Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 30

யுகா தூரிகா இருவரையும் மேல் மாடத்தில் உள்ள அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தாத்தாவிடம் வந்தார் தூரிகாவின் அம்மா லட்சுமி.

அவருடைய கணவரும் அங்கிருக்க அருகிலேயே அமர்ந்தார்

“ யாருமே எதிர்பார்க்கலைப்பா.. அத்தை மாமா இறந்தப்புறம் விட்டுப் போன நம்ம உறவு உங்க பேத்தி கல்யாணத்தில மறுபடியும் தொடரும்னு.. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா ” என்றார் லட்சுமி தாத்தாவிடம்

“ எல்லாமே மேல இருக்கிறவன் எழுதினபடி தான் நடக்கும்மா நம்ம கையில எதுவும் இல்லையே ! ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என் அக்கா என் கூட இல்லாட்டியும் நீங்க இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ” என்றார் தாத்தா கரகரப்பாக

“ இவ்ளோ நாள் எப்படியோ மாமா ஆனால் இனிமேல் கண்டிப்பா வந்து போறோம்.. நம்ம உறவு என்னைக்குமே விட்டுப் போகாது.. நமக்கு அப்புறம் நம்ம பசங்க இருக்காங்களே ! அங்க பாருங்க.. ” என காட்டிய திசையில்..

அத்து, மிதுன், விக்ரம், சூர்யா, பைரவி என இளைய பட்டாளங்கள் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சிரிப்பால் அவ்விடமே கலகலப்பாக இருந்தது.

“ எப்பவும் இவங்க இப்படியே இருப்பாங்க மாமா.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ” என்றார் தூரிகாவின் அப்பா..

தாத்தாவின் வேண்டுதலும் கூட அதுவே.. அதைவிட அவருக்கு வேறு என்ன ஆசை இருந்துவிட முடியும்.. ஒவ்வொரு பண்டிகையின்போது எங்கிருந்தாலும் இங்கு வந்து சேர்ந்து.. ஒருவரோடு ஒருவர் பேசி மகிழ்ந்து.. அன்பை பரிமாறி.. பண்டிகை கொண்டாடும் அழகை பார்ப்பது தானே அவருடைய ஆசை.. விருப்பம்..

எப்படியும் அத்து அந்த மகிழ்ச்சியையும் அவருக்கு கொடுப்பான் என்பதில் துளியும் சந்தேகமில்லை பெரியவருக்கு.. இப்படி ஒரு பேரப்பிள்ளை கிடைக்க நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.

மிதுன் தனது கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட.. ஊரைச் சுற்றிப் பார்த்து வருவதாகச் சொல்லி சூர்யாவும் கிளம்பிவிட.. விக்ரம், அத்து, பைரவி மட்டுமே அமர்ந்திருந்தனர்..

“ சரி மாமா.. நான் வீட்டுக்கு போறேன் ” என எழ

“ அங்க போயி என்ன பாப்பு பண்ண போற ? அங்க பாரு.. அத்தை கூட இங்க தான்.. எங்கம்மா கூட இங்கதான் இருக்காங்க.. ” என அவளைத் தடுத்து விட்டான் விக்ரம்.

அவளுக்கும் இருக்கத்தான் ஆசை.. ஆனால் அவளுக்கு எதிர்ப்பக்கம் உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஜெயாவின் பார்வை அடிக்கடி இவளைத் தொட்டுச் செல்வதை உணர்ந்த பின் அங்கு அமர முடியவில்லை. அவளது பார்வையைத் தொடர்ந்து அத்து ஜெயாவை பார்த்தவுடன்..

‘ ஓ அதான் அம்மணி ஓடப் பார்க்கிறாளா ’ என சிரிப்புடன் அவளைப் பார்க்க.. அவளோ முறைத்தாள்.

“ அது ஒண்ணுமில்லை விக்ரம்.. ஏன் பைரவி எங்க இருந்து போறானா..! ”  என்றவன் நிறுத்த..

“ ஏன் அத்து ”

இந்த நான்கு மாதத்தில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்து மணம் வீசத் தொடங்கியிருந்தது.

பைரவியோ ‘ ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சொல்ல வேண்டாம் ’ என கண்களாலே கெஞ்ச.. இவனும் ஒரு குறுஞ்சிரிப்புடன் “ நிறைய பேர் இருக்காங்கல்ல.. ஒரு மாதிரி கசகசன்னு இருக்கும்.. அதான் ” என்றான்.

