Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 27

 

சிங்கப்பூர்..

 

“ வாழ்ந்தா இங்க தான் வாழனும் ” என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் சூர்யா..

உண்மையில் அங்கிருந்து தூய்மையிலும் அதனை கடைபிடிக்கும் மக்களின் ஒழுக்கத்திலும் வியந்துதான் போயினர்.. முதல் வாரம் முழுக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் சார்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன.

உண்மையில் சூர்யா, பைரவி எதிர்பார்த்ததைவிட முழுக்க முழுக்க வித்தியாசமான புதுவித அனுபவமாகத் தான் அமைந்தது.

ஒரே இடத்தில் தமிழர்களின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஒரே நேரத்தில் உலக மக்களை அறிய செய்திருந்தனர்.

இரண்டாம் வாரம் முழுக்க கடந்த நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் கால்தடம் பதித்த சுவடுகளை எல்லாம் சுற்றிப் பார்த்து வந்தனர். நிச்சயம் அங்கு நிகழவிருக்கும் ஆராய்ச்சியின் முடிவில் ஒரு சகாப்தமே வெளிவரக் கூடும் என்று தான் தோன்றியது.

மூன்றாம் வாரமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பாக முடித்திருந்தனர். அனைத்தும் சிறப்பாக முடிந்து நிறைய தெரிந்து கொண்ட மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் பைரவிக்கு எப்போதடா ஊருக்குச் செல்வோம் என்று இருந்தது.

மூன்று வாரங்கள் அத்துவைப் பார்க்காமல் இருந்தது மூன்று யுகங்கள் தான் அவளுக்கு.. அதிலும் இங்கு கிளம்பிவரும் அன்று எத்தனை பிரயத்தனப்பட்டும் அவனைப் பார்க்க முடியவில்லை..பார்த்திருந்தால் கூட மனம் அவனை எதிர்பார்த்து இப்பொழுது பாடாய்ப் படுத்தாமல் இருந்திருக்குமோ என்னவோ !

இப்பொழுது இந்த நிமிடம் அவனைப் பார்க்க வேண்டும்.. அவள் உடம்பின்  ஒவ்வொரு அணுக்களும் துடித்துக் கொண்டிருந்தன..

காரணம் சூர்யா…. அவள் சொல்லிய செய்தி… அது தான் பையுவின் இந்தப் பரபரப்புக்குக் காரணம்..     

சரி எல்லாம் முடிந்து இனி ஓடிவிடலாம் தாய்நாட்டிற்கே என்ற நிலையில் அவளை தேடி வந்தடைந்தது அந்த செய்தி.. திகைத்துப் போய் அமர்ந்து விட்டாள்..

தனக்கு வந்த வாய்ப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் தடுமாறி நின்றிருந்தாள்.

அகத்தியனும் அவரது குழுவும் அங்கு ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்றும் முதல் கட்ட ஆராய்ச்சிக்காக மூன்று மாதம் வரை அங்கு இருக்க வேண்டிவரும் என்றிருந்தனர்.. மூன்று வாரங்களுக்கே அவளுக்கு மூச்சு முட்டியது மூன்று மாதங்கள் என்றால் ! நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..

சூர்யாவிடம் பேசலாம் என்றால் அவளோ சிங்கப்பூரில் சின்னதாக இடம் வாங்கி குடிபெயர்ந்து விடும் அளவிற்கு வந்திருந்தாள் அவளிடம் போய் நிற்க முடியாது என்று அவள் அகத்தியனிடம் போய் நின்றாள்.

“ பைரவி உன் விருப்பத்தில் நான் தலையிட விரும்பவில்லை.. ஆனால் எனக்கு அதில் துளியும் உடன்பாடு இல்லை.. நிச்சயம் தமிழன்னைக்காக நம் பண்பாட்டிற்காக உன்னுடைய சேவை இருக்கும் என நம்பினேன்.. இது எனக்கு ஏமாற்றம்தான்.. நீ செல்லலாம் ” என முடித்துவிட இவள் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

கடவுளே !! என அவள் அழைத்தது அவருக்கு கேட்டதோ இல்லையோ அவனுக்கு கேட்டிருந்தது போலும்..

அழைத்துவிட்டான்

“ பைரவி ”

…..

