Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 18

 

“ கண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தெம்பா படி கண்ணு.. படிப்பு படிப்புன்னு அதையே பார்த்துட்டு சாப்பிடாம இருக்காத.. ஊருக்கு வரணும்னா ஒரு கடுதாசி போடு நானும் ஐயாவும் கிளம்பி வந்து கூட்டிட்டு போறோம்.. நீ மட்டும் தனியா கிளம்பி வந்திராத ” என்ற அன்னையிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் பைரவி.

“ பார்த்து இருந்துக்க கண்ணு ” மாரியும் அவளது தலையை ஆதுரமாக தடவிய படி கூறினார் அவரது குரலும் சற்றே பிசிறடித்தது.

இருக்காதா ஏறக்குறைய இருபது வருடங்களாக கண்ணுக்குள் கண்ணாக பொத்தி பாதுகாத்து வளர்த்த மகளை முதன்முறையாக பிரியப் போகிறார்.. ஆம் பைரவி அவருக்கு மகளைப் போல் தான்.. அவருக்குத் திருமணமான ஓராண்டிற்குள்ளாகவே அவரது மனைவி பிள்ளைப் பேற்றின் போது இப்பூவுலகை நீத்து விட.. அதிலிருந்து அவர் வேறு வாழ்க்கைப்பற்றி நினைத்தும் பார்க்கவில்லை. அவரது ஒட்டுமொத்த பாசத்தையும் கொட்டியது பைரவியின் மேல் தான்.. அவர் பெறாத பிள்ளை அவள். தனது தங்கைக்காகவும் தங்கையின் மகளுக்காகவும் அவர்களது நல்வாழ்விற்காக மட்டுமே இன்றுவரை வாழ்ந்து வருகிறார் மாரி.

சற்றே கலங்கித்தான் போனார் பைரவி தான் சமாளித்துக் கொண்டிருந்தாள்..

அவளுமே நினைவு தெரிந்த நாளிலிருந்து தாயையும் மாமாவையும் பிரிந்து இருந்ததில்லை ஆனால் அதெல்லாம் இப்பொழுது அவளுக்கு பெரிதாக இருக்கவில்லை மனம் முழுக்க ஆசைப்பட்டது கிடைத்த மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..

அந்த நிமிடம் அது மட்டுமே அவள் கருத்தில்.. அதனால்தான் என்னவோ அழும் அன்னையை சமாதானம் செய்ய முடிந்தது.

இவர்களது பாசப் போராட்டம் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க.. அதுல் அவர்களையே பார்த்திருக்க..

“ நண்பா எனக்கு ஒரு சந்தேகம் ” அருகிலிருந்தவன் காதில் மெல்ல முணுமுணுத்தான் கதிர்.

என்னவோ என்பது போல் அத்து அவனைப் பார்க்க..

“ பைரவி இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கா ” என்றவனை ஒரு மார்க்கமாக இவன் பார்த்து வைக்க..

“ நான் உன் கூடவே தான் இருப்பேன் என்னை பொறுமையா பார்த்துக்கலாம்.. இப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ” என்றான்

“ ஏன் உனக்கு தெரியாதா.. ”

“ அங்க தான் என் டவுட்.. அவ காலேஜ் படிக்க தானே இங்க வந்து இருக்கா.. இவங்க ஏதோ கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுல விட்டுட்டு போற எபெக்ட் கொடுக்கிறாங்களே ” என்றவனை ஏண்டா இப்படி என பார்த்தான் அதுல்.

அதற்குள் மாரி இவர்களிடம் வர பேச்சு தடைபட்டது.

“ தம்பி நீங்க இருக்கீங்கன்ற தைரியத்தில் தான் நாங்க பைரவியை விட்டுட்டு போறம்.. உங்களுக்கு எப்ப வசதியோ ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்க.. துரை கிட்டயும் சொல்லி இருக்கேன் அவனும் பார்த்துக்கிறதா சொல்லி இருக்கான் நானும் அப்பப்போ வரேன் ” என்ற அவருக்கு அப்பொழுது கூட மனதில் இருந்த தயக்கம் முழுவதுமாய் மறையவில்லை என்பதை உணர்ந்தே இருந்தான் அத்து.

