Advertisement

  

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 16

 

“ தாத்தா.. ”

தாத்தாவிடம் கேட்போமா வேண்டாமா என தனக்குள்ளேயே பலமுறை யோசித்துவிட்டு சரி ஆனது ஆகட்டும் கேட்டேவிடலாம் என முடிவெடுத்து அவரின் முன்பு நின்றிருந்தாள் பைரவி.

பின்பக்கத் தோட்டத்தில் வேலை ஆட்கள் வேலை பார்த்து இருக்க அங்கே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சின்னு தாத்தா.

இவள் அழைத்திட திரும்பியவர் “ என்னம்மா ” என்றார்..

“ தாத்தா அது.. ” என இவள் ஆரம்பிக்கும் முன்னரே அவளுடைய மாமா மாரி “ ஐயா ” என்றபடி சின்னு தாத்தாவின் அருகில் வந்திருந்தார்.

பைரவியைப் பார்த்தவர்.. “ கண்ணு நீயும் இங்க தான் இருக்கியா ? எனக்கு கொஞ்சம் வெந்தண்ணி கொண்டாயேன் ” என்றதுமே அவளுக்கு புரிந்து போனது அவர் தாத்தாவுடன் பேச வந்த விஷயம் என்னவாக இருக்கும் என.

“ கொண்டு வரேனுங்க மாமா.. ” என்றவள் வேகமாக தாத்தாவின் வீட்டுக்குள் சென்று ஏற்கனவே கொதித்திறக்கி வைத்திருந்த வெந்நீரை ஒரு சொம்பில் எடுத்து வந்தாள்.

“ ஐயா வைகாசியில் கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு இருக்கோம் ” என மாரி கூறுவதைக் கேட்டு இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டதைப் போல இருந்தது பைரவிக்கு.

வைகாசியில் திருமணம் என்றால் இன்னும் ஒரு மாதம் கூட இல்லையே !! மாமாவிடம் பேசி கல்லூரியில் சேர்க்க வழிவகை செய்வதாக சொன்ன அத்துவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.. பொங்கலுக்கு வந்துவிட்டு போனவன் தான் அதன்பின் ஊர்ப்பக்கம் வரவேயில்லை.. இவளும் டவுனுக்கு சென்றிருந்தபோது தாத்தாவிடம் இருந்து வாங்கிய முகவரியை வைத்து ஒரு கடிதமும் அனுப்பி விட்டாள்.. அது அவனுக்கு சென்று சேர்ந்ததோ என்னவோ இதுவரை எந்த பதிலும் இல்லை. அடுத்து என்ன செய்வதென்று இவளுக்கும் எதுவும் தோன்றவில்லை.

இத்தனை நாட்களாக கல்யாண விஷயத்தில் அவளது மாமா அமைதியாக இருந்ததே பெரிது என அவளுக்குத் தெரியும்.. இனி அவரை என்ன சொல்லித் தடுப்பது எனவும் தெரியவில்லை.. இவள் சொல்லி அவர் கேட்பாரா என்றால் அதுவும் இல்லை.. அவளுடைய இயலாமை எரிச்சல் குழப்பம் எல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கோபமாய் உருவெடுத்துத் திரும்பியதோ அத்துவின் மேல்.

அவளா கேட்டால் படிக்க வேண்டுமென !! அவனாகத்தானே ஆரம்பித்தான். அவளுடைய அகக் கிணற்றுக்குள் புதைந்து போன அவளுடைய ஆசைகளை மீண்டும் கிளறி அதற்கு உயிரூட்டி உரமூட்டி விருட்சமாக்கி விட்டு போய்விட்டான்.. எத்தனை கனவுகளோடு இந்த மூன்று மாதத்தையும் வலம் வந்தாள் ஆனால் இப்போது அனைத்துமே புகையினுள் புதைந்து விட்டன போன்றல்லவா ஆகிவிட்டது.

