Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 35

 

“ ஹேய்.. அங்க பாரு பைரவி அது அத்து அண்ணா மாதிரி இல்ல ? ”

அருகிலிருந்தவளின் அமைதி கண்டு சூர்யா நோக்க.. அவளோ பார்த்த விழி பார்த்தபடி நின்றிருந்தாள்.

எத்தனை நாட்களுக்குப் பிறகு அவள் கண்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறான்.. மூன்று மாதங்களுக்கும் மேல் இருக்கும்.. இறுதியாக இருவரது இதயம் இடம் மாறியது பற்றி பகிர்ந்த பொழுதில் பேசிக் கொண்டது.. பார்த்துக் கொண்டது.. அதாவது யுகாவின் திருமணத்தின்போது ஊரில் வைத்து பார்த்தது.. இங்கு தஞ்சை வந்த பிறகு ஒரு தரம் கூட அவனை சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை அவன் !

எப்பொழுது அவனைப் பற்றிக் கேட்டாலும் அங்கு இருக்கிறான் அதைச் செய்கிறான் இப்படி ஏதாவது ஒரு பதில் தான் அவளுக்கு..

இதில் வேலையை வேறு விட்டுவிட்டானாம்.. எதுவுமே தெரியவில்லை ! எதுவுமே புரியவில்லை பாவைக்கு.. ஆனால் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.. அது மட்டுமே காரிகையின் கருத்தில்.. கவனத்தில்.

“ பைரவி.. ” என சூர்யா உலுக்க

‘ என்ன ’ என்பதாய் திரும்பினாள்..

“ அத்து அண்ணா.. ”

“ அதுக்கு ” அலட்டலான அலட்சியத்துடன்

“ அதுக்கு ஒன்னும் இல்ல.. நீ இங்கயே இரு.. நான் போய் பார்க்கிறேன்.. எத்தனை நாளாச்சு அவரைப்பார்த்து ” என்றபடி அவள் நகர்ந்து விட, பைரவிக்குத்தான் போவதா வேண்டாமா என்ற தயக்கம்..

தயக்கம் எல்லாம் தத்தையின் காதல் முன்பு தவிடுபொடி.. நின்றிருந்தாள் அவன் முன்பு.

சூர்யாவின் கேலிப் பார்வையை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை..

“ ஹாய் அண்ணா.. இன்னும் ஞாபகம் வைத்து இருக்கீங்களா ! நான் கூட அட்ரஸ் மாறி இந்தப் பக்கம் வந்துட்டீங்கன்னு நினைச்சேன் ” என்ற சூர்யாவிடம்

அத்துவின் அக்மார்க் புன்னகை பதில் சொல்லிவிட..

“ எப்படி இருக்கீங்க அண்ணா ? நீங்க இந்த ஊர்ல இருக்கீங்க மட்டும்தான் பேரு.. கண்ணில படவே மாட்டேங்கறீங்கன்னு கதிர் மாமாகிட்ட கேட்டாலும் கரெக்டான பதில் கிடைக்கல ”

“ சூப்பரா இருக்கேன் டா.. கொஞ்சம் பிஸி.. இனிமே அண்ணா ஆல்வேஸ் அவைலபில்.. அவசர உதவிக்கு அழைக்கலாம் ” என்றவன்

“ சரி கோர்ஸ் எப்படி போகுது ? எக்ஸாம் எப்போ ? ” பார்வை பைரவியிடம் மட்டுமே..

அவள் அமைதியாக இருக்க.. சூர்யா பக்கவாட்டில் இடிக்க.. அவளை முறைத்தாளே ஒழிய பதில் பேசவில்லை.

அவர்களுக்குள் பியார் போர் போல என நினைத்தவள் “ சரி அண்ணா நான் கிளம்பவா ” என அனுமதி கோர

“ ஒரு நிமிஷம் ” என்றவன் இரு பார்சல்களை எடுத்து அதில் ஒன்றை அவளிடம் கொடுத்தான்.. மறுக்காமல் வாங்கிகொண்டாள்.

அடுத்த பார்சலை அத்து பைரவியிடம் நீட்ட.. அவளோ முகத்தை திருப்பிக்கொண்டு கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்..

“ பையுக்கு வேண்டாமாம்.. இதையும் நீயே வெச்சுக்கோ சூர்யா ” என்று அவன் சூர்யாவிடம் நீட்ட.. வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டாள் பையு.. அவனை முறைத்துக்கொண்டே.  