“ பைரவி ” என திரும்பவும் அழைத்ததில் தான் நிகழ்காலம் வந்திறங்கினாள்

“ ஆங்.. சொல்லுங்க ”

“ என்ன ஆச்சு ”

அவள் மௌனமே பதிலாகத் தர

“ என்ன ஆச்சுமா.. அங்க ஏதாவது பிரச்சனையா ? ” கனிந்த குரலில் கரைந்து தான் போனாள்.

“ ஒ.. ஒன்னுமில்லையே ”

“ அப்புறம் ஏன் ஊருக்கு வரணும்ன்னு சொன்னியாம் என்ன பிரச்சனை சொன்னால்தானே தெரியும் ”

என்ன சொல்வாள் உன்னால் தான் என்றா !! உன்னைப் பார்க்காமல்.. பேசாமல்.. இருக்க முடியவில்லை.. ஒவ்வொரு கணமும் யுகமாகத் திகழ்கிறது என்றா !!

அவளது அமைதியில் என்ன புரிந்ததோ

“ பைரவி எதற்காகவும் யாருக்காகவும் இந்த வாய்ப்பை விட்டுடாத.. யாருக்குமே அவ்வளவு ஈஸியா கெடச்சிராது.. அது உனக்கு கிடைச்சிருக்கு..

இது எல்லாமே உன் கெரியர்ல ரொம்ப உதவியா இருக்கும்…. அவசரப்படாத அமைதியா யோசிச்சு உனக்கு என்ன தோணுதோ அதை செய்..

ஆனா என்னோட ஆசை என்னனா..  பைரவி அங்க இருந்து அவளோட வேலையெல்லாம் முடிச்சிட்டு வரணும்னுதான் ”

‘ என்ன என் பைரவியா… இல்லை எனக்குத் தான் அப்படிக் கேட்டுச்சா ’ அவள் குழப்பிக் கொண்டிருக்கும் போதே  

“ என்ன பைரவி ஏதும் பேச மாட்டேங்கிற ”

அவளுக்கு அவனிடம் பேச தான் ஆசை.. ஆனால் வார்த்தை வர மறுக்கிறதே! முதன் முதலில் அவனை பார்த்த பொழுது எப்படி உணர்ந்தாலோ மீண்டும் அதே நிலைக்கு வந்தது போலிருந்தது.

“ பைரவி உன் கதை எப்படி போகுது ” அவன் பேசிக்கொண்டுதான் இருந்தான்

“ க. கதை ”

சத்தியமாக அவள் கதை என்றால் என்ன எனக் கேட்கும் நிலையில்தான் இருந்தாள். இதில் எங்கிருந்து கதாபாத்திரங்களை பற்றி நினைவு கூறுவது..

“ நான் அப்புறம் பேசவா ” எப்படியோ சொல்லிவிட்டாள் ஒரு சில மணித்துளிகள் மௌனம் மறுமுனையில் பின்பு “ சரி ” என வைத்து விட்டான்

அதுதான் அவனுடன் கடைசியாக பேசியது.. அதன் பிறகு அழைக்கவே இல்லை.. இவர்கள் அழைக்கும் போது அவன் இருக்கவில்லை.. ஆனால் பைரவி ஓரளவு சமாளித்துக் கொண்டாள்.. அதைவிட அங்கு ஆராய்ச்சியில் சோழர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்க இவளது கற்பனை உலகம் இவளை தன்னுள் இழுத்துக் கொண்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூர்யா கெஞ்சி கொஞ்சி ஒரு மாலிற்கு அழைத்து வந்திருந்தாள்..

பெரும்பாலும் பைரவிக்கு அங்கெல்லாம் செல்ல விருப்பம் இருக்காது.. இப்பொழுது சூர்யா தனியாக இருந்ததால் உடன் வந்திருந்தாள்.