சொம்பிலிருந்த வெந்நீர் அதன் இருப்பை உணர்த்த நடப்பிற்கு வந்தவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் மாமாவிடம் சென்று கொடுத்தாள். அவர் அங்கிருந்து கிளம்பியதும் இவள் ஓய்ந்து போய் அப்படியே அமர்ந்துவிட்டாள். தாத்தாவிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ அம்மாடி ” என ஆரம்பித்ததுமே

“ மாமா சொன்னதை நானும் கேட்டேன் தாத்தா ”

அவளின் கலங்கிய விழிகள் கண்டு “ நீ மேல படிக்கிற விஷயம் பத்தி அவன் கிட்ட பேசவே இல்லையா ? ” என தாத்தா வினவ

இடவலமாக தலையசைத்து மறுத்தவள் “ உங்க பேரன் தான் அவரை பேசுறதா சொன்னாரு தாத்தா ”

“ இப்ப என்னம்மா பண்ணலாம் ”

அத்துவின் மேல் அத்தனை நம்பிக்கை அவருக்கு.. ஆனால் இப்பொழுது வரை அவன் தொடர்பு கொள்ளாமல் இவள் இங்கு தவித்து கண் கலங்கி நிற்பது கண்டு அதிகம் வருத்தம். வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவளிடம்

“ இன்னொருமுறை கடுதாசி போட்டு பார்க்கலாமா ” என்று தாத்தா கேட்க.. அவளுக்கும் அந்த எண்ணம் தான். அவளது இலட்சியத்திற்கான போராட்டத்தில் இறுதி கட்ட முயற்சி.. எடுத்து தான் பார்ப்போமே !! என்று என்று முடிவெடுத்தவள் மடமடவென ஒரு கடிதத்தை எழுதினாள்.

இதுவரை எப்படி எப்படியோ முயற்சி எடுத்தவள் ஒரு முறை அவளது மாமாவிடம் தனது முடிவு குறித்து உறுதியாய் பேசி இருக்கலாம்.. உறுதி படைத்த நெஞ்சத்தினால் செய்து முடிக்கப்படாத செயல் உண்டா !! ஆனால் அதை அறியாமலேயே உணராமலேயே இருந்துவிட்டாள்.

ஆயிற்று கடிதம் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆயிற்று அத்துவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை மறுபடியும் மனம் வலிக்க வலிக்க ஒரு ஏமாற்றம். ஆனால் இந்த முறை கலங்கித் தவித்தெல்லாம் போகவில்லை.. மனம் தெளிவாக இருந்து.

“ கிட்டாதாயின் வெட்டன மற ” அடிக்கடி அவளுக்குள் சொல்லிக் கொள்ளும் மந்திரம். அப்படித்தானே இருந்தாள் அத்து வரும் வரை. வந்தவன் அவளிடம் இருந்த இந்த அஸ்திரத்தையே அபகரித்துக் கொண்டல்லவா சென்று விட்டான்..

இப்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.. தனக்குள்ளே அனைத்து ஆசைகளையும் கனவுகளையும் புதைத்துவிட்டு சின்னு தாத்தாவிடம் கூட சொல்லிவிட்டாள் “ தாத்தா.. இதை இப்படியே விட்டுடலாம்.. எனக்கு கிடைக்கணும்னு இருக்கறது கிடைக்கும்.. கிடைக்கக் கூடாதுன்னு இருக்கறது நாம தலைகீழா நின்னாலும் கிடைக்காது.. என்னோட படிப்பு கூட அந்த மாதிரிதான் ”

அதன்பின் தாத்தாவும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை ஆனால் அவருக்கு தன் பேரனின் மீது சிறு வருத்தம்.. வாக்குக் கொடுத்துவிட்டு அதை மறந்து விட்டானே என்று.

