Advertisement

                                                                       உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 31

இரு கைகளையும் பின்பக்கமாய் தலைக்குக் கொடுத்து வானத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த அந்திக் காவலனைப் பார்த்திருந்தான் அதுல்.

மெல்லிய கொலுசொலி கேட்க.. அதற்குச் சொந்தமானவளை நினைத்து இதழ்களில் இதமாய் புன்னகை அரும்பியது அவளுக்குச் சொந்தமானவனுக்கு..!

கொலுசொலி அருகே கேட்க விழிகளை மூடிக் கொண்டான் சட்டென்று.. வந்தவள் வழக்கமாக அழைப்பது போல் அவளது கோட்வோர்ட் ஆன ‘க்கும்’ பயன்படுத்தி அழைத்துப் பார்த்தாள்.

அசைந்தானில்லை..

இருமுறை அழைத்துப் பார்த்தவள் ‘ தூங்கிட்டாங்க போல.. ’ என நினைத்துக் கொண்டாள்.

இளந்தென்றல் இதமாய் வருடிச் செல்ல.. அவன் சிகைக்குள் விரல் விட்டு விளையாடி களிப்புற்றவள் தான் மறைத்து வைத்திருந்ததை எடுத்து அவன் இடக் கரத்தில் கட்டிவிட்டாள்.

அத்தனை அழகாய் பொருந்தியிருந்தது அவன் கரத்தில் அந்தக் கடிகாரம்..! கடிகாரமும் காதல் சொல்லும் கலியுகத்தில்..

“ சூப்பர் பைரவி… ” தன்னைத் தானே பாராட்டிக் கொண்டவள் நேரமாவதை உணர்ந்து மெல்ல எழுந்தாள்.

ஒரு எட்டு எடுத்து வைக்க.. வேகமாக அவள் கரம் பற்றியிழுத்து அமரவைத்து தானும் எழுந்து அமர்ந்தான்.

அவள் திகைத்துப் போய் அவனைப் பார்த்திருக்க.. அவனோ கண் சிமிட்டினான் காதல் கடிதம் தீட்ட..

கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “ ரொம்ப அழகா இருக்கு.. ” என்றான் புன்னகையுடன்.

‘ நிச்சயம் உங்க சிரிப்ப விட இல்ல.. ’ சொல்ல வேண்டும் போல இருந்தது.. ஆனால் முடியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அவன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க மறுப்பாக தலையசைத்து யாமீரனை நோக்கினாள்.

அன்று முழுமதி நாள்.. மொத்த உலகையும் தன் கதிர்களால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் பளீரென்ற புன்னகையுடன்.

“ போதும் பைரவி சைட் அடிச்சது.. ” என்று அவன் சொல்ல

“ எ.. என்னது ” திடுக்கிட்டு அவன் திருமுகம் பார்க்க..

“ இல்ல ரொம்ப நேரமா சந்த மாமாவையே சைட் அடிச்சியா அதான்… பார்க்க வேண்டியவங்க பக்கத்துல இருக்கும் போது உன் பார்வை ஏன் பக்கத்துக்கு கிரகத்துக்கு போகுது…  ம்ம் ”

“ நீங்க இப்படி கூட பேசுவீங்களா ? ” அவள் அகராதியில் சைட் என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தமில்லை..

“ எல்லார்கிட்டயும் பேச முடியுமா ? பைரவிகிட்ட தான் பேச முடியும்.. ”

என்ன அர்த்தமாம் அதற்கு ? அவள் கேள்வியுடன் அவனைப் பார்த்திருக்க.. காதல் கவிதையுடன் அவள் விழிகளை ஏறிட்டான்.

அவளையன்றி அவன் புனையும் காதல் கவிதையினை வேறு யார் படித்திட முடியும் ?

உள்ளுக்குள் இருந்து காதல் பொங்கி எழு.. அவள் விழி வழியே கசிந்த காதல் காற்றினில் கலந்து அவன் நெஞ்சம் முழுவதும் பரவி சிலிர்க்கச் செய்தது..

