Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 32

 

குளித்துவிட்டு தூரிகாவை எழுப்பலாம் என தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்..

அவனது செவியைத் தொட்ட செய்தி அப்படி !

“ பக்கத்திலேயே பையனை வெச்சிட்டு எங்கெங்கோ தேடி இருந்திருக்கோம் பாருங்க அண்ணி.. ”

தூரிகாவின் அம்மா யுகாவின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்..

“ ஆனா நமக்கு தெரியாதது என் மருமகளுக்கு தெரிஞ்சிருக்கு பாருங்களேன் ! ”

“ ஆமா அண்ணி ஒரு நாள் திடீர்னு வந்து நின்னு ‘ ம்மா.. யுகாவை விட என்னை யாரு நல்லா பாத்துப்பான்னு நினைக்கிறீங்க ’ ன்னு கேட்டா.. அப்புறம்” என அவர் பேசியது எல்லாம் அவன் செவிகள் அறிய விரும்பவில்லை..

‘ தூரி தான் மேரேஜ் ப்ரபோசல் பேசியிருக்காளா !! ’ அவன் மனம் அதிலேயே தொக்கி நின்றது.

இதுவரை அவன் நினைத்திருந்தது, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு அவனது மனைவி விருப்பம் தெரிவித்திருக்கிறாள் என.. ஆனால் இப்பொழுது !

இவர்கள் கூறியதற்கு அர்த்தம் என்னவாம் ?

அகமும் புறமும் அரும்பி அவளிடம் விரைந்து சென்றான்.

வெண்பஞ்சு மெத்தைக்குள் புதைந்து நித்திரை கொண்டிருந்தவளைப் புரட்டினான்.

“ ப்ச்.. இன்னும் கொஞ்ச நேரம்மா ” என சிணுங்கி மீண்டும் நித்திரை கொள்ள.. அவளை எழுப்ப மனம் கொள்ளாமல் அவளருகே அமர்ந்து கொண்டான்.

அத்தனை நிறைவு.. அத்தனை அமைதி.. ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவனது அகத்தின் அலைகள் அவளைக் கண்டதும் தணிந்து அவளிடம் சரண் புகுந்திருந்தன.

“ யுகா… ” என்ற அம்மாவின் அழைப்பில் எழுந்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு நிமிர.. அவனை நகர விடாது தடுத்திருந்தன அவளது விரல்கள்.

மெல்ல எழுந்தவள் அவனை விழிகளால் விலங்கிட்டு அருகே அழைக்க.. புன்னகையுடன் கீழே குனிந்தான். அடுத்த நொடி அதிர வைத்திருந்தாள் அவனை..

அவளது அத்தனை விரல்களும் தடம் பதித்திருந்தன அவனது இடது கன்னத்தில்.. வலி என்னவோ அவனுக்குத்தான்.. ஆனால் இவளது விழிகளில் எதற்காம் முத்துச்சரம்??

அதைக் கண்டவுடன் இவனது அதரங்களில் அரும்புகள்..

‘ டேய் வெட்கமாவே இல்லையா உனக்கு ? ’ அவனது மனசாட்சிதான்

‘ எதுக்கு ’ அலட்டலே இல்லை இவனிடம்..

‘ காலங்காத்தால கட்டின பொண்டாட்டி கையால காப்பி வாங்கலாம் இப்படி கன்னத்துல வாங்கக் கூடாது.. சரி வாங்கித் தொலச்சியே எதுக்கு அடிச்சன்னு கோவமா கேட்காம அவகிட்ட அவார்டு வாங்கின மாதிரி செல்பிக்கு நிக்குற ’ சிலிர்த்துக் கொண்டு நின்றது அது.

‘ காதல்ல இதெல்லாம் சகஜம்டா.. நீ தள்ளு ’ என்றவன் அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.

அவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள.. முகத்தைப் பற்றி திருப்பியவன் அவனது ஒரே கையால் அவளது இரு கரத்தினையும் சிறை எடுத்துக்கொண்டு இரு கன்னத்திலும் அவனது அதரங்களை மாற்றி மாற்றி அடித்தளம் வைத்துவிட்டு

“ கூப்டிங்களா மா.. ” என பறந்துவிட்டிருந்தான்.

விழிகளில் கோர்த்திருந்த முத்துச்சரம் சிதறி தெறித்து ஓட அதன் தாக்கம் சிறிதுமின்றி அவளது சிப்பி இதழ்கள் மலர்ந்து மல்லிச் சரம் கோர்த்திருந்தன.

