Advertisement

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி !
பார்த்திபன் கனா 7
துளிர்…! ராஜ பார்த்திபனின் பேரன்பில் துளிர்த்து.. தழைத்து.. செழித்து.. சிறந்து நிற்கும் நாற்றுப் பண்ணை.
பொறியியல் முடித்ததும்… அவன் நட்புக்கள் மென்பொருள்… மேலாண்மை என சென்றுவிட இவன் நாட்டம் நாற்றுபண்ணை மீது.
அக்ரி சீட் கிடைக்க வேண்டுமென அதீத முயற்சி செய்தும்.. கிடைக்கவில்லை.. தனியார் கல்லூரிகள் பல லட்சம் கேட்க… இவனுக்கு மனமில்லை.. கொடுக்க பணமுமில்லை. பார்வதி தேவி எடுத்து சொல்லியும் அந்த வீட்டின் பணம் தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டான். பொறியியல் கட் ஆப் அதிகமாக இருக்க… மெரிட் சீட் கிடைத்தது.
எலக்ட்ரானிக்ஸ் மேல் எப்போதும் ஒரு காதல்..! எடுத்து படித்து முடித்து காதல் தீர அவன் துறையில் சில காலம் வேலை பார்த்தான்.
பின்.. பழனியிலுள்ள பள்ளித் தோழன் பரத்துடன் கை கோத்து சண்முகநதிக் கரையோரம் துளிருக்கு உயிர் கொடுத்தான். பரத்தை காவல் துறை தன் கடமையைச் செய்ய அழைக்க… அவன் சென்று விட இவன் மட்டுமே!
அதிகாலை தொடங்கி அந்தி சாயும் நேரம் வரை துளிர் விடும் தளிர்களுடன் தான் இவன் தவப் பொழுதுகள்.
வெட்சி.. நித்தியகல்யாணி.. பவளமல்லி.. செங்கோடுவேரி.. கருவிளம்.. கூவிரம்.. செருந்தி.. செண்பகம்.. கொன்றை.. தளவம்.. மல்லிகை.. முல்லை.. பிச்சி.. நறுமணம் பரப்பும் நந்தவனம் ஒரு பக்கம்..
கற்பூரவள்ளி.. ரணகள்ளி.. சித்தரத்தை.. இஞ்சி.. கரிசலாங்கண்ணி.. தும்பை.. துளசி.. தூதுவளை.. திப்பிலி.. நன்னாரி.. சஞ்சீவி.. வில்வம் என மூலிகை ஒரு பக்கம்..
கொய்யா… மா.. பலா.. நெல்லி.. ஆத்தி.. அரசு.. ஆலம்.. வேம்பு.. தேக்கு.. புங்கன்.. மகோகனி.. குல்முகர்.. நாவல் மரக்கன்றுகள் மறுபக்கம் என வளர்த்து எழில் சேர்த்து இயற்கையை கொஞ்ச ஆரம்பித்தான்.
இம்போர்ட்… எக்ஸ்போர்ட்… என்று ஆல் ரவுண்டராக மாறினான். தளிர்களின் சுவாசமே… இவன் சங்கீதம்.. சந்தோஷம்…! ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை வைத்திருக்கும் அவனுடன் பேச..!
உதட்டில் உறைந்த புன்னகையுடன் பூமியில் பூபாளம் இசைக்க வந்த தளிர்களை பார்வையிட்டு வந்தவன் அருகில் வந்து நின்றான் அகில்.
“அண்ணா…. இன்னும் நார் லோட் வந்து சேரல… நான் கூப்பிட்டாலும் அவங்க எடுக்க மாட்டேங்குறாங்க…”
“இரண்டு நாளைக்கு முன்னாடி வர வேண்டியது டா… இன்னும் வரலைன்னு இப்ப வந்து சொல்ற….”
“நீங்க இன்னைக்கு தானே ஊர்ல இருந்து வந்தீங்க………..” இவன் இழுக்க.. சுறுசுறுவென ஏறியது கோவம் அவனுள்.
