Advertisement

                                                                    உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 33

 

அலைபேசியை எடுத்து யுகாவிற்கு அழைக்க.. அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் தூரிகா.  

யாருக்கு அழைக்க.. என்ன கேட்க.. எதுவுமே புரியவில்லை.. விக்ரமிற்கு அழைப்பு விடுக்க.. சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்து அவளது சிந்தையை செயலிழக்க வைத்தது.

யுகாவிற்கு என்ன ஆனதோ என்ற பயத்தில் பரிதவிப்பில் உள்ளம் கதற ஆரம்பித்தது. விழிகளில் அருவிப் பெருக்கெடுக்க.. அந்நேரத்தில் தாய் தந்தையை அழைக்கவும் மனம் வரவில்லை.. யாருக்கும் எதுவும் சொல்லி அவர்களையும் தவிப்பில் ஆழ்த்த வேண்டாம் என முடிவு செய்தவள் பூஜை அறையில் சென்று அமர்ந்துகொண்டாள்.

யுகா நிச்சயம் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் பரமேஸ்வரன் முன் அவள் ஏற்றிய விளக்கை அணையாமல் பாதுகாத்து.. தூக்கத்தை தொலைத்து..  என்னவனை என்னிடம் சேர்த்துவிட்டு இறைவா என்ற வேண்டுதலுடன் இருக்கைகள் கூப்பி.. ‘ ஓம் நமசிவாய ’ என்று இடைவிடாது கூறியபடியே அமர்ந்திருந்தாள்.

விடியும் வரை காத்திருந்தவள் மணி ஆறு என்றானதும் வேகமாக மாற்று உடை அணிந்து அவனைத் தேடி புறப்படலானாள். கைப்பையை எடுத்துக்கொண்டு கதவை பூட்ட.. வாசலில் இரு சக்கர வாகனத்தின் சத்தம்.

அவளது எதிர்பார்ப்பிற்கு வஞ்சனை செய்யாமல் வந்துவிட்டிருந்தான் அவளவன்..

கசங்கிய சட்டையும் களைந்த சிகையும் களைப்படைந்த முகமுமாய் உதிரம் உரைந்து போயிருந்த உடையுடன் காட்சி கொடுத்தான்.

அவளுடைய யுகாவிற்கு ஒன்றுமில்லை.. நன்றாக இருக்கிறான்.. வந்து சேர்ந்துவிட்டான் அவளிடமே.. அறிவு உணர்த்திய அவசர செய்தியில் இரவிலிருந்து வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருந்த தைரியம்.. சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்றிருக்க.. அப்படியே மடங்கி அமர்ந்து விட்டிருந்தாள் வாசல் படியிலேயே..

அவளுடைய நடுக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை..

அவளுடைய நடுக்கமும் பயமும் பதட்டமும் பரிதவிப்பும் பதியன்றி வேறு யார் அறிந்திட முடியும் ! விரைந்து அவளிடம் வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.

“ தூரி…. ”

அவன் சட்டையைப் பற்றி இழுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.

அவன் மெல்ல அவள் தலையை வருடிக்கொடுக்க.. சற்றே ஆசுவாசமடைந்தவள் அவனிடம் இருந்து விலகி தன் சிவந்த கண்கள் கொண்டு முறைக்க..

“ அது.. தூரி.. ”

அவனை அடுத்த வார்த்தை பேச விடாது சட்டையைப் பிடித்து உலுக்கி தாக்குதல் தொடுக்க ஆரம்பித்திருந்தாள்.             

“ சாரிடி.. ”

இன்னும் நிறுத்திய பாடில்லை..

“ ப்ளீஸ்… நா சொல்றத கேளு… ”

“ சாரி… ”

அவன் மொழிகளெல்லாம் காற்றில் கரைந்துவிட அவளது தாக்குதல்களை எல்லாம் அமைதியாக ஏற்க ஆரம்பித்தான்.

அடித்து அடித்து ஓய்ந்து போய் அழ ஆரம்பித்தவளை அப்படியே உள்ளே தூக்கி வந்து சோபாவில் அமரவைத்தான்..

இத்தனை நாள் அவள் இதயத்தில் இறுக்கி பிடித்து வைத்திருந்ததெல்லாம் இப்படியாவது கரையட்டும் என அழ விட்டவன் எழுந்து சென்று குளித்து வந்தான்.

அழுது தேம்பிக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் விழிகளிலும் வேதனையின் சாயல்..

