Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 28

 

“ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பைரவி.. உன் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்.. ” என்றான் அத்துவின் அக்மார்க் புன்னகையுடன்.

அகமும் முகமும் மலர்ந்து மணம் பரப்ப.. மலர்ச்சியுடன் மன்னவனைப் பார்த்தாள்.

இதே போலத்தான் சென்ற வருடமும் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஏன் இவளும் எதிர்பார்த்திருக்கவில்லை அவளுடைய அம்மாவையும் மாமாவையும் ஊரிலிருந்து அழைத்து வந்து அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தான்.

பெரிதாக என்ன அவள் எப்பொழுதுமே பிறந்த நாளை கொண்டாடியது இல்லை.. ஆனால் அவன் அவளை அழைத்துச் சென்று அவள் கையால் நூறு மரக்கன்றுகளை நட வைத்தான்.. அத்தனை மகிழ்ச்சியாய் உணர்ந்தாள் அன்று.

அதிகாலையிலும் அந்திமாலையிலும் அலரும் அந்த நந்தவனம் இந்த நந்தனைப் போலவே நறுமணம் பரப்பி இதயத்தை இதமாக்கும்..

இன்று கூட அவள் பிறந்த நாள் என்று அவளுக்கே நினைவிருக்கவில்லை.. சூர்யாவிற்கு நாட்களை நினைவில் வைப்பதில் பிரச்சனை.. சட்டென மறந்து விடுவாள்.. இல்லையெனில் அவளாவது வாழ்த்தி இருப்பாள்..

நேரம் பார்க்க 11 மணி 58 நிமிடம்.. இன்னும் இரு நிமிடங்கள் தான். இன்று அவனை பார்த்திருக்கா விட்டால் அதை நினைத்து ஓராண்டிற்கும் வருந்தி இருப்பாள்.

“ இந்தா பைரவி.. ” என நீட்டிய ஒரு கவரை வாங்கி கொண்டாள்.

எப்படி இவனால் என்னை இத்தனை துல்லியமாக புரிந்து கொள்ள முடிகிறது ? இவனை என் வாழ்வில் கொடுத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் அந்த இறைவனுக்கு போதாது என அவனைப் பார்த்திருக்க..

“ பைரவி ” என அழைத்தான்.

“ …. ”

“ என்னாச்சு உனக்கு ”

‘ என்ன ஆச்சா..? உன்னால் தான் நான் நானாக இல்லையடா.. அதுவும் உன் அருகில் நீ என்னுடன் இருக்கும் பொழுதில்.. ’ தலையை உலுக்கிக் கொண்டவள்

“ ஏன் என்ன ஆச்சு ” என்றாள் இயல்பாக.

“ என்ன ஆச்சா.. ஏன் அப்போ அப்படி பேசினா ? யாருன்னு கேட்ட.. நான் பேசறத கேட்கக்கூட நிக்கல.. திரும்பி நீயா தலைதெறிக்க ஓடி வந்த ” என்ற அவனின் பார்வை கூர்மையாகப் படிய

“ அது.. அது நான் வேற யாரோன்னு நினச்சுட்டேன் ” அவனிடம் உண்மையைச் சொல்லவா முடியும் ? சொன்னால் ? என்றவளின் காது மடல்கள் சூடாகி சிவக்க..

புரியாத புதிராக நின்றவளைப் புரிந்து கொள்ளமுடியாமல் அவனும் நின்றிருந்தான். ஒரு முறை ஒரே முறை அவள் விழிகளை இவன் விழிகள் சந்தித்தால் போதும்.. விடை கிட்டிவிடும்.. ஆனால் அவள் தான் வேண்டுமென்றே தவிர்த்து தவிக்க விடுகிறாளே !

“ நேரமாச்சி போலாமா ? ” அடுத்து அவன் கேட்கும் முன் இவள் கேட்டுவிட.. அவன் மறுப்பாக தலையசைத்தான்.

ஏன் என்பதாய் அவள் நெற்றி சுருங்க புருவம் உயர்த்த..

“ முக்கியமான ஒருத்தங்க வரணும்.. அவங்க வந்ததும் போலாம்.. ” என்றதும்

‘ அப்போ எனக்காக இவர் வரலையா ’ என அவள் மனம் சுருங்க

அவளையே பார்த்து இருந்தவனுக்குப் புரியாமலா இருக்கும் ?

