Advertisement

                           

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 9

 

“ அக்கா…. இன்னும் கொஞ்சம்… இதை மட்டும் கஷ்டப்பட்டு குடிச்சிருங்க அதுக்கப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்… ” என கஞ்சியை வைத்துக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள் பைரவி..

அருகிலிருந்த கதிரோ பார்வையாலேயே நிலாவை எரித்துக் கொண்டிருந்தான்.. முன்தினம் முழுக்க வெயிலில் பழக்கமில்லாத வேலையைத் தோள் மேல் போட்டுக்கொண்டு செய்ததன் பலனாக இப்பொழுது எழுந்திருக்க முடியாமல் அசதியில் படுத்து இருக்கிறாள்..

காலை உணவு தண்ணீர் மட்டுமே.. எவ்வளவு முயன்றும் அவளை சாப்பிட வைக்க முடியவில்லை.. இதோ மதிய நேரத்திற்கு பைரவி வந்து விட்டாள்..

“ அக்கா என்னால தானே உங்களுக்கு இப்படி ஆச்சு.. நான் கூப்பிடாம இருந்தா நீங்க அண்ணா கூடவே இங்க இருந்திருப்பீங்க… ” என நிலாவிற்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்து வருத்தப்பட்ட பைரவியை வியப்புடன்  பார்த்திருந்தான் கதிர்.

“ ஹேய்… நீ என்ன பண்ணின உன்னால எல்லாம் எதுவும் இல்ல.. நான் கொஞ்சம் எக்ஸ்சைட்மென்ட்ல ஆட்டம் போட்டுட்டேன் அது தான் இப்படி. அதுவுமில்லாம.. சாயந்திர நேரமா பம்புசெட்டில் குளிச்சு இருக்க கூடாது அது  ஒத்துக்கல.. ” இதழ்களை பிரிக்க முடியாமல் பிரித்து பேசியவளைப் பார்த்து இவள் கண் கலங்க..

“ இப்ப என்ன அந்தக் கஞ்சிய குடிக்கணும்.. அவ்வளவுதானே ! கதிர் கொஞ்சம் தூக்கி உட்காரவையுங்க… ” எனக் கட்டளையிட்டவளை முறைத்தாலும் அவள் சொன்னதைச் செய்திருந்தான்..

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு கஞ்சியை புகட்ட சொல்லி அவனிடம் சொல்லிவிட்டு, “ நான் போய் கஷாயம் கொண்டு வரேன்.. ” என எழுந்து சென்றாள் பைரவி.

ஐயோ பைரவி… நீ இருக்கேன்னு தானே எந்திரிச்சு உட்கார்ந்தேன் இப்படி கதிர் கிட்ட தனியா மாட்டி விட்டுட்டியே என அவளைப் பாவமாக பார்த்து வைத்தவளை..

அங்க என்ன பார்வை.. ம்ம்ம்.. என்றபடி கஞ்சியை எடுத்து புகட்டினான்..

இதே நேரம் ஊரிலிருந்து இருந்தால் கஞ்சி சாப்பிட வைக்க கதிர் பல தோப்புக்கரணம் போட வேண்டியதிருந்துக்கும்… இன்று இவனது கோபம் கண்டு சமத்துப் புள்ளையாக ஒரே மூச்சில் குடித்து முடித்தாள் நிலா.. இதுதான் தக்க சமயம் என்று அவன் மறுபடியும் ஊற்றிக் கொடுத்தான்..

பாதி குவளை குடித்தவள் பாவமாக அவனைப் பார்த்து வைக்க.. பொழச்சிப்போ என வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தான்..

பைரவி கஷாயத்துடன் திரும்ப.. அடுத்த கண்டமா !! இதுக்கு இவன் கிட்ட நாலு அடிகூட வாங்கிடலாம் என கதிரை பார்க்க..

அவனோ அவள் மனதை அப்படியே படித்து விட்டான் போல..

“ பிச்சிடுவேன்… கண்ணு காதெல்லாம் மூடிட்டு சத்தமே இல்லாமல் குடிச்சிடு… ” என்றான் இறக்கம் சிறிதும் இன்றி

வேறு வழி !..  இன்று இவன் சொல்வதையெல்லாம் கேட்டு தானே ஆக வேண்டும்.. ஆனால் ஊர் திரும்பியதும் இதற்கெல்லாம் வெச்சி செய்யணும் என முடிவெடுத்த பின்பு கஷாயத்தை கையில் எடுத்தாள்..