அனைவரும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெயா,

“ அண்ணி.. தூரிகாவும் மாப்பிள்ளையும் ஈச்சனாரி போயிட்டு வரட்டும். இனி எப்ப லீவு கிடைச்சு இங்க வராங்கன்னு தெரியல.. இன்னிக்கு போயிட்டு வரட்டுமே ” என்றதும் தூரிகாவின் அம்மா யுகாவைப் பார்க்க.. அவனும் சரி என தலை அசைத்தான்..

சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவனிடம் அத்து கார் சாவியை நீட்ட..

“ நீங்க யாரும் வரலையா ? ” என்றான்.

“ யுகா சார்.. என்ன நீங்க இப்படி இருக்கீங்க.. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க போல ” என சூர்யா கேலி பேச அவளை முறைத்து வைத்தான்.

“ ஷ்ஷ்.. சூர்யா.. சும்மாயிரு ” என்ற அத்து

“ யுகா.. நீங்க ரெண்டு பேரும் கார்ல கிளம்புங்க.. நாங்க எல்லாரும் பின்னாடி வரோம்.. ”

“ இல்ல பரவாயில்ல வாங்களேன் எல்லாரும் ஒண்ணா போலாம் ” அவன் பிரச்சனை அவனுக்கு..

அத்து புரியாமல் பார்க்க.. அங்கு வந்த விக்ரம் விடயம் அறிந்து நண்பனைப் பார்த்தான் நமுட்டுச் சிரிப்புடன்.

“ விக்கி நீயாவது வாடா ” பாவமாக அழைத்து வைக்க.. மறுப்பாக தலையசைத்தவன் “ கிளம்பு கிளம்பு தம்பி ” என யுகாவை அனுப்பி வைத்தான்.

“ துரோகிங்களா ” திட்டியவாறு தூரிகாவுடன் கிளம்பினான்.  அவளோ காரில் ஏறியவுடன் ஹெட்போனை செவிகளுக்குக் கொடுத்து விழி மூடி அமர்ந்துவிட அப்பாடா என்றானது அவனுக்கு..

உள்ளிருந்த மனசாட்சி கழுவி ஊற்றியதெல்லாம் கண்டு கொள்ளாமல் காரைக் கிளப்பினான்.

“ அண்ணா ! நேத்து இங்க இருந்த பஸ் எங்க ? நாம எப்படி போறது ” சூர்யா கேட்க..

“ நீ போய் பைரவியையும், மிதுனையும் கூட்டிட்டு வா.. நமக்காக ரதம் வெயிட்டிங் ” என அனுப்பினான்

பைரவியின் வேலனையும், கணேசனையும் ரதத்தில் பூட்டி சாரதியாக அத்து அமர்ந்திருக்க.. விக்ரமும், சூர்யாவும் கலவரமாக பார்த்துக் கொண்டனர்.

“ பைரவி.. இதுலயா.. வேணாம் பைரவி.. எனக்கு மாடுனாலே பயம் ” என சூர்யா கூறியதும் விக்ரமும் சேர்ந்து தலை ஆட்டினான்..

“ அது மாடு இல்ல.. கணேசன் வேலன் ” என மிதுனும், அத்துவும் கோரசாக சொல்ல சூர்யா விழித்தாள்.

அவர்கள் முதல் முறை வந்த போது நடந்த அலும்பல்.. அலப்பறைகள் பற்றி எல்லாம் மிதுன் சொன்னதும் சூர்யா சிரிக்க.. பைரவி முறைத்தாள்..

“ நேரமாச்சு.. ” என அத்து குரல் கொடுக்க.. பிள்ளையாரப்பனை வேண்டிக்கொண்டு சூர்யாவுக்கும் விக்கியும் ஏறினர்.

பைரவி விக்ரமை பார்த்துச் சிரிக்க.. அவன் பத்திரம் காட்டினான். அவனுக்கு மாடு என்றால் பயம் எல்லாம் அல்ல.. ஆனால் கணேசனைப் பார்த்தால் மட்டும் ஷிவரிங் ஆகிவிடும்..

யுகாவும் இவனும் சேர்ந்து காளையை அடக்குகிறேன் என்று களத்தில் குதித்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என அவனால் விரட்டப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் இவனும்.. இரண்டாம் இடத்தில் யுகாவும் தான்.

கோவில் வந்ததும் யுகா பூஜைக்கு எல்லாம் வாங்கிவிட்டு வந்தவன் பூவைக் கண்டதும் ஆசையாய் வாங்கி தூரிகாவிடம் கொடுக்க.. அவள் கண்களில் கனல் தெறித்தது..

‘ பூ தானே ’ என இவன் குழம்பி நிற்க.. அவள் விடுவிடுவென உள்ளே சென்று விட்டிருந்தாள்.

புரியாத புதிராக அவனை சுழன்றடிக்கவும்.. ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும் போர்க்கொடி பிடித்து காத்திருப்பவளிடமிருந்து இன்னும் பல தாக்குதல்கள் மிச்சம் அவனுக்காக..

