Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 11

 

“ ஒரு நிமிஷம் திரும்பி என்னைப் பாரேன்.. ”

“ …… ”

“ பாரு.. நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்.. ”

“ …… ”

“ உனக்கும் கொஞ்சம் கூட கருணையே இல்லையா !!.. இன்னும் நான் சாப்பிடக் கூட இல்லை.. காலையில எந்திரிச்சதுல இருந்து உன்கூட தானே இருக்கேன்.. அதுக்காவது என் பேச்சை நீ கேட்க கூடாதா ?? ”

“ …… ”

“ ப்ச்.. நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்கல இனிமே நோ பேச்சு ஒன்லி ஆக்க்ஷன் ” என அவனுக்கு முன்பிருந்த காளையின் மீது ஏறி அமர்ந்து கையில் வைத்திருந்த சோப்பை கொண்டு அதனை கழுவத் தொடங்கினான் கதிர்.

அன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதற்காக மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு ஆர்வத்தில் நாங்க பார்த்துக்கிறோம் என களத்தில் இறங்கி விட்டனர் இளம் காளைகள்.. ஆனால் அவர்களை வைத்து செய்து கொண்டிருந்தன அந்தக் காளைகள்.

அதுல், கதிர், மிதுன் தலா ஒரு மாட்டையும்.. நிலா மற்றும் பைரவி இணைந்து ஒரு மாட்டையும் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். பைரவிக்கு மட்டுமே மாடுகளுடன் பழக்கம் உறவு உண்டு எனவே அவளது பேச்சு சமத்தாக கேட்டுக் கொண்டது. மற்றவரின் பாடுதான் திண்டாட்டமா இருந்தது.

“ மாமா.. எப்படி மாமா !! ஒரு வழியா ஓகே பண்ணிட்டீங்க போல ” என்றபடி கதிரின் அருகில் வந்தான் மிதுன்.

“ அடேய் !! பார்த்து பேசு.. நிலா அந்தப் பக்கம் தான் இருக்கா.. நீ ஒன்னு சொல்ல அதை அவ வேற ஒரு மாதிரி புரிஞ்சிக்க.. என் தலைதான் உருளும் ”

“ அது இருக்கட்டும் அந்த மாட்டை எப்படி வழிக்குக் கொண்டு வந்தீங்க ?? ”

“ டேய் சின்ன மச்சா !! அது எல்லாம் ஒரு கலை டா.. ” என்றவனை முறைத்த மிதுன் தன் முன்பு நின்றிருந்த காளையிடம் திரும்பினான்..

“ ஹேய் புஜ்ஜிபா.. ப்ளீஸ் கொஞ்ச நேரம் கோஆப்ரேட் பன்ணேன்.. உன் மேல இருக்கிற இந்த சேறு சகதி எல்லாம் போக வெச்சி உன்னை அழகா மாத்திடுவேன்.. அதுமட்டுமில்லாமல் இந்த நாள் உன் பிறந்த நாள் இல்லையா !! உனக்கு பெயின்ட் பண்ணி.. டிரஸ் பண்ணி.. போட்டோ கூட எடுத்து தரேன்..

நீ காசு கூட தர வேணாம்.. ஆனா ஒரு இடத்தில் மட்டும் போதும் ” என தன் முன் ஒப்பந்தம் போட்டவனை முறைத்த வண்ணம் தலையை சிலுப்பி ஒரு அடி எடுத்து வைத்தான் காளையன் கணேசன்.

“ ஐயோ !! காப்பாத்துங்க ” என பின்னால் நகர்ந்தவன் கால் இடறி உருண்டு விழுந்துவிட..

“ ஹே மிதுன் ” என கதிர் காளையின் மீது இருந்து இறங்க எத்தனிக்க.. அது விட்டால் தானே அவனை இறங்க விடாமல் தடுத்து நகர்ந்துகொண்டே இருந்தது.

அத்து.. அத்து.. என இவர்களுக்கு சற்று தொலைவில் இருந்த அவனை அழைக்க.. குரல் கேட்டு திரும்பியவன் மிதுனைப் பார்த்து அவன் அருகில் ஓடிவந்தான்.

பின்னாலே நிலாவும் ஓடிவர..

