Advertisement

                                                                                         

        

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 10

 

“ அத்து… அண்ணா.. எழுந்திரு ” என எழுப்பிய மிதுனைக் கண்டு எழுந்து அமர்ந்தான்…

காலை நேரத்து இள மஞ்சள் வெயில் அவன் தேகம் தொடவே விடியலை உணர்ந்தான்…

“ விடிஞ்சு ரொம்ப நேரமாயிடுச்சு போல… ” என எழுந்து கீழே வர

“ ஆமா நாங்க எல்லாருமே ரெடி ஆகிட்டோம்… நீ மட்டும் தான்… ” என்றபடி அவனுடன் கீழே வந்தான் மிதுன்

குளித்துமுடித்து அவனது தாத்தா எடுத்து தந்த புது துணியை அணிந்து வெளியே வந்தவன் கண்களில் விழுந்தாள் பைரவி.. அடர் பச்சை நிற ரவிக்கை  மற்றும் பாவாடையில் ஆரஞ்சு நிற தாவணியில் பூஞ்சோலையாய் பூத்திருந்தாள்..

தலையில் கட்டிய ஈரத்துணியுடன் பொங்கல் வைக்க தேவையானவற்றை எடுத்து வைத்து.. பாதக்கொலுசுகள் இசையெழுப்ப அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் கால் முளைத்த பூவாய்..

அவள் அருகில் நின்றிருந்த நிலா ஏதோ சொல்ல.. தலையசைத்துவிட்டு தாத்தா வீடு நோக்கி ஓடி வந்தாள்..

வந்தவளின் சிந்தையில் அதுல் நின்றிருந்தது விழாமல் போக… அவன் மீது விழவிருந்தாள்.. சட்டென அவன் பிடித்து இழுத்து நிறுத்தி விட்டான்..

மூச்சு வாங்க நின்றவளைப் பார்த்ததும்…

“ இரு.. இரு.. எதுக்கு இப்ப இந்த ஓட்டம்.. அவ்வளவு அவசரம் என்ன ? கொஞ்சம் பொறுமையா தான் செய்யேன்.. ”

“ நேரம் ஆச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்திலே மாமா வந்திடுவாங்க.. அதுக்குள்ள எல்லாம் தயாரா வெக்கணும்… ஒரு நிமிஷம்… ” என பேசிய படியே உள்ளே சென்றவள் எதையோ எடுத்துக்கொண்டு திரும்ப..

அவன் இன்னமும் அங்கு தான் நின்றிருந்தான்.

“ நீங்க மெல்ல வாங்க… நான் முன்னாடி போறேன்… ” என அவனை பேசவிடாமல் ஓடினாள்.

“ நான் சொல்றத கேக்க கூடாதுன்னே முடிவு பண்ணி இருப்பா போல… ” என அதுலனும் பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்து சேர.. மிதுனும் கதிரும் கரும்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தனர்.

மிதுன் கேமராவுடன் காத்திருக்க.. கதிர் கரும்பை வைத்து சாகசங்களைச் செய்து கொண்டிருந்தான்.

“ கதிர் !! என்னடா ஏதோ செய்யுற ஆனா என்ன செய்யறேன்னு தெரியலையே.. ” என்றான் சிரிப்புடன்

அவனை முறைத்தவன், “ எல்லாம் மச்சாங்கற பேர்ல இருக்கிற இந்த விஷமம் பார்த்த வேலை ” என கையிலிருந்த கரும்பை எடுத்து மிதுனை அடிக்க…

“ ஆ… மாமா வலிக்குது… அண்ணா மாமா சொல்றதை நம்பாத… அக்கா முன்னாடி சீன் காட்ட தான் கரும்பை வெச்சு வீர சாகசம் பண்ணிக்கிட்டு இருக்காரு.. ” என வலி பொறுக்காது அவன் போட்டுக் கொடுக்க..

“ துரோகி.. ” என கரும்பை கொண்டு அவனை துரத்த ஆரம்பித்தான்..