ஆம் மாரி பைரவியின் கல்லூரி படிப்பிற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். அன்று தாத்தா அழைத்து வரச்சொல்லி பைரவியின் படிப்பு குறித்து அவரது அபிப்பிராயம் சொன்னவுடன் இவர் ஒப்புக்கொண்டு விட்டார். திருமண பேச்சும் தடைப்பட்டிருக்க பைரவியின் வாழ்வை தன் பிடிவாதத்தால் கேள்விக்குறி ஆக்கிவிட்டோமோ என்று அவர் மனம் வேதனையில் இருக்க.. அந்த சமயத்தில் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்ற மகளது விருப்பத்தை அறிந்தவராதலால் உடனே சரி என்றுவிட்டார். ஆனால் அதற்கடுத்து அத்து கூறியதை தான் ஏற்கவில்லை..

அத்து அவளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடுவது குறித்து பேச இவர் ஒரேயடியாக மறுத்துவிட்டார் அத்தனை தொலைவில் பெண்ணை விட்டுவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது என்று விட்டார்.

ஒன்றரை மணி நேர பொள்ளாச்சி கல்லூரிக்கு யோசித்தவர் இதற்கா சரி எனப் போகிறார் ஆனால் அத்து அதற்கெல்லாம் தயாராகத் தான் வந்திருந்தான்

“ ஐயா.. அங்க பைரவிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. காலேஜ்லயே விடுதி இருக்கு அதனால தங்கறதுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. அப்புறம் அன்னிக்கு என்கூட வந்தானே என் ப்ரெண்ட் கதிர்.. அவனோட மனைவி நிலா.. அவங்க தங்கச்சி கூட அங்கதான் சேர்ந்திருக்கா.. நம்ம பைரவி படிக்கப் போற படிப்புதான்.. எதுனாலும் அவ கூட இருந்து பாத்துக்குவா.. அப்புறம் நாங்க எல்லோரும் இருக்கோம் நாங்க பார்த்துக்கிறோம். எல்லாத்தையும் விட பைரவியோட மாமா அத்தை அங்கதானே இருக்காங்க ? வேணும்னா அவ அவங்க கூட இருக்கட்டுமே !! ” என்றதும்

“ அதெல்லாம் சரியா வராது தம்பி.. வயசு பொண்ணை அடுத்தவங்க வீட்டுல விடுற பழக்கம் எல்லாம் இல்லை ” என்று விட்டார்.

இதுல இப்படி ஒன்னு இருக்கோ என்று தான் நினைத்தான்.. பின்னே அவன் கடைசியாக சொன்னதை வைத்து தான் அவரை எளிதாக ஒத்துக்கொள்ள வைத்து விடலாம் என்ற நம்பிக்கை வைத்திருந்தான். இவர் இப்படிச் சொன்னவுடன் அத்து தாத்தாவை சரணடைய.. அவர் அவர் பங்கிற்கு எடுத்துச் சொல்லி ஒரு வழியாக இப்போது பைரவி அவள் கனவை நனவாக்க வந்துவிட்டாள்.

ஆறுதல் சொல்லி மாரியையும் பைரவியின் அன்னை லட்சுமியையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு கதிரும் மிதுனும் கிளம்ப.. நிலாவும் அதுலும் பைரவியுடன் விடுதிக்கு வந்தனர்.

“ பையு என் தங்கச்சி கிட்ட உன்னை பத்தி சொல்லி இருக்கேன்.. ரெண்டு பேரும் பார்த்து இருந்துக்கோங்க.. அவ உன்னைவிட சின்ன பொண்ணுதான் ஆனா பெரிய மனுஷி மாறி பேசுவா.. நாளைக்கு பார்க்கையில உனக்கே தெரியும். ஆனா நீ செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான் ” என்ற நிலாவை கேள்வியாக பார்த்தவளிடம்

“ அவளுக்கு பேச சான்ஸ் கொடுத்திடாத அப்புறம் உன் காதுல ரத்தம் வந்தால் கூட நிறுத்த மாட்டா.. அதனால அவளை பேசவிடாம நீயே பேசிடு ” என்றவளிடம் சிறு புன்னகையை உதிர்த்தவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

மாமா அம்மா இருந்தவரை அவளுக்கு எதுவும் தெரியவில்லை ஆனால் அவர்களை விட்டு வந்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை எப்போதடா அவர்களை மீண்டும் பார்ப்போம் என்று இருந்தது. அதுவரை எட்டிப் பார்க்காத அழுகை கூட எட்டிப் பார்த்தது.

