Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 38

 

“ ஆ சொல்லு.. ஆ.. ஆ.. ”

“ நீ சொல்லு.. ”

“ நீ சொல்லு.. ”

இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல.. கடுப்பனவள் “ ஹேய்.. நீ வாயத் திறடி..” என்றாள் எயிலிடம்.

“ திறக்க மாட்டேன் போடி ” என அவள் திருப்பிச் சொல்ல

“ டியா அப்படியே ஒன்னு போட்டேன்னா பாரு ” என தூரிகா அவளை அடிக்க வர

“ தூரிம்மா.. பாப்பா தப்பில்ல.. நீ தான் தப்பு.. ” என அறம் தவறாமல் ஆதித்தன் தீர்ப்பு சொல்ல

வேறு வழியில்லாமல் மன்னிப்பை கோரிவிட்டு இருவருக்கும் உணவு ஊட்டத் துவங்கினாள்.

“ ஆ சொல்லு.. ஆதிக் குட்டி.. தூரிம்மாக்கு பசிக்குது.. ” என கெஞ்சியும் கண்டு கொள்ளாது நான் நீ என மாற்றி மாற்றி சொல்லி அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.

“ ஆ… ” என்றவளுக்கு ஒரு கரம் பின்னிருந்து உணவு ஊட்டியது.

“ என்ன பண்ற ? ” உணவை வாயில் வைத்துக் கொண்டே யுகாவிடம் கேட்க..

“ சாப்பிடு மொதல்ல..” என அதட்டினான்.

யுகா அவளுக்கு ஊட்டி விடுவதைப் பார்த்ததும் எயிலும் ஆதித்தனும் போட்டி போட்டுக் கொண்டு உணவைக் கேட்க.. தூரிகா அவர்களுக்கு ஊட்ட.. இவன் அவளுக்கு ஊட்டினான்.

“ யுகா.. எல்லாரும் இருக்காங்க டா.. ” அரங்கினுள் அத்தனை பேர் இருக்க அவளுக்கு அவன் ஊட்டுவது ஒரு மாதிரி இருந்தது.

“ ஹேய்.. எல்லாருக்கும் எல்லாம் என்னால  ஊட்டி விட முடியாது.. அடியேன் அவதாரம் எடுத்திருப்பது என்னோட ஆத்துக்காரிக்கு சேவை பண்றதுக்காக மட்டும் தான்… ” என அவன் சொல்ல

“ ஓஹ் ஐயாவுக்கு அந்த ஆசையெல்லாம் இருக்குதோ ” என சண்டைக்குத் தயாராக.. இவன் ஆதித்தனிடம் கண் காட்ட

“ தூரிம்மா… ஆ ” என அவன் கத்த

யுகாவை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு ஊட்டத் தொடங்கினாள்.

எயில் தூரிகா- யுகாவின் புதல்வி. ஆதித்தன் அத்து- பைரவியின் புதல்வன். உதித்ததென்னவோ மாற்றான் தாயிடம் தான். ஆனால் உடன்பிறப்பையும் மிஞ்சிய அன்பும் பாசமும் அவர்களிடம் உண்டு. ஒருவரை விட்டு ஒருவர் இருக்கமாட்டார்கள்.

எயிலுக்கு ஆதித்தன் வேண்டும்.. ஆதித்தனுக்கு எயில் வேண்டும்.. இருவரும் சேர்ந்து கொண்டு செய்யும் சேட்டைகளுக்கு நாளும் ஒருவர் சிக்கிக் கொள்வர். இன்று தூரிகா மாட்டிக் கொண்டாள்.  

காலையில் இருந்த அவசரத்தில் இருவரையும் கிளப்பிக் கொண்டு அரங்கிற்கு வந்து சேர்ந்தவள் உணவை மறந்திருந்தாள். மதியமும் நேரம் இரண்டைத் தொட.. அதற்கு மேல் அவளால் சமாளிக்க முடியவில்லை. இருவருமோ அவர்களும் உண்ணாது அவளையும் உண்ண விடாது படுத்திக் கொண்டிருந்தனர்.

யுகா வரவும் தான் சேட்டையை நிறுத்தியிருந்தனர். குழந்தைகளின் பசியை அவள் போக்க.. அவள் பசியை அவன் தீர்த்து வைத்தான்.   

கலியுகனின் காதல் கண்டு காதலே காதல் கொள்ளும் அவன் பால். அப்படியிருக்க அவளுக்கு எப்படியாம் ? தோழன்.. தலைவன் என்பதையெல்லாம் கடந்து அவளின் சுவாசமாகிப் போனான் அவன்.

“ அத்து…. ” என அங்கு வந்த அத்துவிடம் தாவினான் ஆதித்தன்.

“ மம்மா.. சாப்டாச்சா.. ” அவனிடம் கேட்டபடியே தூரிகாவைப் பார்க்க

“ சாப்பிட்டான் மாமா.. தண்ணி மட்டும் கொடுக்கணும்.. ” என்கவும் அவளிடம்

“ சரி.. நான் ஏர்போர்ட் கிளம்புறேன்.. யுகா ? ” என்றான்.

“ விக்ரமை தேடிப் போயிருக்காரு மாமா.. ”

“ சரிம்மா.. நான் அங்க போயிட்டு கால் பண்றேன்.. நீங்க முடிச்சுட்டு கிளம்புங்க.. ”

“ சரி மாமா.. ” என்றதும் அவன் விடைபெற எயில் அழத் துவங்கினாள் அவர்களுடன் செல்ல அடம்பிடித்து.

அத்து தூரிகாவைப் பார்க்க.. அவன் பார்வை உணர்ந்தவள் “ வேணாம் மாமா.. இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தாங்க.. அவ்ளோ தான்.. நீங்க டிரைவ் வேற பண்ணனும்.. ” என தடுத்துவிட்டு அவளை வளவனிடம் அழைத்துச் சென்றாள்.

