Advertisement

ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி !
பார்த்திபன் கனா 10
“ராஜா…..”
“……….”
“அத்தை இரண்டு முறை கூப்பிட்டாச்சு… நாம கிளம்பிட்டோமா இல்லையான்னு கேக்க…”
“…………”
“டைம் ஆச்சுடா……..”
மங்கையின் மொழிகளெல்லாம் மன்னவன் செவிமடல் தீண்டி… உள்ளே நுழைந்தது தான்… ஆனாலும் அவள் மடி சாய்ந்திருந்தவனுக்கு ம்ம் கொட்டவும் தோன்றவில்லை.
துளித் துளியாய்…. அவளோடான மணித்துளிகளை அக ஆழியில் சேர்த்தும் அனுபவித்தும் கழித்தான்…!
இரு சூரிய உதயங்களுக்கு முன் தான் தன்னவளின் கரம் பிடித்திருந்தான்… அன்றே அவர்கள் வழக்கப்படி மணமக்கள் அழைப்பெல்லாம் முடித்துவிட.. அதன் பின்னான அவன் பொன் பொழுதுகள் எல்லாம் அவளுடனே..!
ராஜபார்த்திபனின் நெஞ்சகத்தில் இன்னமும் இது கனவா… நனவா… என்ற நிலை தான்.. அவளைக் காதலித்தான்… காத்திருந்தான்… அதுவும் ஆண்டுகளாய்..! ஆனால் இப்படி சட்டென இவன் இணையாகி நிற்பாள் என எதிர்ப்பார்க்கவில்லை.
ஒரு வாரம் முன்பு வரை… எனக்கே எனக்காய் யாருமில்லை என்பது தான் இவன் மனநிலவரம்..! இன்று எனக்கே எனக்காய்…. என் மங்கை… என்னுடன்… என் தலைவியாய்…! என் தாயாய்…! என் தோழியாய்…! 
இது போதும்…! இது மட்டும் போதும்…! இந்த உறவையாவது உரிமையாய் என்னிடம் இருக்க விடு…! இதுவே இறைவனிடம் இவன் கேட்கும் வரம்…!    
“ராஜா…….” பாவையின் பூ விரல்கள் பார்த்திபன் தலை கோத… அந்த தீண்டல் தாங்கி வந்த தாய்மை அவனைத் தித்திக்க வைத்தது…!
இவன் தலைவி தாயாய் தான் அறிமுகம் ஆகினாள். இதே போன்றதொரு பொழுதில் தான்.. இதே போலத்தான் இவனை மடியில் தாங்கியிருந்தாள்.
காலச் சக்கரம் எதிர்பக்கம் சுழன்று ஆறு ஆண்டுகளுக்கு முன் போய் நிற்கின்றது.
அதுவரை ராஜாவின் மென் உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று வந்த அவன் அப்பா வீட்டு மனிதர்கள் அன்று மொத்தமாய் கொன்றிருந்தனர்.
ராஜ லஷ்மியின் பிறந்தநாள் அன்று. அந்த வீட்டு குழந்தைகளின் பிறந்தநாளின் போது குலதெய்வம் கோவிலில் பூஜை செய்வது வழக்கம். எத்தனை வேலைகள் காத்திருந்தாலும் அதை ஒதுக்கி அன்றைய நாள் அனைவரும் அங்கே ஆஜராகி விட வேண்டும்.
எப்போதும் எல்லோரும் இருப்பார்கள்… பார்த்திபனைத் தவிர…! யாரும் அவனை அழைக்க மாட்டார்கள்… அவனும் அழைக்கும் படி வைத்துக் கொள்ள மாட்டான். விடுதி அவன் வாசஸ்தலம் ஆனதும் ஒரு காரணம்.
எப்போதும் ராஜிக்காக எதாவது பரிசு வைத்திருப்பான்… அன்றைய தினம் மட்டும் அந்த வீட்டிற்குச் சென்று அவளைப் பார்த்து கொடுத்துவிட்டு வந்துவிடுவான்.
அந்த வருடம் அவனுக்கிருந்த வேலையில் அதை மறந்திருந்தான்… அவளது பிறந்தநாளையும் மறந்திருந்தான்.
அவன் தங்கை தாயுடன் தமையனை தேடி அவன் வீடு வந்ததும் தான் அவனுக்கு நினைவும் வந்தது.