அவளது முகம் கண்டு அகம் உணர்ந்தவன் நிலாவிடம் கண்காட்ட.. அவள் தான் பார்த்துக்கொள்வதாக அத்துவுக்கு கண் அசைத்தாள்.

“ பையு.. இங்க நாங்க எல்லாரும் உன்கூட தானே இருக்கோம் அப்புறம் என்ன ? என் தங்கச்சி சூர்யா.. உன்கூடவே இருப்பா.. வார வாரம் நீ எங்க வீட்டுக்கு வந்திடு.. நாலு வாரம் ஒரு தரம் ஊருக்கு போயிட்டு வருவியாம். மத்த நேரமெல்லாம் உனக்கு படிக்கவே சரியாய் இருக்கும் நீ அதுக்காக தானே இவ்வளவு நாள் காத்திருந்த !! இப்ப அழுதா எப்படி ” என பைரவியை தன் மேல் சாய்த்துக் கொண்டாள் நிலா.

ஏனோ பைரவியை அத்தனை பிடித்துப்போனது நிலாவிற்கு. அவள் தங்கை சூர்யா எப்படி உரிமையாக இருப்பாளோ அது போலவே இவள் நிலாவிடம் இருப்பது கண்டு வியப்பே..

“ இல்லக்கா இதுவரை நான் மாமா அம்மாவை விட்டு இருந்ததே இல்லையா.. அதான்.. சரி ஆகிடும்.. ஆகிடுவேன்.. சீக்கிரமே ” என கண்களை துடைத்துக் கொண்டவளை தட்டிக் கொடுத்தாள் நிலா.

நேரமாவதை உணர்ந்து “ நிலா கிளம்பலாமா ” என்றான்.

அதுக்குள்ளயா என பைரவி அவனை பார்த்தாள்.. அவனுக்கு சற்று நேரம் இருந்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என்றுதான் இருந்தது ஆனால் அவனுக்கு வேலை காத்திருந்தது.

“ வரேன் பைரவி ” என நிலாவும் “ ஞாயிற்றுக்கிழமை வந்து பார்க்கிறோம் ” என அதுலும் விடை பெற்றனர்.

 

***

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம்.. தழைத்தோங்கும் தமிழ்ப் பல்கலைகழகம்.. பல ஏக்கர் பரப்பளவில் தமிழ் அன்னைக்கு தலை வணங்கும் விதமாக கம்பீரமாய் எழுந்து நின்றிருந்தது.

ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூத்துக் குலுங்கும் மரங்கள் அரண்களாய் அமைந்திருக்க கோட்டையை போன்ற காட்சி..

அதற்கு மேலும் அழகும் பெருமையும் சேர்க்கும் விதமாக ‘தமிழ்நாடு’ எழுத்துவடிவில் கட்டிடங்கள்..

நேற்றைய மனநிலையில் இதையெல்லாம் கவனிக்க மனம் இருக்கவில்லை அவளுக்கு இன்று அவனது அகமும் புறமும் அங்கிருக்கும் மலர்களைப் போல் புத்துணர்வை பெற்றிருக்க.. ஒவ்வொன்றும் அத்தனை அழகாய்.. அவள் முன்பு.

அடுத்ததாக அவள் விழிகளில் அய்யன் வள்ளுவர்.. கரங்கள் இரண்டும் அனிச்சையாய் குவிய.. விழி மூடி பிரார்த்தனை செய்தாள்.

அவளைப் பொறுத்தவரை அவர்தான் தமிழ்க் கடவுள். அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் இலக்கணம் அமைத்து வழிகாட்டிய கடவுள்.. குரு.. அதனால் அவளுடைய முதல் குரு அய்யனே.. அவளுடைய குரு வணக்கமும் அவருக்கே.

