Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 26

 

அகத்தியன் சூர்யா பைரவி இருவரையும் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்..

“ இவரு எதுக்கு பைரவி கூப்பிட்டு அனுப்பினாரு ?? ”

“ யாருக்குத் தெரியும் ! ஒருவேளை நீ டெஸ்ட் பேப்பர் ல உன் கையெழுத்தை இங்கிலீஷ்ல போட்டதை பற்றி கேட்க கூட இருக்கலாம் ” என்றவள் விளையாட்டாக சொல்லிச் செல்ல.. சூர்யா அப்படியே நின்று விட்டாள்.

அவள் வராததை உணர்ந்து திரும்பியவள் சூர்யாவை காணாமல் சுற்றிலும் பார்வையை ஓட்ட..

ஓரிடத்தில் முதலுதவிப் பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்து காதில் வைத்தபடி இவளிடம் வந்தாள்.

பைரவி இடுப்பில் கை வைத்து முறைக்க..

“ ஹி…ஹி.. உன் குருநாதர் வெச்சு செய்யப் போறார்.. நான் பண்ணின தப்புக்கு என் காது என்ன பாவம் பண்ணுச்சு.. அதான் அதை காப்பாத்தலாம்ன்னு ” என்றதும் முறைத்துக் கொண்டிருந்தவள் முடியாமல் சிரித்தாள்.

“ வா ” என அழைத்து சென்றவள் சூர்யா எதிர்பார்க்காத நேரத்தில் காதில் இருந்த பஞ்சை தூக்கி எறிந்து விட்டு உள்ளே இழுத்துச் சென்றாள்.

“ பைரவி.. சூர்யா.. வாருங்கள் ”

“ ஐயா ”

“ ஓர் மகிழ்ச்சியான செய்தி.. சிங்கப்பூர் நகரில் நம் தாய் மொழி பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு அமைப்பை நிறுவ உள்ளனர்.. ”

இருவரும் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..

“ இன்னொரு செய்தியும் உண்டு. அதற்கான தொடக்க விழாவில் பங்கேற்க நம் பல்கலைக்கழகத்தில் இருந்து நான்கு மாணவர்கள் அடங்கிய குழு என்னுடன் வருகிறது.. நான் என்னுடைய சார்பாக உங்கள் இருவரையும் சேர்த்துள்ளேன் ”

“ ஐயா !! ” என்று அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. எத்தனை அரிதான வாய்ப்பு இது என்பது அவர்களுக்கு தெரியும். அதுவும் முதுகலை ஆராய்ச்சி மாணாக்கர் எல்லாம் இருக்க இளங்கலை மாணவர்களான இவர்களைத் தேர்வு செய்தது வியக்காமல் இருக்க முடியவில்லை..

“ இருவருக்கும் சம்மதம் தானே ?? ”

வேகமாக தலையாட்டி வைத்தனர்..

இருவரும் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்க “ சூர்யா ” என அழைத்தவர் “ நமது மொழி நமது அடையாளம் ” என்றார்.

புரிந்துவிட்டது.. அடையாளத்தை தொலைத்து விடாதே !! என்ற ஒற்றை வாக்கியத்தோடு முடித்துக்கொண்டார்

“ கவனச்சிதறலால் நடந்த தவறது ஐயா. இனிமேல் நடக்காது ” என்று கூறி வெளியே வந்தனர்..

“ பைரவி.. பைரவி.. உன் குருநாதர் கலக்கிட்டாரு டி.. நான் எதிர்பார்க்கவே இல்ல இது எவ்வளவு பெரிய வாய்ப்பு ” என்றவள் பைரவியின் கன்னத்தில் முத்தம் வைக்க.. வழக்கம்போல் விழித்தாள் அவள்.

அவளைப் பிரித்து நிறுத்திவிட்டு நிமிர்ந்தால் இருவரையும் விசித்திரமாக பார்த்தபடி நின்றிருந்தான் அதுல்..

‘ ஹையோ.. ’ என பைரவி மறுபக்கம் திரும்பிக் கொள்ள..  

சட்டென அவன் விழிகளில் புரியாத பாவம்..

“ அண்ணா.. நீங்க இங்க ? ” சூர்யாவின் அழைப்பில் பைரவியிடம் இருந்து விழிகளை பிரித்தெடுத்து சூர்யாவிடம் வந்தான்..