‘ அப்படியா ’ என்பதைப்போல விக்கி பார்க்க.. வேகமாக தலையை ஆட்டி வைத்தாள்.

“ அப்போ.. வாங்க தோட்டப் பக்கம் போகலாம் ” என விக்கி அழைக்க மூவரும் எழுந்து பின் பக்கம் சென்றனர். வேங்கை மரத்தடியில் அமர்ந்து கொண்டவுடன் பைரவி ஆரம்பித்தாள்.

“ மாமா.. தூரிகா அக்கா பேரு ஆதிசக்தியா ”

“ ஹ்ம்ம்.. ஆமா டா.. பேர் வைக்கும் போது சாமி பேர் முன்னாடி வெச்சு தான் வைப்பாங்கலாம் அவங்க… ”

“ அவங்க வைக்கிறது இருக்கட்டும்.. கல்யாண மண்டபத்துல யுகா வேட்ஸ் ஆதிசக்தினு போட் வைச்ச வெவஸ்தகெட்ட மனுஷன்  யாரு மாமா…”

அத்து சிரிப்பை மறைக்க மறுபக்கம் திரும்பிக் கொள்ள விக்ரம் விழித்தான். பின்னே அந்த வெவஸ்தகெட்ட மனுஷன் நான் தான் என சொல்லவா முடியும்.

“ ஏன் பாப்பு என்ன ஆச்சு.. அந்த பேர்ல என்ன பிரச்சனை ”    

“ என்ன ஆச்சா.. பொண்ணு வேறன்னு நினைச்சி யுகா மாமா எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்கன்னு அவங்களை.. உங்களை எல்லாரையும் திட்டிட்டேன்.. ”

விக்ரம் அத்துவை ‘ ஏண்டா இப்படி ’ என்பதாய் முறைத்தான். ஏனெனில் அத்து தான் யுகாவின் பெயர் சிவன் பெயராக இருப்பதால் தூரிகாவினுடைய இன்னொரு பெயரான ஆதிசக்தி என்ற பார்வதி தேவியின் பெயரை சேர்த்து வைக்கலாம் என ஐடியா கொடுத்தவன். சிந்தனை திருவாளர் அதுல் அவர்கள்.. செயல் விக்ரம்..     

“ அது சரி மாமா.. கல்யாணம் முடிஞ்சதும் ஏன் இங்க வந்தோம் ? அதுவும் இல்லாம கல்யாணம் ஏன் தஞ்சாவூர்ல வைக்காம இங்க வச்சி இருக்காங்க ? ”

“ தூரிகா பொறந்தப்ப அவங்க வீட்ல வேண்டி இருப்பாங்க போல.. அதான் இங்க வெச்சாச்சு.. அப்புறம் ஏன் இங்க வந்தோம்னா ! ரிசப்ஷனுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு.. எதுக்கு அவசர அவசரமா கல்யாணம் முடிஞ்ச கையோட அவங்கள அலைய வைக்கணும்னு இங்க வந்து மாப்பிள்ளை பொண்ணு அழைப்பை முடிச்சாச்சு..

ஆனால் யாருமே எதிர்பார்க்கலை.. பொண்ணு வீடு மாப்பிள்ளை வீடும் பக்கம் பக்கம் அமையும்ன்னு ” என்றவுடன் குழப்பமாக அவனைப் பார்த்தாள்

“ தூரிகா இந்த வீட்டுப் பொண்ணு டா.. ”

காலையிலிருந்து நடக்கும் எல்லாவற்றையும் பார்த்து அவள் அப்படித்தான் நினைத்தாள். ஆனால் எப்படி ? அதுதான் தெரியவில்லை.. அவனிடம் கேட்க..

“ அது அத்து சொல்லுவான் ”

விக்ரம் அத்துவைப் பார்த்தான்..

அத்து, “ தூரிகா என்னோட மாமா பொண்ணு.. ” என்றதும் வியப்புடன் அவள் விழிகள் விரிய.. அதை ரசித்துக்கொண்டே சொல்லத் தொடங்கினான்.