“ அத்து நானு.. நான் ஓட்டுறேன்.. ” என காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டு ஆதித்தன் கேட்க

“ ம்ஹும்.. இப்போ அத்து ஓட்டுவேணாம்.. அம்மாவ கூட்டிட்டு வரும்போது ஆதித்தன் ஓட்டுவீங்களாம்.. சரியா ”

“ ம்ம் சரி.. ” என சமத்தாகக் கேட்டுக் கொண்டு நகர்ந்து அமர புன்னகையுடன் காரைக் கிளப்பினான் அதுல்.

தஞ்சையிலிருந்து திருச்சி ஏர்போர்ட் வந்து சேர ஒரு மணி நேரம் பிடித்தது. ஆதித்தனின் மழலையில் கணங்களெல்லாம் கரைந்தோடியிருந்தன. ஆதித்தனுடன் நேரம் செலவிட்டு நெடுநாட்களாகியிருந்தது அத்துவிற்கு. அத்துவைப் பொறுத்தவரை அவனுடனான மணித் துளிகள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாக அவனுக்குள் வைத்துக் கொள்வான். ஆதித்தனுடன் அவனது உலகில் பயணிப்பது தனி சுகம்.. அதை இழக்க விரும்பமாட்டான்.

ஆனால் இப்பொழுதெல்லாம் அவனை சோதிக்கவென்றே வேலை இழுத்துக் கொள்கிறது. அவனுடனான பொழுதுகள் குறைந்து கொண்டே வருகிறது. நிச்சயம் அது இழப்பு தான். மனதோரம் அந்த இழப்பு அரித்துக்கொண்டே இருந்தது.. இப்பொழுது அது ஓரளவிற்கு மட்டுப் பட்டிருந்தது.

காரைப் பார்க் செய்தவன் விமானம் வருவதற்கு நேரம் இருப்பதை உணர்ந்து ஆதித்தனுடன் ஏர்போர்ட்டை வலம் வந்தான்.

அத்து அது என்ன ? அத்து இது என்ன ? அத்து இது ஏன் இங்க இருக்கு? அத்து அது ஏன் இப்படி இருக்கு? கண்களில் கண்டதையெல்லாம் கேள்வியாய் கேட்டுத் துளைத்தெடுக்க.. அவனின் ஒவ்வொரு அழைப்பிலும் அகமகிழ்ந்து நின்றிருந்தான் அத்து.

வேடிக்கை காட்டிக் கொண்டே வந்தவன் ஒரு இடத்தில் சட்டென நின்றான்.

“ என்ன ஆச்சு அத்து ? ” என ஆதித்தன் அவன் முகம் பார்த்துக் கேட்க..

“ அங்க பாரு… ” என ஆதித்தனை திருப்பினான்.

அவ்விடம் பார்த்தவன் “ அம்மா… அத்து ” என்றான்.

ஆதித்தனை பிடித்திருந்த பிடியை விட வேகமாக ஓடிச் சென்று பைரவியின் கால்களைக் கட்டிக் கொண்டான்.

கைகையிலிருந்த தாளில் கவனம் வைத்திருந்தவளின் கால்களை ஆதித்தன் பின்னிருந்து கட்டிக் கொள்ள தன் நடையை நிறுத்தியவள் புன்னகையுடன்    “ யாருடா குட்டித் தங்கம் நீங்க.. முன்னாடி வாங்க ” என திரும்ப எத்தனிக்க அவளைத் திரும்ப விடாமல் கட்டிக் கொண்டான் அவன்.

குழந்தையைத் தேடி யாரேனும் வருகிறார்களா என விழிகளைச் சுழற்றியவள் அத்துவைப் பார்த்து இமைக்க மறந்து நின்றாள்.

அவளே அறியாமல் அவளுக்காக காத்திருந்த அவனுடைய காத்திருப்பு நிச்சயம் வீண்போகவில்லை. அவளுக்குள் காதல் பிரவாகம் கரை உடைத்திருந்தது.  

மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அதரங்களில் அவளுக்கான புன்னகையுடன் நின்றிருந்தான். அவன் விழிகள் ஆதித்தனைக் காட்ட.. சட்டென திரும்பி ‘ ஆதி ’ என அள்ளி அணைத்துக் கொண்டாள்.

“ ம்மா… ” என அவனும் அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள விழிகளில் ஆனந்த நீரோட்டம்.

“ ஆதி.. ” என அவன் நெற்றியில் கன்னத்தில் அதரங்களைப் பதிக்க..

“ ம்மா.. அழுகாத.. ” என அவன் பிஞ்சுக் கரங்களைக் கொண்டு துடைத்துவிட அத்தனை நாட்கள் அவனைப் பார்க்காத ஏக்கங்களெல்லாம் கண்ணீரில் கரைந்தன.

பைரவியின் விழிகளில் வழிந்த நீரைப் பார்த்தவன் திரும்பி “ அத்து இங்க வா.. அம்மா அழறாங்க..  ” என அழைக்க.. அதுவரை அவர்களிடையே வராமல் ஓரமாய் நின்றிருந்தவன் அருகில் வந்தான். அவன் அருகில் வந்தும் பிடிவாதமாய் விழிகளை அவன் பால் விடாமல் ஆதித்தனை மட்டுமே பார்த்திருந்தாள்.

‘ மிசஸ்.அத்து அத்தான் மேல பயங்கர கோவத்துல இருப்பாங்க போலவே.. கடைக்கண் பார்வைக்கே கஷ்டமா இருக்கு.. ’ என எண்ணியவனிடம்

“ அத்து அம்மா அழறாங்க.. ” என அவள் கண்ணீரைக் காட்ட..