கிச்சனுக்குள் நுழைந்தவன் அதே வேகத்தில் திரும்பி வந்து நறுமணம் மிக்க காபியை அவள் முன் நீட்ட.. மறுக்காமல் வாங்கிகொண்டாள் அதே கனல் பார்வையுடன். அவன் குடுத்த காபியை வாங்கிப் பருகியவள் ஓரளவு தேறியிருந்தாள்.. அதன்பின் எழுந்து சென்று குளித்து வந்தவள் சமையல் அறை நோக்கிச் செல்ல.. குறுக்காக வந்து நின்றான்.

“ ப்ச்.. ” என விலகிச் செல்ல முயன்றவள் தோற்று நின்றாள்.. அவனிடம் தோற்க ஆரம்பித்திருந்தாள்.

அவளை விடாப்பிடியாக தோள் பற்றி அழைத்து வந்து உட்கார வைத்தவன் இரவு இவன் அகரன் பண்பலையிலிருந்து வரும் வழியில் நிகழ்ந்திருந்த விபத்து குறித்துச் சொன்னான்.

ஒரு தனியார் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் பலர் படுகாயமடைந்திருக்க… இவனும் விக்ரமும் அவர்களை மருத்துவமனை கொண்டு சென்று.. ரத்தம் கொடுத்து.. மருத்துவமனையில் இல்லாத ரத்த வகைகளுக்கு அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்து.. என விடியும் வரை வேறு எந்த சிந்தனையும் இருக்கவில்லை அவனுக்கு. சார்ஜ் இல்லாமல் கைப்பேசியும் அணைந்துபோய் இருந்தது.

எல்லாம் முடிந்தவுடன் தான் இவளது நினைவு வந்தது.. இவளுக்கு தகவல் சொல்லாமல் விட்டு விட்டோமே என பதறிப் போய் தான் வந்திருந்தான்..

இவன் சொல்லி முடிக்கவும் ‘ அவ்வளவு தானே ’ என்பதாய் பார்த்துவிட்டு எழுந்து சென்று விட அயர்ந்து போய் அமர்ந்துவிட்டான்.

சிறிது நேரத்தில் “ உள்ள வரலாமா.. ” எனக் கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் விக்ரம்.

“ வாடா… வர வேண்டாம்னு சொன்னா அப்படியே திரும்பிடுவியா.. மாட்டல்ல. அப்புறம் எதுக்கு அந்தக் கேள்வி எல்லாம்.. ”  என வம்பிழுத்தபடியே வரவேற்க..

“ உன்கிட்ட யாரு கேட்டா.. ” என்றபடி தமையனருகே அமர்ந்தான் விக்ரம்.

யுகா – தூரிகா திருமணத்திற்குப் பிறகு யுகாவின் அப்பா மாற்றல் வாங்கி சொந்த ஊரான திருச்சிக்கே வந்துவிட அவன் அம்மாவும் திருச்சி திரும்பினார். அவர்களுடன் இருந்த விக்ரம் அதே தெருவில் வீடெடுத்து தங்கியுள்ளான்.

தூரிகா – யுகா எவ்வளோ வற்புறுத்தியும் அவன் மறுத்துவிட.. மூன்று வேளையும் சாப்பிட இங்கு தான் வர வேண்டும் என்பது அவளின் அன்பு கட்டளை. அதையும் மறுத்தால் அவர்கள் வருத்தமடைவார்கள் என ஒப்புக் கொண்டிருந்தான்.

“ என்னடா யுகா.. எந்த சேதாரமும் இல்ல போல.. நான் விட்டுட்டு போகும் போது எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க.. ” என போலியாக வருத்தம் காட்ட

“ ஒரு அண்ணன் மாதிரியா டா பேசுற.. ” என கையிலிருந்த தினசரியால் அடிக்க..

“ டேய் !! வன்முறையை கையில எடுத்த அப்புறம் நான் தூரிகாகிட்ட ரெண்டு மூணு பிட்டு எக்ஸ்ட்ரா போட்டு கொடுத்திருவேன்.. ” என மிரட்டிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் தூரிகா.

“ குட் மார்னிங் தூரிகா.. ”

“ உன் போன் எங்க… ” நிதானமாகக் கேட்டாள்.

அவன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் காட்ட

“ இங்க இருந்து செகண்ட் லெப்ட்.. தேர்ட் ரைட்.. தென் ஒரு லெப்ட் எடுத்து போனீன்னா.. ” என அவள் சொல்லியதை கர்ம சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவன் கடைசியாக சொன்னதைக் கேட்டு திருதிருக்க..