அடுத்தென்ன… மன்னிப்பு கோரும் படலம் தான்.. 
“ராஜிம்மா… சாரிடா… மறந்துட்டேன்…..!”
“நான் உன் தங்கச்சி தானே… அதை மறந்துடலையே….” கலங்கிய விழிகளுடன் நிற்க… தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன்..
“ஹேய் ராஜிம்மா…. என்னடா நீ… எனக்கிருக்க ஒரே தங்கச்சி நீ… உன்னைப் பார்க்க.. பேச சந்தர்ப்பம் அமையறதில்ல… யாரும் அமையவிடுறதில்ல.. அதுக்காக நீ என் தங்கச்சி இல்லன்னு ஆகிடுமா..?? இல்ல நா உன்னை மறந்திடுவேனா..?? நிஜமா வேலை அதிகம் டா.. மொத்த கவனமும் அதுல இருந்ததினால இத மறந்துட்டேன்…. சாரிடா…” 
காரணமெல்லாம் காரிகையின் கோவத்தில் மாற்றம் செய்யவில்லை…! 
“ம்மா…… நீயாவது சொல்லேன்….” பார்வதியிடம் இவன் திரும்ப.. அதுவரை கலங்கி நின்றிருந்தவர் சட்டென தன்னை மீட்டுக் கொண்டு..
“என்னை விடுடா…. அண்ணன் தங்கச்சிக்குள்ள யாருமே வரக் கூடாது… அதுவும் அம்மா நான் வரவே கூடாது… நீங்களே பஞ்சாயத்து பண்ணிக்கோங்க.. நா சமையல் பண்றேன்… நீ சாப்பிட்டு கிளம்பு…” என நற்றாய் நழுவிக் கொள்ள…
“ம்மா…. நீ கூட என்கிட்ட சொல்லல….” 
“அதுக்கு அம்மா கூப்பிட்டா போன் அட்டென்ட் பண்ணனும்….” அம்மாவிடமிருந்தும் அம்பு வர
“மாவு இருக்கு… நீ போய் பணியாரம் சுடுமா…” என அவரை அனுப்பி வைத்தவன்.. 
“ராஜிம்மா.. அண்ணா பண்ணது தப்பு தான்… அதுக்கு என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு.” தங்கையிடம் சரண்டர் ஆகியிருந்தான் தலைவன்.
“பேச்சு மாற மாட்டல்ல….” விரைப்புடன் வினவ..
“ம்ஹும்…..” சிரிப்புடன் தலையசைத்தான்.
 
“இன்னைக்கு நாள் முழுக்க நீ என்கூட தான் இருக்கனும்… வருஷா வருஷம் என் பிறந்தநாள் அன்னிக்கு உன்னை பார்க்கிறதே பெரிய விஷயம்…. அதை எல்லாம் சரி செய்ய நீ இன்னிக்கு என்கூடவே இருக்கனும்…” ராஜலஷ்மி கட்டளையிட களிப்புடனே ஏற்றான்.
அவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது அவளுக்கு விருப்பம்… அவனுக்கு..?? நெடுநாள் ஏக்கம்…! தங்கையுடன் பேசிட… விளையாடிட… சண்டையிட… இவன் நெஞ்சம் ஏங்கி நிற்கும் எப்போதும்.
அவன் தாய் அமுதிட… அவளுடன் சேர்ந்து உண்டவன்.. அதன் பின் அவளை அழைத்துச் சென்று ஆவல் கொண்டதெல்லாம் அவளுடையதாக்கினான்.
குல தெய்வ கோவில் பூசை குறித்துச் சொல்ல.. அடுத்து அவளை அங்கு அழைத்துக் கொண்டு சென்றான்.
அதுவரை அந்தக் கோவிலினுள் அவன் அடியெடுத்து வைத்ததில்லை.. அன்றும் அவன் அகம் அவனை அனுமதிக்கவில்லை… ராஜியை மட்டும் அனுப்பி வைத்தவன் தான் வெளியே காத்திருப்பதாகச் சொல்ல… அவளோ அவன் சொல் கேளாமல் அவனையும் இழுத்துச் சென்றாள்.
அன்றைய நாள்… அதுவரை அவன் பார்த்திராத தந்தை… தன்னுடன் இருந்திருக்கக் கூடாதா என வலிக்க வலிக்க எண்ண வைத்தது.
