Advertisement

                           

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 15

 

“ தூரிகா உங்கள ஹெட் வர சொன்னாரு..” என்ற சக ஆர் ஜே வின் தகவலுக்கு ஒரு குட்டி தம்ஸ் அப்  அனுப்பிவிட்டு அவளுடைய ப்ரோக்ராம் ஹெட்டின் அறை நோக்கி சென்றாள்

அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவள் “ குட் ஈவினிங் சார்..” என்றதுதான் தாமதம்

“ உன் குட் ஈவினிங் யாருக்கு வேணும்.. எனக்கு வேண்டியதெல்லாம் உன் கூட இருக்க வேண்டியவன்…”  என பாய்ந்தார் அவர்..

“ சத்தியமா என் பாக்கெட்டுல இல்ல சார்..”  மனதிற்குள் தான் சொல்லிக் கொண்டாள்.. பிறகு வெளியே சொல்லவா முடியும்??

“ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.. சார்..”

இரண்டு மணி நேரமாக இதைச் சொல்லித்தான் சமாளித்துக் கொண்டு இருக்கிறாள் எங்கே போய் தொலைந்தானோ அழைப்பையும் ஏற்க மாட்டேன் என்கிறான்.. அவனால் இவள் வாங்கிக் கொண்டிருக்கிறாள்…  அதெல்லாம் கூட ஓகே ஆனால் திட்டுவதென்றால் ஒரே அடியாக நிற்க வைத்து திட்டுவதை விட்டு அது என்ன அப்பப்போ கூப்பிட்டு கூப்பிட்டு கேட்ட கேள்வியை கேட்டு திட்டுவது அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்தச் சிறு  பெண்ணால்.

“ இதையேதான் இரண்டு மணி நேரமா சொல்ற…”

‘ வேற கேள்வி கேளுங்க சார் நிச்சயம் வேற பதில் தருவேன்..’ இதுவும் மனதில் தான்

“ ஓகே கால் விக்ரம்…”

‘ ஏன் அதை நீங்க பண்ண வேண்டியது தானே!!’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாலும் விரல்கள் அவன் பெயரை தொட்டிருந்தது திரையில்..

“ எக்ஸ்கியுஸ் மீ சார்….” உள்ளே வந்தான் விக்ரம்..

“ குட் ஈவினிங் சார்…”

“ குட் ஈவினிங் விக்கி நான் எதுக்கு வர சொன்னேனா…” என அவர் நிறுத்த

“ நெக்ஸ்ட் ஷோ நான் தூரிகா கூட நான் பண்ணனும் அதானே சார்…” எனக் கேட்டு அவளை அதிர வைத்து ஹெட்டை ஆச்சரியப்பட வைத்தான்.

“ எக்சலண்ட் மேன்… ஹவ் டிட் யூ கேட்ச் தட்…” அவர் புன்னகைக்க அவளுள் புகைந்தது..

சிறு புன்னகையை அவன் பதிலாக தர.. இவளிடம் திரும்பினார் ஹெட்.

“ தூரிகா நீ விக்கியோட ஜாயின் பண்ணிக்கோ வந்துட்டே இருக்கான்னு சொன்னியே அவன  வரவேணாம்னு சொல்லிடு.. ”

“ பட் சார்….” என்றவளைத் தடுத்து.. “ யூ மே கோ…” என்றதும் வெளியே வந்தாள்..

“ விக்கி… யுகா கொஞ்ச நேரத்துல வந்துருவான்.. நீ உன்னோட வொர்க் பாரு  அவனோட ஒர்க்க வேற யாரும் பண்ணினா அவனுக்கு பிடிக்காது..” வரும் சேதாரத்தை தடுக்க முயற்சி செய்தாள்..

“ அதே போல தான் நானும்.. எனக்கு கொடுத்த வேலையை நான் தான் செய்வேன்.. வேற யாரும் செஞ்சா எனக்கு பிடிக்காது..” என சொல்லிச் சென்றவனை வெறித்துப் பார்த்தாள்..