“ மிதுன்.. என்னாச்சுடா !! ” என அவனை எழுப்பி நிறுத்திய அத்து அவனுக்கு அடி எதுவும் பட்டதா என ஆராய

“ அண்ணா எனக்கு ஒன்னும் இல்லை.. அந்த மாடு முட்டற மாதிரி வந்ததுல ஒரு அடி பின்னாடி வச்சேன் பேலன்ஸ் மிஸ்ஸாகி உருண்டு உருண்டு விழுந்துட்டேன் அவ்வளவு தான் ”

“ அது மாடு இல்ல.. கணேசன்.. ” என்ற பைரவியை அனைவரும் முறைக்க.. அமைதியாக தலை குனிந்து கொண்டாள்..

“ மிதுன்.. கொம்பு ஏதும் உனக்கு படலையே ?? சொல்லுடா ஹாஸ்பிடல்  போயிடலாம் ” என்று கண்கலங்கிய நிலாவைப் பார்த்து சிரித்தவன்,

“ ஐயோ நிலா இது அவ்ளோ பெரிய சீன் எல்லாம் இல்ல.. உன் கண்ணீரை கொஞ்சம் சேமிச்சு வெய் வெயில் காலத்துல உதவியா இருக்கும் ” என்றவனின் முதுகில் ஒன்று வைத்தவள்..

“ உனக்கு எல்லாமே விளையாட்டுதான்.. எங்கே உன் மாமா ?? ”

“ அங்க பாரு.. மச்சானுக்கு அடிபட்டுச்சே என்ன ஏதுன்னு பார்க்கலாம்னு இல்லாம.. மாடு மேலே ஏறி உட்கார்ந்து படம் பார்க்கிற மாதிரி பாத்துட்டு இருக்காரு ” மாட்டை எப்படி கரெக்ட் செய்வது என இவனுக்கு சொல்லிக் கொடுக்காததை மனதில் வைத்து நிலாவிடம் கோர்த்து விட்டான்.

அவன் எங்கே மாட்டைக் கரெக்ட் செய்தான் !! அது அல்லவா அவனை கரெக்ட் செய்துள்ளது !!

“ இரு வரேன் ” என்ற நிலா கன்னத்தில் கை வைத்து இவர்கள் நால்வரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதிரிடம் வந்து இடுப்பில் கை வைத்து நின்றாள்.

“ ஏங்க.. உங்களுக்கு இது நல்லா இருக்கா.. அவன் உங்க கூட தானே இருந்தான் அவனை பார்த்துக்கறதா விட உங்களுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை.. சரி விடுங்க.. கீழே விழுந்து கிடந்தானே வந்து தூக்கி விடாம ஜாலியா அது மேல ஏறி உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க ” எனப் பொரிய

‘ அடப்போடி.. மனுசன் அவஸ்தை புரியாம பேசிட்டு இருக்கா.. நானா இறங்க மாட்டேன்னு சொல்றேன் அது விட்டானே ’ என மனதுள் புலம்ப..

“ என்னங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வானத்தை ஏன் வெறிச்சு பாக்குறீங்க ”

“ நிலா… ” பொறுக்கமாட்டாமல் பொங்க..

“ பேசாதீங்க வர வர உங்களுக்கு யார் மேலயும் அக்கறை இல்லாமல் போச்சு.. இப்படியே போயிட்டு இருந்துச்சு நீங்க காலேஜ் டேஸ் நிலாவைப் பார்க்க வேண்டி வரும் ” என மிரட்டிவிட்டு மிதுனிடம் திரும்பினாள்.

கதிர் அவன் நிலையை எண்ணி நொந்து தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்களா என அமர்ந்திருக்க அவனின் அன்புத்தங்கை வந்து சேர்ந்தாள்

“ பைரவி நீயாவது வந்தியே.. கொஞ்சம் இந்த மாடு கிட்ட சொல்லி இறக்கி விடுமா.. ”

“ மாடு இல்ல அண்ணா.. அது வேலன் ”

ரொம்ப முக்கியம்.. என நினைத்தவன், “ சரிமா.. மாடு இல்ல.. வேலன் கிட்ட சொல்லி உங்க அண்ணனை கொஞ்சம் காப்பாத்துமா ”

“ அதெல்லாம் ரொம்ப கஷ்டம் அண்ணா.. ஏறுறதுக்கு நீங்களே ஏறிட்டிங்க இறங்கறதுக்கு அவன் மனசு வைக்கணும்.. அவன் எப்ப மனசு வைக்குறானோ அப்ப தான் நீங்க இறங்க முடியும்.