“ராஜி!!!!!!!!!!! அவனை எதுக்கு உள்ள கூட்டிட்டு வர….”
“ஏன் சின்னத்த… அண்ணன் கோவிலுக்குள்ள வரதுல என்ன பிரச்சனை..??”
“வாயை மூடு…. யாரை எங்க விடணும்னு வெவஸ்தை இல்லாம…. முதல்ல நீ உள்ள போ….” என அவரை இழுத்து உள்ளே விட்டவர்..
“டேய்!!… உனக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராதா…. உன்னை யாரு அழைச்சாங்கன்னு இங்க வந்து நிக்குற… கண்டவங்க எல்லாம் வந்து போக இது என்ன சத்திரமா… சாமி… எங்க குலசாமி…!” அமிலத்தை அள்ளித் தெளிக்க..
“நிறுத்துங்க…. யாரு கண்டவங்க… நான் ஒதுங்கி ஒதுங்கி போனா ரொம்ப ஓவரா பேசுறீங்க… முதல்ல என்னை கேள்வி கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு..??” இவன் போட்டு வைத்திருந்த எல்லைக் கோட்டை இவன் பொறுமை கடந்திருக்க… அதன் சீற்றம் இவனிடம்.
“உரிமையா..?? சரி அப்படியே வருவோம்… உன்னைக் கேக்க எனக்கு உரிமை இல்ல… நான் பேசல. ஆனா நீ என்ன உரிமைல இங்க வந்து நிக்குற… இது என் கோவில்.. வெளில போடா…..” அலட்சியம் மட்டுமே அவ்விடம்.
“முடியாது… இது என் அப்பா கோவில்… அப்ப எனக்கும் குலசாமி இது தான்..” இவன் சொல்லவும்… அங்கிருந்த அந்த வீட்டு பெரியவர்கள் நகைக்க… இவன் முகம் ரௌத்திரம் பழகிப் பார்த்தது.    
“யாரு யாருக்குடா அப்பா..?? என் அண்ணனுக்கா பொறந்த நீ? போ.. போய் உங்க ஆத்தாகிட்ட கேளு உன் அப்பன் யாருன்னு… ” அடுத்து.. அந்த நா நஞ்சை கக்கும் முன்.. இவன் அருகே கிடந்த நாற்காலி அவரை நோக்கிப் பறந்தது.
“நிறுத்திக்கோ…. இதோட நிறுத்திக்கோ…. இல்ல.. நீ இருக்க மாட்ட..” அவன் கர்ஜனையில் கனல் தெறித்தது.
இதைக் கேட்ட அவன் சித்தப்பாக்கள் சிலிர்த்து எழுந்து இவன் மேல் பாய.. வேந்தனும் வேங்கையாய் வீறு கொண்டுவிட்டான்.
“சித்தப்பா… விடுங்க.. விடுங்க.. அண்ணா..” பதறிய இவன் பாசத் தங்கை நடுவில் பாய்ந்துவிட்டாள்.
இன்னும் அங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பானோ… ராஜியின் விழிநீர் அவனுக்கு விலங்கிட்டு வைத்தது. அவளை அங்கேயே விட்டுவிட்டு அவன் மட்டுமாய் வெளியேறினான்.
எத்தனை பேச்சுக்கள்… இத்தனை நாளில்… இவர்களிடமிருந்து..! இவனை நோக்கி வந்து வலிக்க… வலிக்க… மனதை நொறுங்கச் செய்யும். இவனுக்கு மட்டுமாய் ஏன்? இவன் என்ன தவறு இழைத்தான்?? விடை கிடைக்கவில்லை இவனுக்கு..! விடை கொடுக்கவும் தயாராயில்லை யாரும்..
சிறுபிள்ளையை இவன் அகம் அன்னைக்கு ஏங்கித் தவிக்க… வீடு வந்துவிட்டான்.
“ம்மா…..” என வந்தவன் அவள் மடி சாய்ந்து இமை பூட்டிக் கொண்டான். 
அதுவரை அவனை அலைக்கழித்த அலட்சியங்களும் உடைத்துப் போட்ட உதாசீனங்களும் அவளின் தூய தீண்டலில் தொலைந்து போய் அக ஆழி அமைதி கண்டிருந்தது. இத்தனைக்கும் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே மொழியாக.