“டேய்!! அப்படியே ஒன்னு போட்டேன்னு வெய்… போன் இருக்கில்ல… கூப்பிட்டு சொல்ல வேண்டியது தானே..! ஆர்டர் எடுக்கிறது மட்டும் பெருசில்ல… சொன்னா சொன்ன நாள்ல அவங்களுக்கு டெலிவரி கொடுக்கணும்” வசைகள் பல பாடிவிட்டு அழைப்பு விடுத்தான்.
அகில் செடிகளுக்கு தண்ணீர் விடச் செல்ல…
“அதை தொட்ட… பிச்சிடுவேன்… போதும் நீ வேலை செஞ்சு கிழிச்சது.. போய் ஓரமா உக்காரு….” எனக் கத்த… அகில் அரெஸ்டட்.
அகில் கடமை தவறியதற்கான தண்டனை… இவன் சொல்லும் வரை எந்த வேலையும் செய்யாமல் அதே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
‘பாஸ்… சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..??’ அகிலின் அக அலறல்.
லோட் வந்து சேர வழி வகை செய்து வந்தவன்.. அகிலை நோக்கி அனல் காக்கும் பார்வையை அனுப்பி விட்டு.. தண்ணீர் விட ஆரம்பித்தான்.
“அண்ணா…. ப்ளீஸ்னா… இனிமே மறக்க மாட்டேன்” கெஞ்சலுக்கெல்லாம் கொஞ்சமும் இளகவில்லை அவன்.
பண்ணையின் முன் பார்ச்சுனர் வந்து நிற்க… யோசனையுடன் வாசல் பக்கம் வந்தான் பார்த்திபன்… அவனுடன் அகிலும்.
“அண்ணா…. இவன் எங்க இங்க வரான்… இவன் கால் வெச்ச இடம் விளங்காதுன்னு ஊருக்குள்ள பேச்சே இருக்கு… போய் நிப்பாட்டுங்க.. உள்ளகிள்ள வந்து தொலைச்சிடப் போறான்” அவன் அவசரப்படுத்த
“டேய்!!! அவன் ஒன்றியத் தலைவர்… ரோட்ல நிக்க வெச்சா பேச முடியும்… வரட்டும் விடு..” நிதானம் அவனிடம்.
நிச்சயம் அகில் பேச்சைக் கேட்டிருக்கலாம் என நினைத்து நினைத்து மறுகுவான்…!
“தம்பி வணக்கம்…….” உள்ளே அடியெடுத்து வைத்தான் சுந்தரம்.
பதிலுக்கு வணக்கம் வைத்தவன் வந்த வேலை என்ன என நேரடியாகக் கேட்டு விட
“தம்பி… நேரடியா பேசுறது எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு…” என்பதைத் தொடர்ந்து அவன் சொன்னதில் தலைவனுள் தாறுமாறாக ஊற்றெடுக்கிறது சினம்… பெரும்பாடு பட்டு பார்த்திபன் அதை உறையச் செய்ய..
“உங்க எதிர்பார்ப்பு என்னன்னு சொன்னா அடுத்து பேச வசதியா இருக்கும்” என்றான் அவன்.
“என்னோட எதிர்பார்ப்பு இருக்கட்டும்… உங்க எதிர்பார்ப்பு எப்பவுமே நடக்காது நீங்க போகலாம்” என்றுவிட்டு அவன் அங்கிருந்து அகல.. சுந்தரத்தின் இதழ்களில் ஏறுகிறது ஏளனப் புன்னகை.
“அண்ணா… அவன் ஆள் கொஞ்சம் சரியில்லாதவன்.. எதுவும் செய்வான்.. நாம என்னண்ணா பண்றது???” அகில் அவனிடம் கேட்க..
“தெரியல டா.. எதாவது பண்ணுவோம்…” என்றவனுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. வந்து போனவன் அரசியல் வாதி மட்டுமல்ல.. அதர்மவாதியும் கூட.. கணித்தே காய் நகர்த்த வேண்டும்.
அழைப்பு வர.. அதை ஏற்றவன்.. “என்ன… எப்போ???” அழைப்பை துண்டித்து பல்சரில் பறந்தான்.