“ சூர்யா.. ரொம்ப நேரமா பார்த்திட்டு இருக்கோம்.. ஏதாவது வாங்கேன் ” என்றவளை ஏற இறங்கப் பார்த்தவள்

“ இங்கெல்லாம் வாங்கணும்னா நம்ம சொத்த வித்தாலும் பத்தாது ”

“ அப்புறம் ஏன் வந்த.. வந்துட்டு சுத்தி பார்த்துட்டு போகவா ”

“ ஐயோ பையு பேபி இதுக்கு பெயர் தான் விண்டோ ஷாப்பிங்.. இருக்கிற பதினைந்து ப்ளோர்லயும் ஒரு ஷாப் விடாம என்ட்ரி போட்டு கடைசியா ஃபுட் கோர்ட் போய் மூக்கை பிடிக்க சாப்பிட்டு கிளம்பனும்.. அதுக்குப் பேர்தான் விண்டோ ஷாப்பிங்.. ” என்றதும் தலையில் அடித்துக் கொண்டு அவளுடன் சென்றாள்.

இருவரும் அடுத்து ஒரு கடிகார கடையை கடக்க.. பைரவியின் விழிகளில் விழுந்தது அந்தக் கடிகாரம். பொதுவாகவே பைரவி ஆடை ஆபரணங்களில் அதிக கவனம் எடுக்க மாட்டாள் ஆனால் கடிகாரம் அவளுக்கு அத்தனை பிடிக்கும்..

அவள் அப்பா இருக்கும் போது ஒவ்வொரு முறை அவருடன் செல்லும் போது ஒரு கடிகாரம் வாங்கி விடுவாள் தோழிகள் அழகாக இருக்கிறது என்றால் கழட்டியும் கொடுத்துவிடுவாள்.

ஆனால்.. எல்லாம் அவர் இருக்கும் வரை தான்.. அதன் பிறகு அதைத் தொடுவது கூட இல்லை.

ஏனோ இப்போது திடீர் காதல் அதன்மேல்.. சூர்யாவை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டாள்.

“ பைரவி.. என்ன வேலை பண்ணிட்ட ! இங்க எல்லாம் விண்டோ ஷாப்பிங் பண்ண முடியாது.. உள்ள வந்தா வாங்காம போக முடியாது ” எனக் காதில் முணுமுணுக்க..

“ எக்ஸ்க்யூஸ் மீ ” என்ற ஒரு ஆடவனின் அதிரடி அழைப்பில் சூர்யா திடுக்கிட்டு துள்ளி விழுந்து திரும்பினாள்.

அவன் இதழ் கடையோரம் புன்னகை அரும்ப..

‘ பயமுறுத்திட்டு சிரிப்பு வேறயா ’ என்றவள் தமிழில் பொரிந்து தள்ளி விட்டாள்.

அவனோ கூலாக “ சாரி ஐ குடின்ட் கெட் யூ ” என்றானே பார்க்கலாம்

‘ என்ன ’ என இவள் முழிக்க.. பைரவி தான் சமாளித்து அவளை நகர்த்திச் சென்றாள்.

“ விடு என்ன.. நான் இவ்வளவு பேசி இருக்கேன் அவன் அசராம நிற்கிறான் ” என பொங்க

“ ஷ்ஷ்.. வந்த இடத்தில என்ன சூர்யா ” என அதட்டவும் தான் அமைதியானாள்.

“ எக்ஸ்க்யூஸ் மீ.. ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு ” என அவன் மீண்டும் வந்து நிற்கவும்

“ ப்ச்.. சேல்ஸ் பாயா ” என சூர்யா அலட்சியமாக பார்க்க.. அவனோ உறுத்து விழித்தான்..

“ சூர்யா.. ” அவளை அதட்டியவள் அங்கு விளம்பரப் பலகையில் இருந்த ஒரு வாட்சைக் காட்டி அந்த டிசைனில் வேண்டும் எனக் கூற.. அவன் உடன் அழைத்துச் சென்றான்..

“ பைரவி.. அமௌன்ட் வேற கொஞ்சம் கம்மியாத் தான் எடுத்துட்டு வந்தேன்.. இங்க ரேட் அதிகமா இருக்கும் போலவே.. ”

தன்னிடம் உள்ளதாகக் கூறியவள் அவன் எடுத்துக் காண்பித்த கடிகாரத்தை பார்வையிட ஆரம்பித்தாள்..

“ ஹேய் இது நல்லா இருக்கே ! ” என பைரவி எடுத்து வைத்திருந்த ஒன்றை அருகிலிருந்த வேறொரு பெண் எடுத்து அணிந்து பார்க்க.. அவன் அவசரமாக ஏதோ சொல்ல வர.. பைரவி தடுத்து விட்டாள். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மலர்ச்சியை புன்னகையுடன் பார்த்திருந்தாள். அவன் வியப்புடன் அவளைப் பார்த்திருந்தான்.

