Advertisement

  

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 14

 

அலுவலகம் முடிந்ததும் அத்துவை பேருந்து நிறுத்தத்தில் விட்ட கதிர் அவனது சோர்வான முகம் கண்டு.. மேலும் அவன் இந்த பேருந்தின் கூட்டத்தின் நடுவே சிக்கி சின்னாபின்னமாகி வீடு போய் சேர்வதை எண்ணி

“ தயவுசெய்து நீ டூவீலர் வாங்குவதை பத்தி யோசிச்சுப் பாரேன் ” என்றான் மனம் கேளாமல்.

“ நான் வாங்க மாட்டேன்னு சொல்லல.. இப்போதைக்கு அவசியமில்லை. தேவைப்படும் போது நிச்சயம் வாங்குறேண்டா ”

இதே மற்ற நேரமாக இருந்திருந்தால் நிச்சயம் ஒரு சொற்பொழிவு நிகழ்ந்திருக்கும் அதுலின் இன்றைய மனநிலை காரணமாக கதிர் தப்பித்துக் கொண்டான்.

ஒருவழியாக பேருந்தும் வந்திருக்க அதில் ஏறிய சில மணி நேரத்திற்குப்பின் வீடு வந்து சேர்ந்தான். வரும்போதே அன்னையின் கையால் சூடான தேநீர் ஒன்று வாங்கி குடித்தால் தனக்கிருக்கும் சோர்வெல்லாம் மாயமாகிவிடும் என்றெண்ணி அவன் நடைபோட்டால்.. சூடான தேநீர் வேண்டுமா ராஜா !! உனக்கு சுடு தண்ணீர் கூட கிடைக்காதபடி வழி செய்துவிட்டேன் வா வா.. என அவனுக்கு முன்பே வெண்சாமரம் வீசி வரவேற்றது அவனுடைய அடுத்த சோதனை.

வரவேற்பரை சோபாவில் ஜெயா ஒருபுறம் மிதுன் ஒருபுறம் அமர்ந்திருந்தனர். அவர்களது முகமே எதுவோ சரியில்லை என அத்துவிற்கு உணர்த்தியது. காலையிலிருந்தே பிரச்சனைக்கு நடுவில் சுழன்றதில்.. அமைதியாக அவர்களை கடந்து அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான். ஒரு குளியல் போட்டு வெளியே வரவும் இருவரும் முன்பு எப்படியோ அதே போல்தான் அமர்ந்திருந்தனர்.

‘ இங்க என்ன காத்திருக்கோ தெரியலையே அத்து ’ என நினைத்து மிதுனின் தோளைத் தட்ட.. அவனோ அண்ணனை நிமிர்ந்து பார்த்து கண்களால் மன்னிப்பை யாசிக்க.. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அத்து என்னவென்று புருவத்தை உயர்த்த.. சின்னவனோ அவனது அறைப்பக்கம் கண்களைத் திருப்பினான்..

‘ அங்க என்ன ’ என திரும்பி பார்த்தவன் இதுவாகத்தான் இருக்கும் என யூகித்து.. ‘ ஏண்டா இப்படி ’ என்பதாய் தம்பிக்காரனை பார்த்து வைத்தான்.

ஒன்று மட்டுமே புரிந்தது தன்னை சுற்றி உள்ள அனைவருமே ஃபுல் ஃபார்மில் இருப்பதாய்.. ஆபீசில் உடன் வேலை செய்பவர்களும் கதிரும் வீட்டில் தம்பியும் அம்மாவும் தன்னை பந்தாட காத்திருப்பது நன்கு புலப்பட்டது..

மிதுன் அம்மாவை பார்த்துக்கொண்டே எழுந்து அத்துவின் கைப்பிடித்து அழைத்துச்  சென்றான் அவனது அறைக்கு.

சண்டைக்குக் காரணமாக இருந்த மிதுனின் கேமராவும் லேப்டாப்பும் இப்போது அத்துவின் கண்ணில் பட.. அனேகமாக கல்லூரி முடிந்து வந்ததும் இவன் ஊருக்கு சென்று வந்த புகைப்படங்களை இதற்கு மாற்றியிருக்க வேண்டும்.. அம்மாவிடம் பிடிபட்டிருக்க வேண்டும்.. இதுவே அத்துவின் யூகம். மிதுனிடம் கேட்க அவனும் ஒப்புக்கொண்டான்.

“ அம்மா வந்ததை நீ கவனிக்கலயா ”

ம்கூம் என்று மிதுன் தலையசைக்க..