“ என்ன பண்ணலாம் நீயே சொல்லு  ” அவனின் அன்பான அணைப்பு ஒன்று போதும். மாயமாய் அவள் கண்ணீரை மறையச் செய்து மந்தகாசப் புன்னகையை மலரச் செய்யும் அவளிடம் என்று அறிந்தும் அவனிடம் கேட்டான்.  

“ நான் துடச்சி விட்டேன்.. நீயும் துடச்சிவிட்டு அழாத சொல்லு.. ” என அவன் கரத்தை எடுத்து பைரவியின் அருகில் கொண்டு செல்ல.. சட்டென பின் நகர்ந்தாள்.

“ அம்மா அழலடா ஆதி.. நாம போலாமா?  ” எனப் பேசிய படி முன்னே நடக்க

‘ இவ இன்னும் மாறவே இல்ல அத்து. உன்னை கண்டுக்கவே மாட்டேங்குறா. உன் கவனிப்பு சரியில்ல.. ’ என அவனையே குறை சொல்லிக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்த.. “ அம்மாவும் ஆதியும் கார் ஓட்டலாமா ” என்றபடி வந்து நிற்க.

“ இல்ல பையு. நானே ஓட்டுறேன்  ” என்றான் அத்து.

அவள் கண்டுகொள்ளாமல் நிற்க “ அத்து.. ஆதி ஓட்டுறேன் தள்ளிப் போ.. ” என்றான் ஆதித்தன்.

“ ஆதி.. அப்பா சொல்லு ” என பையு அதட்ட.. அவன் திரும்பி அத்துவைப் பார்க்க அவனோ மறுப்பாக தலையசைத்தான். அத்துவிற்கு அவள் அவனை அத்து என அழைக்க வேண்டும் என்ற விருப்பம். அவள் மறுக்க அவன் ஆதித்தனை பழக்கி இருந்தான்.

உண்மையில் அவன் மழலையில் அத்து என விளிக்கும் போதெல்லாம் மழையில் நனையும் சுகம் கிடைக்கும் அத்துவிற்கு. பைரவி முறைத்துக் கொண்டு அதட்டிக் கொண்டு திரிந்தாலும் இவர்கள் அலட்டிக் கொள்ளாமல் இருப்பர்.      

“ சொன்ன பேச்சு கேக்கக் கூடாதுன்னே முடிவு பண்ணிருக்கா ” என  முணுமுணுத்துவிட்டு இறங்கி அடுத்த பக்கம் அமர்ந்தான்.

அவள் அமர்ந்து மடியில் ஆதித்தனை அமர்த்திக் கொண்டு சிறிது தொலைவு காரை நகர்த்தியவள்

“ ஆதிக்குட்டி ஓட்டுனது போதும். இனி நாளைக்கு ஓட்டலாம் இப்போ அப்பாகிட்ட போய் உக்காருங்க.. ” என அத்துவின் மடியில் அவனை அமர்த்திவிட்டு காரைக் கிளப்பினாள்.   

“ அம்மா.. எங்கம்மா போன.. ஆதி நீ இல்லாம அழுதான் தெரியுமா. இனிமே நீ ஆதிய விட்டு போகக் கூடாது. போனா நா பேச மாட்டேன்.. ” என அவன் சொல்லச் சொல்ல அவள் அத்துவைப் பார்த்த பார்வையில் காரம் கூடிக் கொண்டே போனது.

‘ ஆஹா.. இங்கயே பஞ்சாயத்த ஆரம்பிச்சு வெச்சுடுவான் போலவே.. ’ என நினைத்தவன் “ ஆதி.. தூரிம்மா உனக்கு என்னெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.. அத அம்மாகிட்ட சொல்லு  ” என பேச்சை திசை திருப்பினான்.

ஆதித்தனை தான் அசைக்க முடிந்ததே தவிர பைரவியின் பக்கம் திரும்பக் கூட முடியவில்லை அந்த அளவு ஆனால் அடித்தது.

கோவம்.. அத்தனைக் கோவம் அவளுக்கு அத்துவின் மேல். நாற்பத்தைந்து நாட்கள் அத்துவையும் ஆதித்தனையும் விட்டு அவளைப் பிரிந்திருக்க வைத்தான் அவன்.

இலங்கையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஒன்றரை மாதங்கள் கழித்து ஊர் திரும்பியுர்க்கிறாள் பைரவி. அதில் கலந்து கொள்ள அவளுக்குத் துளியும் விருப்பவில்லை. காரணம் உணவில்லாமல் கூட ஒரு நாள் இருந்துவிட முடியும் ஆனால் உடையவனின்றி அவளால் இருக்க முடியாது.ஏன் அவனுமே அப்படித் தானே !

ஆனால் இம்முறை அடம் பிடித்து அவளை அனுப்பி வைத்திருந்தான் அகத்தியனுடன். அவள் அவனிடமே சொல்லிப் பார்த்தாள். அவனையும் ஆதியையும் விட்டுவிட்டு தன்னால் அத்தனை நாட்கள் இருக்கமுடியாது என. ம்ஹும் அவள் கண்ணீரில் கூட கரையவில்லை அவன்.

அவனைப் பொருத்தவரை அவன் அவளது பலமாக இருக்க வேண்டும். பலவீனமாக இருக்கக் கூடாது. அதை நினைத்துத் தான் அனுப்பி வைத்தான். அனுப்பி வைத்துவிட்டு அவன் பட்ட பாடு அவனுக்குத் தானே தெரியும். அதை அவளிடம் சொல்லவா முடியும்? சொன்னாலும் அவளுக்குக் கேட்காது. அவன் மீதான கோவம் தான் அவள் காதை அடைத்துக் கொண்டிருக்கிறதே!

முதல் முறை அவள் கோவத்தைப் பார்க்கிறான்..