மேலும் ஒரு மணி நேரம் கழிந்திருக்க.. இவள் அவன் மீது சாய்ந்தபடியே உறங்கி விட்டிருந்தாள்.

“ பைரவி.. பைரவி ” இவன் மெதுவாய் எழுப்ப

“ ப்ச்.. இன்னும் கொஞ்ச நேரம் சூர்யா ” என்றபடி அவள் உறக்கத்தை தொடர இவன் தூங்குபவளை எப்படி எழுப்புவதென எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.

“ பாவம் தூங்குறா.. நான் வேணும்னா டாக்ஸில போகவா ? ” எனக் கேட்க

“ இல்ல இல்ல.. நீங்க தனியா போக வேணாம்.. ஒரு நிமிஷம் ” என்றவன் அவளை எழுப்பி உட்கார வைத்தான்.

கண்களை பிரிக்க முடியாமல் பிரித்தவள் எதிரில் இருந்த உருவம் மங்கலாகத் தெரிய.. கண்களை கசக்கிப் பார்த்தாள்.

மறுகணம் “ மாமா.. ” என வியப்புடன் அவனைப் பார்க்க அவன் மெல்ல புன்னகைத்தான்..

“ நீங்க எங்க இங்க மாமா ? ”

அவன் அத்துவைப் பார்க்க..

“ பைரவி இப்பவாவது எழறியா ! நாம போகணும்.. நிறைய வேலை இருக்கு ” என அத்து சொன்னவுடன் தான் தான் அவன் தோளில் சாய்ந்துள்ளதையே உணர்ந்தாள்.

“ அச்சச்சோ ” என விலகியவள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

அதில் ஒருவன் முகம் யோசனையில் இருக்க.. மற்றொருவன் அவனைப் பார்த்திருந்தான்.

இருவரும் கிளம்பி நிற்க.. அத்து காபியுடன் வந்தான்..

“ இந்தா பைரவி.. இதைக் குடி ”

அவளுக்கு மட்டுமே இருக்க “ உங்களுக்கு.. ” என அவர்கள் இருவரையும் பார்க்க

“ அவருக்கு காபி வேணாம்.. அவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. இப்ப உனக்கு தான் இது தேவை ” என்ற அத்துவைப் புரியாமல் பார்க்க..

“ சீக்கிரம் பைரவி.. ஏற்கனவே நேரம் ஆகிடுச்சு ” என துரிதப்படுத்த.. கொதிக்க கொதிக்க இருந்த காபியை அவனை முறைத்துக் கொண்டே உள்ளே ஊற்றினாள்.

கார் பார்க்கிங் வந்தவன் “ நீங்க பின்னாடி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க ” என அவனை அனுப்பிவிட்டு பைரவியின் லக்கேஜை வாங்கி பின்புறம் வைத்து விட்டு வர,

பைரவி இதழில் உறைந்த புன்னகையுடன் அந்தக் காரைப் பார்த்திருந்தாள்.

அவளுக்குப் பிடித்த ராயல் ப்ளூ நிறத்தில் போர்ட் பிஸ்ட்டா கிளாசிக்.

மெதுவாக அதனைத் தொட்டுப் பார்க்க.. அதுல் அவள் புறம் வந்து கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்..

“ யாரோட கார் ? சூப்பரா இருக்கு..!! ” எனக் குதூகலித்தவளை நோக்கி புன்னகையை உதிர்த்தவன் எதுவும் பேசாமல் சாவியை அவள் முன்பு நீட்ட.. விழிகளை விரித்துப் பார்த்தாள்..

“ பார்த்ததெல்லாம் போதும்.. வா வந்து காரை எடு ” என அவளை தள்ளிக்கொண்டு வந்து ஓட்டுனர் இருக்கையில் அமரச் செய்தான்

“ நான் எப்படி ” என அவள் தயங்க

அவன் முறைத்துப் பார்க்கவும் ஸ்டார்ட் செய்தவள் பின்னால் திரும்ப.. அங்கிருந்த அவனோ தூங்கியிருந்தான்..

அதுல் வழி சொல்லச் சொல்ல ஊருக்குச் செல்லாமல் வேறு எங்கு செல்வது புரிந்தது.. இருப்பினும் ஏன் என்று கேட்க வாய் வர வில்லை.. அத்துவுடனான பயணம்.. எங்கே இருந்தால்தான் என்ன !