துளிரிலிருந்து ஆயக்குடி வந்து சேர அரை மணி நேரம் எடுக்கும்… பார்த்திபன் வந்து சேர பத்து மணித்துளிகள் மட்டுமே..!
வேகம்…. வேகம்… வேகம்.. அத்தனை வேகம்.. அசுர வேகம் எனினும் கட்டுப்பாடு அவன் கைவசம்..!
யாழகத்தை அடைந்த போது அதிர்ச்சியை மீட்டிக் கொண்டிருந்தது அவ்வில்லம். அவர்களது வீடு முக்கிய சாலையை ஒட்டி என்பதால்… கலவரம் காட்சியாக மாறியிருந்தது அவ்விட மக்களுக்கு.
இத்தனை வருடங்களில் இது போன்ற அடியாட்கள்.. மிரட்டல்கள் எல்லாம் பார்த்திபன் பார்த்ததில்லை… இப்போது இப்படி என்றால் விடயம் பெரிதோ..?? பல்சரை பார்க் செய்துவிட்டு உள்ளே வந்தான்.
பார்த்திபனைப் பார்த்ததும் அங்கிருந்த நானும் ரௌடி தான் கூட்டம் சற்றே நெளிந்தது.. காரணம் ராஜாவின் பார்வை… பாவனை.. தோற்றம்… ராஜ தோரணை தான்… முகம் அதில் வசீகரம் வாசம் செய்தாலும்.. பார்வையின் தீட்சண்யம் எதிராளியைத் திணற வைக்கும்..!
“என்ன பிரச்சனை??” என்றான் பொதுவாக.
யாழ் மங்கை மறுமொழி தரும் முன் “நீ யாரு???” என்றான் வந்திருந்தவர்களில் ஒருவன்.
பார்த்திபனின் பார்வை கூட பதில் தராது, மொழியில் மரியாதை இல்லையெனில்…!
யாழ் மங்கையைப் பார்த்தான். கையில் ஏந்திய அரிவாளுடன் வீர மங்கையாகத் தான் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்…!
“கீழ போடு முதல்ல….” அமைதியாக அவளிடம் சொல்ல..
“அவனுங்க என்ன….” முறையிட முயன்றவளிடம் “அத கீழ போட சொன்னேன்…” என்றான் கட்டளையாக.. காரிகை கட்டளைக்கு கட்டுப்பட்டுத் தானே ஆக வேண்டும்…!
“நிதியைக் கூட்டிட்டு உள்ள போ…..”
“நிதி உள்ள போ…” என்றவள் அவளை அனுப்பி விட்டு அவனுடனே நின்றாள்.
“யாரு நீங்க?? என்ன பிரச்சனை?? ரௌடிசம் பண்றீங்களா?? அஞ்சாறு பேரோட கிளம்பி வந்தா நாங்க… பார்த்துட்டு சும்மா இருந்திடுவோமா??? ஒருத்தன் ஒழுங்கா இங்க இருந்து போக மாட்டீங்க…..” இவன் நிதர்சனம் பேச.. அதை மிராட்டலாக எண்ணியவர்கள்
“இங்க பாரு… அவ என்ன பண்ணினான்னு தெரியுமா???” என்கவும்
“ஏய்!! அவ இவன்னு பேசுன… அடுத்து பேச வாய் இருக்காது….” வேந்தன் வதனத்தில் ரௌத்திரத்தின் தடம் தெரிய… பேசியவன் பின் வாங்கினான்.
“என்னாங்கடா பிரச்சனை????” என்றான் மறுபடியும்..
“தம்பி பிரச்சனை நாங்க ஆர்மபிக்கல… இந்தப் பொண்ணு தான் ஆரம்பிச்சது…. வேலைக்கு போனமா வந்தமான்னு இல்லாம… தேவையில்லாத விஷயத்துல தலையிட்டிருக்கு… இப்போ கம்பனிய சீல் வைக்கிற நிலைமை…” நியாயம் பேசினான் ஒருவன்.
ராஜாவின் ஊகம் உறுதியானது….!