இருவரது செய்கையையும் சிரிப்புடன் பார்த்திருந்த சூர்யா,

“ என்ன அண்ணா இது ? ” என்று வினவ பிரித்துப் பார்க்குமாறு கூறினான்.

இருவருக்கும் அழகிய புடவை.. இருவரும் புரியாமல் பார்க்க..

“ இன்னிக்கு ஈவினிங் ஒரு ஃபங்ஷன் இருக்கு ” என்றான்.

“ எனக்கு ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு ” அவசரமாய் அவளிடமிருந்து

அவன் சூர்யாவை பார்க்க.. அவளோ கள்ளச் சிரிப்புடன் தலையசைக்க.. அதிலேயே அவனுக்கு வேண்டிய செய்தி கிட்டிவிட்டது.

“ நான் அகத்தியன் சார் கிட்ட பேசுறேன் ”

‘ எல்லார்கிட்டயும் பேச நேரம் இருக்கும்.. ஆனா என்கூட பேச மட்டும் நேரம் இருக்காது ’ ஐ பி கோ செக்ஷன் 143 ன் படி குற்றம் சாட்டியது அவள் கண்கள்..

அதற்குள் அவன் அளித்திருந்த புடவையை பார்த்த சூர்யா உற்சாகத்தில் துள்ளி குதித்தாள்

“ அண்ணா.. சூப்பரா இருக்கு.. கண்டிப்பா இது உங்க செலக்சன் தானே ? ”

அவன் புன்னகையுடன் ஆமோதிக்க..

“ அருமையா இருக்கு அண்ணா.. அப்புறம் இந்த தங்கச்சி கிட்ட இருந்த ஒரு சின்ன ரெக்வஸ்ட்.. ”

‘ என்ன ’ என்பதாய் பார்த்தவனிடம்

“ இப்படி எல்லாத்தையும் பார்த்து பார்த்து அட்டகாசமா சூஸ் பண்ற நீங்க.. எனக்கு வரப்போற அண்ணியையும்.. ” என சொல்வதற்குள் பைரவரிடம் பல அடிகளை பெற்றிருந்தாள் சூர்யா..

“ ஆ.. வலிக்குது.. இரு இரு நாத்தனார் என்னையே அடிச்சுட்ட இல்ல.. உன்னை பார்த்துக்கறேன் ” என அவள் தேய்த்துவிட்டுக் கொள்ள

“ சூர்யா.. வலிக்குதா ? ” என அன்பான அண்ணனாய் அவதாரமெடுத்து இருக்க.. ‘ அடங்கப்பா ’ என்றுதான் பார்த்திருந்தாள் இவள்..

ஆனால் ஒன்றை மட்டும் பைரவி ஆராயாமல் ஆமோதிப்பாள்.. அவன் அடிக்கடி சொல்லுவான். நிலாவையும், சூர்யாவையும் என் செல்ல தங்கச்சிங்க என.. அது வெறும் வார்த்தை அல்ல அவனது ஆத்மார்த்தமான அன்பின் அடையாளம்.. உடன்பிறப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அழகான உதாரணம் அவளவன் தான்..

“ ம்க்கும்.. ம்க்கும் ”  நானும் இருக்கேன் என காட்டிக்கொள்ள..

கண்டு கொண்டால் தானே ! பேச வேண்டியதைப் பற்றி பேசி.. பகிர வேண்டியதைப் பகிர்ந்து.. பாசமலர் பார்ட் த்ரி ஓட்டி முடித்து விட்டு இவள் பக்கம் திரும்பினர்..

இவள் கையிலிருந்த குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்..

‘ அதானே.. இவ இதுக்கெல்லாம் அசருர ஆளா.. ’ என்றுதான் பார்த்திருந்தான் அதுல்.

சூர்யா விடைபெற்று விட,

“ அகத்தியன் ஐயாவ பார்த்துட்டு வந்திடறேன் ” என்றான்.

அவளோ காற்றில் கரைந்திருந்த கவிதைகளை விரல் விட்டு களைந்து எடுத்துக் கொண்டிருக்க.. இவன் நகர்ந்து விட்டான்.

அவன் சுவாசத்தைக் கூட உணர்த்து விடுபவள் அவன் கூறியதை உணராமல் இருப்பாளா ! கேட்கல என கெத்துக் காட்டிக் கொண்டிருந்தவள் அகத்தியனிடம் போய் ஏதும் கேட்டு வைத்தால் ? என்று தோன்றியதும்

“ என்னங்க.. ” என ஓட்டம் பிடித்தாள்.

இவள் அவனை பிடிக்கவும் அகத்தியன் அவ்விடம் வரவும் சரியாக இருந்தது.. அப்படியே நின்று விட்டாள்.