அதிகாலையில் காதருகே கேட்ட ‘ கொக்கரக்கோ ’ என்ற சத்தத்தில் போர்வையை விலக்கி எழுந்தமர்ந்தவள் அவள் அருகே நின்று கொண்டிருந்த சேவலின் கொண்டையைப் பிடித்து ஆட்டி “ நீ மட்டும் எப்படிடா கரெக்ட் டைமுக்கு எழுந்தரிக்குற ” எனக் கேட்டாள்.. அதற்கு என்ன புரிந்ததோ அதன் மொழியிலேயே அவளுக்கு பதில் கொடுக்க.. படுக்கையை மடித்து ஓரமாக வைத்துவிட்டு வாசல் பெருக்கக் கிளம்பினாள்.

அவள் வீட்டின் முன்பும் தாத்தா வீட்டின் முன்பும் பெருக்கி சாணம் தெளித்து கோலம் போட்டு முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.. அடுத்ததாக கொட்டகைக்குச் சென்று அவள் வரவுக்காகக் காத்திருந்த மாடுகளுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு பால் கறக்க ஆரம்பித்தாள்.

அன்று சனிக்கிழமையாய் இருக்க.. தாத்தா கிருஷ்ணனுக்கு பாலபிஷேகம் செய்வது வழக்கம். கறந்த பாலை எடுத்துக்கொண்டு பெரிய வீட்டிற்குச் சென்றாள்.

காலையில் வேலையாய் இருக்கும்போது ஸ்லோகங்கள் சொல்வது வழக்கம்.. அதே மற்ற நேரம் என்றால் ஏதாவது திரைப்பட பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். இப்பொழுது கண்ணன் பாட்டு ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றவள் தூரத்தில் அமர்ந்திருந்தவனை கவனிக்கவில்லை.

“ இவ நம்மள கவனிச்சாத்தானே ஆச்சரியப் படணும் ” என்றவன் எழுந்து உள்ளே சென்றான். தாத்தாவிற்காக காபி தயாரித்து எடுத்து நிமிர்ந்தவள் வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு தன்னையே கடிந்து கொண்டாள்.

கடிதம் அனுப்பிய பிறகு சில நாட்கள் இப்படித்தான் அவன் வருவான் வருவான் என எதிர்பார்த்து சில சமயங்களில் அவன் வந்து நின்றதாய்க் கூட கண்டிருக்கிறாள். எல்லாம் அவளுடைய மன பிராந்தி.. இல்லை இல்லை மன பிரமை..

இப்போதும் அதுபோல என நினைத்தவள் “ வர வர நீ சரியில்ல பையு ” என தன்னையே திட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

எல்லாம் மாயா மாயா என்று கையில் சாயா உடன் வந்தவள் அங்கு நின்றிருந்தவன் புகை என நினைத்தாளோ அவனுள் கலந்து வெளியேறிவிடும் எண்ணத்தில் முன்னேறி வர.. வந்தவளைக் கண்டு அவன் சுதாரிக்கும் முன் அவன் மேல் கையில் இருந்ததை கொட்டி வைத்திருந்தாள்.

அவளுக்கு எப்போதுமே தேநீர் கொதிக்கக் கொதிக்க இருக்க வேண்டும்.. அவ்வாறே இருந்து அத்துவை அலற வைத்திருந்தது அது. கடைசி நேரத்தில் கொஞ்சம் நகர்ந்தவன் அனைத்தையும் காலில் வாங்கிக் கொண்டிருந்தான். இல்லையெனில் நெஞ்சு முடி பொசுங்கியிருக்கும்..

“ ஷ்ஷ்ஆ ” என்றதும் பைரவி அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள்..

அப்படியே தரையிலேயே அமர்ந்தவன் “ பார்த்துட்டு இருக்காமல் கொஞ்சம் உதவி பண்ணலாம் இல்ல ”

அவள் அப்போதும் அசையாத நிற்பது கண்டு கோபம் தான்.. ஆனால் தன் வீட்டாரிடமே கோபத்தைக் காட்டாதவன் இவளிடம் காட்டுவானா என்ன..

