Advertisement

                                                                 உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 34

 

வெள்ளை மற்றும் கரு நீலம் கலந்த  காலர் வைத்த புல் ஸ்லீவ் டீ-ஷ்ர்ட்டை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு.. பல்சரில் சாய்ந்து அமர்ந்தவாறு அவளைப் பார்த்தான் அவள் தோழன்.

அது நண்பர்கள் தினத்திற்காக அவனுக்கு அவள் பரிசளித்த ஒன்று.. அதுவும் இருவரது பேரையும் இணைத்து சிறிதாக த்ரெட் வொர்க் செய்து கொடுத்திருந்தாள்.

“ ஹாய் தூரிகா…. ” சிலையென நின்றவளை கலைத்தான்.

அமைதியாக அவனைப் பார்க்க..

“ உன் ஷோ முடிஞ்சிருக்கும் தானே.. வா நானே ட்ரோப் பண்றேன்.. ”

“ ம்ம்.. உங்க அம்மா வீட்டுக்கா ? இல்ல ஹஸ்பன்ட் வீட்டுக்கா ? ” அடுத்த கேள்வி.

என்ன அர்த்தமாம் இதற்கு ? இந்த நிமிடம் இங்கு இவளுக்காக இவளது மித்திரனாக வந்திருக்கிறேன் என்பதைச் சொல்கிறானா ?   

எதை எதிர்பார்த்து இத்தனை நாள் காத்திருந்தாளோ.. அது அவளிடம் வந்து சேர்ந்துவிட்டது. மனதோரம் சில்லென்ற ஒரு மழைச்சாரல்..

“ எங்கடா போயிருந்த இத்தனை நாளா ? ” கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு அவள் கேட்க

“ அதான் உன்கிட்ட சொல்லிருந்தேனே… ”

அவள் பார்வை மாற..

“ ஹி ஹி மெஸ்சேஜ் பண்ணிருந்தேனே.. வேலை விஷயமாக ஹைதராபாத் போறேன்னு.. அப்புறமா கல்யாணம்..  ”

“ அடப்பாவி.. உனக்கு கல்யாணம் ஆனதைக் கூட சொல்லல.. ”

“ சொல்ற மாதிரி எதுவும் இல்லடி.. உனக்கு தெரியுமா.. எனக்கு கல்யாணம்ன்னு எனக்கே ஒரு வாரம் முன்ன தான் தெரியும்.. ”

“ போடா.. ” என்று உள்ளே சென்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வர அவளது ஸ்கூட்டி பஞ்சர்…..

இதழ்கள் மலரத்துடிக்க பிரயத்தனப்பட்டு அடக்கி அவனை முறைத்தாள்.

அவளிடம் கெஞ்சி.. கொஞ்சி.. மிஞ்சி சமாதானப்படுத்தினான்.

“ உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டி ”

“ எனக்கும் தலைவலிக்குது.. காபி ஷாப் போ.. அங்க பேசலாம்.. ”

‘ ஹ்ம்ம் அதெல்லாம் லவர் கூட போகணும்.. உன்கூட போயி ’ என நினைத்தவன் அதனை சொல்லவும் செய்தான்.

“ டேய் !!! ரொம்பப் பண்றடா… ”

“ சரி.. சரி.. வா கோவில் போகலாம்.. ”

“ அங்க மட்டும் போலாமோ.. ”

“ நாம போகலாம் வா..  ” என்று அவளை அழைத்தே வந்துவிட்டிருந்தான். அவனுடைய காய் நகர்த்தலில் முதல் கட்டம்.. வெற்றி அவன் வசம்.

இறைவனை வணங்கி விட்டு வந்தமர்ந்தனர் புல் தரையில்.. இருவருக்குமிடையே இரு நிமிட மௌனம்.

நேற்றும் இங்கு வந்திருந்தாள் தான்.. ஆனால் முந்தைய தினம் இல்லாத நிறைவு இன்று இருப்பது உடையவன் உடனிருப்பதாலோ.. மெல்ல சிரித்துக் கொண்டாள் தனக்குள்ளே..