என்.எச் 181 இல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அந்தக் கார்..

நள்ளிரவிற்கு மேல் ஆகியிருந்ததால் சாலையில் ஒன்றிரன்று வாகனங்கள் மட்டுமே எதிர்பட்டது.. அவளுள்ளத்தில் ஊற்றெடுத்த உற்சாகம் உச்ச கட்டத்தைத் தொட்டிருக்க வேண்டும்.. காரின் வேகமும் இன்னும் இன்னும் கூடியது..

“ பைரவி….” கண்டிக்கும் தொனியில் அவன் குரல்.    

சட்டென காரின் வேகம் அப்படியே குறைந்தது.. குறைந்தாலுமே 100 இல் தான் சென்று கொண்டிருந்தது. அவன் தலையை இட வலமாக அசைத்து இருக்கையில் சாய்ந்து கொண்டான்.        

அந்த இரவின் ஏகாந்தத்தில் இன்னுமாய் இனிமையும் இதமும் சேர்க்க..

அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்

விஜய் யேசுதாசின் மதுரம் சிந்தும் குரலோடு அவனுடன் அவள் பயணம்… வேறு என்ன வேண்டும் அவளுக்கு.

இதயம் நிறைந்திருந்தது.. அவளுக்காக ஏர்போர்ட் வந்தவனுடைய காத்திருப்பால்..

அவனை எதிர்பார்க்காததால் திக்குமுக்காடிப் போய் தான் அப்படி சொதப்பி வைத்தாள்.. ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாது பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி மொத்தமாய் ஆக்கிரமித்து ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தான் அவருடைய காதல் கோட்டையை..

“ அ.த்.து.. ” மெல்ல சொல்லிக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தவனை திரும்பிப் பார்க்க..

இதயம் நின்று துடித்தது அவளுக்கு.. இவள் அவனுடைய நினைவில் தனக்குத்தானே பேசி சிரித்து.. நாக்கை கடித்து.. தலையை சிலுப்பி அவனை கலவரப்படுத்தியதில் அவன் கண்களில் அத்தனை கலவரம்..

“ நீ.. நீ..ங்க தூங்கல.. ” தடுமாறி கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் இருக்கையில் சாய்ந்து கண் மூடிக் கொண்டான்.

‘ பைரவி.. பைரவி.. பைரவி.. இன்னிக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு உன் அலம்பல்.. இத்தோட நிறுத்திக்கோ ’ என தனக்குத் தானே திட்டிக்கொண்டு சாலையிலிருந்து விழிகளை அவன் பால் வைக்க..

அவன் விழி மூடி அமர்ந்திருந்ததில் ‘ உப் ’ என பெருமூச்சு விட்டு தன் நெஞ்சில் கை வைக்க.. அவன் சட்டென விழித்தான்..

சடாரென இவள் விழிகளைத் திருப்பிக்கொள்ள.. அவன் அதரங்களில் புன்னகை.. ரகசியமாய்…

அத்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.. காரைப் பார்க் செய்துவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வந்தான்.

அது ஒரு திருமண மண்டபம். இரவு நேரத்தில் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. முன்புறம் இரு குழுக்களாக பிரிந்து அமர்ந்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.. மற்ற அனைவரும் உறங்கி இருக்க வேண்டும்.. ஆனால் இங்கே எதற்கு ? கேள்வியுடன் அத்துவைப் பார்க்க.. அவன் யுகாவைப் பார்த்தான்..

யுகா அவளிடம் அங்கிருந்த மணமக்களின் பெயரைக் காட்ட.. அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்..

கலியுகத்தையன் வெட்ஸ் ஆதிசக்தி

“ மாமா.. ” என்றவளுக்கு பேச்சே வரவில்லை..

இங்கு வந்தவுடன் முதல் வேலையாக யுகாவிடம் அவன் காதல் பற்றி அவனிடம் புரிய வைக்க வேண்டும் என்று அவள் இருந்தாள்.. ஏர்போர்ட்டில் அவனைப் பார்த்ததுமே அதிர்ச்சி.. குழப்பம்.. வியப்பு.. ஆனால் அத்து இருந்ததால் அவள் எதுவும் பேசவில்லை.