சரி நான் போய் அழகனுக்கு பெயிண்ட் அடிக்குறேன்.. நீங்க எது தேவைனாலும் குரல் கொடுங்க.. சாப்பாடு தண்ணி எல்லாம் இங்கயே வந்திரும் அதை நினைச்சு கவலைப் படாதீங்க ” போகிற போக்கில் அசால்டாக அவன் அரஸ்ட் ஆகி நிற்பதை சொல்லிச் சென்றாள்.

“ மிதுன் நீ எதுவும் பண்ண வேணாம்.. தாத்தா கிட்ட போய் வேற எதுவும் வேலை இருக்கான்னு கேட்டு செய்.. நான் இங்க எல்லாம் பார்த்துக்கறேன் ” என பொறுப்புள்ள அண்ணனாக அவனை அனுப்பி வைத்தான் அதுல்.

சிறுவயதிலிருந்தே அப்படித்தான்.. ஒரு சிறு எறும்பை கூட மிதுனிடம் நெருங்கவிட்டதில்லை.. எந்நேரமும் அவனை காக்க அவனுடனே இருப்பான் அதுல். பொறுப்பு.. பொறுமை.. என்பது அவன் உதிரத்தில் கலந்து ஒன்றாதலால் கடமையில் இருந்து ஒருபோதும் தவறியதில்லை..

“ மாம்ஸ் என்ஜாய் ” என்று போறபோக்கில் கதிரை வெறுப்பேற்றிவிட்டே சென்றான் மிதுன்.

அதன் பின் அதுல் அவனுடைய மாட்டைக் குளிப்பாட்டி.. கொம்புசீவி.. பெயிண்ட் அடித்து சிறப்பாக அலங்கரித்துவிட்டு கணேசனிடம் வந்தான்.

மற்றவர்களிடம் எப்படியோ கணேசன் அடங்கித்தான் போனது அத்துவிடம்.. பதினைந்து நிமிடங்களில் மடமடவென வேலைகளை முடித்து அவனை அழைத்து சென்று மற்ற மாடுகள் இருக்குமிடத்தில் கட்டி விட்டு வந்தான்.

“ கதிர் நீ இன்னுமா உன் வேலையை முடிக்கல ”

“ நான் எப்போடா சொன்னேன் நான் வேலை செய்யுறேன்னு ”  

“ அப்புறம் ”

“ அப்புறம் எல்லாம் அப்புறமா சொல்றேன்.. முதல்ல இந்த மாடு.. இல்ல இல்ல இந்த வேலனுக்கு புரிகிற மாதிரி ஏதாவது பாஷையில் பேசி என்னை கீழே இறக்கிவிட சொல்லுடா ”

“ அதான் அப்போ இருந்து மேலேயே இருக்கியா !! நான் கூட வேலை செய்ய வசதியா இருக்கும்னு உட்கார்ந்து இருக்கியோன்னு நெனச்சேன் ” என்றபடி வேலனை தடவிக்கொடுத்து ஏதேதோ பேசி ஒருவழியாக கதிரை தரை இறக்கி விட்டான்..

“ இந்த மாடு கூட பிரண்ட்ஷிப் வெச்சிக்க முயற்சி பண்ணினது குத்தமாடா !! பிடிக்கலைனா என் ரெக்வஸ்ட்டை ரிஜெக்ட் பண்றது விட்டுட்டு சின்னப்புள்ளத்தனமா மேல உக்கார வெச்சு பயம் காட்டுது ” வேலணை திட்டிக் கொண்டிருந்தான்.

“ கதிரண்ணாஆஆ ”

“ மன்னிச்சுக்கோ மாடு இல்ல.. வேலன் ” என பின்னால் திரும்பி பைரவியிடம் சரண்டர் ஆனான்.

“ நம்மள மாதிரி தானே அதுவும் ஒரு உயிர்.. அதுக்கு கொடுக்கிற மரியாதையை நாம கொடுத்து தானே ஆகணும்.. உங்கள கதிர்ன்னு கூப்பிடாம அந்த மனுஷன் இந்த மனுஷன்னு கூப்பிட்டா ஒத்துக்குவீங்களா !! சொல்லுங்க ”

அவளிடம் இருந்து விலகி கதிர் அருகில் சென்ற நிலா, “ என்ன நீ இவரை நிற்க வைத்து கேள்வி கேட்கிற !! அதுவும் என் முன்னாடியே ” என பைரவியிடம் கேட்க..