“ எல்லாத்தயும் பார்த்துட்டாங்களா ”

“ தெரியல ஆனா.. தாத்தாவை நடுவுல உக்காரவெச்சு நீ லெப்ட்ல நான் ரைட்ல அவரை கட்டி பிடிச்சிட்டு இருந்தோமே அந்த போட்டோவை பார்த்துட்டு திரும்புறேன்.. அம்மா என் பின்னாடி நின்னுட்டு இருக்குறாங்க.. ”

“ ஏண்டா மாட்டுனது தான் மாட்டிவிட்ட அத இன்னிக்கேவா பண்ணனும் !! இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு மாட்டிவிட்டிருக்கக் கூடாதா !! ” என்றவாறு கட்டிலில் அமர்ந்தான்.

காலை ஒரு பிரச்சனை அது காலை உணவு

மதியம் ஒரு பிரச்சனை அது மதிய உணவு

இரவு ஒரு பிரச்சனை அது இரவு உணவிற்கு  

இப்படி மூன்று வேலையும் பிரச்னைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பார்களே…  அவனின் நிலையும் அப்படிதான். அலுவலகத்தில் பிரச்சனை என்று வீட்டிற்கு வந்தால் வீட்டில் இருக்கும் பிரச்சனைக்கு அதுவே தேவலாம் என்றிருந்தது.

“ அண்ணா ” என்ற தங்கக் கம்பியை அவன் தம்பியை என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அவனைச் சொல்லி என்ன ஆகப்போகிறது அம்மாவை எதிர்கொள்ள வேண்டியது இவன் தானே !! அதை உணர்ந்தவன்

“ அம்மா ஏதும் திட்டினாங்களாடா ?? ” எங்கு தம்பியை எதாவது சொல்லி விட்டார்களோ என்று வருத்தம் மேலோங்க கேட்டுவிட்டான்.

“ ம்கூம்.. போட்டோ பார்த்ததும் என்னை ஒரு பார்வை பார்த்தாங்க.. அப்புறம் வந்து சோபாவில் உக்கார்ந்துட்டாங்க ”

“ ரொம்ப கோவமோ ” என்றான் அத்து வெளியில் எட்டிப் பார்த்தபடி

“ கோவமா !! கோவமா இருக்காது பட் ஷாக்கா இருக்கும் ”

என்னையும் ஏண்டா குழப்புற என்பதாய் அவன் பார்த்துவைக்க அண்ணனின் பார்வை அறிந்தவன்,

“ நிஜமாத்தான் சொல்றேன்.. தாத்தா உயிரோடு இருக்கறதையே நாம இவங்க கிட்ட சொல்லலையே ஆனா ரெண்டு பேரும் போய் பொங்கல் விழாவைச் சிறப்பிச்சுட்டு வந்திருக்கோம்னு தான் அதிர்ச்சி ” என விழாவைச் சிறப்பிச்சுட்டு வந்திருக்கோம் என்பதை வடிவேலு பாணியில் கூறியவன்

“ வேணும்னா நீ போய் பேச்சுக் கொடுத்து பாரேன் நான் பிரகாஷ் கிட்ட பேசிட்டு வரேன் ” என நழுவ.. வேகமாய் எழுந்து அவனைப் பிடித்த அத்து மிதுனின் கழுத்தோடு கைப்போட்டு லாக் செய்து  

“ எங்க நழுவப் பாக்குற ! வா ரெண்டு பேரும் பேச்சுவார்த்தைல ஈடுபடலாம் ” என தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்.

“ கண்டிப்பா தோல்வியில்தான் முடியும் பாரு ” அன்னையைப் பற்றி தெரிந்தவனாகச் சொன்னான் மிதுன்.

அம்மாவிடம் என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் தயாராக வைத்திருந்தான் ஆனால் வார்த்தைதான் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு சண்டித்தனம் செய்தது.

மிதுன் அத்துவின் தோளில் இடித்து பேசுமாறு சொல்ல..  

“ அட இருடா நானும் அப்போதிருந்து அதுக்குதான் முயற்சி பண்றேன் ” என நயன மொழியில் பேசி விட்டு ஒருவழியாய் “ அம்மா ” என்று வாய்திறந்து முத்து உதிர்த்தான்.

அடுத்த நொடி ஜெயா விறுவிறுவென்று எழுந்து சமையல் அறைக்குள் செல்ல.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“ என்னடா பண்ணலாம் அப்பா வந்ததும் பேசிக்கலாமா ” யோசனையாகக் கேட்டான் அதுல்.