ஒருபக்கம் யுகாவை நினைத்து கோபமாகவும் பயமாகவும் இருந்தது.. இன்றைய சிறப்பு நிகழ்ச்சி இவர்கள் இருவருக்கும் தான் அளிக்கப்பட்டது.. இது மட்டுமல்ல பொதுவாக சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்துமே இருவரிடம் தான் ஒப்படைக்கப்படும் அத்தனை சிறப்பாக இருக்கும் நிகழ்ச்சி…

இருவருக்கும் இருக்கும் பேன் பேஸ் சற்று அதிகம்… நிகழ்ச்சியை இவர்கள் வழங்கினால் ஹிட் ரேட் எகிறும்.. இன்றைய நிகழ்ச்சி முன் மாலையிலேயே இருந்ததால் அரை நாள் விடுப்பு எடுப்பதாக சொல்லி இருந்தான்.. மதியம் கிளம்பி விட்டேன் என்று தகவல் சொல்லியவன் அதன் பிறகு எங்கு போய் தொலைந்தானோ… அழைத்து  அழைத்து ஓய்ந்து போய் இருந்தாள்..

இதில் ஹெட் வேறு உயிரை வாங்குவதற்காகவே விக்ரமுடன் கோர்த்து விடுகிறார் அவருக்கும் தெரியும் யுகாவிற்கும் விக்ரமிற்கும் ஆகாதென்று.. தெரிந்தே சீண்டுவதற்கு என இப்படி செய்தால்?? யுகா பார்ப்பதற்குத்தான் அமைதியானவன்.. அமைதியும் கூட.. அவனை இடையூறு செய்யாதவரை.

ஆனால் தேவையில்லாமல் அவனிடம் முட்டினால் சேதாரம் நிச்சயம் உண்டு எதிராளிக்கு…

இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்க சில மணித்துளிகளே இருக்க தூரிகாவிற்கு வியர்த்து விட்டது.. அவன் இப்போது வந்து நின்றால் என்ன செய்வது என்று. விக்கியும் தயாராகிவிட்டான்.. நிச்சயம் பின் வாங்க மாட்டான்..

‘ இறைவா எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோ…’ என வேண்டி முடிக்கக்கூட இல்லை அவளின் பிரச்சினை தேடி ஓடி வந்தது அவளிடம்.. வேறென்ன அவளின் நண்பன் தான்..

“ என்னாச்சு…”  என பதறி அவனிடம் வந்தவர்களிடம்

“ ஒண்ணுமில்ல வர்ற வழில சின்ன ஆக்சிடன்ட்…. ” என்றவாறு ஆன் ஏர் ரூமிற்குள் நுழைந்தான்..

அதே நேரத்தில் “ ஷால் வீ கோ…”  என்றவாறு உள்ளே நுழைந்தான் விக்ரம்.. விக்ரமைப் பார்த்தவன் அவளிடம் திரும்பினான்.. அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்.. அவனுடைய கட்டில் பார்வையை பதித்து இருந்தவளுக்கு விக்ரம் வந்தது கூட உரைக்கவில்லை.. வேறு எங்கும் அடிபட்டுள்ளதா  என்பதை போல் ஆராய்ந்து கொண்டிருக்க…

“ தூரிகா..”  என அழைத்தான்..

கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவளிடம் “ எனக்கு ஒன்னும் இல்ல.. வேற ஒருத்தங்களுக்குத்தான் ஆக்சிடென்ட்.. நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போன போது எனக்கும் லைட்டா அடி….” என்றவன் விக்ரமிடம் பார்வை பதிக்க.. அவள் கண்களில் இருந்த கலக்கம் மறைந்து கலவரம் குடி புகுந்தது..

விக்ரமும் அமைதியாக இவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..

பின்பு என்ன நினைத்தானோ… “ தூரிகா.. யூ கைஸ் கேரி ஆன்.. அதான் உன் பார்ட்னர் வந்தாச்சே..  ஐ வில் பி பேக் டு மை டியூட்டி…” என்றான் பார்வையை யுகாவிடம் வைத்து..

அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள் யுகாவின் முகம் பார்க்க.. அதில் எந்தவித மாற்றம் இன்றி இயல்பாக இருந்தது..

விக்ரம் வெளியேறியதும் “ நிஜமாவே உனக்கு ஏதும் அடி படலயே..” என்றாள் மீண்டும்..