“ ஐயாவை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ”

“ உள்ள தான் இருக்காங்க பார்த்துட்டு வாங்க ” என்றதும் தலையசைத்து உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவனிடம் “ என்னண்ணா இன்னிக்கு உங்களுக்கு ஆஃபீஸ் இல்லையா ? ” என்று சூர்யா வினவ..

“ இன்னைக்கு ஹாப் டே தான் சூர்யா ” என்றவன் “ சிங்கப்பூர் போறத பத்தி சார் சொன்னாரு.. ரெண்டு பேருக்கும் கிடைச்சிருக்க கோல்டன் ஆப்புர்ச்சுனிட்டி நல்லா யுடிலைஸ் பண்ணிக்கோங்க ” என சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினான்..

அவன் மனம் முழுதும் நெருடல்.. காரணம் பைரவி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை இவனிடம்.. பேசுவது என்ன ஓரப்பார்வை கூட இருக்கவில்லை.

‘ என்ன ஆச்சு இவளுக்கு.. என்னை மட்டும் அவாய்ட் பன்ற மாதிரி இருக்கு ’ என நினைத்தவன் ஞாயிறன்று பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

அவன் எதிர்பார்த்த ஞாயிறன்று எதிர்பாராத அடுத்த காரியத்தையும் செய்தாள் பைரவி. கதிரின் வீட்டில்..

“ சூர்யா பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிட்டா நீ எப்ப பண்ண போற ? ”

“ இன்னைக்கு சாயந்தரம் ஊருக்கு கிளம்பறேன் க்கா.. அந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வர நாலு நாள் ஆகும் ” என பைரவி நிலாவிடம் சொல்லிக் கொண்டிருக்க.. அதனைக் கேட்ட அதுல்..

“ என்ன பைரவி இப்ப சொல்ற ? டிக்கெட் புக் பண்ணனும்னு முன்னாடியே சொல்லியிருந்தா கொஞ்சம் ஈசியா இருந்திருக்குமே ” என இடையிட்டான்.

அவளை தனியாக ரயிலில் அனுப்புவதை அவன் எப்போதுமே விரும்பியதில்லை. முடிந்த அளவு தாத்தாவை பார்த்துவிட்டு வருகிறேன் என உடன் கிளம்பிவிடுவான் அப்படியே அவள் தனியாக செல்ல வேண்டிய நிலை என்றாலும் அவனுக்கு தெரிந்த தனியார் பேருந்தில் மட்டுமே அனுப்பி விடுவான். இன்றோ மாலை கிளம்ப வேண்டும் என மதியம் சொன்னால் எப்படி ! நேற்று இரவே முன்பதிவு முடிந்து இருக்கும்.. இவளுடன் அவனும் செல்ல முடியாது என இவன் அவளுக்காக யோசித்துக் கொண்டிருக்க..

அவளோ “ இல்ல புக் பண்ணியாச்சு.. ” என்றதுமே அவன் அமைதியாக அவளை பார்த்தான்.

“ அது.. விக்ரம் மாமாவும் என் கூட ஊருக்கு வராங்க ” என்றதும் அவன் முகம் மெல்ல மாறத் தொடங்கியது.

“ அப்படி எல்லாம் யாரு என்னன்னு தெரியாதவங்க கூட உன்னை அனுப்ப முடியாது ” என்று சட்டென்று பதில் வந்தது அவனிடமிருந்து.

“ அவங்க யாரோ இல்ல.. என்னோட மாமா ” இவள்..

இருவரையும் ‘என்னதிது’ என்பது போல் மற்றவர் பார்க்க.. அத்து அங்கிருந்து கிளம்பிவிட்டான்..

“ பைரவி.. நீ பண்ணினது தப்பு. எப்பயுமே உன்னோட ட்ராவல் அவன் தானே பார்க்கிறான் இத பத்தி நீ அவன் கிட்ட சொல்லி இருக்கணும் ” நேராகவே குற்றம் சாட்டினான் கதிர்.