“ ஹ்ம்ம் நம்மளாவது பேசறோம்.. அவரு அதைக்கூட பண்ண மாட்டாரு ” என்று நினைத்தவன் சொல்லவும் செய்தான்.

“ டேய் !! ”

“ பின்ன என்னண்ணா அப்பா இதுவரைக்கும் எப்ப பேசிருக்காரு !! இல்ல அம்மாதான் பேச சான்ஸ் கொடுத்திருக்காங்களா !! ஒன்னு சொல்லட்டா.. நியாயமா பார்த்தா நாம ரெண்டு பேரும் தான் கோவமா இருக்கணும்.. ஆனா நாம தப்பு பண்ணின மாதிரி இவங்க நம்ம மேல கோபமா இருக்காங்க.. வாய் கூசாம உயிரோட இருக்கிறவங்கள செத்துப் போயிட்டதா சொல்லி பிரிச்சு வெச்சிரிரு.. ” சமையலறை வாசலில் நின்று பார்த்திருந்த ஜெயாவை கண்டு தான் கூற வந்ததை பாதியில் நிறுத்த..

அத்து மிதுனை முறைத்துவிட்டு அம்மாவிடம் விரைந்தான்.

“ நான் என்ன இப்ப தப்பா சொல்லிட்டேன்னு என்னை முறைச்சுட்டு போறான் ” என்றபடி அவன் வேலையை பார்க்கச் சென்றான் மிதுன்.

மிதுன் அதுலைப் போல அல்ல.. தப்பு என்றால் தப்புதான் அது அன்னையே செய்திருந்தாலும் கூட.. சுட்டிக்காட்டி பேசிவிடுவான். அதைத் தொடர்ந்து வாக்குவாதமும் இருக்கும்.

ஆனால் அதுல் அதற்கெதற்கும் வாய்ப்பளிக்க மாட்டான்.. தப்பித் தவறி கூட ஜெயா மனம் நோகும்படி எதுவும் செய்ய மாட்டான். இந்த முறை அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை அதனால்தான் எதையும் வெளிக்காட்டாது ஊருக்குச் சென்றது..

சமையல்கட்டுக்குள் சமாதானக்கொடி பறக்கவிட அதுலும் முயன்றுகொண்டே இருக்கிறான் அன்னை சிறிதும் இறங்கி வந்ததாய்த் தெரியவில்லை.  

இப்படி பனிப்போர் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க.. இன்னொருபுறம் தீப்பொறித் திருமுகமாய் ராமநாதன் வேறு.. அதை செய்தாயா இதை செய்தாயா என்று அதுலை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். எப்படித்தான் சிலரால் இப்படியும் நடந்துகொள்ள முடிகிறதோ !! ஒரு பிரச்சனை என்று வந்தால் அதற்கு முன் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் எல்லாம் முற்றிலும் மறந்துவிடும் போல..

அதுலும் தன்னால் இயன்றவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.. இது அவனது வேலை இல்லையென்றாலும்.. அவனை காரணகர்த்தாவாக்கி அவனால் கைவிட்டுப் போன ஒன்றாய் தான் அலுவலகத்தில் அனைவரிடமும் ஒரு பேச்சு.. அதை சரி செய்யும் பொறுப்பை தன் தலைமீது சுமத்திகொண்டவன் அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

இப்படியே கதிருடனும் அலுவலக நண்பர்களில் அதுலை நன்கு அறிந்தவர்களின் துணையோடு வெளி மாநிலங்களில் இருந்து தரமான பொருட்களை கொண்டு வர முடியுமா என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். இந்த விஷயத்தை ஒரு வாரத்திற்குள் முடித்தாகவேண்டும்.. அப்போதுதான் இவர்களது போட்டி நிறுவனத்தினர் தயாரிப்புகளை வெளியிடும்முன் இவர்களது நிறுவனம் வெளியிட்டுக் காண்பிக்க முடியும். அதற்கு இப்போதே ஆரம்பித்தால் தான் மூன்று மாதங்களில் ப்ரொடக்ஸன் செய்து முடிக்க முடியும். எம்.டியிடம் பேசிவிட்டு வந்துவிட்டான் அதன்படி நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயம் அவனுக்கு.