விழி மூடி நின்றவள் அருகே கேட்ட நகைப்பில் விழி திறந்தாள். இள நீல டாப்ஸ் அடர் நீல நிற ஜீன்ஸ் சகிதம் நின்றிருந்தாள் சூர்யா.. நிலாவின் தங்கை..

பார்த்ததுமே பைரவிக்குத் தெரிந்து விட்டது அவள் நிலாவின் தங்கையாகத்தான் இருப்பாள் என்று.. நிலாவின் முக ஜாடையில் தான் இருந்தாள் புதியவள்..

ஒரு புன்னகையுடன் “ சூர்யா ?? ” என்றாள்.

அவளும் புன்னகைத்து “ எஸ் சூர்யாவே தான்.. பை த வே நீங்கதானே எங்க அக்கா சொன்ன அந்த கிராமத்துப் பைங்கிளி ?? சாரி உங்க பேர் மறந்துட்டேன்.. ஆமா உங்க பேர் என்ன ? ” என்றவள் அவள் பதில் சொல்வதற்கு இடமளிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க.. நிலாக்கா சொன்னது சரிதான் போலயே என நினைத்தவள் அவள் முடிக்கட்டும் என காத்திருந்தாள் பைரவி.

ஒருவழியாக முடித்தவள் “ நீங்க இன்னும் பேரே சொல்லலை ” என்றாளே பார்க்கலாம்..

“ நீ எங்க சொல்ல விட்ட ” என்றவள் புன்னகையுடன் “ பைரவி.. ” என்றாள்.

“ ஆங்.. பைரவி.. எனக்கு ஒரு பிரச்சனை இருக்குங்க.. பெயரை ஞாபகம் வெச்சுக்க முடியாது. என்னோட பேரு என்னன்னு கேட்டால் கூட சொல்லமுடியாமல் என் மூளை மக்கர் செய்யும்னா பார்த்துக்கங்களேன்.. சரி அதை விடுங்க முதல்நாள் காலேஜ்ல எல்லாரும் சாமி கும்பிடு வாங்க ஓகே நீங்க ஏன் திருவள்ளுவரை கும்பிட்டுட்டு இருக்கீங்க ?? கேம்பஸ்குள்ள வந்ததும் இந்தக் காட்சிதான் என் கண்ணுல விழுந்துச்சு யாருடா இதுன்னு பக்கத்துல வந்தா நீங்க.. அது என்ன புதுசா வள்ளுவரை.. ”

“ ஏன் வள்ளுவரை கும்பிட்டா என்ன !! குரு வணக்கம் கேள்விப்பட்டதில்லையா ?? அந்த மாதிரிதான் இதுவும். சொல்லப்போனா இவர்தான் இந்த உலகத்திற்கு முதல் ஆசான் அப்போ நியாயமா அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துதானே ஆகணும்.. ம்ம்..? ”  என்றதும் வேகமாக மேலும் கீழும் தலை அசைத்தவள் தானும் வணக்கம் வைத்தாள்.

“ அப்புறம் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்பேன் ” என்றாள் காரிடாரில் நடந்தவாறே

“ ம்ம் கேளு ”

“ எனக்கு இந்த நீங்க.. வாங்க போட்டு கூப்பிட கஷ்டமா இருக்கு.. கஷ்டமா இருக்குன்னு சொல்வதைவிட அப்படி கூப்பிட்டா என்னால உங்ககிட்ட ப்ரீயா பழக முடியலை.. நீங்களும் எனக்கு நிலா மாதிரி தானே !! அப்போ நீ நான்னு கூப்பிடவா ?? ” என்றவளை ரொம்ப பிடித்துப் போனது பைரவிக்கு.

புது இடம் எப்படி இருக்குமோ ? தான் அதற்கு பொருந்துவோமா ? தனக்கு சரியான துணை கிடைக்குமா ? சூர்யா வேறு தன்னை விட சிறு பெண்ணாக இருக்கிறாளே கல்லூரி நாட்கள் எப்படி இருக்குமோ ? என மனதை அரித்துக்கொண்டிருந்த கவலைகளை எல்லாம் சட்டென தூக்கி போட வைத்துவிட்டாள் சூர்யா..

