Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 25

 

நிச்சயம் அவன் தூரிகாவை எதிர்பார்க்கவில்லை.. இப்பொழுது என்ன செய்வது? தூரிகாவைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அவன் முடிவு மறுப்பாகத்தான் இருந்திருக்கும்.. ஆனால் இப்பொழுது ?? மனம் மொத்தமும் முடங்கி போய்விட்டிருந்தது..

யோசிக்க வேண்டும்.. யோசித்து தான் இதில் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்.. முடிவு செய்திருந்தான்.. எந்தவொரு அவசரமும் காட்டி அனர்த்தம் விளைவிக்க விரும்பவில்லை அவன்..

இதுவரை தனக்கு வரப் போகிறவளைப் பற்றி துளி சிந்தனையும் இருந்ததில்லை அவனிடத்து.. ஆனால் இப்பொழுது சிந்தனை செய் என்றது மனம்.. அதற்கு கால அவகாசம் வேண்டும்..

ஜெயாவிடம் சென்றவன்.. “ அம்மா.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் யோசிக்க.. ”

அவன் மறுப்பு சொல்லாததே அப்பாடா என்றிருந்தது அவருக்கு.. வேகமாய் பச்சை விளக்கை எரிய விட்டார்..

“ கதிர் வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன் மா…. ”

ஏதோ சொல்ல வந்தவர் அவன் முகம் பார்த்து முடிவை மறு பரிசீலனை செய்து அனுமதி வழங்கினார்..

இவன் உள்ளே நுழையவுமே.. அனைவரின் பார்வையும் இவன் மீது ஆராய்ச்சியாக.. எதிர்ப்பார்ப்புமாக.. கேலியுமாக..

புரிந்துவிட்டிருந்தது.. அங்கிருந்து கிளம்பிய மிதுன் இங்கு வந்து அவனது திரைக்கதையை இயக்கி படமாக ஒட்டி இருக்கவேண்டும்.. அது சரி அவன் அப்படி செய்யாமல் இருந்தால் மிதுன் அல்லவே!

திரும்பி அவனைப் பார்க்க.. அவன் தன்னைத் தான் பார்ப்பான் என அறிந்த அறிவாளி மடிக் கணினியில் தலையை விட்டிருந்தான்..

“ வாடா நண்பா.. சம்சார சாகரத்தில கால வைக்க போற.. ஆழ்ந்த அனுதாபங்கள் ஆருயிர் நண்பனிடமிருந்து.. ஆனா என்னைப் பார்த்தும் நீ அந்த முடிவெடுத்து களத்துல குதிச்சிருக்க… உன் மன் தைரியத்தைப் பாராட்டி…” பறந்து வந்தது குஷன்..

லாவகமாக அதனைக் காட்ச் செய்தவன் “ இதுக்கெல்லாம் நீயும் தயாராகணும்னு உன் தங்கச்சி களத்துல இறங்கி வேலை பார்க்குறா.. ” என்றவன் அடுத்து என்ன பறந்து வருமோ என அஞ்சி ஆத்துக்காரியை பார்த்தான்..

அவளோ அத்துவிற்காக காபி போடச் சென்றிருந்தாள்..

“ மாமா…. கண்ணுல கலவரம் தெரியுது… கவர் பண்ண வேண்டிய கட்டயத்துல இருக்கீங்க… உடனே பண்ணுங்க… ” என சூர்யா அவனை வார அசடு வழிந்தவன் அத்துவின் பக்கம் திரும்பினான்..

மதியம் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அத்தையுடன் பேசிக் கொண்டிருந்த பைரவி நிலா வீட்டிற்கும் செல்ல வேண்டுமெனக் கூறி விடைபெற்றாள். யுகாவின் அறைக்கு வந்து பார்க்க அவன் உறங்கிக் கொண்டிருந்தான்..

உறக்கத்தில் கூட உற்சாகத்தின் உறைவிடம் உரிமையாய் இருக்கும் அவனிடம்.. ஆனால் இப்பொழுது ??