பாதி கஷாயம் குடித்து முடித்ததும் உள்ளே ஏதோ செய்வது போல் இருக்க ‘ கதிர் ’ என அழைக்க வாய் திறந்தவள்.. அருகில் இருந்தவன் மேல் அப்படியே வாமிட் செய்து வைத்தாள்.

“ அச்சோ அக்கா.. ” என பைரவி ஓடிவந்து அவளைப் பிடித்து உட்கார வைக்க.. கதிர் எழுந்து சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு நீர் எடுத்து வந்தான்..

“ நீங்க அக்காவ பாருங்க… நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.. ” என்றவளை அவன் தடுக்கத் தடுக்க.. அவனை உட்கார வைத்துவிட்டு அனைத்தையும் சுத்தப்படுத்தினாள் பைரவி.. வேறு போர்வை கொண்டு வந்து கொடுத்துவிட்டு

“ நான் இத அலசிட்டு எடுத்துட்டு வரேன்.. ” நகர்ந்தவளை

“ பைரவி.. ப்ளீஸ் வேணாமே… ” என்றான் கதிர் சங்கடமாக..

ஒரு அழகிய புன்னகையுடன்,

“ எனக்கு அக்கா இருந்தா செய்யமாட்டேனா… ” எனக் கூறிவிட்டு வெளியேறினாள்..

“ ரொம்ப நல்ல பொண்ணுல்ல… ”

“ ஆமா…. ” என்றவாறு அவள் முன்பு மீதமிருந்த கஷாயத்தை நீட்டினான்.

“ வேணாம்….ப்ளீஸ்.. உள்ளிருக்கறது எல்லாம் வெளியே வந்துவிடும் ” என இறைஞ்சியவளிடம் “ உள்ள ஒண்ணுமே இருக்காது.. அதான் என் மேல அபிஷேகம் பண்ணிட்டேயே.. ” எனக் குடிக்க வைத்தான்.

 

அவன் தோள்மீது சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தவளை அப்படியே மடி மீது படுக்க வைத்து தலை கோதியவன் “ ரொம்ப கஷ்டமா இருக்கா டா வேணும்னா டாக்டர்கிட்ட போலாமா..” என்றான் கவலையுடன்.

அவனது கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவள், “ முன்ன இருந்துச்சு இப்ப இல்ல.. ” என கண் சிமிட்டி சிரித்தாள்.

“ சரி கொஞ்ச நேரம் தூங்கு.. ” என நெற்றியில் இதழ் பதித்து வருடிக்கொடுக்க.. இது ஒன்று போதுமே… கணவனின் இந்த அன்பு ஒன்றே போதுமே !! களைத்துப்போய் இருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்..

சற்று நேரம் கழித்து அவர்களது அறைக்கு வந்த அத்து

“ இப்போ எப்படிடா இருக்கு… ”

“ பரவாயில்லடா.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாயிடும்னு நினைக்கிறேன்.. ”

“ சரி நீ நிலா கூட இரு.. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடுறேன் சொல்லிட்டு போக தான் வந்தேன்…”

“ சரிடா.. மிதுனுமா ?? ”

“ இல்லடா மிதுனும் தாத்தாவும் பின்பக்க தோட்டத்துல இருக்காங்க ஏதும் வேனும்னா அவனைக் கூப்பிட்டுக்கோ.. ” எனச் சொல்லி விடைபெற்றான்..

மாந்தோப்பு, வாழைத்தோப்பு, கரும்புத்தோட்டம் இருப்பதாக மாரி கூறியிருந்ததால் அதனை பார்த்து வரலாமென கிளம்பி இருந்தான்..

பொங்கலையொட்டி பயிரிடப்பட்டிருந்த கரும்பு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு இருக்க அதனை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியில் இருந்தனர் ஆட்கள்..

அவன் வருவதை பார்த்த மாரி அவனை நோக்கி வந்தார்..