‘ அப்படி கேளுடா என் நிலாக்குட்டி.. இப்ப பதில் சொல்லு என் ஆளு கிட்ட ’ என கதிர் பைரவியை வெற்றி பார்வை பார்க்க..

அடுத்தநொடியே.. “ அதெல்லாம் நான் மட்டும் தான் பண்ணனும்.. நீங்க ஏன் கதிர் வேலனை மாடுன்னு சொல்றீங்க.. ஒழுங்கா மரியாதை குடுங்க ” என்று வாரி விட்டாள் நிலா.

பைரவியும் நிலாவும் சிரித்துவிட.. அதுல் மட்டும் கதிரை பாவமாக பார்த்திருந்தான்.

“ நண்பா நீ மட்டும் ஏன் அமைதியா இருக்க.. உன் பங்குக்கு ஏதும் வெச்சிருந்தா எடுத்து விடு ” என்றான் கதிர்.

“ போதும்டா ஏற்கனவே என் தங்கச்சியாலயும் உன் தங்கச்சியாலயும் நீ டேமேஜ் ஆகிட்ட.. இதுல நானும் பண்ணினா நல்லா இருக்காது ” என பெருந்தன்மையுடன் கூற

‘ எனக்குன்னு வந்து சேர்ந்திருக்காங்க பாரு ’ என்றவாறு அடுத்த வேலையை பார்க்கச் சென்றான் கதிர்..

“ ஆனா பைரவி.. இனிமே தெரியாமல் கூட நாங்க யாரும் மாடுன்னு சொல்ல மாட்டோம் ” என்றான் அதுல் ஒரு புன்னகையுடன்.

தோளைக் குலுக்கியபடி “ தாத்தா கூப்பிட்டாரு வாங்க போகலாம் ”

“ போகலாமே ” என அவனும் பின் தொடர்ந்தான்.

அதன்பின் மாட்டுத் தொழுவத்தை மெழுகி அதனை அலங்கரித்து பைரவியின் வளர்ப்பு காளைகளான கணேசன், வேலன், அழகன் மற்றும் கோமாதா லக்ஷ்மியையும் அலங்கரித்து.. படைப்பிற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து விட்டு சற்று ஓய்வெடுக்க அறை பக்கம் சென்றனர்.

அதுல் மட்டும் தாத்தாவுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க..

 

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

 

என பாடிக் கொண்டே உள்ளே வந்தவள்.. இருவரையும் பார்த்து பாட்டை நிறுத்த.. அவள் கையிலிருந்த குறிப்பேடையும் அவளையும் அத்து மாற்றி மாற்றிப் பார்க்க…

சட்டென அதை அவள் பின்னால் மறைக்க.. அத்து சிரித்துவிட்டான்.

“ பாத்தாச்சு.. பாத்தாச்சு.. இங்க கொடு. பாட்டு வேற ஒரு மார்க்கமா பாடிட்டு வர.. அது மாதிரி கவிதை ஏதும் முயற்சி பண்றியா என்ன !! ” என்றவனை முறைத்தாள்.

“ நான் ஒன்னும் அந்த மாதிரி எல்லாம் எழுத மாட்டேன் ”  

“ கொடு அதையும் பார்க்கலாமே !! ”

“ ஆங்.. அதுக்காக எல்லாம் கொடுக்க முடியாது. நீங்க வேணும்னா தாத்தா கிட்ட கேட்டு வாங்கிக்கோங்க.. என்னோட முதல் வாசகர் என் சின்னு தாத்தாதான். அப்படித்தானே தாத்தா !! ” என அவர் கன்னம் பிடித்து கொஞ்ச..

“ ஆமாடி ராசாத்தி.. சரி முடிச்சுட்டியா ”

அவள் உதடு பிதுக்க..

“ இன்னுமா முடிக்கல.. ”

“ எங்க தாத்தா நான் பேப்பர் பேனா எடுத்தாலே எங்க அம்மாவுக்கும் மாமாவுக்கும் அடிச்சிக்கிது போல.. வேல மேல வேல கொடுக்குறாங்க.. அதான் இங்க எடுத்துட்டு வந்தேன் ” என்றபடி உட்கார்ந்தாள்.

“ அப்படி என்ன எழுதுற !! ” அத்துவிற்கு அதை தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம்.

