Advertisement

 

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 13

 

பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு வந்த கதிர் அன்றைய இரவு நிலாவுடன் அவள் அம்மா வீட்டில் தங்கியதால்.. காலையில் அலுவலகம் கிளம்பும்போது பேருந்து நிறுத்தத்தில் அம்போவென ஒற்றை ஆளாய் நின்றிருந்த அத்துவையும் உடன் அழைத்துக் கொண்டான்.

“ ஒரு டூ வீலர் தான் வாங்குனா என்ன ?? நீ ஒருத்தன் ஓட்டமா இருந்தா மட்டும் பொல்லுஷன் குறைஞ்சிடுதா என்ன.. இன்னிக்கு பாரு பஸ் வரல.. நீ வேற பஸ் பிடிச்சு ஆபீஸ் வர நேரம் என்ன ஆகும்.. பீ பிராக்டிகல் அத்து ” வழக்கமாக அவனிடம் சொல்லும் ஒன்றுதான் இன்று சற்றே அழுத்தமாக.. இன்றாவது அவன் புத்திக்கு உரைக்கட்டும் என்று சொன்னான் கதிர்.

அதற்கு அவனோ விடுடா.. விடுடா.. என்று தான் பதில் கூறினானே தவிர சரி என்று கூறினானில்லை.

இவனை திருத்த முடியாது என்று பெருமூச்சிட்டபடி கதிர் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க.. அது ஒரு வேகத்தடையை தாண்டியதும் கொஞ்ச நேரத்தில் நின்றுவிட்டது.

மீண்டும் ஸ்டார்ட் ஆக சிறிது நேரம் பிடிக்க.. பாம்.. பாம்.. என்ற ஹார்ன் சத்தத்துடன் அவர்களை கடந்து சென்றது அத்து வழக்கமாக செல்லும் பேருந்து.

இதுக்கு நான் பஸ்லயே போயிருப்பன் என்னும்விதமாய் அத்து கதிரைப் பார்க்க.. அவன் பார்ப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வண்டியை கிளப்பிக் கொண்டிருந்தான். ஒருவழியாக இருவரும் அலுவலகத்தை அடைந்தபோது எப்போதும் வரும் நேரத்தை விட இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

இருவரும் அலுவலகத்தினுள் பேசிக்கொண்டே வந்து கொண்டிருக்க.. அங்கிருந்தவர்கள் இவர்களைப் பார்ப்பதும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாய் இருக்க.. இவர்கள் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் பேசிக் கொள்ள நேரம் இல்லாததால்

“ பிரேக்ல பார்க்கலாம் ” என விடை பெற்று அத்து அவனது பிரிவிற்குள் நுழைந்தான். எப்பொழுதும் இவனைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் காலை வாழ்த்து சொல்பவர்கள் இன்று இவனை கண்டபின் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள.. இவன் குழம்பித்தான் போனான்.

‘ எல்லோருக்கும் என்ன ஆச்சு ’ என நினைத்துக் கொண்டே அவன் அறைக்கு வர, அவன் அமர்வதற்கு முன்னரே அவனது மேல் அதிகாரி ராமநாதனிடம் இருந்து அழைப்பு வந்தது.. அவரின் அறைக்குள் நுழைந்தவன் அவரது அந்தப் பார்வையிலேயே எதோ விஷயம் பெரிது என்று கண்டுகொண்டான்.

அதை உறுதி செய்யும் விதமாக

“ என்ன நடக்குது மிஸ்டர். அதுல்.. உங்க கிட்ட இருந்து நான் இத கொஞ்சமும் எக்ஸ்பெக்ட் பண்ணல ” என்றார் அவர்.

“ வாட் ஹப்பெண்ட் சார் ”

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் கூற..

அவரது பதிலில் திகைத்து நின்றவன் பின்பு தனக்குத் தான் தவறாக கேட்டதோ என்று உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் வினவ.. மீண்டும் அதே பதில்..