அலுவலகத்தில் இப்படி என்றால் வீட்டிலோ அன்னை யாருடனும் பேசிக்கொள்வதில்லை.. அதுல் ஜெயாவிடம் பேச முயற்சித்தான்.. ஆனால் அவரிடம் அதற்கான பிரதிபலிப்பு சிறிதும் இல்லை எனவும் விட்டுவிட்டான். அவனுக்கும் மிதுன் சொல்வது சரி என்றே தோன்றியது எவ்வளவு யோசித்தும் அவன் பக்கம் தப்பில்லை என்றே தோன்றியது..

ஆனால் அவன் ஒன்றை யோசிக்கத் தவறிவிட்டான்.. இத்தனை வருடமாக தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகன்.. தன் வார்த்தைகளை வேதவாக்காக எண்ணியவன்.. தன் விருப்பத்திற்கு மாறாக துரும்பையும் அசைக்காதவன்.. தன் மகன்.. தன்னை ஒரு பொருட்டாக மதியாமல் செய்த செயல் அவரை எவ்வளவு பாதித்திருக்கும் என்று.

இதுவே மிதுன் ஏதும் செய்திருந்தால் கூட இவ்வளவு அதிர்ச்சி, பாதிப்பு இருக்காது.. ஆனால் செய்தது அத்து.. அவருடைய செல்லப்பிள்ளை.. சின்ன சின்ன விஷயத்தைக் கூட அவர் அனுமதி பெற்று செய்பவன் இன்று அவர் விரும்பாத செயலைச் செய்துள்ளான்..  

யாருக்கும் காத்திராமல் ஞாயிற்றுக் கிழமையும் வந்தது.. அத்து எதிர்பார்த்துக் காத்திருந்த நாள்.. பனிப்போர் முடிவதற்கான நாள்..

காலை உணவை முடித்து அனைவருமே வரவேற்பறையில் அமர்ந்து இருந்தனர்.. ஆள் ஆளுக்கு ஒரு திசையில்.. பார்த்த மிதுனிற்கு இதுவல்லவா வீடு !! என்று தான் தோன்றியது. அவன் அடுத்த கற்பனைக்குள் தாவி விடும் முன் அதுல் அவனை பேச்சிற்கு இழுத்துக் கொண்டான்.

“ அப்பா பொங்கலுக்கு நாங்க கதிர் ஊருக்கு போகல.. நம்ம ஊருக்குத் தான் போயிருந்தோம் ” நம்ம ஊரு என்பதில் சற்று அழுத்தம் கொடுத்ததாகத் தான் பட்டது ஜெயாவிற்கு.. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் கைகளில் இருந்த வாரப் பத்திரிகையில் கண்களை பதித்தார்.. கண்களை மட்டுமே !!

“ தெரியும்பா ” என்றார் அப்பா.. ஜெயா நிமிர்ந்து அவரைப் பார்க்க..

“ அவங்க சொல்லலை.. என்னோட யூகமாத்தான் இருந்துச்சு ” என்று மனையாளுக்கு விளக்கம் கொடுக்க.. தேவையில்லை உங்கள் விளக்கம் என்பதாய் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“ அப்பா.. நாங்க போனது தப்புன்னு நினைக்கிறீங்களா ? ” என நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டான்.. அவர் ஜெயாவை பார்க்க..

மிதுனோ ‘ பார்த்துக்க ’ என்றான் ஜாடையில் அண்ணனிடம்.

“ நீ பொய் சொல்லிட்டு போய் இருக்க அது தப்பில்லையா அத்து ” என்று ரவிச்சந்திரன் கேட்க.. அவன் அமைதியானான்..

“ இதற்கு முன்னயும் எங்ககிட்ட சொல்லிக்காம நீ அங்கதான் போனியா ?? ” என்று அடுத்த கேள்வியை முன்வைக்க.. அத்துவின் அமைதி கண்டு ஜெயா ஒருநொடி மின்னல் பார்வையை அவன் மீது பதித்து அதே வேகத்தில் திருப்பிக்கொண்டார்.

அத்து பதிலளிக்கும்னுன்..

“ ஆமா அண்ணன் இதுக்கு முன்னாடியும் அங்க போய்ட்டு வந்தான் அதுக்கு என்ன இப்போ !! உண்மையை சொல்லி இருந்தா மட்டும் அனுப்பிச்சி வெச்சிருப்பீங்களா ப்பா ” என்று குரல் கொடுத்தான் மிதுன். அப்பா அமைதியாகிவிட ஜெயா உள்ளே வந்தார்..