அவள் விரல்கள் இவன் தலையை வருடிக் கொடுக்க.. கொடுக்க… இவனுள் வந்திருந்த வெறுப்பு.. கசப்பு.. வலி… எல்லாம் விடைபெற்று போயிருந்தன.
சிறு பொழுது சென்றிருக்க… இவனது அலைபேசி அதிர்ந்தது. எழுந்து அமர்ந்தவன் அன்னையின் அமைதி கண்டு அவள் முகம் நோக்க… திடுமென இறங்கியது திகைப்பு அவனுள்..!  
விரித்து வைத்திருந்த புத்தகத்தில் விழிகளைப் பதித்து.. கவனம் குவித்து.. சூழல் மறந்து… மூழ்கியிருந்தாள் மங்கை… யாழ் மங்கை..! 
அவன் வருகையும் அதைத் தொடர்ந்த அவள் ஆறுதல் பொழிவையும் அவள் அறிந்திருக்கவில்லை… அதில் இன்னமுமாய் அதிர்ந்தான் இவன்.
யாரிந்த மங்கை??? 
ஓரிரு மணித்துளிகளில் மன்னவனுக்கு விடை கிட்டியது. இவன் இருக்கும் வீட்டின் மேல் மாடத்தில் இருக்கும் பகுதிக்கு யாரோ குடியேற வர விருப்பதாக உரிமையாளர் சொல்லியிருந்தார். காலையில் வந்திருக்க வேண்டும்.. இவன் அன்னை அழைத்து இருக்க வேண்டும்.
யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்… நான் செய்து வைத்திருப்பதென்ன?? இவள் இப்போது செய்து கொண்டிருப்பதென்ன?? இன்னமும் அவள் புத்தகத்திலிருந்து மீண்டிருக்கவில்லை.
தவிப்புடன் தத்தையை நோக்கயிருக்க… இவன் தாய் உள்ளே நுழைந்தார்.
அதன் பின் அவளுடன் அறிமுகப்படலம்….! 
சற்று முன் அரங்கேறிய விடயங்கள்.. சுயம் மறந்து புத்தகம் ஒன்றினுள் புதைந்திருந்தவள் அறிய வாய்ப்பில்லை என்பது பார்த்திபன் புரிதல்..!
அவன் புரிதல் பொய்யாகவில்லை… பல்லவன் நரேந்திரவர்மன் தன் காதலை மீட்க.. வடக்கே வாதாபிக்குப் பரஞ்சோதியுடன் சென்றிருந்த களத்தில் கவனம் வைத்து தன்னை தொலைத்திருந்தவள்.. பார்த்திபனை உணரவில்லை.
நிதிக்கு அவ்வப்போது மங்கை மடி சாயும் வழக்கம் உண்டு..! அப்போதெல்லாம் அனிச்சையாக.. அவள் கரம் தலை வருடச் செல்லும். தாய்மை..!
இங்கும் அது தான்..!    
வாட்டும் வருத்தமுடன் வந்தவனும் வஞ்சியவளின் வாசம் உணர்ந்திருக்கவில்லை.. அவன் அகம் தாயைத் தேடிட.. அவள் தாயாய் தாங்கிக் கொண்டாள்.  
தன் புறமும் தவறில்லை.. தாங்கிய அவள் புறமும் தவறில்லை.. விளக்கம் சொல்லி சங்கடம் விளைவிக்க விருப்பமில்லை பார்த்திபனுக்கு.. 
விட்டுவிட்டான்.. அவளிடம் சொல்லாது மட்டும் தான்..!  
அவள் விடைபெற்ற பின்பும்.. விட்டுச் சென்ற அதிர்வுகளின் சுவடுகள் இவன் அகத் தளங்களில்..!
அவளோடான மணித்துளிகள் அள்ளித் தெளித்த ஆறுதல் அவன் ஒவ்வொரு அணுவிலும்..! 
காலச்சக்கரம் நிகழ்காலம் வந்து நின்றது.
“ராஜா!!!!!!!!!!!” அவள் வாய்மொழியில் இவன் செவிப்பறை வாய்விட்டு அலற…
“ப்ச்…. என்னடி……” என அவன் நங்கையின் முகம் நோக்கினான்.
“என்னவா?? மணி இப்பவே ஒன்பது… நாம பத்து மணிக்கு அங்க இருக்கணும்… நீ என்ன பண்ணிட்டு இருக்க…” இவள் எடுத்துச் சொல்ல..