அக்காஆஆ.. என அவன் நிலாவிடம் ஓடிவிட..

“ மலையேற மச்சான் துணை வேணும்னு யாரோ சொன்னதை நம்பி இவன்கூட வந்தா !! இவன் என்னை புடிச்சு டீலாவுல தள்ளி விட்டுருவான் போலயே ” என்று புலம்பியபடி கதிரும் அத்துவிடம் வந்து சேர்ந்தான்.

“ நண்பா… நீ ஏதும் முயற்சி பண்றியா… ” என்றதும்.. அத்து புன்னகையுடன் எழுந்தான்…

ஒரு கட்டு கரும்பு அவன் முன்பு வைக்கப்பட.. அதனை ஒரே முயற்சியில் உடைக்க முயற்சித்தான்.. கதிர் ஆவது இரண்டு மூன்று கரும்புகளை உடைத்தான்.. அத்துவினால் வளைக்க கூட முடியவில்லை.. இருவரும் அதை எப்படி எளிதில் உடைப்பதென்று அறிந்திருக்க வில்லை..

பின்னால் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்க.. திரும்பி பார்த்தான்… இவன் திரும்பியதும் பைரவி வெடுக்கென்று குனிந்துகொள்ள..

“ ஸ்ஸ்ஸ்… அத்து வரவர உன் ஆர்வக்கோளாறு ஒரு அளவில்லாமல் போகுது… ” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு திரும்பிக் கொண்டான்..

பானையில் அரிசி போட்டு விட்டு நிலாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவர்களிடம் வந்தாள் பைரவி..

“ என்ன இப்படி எல்லாத்தையும் ஒரே முயற்சியில உடைச்சிட்டீங்களே !! உங்ககிட்ட இப்படி ஒரு திறமை இருக்குன்னு தெரியாம போச்சே… ச்ச்சே ச்ச்சே.. ” என வியந்ததுபோல் பாவிக்க..

“ ஓய் !!! என்ன கிண்டலா ?? ” என்றனர் கதிரும் அதுலும்..

ச்சே.. ச்ச்சே என மறுப்பாக தலையசைத்தவள் அங்கிருந்த கரும்பு கட்டை  எடுத்து இருவரையும் பார்த்தபடியே, “ இப்படித்தான் உடைக்கணும் ” என சர்வ சாதாரணமாய் உடைத்துப் போட..

இருவரும் ‘ஆஆ’ வென பார்த்திருக்க…

“ வாவ்வ்வ்… பையு செந்தமிழ் நாட்டு தமிழச்சின்னு ப்ரூஃப் பண்ணிட்ட… ” கேமராவில் அவளை அழகாகப் படம் பிடித்தபடி நிலாவுடன் வந்தான் மிதுன்.

“ ஏன்டா சின்ன மச்சா.. கேமராவை தூக்கிட்டே திரியுற.. நீ வந்து கரும்பு உடைக்கறதுதுது..  ” என்று நேரம் பார்த்து சிக்க வைத்தான் கதிர்.. சிக்குபவனா மிதுன்,

“ மாமா நான் அங்க வந்துட்டா நீங்க கரும்பு உடைக்கற அழகான மொமெண்ட்ஸ் எல்லாம் யாரு கேப்செர் பண்ணுவா !! நாளைக்கே இதெல்லாம் ப்ரிண்ட்டு போட்டு குடுத்தா நடு வீட்டுல மாட்டி எங்கக்கா அழகு பார்ப்பா.. இல்லக்கா !! ” என்று நிலாவை பார்க்க..

‘ என்னது என் வீட்டுக்காரரு கரும்பு உடைக்குறாரா ’ என்று மாவீரன் அலெக்சாண்டர் ரேஞ்சிற்கு எண்ணிக்கொண்ட நிலா.. கதிரை பாசமாக பார்த்து வைக்க.. கதிருக்கு தான்.. பக்… என்றிருந்தது.