“ எதுக்குடா அனுப்பனும் !! நாங்க வேணாம்னு சொல்லிட்டு உதறிட்டு வந்தவங்க கூட நீங்க எதுக்கு உறவு வெச்சுக்கறீங்க.. அப்போ அவங்க வேணும்னா அங்கேயே இருக்க வேண்டியது தானே.. இங்க எதுக்கு வந்தீங்க ” எனப் பாய..

“ அம்மா.. நீங்க பேசறது தப்பா இருக்கு.. ”

“ ஓஹ்.. எனக்கு எது சரி தப்புன்னு சொல்ற அளவுக்கு நீ பெரியவனாகிட்ட அப்படித்தானே !! சந்தோஷம் இனிமே எதுவுமே நான் பேசல.. நான் பேசினா தான் தப்பாச்சே.. நீ உன் அண்ணன் அப்பா எல்லோரும் சரியாத்தானே பேசுவீங்க.. நீங்களே பேசுங்க நான் வாயை மூடிட்டு இருந்துக்கறேன் ”

“ அம்மா.. நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க ”

அதற்குள் அத்து அவனை அமைதியாய் இருக்க சொல்ல.. சட்டென கோபம் வந்தது.. அவனும் வளர்ந்துவிட்டான் தானே !! அவனுடைய வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது அவன் தரப்பு எதிர்பார்ப்பு.. அதை விட்டுவிட்டு இன்னும் சிறுபிள்ளை போல் நடத்தினால் !!

“ என்னை ஏண்ணா ஆ ன்னா ஊ ன்னா அமைதியாக சொல்றே.. நான் பேசியது கரெக்ட் தானே.. அம்மா பேசினதை நீயும் கேட்டுகிட்டு தானே இருந்த அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கா ? அப்பா அம்மா மாமா அத்தை வேணாம்னு சொல்ல இவங்களுக்கு உரிமை இருக்கு.. ஆனா நமக்கு தாத்தா பாட்டி வேணாம்னு சொல்ல இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு ? ”

அவன் கேட்பது நியாயம்தானே தாத்தா பாட்டி என்பவர்கள் பிள்ளைகளின் சிறுவயதில் எத்தனை முக்கியம்.. குழந்தையோடு குழந்தையாக மாறி அவர்களுடன் விளையாடுவதாகட்டும்.. விளையாட்டு காட்டுவதாகட்டும்.. அன்பு பாசம் எனக் கற்றுக் கொடுப்பதாகட்டும் அவர்களுக்கு நிகர் அவர்களே..

உவகை… கோபம்… அடம்… என அவர்களது உணர்வுகளின் வடிகால்கள் அவர்கள்தானே..

அப்படிப்பட்ட உறவுகளின் நிழல் கூட அவர்களின் பக்கம் சாயாமல் வளர்த்து விட்டார்களே என்ற ஆதங்கம் தான் அவனிடம் இருந்து முழுக்க முழுக்க வெளிவந்து கொண்டிருந்தது.

“ மிதுன் நாங்க என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு நீ சொல்ல வேண்டாம்.. நீ வளர்ந்துட்டா என்ன வேணா பேசுவியா ? கஷ்டப்பட்டு வளர்த்தது நாங்கன்னு மறந்துட்டு பேசாத ”

இருவரையும் தடுக்க முயன்றும் முடியாமல்.. அத்துவும் அப்பாவும் பார்வையாளர்களாக மாற.. தொடங்கியது யுத்தம் ஜெயாவிற்கு மிதுனுக்கும் இடையே. இருவரும் நிறுத்தியபாடில்லை..

அத்து என்ன பேச நினைத்தானோ அதைத்தான் மிதுன் பேசியிருக்கிறான்.. ஆனால் பேசிய விதம் தான் வேறு.. அவன் முழுக்க முழுக்க குற்றச்சாட்டை ஜெயாவின் மீது வைக்க அவரும் பேசத் தொடங்க இறுதியில் அவன் கன்னம் தொட்ட அறையில் நின்றது அவர்களது வாதம்.

“ ஜெயாஆஆஆ…. ” என ரவிச்சந்திரன் கடிந்துகொள்ள..

“ அம்மா.. என்னம்மா நீங்க ” என்றவாறு எழுந்து மிதுனின் பின்சென்றான் அதுல்.

“ அத்து ப்ளீஸ் ” என்றவன் அவனது இரு சக்கர வாகனத்தை எடுத்து வெளியில் செல்ல.. அத்து திரும்பி அம்மா அப்பாவிடம் வந்தான்.

