Advertisement

                                                                    உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 29

 

கதவு தட்டும் சத்தம் கேட்டது. பைரவி எழுந்து சென்று கதவைத் திறக்க.. அதுல் நின்றிருந்தான்.

அவள் விட்டுவிட்டு வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

‘ ஸ்ஸ்.. ’ என அவள் தலையில் தட்டிக் கொண்டு “ ஏதோ நியாபகம்.. அதான் விட்டு… ” என அவள் மன்னிப்பை வேண்ட

“ பரவாயில்ல எதையும் நினைக்காம தூங்கு.. நடக்கனும்னு இருக்கறது நடக்கும்.. நீயோ நானோ குறுக்க போய் தடுக்க முடியாது.. புரிஞ்சுதா ”

அவள் புரிந்ததாய் தலையாட்ட…

“ காலைல நானே வந்து எழுப்புறேன்.. அப்புறம்… ” என்றவனை அவள் விழிகள் நோக்க.. அவன் விழிகளோ அவள் கையிலிருந்த பார்சலை நோக்கிக் கொண்டு இருந்தன..

“ க்கும்.. ”

“ தூங்கு… ” என்றுவிட்டு நகர்ந்தான்.

உள்ளே வந்தவள் யோசனையுடன் அவளவன் அளித்த பார்சலைப் பிரித்துப் பார்க்க.. உதயமாகிறது உதட்டில் உவகை.. வியப்புடன் கூடிய மகிழ்ச்சி..

எதிர்பார்ப்புகள் ஏமாற்றலாம்.. எதிர்பாராதவை எதிர்பார்த்தவனிடமிருந்து வந்தால்?

அதைப் பத்திரப்படுத்தி விட்டு படுக்கையில் தஞ்சமடைய.. உறக்கம் அவள் வசம்..

 

எந்தன் உயிரே… எந்தன் உயிரே..

கண்கள் முழுதும்.. உந்தன் கனவே..

 

சித்ரா அவளுக்கு திருப்பள்ளியெழுச்சி பாட.. உறக்கம் உதறி எழுந்தாள்.

அலைபேசியின் திரையில் மாமா..

அதற்குள் கதவு தட்டும் ஓசை கேட்க.. எழுந்து சென்று திறந்தாள்..

அதுல் தான் நின்றிருந்தான்.

பட்டு வேட்டியில்.. பழுப்பு நிற முழுக்கை சட்டையை சற்று மேலே மடித்து விட்டபடி நின்றவனைப் பார்த்தவள்… அவளை மறந்து அகிலம் மறந்து நிற்க..

“ பைரவி ” என உலுக்கினான்.

“ ஆ.. ஆங்.. எதுக்கு கூப்பிட்டீங்க.. ” என்றதும் முறைத்தவன்..

“ கடந்த அரைமணி நேரமா.. அரண்மனை கதவு திறக்க தட்டிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா..  ”

தான் கடந்த அரைமணி நேரமாக கனாவில் காதலில் களித்திருந்ததெல்லாம் இவனது அழைப்பில் தான் என்பது புரிய..

“ ஒரு பத்து நிமிஷம்… ” எனச் சொல்லிவிட்டு வேகமாக உள்ளே ஓடினாள்.. குளித்து முடித்து பழுப்பு நிறத்தினாலான அழகிய புடவையில் அழகுப் பதுமையாக வெளியே வந்தாள் பாவை.

“ இதுவா உன் பத்து நிமிஷம்.. வா பைரவி எல்லாரும் கிளம்பிட்டாங்க.. நாம மட்டும் தான் இருக்கோம்.. முஹுர்த்தத்துக்கு நேரமாகிடுச்சு.. ” என்றபடி அவளைத் தர தரவென இழுத்துச் சென்றான்.. சென்றான் என்பதை விட ஓடினான் எனச் சொல்லலாம். அந்த அவசரத்திற்கு நடுவிலும் புடவையில் வந்த பதுமையை அவன் ரசிக்காமல் இல்லை.

கீழ் தளத்தில் நடைபெறவுள்ள திருமணத்திற்கு எதற்கு இத்தனை பரபரப்பு.. புரியவில்லை என்றாலும் அவனுடன் சேர்ந்தே ஓடினாள்.