‘ யப்பா.. என்ன கோவம் டா சாமி.. அத்து அதிரடியா எதாவது பண்ணி தான் உன் ஆளை சமாளிக்க முடியும். யோசி… யோசி..   ’ என அவன் தனக்குள் சொல்லிக் கொண்டிருக்க அலைபேசி இசைத்தது.

திரையில் ‘ அகத்தியன் ’

ஆதித்தனை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றுப் பேசினான்.

அழைப்பைத் துண்டித்தவன் “ அகத்தியன் சார் தான் கூப்பிட்டு இருந்தாரு.. பிளைட் லேன்ட் ஆகிடுச்சான்னு கேட்டாரு.. ” அவன் சொல்ல யாரிடமோ சொல்லியது போல் அமர்ந்திருந்தாள்.

அவன் இன்று வருவதைக் கூட யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.. அகத்தியன் தான் அவரது சீடனுக்கு ரகசியத் தகவல் அனுப்பி இருந்தார். அங்கு சென்ற பின் அவளும் அவளும் அவனை அழைக்கவில்லை. அவன் அழைப்பையும் ஏற்கவில்லை. அவ்வளவு ஏன் ஆதித்தனிடமும் பேசவில்லை. பயம்.. எங்கே அவர்களிடம் பேசினால் அங்கிருந்து கிளம்பிவிடுவோமோ என்ற பயம் தான் அவளை அவ்வாறு செய்ய வைத்தது.

பாதியில் கிளம்பி வந்துவிட்டாள் என்றால் அவ்வளவு தான்.. அவளறியாத அத்துவை அறிமுகம் செய்யவும் துணிவான் அவன்.

அவனைக் கரம் பிடித்த நாளிலிருந்து அவனை தோழனாக.. கணவனாக.. உணர்ந்திருந்தவளுக்கு அவள் கருவுற்றிருக்கும் போது தாயாகவும் தந்தையாகவும் தன்னை உணர வைத்தவன் அவன். சில சமயங்களில் அடம் பிடித்து ஆதியாகவும் உணர வைத்துள்ளான்.

அதையெல்லாம் யோசித்தே பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களைக் கடத்தி கடல் கடந்து வந்துவிட்டிருந்தாள்.

வாகன நெரிசலில் சிக்கித் தவித்து நகரை விட்டு வெளியே வரவே வெகு நேரம் பிடித்தது. அவள் களைத்துப் போயிருப்பதைக் கண்டவன்

“ பையு இறங்கு.. நான் ஓட்டுறேன். நீ ரெஸ்ட் எடு ” என்றான் மறுபடியும்.  

“ ஆதி.. இளா அண்ணாவ பார்த்திங்களா? ” என ஆதித்தனிடம் அவள் பேச்சுக் கொடுக்க இவன் அமைதியாகிவிட்டான்.

இளா.. இளம்பரிதி. கதிர் – நிலாவின் காதலுக்கு கடவுள் அளித்த பரிசு அவன்.

கியர் மாற்ற வந்தவள் அவன் கரம் அதிலிருப்பதைப் பார்த்து.. கியரே மாற்றாமல் சமாளித்து ஓட்டி வர.. பத்திரமாய் வீடு போய் சேரலாம் என எண்ணி அவன் கையை எடுத்துக் கொள்ள.. ‘ அது ’ என்றவளின் ஓரப் பார்வை அவனை உரசிச் சென்றது.

இவளது காருக்குப் பின்னே வந்து கொண்டிருந்த யுனோவா கார் இவர்களை ஓவர் டேக் எடுக்க.. எதிரே வாகனம் வந்தவுடன் சட்டென கட் எடுத்து இவர்களது காருக்கு முன் புகுந்தது. தன் காரின் வேகத்தைக் குறைத்தவள் என்ன நினைத்தாளோ வேகத்தைக் கூட்டினாள்.

காற்றைக் கிழித்துக் கொண்டு கார் பறக்க.. ஆதி கை தட்டி சிரிக்க.. அத்துவோ அதட்டினான்.

“ பைரவி.. அவன் போனா போயிட்டு போறான் விடு.. நீ வேகத்தைக் குறை..   ” அதட்டலுக்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் வேகத்தை இன்னும் கூட்டி அந்த யுனோவாவை நெருங்கும் சமயத்தில் முன்னே சென்றிருந்த கார் அப்படியே நின்றுவிட..

“ பைரவி… ” என்றபடி அத்து ஆதித்தனை தன்னுடன் அணைத்துக் கொண்டு விழிகளை மூடிக் கொண்டான்.

“ அத்து ” என்றபடி பிரேக்கில் காலை வைத்தாள்.

ஒரே ஒரு மணித்துளி.. நிகழவிருந்த கோர விபத்தை சாமர்த்தியமாக தவிர்த்து காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

அவள் காரைச் செலுத்திக் கொண்டிருந்த வேகத்திற்கு சட்டென ப்ரேக் அடித்திருந்தால் கார் கவிழ்ந்திருக்கும் இல்லையெனில் முன்னே நின்ற காருடன் மோதி சிதைந்திருக்கும்.

பிரேக்கில் காலை வைத்தவள் சட்டென காரை இடப்பக்கமாகத் திருப்பி வெட்ட வெளிப் பகுதிக்குள் விட்டு வேகத்தைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாள். அவளது முட்டாள் தனத்தினால் நிகழவிருந்ததை நினைத்துப் பார்க்க உடல் ஒரு முறை குலுங்கியது.

“ ம்மா.. தண்ணி குடி.. ” என ஆதி நீட்டிய தண்ணீரை வாங்கி கவிழ்த்துக் கொண்டவள் அத்துவைத் தேட வெளியில் நின்றிருந்தான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்னவென்று அவனிடம் விசாரித்துக் கொண்டிருக்க.. அவனை எப்படி எதிர் கொள்ளப் போகிறோமோ என்று பயத்தில் வியர்த்தது.