“ சந்தைக்கு கொண்டு போக எல்லாம் தயார் படுத்திட்டு இருக்கு.. கரும்பு வெட்டி தர சொல்லவா தம்பி… சாப்பிடுறீங்களா… ” என்று கேட்டார்..

“ சரிங்க ஐயா ” என்றதும்

“ வீரா… அந்த மேல் கட்டுல இருந்து ஒரு பத்து எடுத்து இந்தப் பக்கமா போடு.. ” என்றார்.. ‘ என்னது பத்தா ’ என அத்து அதிர்ந்து அவரைப் பார்க்க..

“ பத்து உங்களுக்கில்ல தம்பி… வீட்டுக்கு கொண்டு போகனும் இல்ல அதுக்குதான் ” என்றார் அவன் பார்வையை புரிந்து..

இரண்டு துண்டுகளை கையில் எடுத்துக் கொண்டவன், “ மாந்தோப்பு வரைக்கும் போயிட்டு வரேனுங்க ” என்றான்..

“ தம்பி வழி தெரியுங்களா இல்ல கூட யாராவது அனுப்பட்டுங்களா.. ”

“ இல்லைங்க மிதுன் சொல்லி இருக்கான்.. நானே போய் பார்த்துகிறேன்.. நீங்க இங்க பாருங்க ” என்றவாறு நகர்ந்தான்..

மனம் முழுக்க மகிழ்ச்சியாய் இருந்தால் எட்டிக்காயும் தித்திக்குமாமே.. அப்படித்தான் இருந்தது அவனுக்கும்… கரும்பு இனிப்பு தான்.. அவன் வருடா வருடம் பொங்கலின் போது சாப்பிடும் ஒன்று தான்..

ஆனால் இன்று ஏனோ அதன் சுவை தேனாய் தித்தித்தது..

மென்று கொண்டே வந்தவன் மாந்தோப்பின் உள் நுழைந்தான்.. அந்த பொன் மாலைப் பொழுதில் மாம்பழங்களை தேடிவந்த பறவைக் கூட்டங்கள் எழுப்பிய இன்னிசையும் பரந்து விரிந்து பூமித்தாய்க்கு குடை பிடுத்திருந்த மாமரங்களை விலக்கி விலக்கி உள்ளே எட்டிப் பார்க்க முயன்ற கதிரவனின் கதிர்களும் அந்த இடத்தையே ரம்மியமாக்கி இருந்தன..

தோப்பினுள் நுழைந்ததுமே இப்பொழுது மாமரங்கள் அத்துவிற்கு குடைபிடிக்க சுகமாய் இளைப்பாறினான்.. கூடவே அவனை வரவேற்கும் விதமாய் தொட்டுச் செல்லும் தென்றல் காற்று…

சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தவன் கையில் இருந்த மற்றொரு கரும்பில் கவனம் பதிக்க.. எங்கிருந்தோ பறந்து வந்த கல்லொன்று நெற்றியை பதம் பார்த்தது..

அவனது அலறலில் கிளையில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்த ஜோடிப் பறவைகள் சடசடவென சிறகடித்துப் பறக்க.. அவை எழுப்பிய சத்ததில் ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்தான்..

அடுத்த நொடி அவன் முன்பு மன்னிப்பை யாசித்து நின்றவளின் பொருட்டு அனைத்தும் தெரிவாகியது..

“ அடிக்கிறதா இருந்தா நேரா அடிக்க வேண்டியது தானே எதுக்கு கல்லு மண்ணுன்னு ஆயுதம் எடுத்துகிட்டு ” என்றவன் அவளை கடந்து போக.. அவள் திகைத்து அவன் பின்னாலேயே வந்து,

“ என்ன நான் வேணும்னே பண்ணினது போல சொல்றீங்க.. ” என்றாள்

நிதானமாக அவளைப் பார்த்தவன், “ அது உனக்குத்தான் தெரியும்.. ” என்று மேலும் முன்னேற

‘ என்னாச்சு இவங்களுக்கு ’ என நினைத்தவள் அவன் செல்வதைப் பார்த்து வேகமாக வந்தாள்

 

“ நான் மாங்காய் பறிக்க தான் கல் எறிஞ்சேன் அது தெரியாம உங்க மேல பட்டு… ” என்றவள் அவன் நெற்றியில் இருந்து வழிந்த ரத்தம் பார்த்து மயங்க.. அவன்  கலவரமானான்..