“ தூரிகா.. ”

“ ம்ம்.. ”

சொல்லிவிட்டிருந்தான்.. இத்தனை நாளாக அவளிடம் பகிராமல் பாரமாக தனக்குள்ளே வைத்திருந்ததையெல்லாம் ஒரு தோழனாக அவனது தோழியிடம் பகிர்ந்துவிட்டிருந்தான்.

சகியென்று சரணடைந்துவிட்டிருந்தான்.

யுகா யுகாவாக இருப்பது விக்ரமிடமும் தூரிகாவிடமும் மட்டுமே..!

எந்த வித எதிர்பார்ப்புமின்றி நம்மை நமக்காக ஏற்றுக் கொள்ளத் துடிப்பது நட்பு மட்டுமே.. சில சமயம் மற்ற உறவுகளை காயப்படுத்தாமல் இருக்க நம்மைக் காயப்படுத்திக் கொண்டு நாம் நடித்துவிட முடியும்.. ஆனால் நட்பில் அது அசாத்தியமான ஒன்று !

“ இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு நீ கேக்கலாம்.. ஆனா அப்ப நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன்.. தப்பி தவறிக் கூட என்னால யாரும் கஷ்டப்பட்டுட கூடாதுன்றதுல உறுதியா இருந்தேன்.. ”

ஆனால் அவன் காயப்பட்டிருக்கிறானே அதில்..! அவனுக்காக வருத்தம் கொண்டது அவளது மனம்..

“ நீயே சொல்லு.. ”

“ என்ன ” என்பதாய் அவள் பார்க்க

“ என்னோட ஒய்ப்ப எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரில.. எதாவது ஐடியா இருந்தா சொல்லு.. ”

‘ அடேய் ! என்ன கரெக்ட் பண்ண என்கிட்டயேவா ஐடியா கேக்குற.. ’ முகம் மாறாதிருக்க பிரம்ம பிரயத்தனம் செய்துவிட்டாள்.

விடுவதாயில்லை அவனும்.

‘ ஒரு நேரத்துல ஒரு ரோல் பண்றதே கஷ்டம்.. இவன் டபுள் ரோல் பண்ண வைக்குறானே… ’ புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.. உன்னை விட்டா யாரு இருக்கா எனக்கு.. ”

“ ஆங்.. அப்புறம் ” என்றவள்

“ கொஞ்சம் பொறு.. யோசிச்சு எதாவது பண்லாம் யுகா ” தற்காலிகமாக தப்பித்துக் கொண்டாள்.

இருவரும் கிளம்ப.. “ அம்மா வீட்டில விடு ” என அதிர வைத்தாள் அவனை.

வேறு வழி.. சிக்கிட்டேன் தப்பவா முடியும் என வண்டியைக் கிளப்பினான். அவளது அம்மா வீட்டில் விட்டவன் அப்படியே செல்ல எத்தனிக்க

“ ஹேய்.. உள்ள வா.. அம்மா உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க ” என அழைக்க

‘ என்ன ஆகுமோ ! இவ நமக்குமேல ரோல் ப்ளே பண்ணுறாளே.. ’ என்றவாறு  உடன் சென்றான்.

“ ம்மா.. ப்பா.. இங்க பாருங்க நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்கன்னு.. ”

தூரிகாவின் குரல் கேட்டு அவளது அம்மா வேகமாக அறையிலிருந்து வெளியே வர..

“ ம்மா.. இங்க பாருங்க உங்க செல்லப் புள்ள யுகா வந்திருக்கான்.. என்னை வீடு வரைக்கும் கூட்டி வந்துட்டு அப்படியே போகப் பார்த்தான். நான் தான் பிடிச்சி இழுத்துட்டு வந்தேன்.. ” என அவள் சொல்ல சொல்ல அவர் திருதிருத்தார்.

“ ஏன்மா உங்ககிட்ட கூட சொல்லாம ஆந்திராக்கு அடைக்கலம் தேடிப் போனானே.. இப்ப வந்திட்டான்.. என்னனு கேளுங்க.. ” என்றபடி அவளது அறைக்குச் செல்ல.. அவர் இன்னும் விழித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு இவர்களிடையேயான எந்தப் பூசலும் தெரியாது.. அவரைப் பொருத்தவரை இவர்கள் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொண்டு ஆத்மார்த்தமாக வாழும் தம்பதிகள்.. இரு வாரங்களுக்கு ஒரு முறை இங்கு வந்துவிடுவர்.. அப்படியிருக்க இன்று இவனை அழைத்து வந்து ஏதேதோ பேசினால் ?