அவளை இழுத்து வந்தவன் வெளியே வர.. அப்பொழுது தான் கவனித்தாள் திருமணத்திற்கு உரிய பரபரப்பு ஏதுமில்லாமல் அமைதியாக இருந்ததை.. அவளை அங்கு நிறுத்தியவன் காருடன் வர.. ஏறி அமர்ந்தாள்.

“ கல்யாணம்..?? ”

“ மருதமலை கோவில்ல.. ”

“ முஹுர்த்த நேரம்… ” என அவள் இழுக்க..

“ இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கு.. ”

இன்னும் முக்கால் மணி நேரமா.. அப்பொழுதே ஆறு முப்பது ஆகியிருந்தது.. ச்ச.. தன்னால் தான் தாமதமோ என தவிப்புடன் அவனைப் பார்க்க..

அவனும் இவளிடம் திரும்பி புன்னகைத்தான்.. சட்டென இதமாய் அவளுள் இறங்கியது அவனது இதழ்களின் இளநகை..

“ கவலைப் படாத.. இங்க இருந்து பத்து நிமிஷம் தான்.. போயிடலாம்.. உன் மாமா கல்யாணத்தை பார்த்திடலாம்.. ” என்றதும் தான் அவளுக்கு யுகாவின் நினைவு எட்டிப் பார்த்தது.

மீண்டும் மனம் சோர்ந்து விட இருக்கையில் சாய்ந்தாள்.. அவள் அமைதி புரிந்தும் அவன் ஏதும் செய்ய இயலாமல் அமைதியாக வந்தான்.

மருதமலை அடிவாரத்திற்கு வந்தவர்கள் அங்கு கூட்டமாக இருப்பதைப் பார்த்து விசாரிக்க.. மலைக்குச் செல்லும் வழியில் இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் சாலை வழியாக வாகனங்கள் செல்லத் தடை..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. ஒரே ஒரு கணம் தான்.. காரை பார்க் செய்தவன் அவள் கைப் பிடித்து ஓடத் தொடங்கினான்.

“ என்ன பண்றீங்க ?? ”

“ தெரியல.. மேல படிக்கட்டு வழியாக போகப் போறோம்.. ”

“ எ.. என்னது ” அதிர்ந்து போய் அவள் நின்றுவிட

“ ப்ச் பைரவி.. நம்மகிட்ட நேரமில்ல.. சீக்கிரம் போகலாம் வா.. ” என முன்னேறினான்..

“ உங்களுக்கு என்ன ஆச்சு.. எவ்வளவு தூரம் இப்படியே போக முடியும்.. எத்தனை படிக்கட்டு இருக்கு தெரியுமா ? ”

“ பார்த்துக்கலாம் பையு… நான் ஸ்கூல்ல அத்தலட்.. சோ போயிடலாம்.. ”

“ அப்போ நான்..  ” என்றாள் மூச்சு வாங்கிய படி.

“ நீயில்லாம நான் எப்படி.. ”

அவள் சட்டென திரும்பி அவன் திருமுகம் பார்த்திட

“ நான் போனா உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்.. இப்ப பேசி எனெர்ஜி வேஸ்ட் பண்ணாம அமைதியா வா.. ”

“ ப்ளீஸ்ங்க.. கல்யாணத்தை நான் வீடியோவுல பார்த்துக்கிறேன்.. என்னை விட்டுடுங்க.. என்னால முடியலை.. ”

அவன் செவிகளை அதெல்லாம் சென்றடையவில்லை போல.. அவளை பிடித்தபிடி  பிடித்தபடி இருக்க.. படிகளில் தாவித் தாவி சென்று கொண்டிருந்தான்.

புடவை வேறு அவளை படுத்தி எடுக்க.. அவனைப் பார்த்தாள்.

‘ அவருக்கு மட்டும் வேட்டி தடுக்கவே இல்ல.. ’ இப்போ அதுவா முக்கியம் என தன்னையே மனதில் கொட்டிக் கொண்டாள்.

“ நீங்க இப்ப எனக்காக தானே.. இவ்ளோ தூர… ”

“ எனக்காக..  ”

அவள் முடிக்கும் முன்பு அவன் முடித்து வைத்திருக்க.. முறைப்பதைத் தவிர அவளுக்கு வேறோன்றும் தோன்றவில்லை..