அவள் கரத்தினை எடுத்து தன்னுடன் கோர்த்துக் கொள்ள.. மெல்ல தலை சாய்த்துக் கொண்டாள் அவன் தோள் மீது.

இருவரது இதயம் தேடிய தேடல் இனிதே நிறைவடைந்து கரம் கோர்த்துக் கொண்டது சந்திர சாட்சியுடன். இவர்களைக் கண்டு நிலவும் தன் காதலியைத் தேட.. உடனே அருகில் விரைந்த மேகப்பெண் அணைத்துக் கொண்டாள் தன்  கரங்களை நீட்டி. நட்சத்திரங்களோ பைரவியோடு போட்டி போட்டுக்கொண்டு வெட்கப்பட்டு கண்சிமிட்டியபடி இருந்தன..

காதல் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..  காதலைச் சொல்ல வார்த்தைகள் தான் மொழியா.. இதோ இங்கு வார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்காமல் நயன மொழி பேசிய இரு இதயங்கள் இணைந்து இடம் மாறிவிட்டன.

இருவருமே விழி மூடி அந்தக் கணத்தை நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்டனர்.. விடியல் அவர்களுக்கு வைத்திருப்பதை அறியாமல்..

இவர்கள் இப்படியிருக்க யுகா தூரிகா பனிப்போர் பனிப்பொழிவின் நடுவில் அங்கிருந்த வேம்பு மரத்தின் இழைகள் காற்றில் அசைந்து முரசு அறிவிக்க துவங்கியிருந்தது.  

முழுதாக நான்கு திங்கள் ஆயிற்று யுகா தூரிகாவுடன் பேசி.. அத்துவைப் பற்றிய விவரங்களை சேகரித்தவன் தூரிகாவின் அம்மாவிடம் திருப்திகரமாக இருப்பதாகக் கூறிவிட்டு காத்திருக்க.. அவன் எதிர்பார்த்தபடியே அவனது ஹைதராபாத் அலுவலக கிளைக்கு மாற்றல் கிடைத்தது.

தஞ்சையிலிருந்து அனைத்தையும் தன்னுள் புதைத்துக் கொண்டு தன்னவளிடம் குறுஞ்செய்தி மூலமாக தான் செல்வதைக் குறிப்பிட்டுவிட்டு கிளம்பியிருந்தான்.

அதன் பின் யாருடனுனான தொடர்பிலும் அவனில்லை.. விக்ரமுடன் கூட..

திடீரென திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு விக்ரம் அவனிடம் வந்து சேர்ந்திருந்தான் அவனுடைய திருமண அழைப்பிதழுடன்.

திருமண வரலாற்றிலேயே முதல் முறையாக மணமகனுக்கே அவனுடைய திருமணத்திற்கு அழைப்பு..! விதி இன்னும் என்ன செய்யக் காத்திருக்கிறது எனத் தெரியாமல் குழம்பித் தவித்தவனுக்கு பூகம்பமாய் தூரிகாவின் பெயர் மணப்பெண்ணாய்..!

இழந்துவிட்டோம் தன்னுடைய பொக்கிஷத்தை.. தன்னுடைய முட்டாள் தனத்தால்.. அவசர புத்தியால் என அனுதினமும் உள்ளுக்குள் நொறுங்கி உடைந்துபோய் இருந்தவனுக்கு அருமருந்தாய் அவளுடனான கல்யாண வைபோகம்..

விக்ரமிடம் கேட்டால் தூரிகாவிடம் கேட்டுக்கொள் என்பதோடு முடித்துக் கொண்டான்.. எப்படி இது சாத்தியம் ? என்னுடையவளை கரம் பிடிக்கப் போகிறேனா.. என் காதல் தேவதையை என் கண்ணுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளப் போகிறேனா.. என்ன யோசித்தும் அவனுக்கு பிடிபடவில்லை.. கிடைத்த உபரித் தகவல்.. அவள் அனுமதியோடு அவள் விருப்பப்படி நடக்கிறதாம் இந்தக் கல்யாணம்.