“என்ன பண்ணிட்டு இருக்கேன்…..” என்றவன் விரல்கள் அவள் வதனத்தில் விளையாடிப்பார்க்க….
“தள்ளு… சரியில்ல நீ… நான் கிளம்புறேன்… நீ என்னவோ பண்ணு.. உன் பாரு கேட்டா நீயே சமாளிச்சுக்கோ….” விலகிட முயல… விட்டுவிடுவானா அவன்???
“நாம எங்கயும் போக வேணாம்… இங்கயே.. இப்படியே.. இருந்திடலாம் மங்கம்மா…” அவன் பதத்தில் நின்ற பிடிவாதத்தில் 
“ராஜா… எல்லாத்திலயும் பிடிவாதம் பிடிக்கிறத நிறுத்து… இப்போ கோவிலுக்கு வரதுல உனக்கென்ன பிரச்சனை….” இவள் இப்படி பேசிட… பார்த்திபன் இதழ்களில் கசப்பாய் ஓர் புன்னகை..!
“பிடிவாதமா…. எனக்கா….” என்றவன் “பத்து நிமிஷம் கொடு… எல்லாத்துக்கும் தயாரா வரேன்….” என்றுவிட்டு எழுந்து அறை நோக்கிச் செல்ல… வழியில் வந்து நின்றவள்
“உனக்கு அங்க போறதுல ஏதோ பிரச்சனை இருக்கு… அது சொன்னா தானே எனக்குத் தெரியும்..” சமாதானம் செய்திட
“நீ தெரிஞ்சுக்கவே வேணாம்… வழி விடு..” இறங்கிவர மறுத்து நின்றான்.
“முடியாது… நீ சொல்லாம நான் நகர மாட்டேன்…” பிடிவாதம் இவள் பக்கம்.
“யாழ் நகரு… நான் கிளம்புறேன்…”
மங்கையவள் மாட்டேன் என நிற்க.. பூங்கொத்தை போல் ஏந்தி வந்து சோபாவில் போட்டு விட்டு நகர்ந்தான்.
“ஷ்ஷ்…. ஆ… போடா!!…” 
“டா போட்ட… பிச்சுடுவேன்…” மிரட்டல் மொழி மன்னவனிடமிருந்து.
இன்றும் நிச்சயம் அந்த வீட்டு மனிதர்களிடமிருந்து தாக்குதல் வரும்.. அதைத் தாங்கிக் கொள்ள.. தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தான்.
உடையவள் ஊடல் கொண்டு அமர்ந்திருக்க..
“யாழ்… எப்படியும் நிறைய பிரச்சனை அங்க காத்திருக்கும்… நீ இங்கயே அதுக்கு பூஜை போட்டு ஆரம்பிச்சு வைக்காத.. கிளம்பு ப்ளீஸ்…!” 
‘ப்ளீஸா…….. அதுவும் அவள் ராஜாவிடமிருந்தா??’ அதிர்ந்து போய் அவனைப் பார்க்க.. அவன் ராஜாவாகத் தான் இருந்தான்.. புறத்தில்..! அவன் அவனாக இல்லை அகத்தில்..!
அவன் அகம் புறமெல்லாம் அவள் அதிகாரம் தானே..! அறிந்து கொண்டதில் விந்தையில்லை..!
ஆனால் அதன் பின்னான காரணம்?? அவள் அறியாள். அமைதியாக அவனுடன் கோவிலுக்குச் செல்ல… அங்கே இவன் உடன்பிறப்பும் பெற்றவர்களும் காத்திருந்தனர்.
“சாரி அத்த… நேரமாகிடுச்சு…” இவள் பார்வதியிடம் செல்ல.. இவள் துணைவன் பல்சருக்குத் துணையாய் நின்று கொண்டான்.
“பரவாயில்ல யாழ்… நாங்களும் இப்போ தான் வந்தோம்” என்றவர் “அவன் ஏன் அங்கயே நிக்கிறான்.. ராஜி அண்ணனை போய் கூட்டிட்டு வா..” என்றார்.
ராஜியும் அறிவாளே அவள் அண்ணன் வர மறுத்து அங்கு நிற்பதற்கான  காரணம். கலங்கிய விழிகளுடன் அன்று அவன் விடைபெற்ற கோலம் அழியாத வலியாய் இன்னமும் அவளிடம்.