“ மறந்தும் முன்னாடி இருக்கிறதுல உடைச்சிடாத.. பின்பக்கம் அரச மரத்தடி பிள்ளையார் இருப்பாரு.. அவர்கிட்ட உடைச்சிரு.. ” என்றாள்.

‘ அடிப்பாவி.. அம்பதாயிர ரூபா ஐபோனும் அஞ்சு ரூபா தேங்காயும் உனக்கு ஒன்னா… அதுசரி அஞ்சு ரூபாய்க்கு இப்போயெல்லாம் யாரு கொடுக்குறா ? தேங்கா விலையும் இப்பெல்லாம் ஐபோன் விலைக்கு இணையா வந்திரும்போலேயே ’ என மனதில் எண்ணிக்கொண்டே அவளைப் பார்க்க.. அவள் முறைப்புடன் நின்றிருந்தாள்..

“ என்ன ஆச்சு தூரிகா ? ” அவன் தானே இறங்கி வர வேண்டும்.

“ உன் போனுக்கு என்ன ஆச்சு ? ”

“ என்ன ஆகணும்.. அது நல்லா தானே இருக்கு… ”

“ நேத்து நைட்டுல இருந்து உன் போனுக்கு கால் பண்ணி என் போன் செத்துப் போச்சு… ” என அவள் பொரிய

“ ஸ்ஸ்.. மறந்துட்டேன்.. பில் பே பண்ணலன்னு இன்கமிங் அண்ட் அவுட்கோயிங் ரெண்டும் கட் பண்ணிட்டான் அந்தக் கடன்காரன்.. ”

“ நீ தான் டா அவனுக்கு கடன்காரன்… ”

பாரபச்சம் இன்றி விக்ரமிற்கு அர்ச்சனைகள் விழ, அவன் மெல்லத் திரும்பி தம்பிக்காரனைப் பார்க்க.. அவன் தினசரியில் தலையை விட்டிருந்தான்.

“ இல்ல தூரிகா.. ”

“ ப்ச்.. வீட்டுல இருக்கிறவங்களுக்கு தகவல் சொல்லன்னும்ங்கற பேசிக் நாலேட்ஜ் கூடவா இல்ல… ”

“ டேய் !! இந்தக் கேள்வி உனக்குத் தான்.. போதும் நீ நாட்டு நடப்பு தெரிஞ்சுகிட்டது.. நிமிர்ந்து பாரு.. ” என யுகாவை அழைக்க

“ கொடுத்தாச்சு… கொடுத்தாச்சு.. அப்போவே வேணும்கற விளக்கம் எல்லாம் கொடுத்தாச்சு… ” என்றான் தலையை நிமிர்ந்தும் பாராமல்.

“ திஸ் இஸ் நாட் ஃபேர் விக்கி… ” அவளது பொறுமை பறக்கத் துடித்தது.

‘ நானும் தான் சொல்றேன் இதெல்லாம் நல்லாவே இல்ல… ’ என விக்கி முணுமுணுக்க..

“ என்ன… ” என்றவளிடம்

“ இல்ல.. நானும் அவனுக்கு நல்லா எடுத்து சொல்றேன்னு சொன்னேன்.. ” என்றதும் இருவரையும் முறைத்துவிட்டுச் சென்றாள்.

அவள் அந்தப்பக்கம் சென்றதும், “ போதும் டா… என்னைக் கொஞ்சம் பாரு.. ” என யுகாவை நிமிர்த்தி குறுகுறுவென பார்க்க..

“ என்னடா ” என்றான்

“ இல்ல.. என்னவே இந்தக் காய்ச்சு காய்ச்சிட்டு போறா.. அப்போ உன்னை.. ” என அவன் நிறுத்த

“ ம்ம்.. கொடுத்தா.. கொடுத்தா.. போதும் போதுமங்கற அளவு கொடுத்தா.. வாங்கிட்டு அத கொண்டாட தான் ஆபீஸ்க்கு லீவு போட்டு உட்கார்ந்திருக்கேன்.. ” என்றான் எரிச்சலுடன்.

“ என்ன ஆச்சு டா ”

“ ப்ச்.. ” என சலித்துக்கொள்ள அங்கு தூரி என்ட்ரி போட்டிருந்தாள்.

“ பேசுனது போதும்.. சாப்பிடலாம் வாங்க ” என அழைத்துவிட்டுச் செல்ல

“ வாடா.. எப்படியோ சாப்பாட்டுல கை வெக்கல.. ” என்ற விக்ரமுடன் எழுந்து என்றான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் திடீரென “ விக்கி.. எனக்கென்னமோ என் காதல் விஷயம் தூரிகாவுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்னு தோணுது.. ” என்றவுடன், தூரிகாவின் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தவனுக்கு புரையேறத் துவங்கியது.