விக்ரமிடம் விசாரிக்க வேண்டும் என்றபடி வெளியே வர அவளை விட்டுவிட்டு வருவதாகச் சொல்லி விக்ரமும் அவளுடன் வந்தான்.

“ மாமா.. யுகா மாமாக்கு என்ன பிரச்சனை.. எதுவும் இல்லைன்னு சொல்லிட வேண்டாம்.. ஏதோ இருக்கு எனக்குத் தெரியும்… ”

நீங்க சொல்லியே ஆகணும் என்பதாய் ஒரு பார்வை அவனின் பாப்புவிடம் இருந்து.

இத்தனை தெளிவாகப் பேசுபவளிடம் இருந்து என்ன மறைத்து விட முடியும் அவனால் ? மொத்தமாக கொட்டிவிட்டான்..

யுகா தூரிகா நட்பு.. யுகாவின் காதல்.. காதலில் அவன் செய்து வைத்திருக்கும் சொதப்பல்.. என அவன் அறிந்த எல்லாவற்றையும் அவளிடம் கொட்ட அவளுமே திணறித்தான் போனாள்.. ஆனால் அதெல்லாம் சில மணித்துளிகளே!

யுகாவிடம் பேச வேண்டும்.. அவனைக் கொஞ்சம் தெளிவு படுத்தினால் போதும்.. வசந்தம் அவனிடத்து வாசம் செய்ய ஆரம்பித்துவிடும்.

நிலா வீட்டில் அவளை இறக்கிவிட்டு விக்ரம் விடைபெற்றுச் செல்ல இவள் உள்ளே நுழைந்தாள்.

சரியாக.. மிகச் சரியாக அவளிடம் வந்து சேர்ந்த கதிரின் வார்த்தைகள் இதயத்தில் இடியை இறக்கிச் சென்றன.

“ நிலா உன் அண்ணனை நம்பாத.. அவனுக்கு அந்தப் பொண்ணை மூணு வருஷமா தெரியும்.. நான் கூட சைட் அடிக்கறியான்னு கேட்டதுக்கு வெட்டவா குத்தவான்னு பார்த்தான்.. நானும் கூட நம்பிட்டேன்.. ஆனா இப்போ தானே தெரியுது பையன் லவ்வுல விழுந்திருக்கான்னு….. ”

அத்துவைப் பார்த்து அவன் சொல்லிக் கொண்டிருக்க அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிந்தாள் உரியவள்.

அவளுடைய அத்துவின் மனதில் வேறு ஒரு பெண்ணா ?? நினைத்துப் பார்க்கவே சிந்தை சிதறித் துடிக்கிறது.

உள்ளுக்குள் எழுந்த சிந்தனைச் சூறாவளி அவளை உள்ளிழுத்துக் கொள்ள கண்கள் சொருகிது..

அவள் தள்ளாடுவதைப் பார்த்து விட்டிருந்தவன்..

“ பைரவி… ” என பாய்ந்து வந்து பிடித்து அமர வைத்தான்.. அதற்குள் நிலா நீர் எடுத்து வர அதனைத் தெளித்து அவளைத் தெளிய வைத்தான்.

“ பைரவி…. ” தவிர்க்க முடியா தவிப்புடன் அவளவன்.

சற்று முன்பு வந்த கதிரின் வார்த்தைகள் வாட்டியெடுக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. விழியோரம் வழிந்த வலி நிறைந்த நீர் முத்துக்களை அவள் அகற்றுவதற்கு முன்பு அவன் செய்திருந்தான்..

“ பைரவி… ” மெதுவாக அழைத்தான்.

ம்ஹும்.. அசையவேயில்லை.. உண்மையில் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் தவித்திருந்தாள் தத்தை..

இவன் குழப்பமாய் அவளைப் பார்த்திருந்தான்.. திடீரென மயங்கி விழுந்தால் என்னவென்று எடுப்பது ??

சூர்யாவுடன் சென்றிருந்த மிதுன் உள்ளே நுழைய இவன் எழுந்து சோபாவில் அமர்ந்தான்.. இவளுக்காக ஜூஸ் எடுத்து வரச் சென்றிருந்த கதிரும் நிலவும் திரும்பியிருந்தனர்.