“இருக்கட்டும்… அப்படியே இருந்தாலும் இது இவங்களுக்கும் ஓனருக்கும் உள்ள பிரச்சனை… இதுல நீங்க யாரு??? இப்படித்தான் கட்டையத் தூக்கிட்டு வந்து நிப்பீங்களா?? இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்க இருந்து போல…. வழியனுப்பி வைக்க.. வர வேண்டியவங்க வருவாங்க..” என்றவன் வாசல் படியில் அமர்ந்துவிட..
“இங்க பாரு பொண்ணே… கொடுத்த கம்பளைண்ட் நீயே வாபஸ் வாங்கிரு.. அதான் உனக்கு நல்லது…”
“முடியாது…. அந்த ஆளை என்ன பண்ணனுமோ பண்ணிக்க சொல்லு… நா யாருக்கும் எதுக்கும் பயப்பட மாட்டேன்… போய் சொல்லு… இனிமே இந்த மாதிரி அடியாட்களை விட்டு மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம்னு… இல்ல விளைவுகள் வருத்தப்படுற மாதிரி இருக்கும்..”
வஞ்சிவள் வதனத்தில் அச்சத்தின் வாசமே துளியளவும் இல்லை… விழிகளின் தீர்க்கமும் திமிரான பேச்சும் தெளிவாய் உரைத்திட… ராஜாவிடம் ரசனையின் ராகம் வீர மங்கைக்காக..!
வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ராஜாவின் பார்வை கடிகாரத்தின் பக்கம் சென்று இவர்களின் பக்கம் திரும்ப… அங்கிருந்து அகன்றனர்.
வேடிக்கை பார்த்து நின்றவர்களும் அங்கிருந்து நகர.. வாயில் கதவை சாற்றிவிட்டு வந்தாள் யாழ். அவன் வழி விட்டால் தான் உள்ளே செல்ல முடியும்… ஆனால் அசையாமல் அமர்ந்திருந்தான்.
“நா போகணும்…”
“போ….” என்றுவிட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.
அவனும் உள்ளே வருவானென்று எதிர்பார்த்து நிற்க.. அப்படியே அமர்ந்திருந்தான். தான் அழைக்காமல் வர மாட்டான் என்பதை உணர்ந்தவள்
“உள்ள வா ராஜா…” என்றாள்.
அமைதியாக எழுந்து உள்ளே வந்தான். அவன் அமைதி அவளுக்கு அச்சத்தை அறிமுகம் செய்ய… அவன் முகம் பார்த்து நின்றாள்.
அதற்குள் கல்லூரி செல்லவென கிளம்பி வந்த நிதி ராஜாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு போக எத்தனிக்க…. யாழ் தங்கையையே பார்த்திருந்தாள்.
“நிதி… அக்காகிட்ட சொல்லிட்டுப் போ…” என்றான் பார்த்திபன்.
அவன் மட்டுமல்ல… அனைவருமே சரியாக இருக்க வேண்டும் அவளிடம்… அவனுக்கு..!
“அவ மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டா செய்யறா..??”
“எப்பவும் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ய முடியாது நிதி… சில விஷயம் நாமளா புரிஞ்சுக்கணும்…”
இது தான் பார்த்திபன்… அவன் புரிதல்… மங்கைக்குள் மென்சாரல் மழையும் மெல்லிசையும்…!
நிதிக்கு புரிந்துகொள்ளப் பிரியமில்லை… இருப்பினும் ராஜாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து யாழிடம் விடைபெற்றுச் சென்றாள்.
யாழ் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க… பருகிவிட்டு அமர்ந்திருந்தான்.. அவன் கேட்பான் என இவள் அமர்ந்திருக்க.. அவள் சொல்லட்டும் என இவன் காத்திருந்தான். அவளாகவே ஆரம்பித்தாள்.