“ வி லாஸ்ட் தி காண்ட்ராக்ட் ” என்றிருந்தார் அவர்.

அதுலின் நிறுவனத்தார் அந்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து தங்களது தயாரிப்புக்குத் தேவையான மொத்த சரக்கையும் வாங்கிக்கொள்வதாக முன்பே திட்டமிட்டிருந்தனர். இந்த தயாரிப்புகள் வெளிவந்தால் நல்ல லாபம் ஈட்டக்கூடிய நிலையை நிறுவனத்தார் எட்டலாம்.

அதன்படி அந்தத் துறையில் இருந்த அனைவரிடமும் கருத்துக்களை கேட்டபின்.. அதற்கான ஆவணங்களை மேம்படுத்தப்பட்ட வரியின் அறிக்கையின் கீழ் சரிபார்த்து அனுப்பிவிட்டுத் தான் அவன் விடுமுறையில் சென்றதே !!  

எங்கு தப்பு நடந்தது என்று புருவங்கள் முடிச்சிட யோசித்திருந்தவனை அவரது குரல் கலைத்தது

“ எஸ்.ஆர் க்ரூபிஸோடு டையப் பண்ணிகிட்டாங்க ” என்றதும்

மூளை மரத்துப் போய்விட்டதாய் உணர்ந்தான்.. என்ன நடந்தது என்ன நடந்துகொண்டிருக்கிறது எதுவுமே புரியவில்லை.. அந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய நிறுவனம் இவர்களது போட்டி நிறுவனம்.

இதை விட பெரிய டெண்டர்களை எடுத்து நடத்தி வெற்றிகரமாக முடித்த நிறுவனத்திற்கு இந்த சிறு ஒப்பந்தம் கைவிட்டுப் போனால் எல்லாம் ஒன்றும் இழப்பில்லை என்றாலும்.. போட்டி நிறுவனம் கைப்பற்றியது இதன் நன்மதிப்பிற்கு ஒரு இழப்பு தானே. அவ்வகையில் திறமையானவர்கள் குறைவா என்று தான் கேள்வி பிறக்கும்.. இது முழுக்க முழுக்க அத்துவின் கருத்துக்களை கொண்டு ஆவணம் செய்யப்பட்டிருந்தது. இப்போது அனைவரது தலையையும் உருட்டிவிட்டு அவன் தலையில் க்ரீடமிட்டு விட்டது பிரச்சனை.

இழப்பைக் கூட ஈடுகட்டிவிடலாம் ஆனால் நிறுவனத்தின் நன்மதிப்பு கெட்டுவிட்டால் !! அதுதானே முக்கியம்.

ஒரு வாரம் முன்பே அனைத்தும் தயார்நிலையில் இருக்க.. அவனும் மதிப்பிடப்பட்ட தொகைக்கான கணக்கு வழக்குகளை சரிவர வைத்திருக்க.. எப்படியும் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று அனைவரும் எண்ணி இருக்க இப்போது ஒப்பந்தத்தை ரத்து செய்யுமளவிற்கு என்ன நடந்ததென்று அத்துவிற்கு புரியவில்லை. அவன் கொட்டிய உழைப்பு அப்படி.. அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதை.

ராமநாதனோ அத்துவின் பதிலிற்குக் கூட காத்திராமல்,

“ எம்.டி உங்கள மீட் பண்ண சொன்னாரு யு மே கோ ” என்றுவிட்டார் என்னால் ஒன்றும் செய்ய இயலாது நீயே பார்த்துக்கொள் அவ்வளவுதான் என்பதுபோல்.