“ அதுல் ”

“ ஐயா.. எல்லாம் தயாராக உள்ளது.. தாங்கள் எப்பொழுது வருவீர்கள் ? ”

“ நான் ஆறு மணி அளவில் வந்து விடுவேன்.. இன்று கல்லூரியில் ஒரு கூடுதல் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது.. அதனால் தான் தாமதம் ”

“ இருக்கட்டும் ஐயா.. ஆனால் நிச்சயம் நீங்கள் வந்த பிறகுதான் நிகழ்ச்சி துவங்கும் ”

“ இல்லை அதுல்.. ”

“ குறுக்கிட மன்னிக்கவும் ஐயா.. தங்களால் தான் அந்தக் காரியம் நடைபெற்றுள்ளது.. அதனால் உங்களுக்காகக் காத்திருப்போம் ” உறுதியான குரலில் சொல்லிவிட

அவனது தோளில் தட்டினார்.. அவரைப் பொறுத்தவரையில் அவர் செய்தது அவ்வளவு பெரிய விடயமல்ல.. அதுலிற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.. காரணம் அவருடைய சீடன் அவன்.

அதுல்.. அவன் பெயரைப் போலவே அவனும் சற்று வித்தியாசமானவன் தானே !

அவரது சீடர்களில் மிகச்சிறந்தவன். அவரைப் பொருத்தவரை அதியனிடம்  கூட அத்தனை பிரியம் காட்டியதில்லை.. ஆனால் அதுல் என்றுமே அவரின் அன்புக்குரியவன்.

பைரவியைக் காட்டி அவன் ஏதோ சொல்ல.. அவர் அவளை அழைத்தார்.

‘ இவங்கள ’ என்றவள் அவரிடம் வர

“ வாழ்த்துகள் பைரவி ” என்றார்.

எதற்கு என்று தெரியாவிட்டாலும் நன்றி சொல்லிவிட்டு நின்றாள்.

“ பிறகு பார்க்கலாம்.. ” என அவர் நகர்ந்துவிட, இவள் அத்துவை கேள்வியாகப் பார்த்தாள்.

“ சூர்யா.. கதிர், நிலா கூட வந்துவிடுவா.. நான் இங்கயே இருக்கேன்.. நீ ரெடி ஆகிட்டு வர்றியா ? ”

அவளது கேள்விக்கு பதில் இதுவல்லவே ! அவனுக்கும் தெரியுமே.. பிறகு ?

அவள் அசையாது நிற்க.. நானும் சாரி சொல்ல மாட்டேன் என இவனும் மார்புக்கு குறுக்காக கை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்..

இவள் பார்வையைத் தவிர்க்க.. அவன் பார்வை வேறு தடத்தில் ! கல்லூரியின் சந்து பொந்தெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அப்போதுதான் கவனித்தாள் !

அடர் நீல நிற சட்டையும்.. அதே நிறத்தில் கரையிட்ட வேட்டியுமாய் நின்றிருந்தான்.. அவனுக்கு வேட்டி சட்டை அசத்தலாக இருக்கும் ஆனால் அடிக்கடி உடுத்த மாட்டான்.. அவசியமெனில் நிச்சயம் உடுத்துவான்.

பிடிவாதமாய் நின்றிருந்தவனின் மீது நியாயமாய் பார்த்தால் கோபம் இருக்க வேண்டும் ! ஆனால் இது என்ன காரிகையிடம் காதல் ஊற்று..

அவளது அரவம் இல்லாது போக, ‘ என்ன பண்ணுறா ? ’ என மெல்ல திரும்பி பார்த்தான்..

அவள் அத்தானை அசால்டாக சைட் அடித்துக் கொண்டிருக்க..

“ அடிப்பாவி.. சைட் ஆஹ் அடிக்கிற ? ”

‘ என்ன பேச்சு இது ’ என்றுதான் பார்த்தாள்..

ஆனால் சைட் அடிப்பதைப் பற்றி கேட்க சைட் அடிக்கிறாயா என்று கேட்பதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.. அகராதியை அலசிப் பார்த்து விட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்..

‘ அதான் தெரிஞ்சு போச்சே ! ’ என நினைத்தவள் பாரபட்சமின்றி பகிரங்கமாக சைட்டடிக்க.. இவனுக்கு சிரிப்புதான் வந்தது..