“நான் வேலை பார்த்த மினரல் வாட்டர் கம்பனில.. ப்ராப்பர் கிளீனிங் ப்ராசஸ் இல்ல.. டெஸ்ட்க்கு எந்தவிதமான கிட்டும் இல்ல… ரூல்ஸ் மீறி அத்தனை போர் போட்டிருக்காங்க… இன்ஸ்பெக்ஷன் வரப்போ பணத்தை கொடுத்து சரி பண்ணிடுறாங்க.. அங்க இருக்கறவங்க கிட்ட கேட்டா… எல்லாம் அப்படித்தான் கண்டுக்காதன்னு சொல்றாங்க… ஆனா என்னால அப்படியே விட முடியல… குடிக்கிற தண்ணில லட்சம் லட்சமா அடிக்குறானுங்க..
அது போகட்டும் அந்த தண்ணிய குடிச்சா எவ்ளோ ஆபத்து தெரியுமா..? அதான் கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன்.. கம்பனிக்கு சீல் வெச்சு.. அவனோட லைசென்ஸ் கேன்சல் பண்ணிருவாங்க.. அதுக்கு தான் ஆள் அனுப்பி மிரட்டுறான்.. நீயே சொல்லு நா பண்ணினதுல என்ன தப்பு…”
“தப்பு தான்…. நிச்சயம் தப்பு தான்….” அழுத்தமாக அவன் சொல்ல… அதிர்ந்து அவனைப் பார்த்தாள் யாழ்.
“என்ன பார்க்கிற.. முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்க.. தைரியம் இருக்கணும் ஆனா அசட்டு தைரியம் இருக்கக் கூடாது.. உங்கிட்ட அது தான் இருக்கு.. அதான் இப்படி வம்பை வாங்கி வெச்சிருக்க…”
“அதுக்காக அதை அப்படியே விட சொல்றியா.. என்னால அப்படி விட முடியாது!!!”
“கண்டிப்பா அப்படியே விட சொல்ல மாட்டேன்… ஆனா இதை வேற விதமா ஹான்டில் பண்ணிருக்கலாம்… பண்ணிருக்கணும். அவனுக்கு எத்தனை பிசினஸ் இருக்கு தெரியுமா?? இந்த ஏரியால அவன் பெரிய ஆளு.. நம்ம அவனை ப்ளைண்டா எதிர்த்து நிக்க முடியாது…”
“எப்ப இருந்து அவனுக்கு புகழ் பாட ஆரம்பிச்ச…” அவள் பதம் பார்த்திபனை உரசிப் பார்க்க..
“பல்லை உடைச்சிடுவேன்.. இன்னும் இதோட விளைவுகள் தெரியாம பேசிட்டு இருக்க யாழ்……”
அவன் உதிர்க்கும் யாழ் எப்போதும் யாழிசை மீட்டும் அவள் அகத்தினுள்…! ஆனால் அடிக்கடி அழைக்க மாட்டான்.
வாயில் கதவின் அழைப்பு மணி ஒலிக்க… எழுந்து சென்று பார்த்தாள்.. வீட்டின் உரிமையாளர் நின்றிருந்தார்.
ராஜா சொன்ன போது புரியா பல விடயங்கள் இப்போது புரிதல் கொடுத்தன.  இன்னும் இரு நாள்களில் வீட்டை ஒப்படைக்கச் சொல்லிவிட்டு நிற்காமல் நகர்ந்துவிட்டார் அவர்.
திகைத்துப் போய் வந்தமர்ந்தாள் யாழ்.. சற்று யோசித்து நிதானித்து செய்திருக்க வேண்டும்… காலம் கற்றுக் கொடுத்த பாடம்.  
தத்தையவள் தோற்றம் தலைவனிடம் ஏதோ மாற்றம் செய்ய…
“சரி விடு சமாளிச்சுக்கலாம்… எங்க ஏரியால விசாரிச்சு சொல்றேன்…” சமாதானம் செய்தும் தெளிவில்லை அவளிடத்து.
“மை டியர் மங்கம்மா… நான் பார்த்துக்கிறேன்… நீ ப்ரியா இரு.. அப்புறம் உனக்கு வேலையும் பார்த்து வெச்சிட்டேன்… நாளைக்கு ஜாயின் பண்ணனும்.. உனக்கு ஒகே வா..??” முளைத்த மென்முறுவலுடன் கேட்க..  