அவன் முன்பு அமர்ந்திருந்தவளின் தலையை கலைத்து… “ நிஜமாவே சொல்றேன்.. ஆக்சிடென்ட் எனக்கு இல்ல… நேரமாச்சு எதுனாலும் ஷோ முடிஞ்சதும் பேசிக்கலாம்…” என அழைத்து சென்றான்

 

இருவரும் நிகழ்ச்சி முடிந்து வெளியே வர ப்ரோக்ராம் ஹெட் நின்றிருந்தார்..

“ ஹாய் சார்..” என்றான் அவரிடம்..

அவர் அருகிலிருந்த தூரிகாவை  முறைக்க.. ‘ என்ன எதுக்கு முறைக்குறார்.. ஒரு வேலை நாம ஹாய் சொல்லாததாலையோ..’ என யோசித்து

“ ஹாய் சார்..” என்றாள் அவளும்.

“ ரெண்டு பெரும் என்னோட கேபினுக்கு வாங்க..” என்று விட்டு அவர் முன்னே செல்ல..

“ சார் நாளைக்கு காலைல பேசிக்கலாம்… ஐயம் வெரி டையேர்ட் நவ்.. நான் இப்போ கிளம்புறேன் என்றவன் அவளையும் இழுத்துச் சென்றுவிட்டான்..

 

யுகாவின் பல்சர் அவளது வீடு நோக்கிப் பயணம் ஆகியது…

 

“ இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வைத்து உட்கார்ந்து இருக்க…”

தெரிந்து கொண்டே கேட்பவனிடம் என்ன சொல்ல முடியும்..ஏற்கனவே இவன் தாமதமாக வந்து அவரைப் பார்க்காமலேயே நிகழ்ச்சியை முடித்தது ஒரு தவறு.. அடுத்து அவர் அழைப்பை சிறிதும் மதிக்காமல் இஷ்டத்திற்கு நாளைக்கு சந்திப்போம் என்றது அடுத்த தவறு.. எல்லாவற்றிற்கும் மேலாக அவளையும் கூடக் கூட்டிக்கொண்டு  வந்து விட்டான்… இவனுக்கென்ன இவன் இரவு வரும் வேளையில் அவர் கிளம்பிச் சென்று விடுவார்.. ஆனால் காலையில் இருந்து அவரிடம் இவளல்லவா வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்…

“ ப்ச்.. தூரிகா… ” என்றவனுக்கு இன்னும் அவன் செய்த செயலின் விளைவு தெரியவில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு..

அவனுக்கு அவன் செய்ததில்  எந்த ஒரு தவறும் இருந்ததாகத் தெரியவில்லை அவனுடைய தலைமை குறித்து அவனுக்குத் தெரியும்.. நிச்சயம் இப்பொழுது அவர் அழைத்தார் சென்று இருந்தால் வார்த்தைகள் வரம்பு மீறி இருக்கும்..  அவருடைய கோபம் அப்படி.

அதே நாளைய பொழுது என்றால் நிச்சயம் மறந்துவிடுவார் தூங்கி எழுந்தவுடன் டேம்பெரவரி மெமரி எரேஸ் ஆகும் என்ற ரகத்தைச் சேர்ந்தவர் அவர். அதனால்தான் ஒதுங்கி வந்து விட்டான்..

திடீரென சாலையில் சென்று கொண்டு இருந்த பைக் தடுமாறி பாதை மாறி இழுத்துச் செல்லப்பட..

“யுகாஆஆஆ…” கீழே விழுந்திருந்தாள் அவள்…

வண்டியோடு சேர்த்து இழுக்கப்பட்டு சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்தான் அவன்..  விழுந்ததும் எழுந்து ஓடி வந்து அவளை எழுப்பி உட்கார வைத்தான்..

“ என்னாச்சுடி… ஏதும் அடிபடலையே…” என்றவனை முறைத்து விட்டு எழுந்து நின்றாள்..