அங்கிருந்தவர்களிடம் ஏதோ பேசி சமாளித்து வந்தவனின் முகம் ரௌத்திரமாய் இருந்தது. எங்கே அடித்து விடுவானோ என்ற பயத்தில் ஆதித்தனை எடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டு இறங்கினாள். அவன் அவள் முகம் கூட பார்க்கவில்லை. தண்ணீர் எடுத்து பருகிவிட்டு மியூசிக் ப்ளேயரை ஆன் செய்து காரைக் கிளப்பினான்.

அவனால் எத்தனை மெதுவாக வர முடியுமோ அத்தனை மெதுவாக காரை ஓட்டி வந்தான். ஒரு மணி நேர பயணம் மூணு மணி நேர பயணமாக மாறியதில் அவனிடமிருந்த கடிகாரம் அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தது. வேண்டுமென்றே செய்கிறான் என்று புரிந்தது. அவனிடம் கேட்கவா முடியும் ?     

வீடு வந்து சேரும் முன் ஆதி உறங்கியிருக்க.. அவனை உள்ளே படுக்க வைத்தவள் குளித்துவிட்டு வர.. அவள் போகும் போது எப்படி இருந்தானோ அப்படியே சோபாவில் அமர்ந்து தலையை பின்புறமாகச் சாய்த்து விழி மூடியபடி அமர்ந்திருந்தான்.

அவன் அப்படியெல்லாம் அமர்ந்து பார்த்ததேயில்லை. பயம் ஒரு ஓரமாய் இருந்தாலும் அவன் அமர்ந்திருந்த தோற்றம் மனதைப் பிசைய.. உள்ளுக்குள் எழுந்த உதறலை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவனருகில் சென்று அமர்ந்தாள். அழைக்கலாம் என்றாள் வார்த்தை அவளுடன் வாக்குவாதம் செய்ய.. மெல்ல கரத்தை எடுத்து அவன் சிகை கோதச் செல்ல.. விருட்டென எழுந்து சென்றான். அறைக்கதவு சாத்தப்பட்ட விதமே இது உனக்கு விழ வேண்டிய அறை என அவளிடம் சொல்லியது.

பைரவி மானசீகமாக முட்டிக் கொண்டாள். பின்னே அவள் நினைத்து வந்ததென்ன இங்கு நடந்து கொண்டிருப்பதென்ன.. அத்தனை நாள் அவளை அங்கு தனியே தவிக்க விட்டதற்காக அவனை வைத்து செய்ய வேண்டும் என எண்ணியிருக்க இங்கு அவனல்லவா வைத்து செய்கிறான்.

“ பையு உன் மாமாக்கு கோவப்பட எல்லாம் தெரியாது.. ஏதோ இன்னிக்கு உன் நேரம் சரியில்லாம போய் நீ மாட்டிகிட்ட.. குளிச்சுட்டு வரக்குள்ள கோவம் எல்லாம் காணாம போயிருக்கும்.. நீ போயி சமைக்கிற வேலையைப் பாரு ” என அவளுக்கே சொல்லிக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றாள்.

ஆதித்தன் இனி எழ வாய்பில்லை என்பதால் பால் காய்ச்சி அவனுக்குக் கொடுக்க தூக்கத்திலேயே குடித்துவிட்டு படுத்துக் கொண்டான். சாப்பாடு எடுத்து மேஜையின் மீது வைத்து காத்திருக்க.. அவனோ கண்டு கொள்ளாமல் ஆதித்தன் பக்கம் போய் படுத்துக் கொண்டான்.

அவள் முன்பிருந்த புட்டும் கொழுக்கட்டையும் வா வா என வரவேற்க அவன் வராமல் கடுப்படிக்க.. மத்தியில் மாட்டிக் கொண்டாள் பைரவி.

“ மாமா.. இருக்க பசியில நானே எல்லாத்தையும் சாப்டிடுவேன்.. நீங்க அப்புறமா வந்து கேக்கக் கூடாது ”

“ கொழுக்கட்டைல உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நெல்லிக்காய் போட்டிருக்கேன் ” அவள் கொடுத்த கமெண்ட்ரி எல்லாம் அவனை அசைக்கவே இல்லை.

‘ ம்ஹும்.. இது வேலைக்காகாது ’ என சொல்லிக் கொண்டு அறைக்குள் நுழைந்து இவளும் இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டாள்.

“ அத்துவுக்கு வேணாம்னா பையுவுக்கும் வேணாம்..” சத்தமாக சொல்ல.. அவன் சட்டென எழுந்து போய் சாப்பிட அமர்ந்தான்.

‘ ஹ.. யாருகிட்ட.. ’ என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அவனுக்கு எடுத்து வைக்க.. அவளைத் தடுத்து அவனே போட்டுக் கொண்டான்.

‘ அப்ப சரி.. எனக்கும் போடுங்க ’ என அவள் அமர்ந்துகொள்ள ‘ ஷ் படுத்துறாளே.. ’ என்றபடி அவளுக்கும் பரிமாறினான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு புரை ஏற.. “ என்னை திட்டாம சாப்பிடுங்க.. புரை ஏறுது பாரு.. உங்களுக்கு  ” என சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க அதிலிருந்தது என்ன பாவனை என்றே புரியவில்லை.

புரிந்துகொள்ளும் முயற்சியில் அவள் இறங்கி இருக்க.. அவன் சாப்பிட்டு விட்டு இடத்தைக் காலி செய்தான்.

மேல் மேடம் வந்து நின்றவனுக்கு குளிர் புன்னகையை வீசிக் கொண்டிருந்த நிலவும் பனிகாற்றும் மனதைக் குளிர்விக்க போதுமானதாக இல்லை. பயமே அறியாதவன் அவன்.. ஆனால் இன்று அவனுக்கே அறிமுகம் செய்துவிட்டாள் அவள்.

மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போனது மாலை நேரம்.. அவள் மட்டும் காரைத் திருப்பியிருக்காவிடில்.. சிந்தனையே சிலிர்ப்பைக் கொடுத்தது. ஆனால் அந்த நேரத்தில் அவள் அத்து என அழைத்ததை நினைக்கும் போது மனதோரம் குளிர் காற்றுடன் கூடிய பனி மழை தான் !.

அதனால் தான் அவளைத் திட்டக் கூட முடியவில்லை அவனால்.. சற்று நேரம் உலாத்தியவன் அறைக்குத் திரும்ப அவனது இரு மழலைச் செல்வங்களும் துயில் கொண்டிருந்தன.

அறையின் யன்னல் திறந்திருக்க.. போர்வையை எடுத்து ஆதித்தனுக்கு போர்த்திவிட்டு அவன் நெற்றியில் அதரங்களைப் பதித்து விலகியவன் பையுவிடம் வந்தான்.

அவளுக்கும் போர்வையைப் போர்த்திவிட்டு முத்தமிட குனிந்தவனிடம் அவள் கருவிழிகள் இரண்டும் அவள் விழித்திருப்பதை காட்டிக் கொடுக்க.. அத்தனை நாள் அவனிடம் பேசாமல் அவனைத் தவிக்க விட்டாள் அல்லவா.. அவளும் தவிக்கட்டும் என எண்ணி நிமிரப் போக.. விழி திறந்தவள் சட்டென அவன் டீ-சர்ட்டை பிடித்து இழுத்து முத்தமிட்டு “ கொடுக்கணும்னு  தோணிச்சுன்னா.. இப்படிக் கொடுத்திடனும்.. யோசிக்கக் கூடாது ம்ம். இத நான் சொல்லலீங்க.. என்ர வூட்டுக்காரர் சொன்னது.. ” என கோவைத் தமிழில் கொஞ்சியவளை கொஞ்சத் துடித்த மனதை அடக்கி நகர்ந்தான்.

“ மிதுன்.. ”

“ அத்து.. அண்ணி வந்துட்டாங்களா? ”

“ ம்ம்.. அண்ணி வந்தாச்சு ”

“ சரி எப்போ இங்க வரீங்க? ”

“ இங்க ஒரு ரெண்டு நாள் வேலை இருக்கு. அதை முடிச்சதும் கிளம்புறோம்.”

“ … ”

“ இளா பக்கத்துல இருக்கானா.. இருந்தா கொடு. ஊருல இருந்து வரும் போது நிலா வீட்டுல இருந்து ஏதோ எடுத்துட்டு வர சொன்னான். கேட்டுக்கிறேன் ”

“ அவன் தாத்தா கூட கதை கேட்டுட்டு இருந்தான்.. தூங்கிருப்பான் அத்து. நான் காலைல எழுந்ததும் கூப்பிடுறேன் ” என அணைப்பை துண்டித்தான்.

அவனது தாத்தாவை நினைத்ததும் இதழோரம் முளைத்தது புன்னகைக் கீற்று. அதுல் மிதுன் குழந்தைப் பருவங்களை அவர் தவறவிட்டிருக்கலாம்.. ஆனால் அதற்கும் சேர்த்து அவரது பொழுது இளம்பரிதி, எயில், ஆதித்தன், வளவனின் குறும்பில் கரைந்து மழலையில் மிதந்து இனிதாய் கழிகிறது.

காலையில் அவள் எழும் போதே அத்துவையும் ஆதியையும் காணவில்லை.. நேரம் பார்க்க.. ஏழு தான் ஆகியிருந்தது. எழுந்து வெளியே வந்தவள் திகைத்து நின்றாள்.

அதிகாலை வேளை பெய்த மழை நீரில் இருவரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். இவர்களோடு புதியதாய் அவர்களது அன்புக் கூட்டில் இணைந்திருக்கும் நாய்க்குட்டியும் சேர்ந்துகொண்டு புட்பால் விளையாடிக் கொண்டிருந்தது.

“ கோவி.. ஆதியை விடாத.. பாஸ் தி பால்.. ” என அதன் பாஸ் இட்ட கட்டளையை நிறைவேற்ற அது ஆதியை புரட்டித் தள்ளிவிட்டு பாலை அத்துவிடம் சேர்த்தது. சேற்றில் உருண்டவன் எழுந்து நாய்குட்டியுடன் சண்டை போட்டு பின் அத்துவிடம் வந்து நிற்க.. அடுத்து அவன் என்ன செய்வான் என்பதை உணர்ந்தவள் “ ஆதி… ” என குரல் கொடுத்தபடி போய் நின்றாள்.

“ அச்சோ அம்மா.. ” என அவன் அதிர்ந்து நிற்க

“ அச்சோ பையு.. ” என அத்துவும் பயந்தது போல் நடிக்க.. இருவரையும் பார்த்த கோவி.. கட்சி மாறி பையுவிடம் சென்று நின்றது.

கோவியை முறைத்தவள் “ ஆதி என்ன பண்ணிட்டு இருக்க… ” என்றாள் அத்துவை முறைத்துக்கொண்டே.

“ அம்மா… ” என அவன் ஆரம்பிக்கவும் கோவி அவளை சேற்றில் தள்ளி விடவும் சரியாக இருந்தது.

“ கோவிவி… ” எனப் பல்லைக் கடித்து அவள் எழ முயற்சிக்க அது எழ விடாமல் மழை நீரை அவள் மேல் இறைத்து விளையாட ஆரம்பித்தது. அத்துவும் ஆதியும் ஹை-பை போட்டுக் கொண்டனர்.

கோவிக்கு அத்துவின் கட்டளையே சாசனம்… இவள் ஆதியிடம் பேச்சுக் கொடுத்த வேளையில் அத்துவின்  கண்ணசைவில் அவளை கீழே தள்ளிவிட்டு விட்டது.