“ நீ என்கிட்ட எப்படி வேணும்னாலும் இருந்துக்கோ.. எனக்கு நிலாக்கா அக்கான்னா நீயும் என் தங்கச்சி தான்.. இந்த அக்காவை எப்படி வேணுனாலும் உன் இஷ்டத்துக்கு கூப்டுக்கோ.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ” என்றவளிடம்..

“ சூப்பர் பைரவி.. இதை.. இதை.. இதைத்தான் நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன் ” என கட்டிக்கொண்டாள்

“ ஹேய் ” என பைரவி திடுக்கிட்டாள்..

“ நான் இப்படித்தான் ரொம்ப சந்தோஷமா இருந்தா கட்டிப்பிடிப்பேன்.. முத்தம் கொடுப்பேன்.. என்னோட சந்தோஷத்தை ஜஸ்ட் சிம்பிளா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன் அவ்வளவுதான் ” என்றவள் கோபம் வந்தால் கடித்துவைப்பேன் என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. நிலா பலமுறை கடிவாங்கியுள்ளாள் ஆனால் பைரவிக்கு அந்த நிலை வராதென்று நினைத்து கூறாமல் இருந்துவிட்டாள் போலும்.

“ ம்ம்.. ” என்றபடியே நடந்தவளுக்கு எல்லோரும் அவர்களைப் பார்ப்பது போல ஒரு தோற்றம்.

அதை சூர்யாவிடம் கேட்டுவிட்டாள் “ ஏன் சூர்யா எல்லோரும் நம்மளையே பார்க்கிற மாதிரி இல்ல.. ”

“ இல்ல.. ”

“ இல்லையா !! ” என்றவளுக்கு பார்ப்பதாகவே தோன்றியது அதற்குள் சூர்யா

“ நம்மள பார்க்கல.. உங்களை பார்க்கிறாங்க.. உங்களை மட்டும் தான் பார்க்குறாங்க ” என்றாள் கண் சிமிட்டியவாறு.

“ என்னையா !! ” என்றவள் குழப்பமாக அவள் முகம் பார்க்க..

“ ஐயோ பைரவி.. அங்க பாரு.. எல்லாம் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி சல்வார் ஜீன்ஸ் குர்தின்னு இருக்காங்க.. நீ மட்டும்தான் இன்னும் செவென்டீஸ் ஹீரோயின் மாதிரி தாவணியில் இருக்க.. அதான் யாருடா இதுன்னு எல்லாரும் கொஞ்சம் ஆச்சரியமா பார்க்குறாங்க ” என்றாள்.

“ ஓஹ்.. ” என கேட்டு மட்டும் கொண்டாள் மற்றபடி அவளுக்கு அவளை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை அவள் அவளாக இருக்க மட்டுமே விரும்பினாள்.. யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.

இருவரும் அவர்களது வகுப்பறையை தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தனர்

“ ஏன் சூர்யா.. இங்க இலக்கியம் இந்த வருஷம் தானே கொண்டு வந்திருக்காங்க ? ”

“ ம்ம்.. ஆமா. ரெகுலர் இந்த வருஷம் தான் கொண்டு வந்து இருக்காங்க ஆனா டிஸ்டன்ஸ்ல இருக்கு பைரவி ”

இவர்களையும் சேர்த்து அங்கு இருபத்தைந்து பேர்தான் இருந்தனர். ஆனால் அத்தனை பேரும் தமிழின் பால் தீராத காதல் கொண்ட காதலர்களாகத்தான் இருந்தார்கள்.

சற்று நேரத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளே நுழைந்தார் அகத்தியன்.. ஓலைச்சுவடி துறை சார்ந்த பேராசிரியர். இவருடைய சிறப்பு பிறமொழி கலவாது கன்னித் தமிழை தெளிவாக பேசுதல்..