எம்.டி பிடி பிடியென மேலாளரை பிடித்துக்கொள்ள அவருக்கு அவரது சீட்டை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம். அவர் செய்யவேண்டிய பாதி வேலைகளை அத்துவிடம் அளிக்கத் தெரிந்த அவருக்கு.. அதனால் கிடைத்த புகழை எல்லாம் அனுபவிக்கத் தெரிந்த அவருக்கு.. இன்று ஒரு பிரச்சனை என்று வந்ததும்.. அதுவும் அவருக்கு கீழ் உள்ள அத்துவின் பொறுப்பில் விட்டிருந்த விஷயம் என்றதும் மொத்த பிரச்னையையும் அத்துவின் தலையில் ஏத்திவிட்டு அழகு பார்த்துவிட்டார்.

ஏன் ராமநாதனுமே முதலில் அவன் கோட் செய்திருந்ததை பார்த்து வெல் டன் அதுல் என்று தான் கூறியிருந்தார்.. இப்போது இப்படி உல்ட்டாவாக அல்லவா மாறிவிட்டார். அது வேற வாய் இது நாற வாய் என்றாகிவிட்டது கதை.

அங்கிருந்து தன் அறைக்கு வந்த அதுல் தனது பையை மேஜையில் போட்டு விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கைகளில் முகம் புதைத்துக் கொண்டான்.. அவனுக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

“ மிஸ்டர். அதுல் ரவிச்சந்திரன்.. உங்களை எம்டி மீட் பண்ண சொன்னாரு ” என அங்கிருக்கும் ஒருவர் அவனை கிளப்ப.. சரி என தலை அசைத்து விட்டு  மீண்டும் முன்பு இருந்த நிலையிலேயே அமர்ந்தான்.

“ நீங்க வந்ததுமே வர சொன்னாரு ” இன்னொருவர்..

அவனைக் கிளப்பாமல் அவர்கள் ஓயப்போவதில்லை என்பதை உணர்ந்தவன் எழுந்து வெளியே வந்தான். இப்போது இருக்கும் மனநிலையில் அவனது எம்டியை சந்திக்கத் தயாராக இல்லை.. கேன்டீன் நோக்கித் திரும்பினான்..

கனகு.. அவர் மட்டுமே வழக்கம்போல் மலர்ந்து விரிந்த புன்னகையுடன் அவனை வரவேற்றார். இத்தனை நேரமாய் கனமாய் இருந்த சூழல் சற்றே இலகுவானது போல் ஒரு தோற்றம்.

“ அண்ணா ஒரு காபி ” என்றவன், “ பொங்கல் எல்லாம் எப்படினா இருந்துச்சு ” என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

காலை நேரமாதலால் ஓரிருவர் தவிர யாருமில்லை.. அவர்களும் சற்றே ஓரமாய் அமர்ந்திருக்க.. காபியுடன் வந்து அதுலின் எதிரில் அமர்ந்தார்.

“ எல்லாம் சிறப்பா முடிஞ்சுது தம்பி.. பையன் பொண்ணெல்லாம் லீவு முடிஞ்சு கிளம்பிட்டாங்க.. நானும் வழக்கம் போல கடையை திறந்தாச்சு ” என்றார் புன்னகையுடன்.

“ என்ன தம்பி இன்னிக்கு காலையிலேயே காபியை தேடி வந்து இருக்கீங்க ”

“ ஒன்னும் இல்லைன்னா.. சூடா எதாவது குடிச்சா கொஞ்சம் தெளிவா யோசிக்கலாம் அதான் ” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதிர் பரபரப்பாய் வந்து சேர்ந்தான்.

மூச்சு வாங்க இருவரின் முன்பு நின்றவனை கண்டு கனகு குழப்பமாக அத்துவைப் பார்க்க.. அவனோ கதிரை பார்த்திருந்தான்.

பின்பு என்ன நினைத்தாரோ “ நீங்க பேசிட்டு இருங்க தம்பி.. நான் வரேன் ” என எழுந்து செல்ல.. எரிமலையாய் உள்ளுக்குள் சீற்றம் கொண்ட கதிர் அத்துவின் முன்பு அமர்ந்தான்..