தூரிகாவின் அப்பா.. அத்துவின் அப்பாவிற்கு அத்தை மகன்.. அதாவது சின்னு தாத்தாவின் அக்கா மகன் தான் அவர்.. அவருடைய அம்மா இருக்கும் வரை இந்த மாமாவுடன் தொடர்பு இருந்தது.. அதன்பின் அப்படியே விட்டுப் போனது. அத்துவிற்கு வரன் பார்க்கையில்தான் விடயம் தெரிய வந்தது.. அதுவும் அத்து தூரிகா வேண்டாம் எனக் கூறியவுடன் ஜெயா அவர்களை அழைத்து மன்னிப்புக்கோர.. அவர்களும் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டனர்.  ஆனால் பேச்சுவாக்கில் எப்படியோ சரளைப்பதி வந்து மறைந்து மறந்து போயிருந்த உறவும் மறுபடியும் முளைத்தது..

ஒருமுறை அனைவரும் சரளைப்பதி வந்து தாத்தாவைப் பார்த்துச் சென்றனர். அதை எடுத்து ரவியும், ஜெயாவும் தாத்தாவுடனே இருந்துவிட்டனர் அத்துவின் பிடிவாதத்தால்.. தற்போது மிதுன், அத்து மட்டும் தஞ்சையில் வாசம்.. மிதுனின் படிப்பு முடியும் வரை மட்டுமே.. அதன்பிறகு இங்கு வந்து விடுவதாகக் கூறி பெற்றோரை அனுப்பி விட்டான்.

அடுத்து யுகா – தூரிகா திருமணம் முடிவானதில் இவர்களுடன் விக்ரம், யுகா குடும்பமும் இணைந்து கொண்டது. மருதமலையில் திருமணத்தை முடித்து மற்ற சடங்குகளுக்கு இங்கு வருவதாக முடிவு செய்தனர்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த மிதுனும், சூர்யாவும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள.. இனிமையாக பொழுது கழிந்தது..

வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக விடை பெற.. யுகா, தூரிகா, விக்ரம் அத்து வீட்டுப் பெரியவர்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தனர்.

அனைவரும் இரவு உணவை உண்டு கொண்டிருக்க.. பைரவியின் பெரிய மாமா அங்கு வந்தார்..

பரிமாறிக் கொண்டிருந்த பைரவியை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே செல்ல.. சாப்பிட்டுக் கொண்டிருந்த விக்ரம் பாதியில் எழுந்துவிட்டிருந்தான்.

திரும்பி அவன் அப்பாவைப் பார்க்க.. அவர் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருப்பது கண்டு எரிச்சல் அடைந்தவன்

“ பெரியப்பா ஒரு நிமிஷம் ” என்றவாறு பின்னே செல்லப் போக..

ஜெயா தான் “ தம்பி.. பாதி சாப்பாட்டில் எடுத்துட்டீங்க.. சாப்பிட்டுட்டு அப்புறமா போய் பேசுங்க ” என்றார்.

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன் “ இல்லம்மா ஏற்கனவே ரொம்ப லேட் பண்ணிட்டேன்.. இப்போ நான் பேசியே ஆகணும் ” என்று விட்டு பைரவி வீடு தேடிப் போனான்

அத்து யோசனையோடு உணவை அளந்து கொண்டிருக்க.. ஜெயா ஒரு அதட்டல் போடவும் இலையில் இருந்ததை மட்டும் உண்டு முடித்து விட்டு எழுந்து சென்று விட்டான்.

பைரவியை இழுத்துச்சென்ற மாரி என்றும் இல்லாத திருநாளாய் இன்று அவளின் மேல் கோபம் கொண்டு விட.. பைரவிக்கு கண்களில் நீர் கோர்த்தது.

“ ஏன் அம்மிணி அவங்க இருக்கிற இடத்துக்கு உன்ன போக வேண்டாம்னு சொல்லிட்டு தானே போனேன் ? திரும்பவும்.. ” என்றபோதே இடையில் வந்துவிட்டான் விக்ரம்.

கலங்கிய விழிகளுடன் பைரவியைக் கண்டவனுக்கு தன் பொறுப்பற்ற தன்மையை குறித்து தன் மேலேயே கோபம் வந்தது. ஏற்கனவே பைரவி சொல்லி இருந்தாள் இந்தத் திருமணத்தை மறுத்த பிறகு அவன் சரளைப்பதி வந்திருக்க வேண்டும் என்று.. இவன் அப்பொழுதும் போகவில்லை.. அதன் பின்பு அவன் பையுவோடு வந்த போது விவசாயிகள் மாநாட்டிற்காக மாரி வெளியூர் சென்றிருந்தார்.  தந்தையுடனான ஊடலில் பெரியப்பாவை மறந்து போயிருந்தான்.