“ நாவல்.. ”

“ நாவலா.. ” என அவன் இழுக்க..

“ வரலாற்று நாவல் ” என்ற பதிலில் அவனது முகம் மலர்ந்தது.. பெரும்பாலும் அவன் விரும்புவதும் அவற்றையே.

ஒரு ஆவலுடன் “ யாரைப் பத்தி !! முடிச்ச வரைக்கும் நான் படிக்கவா ” என கேட்க.. “ ம்கூம் ” என்றாள்.

“ தாத்தா உங்களுக்கு மட்டும் படிக்க கொடுத்தாயில்ல.. எனக்கும் கொடுக்க சொல்லுங்க ” என சிறு பையனாக மாறி சண்டையிட அவளுக்குள் ஒரு யுத்தி..

“ சரி சரி நான் தரேன்.. ஆனா பதிலுக்கு நான் கேக்குறது நீங்க தரணும் ”

சரி என்றான் சற்றும் யோசிக்காமல்.

“ நீங்க போன முறை ஊருக்கு வந்தப்போ நான் பொன்னியின் செல்வன் படிச்சிட்டு இருந்தேன்.. அதுல சில அல்ல பல பக்கங்களைக் காணோம்.. இப்பவே அதை நீங்க எங்களுக்கு சொல்லணும்.

அந்த லைப்ரரில வேற புக்கும் கிடைக்கல.. நீங்க சொன்னிங்கனா தான் நான் என்னோட கதையை உங்களுக்கு படிக்க தருவேன் ” என்றாள் விற்புருவத்தை உயர்த்தி.

அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.. “ ஏன் தாத்தா !! நான் முதல் முதலா வந்த அன்னைக்கு என்னை பார்த்து பேச பயந்து ஓடின பைரவியா இது.. எனக்கு என்னவோ தெரியல. இது பைரவினா அப்போ அது யாரா இருக்கும் ” என கேலி செய்ய.. தாத்தாவும் யோசிப்பது போல் பாவனை செய்தார்.

“ தாத்தா ” என சிணுங்கியவள் அத்துவிடம், “ அது பயம் இல்ல.. சின்ன தயக்கம் அவ்வளவுதான் ”

ஆஹான்.. என அவன் கேட்டுக்கொள்ள

“ இப்போ கதை சொல்லப் போறீங்களா இல்லையா ?? ” என இவள் மிரட்ட..

“ மிரட்டாதமா பைரவி.. உங்க ஊருக்கு வந்த விருந்தாளியை இப்படியா மிரட்டுவாங்க ”

அவனை ஒரு பார்வை பார்த்தவள்.. “ ஏன் தாத்தா இவங்க நம்ம விருந்தாளியா என்ன ?? ” என்று கேட்டாள்.

“ அதானே !! நீ இந்த மண்ணுக்கே சொந்தமானவன் கண்ணா.. நீ எப்படி விருந்தாளின்னு சொல்லலாம் ” என அவர் பிடித்துக் கொள்ள..

“ தெரியாம சொல்லிட்டேன் விட்டுடுங்க.. சரி வாங்க பொன்னியின் செல்வன் பக்கம் போகலாம் ” என்று ஆரம்பித்தான்.

 

“ பொன்னியின் செல்வர் வாழ்க வாழ்க !! ”

“ அன்னிய மன்னரின் காலன் வாழ்க வாழ்க !! ”

.

.

.

சேனாதிபதி பூதிவிக்கிரமகேசரியும் பார்த்திபேந்திரனும் அவர்களை நெருங்கி வந்து விட்டனர்.

“ இளவரசே இந்தப் பிள்ளையை நான் தான் தங்களிடம் அனுப்பினேன் !! இவன் ஏதாவது தவறாக நடந்து கொண்டு விட்டானா !! கொஞ்ச நேரம் கதிகலங்கி போய்விட்டோம் ! ”

“ ஆம் தளபதி ! இவருடைய ஏச்சை என்னால் பொறுக்க முடியவில்லை

‘ இலங்கையில் யுத்தம் நடக்கிறது என்றார்களே !! எங்கே யுத்தம் ? எங்கே யுத்தம் ? ’ என்று கேட்டு என்னைத் துளைத்து விட்டார்..

‘ இதோ யுத்தம் !! ’ என்று காட்டினேன் ”

இவ்வாறு இளவரசர் கூறியதும் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மறுபடியும் ஆரவாரம் செய்தார்கள்.