“ அந்த கார் யாரோடது.. நீங்க சொல்லவே இல்ல.. ”

என்னோவோ அவனுடனே இருக்க வேண்டும்.. அவனுடனே பேசிக் கொண்டிருக்க வேண்டும்… ஒரு விபரீத அவா.. இப்பொழுது பார்த்தா அதுவும் தோன்ற வேண்டும் !! இருவரும் மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருக்க…

“ திருமதி. அதுல் ” என்றான் பூரிப்புடன்

அப்படியே சிலையென நின்றுவிட்டாள். செவிக்குள் அவன் குரல் பாய்ந்து மூளையைச் சென்றடைய அது அவசர காலச் சட்டம் பிறப்பித்து வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது.

‘ என்ன இவ அடிக்கடி சிலையாகிடுறா.. ’ தனக்குள் கேட்டுக் கொண்டே அவளை உலுக்கி நடப்பிற்கு கொண்டு வந்தான்.

“ என்ன பைரவி.. உன் மாமா கல்யாணத்துல எனக்கிருக்க பொறுப்பு, ஆசை கூட உனக்கில்ல போல ”

“ அந்தக் கார்.. ”

“ அதுவா.. அது அத்துவோட ஆத்துக்காரிக்கு…. வருங்கால.. ” அழுத்திச் சொல்ல.

‘ வருங்காலமா.. ’ என்றவளுக்கு அப்போது தான் சுவாசம் சீரானது.. அதற்கு மேல் யோசிக்க அவனெங்கே விட்டான்.. பத்து படிகளை தாண்டியிருந்தான் அவளுடன்.

ஓரிடத்தில் வந்ததும் அவனிடம் இருந்து கையை உருவிக் கொண்டு அமர்ந்துவிட்டாள். அதற்கு மேல் அவளால் முடியாது.. கால்கள் இரண்டும் நடுங்க ஆரம்பித்திருந்தன.

நிமிர்ந்து அவனைப் பார்த்து.. விழிகள் மூலம் வலியினை அவன் விழிகளுக்குள் கடத்தியிருந்தாள்.     

“ எழுந்திரு பைரவி.. ”

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்திருக்க.. அவனோ அவளை எழுப்பி நிற்க வைத்து தூக்கியிருந்தான்.

இமைக்கும் நொடியினில் அனைத்தும் நிகழ்ந்திருக்க.. ஒரு நொடியில் பல உணர்வுகள் பைரவிக்கு.. அச்சம் மடம் நாணம் எல்லாம் போட்டிபோட வரிசையில் முன்னாள் வந்தது என்னவோ அதிர்ச்சி தான்.. அவன் கைகளில் அவள் ! இது அவள் எதிர்பாராதது அல்லவா..

அவன் அளித்த அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடியவள் மெல்ல விழி திறந்து பார்க்க.. நிதர்சனம் உரைக்க.. மீண்டும் விழி மூடிக் கொண்டாள். பின்னே ! என்ன செய்வதாம் ? ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சி.. கடந்த ஆறு மணி நேரமாக அன்பு.. ஆச்சர்யம்.. அதிர்ச்சி.. திகைப்பு.. விரக்தி.. என பல உணர்ச்சிகள் படை எடுத்திருக்க போர் புரிந்து ஓய்ந்திருப்பவளிடம் வேறு என்ன எதிர்பார்ப்பதாம் ?

உண்மையில் ஒரு கணம் உறைந்தே போனாள் அவன் செய்த காரியத்துக்கு.. சத்தியமாக அத்துவிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை அவள். அவ்வளவு நேரம் ஓடி வந்ததால் அவனது இதயமும் வேகமாக துடித்திருக்க உறைந்தவள் உயிர் பெற்றாள்.

என்ன செய்ய வேண்டும் ? என்ன பேச வேண்டும் ? எதுவும் தெரியவில்லை புரியவில்லை.. அமைதியாக இருப்பது உத்தமம் என கண் மூடியே இருந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் அவன் நிற்க.. மெல்ல கண் திறந்தாள். வியர்வை முத்துக்கள் காதல் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டிருக்க.. இத்தனை தூரம் அவளை தூக்கி வந்ததால் மூச்சு வாங்க நின்றிருந்தான்.