கிளம்பி வந்துவிட்டான்.. கரம் பிடித்துவிட்டான்.. ஆனால் இதயத்தில் இடம்பிடிப்பது அத்தனை எளிதா ?

இதோ ஆரம்பித்துவிட்டான்.. காதல் போர்தொடுக்க.. இதில் தலைவனை வாகை சூட வைப்பதும் வாட  வைப்பதும் தலைவியின் சித்தம்.

“ தூரி ப்ளீஸ்டி… பேசுடி ”

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவனுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் மன்னிப்பையும் மன்றாடலையும் வைத்துவிட்டான் அவள் முன்பு!

அவளோ கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தலைவனுக்கு பதிலாய் தலையணையை துணை கொண்டு “ everything is fair in love and war ” என்னும் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

பொறுமை இழந்தவன் “ தூரிகா…. ” என புத்தகத்தை பிடுங்க.. வேல்விழியால் ஒரு வேட்கையான பார்வை.. எட்டி நில்லு எச்சரிக்கிறேன் என்பதாய்..

‘ முடியாது… என்னோடு நீ பேச வேண்டும்.. ’ என்பதாய் இவனிடம் இருந்து.

மறுப்பாக தலையசைத்தவள் போர்வை கொண்டு தலை முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

எப்படி சரி செய்வது என தவிப்புடன் அவன் அமர்ந்திருக்க..

‘ அப்புறம் யுகா ஹாப்பி மேரிட் லைப்.. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.. ஆனா நீ அப்படியெல்லாம் வாழ்றது கொஞ்சம் கஷ்டம் போலயே.. முதல் நாளே கண்ணு கட்டி போய் உட்கார்ந்திருக்க.. இதுல நீ…. ’ என்ற மனசாட்சியை மானசீகமாய் இவன் அறுவா எடுத்து துரத்த அது சத்தமில்லாமல் நடையைக் கட்டியது.

உறக்கம் வருமென்று தோன்றவில்லை அவனுக்கு.. ! அவள் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து இவன் தொடர்ந்தான்.

யாருக்கும் காத்திருக்காமல் பூவுலகில் தன் கடமையை நிலைநாட்ட சூரிய பகவான் தேரில் கிளம்பிவிட்டார்.

“ பைரவி…. ” என்ற அழைப்பில் துள்ளி விழுந்தாள்.

எதிரே துலாதரனுக்கு ஈடு கொடுத்து சுட்டெரிக்கும் பார்வையுடன் விக்ரம்..! மெல்ல திரும்பி பார்க்க அத்து சுவரோடு சாய்ந்து அமர்ந்தவாறு துயில் கொண்டிருந்தான்.. நேற்று இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்களையும் அறியாது நித்ராதேவியை சரணடைந்து இருந்தனர்.

‘ என்ன காரியம் செய்துவிட்டோம்.. ’ என்ற கலக்கத்துடன் அவள் எழுந்து நிற்க அவள் அசைவு உணர்ந்து அத்துவும் கண் விழித்தான்.

“ என்ன பைரவி இதெல்லாம்…. ” உறுமினான் விக்ரம்.

அவனது பாப்பு காணாமல் போய் பைரவி வந்திருக்க அதிலேயே அவன் ஆத்திரம் புரிந்திருக்க என்ன சொல்வது எனத் தெரியாமல் தலை குனிந்தாள்.

“ ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல தூக்கம்… ம்ம்.. ” என்றவாறு கை நீட்டி சோம்பல் முறித்தவாறு எழுந்து நின்றான் அத்து.

விக்ரம் அவனை உறுத்து விழிக்க.. அவனோ கண்டு கொள்ளாது

“ குட் மோர்னிங் பைரவி… ” என கடமையாக காலை வணக்கத்தை சொன்னான்.