இருவருமே தஞ்சை என்பதால் பழக்கம் இருக்கும் என்று விட்டுவிட்டாள். அதனால் தான் அத்துவிடம் கூட எதுவும் கேட்கவில்லை.. இப்பொழுது என்ன செய்வது ? எனத் தெரியாமல் அவனது காதல் தோல்வியில் இவள் மனம் வேதனை அடைய அவனைப் பார்த்திருந்தாள்..

‘ எப்படி இவனால் இதை தாங்க முடியும் ? நிச்சயம் அவன் மனம் விரும்பி இதற்கு ஓத்து இருக்க மாட்டான்.. ஒருவேளை அவனுடைய அப்பா.. பெரியப்பா ஏதேனும் கட்டாயப்படுத்தி.. ’ யோசிக்க முடியாமல் தலையைப் பிடிக்க

“ பைரவி ” என்ற யுகாவை அவன் தந்தை வந்து அழைக்க.. அத்துவிடம் அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் சென்றான்.

“ பைரவி ” என்ற அத்து அவளை அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்து தண்ணீர் கொடுத்தான்

காரணமே அறியாமல் அவள் கலங்கிய முகம் கண்டு அவன் தவித்து தான் போனான்.

எதுவாயினும் அவளாகவே சொல்லட்டும் எனக் காத்திருந்தான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “ நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ” குற்ற உணர்ச்சியுடன் அவள் சொல்ல.. அவன் மறுப்பாக தலையசைத்து

“ பைரவி தப்பு பண்ண வாய்ப்பேயில்லையே.. ” என்றவனை இடைமறித்து

“ இல்ல நான் யுகா மாமாகிட்ட முன்னாடியே பேசி இருக்கணும்.. பேசியிருந்தா அவரு இந்த கல்யாணத்துக்கு ஒத்து இருக்க மாட்டார் ” என்றவுடன் திகைத்து சுற்றுமுற்றும் பார்த்தவன்..

“ ஷ்ஷ்.. மெதுவா பேசு யாருக்காவது கேட்டுட போகுது ”

“ ப்ச்.. இனி கேட்டு என்ன பண்ண அதான் எல்லாம் முடிஞ்சதே ” என்றாள் விரக்தியுடன்

அ….ன வரையிலான தமிழில் தான் பேசினாள் ஆனாலும் சத்தியமாக அவனுக்கு விளங்கவே இல்லை.. இவள் இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசியதை வைத்து கோர்த்துப் பார்த்துவிட்டான்..

ம்ஹூம்.. அவளிடமே கேட்டு விடலாம் என வாயை திறக்க

“ நீங்க இதுக்கு முன்ன யுகா மாமாவை பார்த்து இருக்கீங்களா ? ப்ச்.. அவர் உங்க பிரண்டு தானே தெரியாம எப்படி இருக்கும் ? ”

‘ யுகா என் பிரண்டா.. இது எப்போ இருந்து  ’ மறுத்துக் கூற அவனை பேச விட்டால்தானே !

“ மாமா எப்படி இருப்பார் தெரியுமா.. என்னை விக்ரம் மாமாவை விட அவர் தான் கலகலப்பானவர்.. அவர் கூட இருந்தாலே அத்தனை சந்தோஷமா இருக்கும்..

எப்படா லீவு வரும் இவங்க ஊருக்கு வருவாங்கன்னு காத்திருப்பேன்.. எல்லாமே கொஞ்ச வருஷம் வரைக்கும் தான் அதுக்கப்புறம் எந்த போக்குவரத்தும் இல்லை.. இப்பதான் ஆறு மாசம் முன்னாடி திரும்பவும் மாமாவைப் பார்த்தேன்..

அதுவும் அப்படி ஒரு நிலையில்.. வாழ்க்கையே வெறுத்து எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தவரை பார்த்தப்போ அவ்வளவு வேதனையா இருந்துச்சு..