அடுத்த நாள் மாலையில் தஞ்சையில் ரிசப்ஷன் நடைபெறுவதாக இருக்க சரளைப்பதியிலிருந்து தஞ்சைக்கு பயணமாகி இருந்தனர். அடம்பிடித்து தாத்தாவையும் உடன் அழைத்து போய் இருந்தான் அத்து.

வருபவர்கள் வரட்டும் என யாருக்கும் காத்திருக்காமல் காலச்சக்கரம் உருண்டு இருக்க மூன்று மாதம் கடந்திருந்தது.

சூர்யாவும், பைரவியும் அவர்களுடைய இளங்கலை படிப்பில் இறுதியில் இருந்தனர். மிதுன் அவனுடைய முதுகலைப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்திருந்தான்.

அத்து, கதிர் அவர்களுடைய வாழ்வில் அடுத்த அடியை எடுத்து வைத்திருந்தனர்.

யுகா ஒவ்வொரு நாளும் தோற்றுக் கொண்டிருந்தான் அவனது மங்கையிடம்.. அவர்களது திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மீண்டும் அவனது வேலையை மாற்றிக்கொண்டு தஞ்சைக்கே திரும்பியிருந்தான் யுகா.

தூரிகா அவளுடைய அகரன் பண்பலையிலேயே தொடர்ந்திருந்தாள்.

ஆனால் நிகழ்ச்சி நேரத்தை மட்டும் பிடிவாதமாய் மாற்ற வைத்திருந்தான் யுகா.. அது மட்டுமே அவனால் முடிந்த ஒன்று.. மற்றபடி இருவர் இடையிலான மௌன யுத்தத்தில் அவளே வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாள். மொத்தமாய் ஏழு திங்கள்.. அவள் அவனுடன் பேசி.

இத்தனை நாட்களில் அவளுடைய நட்பை இழந்த வலியை அணுஅணுவாய் உணர்ந்திருந்தான்.. காதல்.. அதெல்லாம் தூரம் போய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

எந்தக் காதலுக்காக நட்பை மறந்து சென்றானோ அது கூட அவனை மறந்துவிட்டிருந்தது. அவனும் கூட அதை தற்போதைக்கு தள்ளி வைத்திருந்தான்.

ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசியிருக்கவில்லை அவள்.. தேவையும் இருக்கவில்லை அவளுக்கு..

அவனும் விடுவதாக இல்லை.. விதவிதமாய் மன்னிப்பு கேட்டு விட்டான்.. மனக்குமுறலை வைத்துவிட்டான்.. தோல்வியை பொருட்படுத்தாது தன் மனதிற்கினியாளின் மனம் தன்புறம் சாயும்வரை காதல் போர் ஓய்வதில்லை என மீண்டும் மீண்டும் தொடுத்துக்கொண்டே இருந்தான். மொத்தத்தில் மாடர்ன் முகமது கஜினி ஆக மாறி இருந்தான் யுகா.

“ வணக்கம் மக்களே !! இவ்வளவு நேரமா நீங்க கேட்டுட்டு இருந்தது ஜில்லுனு ஒரு காதல் வித் யுவர் ஆர்.ஜே தூரிகா..

 

சொல்லத் துடிக்கும் அவன் இதழ்கள்

சொல்லாமல் துடிக்கும் அவன் இதயம்

காதலை காட்டும் அவன் கண்கள்

நட்பாய் கோர்க்கும் அவன் கரங்கள்

என்னை நேசித்த என்னுயிரை

கண்டுகொள்ளவில்லை நான்

கண்டுகொண்ட வேளையில்

காதலன் அவனில்லை என்னுடன்

தொலைத்துவிட்டேனோ…

வரமாய் வந்தான் மீண்டும்

என்மீது வசந்தம் பொழிய..

என்னிக்கும் உங்க காதலை சொல்ல காத்திருக்காதீங்க.. காத்திருக்கணும்னு நினைச்சா காலம் கடந்து போயிருக்கும்.. சொல்லனும்னு தோணிச்சு மக்களே !

நம்ம நிகழ்ச்சிக்கு எண்ட் கார்ட் போட வேண்டிய நேரம் ஆச்சு.. சோ நான் கிளம்புறேன்.. மீண்டும் நாளை சந்திப்போம்.. டாட்டா..

 

நிகழ்ச்சியை முடித்து எழுந்தவளின் மனதில் நிச்சயம் மகிழ்ச்சி இல்லை..

என்னவோ பிரித்தறிய முடியா உணர்வு படுத்தி எடுக்க.. வந்துவிட்டிருந்தாள் கலியுகத்தையனிடம்..