அதற்குள் அழைப்பு வர.. எடுத்துப் பேசியவன் “ பைரவி.. நேரமாச்சு.. நான் எங்கேயும் போகமாட்டேன் உன் கூடத்தான் இருப்பேன்.. அப்புறமா பொறுமையா நிதானமா பார்த்துக்கோ இப்ப ரெடி ஆகிட்டு வா ” என்றதும் அவ்விடம் விட்டு நகர்ந்து விடுதியை அடைந்தாள்.

அவளுக்கான அவன் தேர்வை ரசித்தபடியே தயாராகி நுழைவு வாயில் அருகில் காத்துக் கொண்டிருந்தவனிடம் வந்து சேர்ந்தாள்.

“ ம்க்கும்.. ”

“ வந்துட்டியா.. ” என நிமிர்ந்தவன் இமைக்க மறந்திருந்தான்..

ஆகாய வண்ணமும் வெண்மையும் கலந்த கலம்கரி புடவை அத்தனை அழகாய் பொருந்தி இருந்தது அவளுக்கு..

“ ரொம்ப அழகா இருக்கு.. ”

அவளது கன்னக்கதுப்புகளில் வெட்கத்தின் சாரல்..

“ நான் புடவையை சொன்னேன் ” நமுட்டுச்சிரிப்புடன் அவன்.

“ மாமா… ” என பல்லைக் கடித்தவள் “ போலாமா ?.. ” என்றாள்.

“ போலாமே.. ” என்றவன் அவளுக்காக கரம் நீட்ட.. இதழோரம் மலர்ந்த புன்னகையை மறைத்து கையில் இருந்த பர்ஸை அவனிடம் கொடுக்க..

‘ பாருடா ’ என பார்த்து வைத்தான்.

அவள் மெல்லிய சிரிப்புடன் அவனுடன் கரம் கோர்த்து நடந்தாள்.

கார் இருக்குமிடம் வந்தவன் கார் கீயை அவளிடம் தர

“ என்ன டிரைவர் வேலை பார்க்க வைக்கிறதுல அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம் ! ” இடையில் கரம் வைத்து முறைக்க.. அவனோ தோளை குலுக்கினான்.

பெரும்பாலும் அவளை காரோட்ட விடுவதில் அத்துவிற்கு அத்தனை ஆனந்தம்… அடம் பிடித்து அவளுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றான்.. அவளுடனான அந்த பயணம் அவன் மனதுக்கு பிடித்தமான ஒன்று..

இருவரும் வண்டியில் ஏறியிருக்க.. பைரவி காரைக் கிளம்பும்முன் “ இரு இரு.. ” என்று அத்து குரல் கொடுக்க.. அவனைப் புரியாமல் பார்த்திருந்தாள்.

அவன் அவள் அருகில் நெருங்கி வர.. விழி விரித்துப் பார்த்தவள் ‘ என்ன பண்ண போறாரு ’ என்று மனதில் நினைத்து அது இதயத் துடிப்பில் எகிறி வாய் வழியே வந்துவிட..

“ ஹ்ம்ம்.. சீட் பெல்ட் போட போறாரு ” என்று அவள் காதோரம் கிசுகிசுத்துவிட்டு அவளுக்கும் பெல்ட்டை போட்டுவிட்டு அவனுக்கும் போட்டுக்கொண்டான்.

ச்சை.. என மானசீகமாய் தலையில் தட்டிக்கொண்டவள் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க..

அவளை ஒருமுறை பார்த்தவன் இதழ்களில் தவழவிட்ட குறுநகையுடன்

“ ஏன் உனக்கு என்ன பண்ணனும் ” என்று கேட்டுவைக்க.. திரு திருவென்று விழித்தவள், அவன் புருவத்தை உயர்த்தி என்ன வென்று கேட்க

“ ஹான்.. ஒ.. ஒண்னுயில்ல.. எங்க போகணும் ? ” என்று சாலையின் பக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்..

“ முதல்ல கோவில்.. ” என்றான்.

“ அப்புறம்.. ”

“ முதல்ல அங்க போகலாம்.. அப்புறம் அப்புறமா சொல்றேன் ”

“ வர வர என்ன பண்றாங்கன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது ” என அவனுக்கு கேட்கும்படி சத்தமாக முணுமுணுத்துவிட்டு காரைக் கிளப்பினாள்.

அவளது கவனம் முழுதும் சாலையில் இருக்க.. அவனது கவனம் முழுதும் அவளிடம் இருந்தது..  

கியர் மாற்றுவதற்காக அவள் செல்ல.. அதில் அத்து கை வைத்திருப்பது கண்டு அவனைப் பார்க்க.. அவனிடம் இயற்கையை ரசிப்பதாய் ஒரு பாவனை..