உள்ளிருந்த தூரிகா தண்ணீர் எடுத்து வந்து குவளையில் ஊற்றிக் கொடுக்க.. இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த விக்ரம், ‘ புருஷனும் பொண்டாட்டியும் நல்லாப் பண்றீங்கடா… ’ என நினைத்துக் கொண்டான்.

யுகாவின் சந்தேகப் பார்வை தன்னை தொட்டுச் செல்வதை உணர்ந்தவன்       ‘ ஐயோ கண்டுபிடிச்சிட்டானோ.. ! ’ என வேக வேகமாக அள்ளிப் போட்டு இடத்தை காலி செய்ய.. அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி தர தரவென அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்..

“ டேய் !!.. ஆபிஸ் போறேன்.. சட்டையை இப்படி கசக்கி வெச்சிருக்க.. ” என்றபடி சரி செய்ய

“ இப்ப நீ உண்மையை சொல்லலனா.. கொஞ்ச நேரத்துல நீயும் இந்த கசங்கின சட்ட மாதிரி ஆகிடுவ.. ” என மிரட்டினான் யுகா.

“ என்ன டா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு… ”

“ எல்லாம் அப்படித்தான்.. நீ சொல்லு அவளுக்கு விஷயம் தெரியும் தானே ” விக்ரமைப் பற்றித் தெரிந்தவன் நேரடியாகத் தாக்கினான்.

அவன் எதிர்பார்த்தபடியே தடுமாறினான் தமையன்.. இருப்பினும் சமாளித்து

“ என்னைக் கேட்டா… ”

“ உனக்குத் தெரியும். ”

இவனிடம் பொய் சொல்லவும் விரும்பவில்லை.. உண்மையைச் சொல்லவும் முடியாது அவனால்.

“ யுகா.. என்கிட்ட கேட்டதை தூரிகாகிட்ட கேளு.. நிச்சயம் உனக்கு பதில் கிடைக்கும்.. ”

“ ஆ.. சொல்லிட்டு தான் வேற வேலை பார்ப்பா பாரு.. போடா.. ”

“ இல்லடா.. இன்னும் எவ்வளவு நாள் தான் இப்ப.. ” என்றவனை இடைமறித்து

“ உன்ன மாதிரி சகுனி இருந்தா எப்பவுமே இப்படித்தான்… ” என இயலாமையிலும் ஆதங்கத்திலும் வார்த்தைகள் அத்து மீற.

விக்ரம் சட்டென வெளியேறினான்.

‘ ஷிட்.. யுகா… ’ என காலை எதிரிலிருந்த சுவரில் உதைத்தவன் விரைந்து வெளியில் வந்தான்.

“ சாரி டா.. ஏதோ கோவத்துல.. வாய் தவறி.. ” என அண்ணனிடம் தடுமாற                                    

அவன் தோள் தட்டியவன்.. “ நமக்குள்ள என்னடா சாரி.. போய் அதை உன் வைப் கிட்ட கேளு.. முடிஞ்சா இன்னைக்கே பிரச்சனையை முடிக்கப் பாரு.. ”

“ ம்ம்.. ” என அவன் தெளியாமல் தலையாட்ட

“ விடுடா… போய் பேசு போ.. ஆல் தி பெஸ்ட்.. ” என அணைத்து விடைபெற்றான்.

இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவனிடம் “ விக்ரம்… பிள்ளையாரை மறந்துடாத.. ” என தூரிகா குரல் கொடுத்தபடி வர

அவன் பத்திரம் காட்டிச் சிரித்தபடி வெளியேறினான்.

கதவருகே நின்ற யுகா உள்ளே நுழைந்தவளிடம் “ தூரிகா ஒரு நிமிஷம்.. ” என்றான்.

அவள் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றிட.. அவனுடைய அலைபேசியை எடுத்து “ இன்னிக்கு ஆப் எடுத்துக்கோ… ” எனக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

அடுத்த நொடி.. திரையில் “ முடியாது.. ” அவளிடமிருந்து.

‘ கட்டுனவன்னு கர்டசி கொஞ்சம் கூட கிடையாதுடி உன்கிட்ட.. ’ எனத் தொலைக் காட்சியை இயக்கி அமர்ந்தான்.