அவனுக்கு மட்டுமே தெரியும் அத்து ஏற்கனவே அடுத்த வாரம் ஊருக்கு சென்று வருவதற்காக டிக்கெட் பதிவு செய்து விட்டான் என்று.. அகத்தியன் அன்று இவனிடம் விடயம் கூறியதுமே அவள் பாஸ்போர்ட் எடுக்க ஊருக்கு செல்ல வேண்டி வரும் என்பதை அறிந்து அவன் செய்து வைத்திருந்தான் இப்போது திடீரென இப்படி சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது !!

ஆனால் அவன் அவளிடமும் கேட்டிருக்க வேண்டும்.. பைரவி விஷயத்தில் அவன் அவ்வாறு செய்வதில்லை.. அவளுக்கென்று பார்த்து பார்த்து செய்வான்.. அவளுக்கு எது தேவையோ செய்து கொடுப்பான். இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.. ஆனால் எல்லா நேரமும் ஒரே போல அமையாதல்லவா?      

“ கதிர் ” என்ற நிலா அமைதியாக இருக்குமாறு கண்களாலே கூறினாள். அவளுக்கு பயம் எங்கே பைரவி இதையும் தவறாக எடுத்துக் கொண்டு விடுவாளோ என்று.

கதிரும் எழுந்து வெளியே சென்றுவிட.. பைரவி கண்கள் கலங்கிவிட்டது.

அவள் வேண்டும் என்று எதையும் செய்யவில்லை இன்று அகரனில் இருக்கும் போது விக்ரமிடம் விஷயத்தை கூற.. அவன் ‘ நானும் ஊருக்கு வந்து வருடங்கள் ஆகிவிட்டது உன்னுடன் வருகிறேன் இருவரும் போய்வருவோம் பாப்பு ’ என அப்பொழுதே டிக்கெட் பதிவு செய்து விட்டான்.

இவளால் தடுக்கவும் முடியவில்லை.. இப்பொழுது அத்துவும் அவளுடன் எப்பொழுதும் பேசியிராத தொனியில் பேச.. இவளையும் மீறி வார்த்தைகள் வந்துவிட்டன.

என்ன இருந்தாலும் அவள் அப்படிப் பேசியிருக்கக்கூடாது.. இரண்டு வருடங்களாக அவன் தான் அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான்.. அவள் வாய் திறந்து எனக்கு இது வேணும் எனக் கேட்டதில்லை.. கேட்க வேண்டிய அவசியத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.. அவள் கேட்கும் முன் அனைத்தும் அவள் முன்பிருக்கும். அப்படிப்பட்டவனிடம் இவள் வெடுக்கென பேசியது இவளுக்கே தவறென புரிந்து விட்டது.

அதுவும் அவளால்தான் அவன் கிளம்பி விட்டான் என்றதும் உள்ளுக்குள் வலித்தது..

“ ஹேய் பைரவி.. விடு பார்த்துக்கலாம். நீ முன்னாடியே சொல்லலைன்னு கோபம் இருக்கும் அதான் இப்படி கிளம்பிட்டாங்..க கொஞ்ச நேரத்துல உன் பாசமலரும் என் பாசமலரும் பாசத்தை பொழிய இங்க தான் வருவாங்க ” என்றதும் சிறு புன்னகையை உதிர்த்தவள் நிலாவுடன் சமையலில் இறங்கிவிட்டாள்.

அங்கிருந்து கிளம்பிய அத்துவிற்கோ அத்தனை கோபம்.. ஏமாற்றம்.. ஏற்கனவே விக்ரம் யுகா பற்றி பைரவி பேசும் போதெல்லாம் இவனுக்கு சிறு பொறாமை எழுந்ததுண்டு.. என்னவோ அவள் மாமா.. மாமா.. என உரிமையாய் பேசுவதெல்லாம் இவனுக்கு பிடிப்பதில்லை.. என்னவோ போல் இருக்கும்..

ஆனாலும் அவளுடைய உறவினர்கள் தானே என விட்டு விட்டான். இன்றும் விக்ரம் மாமாவுடன் செல்கிறேன் என்றதுமே இத்தனை நாள் வைத்திருந்த கோபம் வெளிப்பட்டுவிட்டது அவன் அறியாமலேயே..