“ என்னாச்சு அக்கா… ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க… நீ எப்போ வந்த பையு… ” மிதுன் தான் ஆரம்பித்தான்.

அவனுக்கு பதில் சொல்லத் தான் விரும்பினாள்.. ஆனால் தொண்டைக் குழியிலிருந்து வார்த்தை வராமல் வஞ்சனை செய்ய நிலாவைப் பார்த்தாள்.

நிலா அவனுக்கு விளக்க..

“ இந்த ட்ரம் கூட சேர்ந்து நீயும் ஏதும் டயட் ட்ரை பண்றியா பையு.. ” என சூர்யாவை வம்புக்கு இழுக்க..

“ நான் ட்ரம் ஆ டா… பன்னி…” என அவள் பொங்க…

இவனும் பதிலுக்கு பொங்க வைக்க கிடைத்த இடைவெளியில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்..

அவளையே அமைதியாகப் பார்த்திருந்தான் அதுல்.. அறிந்தும் அறியாமல் அமர்ந்திருந்தாள்.

“ உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? பையு நம்மகிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைச்சிட்டா… ” சூடாக வந்தது சூர்யாவின் குரல்.

சட்டென எல்லாரும் பையுவை போகஸ் செய்ய.. அவள் அகம் அமைதியாக அதிர்ந்தது.

“ என்னனு சொல்லுடி.. ” இது நிலா.

“ சொல்லிடவா…. ” சூர்யாவின் கேள்விக்கு விடை கொடுக்க முடியாமல் அமைதியாக இருக்க..

“ சொல்லு பையு…. ” அத்தனை அழுத்தம் அவளிடம்.

‘ இவ என்ன சொல்லி வைக்கப் போறான்னு தெரியலையே… ’ என்றவள்.

“ நா… நான் என்ன மறச்சேன்…. ” திக்கித் திணறி கேட்க..

“ எவ்வளவு பெரிய விஷயத்தை மறச்சிட்டு இப்போ கூலா கேக்குற… ”

“ ஹேய்… வாண்டு மொதல்ல விஷயம் என்னனு சொல்லு.. ” என்ற கதிரிடம்..

“ சொல்றேன் மாமா.. இந்த பைரவி இவ்ளோ நாளா நம்ம கூட தானே இருக்கா.. ஆனா இவளோட அத்தை.. அத்தான்ஸ் எல்லாம் இங்க தான் இருக்காங்கன்னு சொன்னாளா ?? யுகா சார்.. அவளுக்கு மாம்ஸ்.. அதப்பத்தி கொஞ்சமாச்சும் மூச்சுவிற்றுப்பாளா.. ” என்கவும் தான் என்னவோ ஏதோ என இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள் பைரவி..

“ ஹே இது தான் விஷயமா.. பைரவி ஏற்கனவே சொல்லிருக்காளே.. ” – நிலா

“ உங்களுக்கெல்லாம் தெரியுமா.. ” என்றவள் பைரவியை முறைத்துவிட்டு எழுந்து சென்று விட.. பின்னே போய் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள்.

சிட்டுக் குருவிக்காக அனைவரும் சிறு சிறு குடில்கள் கட்டிக் கொண்டிருந்தனர்.. அத்துவின்  ‘ பழையாறை புத்திரர்கள் ’ சார்பில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அவர்களின் விருப்பம் அறிந்து சிட்டுக் குருவி வளர்க்க வீடுகள் செய்து கொடுத்து வந்தனர்..

அழிந்து வரும் அந்த அழகிய சிட்டுகளைக் காக்க அவர்களால் ஆன ஒன்று..!

அத்து.. அவன் கல்லூரிக் காலத்தில் சுற்றுலா சென்றிருந்த போது ஒரு கிராமத்தில்.. அத்தனை வீடுகளிலும் முற்றத்தில் கீச் கீச் என்ற கீதத்துடன் அவைகளின் வாசம்.. அன்றே அவனுடைய வீட்டில் மேல் மாடத்தில் ஒரு தோட்டம் போல் அமைத்து குருவிகள் விரும்பும் சூழலை ஏற்படுத்தி அவைகள் வாசம் செய்ய சிறு குடில்கள் அமைத்துக் கொடுத்து வளர்க்க ஆரம்பித்து விட்டிருந்தான்..