“ பைரவி… பைரவி.. என்னாச்சு… ” எனக் கன்னம் தட்டி எழுப்ப அவள் அசைந்து பாடில்லை.. சுற்றும் முற்றும் பார்த்தவள் தூரத்தில் வயலில் நீர் பாசன வசதிக்காக பம்புசெட்டு கண்ணில் பட ஓடினான்..

தண்ணீர் எடுத்து வந்து தெளித்தான்.. மயக்கம் தெளிந்து எழுந்தவள் அவன் விழிகளில் தெரிந்த பதற்றம் கண்டு குழம்பினாள்..

அவள் எழுந்து அமர்ந்ததும் நிம்மதிப் பெருமூச்சுடன் அவள் அருகிலேயே அமர்ந்தான்… சில நிமிடங்கள் அமைதியாக கழிய..

“ என்ன ஆச்சு… திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்ட.. ” என்றவனின் குரலில் இன்னமும்கூட பதற்றம்.. தவிப்பு

“ உங்களுக்கு அடிபட்டதுல ரத்தம் வந்துச்சு அதை பார்த்ததும்… ” என தயங்கி நிறுத்தி அவன் முகம் பார்க்க..

என்னவோ ஏதோ என்று பயந்து இருந்தவன் இவளது இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

ஹா ஹா… என்று வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான்..

சிரிப்பினூடே, “ ர…ரத்தம்… ” என மேலும் சொல்லி சிரிக்க அவளுக்கு ஐயோ என்று இருந்தது

எப்போதோ அறியாத வயது என்பார்களே.. அப்பொழுது இளநீர் சீவ வைத்திருந்த அரிவாளை எடுத்து கையை சீவிக் கொண்டாள் இந்த வீரமங்கை.. அப்பொழுது ஓடிய ரத்த ஆறைப் பார்த்து மயங்கியது அதன் பிறகு அது தொடர் கதையாகிவிட்டது.. ஒரு துளி ரத்தம் கூட அவளது கண்களில் பட்டு விடக்கூடாது..

வீட்டில் இருப்பவர்களும் சிறகடிப்பது மந்திரிப்பது என பல செய்து பார்த்து விட்டனர்.. ஆனால் அவளுடைய இந்த பழக்கம் மட்டும் அவளை விட்டுச் செல்வதாக இல்லை…

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அவள் எழ..

ஒரு வேளை கோபமோ என தனது சிரிப்பை நிறுத்திவிட்டு அவனும் எழுந்தான்..

“ பைரவி… அது… சிரிப்பு தானா வந்துடுச்சு.. உன் மனசு அதனால கஷ்டப்பட்டு இருந்தா மன்னிச்சுடு ” என்றதும்

அவளுக்கு ஆச்சரியமே… இன்னும் கூட அவள் மன்னிப்பு கேட்டு இருக்கவில்லை ஆனால் இவன் எவ்வளவு எளிதாக கேட்டுவிட்டான்.. அவள் அமைதியைக் கண்டு அவன் மீண்டும் அழைக்க

“ இல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. இது ஒரு சின்ன விஷயம் இதுக்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்கறீங்க.. அப்படி பார்த்தா நான் தான் மன்னிப்பு கேக்கணும்… மன்னிச்சிடுங்க… ” என்றாள்..  

“ ஹே நானும் விளையாட்டுக்கு தான் அப்படி பேசினேன்… ” என்றவன்

“ இந்த மரங்க எல்லாம் வருஷம் முழுக்க காய்க்குமா ?? ” என பேச்சை மாற்றினான்…  

“ எல்லா மரமும் காய்க்காது.. இந்த தோப்புல நிறைய வகை மரங்க இருக்கு.. சீசனுக்கு காய்க்கிறது வருஷம் முழுக்க காய்க்கிறதுன்னு நிறைய இருக்கு.. சீசன் பழங்கள்ள 20 வகை நம்ம தோட்டத்திலேயே இருக்கு… ” என்றவள் ஒரு மரத்தை காண்பித்து

“ இதோ இதுதான் பங்கனப்பள்ளி.. எனக்கு ரொம்ப புடிக்கும்… ” என குதூகலிக்கும் குழந்தையாக மாறியிருந்தால் குமரி…

இதழ்களில் முளைத்திருந்த புன்னகைக் கீற்றுடன் அவளைப் பார்த்திருந்தான்..