“ மேம்.. ”

“ கேன் யூ சோ சம் அதர் பீஸ் ”

“ ஸ்யூர் மேம் ” என்றவன் வேறு மாடல்களை அடுத்து எடுத்துக்காட்ட.. எதுவுமே பிடிக்கவில்லை.

“ உங்களுக்கு நிச்சயமா வேற எதுவும் பிடிக்கப் போவதில்லை.. நான் வேணும்னா அதே வாட்ச்சை டிசைன் பண்ண ஆர்டர் தரேன்.. ஆனா இருபது நாள் ஆகும்.. ”

“ நீங்க தமிழா !! ” என வியப்புடன் கேட்டவளைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தான்.

“ ஆனா நான் இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்பிடுவேன் ” என்றவள் பார்வைய சுழற்ற.. அவள் விழிகளில் அந்த கடிகாரம் !

சட்டென ஒரு யோசனை..

‘ அவங்களுக்கு வாங்கினால் என்ன ? ’ என்றெண்ணியவள் எதிரில் இருந்த அவனிடம் காட்டத் திரும்ப.. அவள் பார்வை சென்ற திசையை வைத்து அவன் அதை கொணரச் சென்றிருந்தான்.

“ மேம் இந்தாங்க.. ” என புன்னகையுடன் நீட்ட.. அவளும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

அத்துவிற்கு அத்தனை பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.

ஒரு மணித்துளி விழிகள் மூடி அவனுக்கு அணிவித்து அழகு பார்த்தவள்

“ இது பில் பண்ணிடுங்க ”

“ உங்க அவருக்கு சூட் ஆச்சா மேம் ” என்றதும் அவள் விழிகள் வியப்பில் விரிந்தன..

“ ஆனா நீங்க ஏன் முன்ன தமிழ் தெரியாத மாதிரி காட்டிகிட்டீங்க ? ” கேட்டே விட்டாள் கேட்க நினைத்ததை.

“ அப்புறம் என்ன மேம்.. லொடலொடன்னு நிறுத்தாம பேசிக்கிட்டே இருக்காங்க.. ஷப்பா.. நிறுத்தினதும் மழை பெய்து ஓய்ந்த பீல் ” என்றவன் அருகில் சூர்யா வந்து நின்றதும் நிறுத்த..

இனி என்ன பேசப்போகிறாளோ என பைரவியும் பயத்துடன் பார்த்து நின்றாள். ஆனால் சூர்யாவோ அமைதியாக “ போலாமா.. ” எனக் கேட்க திகைத்து பார்த்தாள் பைரவி. இந்நேரம் அவள் எதிர்பார்த்தது ஒரு பானிபட் போரை அல்லவா ! இது என்ன புதிதாக..

திரும்பி அவனைப் பார்க்க அவனும் வியப்புடன் தான் நின்றிருந்தான்..

“ போலாம் பைரவி ”

பைரவியும் தலையசைத்து திரும்ப..

“ சூர்யா ” என அழைத்திருந்தான்

இம்முறை வியப்பது பைரவியின் முறையாயிற்று. இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க..

“ என்னோட ஜூனியர் மேம் இவ.. ஸ்கூல்ல.. ” என்றான் புன்னகையுடன்..

சூர்யா ஒரு முறைப்புடனே நின்றிருந்தாள்..

“ அப்புறம் என்னோட காதல் கோட்டையை இடித்த வில்லி கூட.. ” என்றாள் குறும்பாக..

“ சரி வாங்க ஒரு காபி சாப்பிட்டுட்டு பேசுவோம் ” என்றவன் பைரவியின் கடிகாரத்திற்கு பில் போட்டு அவளிடம் தர

“ ஹையோ.. உங்க வேலை நேரத்தில.. யாரும் திட்ட மாட்டார்களா.. ” என பைரவி தயங்க..

“ என்னோட கடையில யாரு வந்து என்ன திட்ட முடியும்.. எக்செப்ட் என்னோட இந்த வில்லியைத் தவிர ” என வம்பிழுத்தபடி கூட்டிச் சென்றான்.