மேலும் மிதுனது அக்கா என்ற அழைப்பில் உச்சி முதல் பாதம் வரை குளிர்ந்திருந்த நிலா,

“ ஆமாடா மித்து.. நல்லா பெரிய சைசுல போட்டோ போட்டு குடு.. வீட்டுக்கு உள்ள ஒன்னு வெளில ஒன்னு மாட்டிறேன்.. ”

“ எதுக்கு திருஸ்டி பூசணிக்காவுக்கு பதிலாவா ” என்ற கதிரிடம் திரும்பியவள்

“ என்னங்க சும்மா பேசிகிட்டு இருக்காம் சீக்கிரம் ஒரு கட்டு கரும்பையும் உடைங்க.. ஆல் தி பெஸ்ட் ” என்றாள் அவள் பங்கிற்கு. மிதுன் இப்போது வெற்றி சிரிப்பை உதிர்க்க.. நொந்துபோய் நின்றிருந்தான் கதிர்.

இப்போது பைரவியும் சிறு புன்னகையுடன் திரும்பி கதிரையும் அதுலையும் பார்க்க… வீரம் ஓங்கி நரம்புகள் புடைக்க..

“ நண்பா… ரெடி ” என்றான் கதிர்.

இருவரும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களம் இறங்க..

இம்முறை ஒரே முயற்சியில் இருவருமே உடைத்துவிட்டு ‘யாருகிட்ட’ என ஒரு வெற்றிப் பார்வை வீச..

நிலாவும் பைரவியும் “ யாரங்கே…. இன்னும் இரண்டு மூன்று கரும்பு கட்டுகளைக் கொண்டு வாருங்கள்…. ” என குரல் கொடுக்க…

   

‘ மறுபடியுமா!!! ’ அதிர்ந்தவர்கள்..

அடிங்க… என ஒரு அடி எடுத்து முன் வைக்க.. இருவரும் சிட்டாக பறந்தனர்..

பொங்கல் வைத்து படைத்து விட்டு அங்கிருந்த மலை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு அமர்ந்திருக்க.. அவளுடைய அம்மா

“ உங்க சின்ன மாமா வர நேரமாச்சு.. நாங்க முன்னாடி கிளம்புறோம் நீ இவங்க கூட வரியா… ” எனக் கேட்க.. அதுவரை நிலாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அவளின் முகம் மாறியதை கவனித்தே இருந்தாலும் எல்லோரும் இருக்கையில் எதுவும் பேச இயலாது என்பதனை உணர்ந்து அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தார் அம்மா..

சற்று நேரத்தில் இவர்களும் கிளம்ப.. பைரவிக்குத்தான் வீட்டிற்கு செல்வதை நினைத்தாலே எரிச்சலாக இருந்தது.. ஏதேதோ காரணம் சொல்லி நேரத்தை இழுத்தடிக்க.. நிலாதான்,

“ உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வராங்கலாமே.. அப்புறம் நாம எப்படி இங்க இருக்கிறது வா போகலாம் ” என அவள் நிலை புரியாது அழைத்து வந்திருந்தாள்..

ஒரு ஒரு மணி நேரம் அகத்தினை முகம் தனில் காட்டாதவாறு புன்னகையால் நிறைத்து வீட்டுக்கு வந்திருந்த மாமா அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தவள்..

“ அம்மா.. தாத்தா வரச் சொன்னாராம்.. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்.. ” என நிற்காமல் ஓடி வந்து விட்டாள்..

இங்கு வந்த பிறகு தான் அவளால் இயல்பாகவே மூச்சுவிட முடிந்தது. அவளுடைய சின்ன மாமா மற்றும் அவரது மனைவி தான் இப்போது வந்திருப்பது… சிறுவயதிலிருந்தே மாமா அத்தை என்று பிரியம் பாசம் எல்லாம் அவளிடம் உண்டு.. அவர்கள் ஊருக்கு வருவதாயிருந்தால் நாளைய பொழுதை நினைத்து உறக்கம் கொள்ளாமல் ‘ எப்போ வருவாங்க ’ எனக் கேட்டு கேட்டு அவளது அம்மாவை நச்சரித்து விடுவாள்.. ஆனால் அது எல்லாமே சென்ற வருடம் வரை மட்டுமே..