அத்துவின் அன்பில் அவையும் ஆர்பரிக்க ஆரம்பித்திருந்தன..

சில தினங்களாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும்.. சிட்டுக் குருவிகளை இழக்க நேரிடுமோ என்ற பயமும் தான் அவனை சிந்திக்க வைத்தது..

வார இறுதி நாட்களில் சிறு சிறு குடில்கள் உருவாக்கி அதனை விருப்பமுள்ளவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.. இதுவரை இவர்கள் மட்டுமே 15000 மேற்பட்ட வீடுகளில் குடில்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்..

முடிந்த அளவு உணவும் வழங்குமாறு பார்த்துக் கொண்டனர்..             

“ பைரவி.. அங்க இருக்க மூங்கில் குச்சி எடு.. ” என்ற அத்துவின் வார்த்தைக்கு செவிசாய்க்காமல் அவள் வேலையைத் தொடர.. அவளையே ஒரு சில மணித்துளிகள் பார்த்தவன் அமைதியாக எழுந்து வந்து அவனே எடுத்துக் கொண்டு போனான்..

மாலையில் கிளம்பும் போது கூட எல்லோரிடமும் சொல்லிச் சென்றவள் மறந்தும் அத்துவின் புறம் திரும்பவில்லை.. அவளையே தான் அவன் பார்த்திருந்தான்.. அவன் பார்வை உணர்ந்தும் அவனிடம் திரும்பவில்லை அவள்..!

விருப்பமில்லை என்பதை விட அவளால் இயலவில்லை..

கதிர் என்னவென்று கண்களாலே வினவ.. தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவனும் புறப்பட்டான்..

அவனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாரே ஜெயா..

அவன் உள்ளே வந்ததும் எதிர்பார்ப்புடன் அவர் பார்வை அவனிடத்தில்..!

“ ம்மா… தலைவலிக்குது… ”

காபி கொண்டு வந்து நீட்ட பெற்றுக்கொண்டவன்.. “ உங்களுக்கு ? ” என்றான்.

பெற்றவளின் அகமும் புறமும் அலர்ந்தது.. அது தான் அத்து.. நீங்க சாப்பிட்டீங்களா ? எப்பொழுதுமே கேட்பான்.

அவன் வாஞ்சையுடன் கேட்கும் போதெல்லாம் வசந்தம் வாசம் செய்யும் ஜெயாவின் மனதில்..

அவனிடம் தலையசைத்தவர்.. கேட்கலாமா வேண்டாமா என அக்கோ புக்கோ போட்டுக் கொண்டு அவன் அருகில் அமர்ந்தார்.

காபி குடித்து முடித்தவன் அவர் மடியில் தலை சாய்த்தான்.. அவ்வளவு தான் இனி இருவருக்குமிடையில் பேச்சுவார்த்தைக்கு 144 தடை.. அந்த தருணம் அத்துவிற்கும் அன்னைக்குமானது..! அந்நியர்கள் நுழைய அனுமதியில்லை..

ஒரு சில மணித்துளிகள் கழித்து..

“ ம்மா… கல்யாணத்துக்கு சம்மதம்.. ” என்றான் அதரங்களில் அரும்பிய புன்னகையோடு..

“ அத்து… ” என்றவருக்கு பேரானந்தம்.. அவருக்கும் அகத்தில் அத்தனை ஆசை.. அத்துவிற்கு திருமணம் செய்து வைத்து அவனது அருந்தவப் புதல்வர்களை கரங்களில் ஏந்த வேண்டும் என..

சிந்தனையே சிலிர்ப்பை கொடுத்தது அவருக்கு..