அவளுக்கு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தவனுக்கு அத்தனை கோபம் இந்த நிலையில் கூட வாய்திறக்காமல் இருக்கிறாள் என்று. பிடிவாதம் அத்தனையும் பிடிவாதம் என்று நினைத்தவன் அவன் பல்சரிடம் செல்ல அந்தோ பரிதாபம் அது இன்னும் உயிர்பெற்று இல்லாமல் இருந்தது.. இவன் எவ்வளவு முயற்சி செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை

‘ இருக்கிற பிரச்சினைல இது வேற…’ என அதை காலால் உதைக்க.. அதே சமயம் அவன் முதுகிலும் ஒன்று விழுந்தது..

“ ப்ச் என்னை ஏன்டி அடிக்கிற…..”

அவன் கெஞ்சினாலும் கொஞ்சினாலும் மிஞ்சினாலும் அவள் அவனிடத்து பேசுவதாக இல்லை.. எப்பொழுதும் எல்லாம் இவன் விருப்பம் தான் இவனுக்கு என்கிற எண்ணம் அவளுக்கு. அவனிடம் இருந்து வண்டியை வாங்கி என்ன செய்தாலோ அடுத்த நொடி அது உயிர் பெற்று இருந்தது.

‘ வர வர இது கூட என் பேச்சை கேட்க மாட்டேங்குது.. என்னடா யுகா உன் நிலைமை இப்படி..’ என நொந்து கொண்டவன் அவளிடம் பைக் வாங்கலாம் என அடியெடுத்து வைக்க அவள் ஏறி அமர்ந்து இருந்தாள்.. இவனும் சிறு தோள் குழுக்கலுடன் ஏறி பின்புறம் அமர்ந்தான்..

 

காரிருளைக் கிழித்து கொண்டு பறந்தது அவனது பல்சர்… இரவின் ஏகாந்தத்தில் இனிமையிலும் அது தந்த குளுமையிலும் அவனை தொலைத்து அந்த பயணத்தை ரசித்திருந்தான்.. அவள்து கூந்தல் காற்றில் கட்டுக் கடங்காமல் அவனது கன்னம் தீண்டிச் செல்ல அதன் மென்மையில் முற்றிலுமாய் தொலைந்து இருந்தான்..

 

அவளுடனான இந்த பயணம் அப்படியே தொடராதா என்று இருந்தது அவனுக்கு.. என்ன செய்ய அதற்குள் அவள் வீடு வந்திருந்தது. அவள் வண்டியை நிறுத்தியதும் இறங்காமல் இவன் விளையாட்டு காட்ட அவன் இறங்கினால் மட்டுமே இவள் இறங்க முடியும் என்கிற நிலை..

 

என்ன செய்வது எனத்  தெரியாமல் அவள் தடுமாற அதை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் இதழ்களில் தவழ்ந்த புன்னகையுடன். மிரரில் அவன் புன்னகை முகம் கண்டவள் அம்மாஆஆஆ….  என அவள் அன்னையை அழைக்க அடித்துப் பிடித்து இறங்கி நின்றான்… சத்தம் கேட்டு வெளியே வந்த அவளின் அன்னை இருவரையும் வியப்பாக பார்த்தார்..

“ இன்னைக்கு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஆன்டி.. ரெகுலர் ஷோ கேன்சல் ஆகிடுச்சு..”  என விளக்கம் அளிக்க சரி என கேட்டுக்கொண்டவர் உள்ளே அழைக்க..

“ இல்லை ஆண்ட்டி.. நான் கிளம்புறேன் டைம் ஆகிடுச்சு.. இந்த வீகென்ட் பார்க்கலாம்…” என்றவன் அவளுடைய பார்வையில் என்ன படித்தானோ..

“ சரி தண்ணி மட்டும் கொடுங்க..” என உள்ளே நுழைந்தான்

“ மா தண்ணி வேனாம் அவனுக்கு.. காபி கொடுங்க.. நான் வந்துடுறேன் ” என்றவள் அவள் அறைக்குச் சென்றாள், உடைமாற்றி வந்தவள் கண்டது வரவேற்பரை சோபாவில் இரு கைகளையும் நீட்டி தலையை பின்புறம் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை.