“ அத்தை.. அவ ஏதோ விளையாட்டுக்குப் பேசுறா.. ரெண்டு பேரும் வரும் போது பழைய ப்ரெண்ட்ஸ் யுகா – தூரிகா பத்தி பேசிட்டு இருந்தோமா… அதான்.. ” என எதையோ அவன் உளறி கொட்ட

என்ன புரிந்ததோ தலையாட்டிவிட்டு உணவை எடுத்து வைத்து விட்டு அறைக்குள் சென்று மறைந்தார்.

இருவரும் உணவு உண்டு விட்டு வெகு தினங்களுக்கு பிறகு சதுரங்கம் விளையாடினர். இழந்ததாக நினைத்திருந்த நட்பு அவன் அருகில் அதே அன்புடன் அமர்ந்திருப்பதைக் கண்டு விழியோரம் எட்டிப் பார்த்தது ஒரு துளி.

இவர்களது காதல் சடுகுடுவில் காணாமல் போயிருந்த நட்பு இதழ் விரித்து மலர்ந்து நறுமணம் பரப்பியது.

“ சரி கிளம்புவோமா தூரி.. ”                      

“ எங்க ? ”

“ உன் வீட்டுக்கு.. ”

“ அப்போ இது ”

“ இது உன் அம்மா வீடு ”

“ அப்போ இதானே என் வீடு ”

அவன் அமைதியாக அவளைப் பார்த்திருக்க.. விளையாடியது போதும் எனக் கிளம்பியிருந்தாள்.

இருவரும் அவளது வீடு வந்து சேர்ந்தனர்.

“ உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.. ” அவன் ரசித்துச் சொல்ல..

உடை மாற்றி வந்தவள் “ காபி ஏதும் வேணுமா ? ” எனக் கேட்க தலையசைத்தான்.

அவள் உள்ளே சென்று விட இவன் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.. கிட்டத் தட்ட அவனது சதுரங்க களத்தின் இறுதிக் கட்டத்திக்கு வந்துவிட்டிருந்தான். இன்னும் ஒரு சில மணித்துளிகளில் வெற்றியோ தோல்வியோ விடை தெரிந்து விடும்..

அவளுக்காகக் காத்திருந்தான் அடுத்த காய் நகர்த்தலுக்காக..

அவள் வந்துவிட்டாள்… பரபரப்பும் வந்துவிட்டது போனஸாக அவனுக்கு..

“ நீ உன் வீட்டுக்காரர் பத்தி சொல்லவே இல்ல.. ”

காபியை பருகிக் கொண்டிருந்தவள் திடுக்கென நிமிர்ந்தாள். பதிலுக்கு அவன் காத்திருப்பது கண்டு,

“ அவனைப் பத்தி சொல்றளவு ஒன்னும் வொர்த்தா இல்ல.. ” என்றதும் புரையேறி இருந்தது அவனுக்கு.

“ அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணின… ” தலையை தட்டிக்கொண்டே அவன்.

“ என்ன பண்ண.. அவன் மேல தான் எனக்கு காதல் வந்துச்சு.. ” சொல்லும்போது அவளது தொனியிலும் சிறிதளவு வெட்கத்தின் சாயல் ஒட்டித்தான் இருந்தது.

“ ஹே உங்களோடது லவ் மேரேஜ் ஆஹ்…. ” கள்ளச் சிரிப்பு அவன் இதழோரம்.

மெதுவாக தலையசைத்தாள்.

“ இன்டெரஸ்டிங்.. உங்க லவ் ஸ்டோரி சொல்லேன்… ” ஆர்வமாக அவன்.

“ சொல்றளவு ஒண்ணுமில்ல.. ” பட்டென்ற அவளது பதிலில் சட்டென சுருங்கியது அவன் மனம்.. மனம் மட்டுமே.! முகம் மாறாமல் காபியைப் பருகினான்.