இரவு உணவை முடித்தவன் மேல் மாடம் வந்தான்.. புரண்டு புரண்டு படுத்ததும் உறக்கம் அவனோடு உறவு கொள்ளவில்லை.. எப்பொழுதும் கார்மேகக் கூட்டத்தினுள் மிளிரும் விண்மீன்களுடன் கதை பேசிக் கொண்டு நித்திரை கொள்வது வழக்கம்.. இன்றோ குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்குள் முகம் புதைத்திருந்தான்..

எப்படி வரும் தூக்கம் ? இத்தனை நாளாக யாரும் எட்டிப் பார்க்க அனுமதிக்காத அவனது மனவெளியில் சத்தமில்லாமல் கால் தடம் பதித்து சிந்தை சிதறச் செய்தவள்.. காதல் கதகளி ஆடினால் ?

கண் திறந்தால் கண் மூடினால் ம்ஹும்.. எங்கும் எதிலும் அவள் திருமுகம்..

காதலா ? எனக்கா ? இப்படித் தான் நினைத்திருந்தான்.. ஆனால் சந்தோசத்தின் சாரலாய்.. மகிழ்ச்சியின் மழைத்துளியாய்.. அன்பெனும் அடைமழையாய்.. அவன் அகத்தை ஆக்கிரமித்து நேசத்தால் நனைத்திருந்தாள்…

மெல்லத் திரும்பி அவனருகே வைத்திருந்த அவளது புகைப் படத்தை பார்த்தான்..

கொள்ளை கொள்ளும் புன்னகை…

உன்னுடைய ஒரு புன்னகை போதும்

என்னோடு இருக்கும் மணித் துளிகளில்..

கிடைத்துவிடும் உன்னோடு யுகம் யுகமாய்

வாழ்ந்துவிட்ட திருப்தி என்னில்..

 

சொல்லிக் கொண்டான் உள்ளத்தில் இருந்த உரியவளிடம்..

அதே நேரம்.. தனது இதயத்தின் ரகசிய அறைக்குள் அத்துவை அடைத்து வைத்தாள் பைரவி.. அவனோடு சேர்த்து அவளுடைய காதலையும்..

அங்கிருந்து வந்த பின் அவளால் அழ முடிந்த வரை அழுதுவிட்டாள்.. இனிமேல் அழுவதற்கு அனுமதியில்லை விழிகளுக்கு.. விலங்கிட்டுக் கொண்டாள்.

அதனால் தான் என்னவோ அதுவரை அட்ரஸ் தொலைந்து போய் அலைந்து கொண்டிருந்த அவளது லட்சிய மனம் விழித்துக் கொண்டது..

தான் யார் ? தன்னுடைய கனவு என்ன ? தான் வந்த நோக்கம் என்ன ? தற்போது செய்து கொண்டிருப்பது என்ன ? அடுத்தடுத்த கேள்விகளில் ஆடித் தான் போய்விட்டாள்.

காதல் கொண்ட மனம் கனா கொண்ட மனதிடம் தோற்றுத்தான் போனது..

காரிருளில் கதிரொளியாய் வந்தவன்.. வண்ணத்தூரிகை கொண்டு வர்ணஜாலம் செய்தவன்.. அவன் அகத்தில் வேறு ஒரு பெண்ணா ? இதயம் வலித்தது..

ஆனாலும் விழித்துக் கொண்ட மனம்.. மாமா.. அம்மாவைத் தான்டி உன் காதல் வென்றிடுமா ? என கேட்க மௌனமாக தலையசைத்தாள்..

விக்ரமுடனான திருமணம் நின்றே போய்விட்டதை அறிந்து அத்தனை ஆனந்தமாய் இருந்தாள்.. அத்துவுடனான அவள் வாழ்வு குறித்து.. அவனே அதில்..

‘ ப்ச்.. ’ வேணாம்.. இது எதுவுமே வேணாம்.. வந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு பொட்டியைக் கட்டுவோம் பிறந்த ஊருக்கு.. உள்ளுக்குள் உரக்கச் சொல்லிக் கொண்டாள்..

முடிந்தவரை இனி அவரைப் பார்க்கக் கூடாது.. ஒதுங்கி ஓரமாய் இருந்து ஒரு வருடத்தை ஓட்டி விட வேண்டும்.. எண்ணிக் கொண்டாள்…

 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை..