பதிலுக்கு பைரவி பேசியதும்.. இனியும் அங்கு இருப்பது சரியல்ல என்றுதான் கிளம்பி வெளியே வந்து விட்டான். நான் இருக்கும்போது பைரவிக்கு அவன் எப்படி பண்ணலாம் என்ற ஒரு எண்ணம்.

ஏனோ இத்தனை நாள் அவளைப் பார்த்து கொண்டவனுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. எப்படி அவள் அப்படி என்னிடம் சொல்லாமல் செல்லலாம் என்ற கேள்வி தான் மனம் முழுவதும்.

“ அத்து.. ” எனக் கதிரும் வந்துவிட இருவரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆட ஆரம்பித்தனர்.

மனம் அமைதி இல்லாமல் இருக்க.. அதனை தவிர்க்க ஆட ஆரம்பித்தவர்கள் மதிய உணவை கூட மறந்து விட்டனர். அந்தி மாலை சூரியன் மேற்கு பக்கம் சாயவும் தான் வீடு திரும்பினர்..

டேபிளில் சமைத்த உணவை எடுத்து வைத்துவிட்டு அவர்களுக்காகக் காத்துக் கொண்டு.. புத்தகம் புரட்டிக்கொண்டிருந்த பைரவியையும் நிலாவையும் பார்த்ததுமே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“ நண்பா ” கதிர்

“ என்ன கதிர்.. நான் அப்போவே வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னேன் நீ கேக்கல.. இப்ப பாரு இவங்களும் சாப்பிடாம நமக்காக வெயிட் பண்றாங்க.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு ?? ” என அந்தர் பல்டி அடித்த அத்துவைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றான் கதிர்.

‘ நீ எப்போ இருந்துடா இப்படியான ’ என்பதாய் ஒரு பார்வை பார்த்து வைத்தான்..

அத்துவின் பேச்சில் நிமிர்ந்த இருவரும் மீண்டும் புத்தகத்தில் தலையைவிட..

‘ என்னடா பண்ணலாம் ’ என நண்பனை பார்த்தான் அதுல்

“ ஏண்டா நீ ஸ்கோர் பண்றதுனா பண்ணிட்டு போ.. என்னை ஏன்டா ரன் அவுட் பண்ற ” கதிர் கடிந்து துப்ப..

“ என்ன மறுபடியும் கிரவுண்டுக்கா ” அத்துவின் இந்தக் கேள்வியில் பதறிய கதிர் “ அடேய் !! ஏன்டா ஏன்.. சொல்லிட்டு நீ கிளம்பிடுவ உன் தங்கச்சி கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது நான் தானே ” என புலம்ப

“ அப்போ ஏதாவது வழி சொல்லுடா.. நாம பண்ணி வச்சிருக்கறதுக்கு அவங்க கொலவெறியில் இருப்பாங்க.. ”

யோசித்த கதிர்.. “ ஒரே ஒரு வழி.. நான் உன் தங்கச்சிய கரெக்ட் பண்றேன்.. நீ என் தங்கச்சிய கரெக்ட் பண்ணிடு.. அப்போ தான் சாப்பாடு ”

“ ஏய்.. என்ன கரெக்ட் அது இதுன்னு ” என இவன் அதட்டலைக் கேட்க கதிர் அங்கு இருந்தால் தானே !!

அவன் சோபாவில் அமர்ந்திருந்த நிலாவிடம் சென்றிருக்க.. இவன் பைரவியிடம் சென்றான்.

“ பைரவி.. ”

நிமிர்ந்து பார்க்க.. “ சாப்டியா ? ” என்று கேட்டான்.

அவள் மறுப்பாக தலையசைக்க..

“ ப்ச்.. என்ன பைரவி நீ.. மணி என்ன ஆகுது பாரு.. இன்னும் சாப்பிடாம என்ன பண்ற ! வா.. வா சாப்பிடலாம் ” என்றவன் மடமடவென ஒரு தட்டை எடுத்து சாதம் போட்டு வந்து அவளிடம் நீட்ட.. அவள் பேச்சற்று போய் அமர்ந்திருந்தாள்.

இருக்காதா பிறகு.. இவன் தான் கோபித்துக்கொண்டு போனானே தன்னால் அவன் மனது காயப்பட்டு விட்டதே ! என்ன செய்வது ! என இவள் இங்கு தவித்துக் கொண்டிருக்க.. அவன் எதுவுமே நடவாதது போல் வந்து நின்று பேசி சாதம் போட்டுக் கொடுத்து.. அவளை திகைக்கச் செய்து நிற்கிறான்..