அவர்கள் வந்த வேலை பற்றி அறிந்து கொண்டவன் தான் எப்படி இங்கு வந்து சேர்ந்தது.. இந்தக் கடை ஆரம்பித்தது.. என அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்.. பைரவியிடம் மட்டுமே..

சூர்யா அவனைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை.. இவன் பார்வை மட்டும் அவ்வப்போது சாரலாய் அவள் பக்கம்.

“ ஹேய் நான் அங்கிருந்து போனதுக்கப்புறம் எத்தனை கோட்டையை இடிச்ச ? ” என மீண்டும் சீண்ட

“ லுக் உன்னோட வேலையை மட்டும் நீ பார்த்தா போதும்.. நான் என்ன பண்ணா உனக்கு என்ன ” என முகத்தில் அடித்தவாறு பேச.. அவன் முகம் கறுத்துவிட்டது. அவன் என்னவோ விளையாட்டாகத்தான் கேட்டான்.. அவன் மனதில் உள்ள அந்த விஷயங்கள் இப்போது நினைத்தால் சிரிப்புதான் வரும்.. ஆனால் அவளிடம் அதையே எதிர்பார்த்தால் !

“ சூர்யா.. ” என்ற பைரவியின் அழைப்பில் “ நீ பேசிட்டு வா ” என நகர்ந்து விட்டாள்.

“ சா..சாரி அ..அவ ஏதோ ” என பைரவி சமாதானப்படுத்த

“ பரவாயில்ல மேடம் நீங்க கிளம்புங்க.. நைஸ் மீட்டிங் யு ” என விடை பெற்று விட்டான்.

அவர்கள் தங்கியிருக்கும் அறை வந்து சேரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. பைரவிக்குத்தான் அத்தனை கோபம்.. அதென்ன அப்படி முகத்தில் அறைந்தாற்போல பேசுவது ? கோவம் இருந்தால் அமைதியாக இருந்துவிட வேண்டும் அவளைப் பொறுத்தவரை.. அதை விட்டுவிட்டு தானும் காயப்பட்டு எதிரில் இருப்பவரையும் காயப்படுத்துவது எல்லாம் அவள் விரும்பாத ஒன்று..

இப்பொழுது கூட சூர்யாவின் மேல் அதற்குத்தான் கோபம்.. பைரவி அமைதியாக இருந்து விட.. அதை புரிந்து கொள்ளவே சூர்யாவிற்கு சற்று நேரம் பிடித்தது.

“ பைரவி.. ”

ஒரு பார்வை பார்த்தவள் திருப்பிக்கொள்ள..

“ எல்லாம் அவனால வந்தது.. ” என முணுமுணுக்க.. அது அவள் காதில் விழுந்து வைக்க மீண்டும் ஒரு உக்கிரப் பார்வை.

“ ஹேய் சும்மா சும்மா என்ன முறைக்காத.. அவன் என்ன பண்ணனும்னு தெரியுமா உனக்கு ? ”

“ எனக்கு தெரியவே வேணாம்.. ஆனா நீ இன்னைக்கு பண்ணினது தப்பு. அவர் எதோ விளையாட்டுக்கு கேட்டாரு ஆனா நீ.. ” என்று அவள் அமைதியாகிவிட சூர்யாவிற்கும் அவனது முகம் வந்து போக தவறை உணர்ந்து கொண்டாள்..

“ சாரி ”

‘ என்கிட்ட கேட்டு ’ என்பதை ஒரு பார்வை பார்க்க..

“ அவன் கிட்டயும் கேட்கிறேன்.. ” என்றதும் தான் புன்னகை மலர்ந்தது.

“ ஹப்பா சிரிச்சிட்டயா.. ஆனாலும் அவனுக்கு இந்த சப்போர்ட் இருக்கக்கூடாது ”

“ சரி.. அவர் யாரை லவ் பண்ணினாரு.. நீ நாரதர் வேலை பார்த்துவிட்ட ” என்றதும் தலையணைகள் இவளை நோக்கி பறந்தன..

“ சொல்லிட்டு அடிடி ”

“ அவன் ப்ரொபோஸ் பண்ணினதே என்கிட்ட தாண்டி ” என்றதும் அதிர்ந்து நின்றாள் பைரவி.