“ உன்கிட்ட ஒன்னு கேக்கணும் யுகா ”

“ கேளு.. ”

“ உனக்கு நான் முக்கியமா.. உன்னோட ஒய்ப் முக்கியமா.. ”

என்ன கேள்வி என்று தான் அவளைப் பார்த்திருந்தான்.. அவளுக்கே தெரியவில்லை.. எது அவளை இவ்வாறு கேட்க வைத்ததென்று..

இன்னமும் இவனது காதலால் தான் தான் காயப்பட்டு இருக்கிறோம் என்று அகத்தின் ஓர் ஓரம் இருந்தது.. அது தான் கேட்க வைத்ததோ ?

அவனது முகத்தையே பார்த்திருந்தாள். தெரிந்தே ஆக வேண்டும் அவளுக்கு அவளது கேள்விக்கான அவனது பதில்.

அவனோ நிதானமாக “ என்னோட பிரியமான தோழி தூரிகா தான்.. ”

நியாமாக அவனது இந்த பதிலில் அவனது தோழியாக அவள் ஆனத்தப் பட்டிருக்க வேண்டும்.. ஆனால் முடியவில்லை அவளால்.

“ சரி நான் கிளம்புறேன்.. ” விடைபெற்று கிளம்பிவிட்டிருந்தான்.

அடுத்த ஐந்து மணித் துளிகளில் அவளது காதல் கணவனாக உள்ளே நுழைந்தான் பல எதிர்பார்ப்புகளுடன்.

அவளைக் கண்டு அவன் அதரங்கள் மெல்ல மெல்ல அரும்ப.. விருட்டென எழுந்து போனாள்.. தலையைக் கையில் தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

‘ டேய் !!.. இப்ப எதுக்கு வயலின் வாசிக்குற.. ’-மரியாதைக்குரிய மனசாட்சி.

மௌனமாக அமர்ந்திருக்க

‘ யுகா….. ’

“ ப்ச்.. என்னடா ” எரிந்து விழுந்தான் அதனிடம்.

‘ டேய்.. என்னடா இப்படி கொதிக்குற முதல்ல கூலாகு.. ’

“ எல்லாரும் என்னைப் படுத்தினது போதாதுன்னு நீயுமா ? ப்ளீஸ்.. லீவ் மீ அலோன்… ” கிட்டத்தட்ட இறைஞ்சினான்.                          

‘ முடியாது.. ’

“ உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா… ”

‘ அடேய்.. நட்டு கழண்டு போச்சா.. நானே உன்னோட மனசாட்சி தாண்டா ’ அலறியது அது.

“ ப்ச்.. ”

‘ இங்க பாரு.. எல்லாம் கரெக்ட்டா தானே போயிட்டு இருக்க.. அப்புறம் எதுக்கு டைட்டானிக் பார்ட் டூ எடுக்க ஐடியா கொடுக்குற.. ’

“ நான் என்னோட எல்லா பீலிங்க்ஸயும் சொல்லிட்டேன் டா.. ஆனா அவ மறுபடியும் அதே மாதிரி முறைச்சிட்டு தான் திரியுறா.. ”

‘ ஒரு நிமிஷம்.. நீ யாருகிட்ட சொன்ன ? ’

“ ஏய் !!.. உனக்குத் தெரியாதா…. தூரிகா கிட்ட ” அவன் கத்த

‘ எந்த தூரிகா கிட்ட ’ அலட்டலே இல்லை அதனிடம்.

புரிந்திவிட்டிருந்தது அவனுக்கு.. ‘ ஐயோ இப்போ இருக்கிறது என் பொண்டாட்டி.. இதோ போறேன் ’ என அவனுடைய ராணிக்கு செக் வைக்க அவள் பக்கமாக காய் நகர்த்தினான்.

சமையலறையில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தவளிடம் சென்றான்..

“ உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. ”

அலட்சியம் அவளிடமிருந்து..