 

கண்மூடி அமர்ந்து சிறு பிசிறின்றி கல்கியின் காவியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக்கொண்டிருந்த அத்துவிற்கும் ஆரவாரம் கேட்க.. விழி திறந்தான்..

அவனைச் சுற்றிலும் கதிர், மிதுன், நிலா, தாத்தா, பைரவி அனைவரும் அமர்ந்திருந்தனர்.

“ நண்பா இதை எழுதின கல்கி ஐயா கூட இப்படி பார்க்காம எழுதினதை சொல்லச் சொன்னா சொல்லமாட்டாரு.. எப்படிடா ” இன்னும் கூட அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை விட  நம்பமுடியவில்லை.

அதெப்படி ஒருவனால் அத்தனை பெரிய வரலாற்றுப் புதினத்தை நினைவில் வைத்து கூற முடியும்..

அவனுக்கு எங்கே தெரியப்போகிறது.. ஒரு காலத்தில் பசி தாகம் தூக்கம் அனைத்தையும் மறந்து பொன்னியின் செல்வனை படித்தவன் அத்து என்பது. அது என்னவோ சோழர்களின் பால் அத்தனை ஈர்ப்பு.. அதிலும் குறிப்பாக ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மனின் மேல் !!

அவனது ஆர்வத்திற்கு ஊற்றாக இன்று பல படைப்புகள் அவனுக்கென்று.. நூறு முறைக்கு மேல் கல்கியின் படைப்பை வாசித்து இருப்பான்..

இன்னமும் பைரவி பிரமிப்பில் இருந்து வெளிவரவில்லை.. அவளை எழுப்பிய நிலா,

“ பைரவி.. கதையை நிறுத்தி அரை மணி நேரம் ஆச்சி. இப்பவாவது வெளிய வர்றியா ” என்றதும்தான் நடப்பிற்கு வந்தாள்.

“ நான் சொல்லறது ஒரு பக்கம் இருக்கட்டும்.. பைரவி இத படிச்சு நீங்க கேட்டதில்லையே !! இன்னிக்கு கேளுங்க ” என்று அத்து அவளைப் பார்க்க.. அவளோ தயங்கினாள்.

அவன் கண்களாலேயே ‘ ப்ளீஸ் ’ என்கவும்.. எழுந்து சென்று புத்தகத்தை கொண்டு வந்து அதுல் நிறுத்திய இடத்திலிருந்து தொடர்ந்தாள்..

அவளது பேச்சிலும்.. நடையிலும்.. அதில் மிளிர்ந்த வீரத்திலும்.. கொள்ளைதான் போயினர் அனைவரும். வந்தியத்தேவனாகவும் இளவரசனாகவும் படைத்தளபதியாகவும் பூங்குழலியாகவும் அவர்களை கொள்ளை அடித்தாள்.

அதன் பிறகு கூட்டம் கலைய..

“ ஓய் !! நான் கேட்டது எங்க ”

“ என்ன கேட்டீங்க !! ” என ஒன்றுமே தெரியாததுபோல் வினவ.. அத்து முறைக்கவும்..

“ இன்னும் ஒருசில அத்தியாயம் தான் இருக்கு.. முடிச்சதும் தரவா ”

“ அப்ப சரி ” என்று எழுந்து மாட்டுத் தொழுவம் சென்றான்…

 

*********

 

பொன்மாலைப் பொழுதில்..

அழகே உருவான அந்த தோட்டத்தில்.. பட்டி அமைக்க ஓரிடத்தை தேர்வு செய்து.. அவ்விடத்தை சுத்தம் செய்து.. குழி வெட்டி.. சாணம் தெளித்து.. ஒரு சிறிய தெப்பக்குளம் அமைத்து.. அதன் இரு புறங்களிலும் மாவிலைகள் வேப்பிலைகள் கரும்பு மஞ்சள் சேர்த்து கட்டி இருந்தனர். அதில் சிறு கற்களால் ஆன கருப்பராயன் மாட்டையகவுண்டன் போன்ற காவல் தெய்வங்கள் வீற்றிருக்க.. இருபுறமும் மண் தீபம் ஒளிர்ந்திருந்தது. காதோலை கருகுமணியும் மடிப்புடவையும் அங்கு இடம் பெற்றிருக்க..  