முன்னும் பின்னும் கேலி பேசும் வேலையற்ற வெட்டிக் கூட்டங்களை எல்லாம் தவிர்த்து தமிழை வளரச் செய்து வரும் உண்மையான தமிழன்.

தமிழ் வாழ்க ! தமிழ் வளர்க ! என வெறுமனே பதாதைகளைத் தாங்கி நிற்பதால் மட்டும் நம்மொழி வாழ்ந்துவிடுமா ? இல்லை வளர்ந்துதான் விடுமா ? வாழவைக்கத் தமிழறின்றி யாரால் முடியும் என்பதை உணர்ந்து செயலாற்றும் தமிழன்..

அன்றைய தினம் அவருடன் இனிமையாய் கழிந்தது.. அங்குள்ள ஒவ்வொரு பிரிவையும் அறிமுகப்படுத்தியதிலேயே நேரம் சென்றுவிட அனைவரும் விடைபெற்று கிளம்ப

“ பைரவி இங்கே வா ” என அழைத்தார் அகத்தியன்.

“ ம்ம் செல் பைரவி.. செல்.. ” என சூர்யா சிரிப்புடன் கூட “ ப்ச்.. பேசாம இரு ” என அவளை அடக்கி அவரிடம் வந்தாள்.

“ ஐயா.. ” அவரிடம் பேசும்போது கட்டாயம் தமிழில்தான் பேச வேண்டும்.

“ உன்னுடைய ஊர் எது ? ”

அவள் கூற..

“ தெரிந்து கொள்ளத்தான்.. உன்னுடை சேவை நம் தமிழுக்குத் தேவையாக இருக்கும் உன்னை தயார் படுத்திக்கொள். இப்பொழுது செல்லலாம் ” என்றார்.

எதுவும் புரியவில்லை எனினும் தலையாட்டி வந்துவிட்டா ள் சூர்யாவிடம்.

உண்மையில் அகத்தியனுக்கு அங்குள்ள அனைவரிலும் பைரவி தனியாகத்தான் தெரிந்தாள். அவளது தமிழும் அவளைப் போலவே.. நிச்சயம் அவள் தமிழுக்கு தன்னை அர்ப்பணிப்பாள் என்றே தோன்றியது. அதுவுமில்லாமல் ஏற்கனவே அவளை பற்றி கேள்விப்பட்டு இருந்தார்.

“ சரி பைரவி நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம்.. ” என விடை பெற்ற சூர்யா மீண்டும் வந்து நின்றாள்

“ என்ன சூர்யா ”

“ உனக்கு இங்க எல்லாம் ஓகே தான.. ஐ மீன் சாப்பாடு தண்ணி எல்லாம் ஓகே தான ? சாப்பாடு ஏதும் நல்லா இல்லைனா சொல்லு காலையில மதியத்துக்கு உனக்கு நான் சேர்த்து எடுத்துகிட்டு வரேன் ”

பைரவிக்கு சூர்யாவின் இந்த கேள்வியில் அகமும் முகமும் சேர்ந்து மலர.. இதுதான் நட்பு.. இதைத் தவிர இங்கு வேறு எதுவும் பெரிதல்ல என்றே தோன்றியது..

“ இங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல சூர்யா.. ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு அதனால அத நினைச்சு எந்த கவலையும் வேண்டாம் சரியா.. நிலா அக்காகிட்டயும் மிதுனோட அண்ணா கிட்டயும் சொல்லிடு ” என்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் தோழி

“ என்ன பார்க்கிற நீ வீட்டுக்கு போனதும் உன்கிட்ட விசாரிப்பாங்க பாரு ” என்றாள் புன்னகையுடன்

சூர்யாவிற்கு விடைகொடுத்து விடுதிக்கு வந்தவள் நீண்ட நாட்களுக்கு பிறகு காகிதமும் பேனாவுமாக அமர்ந்தாள்..

ஏனோ இடைப்பட்ட காலத்தில் இருந்த சஞ்சலத்தால் அவளால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை இன்று மனம் நிறைவாகவும் மகிழ்வாகவும் இருக்க அவளது கதையை தொடர்ந்தாள்.

 

மேகம் கடக்கும்…..

 

Advertisement