எப்படியோ சேற்றில் விழுந்தவள் கோவியிடமிருந்து தப்பித்து எழுந்து “ மாமா..” என அவனைத் துரத்த ஆரம்பித்தாள். அவனோ அவளிடம் சிக்காமல் ஓட அவள் விழுந்து எழுந்து அவனைப் பிடித்து மழை நீரில் தள்ளி விட்டு பழி தீர்த்துக் கொண்டாள். அதன் பிறகென்ன ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் !

திரண்டிருந்த கருமேகக் கூட்டங்களெல்லாம் அவர்களோடு ஆனந்தமாய் ஆட்டம் போட அவா கொண்டு மண்ணை வந்தடைந்து மழைதுளியாய் மகிழ்ச்சியுடன் அவர்களை முத்தமிட்டன.

மழை கவிதை கொண்டு வரும் போது கதவை அடைக்கக் கூடாதல்லவா ? அதனால் மழை நின்றதும் தான் அவர்களது கூட்டுக்குத் திரும்பினர். பைரவி குளித்து முடித்து உணவை தயார் செய்ய.. அத்து ஆதியை குளிக்க வைத்து தயார் செய்தான். பின்பு அவனுக்கு உணவு ஊட்டி.. தானும் உண்டு தயாரானான்.

“ ம்மா… நானும் உன்கூட இருக்கேன். ஊருக்கு போல.. ” என பையுவின் கால்களைக் கட்டிக் கொண்டு அடம் பிடிக்க.. அவள் அத்துவைப் பார்த்தாள். அவன் ஒரு சொல் சொன்னால் போதும் ஆனால் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் வேண்டுமென்றே. இன்னும் அவள் மேலுள்ள கோவம் மிச்சம் இருக்கிறது போலும்.

“ இல்ல ஆதி.. அம்மாக்கு இங்க வேலை இருக்கு.. நீ எயில் பாப்பா.. கதிர் மாமா கூட ஊருக்கு போ.. நானும் அப்பாவும் நாளைக்கு வரோம்.. ” என சமாதானம் செய்ய

“ ம்ஹும்… ” என அவன் நகராமல் நின்றான்.

“ இளா அண்ணா கூட விளையாட யாருமே இல்லையாம்.. அண்ணா அழுதுட்டு இருக்கான்.. நீ வரலன்னு நா சொல்லிடட்டா ” எனக் கேட்டதும்

“ அண்ணா அழுகுறானா… ”

“ ம்ம் ”

“ சேரி.. அப்ப நா ஊருக்கு போயி அண்ணா கூட விளையாடுறேன்.. நீ சீக்கிரம் வந்துது.. ” என தாடை பிடித்துச் சொல்ல..

“ சரி செல்லம்.. இப்போ நீங்க அப்பா கூட கிளம்புங்க ” என அவனை அத்துவுடன் அனுப்பி வைத்தாள்.

தற்போது கதிர், யுகா வாசம் செய்வது சரளைபதியில். விக்ரம் மட்டுமே தஞ்சையில். அவனும் இன்னும் சில நாட்களில் அவர்களோடு இணைந்து கொள்ள இருக்கிறான். அதுலும் பையுவும் பையுவின் ஆராய்ச்சிப் படிப்பின் போது தஞ்சை வாசம்.. மற்ற நாட்களில் கோவை வாசம் தான்.

மண்ணின் மைந்தர்கள் அமைப்பை உருவாக்கி அதில் வெற்றி கண்டதும் கோவையில் தான். அதன் பிறகே தஞ்சையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளனர்.

முன் தினம் நிகழ்ச்சிக்காக இங்கு வந்தவர்கள் இப்போது ஊர் திரும்பவிருக்கிறார்கள். பைரவிக்கு இங்கு இரு தினங்கள் கல்லூரியில் வேலை இருப்பதாலும் அத்துவிற்கும் அவனது அமைப்பு சார்பாக வேலை இருப்பதால் ஆதித்தனை கதிர், யுகா, விக்ரமோடு ஊருக்கு அனுப்ப அழைத்துச்சென்று விட்டவன் வீடு திரும்பினான்.

வீட்டின் வாயிலில் நுழையும் போதே.. அலைபேசி இசைத்தது. அகத்தியன் தான் அழைத்திருந்தார்.

அழைப்பை ஏற்றவன் அவர் சொன்ன செய்தியில் அப்படியே நின்றுவிட்டான். எதிர்பாராமல் வந்ததை எப்படி எதிர்கொள்ளவது எனத் தெரியாமல் நின்றுவிட அவன் வந்துவிட்டதை அறிந்து உள்ளிருந்து ஓடி வந்தவளும் அப்படியே நின்றுவிட்டாள்.

அன்றலர்ந்த பன்னீர்ப்பூ கூட அவள் முன்பு தோல்வியைத் தழுவி நிற்கும். அத்தனை மலர்ச்சி அவள் அகத்திலும் முகத்திலும் !

ஒரு சில மணித்துளிகள் விழிகள் மட்டும் மொழியட்டும் என அனுமதி வழங்கப் பட்டிருக்க.. அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

மெல்ல மெல்ல அவன் அதரங்கள் அரும்ப.. கைகளை விரித்து அவளுக்காகக் காத்திருந்தான். ‘ அத்து ’ என அழைத்தபடி அவனிடம் வந்து தஞ்சமடைய.. ஆனந்தமாய் அவளைத் தூக்கிச் சுற்றினான்.

அத்தனை ஆனந்தம் அவனிடம் அவளுக்காக.. அவளை இறக்கி தன்னுடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அகத்தியன் அழைத்து அவனிடம் சொல்லிய விடயம் இதுதான் அவன் பைரவிக்கு அந்த ஆண்டிற்கான இலக்கியத்துறையின் தேசிய விருது கிடைத்துள்ளது. நிச்சயம் அவனுக்குக் கிடைத்திருந்தால் கூட அத்தனை உவகை அடைந்திருக்க மாட்டான். அவளுக்கு வெற்றி வாகை சூட்ட காத்திருக்கும் வேந்தனல்லவா அவன் !