ஜெயாவோ தோளுக்கு மேல் வளர்ந்த மகனை அடித்துவிட்டோமே என்று குற்ற உணர்வில் கண்களை கசக்கிக் கொண்டு அமர்ந்திருக்க.. அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.

“ மா விடுங்க இப்போ என்ன நீங்க வேணும்னா அடிச்சீங்க.. அவன் பேசியதும் தப்பு தானே ”

எந்த பதிலும் பேசாமல் ஜெயா எழுந்து உள்ளே சென்றுவிட.. அப்போதுதான் அத்துவிற்கு புரிந்தது அவ்வளவு நேரம் அன்னை மிதுனிடம் மட்டுமே பேசினார் மறந்தும் அவனிடம் ஒரு வார்த்தை விடவில்லை என்பதே.

‘ ஆஹா அத்து உனக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் உண்டுடா ’ என சொல்லிக்கொண்டு திரும்ப.. ரவிச்சந்திரன் அவனிடம் ஏதோ கேட்க வேண்டும் என்பது போல் முகம் பார்ப்பதுமாய் திரும்புவதுமாய் இருக்க..

“ என்னப்பா.. என்கிட்ட ஏதும் கேட்கணுமா ?? ”

“ அ.. அது அப்பா எப்படி இருக்காரு ” என்றான் தயக்கத்துடன்.

‘ இவ்வளவு நாள் இருக்காரா இல்லையானு தெரியாமல் இருந்தீங்க இப்ப மட்டும் என்ன ’ கேட்க வேண்டும் போல இருந்தது.. ஆனால் அவரிடமும் ஏதோ காரணம் இருந்திருக்கக்கூடும் என்பதை உணர்ந்தவன் ஒரு நிமிஷம் என எழுந்து சென்று மிதுனின் மடிக்கணினியுடன் திரும்பினான்.

அதில் உள்ள புகைப்படங்களை பார்க்க பார்க்க ரவிச்சந்திரனின் கண்களில் நீர் கோர்த்தது.. திரையில் தெரிந்த சின்னு தாத்தாவின் படத்தை வருட ஏதோ அவரையே வருடியதுபோல் போன்ற உணர்வு அவருள்.

அடுத்து அன்னையின் படத்தை எதிர்பார்த்தவர் அது இல்லாமல் போகவே ஒருநொடி ஏமாற்றத்துக்கு பின் தவிப்போடு ஒருவேளை அன்னைக்கு ஏதும் நிகழ்ந்திருக்குமோ என்ற எண்ணத்துடனே கலக்கமாக அத்துவிடம் கேட்க நிமிர.. ஆனால் அவனின் முகம் பார்த்து கேட்க வாய் வர வில்லை.. அவன் சாதாரணமாக பார்த்ததே ஆளைத் துளைப்பதுபோல் இருந்தது.

தந்தையின் மனதைப் படித்தவன்.. அவரது தோளை அழுந்தப் பற்றி இடவலமாக தலையசைத்து அமைதியாக நின்றிருந்தான். அதுவே அவருக்கு உணர்த்தியது தன் அன்னையின் இறைநிலையை.. கண்களில் நீர் பெருக வார்த்தை வராமல் திரையையே வெறித்து பேரன்களுடன் அமர்ந்திருந்த தன் தந்தையை பார்த்து இருந்தவரை தொந்தரவு செய்யாமல் அவருக்கு தனிமை கொடுத்து விலகிச் சென்றான் அதுல்.

அதன்பின் அன்றைய நாளில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை.. நால்வரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கியிருக்க.. ஞாயிறுக்கு காண சகியாமல் திங்களை அனுப்பிவிடும் எண்ணத்தில் நேரத்தை கடத்தியது.

இரவு உணவருந்தியபின் அவனது அறைக்கு வந்தவன் குஜராத் செல்வது குறித்து சிந்திக்கலானான். அது விஷயமாகத் தான் எம்.டியிடம் முன்பே பேசியிருந்தான்.. அவர் அவனையே உடன் செல்லச் சொல்லிவிட்டார். தன்னால் முடியுமா என்றவன் யோசித்திருக்க..

இன்று ராஜாவோடு எஸ்.பி.பி இணைந்துகொண்டார்.

உன்னால் முடியும் தம்பி தம்பி..

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு- உன்

தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு

ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

 

பாடல் முடியும்போது அவனது இதயமும் எதையும் முடிக்கத் தயாரானது.

 

மேகம் கடக்கும்…

Advertisement