இதழ்களில் புன்னகை மொட்டுக்கள் பூத்திருக்க அவன் கை மீது தன் கையை வைத்து கியரை மாற்றினாள். இப்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க.. அவன் அதரங்களிலும் அரும்புகள்..

இப்படியே கோவில் வரும் வரை தொடர.. கோவில் வந்தவர்கள் இறைவனை தரிசித்து விட்டு ஒரு ஓரமாக வந்தமர்ந்தனர்.

“ அடுத்து என்ன பைரவி ? ”

“ நீங்கதான் சொல்லணும்.. எதுவுமே சொல்லாம கூட்டிட்டு வந்து என்னை கேட்டா ? ”

“ நான் அத கேக்கல.. டிகிரி முடிச்சுட்டு என்ன பண்ண போற ”

“ ஓ.. அதுவா.. ” என்றவள் “ கல்யாணம்தான் ”

“ என்ன.. ” என அவன் அதிர்ந்து பார்த்தான்..

“ எங்க மாமா இவ்வளவு நாள் அமைதியா இருந்ததே பெரிய விஷயம்.. இனியும் அவர்கிட்ட இருந்து அதை எதிர்பார்க்க முடியாதுங்க.. ஊருக்கு போனதும் அவரோட மருமகளுக்கு பொருத்தமான ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிடுவாரு.. என்னோட கணிப்பு அதுதான்.. ” என்றுவிட்டு அவன் முகம் பார்க்க.. அவன் யோசனையில் அமர்ந்திருந்தான்.

“ ம்க்கும்.. ”

“ சரி கிளம்பலாமா.. ” என எழுந்து கை கொடுக்க.. அவளும் எழுந்து நடந்தாள்.

“ குந்தவை கலையரங்கம் போ.. ” என்று விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக் கொண்டான்.

‘ நாம சொன்னதை எதுவும் தப்பா எடுத்துக்கிட்டாங்களோ ? ’ என அவனைப் பார்த்திருக்க.. சட்டென விழிகளைத் திறந்து புன்னகைத்தவன்

“ நான் எதுவும் தப்பா எடுத்துக்கல.. சரியா.. இப்ப கிளம்புவோமா ? ” என்றதும் தலையசைத்தாள்..

மஞ்சள் வெயில் மாலைப் பொழுது… சாலையோரம் அடர்ந்து பரந்திருந்த மரங்கள்  முன் தினம் பெய்திருந்த மழையோடு உறவாடிக் களித்து வீசும் சந்தோசக் காற்று.. என ரம்மியமாக இருந்தது அவனோடனான அவள் பயணம்.

மியூசிக் பிளேயரிலிருந்து கசிந்தது மெல்லிய இசை..

சுட்டும் விழிச்சுடர் தான், கண்ணம்மா..

  சூரிய சந்திரரோ

வட்டக் கரியவிழி – கண்ணம்மா

  வானக் கருமை கொல்லோ?

கண்ணன் அவனது கண்ணம்மாவை நினைத்து உருகிக் கொண்டிருந்தான்.

மூத்தவர் சம்மதியில் – வதுவை

 முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி ! – இது பார்

 கன்னத்து முத்த மொன்று !

 

மெல்ல திரும்பி அத்துவைப் பார்க்க.. அவன் விழி மூடி பாடலில் லயித்திருந்தான். யன்னல் பக்கம் நுழைந்த காற்று அவள் அனுமதியில்லாமலே அவளவனை முத்தமிட்டுச் சென்று இவளுள் பொறாமையை விதைத்துச் சென்றது.

குந்தவி கலையரங்கம் வந்து சேர்ந்தனர். அவன் விழி திறந்ததும் இவள் பார்வையை விலக்கிக் கொள்ள..

“ இறங்கலாமா? ” என்றான்.

“ ம்ம் ” என தலையாட்டியபடியே அவள் இறங்க ஆயத்தமாக

“ பைரவி…” என அழைத்தவன் சட்டென அவள் கன்னத்தில் அதரங்களைப் பதித்து

“ கொடுக்கணும்னு தோனுச்சுனா இப்படி கொடுத்திடனும்.. யோசிக்க கூடாது.. ம்ம்.. ” என அவள் கன்னம் தட்டிவிட்டு இறங்க

திகைத்திருந்தவளிடம் வெட்கம் முகவரி கேட்டு நுழைய.. ஒரு சில மணித் துளிகள் எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

அத்து அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருக்க.. சற்று ஆசுவாசமானாள்.   