குனிந்து அவள் காதோரம்.. “ கோவில் வந்திருச்சு பைரவி ” என்றான் சின்ன சிரிப்புடன்.

துள்ளிக் குதித்து இறங்கினாள்.

“ அம்மா…. ” என்றபடி அவன் முதுகை பின்பக்கம் வளைக்க.. அவளோ சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.

‘ அடிப்பாவி.. உன்னை இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்தவன் கஷ்டப்படுறதை பார்த்து சிரிக்கவா செய்யுற.. ’ என அவன் முறைக்க

அவள் தலையை எல்லா பக்கமும் ஆட்ட..

தலையை இடவலமாக அசைத்து “ சீக்கிரம் வா.. ” என உள்ளே அழைத்துச் சென்றான்.

கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என ஐயர் சொல்ல..

உற்றாரும் சுற்றாரும் சூழ.. அந்த மருதமலை முருகனின் அருளுடனும் அன்பானவர்களின் ஆசியுடனும் தன்னுடைய மனையாளை மூன்று முடியிட்டு தன்னுடையவளாக்கிக் கொண்டான்..

கலியுகத்தையனின் கரம் பிடித்து அக்னியை வலம் வந்து அவனுடைய சரிபாதி ஆகி நின்றாள் ஆதிசக்தி.

கரம் பிடித்த அவளின் கரத்தை அழுத்திக் கொடுத்தவன் மெல்ல அவள் முகம் பார்க்க.. மெல்லிய புன்னகையை உதிர்த்தாள் ஆதிசக்தி என்ற தூரிகா.

ஆம்.. தூரிகாவே தான்.. எந்த தூரிகாவின் நட்பையும் குடும்பத்தின் நம்பிக்கையையும் இழந்து விடக்கூடாதென்று தன் காதலை தனக்குள்ளே புதைத்துக் கொண்டானோ.. அந்த தூரிகா.

யாருடன் தன் அகத்தில் நேசத்தால் நெய்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தானோ.. அவளுடன் அவள் அனுமதியுடன் அவளைக் கரம்பிடித்து தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை துவங்கியிருந்தான் யுகா.

இன்னமும் அவர்களுக்குள் கேட்கப்படாத கேள்விகளும் தீர்க்கப்படாத தீர்வுகளும் நிறையவே இருந்தன.. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.. என இருவருமே உணர்ந்திருந்ததால் எல்லாவற்றையும் ஒதுக்கி முழு மனதுடன் இறைவன் சந்நிதானத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

தூரிகாவை பார்த்த அதிர்ச்சியில் பைரவி திரும்பி அத்துவைப் பார்க்க அவனோ கண் சிமிட்டினான்.

அப்படியென்றால் அவருக்கு முன்னமே தெரியுமா ? அதனால் தான் இத்தனை பாடுபட்டு என்னை இங்கு கூட்டி வந்தாரா ? அகம் அத்தனையும் அவனை சரணடைய ஆயத்தமாக… அவனோ அவள் கை பிடித்து அவள் வைத்திருந்த அட்சதையை தூவினான்.

எல்லோரும் தூவியிருக்க.. இவள் மட்டும் தனியாகத் தூவ.. தங்கள் மேல் விழுந்த அட்சதையில் பார்வையை பிரித்து எடுத்து பைரவியின் பக்கம் திரும்பினான் யுகா.

அவன் முகம் அவன் அகத்தை அதிலிருந்த ஆனந்தத்தை அப்படியே அவளுக்கு உணர்த்திட அங்கிருந்தே வாழ்த்து அனுப்பினாள் நிறைவான புன்னகையுடன்.

அதன் பிறகு மணமக்களை அழைத்துக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்க.. பைரவி அவளுடைய அம்மாவை தேடிக் கொண்டிருந்தாள்

“ யாரை தேடுற பைரவி… ”

“ ப்ச்.. நான் யாரை தேடுனா உங்களுக்கென்ன ? ”  

அவன் தூரிகா தான் மணப்பெண் என கூறாத கோவம் காலம் கடந்து தான் எட்டிப் பார்த்தது.