இங்கு யுகா திருமணத்திற்கு வந்த பின்பு பெரியப்பா இவனுடன் இவன் குடும்பத்தாருடன் பேசாமலிருக்கவே அப்பொழுது தான் செய்த தவறு புரிந்தது. சரி திருமணம் முடியட்டும் என்று காத்திருந்தான்.. ஆனால் அதன் பின்பு அவரிடம் பேசுவதை தாமதப்படுத்த இப்பொழுது பைரவியின் மேல் அவரது கோபம் திரும்பியுள்ளது..

“ பெரியப்பா.. ”

ஏதும் பேசாமல் எழுந்து வெளியே வந்து விட அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.. ஆனால் எல்லாவற்றையும் சரி செய்யும் பொறுப்பு தன்னிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்தவன் அவர் பின்னே சென்றான்.

அவர் கயிற்று கட்டிலில் படுத்திருக்க.. அவர் காலடியில் அமர்ந்துகொண்டு காலை பிடித்து விட ஆரம்பித்தான்.

அவர் எந்தவித எதிர்ப்பும் சொல்லாது இருப்பது கண்டு இவன் இதழ்களில் வெற்றிப் புன்னகை. இவனுக்குத் தெரியும்.. அவர் பற்றி..

அவனது சிறு வயதில், காட்டில் வேலை செய்துவிட்டு அலுப்பாக வந்து படுத்தவருக்கு இந்த மகன் தானே கால் பிடித்து விட்டிருக்கிறான்.

பொதுவாக ஆரம்பித்தான்.. அவன் ஏன் பைரவியைத் திருமணம் செய்ய மறுத்தான் என்பதைப் பற்றி அவன் சொல்லவும் அவர் கோபம் சற்று குறைந்தது.. அடுத்து அவன் தந்தை செய்துவைத்த குளறுபடிகள் சொல்லவுமே கோபம் குறைந்திருந்தது.. ஆனால் அவர் ஏதும் சொல்லாது படுத்திருக்க விக்ரம் ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.

அதை உணர்ந்தவர், “ அம்மணி !! நாளைக்கே அந்த வெள்ளைக் குஞ்சை திறந்து விட்டுடாதீங்க.. என் மகனுக்கு நான் என்ர கையால குழம்பு வச்சு கொடுக்கணும் ” என்று அவர் மனதை சொல்லிவிட.. பைரவியும், விக்கியும் ஹை-பை போட்டுக் கொண்டனர்.

பின்பு விக்ரம் பைரவியைக் கூப்பிட்டு வந்து உணவருந்த வைத்தான்.. அதன்பின் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு அவள் அவற்றை அலச ஆரம்பிக்க.. ஜெயா அங்கு வந்தார்.

அவரைப் பார்த்ததுமே இவரது தேகம் அதிர.. கையிலிருந்த பாத்திரம் நழுவி ‘நங்’ என கீழே விழுந்தது.

‘ போச்சு.. போச்சு.. பைரவி.. வசமா மாட்டிகிட்ட ’ என பயந்து கொண்டே அவரைப் பார்க்க..

அவரோ, “ நேரம் இப்பவே பத்தாச்சு.. போய் தூங்கு.. காலையில அலம்பிக்கலாம்.. நீயும் பயணம் செஞ்சு வந்திருப்ப தானே.. போ.. போய் ரெஸ்ட் எடு ” என அக்கறையாக அவளை அதிர வைத்தார்.

‘ அத்தையா பேசியது ’ என அவள் அதிர்ந்து நிற்க..

பால் எடுத்துப் போனவர் திரும்பி வரவும்.. அவள் அப்படியே நிற்பதை பார்த்து

“ நீ இன்னுமா போகல ? ” என அதட்ட

“ இ.. இதோ போறன் அத்தை ” என்றவள் ஓட்டமெடுக்க.. புன்னகையுடன் அறைக்கு திரும்பினார் ஜெயா.

 

மேகம் கடக்கும்….

 

Advertisement