இருவரும் உள்ளே நுழைய.. கதிர், மிதுன், நிலா, சூர்யா, விக்ரம், யுகா, தூரிகா என அனைவருமே காத்திருந்தனர்.

விழிகளில் வியப்புடன் அவர்களிடம் வந்து சேர்ந்தாள்

“ பைரவி.. ரொம்ப அழகா இருக்கு ”

மறுபடியுமா  என நினைத்தவள் “ நானா ? சேலையா ? ” என்று கேட்க

“ ம்ம்.. ” என யோசித்த சூர்யா

“ புடவை தான் ” என்றதும் “ சூப்பர் சூர்யா..”  என அத்து ஹை-பை கொடுக்க.. அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு நிலாவிடம் சென்றாள்.

“ ஹாய் அக்கா.. குட்டித் தங்கம் என்ன சொல்றாங்க ” என்றாள் சிரிப்புடன்

ஆம் இப்போது நிலா அவர்களது அன்பின் அடையாளமாக ஐந்து மாதக் கருவை சுமந்து கொண்டிருக்கிறாள்.

“ ம்ம்.. என்னை ஏன் அத்தை பார்க்க வரலைன்னு கேட்டு இரண்டு அடி கொடுக்க சொல்றான் ” என்றதும்

“ அக்கா.. எந்த பிரச்சனையும் இல்ல எனக்கு தர வேண்டியது எல்லாம் அவனோட மாமாக்கு தந்திடுங்க.. நான் ரொம்ப சந்தோஷப் படுவேன் ” என கண்சிமிட்ட

“ என் அண்ணாவ அடிக்க எனக்கே ஐடியா கொடுக்குறியா ” என காதை திருக

“ யார் என் தங்கச்சி கிட்ட வம்பு பண்றது.. ம்ம்.. ” என அவ்விடம் வந்தான் கதிர்.

“ அண்ணா பாருங்க.. அவங்க அண்ணனும் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்துகிட்டு என்னை அடிக்க என் மருமகன் கிட்ட பிளான் போட்டுக் கொடுக்கிறாங்க ” என புகார் அளிக்க

 

“ ஹே என்ன ? ரெண்டு பேரும் ரொம்ப பண்ணினீங்கன்னா பொண்ணு தரமாட்டோம் சொல்லிட்டேன்.. ” என அவன் மிரட்ட

“ அப்படியா சொல்றீங்க ! சரிங்க.. அப்போ என் அம்மா வீட்டிற்கு போய் இருந்து எங்க அண்ணனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு அப்புறமா வரேன் ” என அவன் மெயின் ஸ்விட்ச்சில் கை வைக்க.. கதிர் திரு திருத்தான்..

“ ஹா ஹா.. அக்கா இது சீட்டிங் ” என்றவள்

“ ஆமா என்ன விசேஷம்.. எல்லாருமே இருக்கீங்க ” எனக் கேட்டாள்

“ உன்னை விக்ரம் கூப்பிடுராரு பாரு ” என நழுவிக்கொண்டான் கதிர்.

“ ஹாய் மாமா.. ஹாய் அக்கா.. ” எனது யுகா, தூரிகா, விக்ரம் இருக்குமிடம் வந்தாள்.

“ ஹாய் பாப்பு.. ” விக்ரமிற்கு முந்தினான் யுகா.

“ டேய் !! ” என அவன் முதுகில் அண்ணக்காரன் ஒன்று வைக்க.. தூரிகா சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

“ இன்னிக்கு உங்களுக்கு லீவா மாமா ? ”

“ ம்ம்.. ஆமா பாப்பு ”

அடுத்து அவள் ஏதாவது கேட்டு வைக்கும் முன் உஷாரான விக்ரம் “ நீ எப்போ ஊருக்கு கிளம்புற ”

“ அடுத்த வார கடைசி ஆகிடும் மாமா ”

“ பைரவி.. நீ ஹாஸ்டல் வெக்கேட் பண்ணிட்டு எங்க வீட்டுக்கு வந்துரு.. இங்க ஒரு வாரம் இருந்துவிட்டு அப்புறம் திருச்சி போயிட்டு அங்கிருந்து எல்லாருமே ஊருக்கு போகலாம் ” என்றான் யுகா

“ பெரிய மாமா கிட்ட கேட்டுட்டு சொல்லட்டா மாமா ? ”

“ நீ இப்படித்தான் சொல்வேன்னு தெரிஞ்சுதான் விக்ரம் சித்தப்பாகிட்ட முன்னாடியே பேசிட்டான்.. அவர் ஓகே சொல்லிட்டாரு ” என்றதும் அவள் வியப்புடன் விக்ரமைப் பார்க்க..