அவனது அலைச்சலையும் அலைபுருதலையும் உணர்ந்தவள் அடுப்படி சென்று

“ மா அவன் தூங்கிட்டான்..இப்படியே விட்டுடுடலாம்.. இன்னிக்கு அவனுக்கு அலைச்சல் அதிகம்.. இதுல எங்கேயோ விழுந்து வச்சு வந்திருக்கான்…”

“ ஏன் என்னாச்சு..” என பதறியவரிடம்

“ ஒன்னும் இல்லமா கையில மட்டும் லைட்டா அடி ….”

“ சரி எழுந்து அப்பாகூடயாவது  தூங்க சொல்லு…”

“  இல்லம்மா நீங்க போர்வையும் தலையணையும் மட்டும் கொண்டு வந்து வெச்சுடுங்க.. எழுப்ப வேணாம்..” என்றவள் அவளுக்கு பால் கலந்து குடித்து வெளியே வர இம்முறை சோபாவில் சாய்ந்து கால்களை குறுக்கி உறங்கிக் கொண்டிருந்தான்..

துயில் கொள்ளும் குழந்தையின் உதட்டில் நிலைத்திருக்குமே மனதை கொள்ளை கொள்ளும் மென்னகை.. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்… அப்படி ஒரு புன்னகை இப்பொழுது அவன் முகத்திலும்.. அந்த அழகை ரசித்தவள் அவளுடைய அம்மா வர சட்டென அவளது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

என்றும் இல்லாத திருநாளாக இன்று நேரமே வீட்டிற்கு வந்தவளுக்கு உறக்கம் வருவேனா என ஆட்டம் காட்டியது.. தினமும் இரவு 11 மணிக்கு வீடு வந்து உறங்கி பழக்கம் கொண்டவளுக்கு இன்று அவள் விரும்பினால் கூட உறக்கம் வரமாட்டேன் என்கிறது.. புரண்டு புரண்டு படுத்தவள் எழுந்து வெளியே வர தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது..

“ அம்மா நீங்க தூங்கலையா…” அவளை ஒரு பார்வை பார்த்தவர் மீண்டும் தொலைக்காட்சியின் பக்கம் திரும்ப..

“ நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..” என கத்தினாள்.

“ ஷ்ஷ். மெதுவா..”  என யுகாவை பார்க்க ஸ்ஸ்.. என நாக்கை கடித்துக்கொண்டாள்..

“ சரி சொல்லுங்க மணி பத்து ஆச்சு.. இன்னும் தூங்காம டிவி பார்த்தா என்ன அர்த்தம்…” என்றாள் மெதுவாக..

“ இப்ப என்ன உனக்கு தெரியனும்.. நான் ஏன் தூங்காம இருக்கேன்னா.. அதுக்கு நீதான் காரணம்..”  என்றதும் அவள் திகைத்து பார்த்தாள். அவரும் இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என ஸ்கோர் செய்ய ஆரம்பித்தார்..

“ என்ன பாக்குற நீதான் காரணம்.. நீ மட்டும் தான் காரணம்.. இப்ப நாடு இருக்க நிலைமையில நடுஜாமத்தில் வீட்டுக்கு வர… நீ வர வரைக்கும் நான் உயிரை கைல புடிச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்… நீ வந்ததுக்கு அப்புறம் தான்  நிம்மதியான தூக்கம்.. இன்னிக்கு ஒருநாள் நீ நேரத்தில் வந்துட்ட.. சந்தோஷம் தான்.. ஆனா இவ்ளோ நாளா பன்னெண்டு மணிக்கு தூங்கி பழகின தூக்கம் இன்னிக்கு பத்து மணிக்கு வா னு சொன்னா உடனே வந்துருமா??

இவ்வளவு ஏன்??  என்ன கேட்கறியே உனக்கு தூக்கம் வருதா?  இல்லைதானே அதனால தான நீ இங்க வந்து இருக்க…” குரல் உயர்த்தவில்லை..ஆனால் அத்தனை அழுத்தம் அவரது குரலில்

 

இத்தனை நாளாக மனதை அழுத்திக் கொண்டு இருந்ததை எல்லாம் கொட்டிவிட நோக்கில் இருந்தார் அவர்.