அவன் இதழ்கள் அவள் காதோரமாய் உரசி “ கங்க்ராட்ஸ் பையு…” என்றது.

“ தாங்க்ஸ் சொல்ல மாட்டேனே…. ”

“ நானும் கேக்க மாட்டேன் ” என்றபடி அவள் நெற்றியில் மென்மையாக ஒற்றி எடுத்தான் இதழ்களை.

அவளும் முத்தமிட்டு “ இப்ப கோவம் போயிடுச்சா.. என்ர மாமாவுக்கு ”

“ எப்போ இருந்துச்சு.. இப்போ போக.. ” என்றபடி அவள் மூக்கோடு மூக்கு வைத்து உரச..

“ ஆனா.. எனக்கு இருக்கு. ” என்றாள் அவன் கழுத்தோடு கரம் கோர்த்து.

“ அஹான்.. ரொம்ப கோவம் இருக்கும் போலவே என்ர வூட்டுக்காரிக்கு.. ஏனாம்?? ” என அவள் இடையோடு கை கொடுத்து அணைக்க.

“ நீங்க எப்படி என்னை போக சொல்லலாம்.. எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல.. என் கண்ணுக்குள்ள ஆதியும் நீங்களும் மட்டும் தான் இருந்தீங்க.. ”

“ ம்ம்ம்.. ”

“ ஆனா உங்களுக்கு அப்படியில்ல போல.. இருந்தா என்னை உங்களை விட்டு அனுப்பியிருப்பீங்களா ”

“ சரி நான் தான் அனுப்புனேன்.. நீ என்னை கூப்பிட்டு இருக்கலாமே உன்கூட.. ”

“ அப்போ.. நான் கூப்பிட்டு இருந்தா வந்திருப்பீங்களா ? ”

“ ம்ஹும்.. அதுக்கு வாய்ப்பேயில்லை.. நான் உன்கூட வந்துட்டா இங்க இருக்க வேலை எல்லாம் யாரு பார்க்கிறது. ம்ம் ” என அவள் நெற்றியில் முட்ட.

“ அதானே ! போங்க.. போங்க.. போய் உங்க வேலையை மட்டும் பாருங்க.. ” என அவள் விலக

“ இப்பவும் என் வேலையைத் தான் பார்க்கிறேன்.. ” என காதல் அதிகாரம் ஒன்று அவளுள் எழுதத் துவங்கினான்.

அவள் வீட்டு கடிகாரம் அவளுக்குக் கரடி வேலை பார்த்துவிட்டது. நிமிர்ந்து நேரம் பார்த்தவன் “ பையு.. யுனிவெர்சிட்டி போகணும்.. கிளம்பு.. ” என அவளை விரட்ட

‘ முன்ஜென்மத்துல வாத்தியாரா இருந்தாரு போல.. தெரியாம மேல படிக்குறேன்னு சொல்லி மாட்டிட்டு முழிக்குறேன்..  ’ என முணுமுணுத்துக் கொண்டே கிளம்பியவளை சிரிப்புடன் பார்த்திருந்தான்.

முறைத்துக் கொண்டே திரிந்தவளை முத்தமிட்டு “ போயிட்டு சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு கூப்பிடு.. இந்த ரெண்டு நாள் பையுக்காக அத்து லீவு போட்டு இருக்கேன்… ” என்று சொல்ல புன்னகையுடன் விடைபெற்றாள் அவன் ஆனந்த பைரவி.    

அவளே எதிர்பாரா வண்ணம் அவளுக்கு அறிமுகமாகி எதிர்பாரா வகையில் அவளுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து பூரண அன்பை பொழிபவன் அவன்.

அவனே அறியாமல் அவனுக்குள் பதியப்பட்ட சித்திரம் அவள்.. அதுநாள் வரை மற்றவர்களுக்கு அன்பைக் கொடுத்து அதில் ஆனந்தம் கொண்டவனை அவளது பேரன்பால் ஆனந்தம் கொள்ள வைத்தவள் அவள்.  

அவள் வெளியேறிய சற்று நேரத்தில் அவனுக்கு குறுச்செய்தி அவளிடமிருந்து..!

எடுத்துப் படித்தவன் அறைக்குள் சென்று பார்க்க அவனுக்காகத் காத்திருந்தது அவளது டைரி. மெல்லிய சிரிப்புடன் படிக்க ஆரம்பித்தான்.

பைரவி அதுலின் காதல் அதிகாரம் ஒன்று :

அவன்..

மனதோர மழைத்தூறலின் முகில் !

சந்தோசச் சாரலின் முகில் !

அக ஆனந்தத்தின் முகில் !

அவளது மழை முகில் அவன் !

 

ஆம் ! மழை கொண்டு அவள் வாழ்வை தளிர்க்க வந்த மழை முகில் அவன். பைரவியாய் அவன் அகத்தில் நுழைந்து ஆனந்த பைரவி ராகம் மீட்டும் அவள்.   

அவர்களது வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் அன்பிலும் பாசத்திலும் நேசத்திலும் காதலிலும் கரைந்து போகும் என்பது சத்தியம்.

அன்புடை நெஞ்சங்கள் இரண்டும் செம்புலப் பெயல் நீர்ப் போல் கலந்திருக்க.. அவர்களது இல்லறம் நல்லறமாக செழித்துச் சிறக்க.. வாழ்த்தி விடைபெருவோமாக!  

சுபம்,

 

    

 

  

 

      

       

 

 

 

   

   

 

 

 

   

              

 

   

 

     

            

 

  

    

  

 

                  

 

   

 

     

 

           

 

         

         

 

Advertisement