“ நிஜம் தான் பாப்பு.. அப்பாவும் பெரியப்பாவும் கூட பேசிட்டாங்க.. அப்பாவே உன்ன அங்க கொஞ்சநாள் இருக்கட்டுமுன்னு சொன்னதால பெரியப்பாவும் ஒத்துக்கிட்டாரு ”

“ ரொம்ப சந்தோஷம் மாமா ” என்றவளுக்கு இத்தனை நாளாக அவளது திருமணத்தால் ஏற்பட்ட விரிசல் குறித்து மனதில் இருந்த குறை முற்றிலுமாய் மறைந்து மனம் நிறைவாய் இருந்தது.

இருப்பது ஓர் வாழ்க்கை.. அதில் அன்பெனும் விதையை விதைத்து.. அது தரும் விருட்சத்தில் பாசத்தையும் நேசத்தையும் கட்டி உறவோடு ஊஞ்சல் ஆடாமல் அதென்ன கோபத்தையும்  வீராப்பையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது..

மேலும் அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவளை அத்து வந்து அழைத்துப் போனான்.

“ யாருங்க வரப்போறாங்க ? ”

யாரையோ வரவேற்கவென வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறான்.. ஆனால் யார் என்று கேட்டால் மட்டும் கேட்க கூடாததை கேட்டு வைத்தது போல் பார்வை வேறு..

‘ போடா.. யாரோ வரட்டும்.. அது வரைக்கும் நான் என் மாமாவை சைட் அடிக்கிறேன் ’ என விட்டு விட்டாள்.

“ இதோ வந்துட்டாங்க.. ” என்றதும் அவன் காட்டிய திசையில் பார்த்தவள் திகைத்தாள்..

“ ஆத்மிகா ஐ.ஏ.எஸ் ”

“ ஏங்க.. இவங்க கலெக்டர் தானே ! ”

“ ம்.. ஆமா ”

“ சொல்லவே இல்ல நீங்க ”

“ நான் சொல்லலைன்னா என்ன.. நியூஸ்ல சொன்னாங்களே ! ”

“ நியூஸா.. ” என புரியாமல் பார்க்க

“ அவங்க ஐஏஎஸ் பாஸ் பண்ணினது ”

“ கடவுளே இப்பவே கண்ண கட்டுதே ”

இவளையும் அழைத்துக்கொண்டு ஆத்மிகாவிடம் விரைந்தான்

“ ஹலோ அதுல்.. எப்படி இருக்கீங்க ”

“ நல்லா இருக்கேன் மேம்.. நீங்க ? ” என்றதும் அவள் முறைக்க

“ நீங்க இப்ப கலெக்டரா வந்து இருக்கீங்க ” என்றான் புன்னகையுடன்

மறுப்பாக தலையசைத்தவள் “ நிச்சயமா இல்ல.. என்னோட ஃபிரண்ட் காகவும் முக்கியமாக பைரவிக்காகவும் ஆத்மிகாவா வந்து இருக்கேன் ” என்றதும்

“ அப்ப சரி ” என்றவன் “ அண்ணி வரலையா ” என்று கேட்டான்

“ வந்துட்டே இருக்காங்க.. கிளம்பும்போது குட்டி பையன் ரகள பண்ணிட்டானாம் அதான் லேட் ”

தமிழில்தான் பேசிக்கொண்டார்கள் என்பது சர்வ நிச்சயம்.. ஆனால் ஒரு வரி கூட அவளுக்குப் புரியவில்லை..

இதில் ஆத்மிகா வேறு “ வாழ்த்துகள் பைரவி ” எனக் கை கொடுத்தார்.

எதற்காம் ? தெரியவில்லை.. வாழ்த்தை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தாள்.

“ என்னங்க.. ”

அவன் அலைபேசியை எடுத்து காதில் வைக்க..

“ அது உயிரை விட்டு அரை மணி நேரம் ஆச்சுன்னு எனக்கும் தெரியும்.. எங்க நான் கேள்வி கேட்டிடுவனோன்னு வராத கால எடுத்து பேசுறீங்க.. எனக்கு தெரியும் ”

“ பைரவி.. ” எனத் திகைத்துப் பார்க்க

“ இந்தப் பார்வைக்கு குறைச்சல் இல்ல.. நான் ஏதும் உங்ககிட்ட கேட்கல போதுமா ! ஆனா எனக்கு பசிக்குது.. மதியமும் சரியா சாப்பிடலை ” என்றவுடன்

“ இத முன்னாடியே சொல்லியிருந்தா சாப்பிட்டு வந்து இருக்கலாமே ! ” என கடிந்து கொண்டவன் ‘ அவள்தான் சொல்லவில்லை தானாவது கேட்டிருக்க வேண்டும் ’ என தன்னையும் கடிந்து கொண்டு.. மிதுனை அவளுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவளுக்கு ஜூஸ் வாங்கி வரச் சென்றான்.