அத்துவோ இன்னும் கூலாக காபியை ரசித்து ருசித்து பருகியபடி தின இதழில் பார்வையை பதித்திருக்க.. பற்றிக்கொண்டு வந்தது கதிருக்கு.

“ அத்து ” என அழுத்தமாக அழைக்க..

“ ரெண்டு நிமிஷம் ” என காபியை காட்டி சொல்லிவிட்டு தொடர்ந்தான்..

கதிருக்குத் தான் இந்த நிலையில் கூட இப்படி பனிப் பாறையாய் இருப்பவனை என்ன செய்தால் தகும் என்று இருந்தது..

பின்னே அவனது பிரிவிற்குள் நுழைந்தவுடன்

“ என்னப்பா உன் ப்ரெண்ட் இப்படி பண்ணிட்டான்.. அவனா இப்படி !! ”

“ எவ்வளவு நாள் திட்டம் போட்டான் இப்படி உழைக்குற மாறி உழைச்சு கம்பெனிக்கு உலைவைக்க ”

“ ஆபெனென்ட் கம்பெனி கிட்ட இருந்து பணம் வாங்கிட்டு இப்படி வேணும்னே கான்ட்ராக்ட் கைவிட்டு போறமாறி செஞ்சானோ என்னமோ ”

இன்னும் பல பல குரல்கள்.. ஒன்றும் புரியாமல் நின்றிருந்தவனை அழைத்து ஒரு சீனியர் அவனுக்கு விஷயம் சொல்ல ஓடோடி வந்து இருந்தான் இவனைத் தேடி. இவனோ ஒரு காபியையும் குப்பைகளையும் ஆமாம் அது அன்றைய நாளில் கூட அல்ல பழைய இதழ்.. அதனை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் ??

இரு நிமிடங்கள் கழித்து

“ சொல்லு நண்பா.. பிரேக்ல பார்க்கலாமுன்னு சொல்லிட்டு போன.. உடனே திரும்பி வந்து இருக்க ” என்றான் இயல்பாக

இவனது இயல்பான பேச்சு கண்டு குழம்பித்தான் போனான் கதிர்.. தனக்கு வந்த தகவல் தான் பொய்யோ என்று எண்ணும் அளவிற்கு போய்விட்டான். எதுவும் பேசாமல் அத்துவையே ஒரு மணித்துளி பார்த்திருக்க.. அவனிடம் சிறு பதற்றமோ பரபரப்போ துளிகூட இல்லை.. எப்பொழுதும் இருக்குமே நான் இங்கு இருந்தே தீருவேன் என அடம்பிடிக்கும் அந்த கீற்றுப் புன்னகை.. அவனது அறிவையும் தெளிவையும் கோடிட்டு காட்டும் தெளிவாக முகம்.. என அதுல் அதுலாகவே இருந்தான்.

“ கதிர் என்ன விஷயம் ”

“ அது நான் கேட்க வேண்டிய கேள்வி.. உன் டிபார்ட்மெண்ட்ல என்ன நடக்குது ?? நீ ஏன் இங்க இருக்க ?? விஷயம் ஆபீஸ் முழுக்க தெரிஞ்சிருக்கு.. என்ன இதெல்லாம்.. நீ எதுவுமே நடக்காத மாதிரி கூலா காபி குடிச்சிட்டு இருக்க.. எனக்கு இருக்கற டென்ஷன்ல கொஞ்சம் கூட உன்கிட்ட இல்லையா ?? ” கோவமாக ஆரம்பித்து நண்பனை பற்றி அறிந்தவனாக சலிப்புடன் முடித்தான்.

இவன் முடித்ததும் இருக்கையிலிருந்து எழுந்தவன் கனகு அண்ணாவிடம் செல்ல..