‘ இந்தக் கலவர பூமியில காலை வணக்கத்தை யாரு கேட்டா… ’ என அவள் முறைக்க..

அவன் பதில் சொல்வதற்குள் விக்ரம் “ என்ன பைரவி இதெல்லாம்.. ” என அவளிடம் மீண்டும் கேட்டான்.

“ என்ன விக்ரம்.. ” என்ற அத்துவை அவன் பார்த்த பார்வை உன்னிடம் நான் கேட்க.. என்னிடம் நீ சொல்ல எதுவுமில்லை என சொல்லியது.

“ மாமா.. அது நா.. நாங்க ” அவள் விழிகள் கலங்க..

அதனைப் பார்த்த அத்து “ இப்போ என்ன விக்ரம் தெரியணும்… ”

“ நான் பைரவிகிட்ட பேசிட்டு இருக்கேன்.. ”

“ நான் பைரவிக்காக பேசிட்டு இருக்கேன்.. ” அவன் குரலும் கடினமாகியது.

“ பைரவி.. ” – விக்ரம்

“ விக்ரம்.. ” – அதுல்

இருவரையும் பார்த்து பதைபதைப்புடன் பாவை நிற்க அவர்களோ அவளை மறந்து நேரடியாக மோதிக் கொண்டனர்.

“ சரி அதுல்… உங்க ரெண்டு பேருக்கு இடையில… ”

“ காதல்… ” காதலாகச் சொன்னான் அதையும்.

அவனை அதிர்ந்து போய் பார்த்தாள் பைரவி.. ஒருவன் அங்கே கொதித்துக் கொண்டிருக்கிறான்.. இவனென்ன குளிர் நிலவாய்… கடவுளே ..!

“ என்ன ? ” விக்ரம் இன்னும் அதிர

பைரவியை தோளோடு தோள் சேர்த்து அணைத்தவன் “ அத்துவுக்கு பையுவ பிடிச்சிருக்கு.. பைரவிக்கும் அத்துவ பிடிச்சிருக்கு.. ” சிறு தடுமாற்றம் கூட இல்லை அவனிடம்.

“ அப்புறம் விக்ரம்.. முதன் முதலா உனக்கு தான் எங்க காதலை அபிசியலா அன்நவுன்ஸ் பண்றோம்.. ” எனக் கண்சிமிட்டி புன்னகைக்க..

“ டேய் !! ” என அவனை நோக்கிப் பாய்ந்தான் விக்ரம்.

அதற்கு முன் “ மாமா.. ” என அத்துவிற்கு அரணாக நின்றிருந்தாள் பைரவி. விழிகளை இருக்க மூடி கரங்களை அத்துவின் கரங்களுடன் கோர்த்தவாறு நின்றிருந்தாள்.

மெல்ல அவள் கரத்திலிருந்து தன்னுடைய கரத்தை விடுவித்தவன் அவள் தோள் மீது சுற்றி வளைத்து கை போட்டுக் கொண்டு

“ இப்போ வாடா.. என்னோட பைரவியைத் தான்டி என்னைத் தொடு பார்க்கலாம்.. யாரு அவ தென்னாட்டு மணிகர்னிகாவாக்கும்..! ” குறும்பும் குதுக்கலாமுமாக அவள் கள்வன்.

“ ம்ஹும்… வீர மங்கை வேலு நாச்சியார் டா என் பாப்பு… ” சிரிப்புடன் விக்ரம்.

தன் செவிகளை நம்பாமல் விழிகளைத் திறக்க.. மொத்த புன்னகையையும் குத்தகைக்கு எடுத்தவன் போல நின்றிருந்தான் விக்ரம்.

திரும்பி அத்துவைப் பார்க்க.. அவன் கண்ணடிக்க.. வெட்க இழைகள் அவள் வதனம் தீண்ட.. அதனைப் பார்த்து இன்னும் சிரித்தான் விக்ரம்.