ஐந்து பொங்கல் ஏழு பொங்கல் என்று முறையாக வரிசைப்படுத்தி வைத்த புத்தரிசியிலான பொங்கலிலிருந்து சிறிது எடுத்து சாமிக்கு படையலிட்டு விட்டு..

பச்சரிசியிலான மாவிளக்கில் திரியிட்டு தீபங்கள் ஏற்றிவிட்டு.. மனம் கமழும் சாம்பராணியுடன் தேங்காய் பழம் வைத்து.. அவ்விடமே பூக்கோலம் பூண்டிருக்க..

இந்தத் திருநாளில் மன இருளானது அழிந்து புது இன்பம் பிறக்குமாக என தாத்தா சென்று தீபாராதனை காண்பித்தார். தீபாராதனை முடிந்ததும் அனைவரும் தெப்பக்குளத்தில் காணிக்கைகளை போட்டு வழிபட்டனர்.

மூன்று பேர் முன்வந்து.. மூன்று மண் பானைகளில்.. இரண்டில் நீரையும் ஒன்றில் படைப்பிலிருந்த பொங்கலையும் எடுத்துக்கொண்டு..

 

அரசனம் பட்டியாரே அரசனம்

வாய்ப்பூசு பட்டியாரே வாய்ப்பூசு

கைத்தண்ணி பட்டியாரே கைத்தண்ணி

 

ஒருவர் பின் ஒருவராக பட்டியை சுற்றி வலம் வந்தபின்.. மூவரும் அந்த தொழுவத்திலுள்ள வயதான பசுவிற்கு பொங்கலை ஊட்டச் சென்றனர்.

முதல் நபர் சென்று அரசனம் பட்டியாரே அரசனம் என்று பசுவின் மீது தண்ணீரைத் தெளிக்க..

இரண்டாமவர் வாய்ப்பூசு பட்டியாரே வாய்ப்பூசு என்று கைநிறைய பொங்கலெடுத்து பசுவிற்கு ஊட்ட..

மூன்றாமவர் கைத்தண்ணி பட்டியாரே கைத்தண்ணி என்று மீண்டும் ஒருமுறை தண்ணீர் தெளித்தார். கோமாதா சாப்பிடுவதாய் அமைக்கப்பெற்ற ஒன்று தான் இந்த சாங்கியங்கள். அதற்கேட்ப நாக்கை சுழற்றி பொங்கலை சுவைத்தது கோமாதா.

அதன்பின் கிடாரிக் கன்றின்மேல் மாவிளக்கை வைத்து அதை பட்டியை சுற்றி அழைத்து வர.. வலம் வந்ததும் அந்த கன்றை பின்னாலிருந்து தெப்பக்குளத்தை நோக்கி ஒருவர் விரட்டி விட.. அதை முன்பிருந்து ஒருவர் பாய்ந்து சென்று பிடித்தார். கன்று இல்லாத பட்டியில் சிறுமியின் தலையில் சும்மாடிட்டு மாவிளக்கு வைப்பது வழக்கம்.

இதெல்லாம் கிராமங்களில் இன்றும் நடக்கும் இனிய நிகழ்வுகள்..  

தங்களது உழவுத் தொழில் சிறக்கவும்.. மூன்று போகம் நெல் விளையவும்.. மும்மாரி பொழியவும்.. உழவுத் தொழிலையும் தங்களையும் வாழவைக்கும் கால்நடைகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். கால்நடைகள் அனைத்தும் கழுத்தில் பூமாலையோடு.. நெற்றியில் சந்தனம் பொட்டோடு..  தெய்வாதீனமாக காட்சியளித்தது.

அத்து, மிதுன், கதிர், நிலாவிற்கு இங்கு நடப்பதெல்லாம் புதிதிலும் புதிது.. விலங்குகளின் மீது இவ்வளவு அன்பா.. அவை தங்கள் பெற்ற பிள்ளைகளை போலல்லவா பாவித்து வளர்க்கின்றனர். இப்போது புரிந்தது கதிரிற்கு மாடு என்றதும் பைரவிக்கு வந்த கோபத்தின் காரணம்.

அதை கதிர் அதுலனிடமும் தெரிவிக்க.. ஆமோதித்தபடியே பைரவியைத் தேடினான்..