“ பதில் சொல்லிட்டு போடா ”  

அவனோ அதை கண்டு கொள்ளாது சென்று அவர் வைத்திருந்த காபியை வாங்கி வந்து கதிரிடம் நீட்டினான்.

நான் என்ன கேட்டேன் இவன் என்ன பண்ணறான் என்ற எரிச்சலோடு ஏறிட..

“ எடுத்துக்கோ சொல்றேன் ”

அவன் காபியை கையிலெடுக்கவும் தான், “ இப்போ சொல்லு என்ன தெரியணும் ” என்றான் அதுல்.

“ நீ எப்படி பட்டவன்னு தெரிஞ்சிருந்தும் உன்ன கீழிறங்கி பேச எப்படிடா மனசு வருது.. ஒரு சான்ஸ் கெடச்சா என்ன வேணா பேசுவானுகளா.. அதுவும் என் காதுப்படவே.. ஒருத்தன் அவனோட உழைப்பால உயர்ந்தா பொறுக்காதே !! உடனே அவனை எப்படிடா கீழ தள்ளலாம்னு காத்திருப்பானுக.. அப்படியே அவனுக மூக்கை ஓடைக்குற அளவுக்கு கோபம் வருது அத்து.. ”

“ கதிர்.. விடுடா ” என அவன் தோள்களை தட்ட.. அத்துவின் கையை தள்ளியவன்,

“ உண்ணமாறி எல்லாம் என்னால இருக்க முடியாதுடா.. அப்படி என்னதான் ஆச்சு ?? ”

அத்து அவனது யூகத்தை சொல்லச் சொல்ல கதிரின் முகம் மாற்றம் கண்டு கொண்டே இருந்தது.. அதனைப் பார்த்தவன் மேலும் கூறுவதை நிறுத்தி

“ கதிர்.. எதுக்கு இவ்வளவு டென்ஷன் !! என் மேல எந்த தப்பும் இல்லாதப்போ நான் எதுக்கு பீல் பண்ணனும்.. அதான் அவங்கள அவங்க வழியிலேயே போக விட்டுட்டு நான் இங்க வந்துட்டேன். எனக்கு நம்ம கம்பெனி நேம் தான் முக்கியம்.. அது கெடாம இருக்க என்ன செய்யணும்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. எம்.டி பார்க்கணும்னு சொன்னாராம் இனிதான் போய் மீட் பண்ணனும் ” என்றான்.

“ இப்போவாவது புரிஞ்சுதா நீ என்னதான் ராப்பகலா உழைச்சாலும் உனக்கு நம்ம எண்ட்ரன்ஸ்ல சிலை ஏதும் வைக்க மாட்டானுக. எல்லார்த்துக்கும் என்னவோ அதுதான் உனக்கும் ஆனா நீதான் ஏதோ வொர்க் டெடிகேஷன் சாடிஸ்பாக்சன் மண்ணாங்கட்டின்னு சொல்லி வேலை பார்த்தா.. இப்ப என்ன ஆச்சு ” அத்துவின் மேல்தான் கோபம் கதிருக்கு. நல்லவனாக இருக்கலாம் ஆனால் அதற்கும் எல்லை உண்டே !! இதோ இது அவனுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

கதிரின் அலைபேசிக்கு அழைப்பு மேல் அழைப்பு வர.. எடுத்து பேசியவன்

“ நான் இல்லாமல் அங்கு துரும்பைக்கூட நகர்த்த முடியலயாம்.. என்னை கூப்பிடறானுக.. நீ என்னனு பார்த்துட்டு மெசேஜ் பண்ணு.. நான் வேலை முடிஞ்சதும் வரேன் ” என விடைபெற்ற இவனும் எம்.டி அறையை நோக்கி நடைபோட்டேன்.

இப்போது அவனுக்கு இருக்கும் சூழ்நிலைகள் கூட சோதனைகளே.. இந்த சோதனையில் இதற்கு முன்பு பலர் சிக்கி இருப்பர் ஆனால் அதை சமாளித்து வெற்றிகரமாக எவ்வாறு கடந்து வருகிறோம் என்பதில் தான் உள்ளது அவர்களது வாழ்க்கை பயணம்.