“ பைரவி.. கோவமா இருக்கியா ? ” இப்படிக் கேட்பவனிடம் ஆமா என்று சொல்லத்தான் மனம் வருமா ?

அவள் அமைதியாக அம்மாவைத் தேட..

“ நாம எப்போ பையு இப்படி கல்யாணம் பண்ணிக்கறது… ” மொத்தக் காதலையும் வார்த்தைகளில் தேக்கி வைத்து கேட்டிருந்தான்.

அவள் ஆனந்தமாய் அதிர்ந்து போய் அவனைப் பார்க்க..

“ ஹேய்.. அங்க பாரு சூர்யா… ” என்றான் அவளிடம்.

அவன் இயல்பாகத்தான் இருந்தான்.. அப்படியென்றால் அவளுக்கு பிரமையா ?? அவன் இயல்பு கண்டு இவள் இயல்பைத் தொலைத்து நிற்க.. விக்ரமும் சூர்யாவும் அருகே வந்தனர்.

“ ஹே பாப்பு.. எப்படா வந்த ” அவள் தலையை வருடியபடி அவன் கேட்க          

அவனை முறைத்தவள் சூர்யாவிடம் “ நீ எப்போ வந்த சூர்யா ” என்றாள்.

அவளது கோவம் புரிந்தமையால் “ உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லடா இடையில உன் மாமா கோவிச்சுட்டு போய் ஹைதராபாத்ல உட்கார்ந்துட்டான்.. வரமாட்டேன்னு அடம் பண்ணி டார்ச்சர்.. இதுல தூரிகா ஒரு பக்கம் கோவத்துல.. என் பையன் இருக்கும் போது சின்னவனுக்கு எப்படி கல்யாணம் பண்லாம்னு எங்கப்பா ஒரு பக்கம்.. கல்யாணதுக்கு வர மாட்டேன்னு  ஊருல பெரியப்பா (பையுவின் பெரிய மாமா) ஒரு பக்கம்.. ஆபிஸ் டென்ஷன் ஒரு பக்கம்.. இதுல உன்கிட்ட பேசவே நேரம் இல்ல டா.. சரி நீ வந்ததும் பேசிக்லாம்னு விட்டேன்.. நீ வர லேட் ஆகிடுச்சு.. ஏர்போட் வரலாம்னா.. ” என்றவனை குறுக்கிட்ட அத்து

“ விக்ரம் இப்போ அதெல்லாம் எதுக்கு.. அவளுக்கு உங்க மேல கோவம் இல்ல.. சின்ன வருத்தம் தான்.. இங்க வந்து நேம் போட்ல பொண்ணு பேரு மாறி இருந்ததுல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டா.. ” என்றான்.

“ சரி டா.. ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க.. நான் போய் அவங்களை பாக்குறேன்.. சூர்யாவ நீ பார்த்துக்கோ.. இப்ப தான் வந்தா ” என அவன் நகர்ந்து விட

அத்துவும் அவனுடன் நகர்ந்தான்.

“ ஹேய் பையு… நீயும் அத்து அண்ணாவும் மேட்சுக்கு மேட்ச்… யாரு செலக்ஷேன்…” என்றதும் இவள் திருதிருக்க..

அவள் பதில் சொல்லும் முன்

“  சாரி சூப்பரா இருக்கு.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. ” என நெட்டி முறித்தாள்.

“ நீயும் தான் அழகா இருக்க.. சரி எப்போ வீட்டுக்கு போன.. இங்க எப்படி கிளம்பி வந்த ”

சூர்யா சென்னையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தவுடனே விக்ரம் அழைத்து யுகா தூரிகா திருமண விவரம் கூறி கோவை வருமாறு கூறிவிட்டான். திருச்சியிலிருந்து அவள் வந்து சேர அதிகாலை ஆகியிருந்தது. அதன் பின் மலைக்கு வந்து சேர முஹுர்த்தம் முடிந்திருந்தது.

“ ப்ச் போ பைரவி.. யுகா சார் கல்யாணத்த மிஸ் பண்ணிட்டேனே ” என வருத்தப்படவும் தான் அத்து அத்தனை பிரயத்தனப்பட்டு அழைத்து வந்திருக்காவிடில் நிச்சயம் தானும் வருத்தப்பட்டிருப்போம் இதை விட என்பது புரிந்தது பைரவிக்கு.