யார் யாரையோ.. அத்து மீறி அவர்கள் வாழ்வில் நுழைத்து.. விளையாட வைக்கிறது விதி என்று தான் தோன்றிற்று.
பார்த்திபனிடம் சென்றவள் அவன் கைப் பிடித்து.. “ண்ணா… வாண்ணா.. அவங்க யாரும் வரலை இன்னிக்கு..” என்று சொல்ல.. 
பார்வதியைப் பார்த்த மைந்தனுக்கு மறுக்க மனமில்லை… தங்கையுடன் உள்ளே நுழைந்தான்.
பெரியசாமி ஓரிடத்தில் அமர்ந்திருக்க… அமைதியாக அவரருகில் அமர்ந்து கொண்டான். தந்தையின் பார்வை தனையனைத் தழுவி.. நெஞ்சகத்துள் நிறைத்துக் கொண்டது. 
இருவருக்கும் இடையில் மௌனங்கள்……. 
அந்த மௌனங்களின் மொழி ஒன்று தான்…! அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தல்..!
எல்லாம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்தது பார்த்திபனின் எதிர்பார்ப்பிற்கு எதிர்ப்பதமாக…ஆனாலும் உள்ளத்து உணர்வு வேறொன்றை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.
யாழ் மங்கை பொங்கல் வைத்ததும் சாமிக்கு படைக்கவென எடுத்து வர… பார்த்திபனை ஏமாற்றாமல் வந்து சேர்ந்தனர் அவன் சித்தப்பாக்கள்.
ராஜி ஓடிச்சென்று தன் அண்ணன் அருகில் நின்று கொள்ள… யாழ் மங்கை பார்த்திபனைப் பார்த்தாள்.  
பார்த்திபன் பாவனையின் பொருள் புலப்பட மறுக்கிறது அவளுக்கு..!
ஆனால் பார்வதிக்கு புரிந்தது… வந்தவர்களின் நோக்கம் நிச்சயம் வாதம் செய்யத்தான் என்று.   
“என்ன முத்து….” என்ற சாமியும் அவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை. ராஜா விடயத்தில் அவர்கள் நுழைய மாட்டார்கள் என்றெண்ணி அவர்களை அழைக்கவும் இல்லை.
“நீ பண்றது சரியில்லண்ணா………” எடுத்ததும் எதிர்ப்பை காட்ட..
“நான் என்ன பண்றேன்… சரியில்லாம போக..”
“இவங்களை எதுக்குண்ணா நம்ம குலசாமி கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க…” மற்றொரு தம்பி ஆறுச்சாமி.
“புதுசா கல்யாணம் ஆனவங்க குலசாமிக்கு பொங்க வைக்கிறது நம்ம வழக்கம் தானே….” விரும்பாவிடினும் விளக்கம் கொடுத்தார்.
“இதெல்லாம் தெரிஞ்சவங்களுக்கு அவனுக்கும் நம்ம குலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சிருக்கும் தானே……”  
“அவன் என்னோட புள்ள….” அதில் அத்தனை அழுத்தம்.
பார்த்திபன் இதழ் ஓரம் துளிர்த்தது புன்னகை…..! அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்.
‘அப்பா!!!!!!’ 
‘அப்படிக் கூப்பிடாதடா……..’ 
உயிர் கொடுக்கவில்லை அவனுக்கு தந்தையாக..! ஆனால்…. உணர்வைக் கொடுத்திருக்கிறாரே..!
கொடுத்தவரே கொன்று போட்ட தருணம் அது..!
இழைக்காத தவறு ஒன்றிற்காக இவன் தண்டனை பெற்ற தருணம் அது..!
உயிரும் உணர்வும் ஒரு கணம் உறைந்து நின்ற தருணம் அது..!
பிடிக்காத குழந்தையாகவே நான் இருந்துவிட்டு போகிறேன் என இந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்த தருணம் அது..!    
பெரியசாமிக்கு முதல் குழந்தை அவரது கடைக்குட்டித் தங்கை.. 
தந்தையின் இடத்தை நிரப்ப தமையன் ஒருவனால் மட்டுமே முடியும்..! ஒவ்வொரு தங்கைக்குமான தவப்பயனே தமையன்.. இன்னுமொரு தந்தையாக..!