இப்போது வரை பிரச்சனை இதுதான் என்பதில் தெளிவாக இருந்தான்.. அதற்கு தீர்வும் கூட உண்டு.. ஆனால் அதன் விளைவு தான் நிச்சயம் பாதிக்கும். யாரை பாதிக்கிறதோ இல்லையோ தன்னை என்பதில் தெளிவாக இருந்தான். கதிரின் கோபம் கூட அதன் காரணமாகத்தான்..

எம்.டியின் அறைக்குள் நுழைந்தான்.

“ குட் மார்னிங் அதுல் ” என்று புன்னகைத்தவரைக் கண்டு தானும் புன்னகைத்து வணக்கம் வைத்தான். அவனது எதிரில் அமர்ந்திருந்த அவருக்கு எப்படியும் நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் அதை பறை கொட்டி முரசறிவிக்கும் விதமாக காதோரம் நரைக்க ஆரம்பித்திருக்கும் சில பரம்பரை பரம்பரையாக தொழிலில் கால் பதித்து வெற்றி வாகை சூடியதால் வந்த கம்பீரம் ஆனால் அதே சமயம் தான் உள்ள நிலையை எண்ணி கர்வம் என்பதே சிறிதும் கொள்ளாதவர்.

“ வாட்ஸ் அப் யங் மேன் ” அவருக்கு தெரியும் அவன் வந்த விஷயம்.. அவருக்கு தெரியும் என்பது அவனுக்கும் தெரியும்.. ஆனால் அவனே தொடங்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

“ உங்களுக்கு தெரிந்திருக்குமே சார் ” என்றவனின் முகம் இயல்பிலிருந்து மாறி இருந்தது. அவனுக்கு இது போல ஒரு நிலை வரும் என அவன் நினைத்திருக்கவில்லை.. அவனை இவர் குற்றம் சொல்லவில்லை.. ஆனால் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவன் இருப்பதையே அவன் விரும்பவில்லை..

“ ம்ம்.. தெரியும் அதுல் நீ என்ன சொல்ற ” மறந்தும் வார்த்தையை வெளியிடவில்லை..

“ நான் சொல்லறது இரண்டாம்பட்சம் சார்.. இதுல முதல்ல பாதிக்கப்பட்டது நீங்கதான்.. ஒரு எம்டியா நீங்க என்ன ஆக்சன் எடுத்தாலும் நான் அதுக்கு கட்டுப்படறேன் ”

சேர்ந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது ஆனால் அவனது தனித்தன்மையும் திறமையாலும் இவருடன் சற்று நெருக்கம்.. இவனைப் போலவே அவருக்கும் ஒரு மகன் உண்டு.. அதனாலேயே அவரும் இவனிடம் உரிமையுடன் பழகுவதுண்டு.

“ பாதிக்கப்பட்டது நானா !! நல்லா யோசிச்சுப்பாரு.. எனக்கு இந்த கான்ட்ராக்ட் எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. ”

ஆமோதிப்பதாய் தலை அசைத்தவனை பார்த்தவர்

“ சொல்லு அதுல்.. எங்க மிஸ்டேக் ”

அவருக்கு பதில் அளிக்காமல் சிந்தனை வயப்பட்டிருந்தவனை அவரது குரல் மீட்டெடுக்க.. நிமிர்ந்து பார்த்தான்.

“ எவ்வளவு தைரியம் இருந்தா செய்யுற தப்ப செஞ்சுட்டு இப்படி என் முன்னாடி வந்து உக்காந்துருக்க.. ம்ம்.. ” என்றார் குரலை உயர்த்தி.. சீண்டும் விதமாய்.. அவருக்கு நன்கு தெரியும் அதுலைப் பற்றி..