எப்பொழுது அவர்களது மகனுக்கும் அவளுக்குமான திருமண பேச்சை ஆரம்பித்தார்களோ அப்போதே அவள் முற்றிலும் மாறிப் போனாள்… அவர்கள் வருகிறார்கள் என்றாலே எங்கே திருமணம் பற்றி ஏதும் ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயம் ஒட்டிக்கொண்டது அவளிடம்.. அது முதல் அவர்களது வருகையை விரும்பாமல் போனது மனம்..

தாத்தாவின் அறைக்குச் சென்று பார்த்தாள்.. அவர் இல்லாது போக ஜன்னல் வழியாக பின்பக்கத்தை நோட்டம் விட்டாள்.. தாத்தாவும் பேரனும் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இருப்பது கண்டு அவளும் பின்பக்கமாய் சென்றாள்.

அவளை பார்த்ததுமே அதுலிடம் இருந்து சிறு புன்னகை !! பதிலுக்கு புன்னகைத்து தாத்தாவிடம் சென்று அமர்ந்தாள்..

“ என்னம்மா உங்க மாமா வந்து இருக்கான் போல.. நீ அவங்களை கவனிக்காம இங்க வந்துட்டா எப்படி.. ஏற்கனவே என் மருமகளை வேலை வாங்குகிறீங்களான்னு கேட்டுகிட்டு இருக்கான்.. இப்போ நீ இப்படி வந்துட்டா எப்படி ?? ” என்றார் தாத்தா..

அவள் எதுவும் பேசாமல்.. கீழே இருந்த குச்சியை எடுத்து நிலத்தில் கிறுக்க ஆரம்பித்தாள்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளுக்குள் அதிர்ந்து போனான்..

மண்ணில் விழுந்த அவளது இரு துளி விழித்துளி கண்டு !

தாத்தாவை அழைத்து கண் ஜாடையில் அவளைக் காட்ட..

அவளது தலையை மெல்ல அவர் வருடிக்கொடுக்க… அவர் மடி மீது படுத்துக் கொண்டாள்..

“ என்ன ஆச்சும்மா கல்யாணம் பத்தி எதுவும் பேசினாங்களா… என்றதும் அத்து திடுக்கிட்டு அவள் முகம் கண்டான்…

விழிகளை இறுக மூடி இருந்தவள் ஆம் என்பதாய் தலையசைத்தாள்.

“ யாருக்கு தாத்தா கல்யாணம்… ” என்றவனின் மனம் நிச்சயம் அவளுக்காய் இருக்கக்கூடாது என ஓயாது பிராத்தித்துக் கொண்டிருந்தது.

“ பைரவிக்கு தான்பா…. ” என்றவர் அவளது கதையை கூற..

“ புடிக்கலைன்னு சொல்ல வேண்டியதுதானே தாத்தா அதைவிட்டுட்டு இப்படி அழுதுகிட்டு இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா என்ன… ” என்றவனை விழிகளை திறந்து முறைத்தவள்.. மீண்டும் விழிகளை மூடிக் கொண்டாள்…

“ பிடிச்சிருக்கு பிடிக்கலைங்கறது எல்லாம் ரெண்டாம் பட்சம்தான் கண்ணா.. வீட்டில என்ன முடிவு எடுக்கிறாங்ளோ.. அதுக்குதான் பொண்ணுங்க கட்டுப்படணும்… ”

இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர் தாமாக முடிவெடுப்பதற்கும் பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டுவிட்டு முடிவெடுப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவே !! பெற்றோர் எடுக்கும் முடிவுகள் நூறு சதவீதம் சரியாகத்தான் இருக்கும்.. இல்லாத பச்சத்தில் பெண்ணினுடைய வாழ்க்கை அல்லவா நிம்மதியின்றி பறிபோய்விடுகிறது.