அப்படித்தான் பெரியசாமியும் அவர் தங்கையும்..! இருவருக்குமிடையே எல்லை இல்லா பாசம்..! அந்தப் பாசம் தான் பார்த்திபனுக்கும் அவன் தந்தைக்கும் இடையே எல்லை வகுத்துக் கொடுத்தது.
‘ப்பா…. நான் ஏதும் பண்ணல ப்பா.. நம்புங்க ப்பா..’ 
‘ப்பா!!!!!!!’ 
அன்று அவன் மெய் தாங்கிய அடிகளைக் காட்டிலும் அகம் தாக்கிய அடிகள் தான் அதிகம்..!
மாடத்தில் கால் பந்தை வைத்து இவன் விளையாடிக் கொண்டிருக்க.. அங்கு வந்து காய வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டு  படி இறங்கிய இவன் சின்னத்தையின் காலில் பந்து விழ.. தடுமாறி படிகளில் உருண்டுவிட்டார்.  
பொறுக்க முடியா வலியில் வேண்டுமென்றே தன்னை விழ வைத்துவிட்டான் என வெறுப்பைக் கொட்டி விட்டார்.
தன் அண்ணனின் வாரிசாக எவனோ ஒருவனா…? ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரால். அது வெறுப்பாக அவன் மீது.
வலியில் துடித்த தங்கையைக் கண்ட பெரியாசமிக்கு கட்டுப்பாடு அவர் வசமில்லை.. இரண்டு அடிகளை அவனுக்கு வழங்கியிருந்தார்.
முதல் குழந்தைக்கு நியாயம் செய்து அடுத்த குழந்தைக்கு அநியாயம் செய்த தருணம் அது..!
கீழே விழுந்து கால் உடைந்து கிடந்த அவன் அத்தைக்கு மருத்துவமனை.. பார்த்திபனுக்கு.. விடுதி வாசம் தண்டனையாக..! 
ஒரு வகையில் என்ன எல்லா வகையிலும் அது விடுதலை வாசம் தான் அவனுக்கு..! 
ஆனால் அம்மா…..! அவள் அன்பு..! அவள் அணைப்பு..! அன்று அவன் அகத்தின் பக்கங்களில் எழுதப்பட்ட ஏக்கம் இன்று வரை அழியாமல்…!
 
பிஞ்சுப் பருவ மனம்.. மருத நிலத்தின் மற்றொரு வடிவம்.. விதைத்ததை விளைச்சலாக்கிக் கொடுக்கக் காத்திருக்கும்..!
பார்த்திபன் மனதும் அப்படித்தானே..! அவனை ஒதுக்க நினைத்தார்கள்.. அவன் ஒதுங்கி… ஒதுக்கி வைத்துவிட்டான் அவ்வளவே.
 
“ண்ணா… அவனை நீ புள்ளையா ஏத்துக்கோ… என்னமோ பண்ணு… அது உன் தனிப்பட்ட விஷயம்… ஆனா இந்த குலம்.. கோவில்.. இது பொது… எங்க யாருக்கும் இவன் இங்க வரதில உடன்பாடு இல்லை” 
இதுவரை ஏனுங்கண்ணா.. என்னங்கண்ணா.. சரிங்கண்ணா.. பேசி வந்த உடன் பிறப்புகளின் இந்தப் பேச்சு.. அவரை அசைத்துத் தான் பார்த்தது.
“டேய்!! உன்னை அன்னிக்கே அடிச்சு துரத்திருக்கணும்… பாவம் பார்த்து விட்டது தப்பா போச்சு… போ போய் உங்க அப்பன் குலத்துல சேர்ந்துக்கோ…” என்றதும்
“முத்து!!!!!” என்ற பெரியசாமியின் பெருங்குரலில் அவர் சற்றே அதிர..
“பார்த்து பேசு…. வார்த்தையா விட்டுட்டா வாங்க முடியாது…” எனச் சொல்ல
“நாங்க சரியா தான் அண்ணா பேசுறோம்.. நீங்க தான் சரியில்ல…” ஆறுச்சாமி சட்டென சொல்லிட.. அவரிடம் இருந்து அதை எதிர்பார்க்கவில்லை சாமி.
யாழ் மங்கைக்கு தன் மன்னவன் இங்கு வருவதை தவிர்த்த காரணம் தெளிவாகி.. தற்போது தவிப்பு தேங்கி நின்றது. 