‘ இது வேலைக்காகாது.. ’ என்றவன் அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு  அவரகளது அறையின் பலகணிப் பக்கம் வந்து அங்கிருந்த கூடை நாற்காலியில் அவளை அமர வைத்தான்…

அவள் இறங்க எத்தனிக்க.. அவளை இறங்க விடாமல் அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.

“ இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போற.. நான் பண்ணினது தப்பு தான்.. நீயும் வாழ் நாளுல மறக்கவே முடியாத அளவுக்கு ஏழு மாசம் பேசாம இருந்து தண்டனை கொடுத்திட்ட… இன்னும் என்ன பண்ணனும் சொல்லு.. ”

அவனது இத்தனை நாள் பொறுமைக்குக் காரணம் அவன் செய்த குற்றம்.. காதலை விட்டுக் கொடுக்கவல்லவா துணிந்துவிட்டிருந்தான்.  

இத்தனை நாளாக இருந்த கெஞ்சலும் கொஞ்சலும் இனி இருக்கப்போவதில்லை.. மிஞ்சல் தான்.. அப்படித் தான் அவன் முடிவெடுத்திருந்தான்..

‘ போடா… பெருசா பேச வந்துட்டான்.. ’ என அவள் பார்த்திருக்க..

“ இப்படி கூடவே இருந்து பேசாம கொல்றதுக்குத் தான் என்னைக் கல்யாணம் பண்ணினயா… விட்டிருந்தா நான் ஒரு பக்கம் எப்படியோ வாழ்நாளை கழிச்சிருப்பேன்.. நீயும் நிம்மதியா வேற ஒரு… ” முடிக்கவில்லை… அவனை நோக்கி கை ஓங்க.. பிடித்துக் கொண்டான்.  

என்ன வார்த்தை சொல்லப் பார்த்தான்..! அது சரி ஏதோ ஒரு அத்துவிற்கு அவளை மணமுடிக்க முடிவு செய்த மகான் அல்லவா இவன் ?

“ இன்னும் நல்லா அடி.. நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறேன்.. ஆனா தயவு செஞ்சு என்கூட பேசாம மட்டும் இருக்காத… ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்கேன்… ” என்றவனது குரல் கரகரக்க.. பேச முடியவில்லை.. தொண்டை அடைத்தது போல இருந்தது.

அவனது வலியும் வேதனையும் அவளுக்கும் தானே..!

விழிகளில் பிடித்து வைத்திருந்த பிடிவாதம் கண்ணீராகக் கரைய.. அப்படியே அவளை இழுத்து கட்டிக்கொண்டான்.

“ சாரிடி.. சாரி.. எதை எதையோ யோசிச்சு.. யார் யாரைப் பத்தியோ நினைச்சு.. உன்னை நினைக்க மறந்துட்டேன்.. என்னையே குழப்பிட்டு உன்னை விட்டுப் போனேன்.. உன்கிட்ட காதலை மறச்சேன்.. எவ்ளோ கனவுகளோட கற்பனைகளோட இருந்தேன் தெரியுமா.. அதை எல்லாம் நானே கலைச்சிட்டேன்.. ”

இன்னும் கூட அந்த நாட்களின் வலிகளின் மிச்சம் அவனிடம்.. தடயங்களும் கூட..

அவனை உணர்ந்தவள் அழுகையில் குலுங்க.. அவளது பிடிதான் இப்போது இறுகியது. அவன் தலைமீது தன் தாடையைப் பதித்து அப்படியே அமர்ந்துகொண்டாள்.

“ இப்ப எதுக்கு அதெல்லாம்.. எல்லாம் நல்ல படியா நடந்து நீ என்கிட்ட வந்துட்ட.. எனக்கு அதுவே போதும்… ” என அவன் மொழியில் அவளைத் தேற்றினான்.

அவள் கண்ணீரில் இவனும் கரைந்தான்.. அவனுக்கும் சிலநொடிகள் தேவைப்பட்டது தன்னையும் மீட்டுக்கொள்ள..

அவளிடம் இருந்து விலகியவன்

“ ஆனா ஒன்னு தூரி.. அடிக்குற கை தான் அணைக்கும்னு சொல்லுவாங்கல்ல.. யாருக்கு எப்படியோ என் விசயத்துல உண்மைடி ” என்றதும் மெல்லிய புன்னகை அவளிடம்  

அவளது நெற்றியில் அவன் அதரங்களின் முத்திரை பதித்தவன் “ லவ் யூ டி… ” என்றான்.