என்ன இருந்தாலும் அவரவர் வாழ்கை குறித்து முடிவெடுக்க பெண்களுக்கும் உரிமை உண்டல்லவே !! அது கிராமம் ஆனாலும் சரி நகரம் ஆனாலும் சரி.. அதில் என்ன கட்டுப்பாடுகள்.. பெண் எங்கிருந்தாலும் பெண்தானே !

அவள் என்ன உணர்ச்சிகளற்ற கற்சிலையா !

அத்துவால் இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

“ நீங்க சொல்லி பார்க்கலாமே தாத்தா… நீங்க சொன்னா கூட இவங்க மாமா கேட்க மாட்டாரா என்ன ”

“ இல்லப்பா… அவன் சில விஷயங்கள்ள பிடிவாதக்காரன்… நானே இல்ல யாரு சொன்னாலும் கேட்கமாட்டான்… அந்த மாதிரி விஷயம்தான் பைரவியோடது.. ”  என்றதும் அதுல் அமைதி ஆகிவிட்டான்.

தன்னால் எதுவும் செய்ய முடியுமா என யோசிக்க ஆரம்பித்தான்… அதே சமயம் தன் தாத்தாவிடம் மாரிக்கு எவ்வளவு மரியாதை கலந்த அன்பு உள்ளது என்றும் அவன் அறிவான்.. அவரே இதில் தலையிடாமல் இருக்கும் போது தான் மட்டும் எப்படி என தயக்கமாகவும் இருந்தது… ஆனால் இந்த குழப்பம் தயக்கம் எல்லாம் ஒரு சில மணித்துளிகள் தான் பைரவியின் கண்ணீரில் அவையெல்லாம் கரைந்தே போயின..

“ பைரவி எழுந்து உட்காரு… ” என்றான் ஒரு முடிவுடன்.. அவள் மெல்ல விழி திறக்க… அவனது ஒரு விழி அசைவில் அவளை எழுந்து அமரச் செய்தான்…

“ நீ என்ன படிச்சிருக்க… ” இப்போது அது எதற்கு என்பதாய் ஒரு பார்வை அவளிடம்.

“ சொல்லு… எல்லாம் ஒரு காரணத்துக்காகத்தான்.. ”  என்றான் அவள் பார்வை படித்தவனாக..

தாத்தா அமைதியாக அவனை பார்த்து இருந்தார் ஆனால் அவனின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என மனதின் ஓரம் சிறு யூகம்..

“ பிளஸ் 2 ”

அப்பாடா என்று இருந்தது அவனுக்கு… இது போதுமே இதனை வைத்து எளிதாக அடுத்த காய்களை நகர்த்த முடியாதா என்ன ?

மனதில் எழுந்த உற்சாகத்துடன், “ எப்போ முடிச்ச அதுக்கு மேல ஏன் படிக்கலை… ” என அடுத்த கணை…

அவள் மெதுவாக தாத்தாவைப் பார்க்க… “ கேள்வி கேட்டது நான்.. அவரை ஏன் பாக்குற… ”

“ முடிச்சு மூணு வருஷம் ஆச்சு… ஸ்கூல்லே பக்கத்து ஊருல தான் படிச்சேன் காலேஜ்க்கு பொள்ளாச்சி போக வேண்டியிருக்கும்.. ஹாஸ்டலுக்கும் அம்மா ஒத்துக்கல… போய்வர பஸ் வசதி இல்ல.. அதனால அப்படியே விட்டாச்சு… ”  என்றாள் பார்வையை எங்கோ வெறித்து…

ஆனால் அகம் மட்டும் ஏன் பா என்னை விட்டு போனீங்க…. என இறைநிலை அடைந்திருந்த தந்தையை எண்ணி அரற்றிக் கொண்டிருந்தது அமைதியாய்…

“ உனக்கு படிக்கணும்னு ஆசை இருந்ததா… ”

கசந்த புன் முறுவல் மட்டுமே பதிலாக அவளிடம் இருந்து..