எரிச்சலில் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தவன் அவள் நீர் எடுத்து வந்ததும் காலை அதனுள் வைத்தான். ஒரு பத்து நிமிடம் கழித்து எடுக்கவும் எரிச்சல் ஓரளவிற்கு மட்டுப்பட்டிருந்தது.

“ ம்ம்.. இப்ப பரவாயில்லை ” என்றவன் அருகில் இருந்தவளின் முகம் காண.. குற்ற உணர்வில் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

“ ஏய் பைரவி என்ன இது !! இதுக்குப் போய் கண்ணை கசக்கிட்டு உட்கார்ந்து இருக்க.. நீ வேணும்னு பண்ணலயே விடு ” என அவளை சமாதானப்படுத்த.. கொஞ்சம் தெளிந்தவள்,

“ நான் வேணும்னே பண்ணலதான்.. சரியாய் பார்க்காம வந்துட்டேன். ஆனா நீங்க பார்த்துட்டுதானே இருந்தீங்க வழிவிட்டு நிக்க வேண்டியதுதானே !!

காலங்காத்தால கால்ல காப்பிய வாங்கிட்டு நிக்கவா அங்கிருந்து கிளம்பி வந்தீங்க ? ” என பொரிந்து தள்ளிவிட்டு கீழே சிந்தியதை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

அத்து எதிர் பார்த்தது என்னவோ சாரியைத் தான்.. நிச்சயமாக இந்த சரவெடியை இல்லை..

‘ இப்ப எதுக்கு இந்த பொண்ணு இந்த பேச்சு பேசுது.. நான் பேச வேண்டியதை எல்லாம் அவ பேசிட்டு போறா ’ என நினைத்தவன் அமைதியாக எழுந்து வெளியே வந்து உட்கார்ந்தான். அவன் அப்படி எழுந்து போனது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அமைதியாக வேலையைத் தொடர்ந்தாள்.

காலை அவளைப் பார்த்ததுதான் அதன் பிறகு அவன் கண்ணிலேயே படவில்லை.. எப்படியும் மாலை நேரம் கதை படிக்க வருவாளென்று காத்திருந்தான். அப்பொழுதும் வரவே இல்லை..

எழுந்து மேல் மாடம் சென்றவன் ஒரு சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்து தோட்டத்தைப் பார்க்கலானான்.. தூரத்தில் கொய்யா மரத்தடியில் அமர்ந்திருந்தாள். விருவிருவென இறங்கியவன் அவன் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்ததை எடுத்துக் கொண்டு அவளிடம் விரைந்தான்.

இவன் அருகே நெருங்க நெருங்க அவள் விழிகளைத் துடைப்பதுமாய் படிப்பதுமாய் இருந்தாள்..

கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருக்க அவள் தாவணி கொண்டு துடைக்க ஆரம்பித்தாள்..

‘ இப்போ என்னனு தெரியலயே ’ என இவன் பதைபதைத்து வந்து பார்த்தான். பொன்னியின் செல்வன் தான் கையில் வைத்திருந்தாள் அவன் வந்ததை கூட அறியாமல் மூழ்கியிருந்தாள்..

“ பைரவி ”

அழைப்பில் நிமிர்ந்தவளைக் கண்டு திகைத்து நின்றான். அழுது அழுது அவள் விழிகள் சிவந்திருக்க.. முகம் முழுவதும் கண்ணீர்த் தடங்கள்.

“ என்ன ஆச்சு எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க ” என்று கேட்டவனுக்கு புத்தகத்தைக் கண்காட்ட.. அவனும் குனிந்து படித்தான்

ஆதித்த கரிகாலனின் கொலைக்களம் !!