“ என்னாச்சு பையு.. அண்ணி.. ” என மிதுன் தருமாற

மெல்ல சிரித்தவள் “ நீங்க எப்பவும் போலவே கூப்பிடுங்களேன் ” என்றாள்.

“ எதுக்கு.. என் அண்ணன் அட்வைஸ் மழை பொழியவா.. போங்க அண்ணி ”

“ சரி நாம உள்ள போய் உட்காரலாம் வாங்க.. ”

“ ஏன் அண்ணி ஏன் ! இல்லை ஏன் ! என்னை அத்துகிட்ட அடி வாங்க வைக்கிறதுல அப்படி என்ன சந்தோஷம் ”

“ அப்படி என்னதான் பங்க்ஷன் ? என்கிட்ட சொல்லக் கூடாதா என்ன ”

“ இதோ அவன் வந்துட்டான்.. அவனையே கேட்டுக்கோங்க ” என அவனும் நழுவிவிட, அத்துவை முறைத்தாள்.

“ இந்தா.. சூடா இருக்க போல ஜில்லுனு ஜூஸ் குடி ”

அவள் குடிக்கும் போது புரையேற..

“ என்னை திட்டாம குடி.. புரையேறுது பாரு.. உனக்கு ” என்றான் சிரிப்புடன்

இவளுக்குமே அவன் சொல்லிய விதத்தில் சிரிப்பு வந்துவிட்டது..

அடுத்ததாக அகத்தியன் வந்துவிட.. சூர்யாவையும், மிதுனையும் அவரை அழைத்துப் போகச் சொல்லிவிட்டு விக்ரமை அழைத்தான்..

“ விக்கி.. டைம் ஆச்சு இன்னும் அவங்க வரல ”

“ வந்துட்டாங்க அத்து.. நான் கால் பண்ணி பேசிட்டேன் ”

“ யாரு மாமா ” என விக்ரமிடம் கேட்க

“ உனக்கு எதுக்கு ” அத்துவிடமிருந்து

“ சொல்லுங்க மாமா.. ”

“ சொல்லாத விக்கி.. ”

“ மாமாஆஆ.. பாப்பு கேட்கிறேன்.. சொல்லுங்க.. ”

“ அத்து சொல்றேன்.. சொல்லாத விக்கி.. ”

“ டேய் !! ” அலறிவிட்டான் விக்ரம்.

“ என்னடா கூப்டு வச்சி வம்பா பண்றீங்க.. பிச்சுப்புடுவேன் பிச்சு.. இதுக்குத்தான் இந்த மாதிரி சின்னப் பசங்க கூட சேர வேண்டாம்ன்னு அப்பவே எங்கம்மா சொல்லுச்சு ” என அவன் பாவனையுடன் சொல்ல.. அத்துவும், பைரவியும் சிரிக்க இவனும் இணைந்து கொண்டான்.

ஒரு கார் வந்து நிற்க.. அதிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்து திகைப்புதான் பைரவிக்கு..

அவளுடைய அம்மா, பெரிய மாமா, தாத்தா, அத்துவின் அப்பா, அம்மா.. அனைவரும் வந்திருந்தனர்.

“ ம்மா.. ” என அம்மாவிடம் ஓடிச் சென்றாள்

“ ம்மா.. நீங்க வர்றதா சொல்லவே இல்லையே ? ”

வாரம் ஒருமுறை பேசிவிடுவாள் எப்படியும்.. அவளிடம் ஏதும் கூறாமல் திடுதிப்பென்று வந்திருக்கிறார்கள் என்ன விஷயமாக இருக்கும் ! எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை..

“ பைரவி.. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.. உள்ள போகலாம் வா.. ” என அத்து அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

அவன் கரத்திலிருந்து தன் கரத்தை உருவ முயன்று தோற்றுவிட

“ பேசாம வா.. ” என்று விட்டான்.

உள்ளே நுழைந்தவளின் விழித்திரையில் விழுந்தது எதிரே இருந்த டிஜிட்டல் திரை..

சிலையென நின்று விட்டாள்..

“ அகம் கொண்ட ஆதித்தன்… ”

 

மேகம் கடக்கும்…..

 

Advertisement