“ ஆனா இதுக்கு மே மாசம் வரைக்கும் காத்திருக்கணும்… ஹம்ம்.. ” என பெருமூச்சு விட்டவள்

“ ஆனால் மே மாதம் வந்துட்டா என் வீடு இங்க தான்.. ஸ்கூல் லீவு விட்டுட்டா கத புத்தகத்த எடுத்துட்டு காலைலயே வந்துடுவேன்.. ” என்று சொல்லிக் கொண்டிருக்க.. அவன் மனமோ அவள் சொல்லிய ஸ்கூலிலேயே நின்றுவிட்டது..

“ நீ ஸ்கூலா… படிக்கிற ” என்றவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவள்

“ என்ன பார்த்தால் ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரியா இருக்கு.. ” என இடையில் கை வைத்துக் கொண்டு எதிர் கேள்வி கேட்டாள்.

அவன் மறுப்பாக தலையசைக்க…  

“ அப்புறம் ஏன் கேக்குறீங்க ? ” என்று அவள் நகர..

“ நீ என்ன படிச்சிருக்க… ” அவனுக்கு அவள் படிப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்..

“ எதுக்கு கேக்குறீங்க ? ”

உண்மையில் அவனைச் சோதித்தாள் என்றே கூறலாம்.. அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை.. அவளுக்கு விருப்பம் இல்லை போல என விட்டுவிட்டான்..

“ மாங்கா சாப்பிடுறீங்களா.. பரிச்சு தரவா.. ” என கேட்க..

“ எதுக்கு இன்னொரு தரம் என் நெத்திய பதம் பார்க்கவா ? ” எனக் கேட்டுவிட்டான்.. அவனையும் மீறி அவள் பதில் சொல்லாத அதிருப்தியில் கேட்டு விட்டான்.. பிறகு அதை உணர்ந்து அவள் முகம் பார்க்க.. அவளோ மாங்காயை குறி பார்த்துக் கொண்டிருந்தாள்..

‘ இவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமே அத்து… ’ என விட்டுவிட்டான்.

பல கற்கள் பறந்துவிட்டது ஒரு மாங்காய் கூட அடிக்க முடியவில்லை.. அவன் எதுவும் கிண்டல் செய்வானோ என முகம் பார்க்க அவன் சிரிப்புடன் பார்த்திருந்தான்..

“ கொஞ்சம் தள்ளு… ” என அவளை விலகச் செய்தவன் மடமடவென மரம் ஏறத் துவங்கினான்.. கைக்கு எட்டிய கனிந்த பழங்களை எல்லாம் பறித்து போட்டான்..

“ போதுமா.. இன்னும் வேணுமா ? ” என கேட்க..

“ உங்க தலைக்கு மேல கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய பழம் இருக்கு.. அது மட்டும் போதும் எனக்கு.. ” என கீழே இருந்து சொல்ல.. அவன் அவள் கூறிய பழத்தை பறிக்க வேறு கிளைக்குத் தாவ.. அது சற்று பலமிழந்து இருக்க.. இவன் தாவியதும் முறிந்தது..

அம்மா….. என்ற அவனது அலறலில் இவள் கண்களை மூடி காதை பொத்திக் கொள்ள.. கிளை முறிந்திருந்தது..

பயத்தில் கண்களை இறுக மூடி இருந்தவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்க.. அவள் முன்பு நின்றிருந்தான் அதுல். அப்போதுதான் அவள் சுவாசம் சீரானது..

“ அடி ஏதும் படலையே… ” அக்கறையாகக் கேட்டவளை அடிக்கண்களால் முறைத்தவன்,

“ கீழே விழப்போனா.. வந்து காப்பாத்தாம வேடிக்கை பார்த்துட்டு இப்ப என்ன கேள்வி வேண்டி இருக்கு… ம்ம் ” என்றான்..

“ அ..து.. நான் எப்படி உங்களை பிடிக்கிறதாம்…. ”

“ ஓடி வந்து தான்… நான் என்ன அவ்ளோ வெயிட்டா… ” என்றதும் தான் அவனை நன்கு பார்த்தாள்..