நம்முடைய அன்பானவர்களின் வாழ்கையில் திருமணம் என்பது எத்தனை பெரிய நிகழ்ச்சி.. ஒரு முறை மட்டுமே நிகழவிருக்கும் சுப காரியம்.. அதை விட வேறு என்ன பெரிதாக இருந்துவிட முடியும்.. அதுவும் அவளது யுகா மாமாவின் திருமணம்.. அதற்காக இன்னும் எத்தனை பெரிய சங்கடங்களையும் சாதரணமாக எதிர் கொள்ளமுடியும் அவளால்.. ஆனால் அத்து ஏன் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை ??

நேற்று அத்தனை வருத்தத்தில் வேதனையில் புலம்பிய போது ஏன் தன்னிடம் தூரிகா தான் மணப்பெண் எனக் கூறவில்லை. சிந்தனையில் சுழன்றவளை சூர்யா கலைத்தாள்.

“ பையு.. விக்ரம் அண்ணா சொன்னாங்க.. யுகா சாரும் தூரிகா அக்காவும் லவ் பண்ணினாங்களாமே.. அப்புறம் எப்படி அத்து அண்… ” என்றவளின் வாயைப் பொத்தியவள்

“ அதெல்லாம் அப்புறமா சொல்றேன் வா.. ” என அழைத்துச் சென்றாள்.

அதன் பிறகு காலை உணவை முடித்தவர்கள் மணமக்களை அழைத்துக் கொண்டு சரளைபதியை நோக்கி பயணத்தை தொடங்கினர்.

அத்துவும் விக்ரமும் யுகா தூரிகாவுடன் தங்களது காரில் செல்ல.. சூர்யாவும் பைரவியும் பெரியவர்களுடன் பேருந்தில் ஏறிக் கொண்டனர்.

அத்துவிற்கு இன்னமும் நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் நம்பவே முடியவில்லை.. கடந்த நான்கு மாதங்களாக அத்தனை மாற்றங்கள் அவனின் வாழ்கையில்.. விக்ரம் காரை ஓட்டிக் கொண்டு வர அவனுக்கு அருகில் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டு விழிகளை மூடிக் கொண்டான்.

பின்புறம் அமர்ந்திருந்த யுகாவும் தூரிகாவும் கூட அவர்களது நினைவலைகளில் கால் நனைத்துக் கொண்டிருந்தனர்.

மெல்ல திரும்பி தன்னவளின் முகம் பார்க்க.. அவன் பார்வை உணர்ந்து அவளும் திரும்பினாள்.

கரை காணா காதலுடன் மன்னிப்பை யாசித்தது அவன் விழிகள்.. மறுப்பாக தலையசைத்தவள் யன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

தன் நிலையை எண்ணி நொந்தவன் பெருமூச்சை விட.. சரியாக அந்த நொடி விக்ரம் மியூசிக் ப்ளேயரை ஆன் செய்தான்.

இந்த நிமிடம்.. இந்த நிமிடம்..

இப்படியே உறையாதா…..

‘ என்னது இப்படியே உறையறதா… ஹா.. ஹா.. யுகா அது கூட நல்லா தானே இருக்கும்.. இரு நீயும் தூரிகாவும் இப்படியே இருக்கிற மாதிரி என் கற்பனை குதிரையை ஓட்டுறேன்… ’ என நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி அவனை வெறுப்பேற்ற..

“ டேய் !!! ” எனப் பல்லைக் கடித்தான்.

சட்டென தூரிகா திரும்ப.. “ ஹி ஹி.. விக்ரமை ” என்றவன்

“ பாட்டை மாத்துடா… ” என்றான்

“ எனக்கு பிடிச்ச பாட்டு டா ”

“ எனக்கு பிடிக்கல ”

“ அப்போ காதை அடச்சிக்கோ.. ” என்றவனை கொலைவெறியோடு பார்த்தான்.

அத்து தன் அருகே இருந்த விக்ரமைப் பார்க்க.. அவன் கண் சிமிட்டி சிரித்தான்.