“ உனக்கு நான் முக்கியமா.. உன் ப்ரென்ட் முக்கியமா.. ” சட்டென கேட்டு விட்டிருந்தாள்.

புரியவே இல்லை அவனுக்கு.

“ ப்ரென்ட் தானே முக்கியம் ! ” இருப்பினும் விடை கொடுத்தான்.

“ அப்போ நான் முக்கியமே இல்லையா… ” அவள் ஏமாற்றமும் எதிர்ப்பார்ப்புமாக கேட்க..

அவளது அந்தக் கேள்வியில் பக்கென சிரித்துவிட்டிருந்தான்.

அவள் முறைப்பது தெரிந்தும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“ என்ன கேள்விடி இது… ” சிரிப்பினூடே

“ பதில் சொல்லு… ”

“ என்னோட பதில் சொல்லிட்டேனே.. ப்ரென்ட் தான்.. யாருக்காகவும் எதுக்காகவும் அவள எப்பவும் இழக்கத் தயாரா இல்ல… ” அழுத்தமான பதில் அவனிடமிருந்து.

ஏமாற்றத்தின் முகவரி அவளிடம்.. அவளது முகத்தை கரங்களில் ஏந்தியவன்

“ நீ வேற நான் வேற இல்லை.. நான் சொல்லித் தான் புரியனுமா உனக்கு ” நிதானமாகக் கேட்டான் அவள் நெற்றியில் முட்டியபடி.

அதானே..! அவன் தோழி தூரிகாவிற்குத் தான் என்றும் முதலிடம்.. அவனை அவனுக்காக ஏற்றுக் கொண்டவள்.. கொள்பவள்.. அவள் தான். அவனாலே காயப்பட்டிருந்தாலும் என் நண்பன் இவன் என அனைத்தையும் மறந்து அவனை புரிந்து கொண்டு அவனோடு நிற்பாள் என்றும். இன்று கூட அவன் மேல் இருந்த அத்தனை கோவத்தையும்  கோவை எக்ஸ்பிரஸ் ஏறி எங்கோ அனுப்பிவிட்டு அவனுடைய பிரியமான தோழியாகி நிற்கின்றாள்.

ஆனால் அவன் உள்ளத்தில் நுழைந்து.. உயிரோடு கலந்து.. சுவாசமே சுவாசமாய் ஈருடல் ஓருரியாய் அவனோடு இணைந்திருப்பவள் அல்லவா அவன் மனையாள் !! அந்தத் தூரிகா இன்றி யுகாவின் ஓரணுவும் அசையாது. அப்படியிருக்க அவன் மனையாளின் முக்கியத்துவத்தை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை அவன்.

அவனே அவள்.. அவளே அவன் என்று ஓர்வரியில் உணர்த்தியிருந்தான்.

அரும்பியது புன்னகை அவள் அகத்திலும் முகத்திலும்.. அன்பும் காதலும் ஆழ்மனதிலிருந்து ஆர்ப்பரிக்க.. இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“ விடு விடு என்னை… ” என அவனிடமிருந்து அவளை பிரித்து எடுத்தவனை  அவள் புரியாமல் பார்க்க..

“ நீ இன்னும் உன் காதலை சொல்லவே இல்லடி.. அதுக்குள்ள கட்டிப் பிடிக்குற.. ” அவள் காதலனின் காதல் சட்டப்படி அது குற்றமாம்..!

“ போடா.. அதெல்லாம் முடியாது ” சிரித்தபடி அவள் அவன் கழுத்தோடு கரம் கோர்த்து இன்னும் இன்னும் இறுக்கிக் கொள்ள..

“ ஹேய்.. சொல்லுடி…. ”

“ ம்ஹும்…. ”

அவளை எத்தனை நாள் காத்திருக்க வைத்தான் காதல் சொல்ல… இருக்கட்டும் அவனும் காத்திருக்கட்டும் கொஞ்ச நாட்கள்..