இருவருக்குமே நன்கு தெரியும் பின்னணியில் என்ன நடந்திருக்கிறது அதற்கு யார் கரணம் என்றும். இருவருமே அதைத் தெரிந்தபடி காட்டிக் கொள்ளவில்லை. அதனால் தான் ராமநாதனிடம் கடுமையாக பேசியதுபோல் அவர் அத்துவிடம் நடந்து கொள்ளவில்லை.

அத்துவிற்கு ஆதாரம் தேவைப்பட்டது.. எம்.டிக்கு அத்துவின் திறமையை சோதிக்க வேண்டியிருந்தது.

அவரது கேள்வியில் அவன் அசையாமல் அவரை கூர்ந்து நோக்க.. அவர் தன்னை சந்தேகிக்கவில்லை என்று புரிந்தது.

“ நியாயப்படி பார்த்தா தப்பு செஞ்சவங்களோட வந்து உங்கமுன்னாடி உக்காந்திருக்கணும்.. இதுக்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பேத்துக்கறேன் சார்.. நம்ம கம்பெனி ரெப்புட்டேஷன் சம்பந்த பட்ட விஷயம் இது.. முதல்ல ப்ரொடக்ஸன தடையிலாம செய்யணும்.. ”

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள யோசிக்காமல் அந்நிலையிலும் கம்பெனி குறித்து யோசிக்கிறானே என்ன பிறவி இவன் என்றுதான் தோன்றியது அவருக்கு..

அவனது பதிலில் சிலிர்த்தவர்,

“ உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ” என்றார் ஒரு மென்னகையுடன்..

அவனோ “ ஷெல் ஐ கண்டின்யு வித் மை ஒர்க் சார் ” என்க.. அடப்போப்பா என்றாகிவிட்டது அவருக்கு.

“ கீப் ஒர்கிங்.. அண்ட் ப்ரூவ் யூர்செல்ப்.. ஐ நீட் டு டேக் ஆக்சன் சூன் ” என்றுவிட்டார்.

“ சார் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. மொதல்ல ப்ரொடக்ஸன் செய்வோம்.. இப்போதைக்கு இந்த விஷயம் இப்படியே இருக்கட்டும்.. ஐ மீண்  என்மேலேயே தவறு இருக்கட்டும்.. ”

“ பட் ஒய் ”

“ ப்ளீஸ் சார் ” என்றதும் அவன் விருப்பம் என விட்டுவிட்டார்.

அடுத்து என்ன செய்வதென்று சிந்தனையுடன் எம்.டி அறையிலிருந்து அதுல் வெளி வரவும் தான் எதிர்பட்டான் அவன். அந்த நல்லவன்.. வந்ததில் இருந்து அதுலின் கண்களுக்கு தட்டு படாதவன்.. அதுலிடம் போக்கு காட்டிக்கொண்டு இருந்தவன். கதிரின் டிபார்ட்மென்டிலிருந்து அலுவலகம் முழுதும் அதுலை பற்றிய அரசல் புரசலான செய்திகளை பரப்பிய பெருமை அனைத்தும் இவனையே சாரும்.

இப்போது நேருக்குநேர் எதிர்பட அவன் அதுலை பார்த்து திடுக்கிட்டு நிற்க.. இவனோ என்றும்போல், “ ஹாய் தினேஷ் ” என்று புன்னகையுடன் எதுவும் நடவாதவன் போல் கடந்துவிட்டான்.

கதிருக்கு அழைத்து விவரம் தெரிவித்தவன் பிறகு அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேளைகளில் மூழ்கிப்போனான். மாலை கதிர் வந்து நிற்கவும் தான் அலுவலக நேரம் முடிவடைந்தது தெரியவர, இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் கதிர் கொந்தளிப்பான் என்று உடனே கிளம்பினான்.

 

மேகம் கடக்கும்……

Advertisement