உண்மையில் அவள் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டு மாலை நேரடியாக நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்ற முடிவில் தான் இருந்தாள்.. ஆனால் அதையே அவன் சொல்லவும் முடிவை மாற்றிக் கொண்டாள்.

அவள் அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கவனித்தவன் அவளுக்கு மதிய உணவிற்குத் தேவையானதை டப்பாவில் அடைத்து.. வாட்டர் பாட்டிலை கழுவி தண்ணீர் ஊற்றி இரண்டயும் அவளது கைப்பையில் எடுத்து வைத்துவிட்டு அவர்களது அறைக்குச் சென்றான்.

“ இது ”

“ ம்ஹும்…”

“ இந்த பிஸ்தா.. ”

“ நல்லா தான் இருக்கும்.. பட்.. ” எனத் தனக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்தவனின் கண்களில் விழுந்தது அது.

முதன் முதலாக அவளுக்காக அவன் எடுத்துக் கொடுத்த இளஞ்சிவப்போடும்  இளம்பச்சையோடும் இவன் நேசத்தையும் சேர்த்து நெய்யப்பட்ட புடவை அது.

அதை எடுத்து வெளியே வைத்தான் அவள் அன்று அணிவதற்காக..

அவள் உள்ளே வரவும் வெளியே வந்துவிட்டான். அவன் எடுத்து வைத்த புடவையைப் பார்த்தவள் ‘ இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ’ என பெட் மீது தூக்கி போட்டு விட்டு நிமிர.. அவன் நின்று கொண்டிருந்தான் வெறித்த பார்வையுடன்.

இவள் மீது வைத்த பார்வையை விலக்கிடாமல் அவன் அடியெடுத்து வைக்க வைக்க.. இவளுக்குள் அறிமுகமில்லா பிரளயம்..

அவன் அவளை நெருங்க நெருங்க.. பின்னால் நகர்ந்தவள் கட்டிலில் இடித்து விழச்செல்ல.. யுகா அவள் இடைக்கு கைகொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான். அவன் சட்டையை பற்றிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்..

இதழ்களில் ஓடிய குறுநகையுடன் அவள் நெற்றியில் முட்ட.. மெல்ல கண்களைத் திறந்தாள்.. அடுத்தநொடி தொப்பென்று அவளை அப்படியே விட்டுவிட்டு

“ ரிமோட்.. ” என்றான் கட்டிலில் அவன் மறந்து விட்டுச் சென்றிருந்ததை காண்பித்து. அதை எடுத்துக்கொண்டு அவன் நகர்ந்துவிட.. இவளுக்குத் தான் ஒரு மாதிரியாகிவிட்டது. வேகமாக தலையை சிலுப்பிக் கொண்டாள்.

‘ நானே விழுந்துருந்தா கூட உடனே எழுந்திருச்சிருப்பேன்.. இவன் பிடிக்கிற மாறி பிடிச்சு நல்லா தள்ளி விட்டுட்டு போறான் பாரு ’ என்று மனதில் திட்டினாலும் அவன் எடுத்து வைத்திருந்த புடவையை கைகள் ஆசையாய் வருடியது.

அவன் தேர்வு செய்ததையே உடுத்திக் கொண்டு.. ‘ பார்த்துக் கோ..’ என்பதாய் அவன் முன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவளை கள்ளத்தனமாய் காதல் செய்தான் அவள் காதல் தேவன்.

அந்த கணம் அவனுக்குத் தோன்றியது. அவள் தோழியாகவும் காதலியாகவும் தலைவியாகவும் தாயாகவும் சண்டைக்கோழியாகவும் தனக்கு வேண்டும் என.. தூரியின் எந்த அவதாரத்தையும் இழக்க விரும்பவில்லை அவன்.   

அன்றைய அவளுடைய நிகழ்ச்சியை முடித்துவிட்டு காண்டீன் பக்கம் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளுக்கு ரிஷப்ஷனில் இருந்து அழைப்பு.

‘ உன்னைப் பார்க்க உன் ப்ரென்ட் வந்திருக்காரு.. ’

‘ ப்ரென்ட் ஆஹ்…’ என எழுந்து வந்தாள்.

‘ எனக்கு இருக்கிறது ஒரே ப்ரெண்டு.. அவன் இன்னிக்கு ஆபீஸ்க்கு மட்டம் போட்டுட்டானே.. ’ என்ற யோசனையுடன் வந்தவள் அப்படியே சிலையாகி நின்றாள்.

 

மேகம் கடக்கும்..                          

 

    

 

  

Advertisement