ஆனா என்ன காரணம்னு தெரியல.. கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிய வந்துச்சு ” என்றவள் நிறுத்தி அவன் முகம் பார்க்க

அவனும் தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“ காதல்.. மாமாவோட காதல் தான்னு தெரிய வந்துச்சு.. ஆனா மாமாவோட காதலையும் அவரோட பொறுப்பையும் நினைச்சு ரொம்ப பெருமையா இருந்துச்சு.. அவர் மேல இன்னும் மரியாதை கூடிச்சு.. மத்தவங்க சந்தோஷத்துக்காக நிம்மதிக்காக தன்னோட காதலைத் தூக்கி எறிஞ்சுட்டு ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள்ள உயிரோட செத்துட்டு இருக்கிற மாமாவோட காதலை எப்படியாவது ஜெயிக்க வைக்க அவர் கிட்ட பேசணும்ன்னு நெனச்சேன்.. அப்ப பார்த்து இந்த சிங்கப்பூர் பயணம்.. ப்ச்.. ” என்றவளுக்குத் தன் மீதே அத்தனை கோபம்..

தான் கொஞ்சம் முன்னமே சிரத்தை எடுத்து பேசி இருந்தால் இதனை தவிர்த்திருக்கலாமே என்று.. யுகாவின் திருமணம் தூரிகா அல்லாமல் வேறு ஒருவருடனா ! அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை..

அவன் எப்படி வாழ்வானாம் ?

அத்து,  தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவளின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு

“ இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்லை.. யுகாக்கு அவரோட வாழ்க்கை மேல அக்கறை இருக்காதா ? நிச்சயம் அவர் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கும்.. இதுல நீ எங்க வர ? நீ சொன்ன மட்டும் உடனே அவரும் ஒத்துக்கிட்டு இருந்திருப்பாரா ? கொஞ்சம் யோசி பைரவி இது அவரோட பர்சனல் லைப் இதுல எல்லாமே அவருடைய முடிவுதான்.. நீயோ நானோ முடிவு பண்ண முடியாதும்மா.. ” என ஆறுதல்படுத்த

“ உங்களுக்கு எப்படி சொல்றது ? ப்ச்.. இங்க விஷயம் நீங்களோ நானோ அவர் வாழ்க்கையில் முடிவு எடுக்கறது இல்லை.. அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இருக்கணும்.. தேவையில்லாம யோசிச்சு இன்னிக்கு வாழ்க்கையை தொலைத்துட்டு உட்கார்ந்திருக்காரு..

இப்படி இருந்தா அவருக்கு தஞ்சாவூர்ல சிலை வைக்கிறதா சொன்னாங்களோ என்னவோ ” என அதுவரை அவனுக்காக வருத்தப்பட்டு புலம்பியவள் இப்பொழுது திட்டத் துவங்க.. சிரிப்புதான் வந்தது அத்துவிற்கு.. ஆனால் இருக்கும் சூழ்நிலையை அறிந்து அமைதியாக இருந்தான்.

“ உங்களுக்கு தெரியுமா தூரிகாவும் மாமாவும் எவ்வளவு பொருத்தமாக இருப்பாங்கன்னு..

அவங்கள பார்த்த முதல் நாளிலேயே இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் மேல வெச்ச அன்ப கண் கூட பார்த்து இருக்கேன்.. ப்ச்.. ”

“ தூரிகா.. ” என அதிர்வுடன் அத்து கேட்க

அவளும் சட்டென அவன் முகம் பார்த்தாள்.. இவன் வேண்டாம் என மறுத்த தூரிகா அல்லவா !

மெல்லிய அதிர்வு அவன் முகத்தில் பரவி சட்டென அது மறையவும் செய்தது.

“ ம்ம்.. ஆர்.ஜே தூரிகா.. அவங்களைத் தான் மாமா லவ் பண்ணினாரு ” என்றாள் தரையை வெறித்தவாறு.

யோசனையில் அவன் முகம் சுருங்கியது ஒரு மணித்துளி.. பின் “ சரி பைரவி நீ போய் தூங்கு.. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.. எழுந்திரு ” என அவளை மேலும் பேசவிடாமல் அழைத்து ஒரு அறைக்குள் தள்ளி விட

‘ இப்போ என் தூக்கமா முக்கியம்.. இவருக்கு என் கவலை கொஞ்சம்கூட புரியலையா ’ ஒரு மனம்.

‘ புரிஞ்சு மட்டும் அவரால என்ன பண்ண முடியும் ? இல்ல உன்னால தான் என்ன பண்ண முடியும் ? ’ மற்றொரு மனம்.

தன்னுடைய இயலாமையை நினைத்து நொந்து இருக்க.. கதவு தட்டும் ஓசை கேட்டது.

 

மேகம் கடக்கும்….

 

Advertisement