‘ விட்டால் ஊட்டியும் விடுவான் போலவே ’ என அவள் நினைத்து முடித்திருக்க அவன் அதையும் கேட்டும் வைத்தான்

எழுந்து நின்றவள் “ எ.. என்ன ”

“ இல்ல நீ ஏதோ படிக்கிற போல.. அதான் நானே உனக்கு.. ” என்றவன் முடிப்பதற்குள் வேகமாக தட்டை வாங்கிக்கொண்டாள்.

“ பார்த்தியா..  நான் உன்னைக் கேட்டேனே ! நீ என்னை கேட்டியா ? ” என்றதும் அவள் தொண்டைக் குழியில் இறங்கிக்கொண்டிருந்த உணவு ஜெர்க் ஆகி நின்றதால் புரை ஏறிவிட்டது..

“ ஹேய் பார்த்து பார்த்து.. ” என தட்டிக்கொடுத்து நீரை பருகச் செய்தான்.

விழிகள் கலங்கி முகம் சிவந்து இவனை ஏறிட்டவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

இவன் என்னவோ ‘ என்னை சாப்பிட்டீங்களா என்று கேட்டியா ’ எனத் தான் வினவினான்..

பாவையவளின் மனமோ ஊட்டிவிட கேட்கச் சொல்கிறானோ என நினைத்ததில் இதயம் எகிறி குதிக்க உண்டுகொண்டிருந்த உணவுப்பாதையில் ஜாம்..

“ நீ சாப்பிடு பைரவி ” என்றவன் தனக்கும் போட்டுக்கொண்டு அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

இன்னும் அவள் அதிர்ச்சி விலகாமல் அவனையே பார்த்திருக்க.. இவன் நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு கையிலிருந்து ஒரு கவளச் சோற்றை பார்த்தவுடன் ‘ஐயோ’ என அவள் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு இவனும் தொடர்ந்தான்.. கதிர் நிலாவை சமாதானப்படுத்தி அழைத்துவரும்போது சாப்பிட்டே முடித்திருந்தனர்.

‘அடப்பாவி’ என்று தான் நண்பன் அவனை பார்த்திருந்தான்.. பின்னே அவனுக்கு அரை மணி நேரம் அல்லவா பிடித்தது அவளை சமாளிக்க.. ஆனால் இங்கு ம்ம்.. என பெருமூச்சுதான் விட முடிந்தது..

உண்டு முடித்தபின் சிறிதுநேரம் இருந்தவர்கள் பைரவிக்கு ஊருக்கு செல்ல வேண்டியதற்கு எடுத்து வைக்க வேண்டியதிருந்ததால் சொல்லிக்கொண்டு கிளம்ப.. அத்துவும் விடை பெற்று எழுந்தான்.

இவள் வரும் முன்னரே அவன் கிளம்பிச் சென்று இருக்க.. இவள் ‘ இன்னும் கோபம் இருக்கும் போல ’ என்று வருத்தத்துடன் நடக்க ஆரம்பித்தாள். இவள் பேருந்து நிலையத்தை அடையவும் விக்ரம் வரவும் சரியாக இருந்தது.

“ ஹேய் பாப்பு இங்க என்னடா பண்ற.. ”

“ மாமா.. நிலாக்கா வீட்டிலிருந்தே இப்போதான் கிளம்பினேன்.. ஹாஸ்டல் போய் இனிமேதான் கிளம்பனும். நீங்க எங்க இங்க ? ”

“ ஃப்ரெண்ட் ஒருத்தன ட்ராப் பண்ண வந்தேன்.. சரி வா உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு நான் வீட்டுக்கு போறேன் ” எனவும் இவள் மறுத்தாள்

இவளது விடுதியும் யுகாவின் வீடும் எதிரெதிர் பக்கங்களில்.. எதற்கு சிரமம் என மறுக்க. அவனோ அதனால் என்ன என அழைத்தான்.

இவள் அவனுடைய பைக்கில் ஏறி அமரவும்.. அத்து பெட்ரோல் அடித்துக் கொண்டு அங்கு வரவும் சரியாக இருந்தது..