அங்கு கூட்டம் கூடியதில் பயந்து மிரண்டிருந்த பிறந்து சில மாதங்களே ஆன கன்றின் அருகில் சென்ற பைரவி.. அதனை நீவிக்கொடுத்து கொஞ்சியபடி அதன் அருகில் நின்றிருந்தாள்.. அதற்கும் அவள் பெயர் வைத்துவிட்டாள்.. சீதா அதன் பெயர்.

அவன் அவள் அருகில் வர..

நிமிர்ந்து பார்த்தவள்..

“ வாங்க.. வாங்க.. மறந்தே போய்ட்டேன். சீக்கிரம் வாங்க.. ” என்று ஒரு திசையில் விரைந்தாள்.

“ என்ன எங்க கூப்பிடுறா ” என்று யோசித்தபடியே அத்துவும் அவள் பின்னால் சென்றான்..

அவள் சலவை கல்லின் மீது ஏற.. இப்போது புரிந்தது அவனுக்கு.. அவள் வாழை இலையை அறுத்துக் குடுக்க.. அதை வாங்கி நீரில் சுத்தம் செய்து வந்தான்.  

பூஜை முடிந்ததும் அனைவரும் உணவருந்த அமர்ந்திருக்க..

தலை வாழையிலையில் ஒரு ஓரத்தில் உப்பிட்டு.. அரசாணிக்காய், சேனைக்கிழங்கு, அவரைக்காய் பொறியலிட்டு.. மொச்சைப்பயிர் குழம்போடு புளிக்குழம்பும் சேர்த்து.. பொங்கலிட்ட சாதத்தை பரிமாறி.. வடையோடு பாயசமும் சேர்த்து.. ஒரே படையல் தான் அவர்களுக்கு.

மிதுன் வடையை ஆராய்ச்சி செய்திருக்க.. கதிர் பாயசத்தை அருந்திவிட்டு நிலாவின் புறம் இருந்ததில் கைநீட்ட.. அவன் கையை தட்டியவள்,

” பைரவி.. உங்க அண்ணனுக்கு இன்னோரு டம்பளர் பாயசம் வெய் மா ” என்றதும் அவள் கதிருக்கு வைத்துவிட்டு.. அருகிலிருந்த அத்து கேட்காமலே அவனுக்கும் ஒன்றை வைத்துச் சென்றாள்.

வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவன் அவள் எதுவும் நடவத்ததுபோல் நின்றிருக்க.. இவனும் ஒரு புன்முறுவலுடன் பாயசத்தை அருந்தினான். அவர்களோடு ஊரே அங்கு கூடியிருந்தது.

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் அந்த கிராமத்தில் இல்லை அனைவருக்கும் சொந்தமாக நில புலன்கள் இருக்கும் அதில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். சின்னு தாத்தாவின் வீடு பழைய பாரம்பரியமான ஒன்று அவர்கள் பரம்பரை பரம்பரையாக அங்கிருப்பதால் அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீது மட்டும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு கிராம மக்கள் அனைவரிடத்திலும்.

அதனால் அனைவரும் முதலில் அவரது பட்டியில் சாமி கும்பிட்டுவிட்டு தங்களது பட்டி நோக்கி திரும்பினர். வந்திருந்த அனைவரும் விடைபெற்று இருக்க.. பைரவியும் நிலாவும் பைரவியின் அம்மாவும் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்..

கதிரை அழைத்துக் கொண்டு அவர்களிடம் வந்த அதுல்..

“ பைரவி.. எல்லாரும் சாப்டாச்சு.. நீயும் அம்மாவும் தான் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க.. முதல்ல வந்து சாப்பிடுங்க… ”

“ இல்ல.. இதெல்லாம்….. ” என்றவளைப் பிடித்து இழுத்து உக்கார வைக்க.. கதிர் இலை போட்டு பரிமாறினான்..

அவளின் அம்மா அதெல்லாம் வேண்டாம் என மறுக்க.. அவர்கள் அதெல்லாம் கேட்டால் தானே ! அவர்களுக்கு உணவளித்த அன்னலக்ஷ்மிகளை உக்கார வைத்து உணவருந்த வைப்பதில் கிட்டாத மகிழ்ச்சி வேறெதில் கிட்டி விடப்போகிறது ??  

அனைவரின் மனமும் நிறைந்து இருந்தது…   

பட்டிப்பொங்கல் இனிதே நிறைவடைந்தது.

     

   

 

மேகம் கடக்கும்..

Advertisement