ஐந்தே முக்கால் அடி உயரமும் அதற்கு ஏற்றாற் போல எடையுமாய் நின்றிருந்தான் அவள் முன்பு. ஆனால் அவளால் எல்லாம் நிச்சயமாக தூக்க முடியாது என நினைத்தவள் தூக்கினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க..

“ இடுப்பு உடைஞ்சிடும்… ” என பதில் கொடுத்தவனை பைரவி திடுக்கிட்டுப் பார்க்க..

“ அப்போ அத தான் நினைச்சியா ? ” என புருவம் உயர்த்தி கேட்டான் அதுல்..

“ இருட்டிடுச்சு நாம வீட்டுக்கு போகலாம்… நான் வந்தது மாமாவுக்கு தெரியாது… சீக்கிரம் போகலாம் வாங்க… ” என சமாளித்துக் கொண்டு வேக வேகமாக மாங்காய்களை அள்ளிப்போட்டுக் கொண்டு நடக்க.. புன்சிரிப்புடன் அவளைத் தொடர்ந்தான்..

 

*********

 

“ அக்கா இந்த கலர் நல்லா இருக்கா… ? ” என்று தன் கையில் இருந்த புடவையை எடுத்து நிலாவிடம் காட்டினாள் பைரவி. இளஞ்சிவப்பு மற்றும் சந்தன நிறத்தில் அமைந்திருந்த டிசைனர் புடவை.. நிலாவிற்கு எடுப்பாக இருக்கும் நிச்சயம்.. ஆனால் அவள் மறுப்பாக தலையசைக்க.. கடைக்காரர் விழி பிதுங்கி நின்றார்… அவரைப் பார்த்து பைரவிக்கே பாவமாக இருந்தது.

பொங்கலுக்கு புதுத்துணி எடுக்கவென பொள்ளாச்சிக்கு வந்திருந்தனர்.. முதலில் மாரியும் பைரவியும் மட்டுமே கிளம்புவதாக இருந்தது… தாத்தா அத்துவையும் உடன் போகச் சொல்ல… எல்லாருமே போயிட்டு வருவோமே என கிளம்பி வந்திருந்தனர்…

அதுல், மிதுன், கதிர், மாரி என ஆண்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு சென்று இருக்க.. நிலாவுடன் மாட்டிக்கொண்டாள் பைரவி.

ஒரு மணி நேரம் ஆயிற்று இன்னும் ஒரு புடவை கூட எடுத்தபாடில்லை நிறம் சரியாக இருந்தால் அதனுடைய டிசைன் சரியாக இல்லை.. டிசைன் சரியாக இருந்தால் நிறம் சரியாக இருக்கவில்லை..

“ போலாமா… ” என்றபடி ஆண்கள் அனைவரும் அவ்விடம் வர..

“ அதுக்குள்ளயா ” என்று அதிர்ந்தாள் நிலா.

“ என்ன அதுக்குள்ளயா ? வந்து எவ்வளவு நேரம் ஆச்சு ” என்ற மிதுனிடம்

“ நான் இன்னும் எடுக்கவில்லையே… ” என்றாள் நிலா பாவமாக.

அருகிலிருந்த பைரவியை பார்த்த கதிர்… “ இவள பத்தி தெரிஞ்சும் உன்கூட விட்டுட்டு போனது தப்புதான்.. மேடம் செலக்ட் பண்றதுல ரொம்ப வீக்.. அவங்க செலெக்ட் பண்ணதுல ஒரே நல்ல விஷயம்னா அது இந்த கதிர் மட்டும்தான் ” என நிலாவை பரிகசிக்க..

“ அது தான் நான் பண்ணினதுலயே ரொம்ப மோசமான செலெக்ச்சன் ” என இவள் பேச.. அடுத்து அவன் பேச.. பைரவி இருவருக்கும் இடையே அமர்ந்து தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“ பையு.. எங்கக்கா ஆரம்பிச்சிட்டா.. இனி அவளை நிப்பாட்டுறது கொஞ்சம் கஷ்டம் தான்.. நீ வா நாம கிளம்பலாம்.. அவங்க சமாதானம் ஆன பின்னாடி வரட்டும்.. ” என்றான் மிதுன்..