அவன் பெரிதும் விரும்பிப் படித்த அவனை அதிகம் பாதித்த ஒரு கதாபாத்திரம் !! அவ்வளவு ஏன் பொன்னியின் செல்வனை விட அவனைக் கவர்ந்த வீராதி வீரன் ஆதித்த கரிகாலன் !! அவன் பெயரை உச்சரிக்கவே உடல் சிலிர்க்கும் அவனுக்கு.. அவனைப்போன்ற வீரபராக்கிரமசாலி அதிக நாள் இந்த பூவுலகை ஆளாமல் போனது துரதிஷ்டமே. அதனை நினைக்கையில் கரிகாலனின் வீரம் காண்கையில் உள்ளம் குமுறத்தான் செய்யும் ஆனாலும் இறைவனின் சித்தம் வேறாக இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்..

“ இதுக்கா இந்த அழுகை ” என்றவனும் அருகில் அமர்ந்து கொண்டான். என்ன என்னவோ சொல்லிப் பார்த்துவிட்டான் அவள் அழுகை நின்றபாடில்லை இறுதியாக அவன் கையில் வைத்திருந்த பிரம்மாஸ்திரத்தை எடுத்தான்.

“ இந்தா இதைப் பாரு ”

அவனை கேள்வியாகப் பார்த்தவளிடம் “ பிரிச்சு பாரு ” எனக் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தவளின் விழிகளில் ஒரே ஒரு மின்னல்.. ஆனால் அடுத்த நொடி அது மறைந்திருந்தது.. அது மட்டுமல்ல அவள் அழுகையும் கூட..

அவள் மூன்று வருடங்களாக எதற்காகப் போராடித் தோற்றுப் போனதாய் எண்ணி அதை மறந்து இருந்தாளோ அதுவே இப்போது அவள் கரங்களில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

இதையே அவன் இரண்டு வாரங்களுக்கு முன் கொணர்ந்து இருந்தால் துள்ளிக் குதித்து இருப்பாள் அவளது கனவு நனவாகும் ஆரவாரத்தில்.. ஆனால் இன்று அவள் பிடித்திருந்த அவளது படிப்பிற்கான விண்ணப்பப் படிவம் வெள்ளை காகிதங்களாக மட்டுமே தெரிந்தது அவளுக்கு.. காரணம் அவள் மட்டுமே அறிவாள் !!

அவளது முகத்தையே பார்த்திருந்த அத்துவிற்கு அவள் அகப் போராட்டம் கூட தெளிவாகத் தெரிந்தது ஆனால் அதற்கான காரணம் தான் பிடிபடவில்லை..

“ பைரவி ” தயங்கியே அழைத்தான்.

விண்ணப்பத்தில் இருந்து பார்வையை விலக்கி அவனை ஏறிட்டாள். எப்பொழுதும் அவளது பார்வையை படிக்கும் இவனால் இம்முறை முயன்றும் முடியவில்லை. எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் எனக் காத்திருந்தான்.

அவளே ஆரம்பித்தாள்..

“ இது இப்போ எனக்குத் தேவைப்படாது.. எனக்காக நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி ” என்றவள் அவன் அருகில் வைத்து விட்டு எழுந்தாள்.

“ இப்போ தேவைப்படாதுன்னா வேற எப்போ தேவைப்படும் ”

“ எப்பயுமே தேவைப்படாது ” நகர முயன்றவளைத் தடுத்தவன்

“ சொல்றதை கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு போ.. போனமுறை வந்தப்போ நீதான் அழுதுகிட்டு உட்கார்ந்திருந்த படிக்க முடியலைன்னு.. இப்போ அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செய்ததுக்கு அப்பறம் தேவையில்லைன்னு சொன்னால் என்ன அர்த்தம் ” என்று அவன் குரலில் அவளது பொறுப்பற்ற பேச்சால் எட்டிப்பார்த்தது கோபம்.