உள்ளம் கலங்கிய நிலையில்.. உடன் பிறந்தவர்களின் உண்மை நிறம் உரைத்தது பெரியசாமிக்கு. 
ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவர் அங்கிருந்த மற்ற உறவுகளையும் பார்த்து… “அவன் என் புள்ள… அவனுக்கு இங்க இடம் இல்லைன்னா எனக்கும் இல்லன்னு அர்த்தம்… அவனுக்கு இல்லாத உரிமை எனக்கும் வேண்டாம்..” என கும்பிட்டு தன் துணைவியை நோக்கி தலையசைத்தார்.
இத்தனை காலம்… எது நடக்கக் கூடாதென்று அன்னையும் மைந்தனும் அமைதி காத்தனரோ அது நடந்தேறியது… சிறப்பாக..!
தங்களால் அந்த உடன் பிறப்புகளுக்குள் உடைப்பு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர் பார்வதியும் பார்த்திபனும்.. இதுவரை இவர்கள் அனுபவித்த அவமானங்கள்… ஏச்சுகள்.. பேச்சுகள்.. பெரியசாமிக்கு தெரிய அனுமதித்ததில்லை… 
காரணம்…! அவர் அவர்கள் பால் கொண்டிருந்த பேரன்பு… 
அண்ணனின் பேச்சில் அதிர்ந்து போய் ஆறுச்சாமியும் முத்துச்சாமியும் பார்த்திருக்க… மற்ற உறவுகள் பெரியசாமியை சமாதானம் செய்ய முயன்றனர்.
பார்த்திபன் அங்கிருந்து அகன்றிட… பார்வதி “யாழ்… நீ அவனைப் பாரு… நாங்க எல்லாம் எடுத்து வெச்சிட்டு வரோம்..” என்றார் விழிகளைத் துடைத்தபடி.
மங்கையை அழைத்து வீடு வந்தவன்… “யாழ் ஸ்ட்ராங்கா ஒரு காபி…” என்றிட.. மின்னல் வேகம் அவளிடம்.
காபியுடன் வந்து நிற்க… இதமாய் இதழ் விரித்து வாங்கிக் கொண்டான்.. விரிந்து நின்ற இவள் விழிகள் துளிர்க்க… 
“ஹேய்…. மங்கம்மா!!!!!” என்றவன் அவளை அருகே அமர்த்த… 
“சா… சாரி…” 
தன்னால் தான் தன்னவன் காயம் ஏற்று நிற்கிறானோ என்ற தத்தையின் தவிப்பு தலைவனுக்கு புரியும் தானே…!
“ராஜா ஹாப்பியா தான் இருக்கான்… அவன் ராணிக்கு என்னாச்சு…” நெற்றி முட்டி இவன் கேட்டு வைக்க… விழியெடுக்காமல் வேந்தனைப் பார்த்தாள் அவள்.
“மை டியர் மங்கம்மா… கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.. அதைவிட்டு இப்படி பார்த்து வெச்சா.. ம்ம்..?”
இப்போது இவளுக்குள் வந்து அமர்கிறது குழப்பம்… இவளவனிடம் கோவில் பேச்சை எடுக்கவா.. வேண்டாவா என. ஏனெனில் இவன் தெளிவாய் அதைத் தவிர்க்கிறானே..! 
பாவையை படித்த பார்த்திபன் “யாழ்… அங்க நடந்த விஷயத்துல நான் கொஞ்சம் கூட ஹர்ட் ஆகல… நா என்ன எதிர்பார்த்தனோ அது தான் நடந்திருக்கு.. சோ நோ டிசப்பாயின்மென்ட்… நோ ஹர்ட்டிங்..”
விளக்கம் சொல்கிறேன் என விழிக்க வைத்தான் அவளை.. அவன் உறவுகள் குறித்து கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்ற நிலை தான் இவளுக்கு. தெரிய வைக்க வேண்டியவன் சொல்வதையும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.
“ஏன்டி இப்படி முழிக்குற….” இவன் கேட்கும் போதே உள்ளே நுழைந்தவர்களைக் கண்டு அவள் அட்டென்ஷனில் நிற்க.. அவனும் சிறு அதிர்வோடு எழுந்தான்.
கனவு நனவாகும்…….

Advertisement