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு அந்த கூடை நாற்காலியில் அமர்ந்து அவளையும் தன் மேல் அமர்த்திக் கொண்டான்.

அகத்தில் அத்தனை நாள் அடைத்து வைத்திருந்த அலைபுருதல், அவஸ்தை, ஏக்கம் எல்லாம் அடியோடு அகன்றிருந்தன அகத்தில் நிறைந்தவள் அவன் ஆகத்தில் சாய்ந்த போது.

ஒரு சில மணித்துளிகள்… இருவரும் நெஞ்சம் நிறைந்த நேசத்தோடு அந்தக் கணத்தை ரசித்தனர்.

“ ஏன் யுகா.. ஒரு வேளை நான் நம்ம காதலை உணராம போயிருந்தா என்ன பண்ணிருப்ப.. ”

நிச்சயம் அவனிடம் கேட்டிருக்கவே கூடாதென அவள் வருந்தியிருப்பாள்.. அவன் பதில் அப்படி.. என்ன செய்ய.. கேட்டுவிட்டாளே !!

“ அதான் நீ உணர்ந்திட்டியே அப்புறம் என்ன.. ”

“ ப்ச்.. சொல்லுடா… ” என அவனை இடிக்க

“ ம்ம்… நான் ஹைத்ராபாத்ல இருந்தேனே… ”

“ ம்ம்.. ”

“ அங்க நான் தங்கி இருந்த ஹவுஸ் ஓனர் பொண்ணு… உன் அளவு இல்லைனாலும் அவளும் கொஞ்ச அழகா தான் இருப்பா.. எந்நேரமும் பாவா பாவா ன்னு என்னை சுத்தி சுத்தி வருவா.. நம்ம கல்யாண விஷயம் தெரிய வர ஒரு வாரம் முன்னாடி தான் எனக்கு ஆந்திரா ஸ்பெஷல் பிரியாணி செஞ்சு கொடுத்து ப்ரோபோஸ் பண்ணினா..

பிரியாணி வேற ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சா.. அதான் உடனே ரிஜெக்ட் பண்ணாம காத்திருப்போர் பட்டியல்ல வெச்சிருந்தேன்.. எப்படியும் ஒரு ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் கழிச்… ”

அவன் மடியிலே கால்களை மடக்கி வசதியாக அமர்ந்து கொண்டு அவளது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தாள்.

“ ஆஆ…. ராட்ஷசி… வலிக்குதுடி.. அடி ஒன்னொன்னும் இடியா இறங்குது.. உங்கப்பா எப்போடி உன்ன கராத்தே க்ளாஸ் எல்லாம் அனுப்பினாரு !! ” வலி பொறுக்க முடியாமல் அவளை தள்ளிவிட்டுவிட்டு அவன் எழுந்து வெளியே ஓட

“ நான் கராத்தே க்ளாஸ் எல்லாம் போகல டா ”

“ அப்பறம் புருஷன அடிக்க எங்கடி கத்துகிட்ட..”

“ கிட்ட வா சொல்றேன் ” என்றபடி அவனை குறிபார்க்க..

“ அங்க இருந்தே சொல்லு.. ஏய் பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் ப்ளவர் வாஷ் எல்லாம் எடுக்காதடி ”

அவனை நோக்கி வந்ததைப் பிடித்து கீழே வைத்துவிட்டு சோபாவை சுற்றினான்.

“ ஏன்டா பிராட்… ராஸ்கல்… உனக்கு ஆந்திரா பிரியாணி கேக்குதோ…. ” என அவள் துரத்த…

“ ம்ஹும்… தஞ்சாவூர் தயிர்சாதம் கூட ஒகே தான் ” என்றபடி அவன்  அறைக்குள் தஞ்சமடைந்தான்.

காதல் சடு குடு ஒன்று அங்கே ஆர்ப்பாட்டமாக ஆரம்பமானது. அவன் தோற்றாலும் அவள் தோற்றாலும் வெல்வது காதல் மட்டுமே..! வெல்வது யாராகினும் வாழ்வது காதலாகும்..!

 

மேகம் கடக்கும்..                                       

 

      

   

 

Advertisement