“ என்னடி சொல்ற ? ”

“ அந்த நல்லவனுக்குத் தான் நீ இவ்வளவு நேரமா சப்போர்ட் பண்ணின ”

ஏனோ அதுவரை அவன் மேல் இருந்த நல்ல அபிப்ராயம் இப்போது போயிருந்தது.. பள்ளிப் பருவ காலத்திலேயே என்னதிது என்று நினைத்தவள் அடுத்த வாரம் அவனை பார்க்கவும் வேண்டாம் மன்னிப்பு கேட்கவும் வேண்டாம் என்று விட்டாள்.

“ இல்ல நீ நினைக்கிற மாதிரி அவன் கெட்ட பையன் எல்லாம் இல்ல.. ”

‘ நான் எப்போ அப்படிச் சொன்னேன் ’ என இவள் பார்க்க..

அவன் காதலை சொல்லிய பின் சூர்யா மறுத்ததும்.. அதன் பிறகு அவளைக் கடக்கும்போது ஒதுங்கியதையும்.. முடிந்த அளவு அவள் முன் வருவதையும் தவிர்த்ததையும்.. பள்ளியை விட்டு செல்லும் போது இறுதியாக வந்து மன்னிப்புடன் விடைபெற்று சென்றதும் கூறினாள்..

“ என்னவோ நீ பார்க்க வேண்டாம் ” என்று நகர்ந்துவிட.. சூர்யாவும் அதனை விட்டு விட்டாள்.

இதோ அதோ என மூன்று மாதங்கள் ஓடி இருந்தது..

சிங்கப்பூரிலிருந்து சென்னை விமானம் ஏற அவர்களுடன் அதியன்.. அதுதான் சூர்யாவின் சீனியர்.. அவனும் வந்திருந்தான்.

பைரவியைப் பார்த்தவன் புன்னகைக்க.. இவளுக்கு புன்னகைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே சூர்யாவை பார்த்தாள்.. அவள் நேரடியாக முறைத்துக் கொண்டுதான் இருந்தாள்.

அவளைக் கண்டு கொள்ளாது பைரவியை நோக்கி வர.. அவளுக்கு அகத்தியன் ஏதும் சொல்லி விடுவாரோ என்ற பயம்.. பைரவி அவரைப் பார்க்க.. அவரும் அவனை முறைத்துக் கொண்டு நின்றார்.

“ ஹெலோ மேம் பேக் டு ஹோம் ஆஹ் ” என்றதும் அகத்தியனை பார்த்துக்கொண்டே ஆமா இல்லை என எல்லா பக்கமும் தலையசைத்து வைத்தாள் பைரவி.

அவள் பார்வையை கவனித்தவன் “ ஹூ இஸ் திஸ் ஓல்ட் மேன்.. ” என்று கேட்டு வைக்க.. சூர்யாவோ கலவரமாகிவிட்டாள்.

“ அதியன்.. ” என பல்லைக் கடிக்க..

அவனோ “ நைஸ் மீட்டிங் யூ சார்.. ஐ எம் அதியன் அகத்தியன் ” என கரம் நீட்ட.. அவரோ கைகளை குறுக்காக கட்டிக் கொண்டார்..

பைரவியும் சூர்யாவும் விழித்துக் கொண்டு நிற்க..

“ டஸ் ஹி க்னோ இங்கிலீஷ் ” எனக்கேட்டு வேறு அதிர வைத்தான்..

“ ஓகே லெட் மீ ஸ்பீக் இன் தமிழ்.. ” என்றவன்

“ வணக்கம் நான் அதியன் அகத்தியன் ” என கரம் குவிக்க..

ம்ஹூம்.. அவர் கண்டு கொள்ளவே இல்லை.

“ அப்பா.. ” என அழைத்து அவரிடம் ஆசி பெற..

“ வாழ்க வளமுடன் ” என ஆசீர்வதித்தார்.

“ அப்பாவா.. ” என பைரவியும் சூர்யாவும் ஒருவரையொருவர் பார்க்க..

“ ஆமா அப்பாவே தான் ” என்றான்.

பைரவிக்கு அப்போதுதான் அத்து வெளிநாட்டில் இருப்பதாக கூறிய அவரது மகன் பற்றிய நினைவு வந்தது.

இருவரும் செக்-இன் செய்து உள்ளே நுழைந்தனர்.