“ என்ன இப்ப உங்களுக்குத் தெளிவா சொல்லணும் ? சொல்றேன் கேட்டுக்கோங்க.. நான் பண்ணின முதல் தப்பு உங்களை நம்பினது.. நீங்க எங்க மாமா கிட்ட பேசறன்னு சொன்னதும் தலையாட்டிட்டு அத்தனை சந்தோஷமா இருந்தேன்  பாருங்க அதுவும் தப்பு தான். நடக்கவே நடக்காது கிடைக்கவே கிடைக்காது தெரிஞ்சும் திரும்ப திரும்ப ஏமாந்து போறேனே அதுவும் தான் தப்பு ” என்றவளைத் தடுத்தவன்

“ நீ இதுவரைக்கும் சொன்னதே புரியல.. ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லு ” என்றவனை முறைத்தவள்..

“ எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. புரியுதா ? ” என்றதும்

‘ என்ன ’ என அதிர்ந்து போய் பேச்சற்று அவளைப் பார்த்தான்..

அவனது அதிர்ந்த தோற்றத்தை அலட்சியம் செய்து திரும்பியவளின் விழிகளில் விழுந்தார் அவளது மாமா.. அவரைக் கண்டதும் கையில் வைத்திருந்த புத்தகத்தை அவனிடம் திணித்து விட்டு ஓட்டம் எடுத்தாள்.

அதிர்ச்சியில் இருந்து மீண்டவன் அவளைக் காணாது தேட.. அவளோ தூரத்தில் அவளது மாமாவிடம் பேசி கொண்டே செல்வது தெரிந்தது. நேரே தாத்தாவிடம் வந்தவன் விஷயம் என்னவென்று கேட்க அவரும் அவனிடம் பைரவியின் கல்யாண விஷயத்தைப் பற்றிக் கூறினார்.

“ இப்ப என்ன தாத்தா பண்ணறது ”

“ மாரி இன்னிக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்கத் தான் ஜோசியரைப் பார்க்கப் போறதா சொல்லி இருந்தான்.. இனி நாம ஏதும் பண்ண முடியாதுப்பா ”

அத்துவிற்குத் தான் ஐயோ என்றிருந்தது. தன்னால்தான் அவளுக்கு இப்படியோ !! தான் முன்னமே அவளுடைய மாமாவிடம் பேசி இருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாமோ !! ப்ச்.. தன்னுடைய பிரச்சனையில் அவளை மறந்து விட்டோமே !! என்று குற்றவுணர்வாகிப் போனது. அவன் மறக்கவில்லை தான் ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அவனால் விரைந்து வரமுடியவில்லை என்பதே உண்மை.

கண்களை மூடி தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் கொஞ்சும் கொலுசொலியில் கண்களைத் திறந்தான். அவள் வீட்டிலிருந்து ஓடி வந்திருப்பாள் போலும். மூச்சு வாங்க நின்றிருந்தாள்.. முகம் முழுக்க புன்னகை.. சற்று நேரத்திற்கு முன் கண்ணீரில் கரைந்திருந்த பெண்ணா இவள் என்று தான் பார்த்திருந்தான்.

“ பைரவி.. என்னாச்சும்மா ? எதுக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வந்து நிக்கிற ” என்ற தாத்தாவிடம்

“ மாமா.. மாமா வந்துட்டாரு தாத்தா.. ” என்றாள் மூச்சுவாங்க.. வார்த்தை வெளிவராமல் மறுக்க.. அதனை உதறி முயன்று கொண்டிருந்தவளைத் தடுத்தவன்

“ மொதல்ல ரிலாக்ஸ் பண்ணு.. அப்புறம் சொல்லுவியாம் ” என்றதும் வேகமாக தலையாட்டிவிட்டு அமர்ந்து கொண்டாள். அவளை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அத்து.

ஒரு சில மணித்துளிகளுக்குப் பிறகு..

“ தாத்தா.. மாமா ஜாதகம் பாத்திருக்காங்க எனக்கு ஏதோ திசை நடக்குதாம் அதனால இன்னும் ரெண்டு மூணு வருஷம் கல்யாணம் நடக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க ” என்றதும் தாத்தா மற்றும் பேரனின் முகம் மலர்ந்தது.