“ பாவம் விக்ரம்.. இன்னிக்கு ஒரு நாளாவது டென்ஷன் இல்லாம இருக்கட்டுமே.. ” என பாட்டை மாற்ற.

“ ஹா ஹா யுகா இனிமே உன் வாழ்க்கை எப்படி இருக்கும்னு சிம்பாலிக்கா சொல்றாரு அத்து.. ” என்றவுடன் அத்து அவசரமாக யுகாவைப் பார்க்க

“ கூல் அதுல்.. நான் ஏதும் தப்பா எடுத்துக்க மாட்டேன்..” என புன்னகைக்க அத்துவும் புன்னகைத்தான்.

கலகலப்பாக இல்லையென்றாலும் ஓரளவு இயல்பான இதமான மனநிலையுடனேயே சரளைபதி வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு முன்பே வந்த பெரியவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தூரிகா இங்கு வருவது முதல் முறை.. அத்தனை அமைதியான அழகான கிராமம் அவளது மனதை தென்றல் காற்றைக் கொண்டு வருடி சிலிர்க்கச் செய்தது.

வந்தவுடன் தாத்தாவின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு சற்று நேரம் அவருடன் அமர்ந்திருந்தனர்.

அதன் பின் பால், பழம் எனக் கொடுத்து மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டி பைரவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பைரவியின் வீடு…

காலங்கள் பல கடந்தும் இன்னமும் மாறாமல் பனையோலையால் வேயப்பட்டு தான் இருந்தது.. உட்புறம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சாணமிட்டு மெழுகப்பட்ட தரை.. முன்புறமாக நான்கைந்து பேர் அமரும் வகையில் திட்டு.. வீட்டைச் சுற்றிலும் ரோஜா.. செம்பருத்தி.. சம்பங்கி.. செவ்வரளி நந்தியாவட்டம் என வண்ண வண்ண மலர்கள் சூழ்ந்து எழில் கொஞ்சும் விதமாய் இருந்தது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தான் யுகா. யாருமே எதுவுமே மாறியிருக்கவில்லை..

சோபா.. டீவி.. பிரிஜ்.. என எந்த அதிநவீன வசதிகளும் அங்கில்லை.. ஓரமாக இருந்த நான்கு மூங்கில் நாற்காலிகளும்.. பெரியப்பாவின் கயிற்றுக் கட்டிலும் இன்றும் கூட அதே இடத்தில்.

புன்னகையுடன் பார்த்திருந்தவன் பைரவியின் அம்மாவிடம் தான் பேசவேயில்லை என்பது நினைவு வர “ அத்த….” என சமையல்கட்டுக்குள் நுழைந்து விட அங்கிருந்தவர்கள் விரட்டியடித்து தூரிகாவின் பக்கம் அமரவைத்தனர்.  

“ என்னை உள்ள விடலைனா இங்க இருந்தே பேசுவேன்.. ” என்றவன் அமர்ந்த இடத்திலிருந்தே அவன் அத்தை பெயரை ஏலம் விட

பைரவி “ மா நீங்க போங்க.. ” என அம்மாவை அவனிடம் அனுப்பி வைத்தாள். தூரிகாவிடமும் அவரை அறிமுகப்படுத்த.. யாருடனும் பேசாமல் அவனுடனும் பேசப்பிடிக்காமல் அமர்ந்திருந்தவள் சட்டென ஒட்டிக் கொண்டாள் அவரிடம்.   

அங்கு சிறிது நேரம் இருந்தவர்கள் மீண்டும் தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டனர்.     

தாத்தா உற்சாகத்தின் உச்சியில் இருந்தார் என்றே சொல்லலாம்.. ஏதோ இத்தனை நாள் இருந்த வானிலை சட்டென மாறி மழைக்காலமும் வசந்தகாலமும் வந்தது போல இருந்தது அவருக்கு. பெரிய வீடு முழுவதும் நேசத்தால் பாசத்தால் நிரம்பி வழிந்தது அவரது நெஞ்சத்தைப் போலவே..!

 

மேகம் கடக்கும்…                                          

      

 

      

 

               

 

       

 

            

 

        

   

 

         

    

 

                  

                    

Advertisement