‘ஐயோ’ என்று தான் இருந்தது அவளுக்கு.

இது என்ன இன்று எல்லாமே சொதப்பலில் முடிகிறது இப்பொழுது பார்த்தா விக்ரம் மாமா இங்கு வரவேண்டும்.. இன்று பார்த்தா அவர் பெட்ரோல் அடிக்க வழக்கமாக செல்வதை நான் மறக்க வேண்டும்.. மானசீகமாய் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“ என்னாச்சு பாப்பு ? இறங்கிட்ட.. ” என்று விக்ரம் கேட்கவும் தான் இறங்கி நிற்பதே தெரிந்தது..

சமாளித்தவள் “ மாமா.. ரவி மாமா பையன் சொல்லியிருக்கேனே.. அவங்கதான்.. ” என அத்துவை அறிமுகப்படுத்த

“ ஹலோ அதுல்.. ” என இறங்கியே வந்துவிட்டான் அத்துவிடம்..

அவனுக்கு அத்துவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.. பைரவிக்கு தாங்கள் செய்திருக்க வேண்டியவை அனைத்தும் அவன் செய்வது குறித்து வியப்பு.. மரியாதை அவன்பால்..!

அத்துவும் புன்னகையுடன் கரம் குழுக்க.. பைரவிக்கு சற்றே இயல்பாய் மூச்சுவிட முடிந்தது.

“ ரொம்ப தேங்க்ஸ் அதுல்.. பைரவிக்கு இங்கே வந்து படிக்க நீங்க செய்த உதவியை பத்தி சொன்னா.. நாங்க இருந்து பண்ணவேண்டியத நீங்க பண்ணி இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ்.. ” என உள்ளம் மறைக்காது பேசிய விக்ரமை ஏனோ அந்த நிமிடம் பிடித்தது அத்துவிற்கு.

“ அதில் என்ன இருக்கு விக்ரம்.. ” என்றவன் “ சரி நீங்க கிளம்புங்க.. ஊருக்கு போறதா பைரவி சொன்னா.. லேட் ஆகிடும்.. ” என்றதும் அவன் விடைபெற பைரவியும் இவனிடம் விடைபெற.. ஒரு ஆழ்ந்த பார்வையுடன் தலையசைத்து விடை கொடுத்தான்.

என்ன முயன்றும் பைரவியால் அந்தப் பார்வையின் பொருள் அறிய முடியவில்லை.. அதை மறக்கவும் முடியவில்லை..

ஆனால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஊருக்கு கிளம்பி சென்று பாஸ்போர்ட் அப்ளை செய்து வெரிஃபிகேஷன் முடித்து ஊர் திரும்பியிருந்தாள்.

அத்து வீட்டிலோ ஜெயாவிற்கும் அவனுக்குமிடையே சப்தமில்லா பனிப்போர்.. ஜெயா அவனுடன் பேசாமல் இருந்து அவனுக்கு தண்டனை கொடுத்தார்..

திருமணம் ஒரு வருடம் கழித்து செய்துகொள்வதாக கூற அவர் இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டார். பொதுவாக அத்து அவரை எப்படியும் பேசியே சரி செய்து விடுவான்.. அவருடன் பேசாதிருப்பது எல்லாம் அவனால் முடியாத காரியம்.

சிறு வயதுமுதல் ரவி என்னவோ வேலை வேலை என்று இருக்க இருவருக்கும் ஜெயா தான் உலகமே.. அதிலும் மிதுன் கூட அண்ணனைத் தான் அதிகம் தேடுவான் ஆனால் அத்துவிற்கு ஜெயா தான் எல்லாமே..

அப்படி இருக்க இந்த முறை அவனும் இறங்கி வருவதாக இல்லை.. அவனிடம் சரியான காரணங்கள் இருக்க.. இவர் வீண் பிடிவாதம் பிடிப்பதாகவே பட்டது.

அவனது முடிவில் உறுதியாக இருந்தான்.

இப்படியிருக்க சூர்யா பைரவி சிங்கப்பூர் செல்ல வேண்டிய நாளும் வந்தது.. அகத்தியன் குழு கிளம்பி இருந்தது.

மேகம் கடக்கும்…

 

Advertisement