“ மாமா…. ” என சிணுங்கினாள் மாமன் மகள்.

அத்துவும் விக்ரமும் ஹை-பை கொடுத்துக் கொள்ள..

“ நான் பயந்துட்டேன் தெரியுமா ?? நீங்க என்னடான்னா சிரிச்சுட்டு இருக்கீங்க.. ”

“ சும்மா.. விளையாடினோம் பாப்பு.. அத்து அவ்ளோ கூலா இருக்கும் போதாவது நீ யோசிக்க வேணாமா.. ”

“ ம்ம்.. நீங்க இவருக்கா மாமா.. எனக்கு தானே மாமா.. அப்போ நான் தானே டென்ஷன் ஆகணும் ” அவள் சட்டம் படிக்க…

“ ஆ..மா…. ” என கோரஸ் பாடினர் இருவரும்.

இடையில் கை வைத்து இருவரையும் முறைக்க

“ அத்து முன்னாடியே எங்கிட்ட சொல்லிட்டாரு பாப்பு.. அப்புறம் ” என ஏதோ சொல்ல வந்தவன் அத்துவைப் பார்த்து நிறுத்தி விட

“ அப்புறம் என்ன மாமா… ”

“ அப்புறம் என்னவா.. இதெல்லாம் எவ்ளோ நாளா நடக்குது.. ஒரு வார்த்தை சொன்னியா எங்ககிட்ட  ”

“ மாமா.. அது ”

“ நீ யுகா காதல் செடிக்கு தண்ணி ஊத்தி வளர்த்தப்பவே நான் சுதாரிச்சுருக்கணும்.. ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானா வளருமாமே.. நீ அப்படி தான பண்ணிருக்க.. ”

“ அது ஊரான் குழந்தையை ஊட்டி வளர்த்தா தன் குழந்தை தானா வளரும்.. அப்படித்தானே மாமா ? ” என்றவளைப் பார்த்து விக்ரம் தலையில் கை வைக்க..

அத்து சிரித்துக் கொண்டே.. “ அது தான் பால்வாடிப் பிள்ளை பைரவி.. அவளுக்குள்ள எப்படிக் காதல் சாத்தியம்ங்கறது இப்போ வரைக்கும் என் சக்திக்கு அப்பாற்பட்ட கேள்வி.. ” என மேலும் வம்பிழுக்க

“ என்ன கிண்டல் பண்றீங்களா ? ”

“ ச்ச.. உன்னைப் போய்.. வாய்ப்பே இல்ல பைரவிம்மா… ” என்றதும்

“ போங்க நா கோவமா கீழ போறேன்… ” என சொல்லிக் கொண்டே கீழே இறங்க இருவரின் சிரிப்பும் இன்னும் அதிகமாகியது.

படியில் நின்று திரும்பியவள் “ போங்கடா…” என்று சொல்ல

“ அடிங்…. ” என இருவரும் ஒரு எட்டு எடுத்து வைக்க.. பறந்துவிட்டிருந்தாள்.

விக்ரமும் அத்துவும் ஒருவரை ஒருவர் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர்.

விக்ரம் மெல்ல “ அத்து.. இப்ப யாரவது மேல வந்திருந்தா.. ” எனத் தயங்க.. அத்துவிற்கே அவன் தவறு புரிந்திருந்தது.

யுகா வீட்டாரோ.. விக்ரம் வீட்டாரோ.. பைரவி வீட்டாரோ மேல் மாடம் வந்திருந்தால் யாருக்கும் இவர்களுடைய காதல் பற்றி தெரியாத நிலையில்     நிச்சயம் சங்கடமாகிப் போயிருக்கும்.

தெரிந்தே இருந்தாலும் கூட விடை காண முடியா வினாக்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

“ இனிமே கவனமா இருக்கோம்.. விக்கி ” என முடித்துவிட்டான்.

 

மேகம் கடக்கும்…  

 

Advertisement