வேலை என்றதும் வேகமாக நிமிர்ந்தவள் அவன் முகம் பார்த்து நன்றி நவில..
“என்ன வேலை… எவ்ளோ சம்பளம் எதுவும் கேக்கமாட்டியா… நான் உன்னை கொண்டு போய்….”
“நான் உன்னை நம்புறேன்…..” நங்கையவள் குறுக்கிட்டுச் சொல்ல..
‘நானும் தான்டி நம்பினேன் உன்னை!!!!! ஆனா நீ…?’ அவன் உதடுகள் உதிர்க்கவில்லை… ஆனால் அவன் விழிகள்..?? அவன் பார்வை.. பாவைக்குத் தவிப்பை தந்திட..
“பார்த்தி…. அது…”
“எனக்கு பசிக்குது… காலைலயும் சாப்பிடல” விளக்கம் கொடுக்க விடவில்லை அவன்.
அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு பரிமாற வர.. வேண்டாம் என மறுத்துவிட்டான். ஏனென்று கேட்டாலும் மறுவார்த்தை வராது.. அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
சாப்பிட்டு முடித்தவன் “கிளம்பு” என வந்து நின்றான்.
“எங்க” எதார்த்தமாக கேட்க..
“அவசியம் சொல்லனுமா..??” என்று கேட்டான் இவன்.
“நீ ஏன் இப்படி இருக்க….”
“எப்படி இருக்கேன்…???”
“உன்னைப் புரிஞ்சுக்க முடியலை…”
“அகராதி ஒன்னு போட்டுத் தரவா..???” நக்கல் நவரசத்துடன்.
“டேய்!!!!!!”
“என்னடி……??”
“நீ இங்க என்ன பண்ற…?”
“இப்போவாவது கேக்கனும்னு தோணிச்சே..!”
“ஆனா உனக்கு இன்னும் சொல்லனும்னு தோணலை அப்படித் தானே..??”
ஆம் என்பதாய் தலையசைத்து அங்கு கிடந்த அவளது அலைபேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.
“ஒருத்தங்களோட போன்… அவங்க பர்சனல் டைரி மாதிரி..!” அதை பார்க்காதே என இவள் உள்ளுறை உவமம் வைத்து உரைக்க..
“அப்படியா… அப்போ உன்னோட டைரிய நான் படிக்கணும்… நெறைய விஷயம் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு..!!”
இப்படிச் சொல்பவனிடம் இவள் என்ன சொல்ல…..
“உன்னோட போன் தா..” என்றாள்.
“சாரி… என்னோட டைரிய அடுத்தவங்க படிக்கிறத நான் விரும்ப மாட்டேன்…”
அடுத்தவங்க என்ற பதம் பாவையைத் தாக்கி விட… மௌனம் அவள் மொழியாகியது.
நிமிர்ந்து பார்த்தவன் அவள் நிலை கண்டு… பின் தன் சொல் உணர்ந்து.. சரி செய்திட முனைந்தான்.
“அந்த கேட்டகிரில எப்பயும் நீ வரமாட்ட… இனியொரு முறை இதை நா சொல்லவும் மாட்டேன். இந்தா… படிச்சு… பார்த்திபனைக் கொஞ்சம் புரிஞ்சுக்க…” என அவளிடம் நீட்டினான்.
அவன் வார்த்தைகள் அள்ளிக் கொடுத்த ஆனந்தத்தை அனுபவித்தாள்.. அரை மணித்துளி தான்… அவனை நோக்கிப் பறந்தது அவனுடைய நோக்கியா பேசிக் மாடல்.
அழகாய் அதை கேட்ச் செய்தவன்… “பார்த்திபனை படிக்கறது கொஞ்சம் கஷ்டம் யாழ்!!!!!!” என்றான் அவள் விழிகளில் தன் விழிகள் வைத்து.
பாவையவள் படித்திடுவாளா பார்த்திபனை…?????
கனவு நனவாகும்…….

Advertisement