“ பையுவா….. ” என அத்து அவனைப் பார்க்க..

“ ம்ம்.. பைரவி ஷார்ட்டா பையு…. ” என்றவன் நிலா கதிரிடம் திரும்பினாள்

“ அக்கா நீதான் வரும்போது டிரஸ் எடுத்துட்டு வந்துட்டல்ல.. இப்ப கெளம்பி வா… நாம மட்டும் தான்னா பரவாயில்லை… நமக்காக மாரி அங்கிளும் வெயிட் பண்றாங்க…. ”

இப்பொழுது மாரி… “ தம்பி இருக்கட்டும் வுடுங்க.. அங்க போய் இப்ப என்ன வேலை இருக்கு… நீ எடு கண்ணு… ” என நிலாவிடம் கூற

அவள் கதிருக்கும் மிதுனிற்கும் பழிப்பு காட்டிவிட்டு திரும்பினாள்..  

மேலும் அரை மணி நேரம் கழிந்ததே ஒழிய.. எடுத்தாள் இல்லை..

“ அக்கா கைத்தறி புடவை இருக்கும்… பாக்கறீங்களா ? புடவை எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருக்கும்… ” என்றாள் பைரவி

அடுத்த பத்து நிமிடத்தில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த புடவை ஒன்றை தேர்வு செய்தாள் நிலா.. மிக திருப்தியாக இருந்தது..

“ அம்மாடி பைரவி இந்த யோசனைய அப்பவே சொல்லியிருந்தா நாம கால் வலிக்க நிக்காம இருந்திருக்கலாமே ! ” என்ற கதிரின் கேள்விக்கு புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

“ பையு.. நீ உனக்கு எடுக்கலையா.. ”

“ நான் புடவை எங்கக்கா கட்டுறேன் எப்பயுமே தாவணி தான்.. நீங்க இருங்க நான் எனக்கு எடுத்துட்டு வந்துடறேன்.. ” என அவர்களை அமர வைத்துவிட்டு சென்ற ஐந்து நிமிடத்தில் திரும்பினாள்..

“ என்னாச்சு பைரவி.. எடுக்கலையா ? ”

“ எடுத்தாச்சுக்கா… வாங்க போகலாம் ” என்றவளை வியப்புடன் பார்த்தனர் அனைவரும்..

“ கொஞ்சமாவது அவகிட்ட இருந்து கத்துக்கோ…. ” என மிதுன் நிலாவின் தலையை தட்ட… அதன் பிறகு அங்கோர் யுத்தம் !  

ஊர் திரும்பும் வழியில் மாசாணியம்மன் கோவிலில் அவர்கள் வந்திருந்த மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு அம்மனை தரிசனம் செய்து விட்டு கிளம்பினர்..

இம்முறை சாரதியாக அதுல் ஏறி அமர,

“ மாமா அவங்களுக்கு நல்லா ஓட்ட தெரியுமான்னு கேட்டீங்களா நம்ம கணேசனை வெச்சு ஓட்டுறது கஷ்டமாச்சே ! ” என தன் மாமாவிடம் மெதுவாக கேட்டாள் பைரவி..

அவள் மெதுவாகவே கேட்டிருந்தாலும் அத்துவின் காதில் தெளிவாக விழுந்தது.. திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க.. அவசரமாக நிலாவிடம் திரும்பிக்கொண்டாள்..

மாலை வேளையில் ஊர் திரும்பினர்.. வீடு வந்ததும் தான் பைரவியும் கதிரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.. வண்டியிலிருந்து இறங்கிய அதுல் அவர்களை பாசமாய் பார்த்து வைக்க..

“ இருக்குறது ஒரே ஒரு உசுரு தான்… அத உன்னை நம்பி ஒப்படைக்க முடியுமா நண்பா ? கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா உன் ஆர்வக்கோளாறுக்கு நாங்கள்லடா பலியாடாகி இருப்போம்.. அப்படித்தானே பைரவி ” என அவளை இழுக்க அவள் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு சத்தமில்லாமல் நழுவிக் கொண்டாள்.