தன்னுடைய பிடிவாதம் இந்த அளவுக்கு அவரை பாதித்துள்ளதா என்றவளுக்கு அடுத்து என்ன கேட்பது என்ன பேசுவது என்றெல்லாம் தோன்றவே இல்லை அது அவருக்கு சாதகமாக அமையவும்..

“ உனக்கே தெரியும் நீ படிச்ச படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.. உங்க அப்பாக்கு கொஞ்சம் கூட இதில் விருப்பமில்லை ஆனால் நான் அவரை எதிர்த்துப் பேசி உனக்கு சப்போட் பண்ணினேன் ஏன் தெரியுமா ? உன்னோட விருப்பம் மட்டும் தான்.

இது உன்னோட வாழ்க்கை நீதான் வாழனும்.. உனக்குப் பிடிச்ச மாதிரி அமைஞ்சா தான்  நீ சந்தோஷமா இருப்ப அந்த ஒரே காரணத்துக்காகத்தான் நான் சம்மதிச்சேன்.. ஆனா நீ ??? விட்டுடு.. நாம ஏற்கனவே இதைப்பற்றி அதிகம் பேசிட்டோம்.. இதோட நிறுத்திக்கலாம்.. இன்னும் கொஞ்ச நாள் தான் இந்தக் கஷ்டம்.. உன்ன ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்துட்டா போதும் அதுக்கப்புறம் நீயாச்சு அவனாச்சு…”  என்றவர் எழுந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது அவளுக்கு அவளுடைய சந்தோஷத்திற்காக அன்னையை எந்த அளவிற்கு வருத்தப்பட வைத்துவிட்டோம் என்று.. இத்தனை நாளாக தான்.. தனக்கு பிடித்த என்ற பிடிவாதம் முற்றிலுமாய் தளர்ந்திருந்தது.. ஒரு முடிவுடன் தொலைக்காட்சி அணைத்து விட்டு திரும்ப.. அத்தனை ரணகளத்திலும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.. அவளது மித்திரன்..

“ எப்படி டா நீ மட்டும்  இவ்வளவு நிம்மதியா தூங்கற…” என்றவள் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு நகர்ந்தாள். அவளுக்கு எங்கே தெரியும்.. அவனுடைய உறக்கம் இன்னும் சற்று நாளைக்குத்தான் இப்படி நிம்மதியாக இருக்கும் என..

 

அறைக்கு வந்தவள் புத்தகமொன்று எடுத்து வைத்தாள்..

இவளைப் போலவே இவளால் மற்றொரு ஜீவனும் அங்கே தூக்கத்தை தொலைத்து கொண்டிருந்தது வேறு யாராக இருக்க முடியும் அதுல் தான்..

 

அவனுடைய அலுவலக விஷயமாக குஜராத் வந்திருந்தான் எப்பொழுதுமே இரவு நேரம் மனதிலே ஒரு பாட்டு நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு உறக்கம் கொள்வது வழக்கம்.. இங்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது தினமும் தூக்கத்திடம் சண்டையிட்டு வெற்றி கொண்டு தான் உறங்கச் செல்கிறான்…

 

அத்து இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லடா….” அவனுக்கு அவனே  சொல்லிக் கொண்டான்..

 

“  அந்த குரல்ல ஏதோ இருக்கு.. அதுதான் உன்ன இப்படி தூங்கவிடாம டார்ச்சர் பண்ணுது..”  என்றவன் உறக்கம் கொள்ளாமல் எழுந்தமர்ந்து புத்தகம் ஒன்றை எடுத்து வைத்தான்..

 

“ அம்மா அம்மா… அம்மா..நீயே… அன்பின் உருவம் நீயே….” அருகிலிருந்த மிதுனின் அலைபேசி அலறியது…

 

திரையில் “ அம்மா…. ”

 

சட்டென புன்னகை மலர்ந்துவிட்டிருந்தது அவன் அதரங்களில்… அம்மாவிடமிருந்து அத்தனை சீக்கிரம் அழைப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை..

 

அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தான்… எதுவும் பேசவில்லை… மறுமுனையிலும் அமைதி.. அமைதி.. அமைதி..

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவனும் அமைதி காத்தான்..