“ அப்பா இன்னும் கோவமா ? ”

எதுவுமே பேசாமல் அமைதியாக நகர்ந்து சென்றவரை பார்க்க ஆயாசமாக இருந்தது.

இரண்டு வருடங்கள் ஆகிறது அவருடன் பேசி.. இவன் கல்லூரியில் தொடங்கியது பிரச்சனை.. இவர் தமிழ் என்றார்.. அவனோ டிசைன் என்றான்.. அதன் பிறகு இவன் சிங்கப்பூர் செல்வதாக சொன்னவுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார். உங்களது மகன்தானே எனக்கும் பிடிவாதமிருக்கும் என இவனும் இருந்து கொண்டான். ஆனால் இப்போது இங்கு பார்த்ததும் மனம் தானாக அப்பாவிடம் சென்று விட்டது.

“ உங்க அப்பா கூட பேச மாட்டீங்களா ? ”

“ ம்ஹூம்.. அவர் என்கூட பேச மாட்டார் ” என்றவன் தன் கதையைச் சொல்ல அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பது பற்றிக் கேட்டாள் பைரவி..

“ இனி எல்லாம் போய் என்னால படிக்க முடியாது.. அதனால நல்ல தமிழ் படிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்.. ” என்ற அவனின் பார்வை சூர்யாவைத் தொட.

“ ம்க்கும்.. ” என்றாள் பைரவி.

சுதாரித்துக் கொண்டவன் “ நீங்களே சொல்லுங்க.. இதுக்குமேல நான் படித்து அவர் சொல்ற மெடல் வாங்கி.. ம்ஹூம்.. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல.. ஆனா இந்த தடவ அவரை சமாதானப்படுத்தியே ஆகணும் ”  

“ இங்க பண்ற பிஸினஸை நம்ம நாட்டுல பண்ணினா என்ன ? ”

“ அந்த முடிவுக்குத்தான் வந்திருக்கேன்.. இன்னும் ஒரு ரெண்டு வருஷம் தான் இங்க.. அப்பாவை விட வேறென்ன முக்கியம் சொல்லுங்க ” என்றதும் அவன் மேல் இன்னும் மரியாதை வந்திருந்தது பைரவிக்கு.

சென்னை வந்தடைந்ததும் அதியன், சூர்யா மற்றும் அகத்தியன் திருச்சி விமான நிலையம் செல்ல.. பைரவி கோவை விமானம் மூலம் கோவை வந்தடைந்தாள்.

மழையால் இவளது விமானம் தாமதமாகி கோவை விமான நிலையம் வர இரவு 11.30 ஆகியிருந்தது.. இமிகிரேஷன் முடித்து வெளியே வந்தவள் இமைக்க மறந்த நின்றிருந்தாள்..

அழகான புன்னகையுடன் அவளுக்காக காத்திருந்தான் அதுல்.. நிச்சயம் அவனை எதிர்பார்க்கவில்லை அவள்.. மெல்ல அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் புன்னகையுடன்..

இமை மூடி திறக்க.. அவன் மாயமாய் மறைந்திருந்தான்.

விழிகளை சுழற்றியவள்.. மானசீகமாய் குட்டிக் கொண்டாள்.

‘ பைரவி அத்து.. அத்துன்னு.. அவங்களையே நினைச்சு பார்க்கிற.. எல்லாமும் அவர்தான் தெரியுறாரு.. உனக்கு இதெல்லாம் ரொம்ப தப்பு இப்படியே போனா அவ்வளவுதான் ’ என்றவள் முன்னேற.. மீண்டும் அவன்..

அழகான புன்னகையுடன் அவள் முன்பு நின்றிருந்தான். டார்க் லாவெண்டர் நிற சட்டை.. பட்டு வேட்டியில் காட்சியளித்தான்.

‘ இவங்களுக்கு இந்த டிரஸ் எவ்ளோ அழகா இருக்கு ! ’ என ரசித்தவள் தானும் அவனுக்கு ஏற்றவாறு உடை அணிந்து அவன் அருகில் நிற்பது போல கற்பனை செய்துகொண்டே கனவில் காதல் கடலில் தத்தளிக்க..

“ பைரவி.. ” என்ற அழைப்பில் கரைக்கு வந்திருந்தாள்.