கதிரும், “ மிதுன் அந்த பைய எடுத்துட்டு வா போகலாம் ” நழுவினான்

இரவு உணவை கொண்டு வந்தவள் அவர்களுடனேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தாத்தாவிடம் சென்றாள். அவளுக்காகவே காத்திருந்தது போல

“ சாப்டாச்சா அம்மணி… ” எனக் கேட்டார்..

“ ம்ம் ஆச்சு தாத்தா… ”

“ சரி சரி எல்லாரையும் வர சொல்லுமா இந்த தடவை எல்லாருக்கும் கொடுத்திடலாம் ” என்றதும் வெளியே வந்தாள்.

அனைவரும் அவரவர் அறைக்கு சென்று இருக்க.. வரவேற்பறையில் மிதுன் மட்டும் அமர்ந்து அவனது மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

“ மிதுன் ”

“ சொல்லு பைரவி… ”

“ எல்லாரும் தூங்கிட்டாங்களா ? தாத்தா எல்லாரையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க.. ”

“ இல்லையே இந்நேரம் எல்லாரும் பேசிட்டு தான் இருந்தோம் இப்பதான் எல்லாரும் அவங்க அறைக்கு போனாங்க… ”

“ ஆமா என்ன விஷயம் ? ”

“ இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுக்கலாம் நீங்க போய் எல்லாரையும் கூப்பிடுங்க நான் தாத்தா கிட்ட போறேன் ” என்றபடி திரும்ப..

“ பைரவி ஒரு நிமிஷம்.. அண்ணா மாடியில் இருப்பாங்க வரச்சொல்லிடு நான்  அக்காவையும் மாமாவையும் கூப்பிடப் போறேன்.. ” என்று கூற

“ நானா ? ” என அவள் தயங்கி  

“ ஆமா நீ தான்… ” என இயல்பாகவே கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்..

இவள் மேலே வந்து பார்க்க அவன் விழிமூடி படுத்திருந்தான்… அவள் வழக்கமாக அழைப்பதைப் போல் அழைத்துப் பார்த்தாள்..

அவன் எழுந்தபாடில்லை..

‘ அதுக்குள்ள தூங்கிட்டங்களா என்ன ? ’ என நினைத்தவள் அருகில் வந்து குனிந்து பார்க்க.. காரிருளில் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை… சட்டென அவன் விழி திறக்க…

அம்மா… என பின்புறம் சாய்ந்து விழுந்து விட்டாள்..

பைரவி.. என அவன் எழுந்து அமர..

“ கொஞ்ச நேரத்தில் பயப்படுத்திட்டீங்க… கடவுளே ! ” என அவள் இதயத்தில் கை வைத்து சிறகடித்த இதயத்தை தொட்டு பார்த்தாள்

“ ஏதோ யோசனையில் இருந்தேன்… கொலுசு சத்தம் கேட்ட மாதிரி இருந்தது.. கண்ணை திறந்து பார்த்தா நீ… சரி என்ன விஷயம் ?? ”

“ தாத்தா வரசொன்னாங்க கீழ வாங்க.. ” என்றவள் எழுந்து நடக்க அவன் பின் தொடர்ந்தான்

“ என்ன எல்லாரும் இருக்காங்க… ” என்றபடி தாத்தாவின் அறைக்குள் நுழைந்தான்.

“ அம்மாடி பைரவி நீ வா.. ” என்றதும் அவள் அவர் முன்பு வந்து நிற்க அவளுக்கு தரும் பொங்கல்படியை தந்தார்..

அவரிடம் ஆசி வாங்கி பெற்றுக்கொள்ள அடுத்தடுத்து அனைவருக்கும் கொடுத்தார்.

“ என்ன தாத்தா இது ? ” என்று சின்னவன் கேட்க

“ வருஷாவருஷம் பைரவி என்கிட்ட இருந்து புதுத்துணி வாங்கிக்குவா அதோட பொங்கல் படியும் சேர்த்து தருவோம். எல்லாம் பாட்டி பழக்கிவிட்டது ” என்றபடி அவர் கட்டிலில் அமர சிறிது நேரம் அவருடன் இருந்துவிட்டு அனைவரும் அறைக்குத் திரும்பினர்.

 

மேகம் கடக்கும்….

Advertisement