அத்துவிற்கு அப்பாடா என்றிருந்தது. அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் நீங்கியதைப் போல உணர்ந்தான். இனி என்ன நடந்தாலும் சரி எதாவது  செய்து அவள் ஆசைப்பட்ட படிப்பை அவளுக்கு அளித்துவிடுவது என்று உறுதிகொண்டான்.

“ ரொம்ப சந்தோசம் கண்ணு.. இப்போ கூட என்ன பண்ணுறதுனு தெரியாம நாங்க ரெண்டு பேரும் தவிச்சுட்டு இருந்தோம்.. கடவுளாப் பார்த்து வழிவிட்டு இருக்காரு இனி நீ படிக்கப் போகிறதுக்கு எந்த தடையும் இருக்காது ”

“ ஆமா தாத்தா ” என்றவள் அத்து என்ன சொல்லப் போகிறான் என ஆவலாக அவன் முகம் பார்க்க.. அவனோ வாரப் பத்திரிகையை கர்மசிரத்தையாக படித்துக் கொண்டிருந்தான்.

“ ம்க்கும் ”

ரகசிய புன்னகை அவன் அதரங்களில்..

“ ம்க்கும்.. க்கும் ”

“ தண்ணி ஏதும் குடிமா ” இது தாத்தா

அவள் கனைத்ததை அவர் இப்படியா பொருள் கொண்டார் என அவள் விழிக்க.. அத்து அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.

“ என்னாச்சுப்பா ” அவனது திடீர் சிரிப்பு கண்டு தாத்தா விசாரிக்க..

“ ஒன்னும் இல்ல தாத்தா இந்த புத்தகத்தில் ஒரு காமெடி.. அது தான் ” என்றவன் அவளைக் கேலியாக பார்க்க.. அவள் விழிகளை உருட்டி முறைத்தாள்.

“ அது சரிப்பா மாரி கிட்ட நீ பேசுறியா இல்ல நானே பேசவா ”

“ நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யலாம் தாத்தா.. ”

ஆனால் அவனுக்கு தாத்தா பேசினால் தான் சரியாக இருக்கும் என்கின்ற எண்ணம்தான்.. தாத்தாவுக்கும் அதே எண்ணம்தான்.

“ அம்மாடி நீ போய் உங்க மாமாவை வரச் சொல்லு ” என்றதும் எழுந்து ஓட முயன்றவளிடம் “ ஓய் ஓடாத.. நடந்து போ ” என்றான் அவள் விழுந்து வைக்கக்கூடாது என.

ம்ம் என தலை ஆட்டினாலும் முயல்குட்டி போல தத்தித் தாவித்தான் சென்றாள். அந்த நிமிடம் அவளை விட உலகில் யாரும் அத்தனை சந்தோஷமாக இருந்திருக்க மாட்டார்கள்.

சிறிது நேரத்திற்குமுன் தோட்டத்தில் கொய்யா மரத்தடியில் அத்துவிடம் அவள் பேசிக்கொண்டிருக்கும் போது மாமா வருவதைக் கண்டவள் அவரின் சோர்வான தோற்றம் கண்டு அந்த தித்திப்பான செய்தியை துணுக்குற்றாள்.

அத்துவிடம் ஏதோ பேசி வந்துவிட்டாள் தான்.. ஆனால் அது முழுக்க முழுக்க அவளது இயலாமையின் வெளிப்பாடு. திருமணம் இப்போதைக்கு இல்லை என்றதுமே அவள் வண்ண மயிலாய் மாறி தோகை விரித்து ஆடியிருந்தாள். அப்பொழுதே தாத்தாவிடமும் அத்துவிடமும் சொல்லிவிட வேண்டும் என ஓடி வந்திருந்தாள்.

இப்போது மாமாவை அழைத்துவர கால் முளைத்த பூவாய் ஓடியவளையே பார்த்திருந்தான் அவன்..

 

மேகம் கடக்கும்…

 

Advertisement