கோயிலின் முன் அவளது ஸ்கூட்டியை நிறுத்தி உள்ளே செல்லும்போது

“ சுஜி.. இந்தா பூ.. ” யாரோ ஒருவர் அவரது மனைவிக்கு பூ வாங்கிக் கொடுக்க.. சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தாள் தூரிகா.

இதேபோல் அன்றொரு நாள் யுகா இவளிடம் சொல்லிக் கொள்ளாது ஹைதராபாத் சென்றிருக்க.. அவன் தந்த வலிகளை மறக்க இங்கு வந்திருந்தாள்.

அந்த நாளில்தான் இவளது காதல் கண்களை திறந்து வைத்திருந்தார் பரமேஸ்வரன்.. இதோ இன்று போல் பூ வாங்கிய இருவரை பார்த்து புலப்படாத அத்தனையும் புலன்களுக்கு பூவால் புலப்பட வைக்கப்பட்டிருந்தன..

எப்பொழுதும் வந்தாலும் யுகா இவளுக்குப் பூ வாங்கித் தருவான்.. அப்பொழுது எல்லாம் பெரிதாகப் படாத ஒன்று இன்று விஸ்வரூபம் எடுத்து நின்றது இவள் முன்பு..

கண்டுகொண்டிருந்தாள்.. காதலை.. அவன் மேல் அவளுக்கு இருந்த காதலை.. முன்பெல்லாம் அவன் அவளுக்காக செய்திருந்த அத்தனையிலும் தெரிந்த அக்கறை இன்று காதலாக அவள் விழிகளுக்கு !!

காதலை உணர செய்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்த யுகா அதில் வெற்றியும் கண்டிருந்தான்.. ஆனால் அதைக் காண அவன் உடன் இல்லாதது துரதிஷ்டமே..

அத்தனை மகிழ்ச்சியாக வீடு திரும்பியவள், அவள் அம்மா.. அப்பாவிடம் அவளது திருமணத்தையும் யுகாவையும் பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ச்சியாயிருந்தாள்.

சில நொடிகள் தான்.. மீட்டுக் கொண்டிருந்தாள் அவளையே..

அந்த ஒன்றரை மாதங்களாக யுகா அவளை தவிர்த்தது.. இவளது திருமணப் பேச்சு.. என எல்லாம் அவளுக்கு உணர்த்தி இருந்தன உண்மையை.

அவளது அன்னையிடம் யுகாவுடனான திருமணம் குறித்து பேசியவள் அடுத்து தேடிச்  சென்றது விக்ரமை.. அவளுக்கு இருந்த அத்தனை சந்தேகங்களையும் துடைத்து வைத்தான் விக்ரம்..

மெல்ல நினைவுகளில் இருந்து வெளிவந்தவள் இறைவனை தரிசித்து விட்டு புல்தரையில் வந்தமர்ந்தாள்..

அன்றொரு முறை பவுர்ணமி நாளில் அவனுடன் வந்திருந்தது நினைவில் வர.. அவளைக் காணாது அவன் தவித்தது.. கோபம் கொண்டது.. தலையை உலுக்கிக் கொண்டாலும் அவளை நடுங்கச் செய்தன அவள் மேல் அவன் கொண்ட காதல்.

அவனுடைய காதலை அவள் உணராது போயிருந்தால்.. பின்னாளில் எப்படியோ தெரிய வந்திருந்தால்.. நினைத்துப் பார்க்க முடியாதவை அவை..

ஆக.. அவன் காதலை மறைத்து நல்ல காதலனாகவும் இல்லை.. நட்பை மறந்து நல்ல நண்பனாகவும் இல்லை.. அந்தக் கோபம்.. ஆத்திரம் தான் இன்றுவரை அவனிடமிருந்து அவளைப் பிரித்து வைக்கிறது.

ஏனோ அவளால் மன்னிக்க முடியவில்லை அவனை.. காரணம் ? பயம்.. பயம் மட்டுமே.. அவனால் அவனையே அல்லவா இழந்து நின்றிருப்பாள்.. இவன் சொல்லாமல் விட்டிருந்த காதலால்..

கோவிலில் இருந்து வந்தவள் சப்பாத்தி செய்து சாப்பிட்டுவிட்டு நேரம் பார்க்க மணி பத்து.. அவன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்.. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கியிருந்தாள்.

மெத்தையில் உருளுவதாக நினைத்துத் திரும்ப.. சோபாவிலிருந்து விழுந்திருந்தாள்.

“ ஸ்ஸ் ஆ.. ” என எழுந்தவள் நேரம் பார்க்க மணி ஒன்று..

அவன் வந்ததற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.. அலைபேசியை எடுத்து அழைக்க.. அவனது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட.. என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.

 

மேகம் கடக்கும்…

 

Advertisement