இரு வாரங்கள் இருக்கும் இருவரும் பேசி… அன்றைய தினம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து… ஜெயா.. அத்து.. இரு தரப்பினரும் இறங்கி வர மறுத்து அவரவர் நிலையியே இருந்தனர்..

 

இங்கே கிளம்பி வரும் போது பொது அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தான் வீட்டினில்… ‘ இவ்வாறு.. இத்தனை நாள்.. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.. அலுவலகம் தொடர்பாக…’ என..

இங்கு வந்துவிட்டதாக மிதுனிற்கு சொன்னவன் அதன் பிறகு அங்குள்ள நிலவரத்தை கேட்டு தெரிந்து கொண்டான்..

அவனுக்கு அடி கொடுத்து விட்டதாலோ என்னவோ அவனிடம் பேசிவிட்டாராம்..

அது என்ன அவனுக்கு மட்டும் சலுகை… அத்துவும் இந்த முறை இறங்கி வரப்போவதில்லை என முடிவெடுத்து விட்டான்… அதன் பொருட்டே இந்த பேச்சு வார்த்தை தவிர்ப்பு நடவடிக்கை..

அன்னையைப் பற்றி அறியாதவனா என்ன?? எப்படியும் அழைப்பு அலையாக தன்னிடம் வந்து சேரும் என எதிர் பார்த்திருந்தான்.. ஆனால் இப்படி அவசரகால சட்டம் அவரது மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் என எதிர் பார்க்கவில்லை..

 

முழுதாக… பத்து நிமிடங்கள்…. இருவரிடமும் அமைதி… அதன் பிறகு அவனால் முடியவில்லை..

“ ம்மா….” அழைத்திருந்தான்… அன்னையிடம் அப்படி என்ன அடம் வேண்டிக் கிடக்கிறது???

அவர் எதுவும் பேசவில்லை…

 

“ ம்மா… இருக்கீங்களா… பேசுங்க மா… ”

“……”

“ சாரி மா….. உங்ககிட்ட இதைப் பத்தி முன்னாடியே பேசிருக்கணும்… ஆனா.. ”

“ ம்மா….. இப்போ பேசுவீங்களோ மாட்டீங்களா…. சரி நீங்க பேச வேணாம்… நானும் உங்களோட பேசல… இங்கயே இருந்துக்கிறேன்… நான் அங்க வந்த…  ”

 

“ டேய்!!!.. அத்து….” பதறிவிட்டிருந்தார்… அவரது அருந்தவப் புதல்வனைப் பிரிந்து இருப்பதா??? அப்படி ஒரு நிலை வந்தால் அவர் இருக்கவே மாட்டார்..

“ சொல்லுங்க.. அத்து தான்… வர வர என் மேல பாசம் கொறஞ்சிட்டே வருது மா உங்களுக்கு… அதுனால தான்.. ”

“ அத்து…” என்றவரின் குரல் கரகரக்க… தன்னையே கடிந்து கொண்டவன்..

“ ம்மா… நான் சும்மா தான் சொன்னேன்… ஆனா ப்ளீஸ் மா இனிமே பேசாம மட்டும் இருக்காதீங்க…. ”

“ அப்போ நீ பண்ணினது மட்டும் சரியா??? ”

“ ம்மா… இப்போ நாம அத பத்தி பேச வேண்டாமே…. ”

“ சரி விடு… சாப்டியா?? அங்க சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கு.. ”

“ ப்ச்… போங்க மா… எதுவுமே பிடிக்கல… நம்ம சைட் சாப்பாடெல்லாம் கண்ணுல கூட பார்க்க முடியல… மூணு நாளைக்கே முடியல… எப்படி சமாளிக்கப் போறேனோ… ”

அந்த நிமிடம் அவன் மீதுள்ள வருத்தங்கள் கோவங்கள் எல்லாம் மறைந்திட.. பிள்ளைக்காக வருத்தம் கொண்டு அவன் வருந்த.. அவன் அவரையும் சேர்த்து சமாதானப் படுத்தினான்… மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டு அலைப்பேசியை அணைத்தவனுக்கு சட்டென் உதயமாகியது அவனை சூழ்ந்துள்ள சங்கடங்களைப் போக்க வழி…

 

மேகம் கடக்கும்…          

      

 

      

Advertisement