பின்னே திரும்ப அங்கே ஒரு குழந்தையை அவளுடைய அம்மா அழைத்துக் கொண்டிருந்தார்.. ‘ ஓ அந்த குட்டி பைரவி யா ’ என்றவள் வாயிலை நோக்கி திரும்பினாள்.

இம்முறை அவன் மாயமாய் மறையவில்லை..

அவனைப் பார்த்தவள் ‘ சீக்கிரம் வீட்டுக்கு போயிடு பைரவி.. இன்னிக்கு நீ சுத்தமா சரியில்லை அத்து.. அத்துன்னு.. ’ என தனக்குள் பேசிக் கொண்டே வந்தவள் அவனை கண்டுகொள்ளாமல் விலகி நடக்க.. அவன் அவளது கைப்பற்றி நிறுத்தினான்.

சட்டென அவன் கையை உதறியவள் “ ஹலோ யார் நீங்க ? என்ன கையெல்லாம் புடிக்கிறீங்க ” என எகிற.. இவன் குழம்பித்தான் போனான்..

“ பைரவி.. நான்.. ” என அவன் விளக்க வர.. கைகாட்டி நிறுத்தியவள்

“ எனக்கு உங்ககிட்ட பேச நேரமில்லை.. அதை விட நீங்கள் சொல்வதை கேட்க தயாராக இல்லை.. முதல்ல பொது இடத்துல  எப்படி நடந்துக்கணும்னு கத்துக்கோங்க ” என இடைவிடாது பேசியவள் அங்கிருந்து அகன்று விட்டாள்.

“ ச்ச.. எவ்வளவு தைரியம் இருந்தா கையப் பிடிப்பான்.. இதுல அவன் தான் பேரு வெச்ச மாதிரி பைரவின்னு கூப்பி.. ” என்றவள் சடாரென நின்று திரும்பிப் பார்க்க..

அம்னீஷியா வந்துவிட்டதா இவளுக்கு என்பதுபோல் குழப்பத்துடன் அதுல் அவளைப் பார்த்திருந்தான்..

‘ பைரவீவீ… என்ன காரியம் பண்ணி வச்சிருக்க ’ என தலையில் அடித்தபடி அவனை நோக்கி ஓடி வந்தாள்.

திடீரென இப்படி ஓடி வந்து மூச்சு வாங்க நிற்பவள் இடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று கூட அவனுக்கு புரியவில்லை.

அத்தனை ஆசையாக அவளை அழைத்துப் போக வந்திருந்தான்.. அவனுக்கு இருந்த வேலைகளெல்லாம் கதிர், மிதுன் தலையில் கட்டிவிட்டு.. இவள் யாரோ போல பேசி விட.. அதிர்ச்சி விலகாது நின்றிருந்தான்..

“ சா..சாரி ” என்றாள் அவன் முகம் பார்த்து

அவன் அமைதியாக அவளைப் பார்த்திருக்க.. இவள் அவன் கண்களைப் பார்க்க இயலாமல் சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றாள். ஒருபுறம் இப்படியா என் தன் மேல் கோபம் வந்தாலும் இப்படியா பண்ணுவ பைரவி என சிரிப்புதான் வந்தது.

காதல் வந்தபின் கன்னியின் விழிவழியில் காண்பதெல்லாம் காதலடி.. நிழலுமாய் நிஜமுமாய் கண்டது அனைத்தும் காதலன் முகமடி..

அவளைப் பொறுத்த வரையில் அத்து அங்கு வரவில்லை.. அவன் நினைவால் அவன் மேல் கொண்ட காதலால் தன் விழிகளுக்கு தான் அவன் தெரிகிறான் என நினைத்துக் கொண்டாள்..

அத்து கைப்பிடிக்கும்போது வேறு யாரோ ஒருவன் என நினைத்து திட்டி முடித்து வந்த பின்புதான் அவன் பைரவி என உரைத்தது ஞாபகம் வர கொஞ்சம் தெளிந்து விட்டாள்..

“ பைரவி ”

“ ம்ம்.. ” பார்வையை வேறு புறம் செலுத்தியபடி கேட்க..

“ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பைரவி.. உன் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்.. ” அத்துவின் அக்மார்க் புன்னகையுடன்.

 

மேகம் கடக்கும்..

 

Advertisement