 

-அகரன் பண்பலையிலிருந்து…

 

இவர்கள் இப்படியிருக்க.. யுகாவோ வெகு நாட்கள் கழித்து மனசாட்சியிடம் மாட்டிக் கொண்டான்..

‘ யாருடா நீ ? போ போய் என்கூட குப்பை கொட்டிகிட்டு இருந்த யுகாவ வர சொல்லு ’ அலட்சியமாய் சொன்ன மனசாட்சியை கண்டு அலட்டிக் கொள்ளாமல் இருந்தான்.

‘ டேய்!!!! ’ பொங்கிவிட்டது அது.. தன்மானப் பிரச்சனை அல்லவா ?

‘ நான் ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ள நீ என்னென்ன வேலை எல்லாம் பார்த்து வெச்சுருக்க… ம்ம்.. பாவம் டா அந்தப் பொண்ணு.. உனக்கு பிரெண்டாக இருந்ததத விட்டு அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணிச்சு.. ’

“ அவ எந்த தப்பும் பண்ணல.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. அவள லவ் பண்ணிருக்க கூடாது.. ” என்றவனை அடிக்க அவசரமாய் கட்டையைத் துளாவியது மனம்.

பின்னே ! நட்புக்கரம் நீட்டினால் பதிலுக்கு நட்புக்கரம் அல்லவா நீட்ட வேண்டும்? இவனை யார் காதல் கரம் கொண்டு பிடிக்க சொன்னது ? அப்படியே பிடித்திருந்தாலும் அவளிடம் சொல்லவாவது செய்ய வேண்டும்.

அதை விடுத்து உணர வைக்கிறேன் ஊறுகாய் வைக்கிறேன் என்று சொல்லி அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது அவளுடைய அம்மா சொன்னார்கள்.. அம்மம்மா சொன்னார்கள் எனச் சொல்லி இவன் பார்க்கப் போகும் வேலையை அதனாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை.

‘ சரி இப்ப என்ன பண்ணப் போற..’

“ அவங்க அனுப்பிச்ச பையனைப் பத்தி விசாரிச்சு அவளுக்கு பொருத்தமா இல்லையான்னு சொல்ல போறேன்… ”

‘ ஹா ஹா .. தம்பி சொல்றது ரொம்ப ஈசி.. ஆனா செய்யுறது அவளோ ஈசியில்ல.. உன்னால அது முடியாது.. போ போயி வேற வேல ஏதும் இருந்தா பாரு.. எனக்குத் தூக்கம் வருது.. ’ என குட் நைட் சொல்லி உறங்கச் சென்றது.

“ என்னால முடியும்.. முடியனும்.. அவங்க என் மேல வெச்ச நம்பிக்கையை நான் காப்பத்துவேன்.. ” உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

“ யுகா.. எங்களுக்கு பையன் இல்ல… என் வழில அவளோட மாமா.. பெரியம்மா.. எல்லார்த்துக்கும் கூட பொண்ணுங்க தான்.. ஒரு பையன் இருந்திருந்தா எல்லாம் அவன் பார்த்துப்பான்.. எங்களுக்கு எந்த கவலையும் இருந்திருக்காது.. ஆனா எங்களுக்கு கொடுத்து வெக்கல.. சரி அதனாலென்ன..   

நீ இருக்கும் போது வேற என்ன கவலை ? உன் ப்ரெண்டுக்கு உன்னை விட யார் பெஸ்ட் ஆக பார்த்து கல்யாணம் செஞ்சு வெக்க முடியும்.. நீ தான் எல்லாம் பார்த்து பண்ணனும்.. ” இன்னும் நிறைய சொன்னார்.

அன்று தூரிகாவின் அம்மா பேசியது இப்போது கூட இதயத்தை வாள் கொண்டு வெட்டி எடுப்பது போல வலித்தது.

தன் ஒரே மகளின் மணாளனை தேர்வு செய் என்கிறார்களே அப்படியென்றால் என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் ?

