளோ எதிர்த்திசையில் காட்டினாள்.
மெல்ல திரும்பி பார்த்தவள் விழிகள் விரிந்தே நின்றுவிட்டன. அறையிலிருந்து ராஜா வந்து கொண்டிருந்தான்… வருகை அவன் ராணிக்காகத் தான். வேகம் பார்த்தால் வந்து கடத்திப் போவதை போல் தான் இருந்தது. 
“அத்த… இதோ வரேன்…..” என்றவள் ஓடிச் சென்று அறைக்குள் அடைக்கலம் புகுந்தாள். இதழில் முளைத்த முறுவலுடன் இவனும் உள்ளே சென்றான்.
“ராஜா….. அத்தை கூட இருக்கும் போது நீ இப்படி கூப்பிட்டது சரியில்ல..”
“யெஸ்….. வா நானே போய் அம்மாகிட்ட சொல்லி கூட்டிட்டு வரேன்..” என்று இவளை இழுக்க… முடிந்த அளவு முறைத்துப் பார்த்தாள்.
“மை டியர் மங்கம்மா….. உங்க அண்ணன் இன்னிக்கு யு.எஸ் கிளம்புறாரு.. அது நியாபகம் இருக்கா… இருந்தா கிளம்புங்க.. போய் சென்ட் ஆப் பண்ணிட்டு வருவோம்..”
இவன் சொல்லவும் தான் நிரு நினைவிற்கு வருகிறான். அடுத்த ஒரு மணி நேரத்தில் நிரஞ்சனுடன் நின்றிருந்தனர்.
தன் தங்கையின் திருமணத்திற்காக தாய் நாடு திரும்பியிருந்தான் நிரஞ்சன். தமையனாகத் தன் கடமையை முடித்தவன் தன் மனைவி குழந்தையுடன் அமெரிக்கா செல்கிறான்.   
“யாழ்…. இதுவரைக்கும் அம்மா… நிதி.. பத்தி மட்டும் தான் நீ யோசிச்சிருக்க… ஆனா நீ இப்போ யாழ்மங்கை ராஜபார்த்திபன். புரிஞ்சு நடந்துக்கோ…”
“ம்ம்… ம்ம்…” என்றவள் பார்வை தூரத்தில் நிரஞ்சன் குழந்தையுடன் நின்றிருந்த தன்னவனிடம் நிலைக்க.. அவ்விடம் பார்த்த நிரஞ்சனும் 
“பார்த்திபன் நைஸ் பர்சன்…”
“ரொம்ப ரொம்ப நல்லவன் அண்ணா..” தன் சரிபாதிக்கு சர்டிஃபிகேட் கொடுத்தாள். 
“மிசஸ்.பார்த்திபன் சொன்னா கேட்டு தானே ஆகணும்…!!” என்றபடி நிரஞ்சன் மனைவி வந்து சேர..
“நான் அவரை கூட்டிட்டு வரேன் அண்ணி….” தப்பிச் சென்றாள்.
பார்த்திபனும் அவன் பாவையும் நிரஞ்சனை வழியனுப்பி விட்டு வீடு வர.. பார்த்திபனுக்கான கண்டிஷன் காத்திருந்தது.
கண்டிஷன் காயம் செய்யுமா..? காதல் செய்ய சொல்லுமா..?
கனவு நனவாகும்…….  
 

Advertisement