இம்முறை தாத்தா உள்ளே வந்தார்..

“ ஆசையா !! அம்மணி அருமையா படிப்பா… பள்ளிகூடத்துல அவ தான் முதல் மார்க்.. அவளோட வாத்தியார் எல்லாம் சொல்லிப் பார்த்தாங்க.. பைரவி கூட ஒரு வருஷமா போராடிப் பார்த்தா ஆனா அவ ஆசைப்பட்ட மாதிரி எதுவும் நடக்கல.. அது சரி நாம ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா செய்யுது… ”  என்றார் விரக்தியாக..

“ உனக்கு என்ன படிக்க ஆசை… ”

அவள் மனதினுள் புதைந்துவிட்ட ஒன்றினை இவன் கிளறுவது மனதை ரணமாக்குவது போல இருந்தது… எத்தனை ஆசையாயிருந்தாள் கல்லூரிக் கனவுகளுடன்.. கேட்டது அனைத்துமே அவள் வாழ்வில் பெற்றாள் இந்த ஒன்றை தவிர ! கிடைக்காத ஒன்றிற்காக ஏங்குவது முட்டாள்தனம் என நினைப்பவள் அதன் பிறகு அதைப் பற்றிய பேச்சு எடுக்கவில்லை..

அதனால்தான் முன் தினம் கூட அத்துவிடம் பதிலளிக்க விரும்பவில்லை இப்போது மீண்டும் அதைப் பற்றிய பேச்சை எடுக்க..

“ ஏன் என்ன படிக்க வைக்கப் போறீங்களா… ” என வெடுக்கென கேட்டாள்…

“ ஆமா ” நிதானமாக அவனிடமிருந்து பதில்..

தாத்தாவின் இதழ்களில் மென்மையான புன்னகை அவர் எதிர்பார்த்தது இதைத்தானே !

அவருடைய விருப்பம் கூட அதுவே.. அத்துவிடம் அவரது பல குணங்ககளைக் கண்டிருக்கிறார்.. அப்படியிருக்க இந்த சிந்தனை மட்டும் மாறுமா என்ன ??  எந்தவித ஆச்சர்யமும் இல்லை அவரிடத்து…

பைரவியோ அவன் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை… அவன் முகத்தில் துளிகூட விளையாட்டின் சாரமோ சாயலோ இல்லை என்பதை கண்டவளுக்கு அடுத்து என்ன என்பதை சிந்திக்க..  மூளை ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்டு விட்டது..

அவன் பார்வையை தாத்தாவிடம் வீச.. அவரும் கண் மூடி திறந்தார் தான் பார்த்துக் கொள்வதாக..

“ பைரவி.. அத்து விளையாட்டுக்கு சொல்லலன்னு உனக்கே தெரியும்.. நீ என்ன சொல்ற உனக்கு உன்னோட படிப்பை தொடர விருப்பமா ?? ”  என்றார்..

தன்னுடைய கனவு நனவாகப் போகிறதா ?? இல்லை மறுபடியும் ஒரு ஏமாற்றமா ?? தன்னால் தாங்க முடியுமா என பல கேள்விச் சரங்களுடன் அத்துவை பார்க்க… அவளுக்கான விடை அவன் விழிகளில் !

“ ஆனா மா..மா.. ” எனத் தயங்க…

“ அப்போ பைரவிக்கு ஓகே தானே… ” எனக்கேட்டு புன்னகைக்க..

கரம் கோர்த்திருந்த கண்ணீர்த் துளிகளுடனும் உதட்டில் பூத்திருந்த புன்னகை அரும்புடனும் அவள் தலையசைக்க…

அவளை அப்படியே கிளிக் செய்தது அவனது மனம்… அவனும் அதை அறியவில்லை அவளும் அறிந்திருக்கவில்லை..

 

மேகம் கடக்கும்…

Advertisement