அப்படி இருப்பவர்களிடம் போய் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொல்லி அவர்களது நம்பிக்கையை தூள் தூளாக உடைப்பதா? நிச்சயம் அவனால் அது முடியாது..

அவன் வளர்ந்த விதம் அப்படி..

நம்பிக்கை.. நாடித் துடிப்பு போல ! அவன் உடைந்து போனாலும் நிச்சயம் அதை உடைக்க மாட்டான்..  

பிடித்து வைப்பதும் பிரித்து வைப்பதும் நம்பிக்கை தானே !

தன் காதலை மரிக்கச் செய்யும் முடிவோடு அது தந்த அத்தனை வலிகளையும் வேதனையையும் தன்னுள் புதைத்துக் கொண்டு தான் பார்த்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்து வந்துவிட்டிருந்தான்.

இதோ அவர்கள் அத்துவின் புகைப் படத்தை அனுப்பியிருக்கிறார்கள்.. இனி இவன் செய்ய வேண்டியது அவனைக் குறித்து விசாரித்து திருப்தியாக இருந்தால் அவர்களிடம் சொல்ல வேண்டும்..

‘ அப்புறம் நீ என்ன பண்ண போற.. ’ மனசாட்சி தான் மறுபடியும்.

“ ஹேய் ! நீ என்ன பண்ற.. இன்னும் தூங்கலையா ? ” என்று கேட்டவனைக் கண்டு எங்கு முட்டிக் கொள்ளலாம் என தூண் தேடலில் இறங்கிவிட்டது மனசாட்சி.

‘ டேய் !!! எங்க மாறி சில மனசாட்சி முழிச்சுட்டு இருக்கிறதால தான் நாட்டுல இன்னும் மழை பெய்யுது.. உனக்கு அது பொறுக்கலையா ? ’

“ ப்ச் ”

‘ ரொம்ப சலிச்சுக்காத… நான் சொல்றத கொஞ்சமாச்சும் காது கொடுத்து கேளு டா.. ’

……

அவனது அமைதியை சரியென ஏற்றுக் கொண்ட மனசாட்சி

‘ நீ பண்றது தப்பு டா.. போய் தூரிகா அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேளு.. லவ்னு சொல்றது தானே கஷ்டம்.. நீ மாப்பிள்ளையா போய் நில்லு  ’

“ ம்ம்.. அப்புறம் ” என கொட்டாவி விட்டவனைப் பார்த்து அது கொதித்துத்தான் போனது.

‘ ரொம்ப பண்றடா…’

“ பின்ன என்ன ? நடக்குற விஷயம் எதாச்சும் சொல்றியா? தூரி கிட்ட போய் காதலை சொல்லுன்னு சொன்னா கூட ஒரு லாஜிக் இருக்கு.. அத விட்டு என்னை பையனா நினைக்குறேன்னு சொல்லாம சொல்றவங்க கிட்ட போய்… போ தூக்கத்துல உளராம போய் தூங்கு.. ” என இலவச அட்வைஸ் வேறு.

‘ ஒழிஞ்சி போ.. ’ என ஓடிவிட்டது. பின்னே அதற்கும் வெக்கம்.. மானம்.. ரோஷம்.. ம்ம்ம்.. சுயமரியாதை எல்லாம் இருக்கிறதே !

எல்லாம் சரி! தன்னைப் பற்றி யோசித்தான்.. தன் தோழியும் தலைவியுமான அவளின் பெற்றோரைப் பற்றி யோசித்தான்.. ஆனால் அவள்.. அவளைப் பற்றி அவள் அகம் பற்றி யோசிக்க மறந்து விட்டான்.. யோசித்திருக்க வேண்டுமோ ?

என்ன எது என சொல்லாமல் அவளைத் தவிர்த்து தவிக்க விடுவதால் அவன் அடையும் வேதனை வலிகளைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டான்.. நிச்சயம் அவன் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் அவள் நீதிமன்றத்தில்..!

 

மேகம் கடக்கும்..           

 

           

 

 

         

                             

 

                     

 

Advertisement