Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 21 அ

 

“ மிதுன் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ? ”

“ வெச்சுட்டேன் மா ”

“ ஸ்வெட்டர் ”

“ ம்ம்… ”

“ உனக்கு இல்லடா தாத்தாவுக்கு வாங்கினது ”

“ வெச்சுட்டேன் மா ”

“ அத்து எத்தனை மணிக்கு வரான்னு கேளு ”

“ அம்மா ஏன்மா ஏன் ” என்றபடி அறையிலிருந்து வரவேற்பறை வந்தான் மிதுன்.

“ என்னடா அத்துக்கு பேசுனயா ” என்றார் அவருடைய துணிகளை உள்ளே எடுத்து வைத்த வாறே

“ அம்மா காலையில இருந்து எத்தனை தடவை கேப்பீங்க.. அண்ணா ஆறு மணிக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டுத்தான் போனான் ”

“ இல்லடா முடிஞ்சா கொஞ்சம் முன்னாடியே வரேன்னு சொன்னான் அதான் கேட்டேன் ”

“ நல்லா கேட்டீங்க போங்க ” என்றவன் அவனது எடிட்டிங் வேலையை தொடர்ந்தான்

அத்துவும் அவனது தந்தையும் வந்து சேர ரயில் நிலையம் சென்றனர்.

“ அம்மா ட்ரெயின் வர்றதுக்கு இன்னும் நேரம் இருக்கு நீங்களும் அப்பாவும் இருங்க நானும் மிதுனும் பைரவியை கூட்டிட்டு வந்திடுறோம் ” என்றான் அதுல்..

‘ ஏன் அவளுக்கு வரத் தெரியாதா.. இல்ல வழி தான் தெரியாதா ’ கேட்க வாய் வரை வார்த்தை வந்து விட்டது ஜெயாவிற்கு.

ஆனால் கேட்டு மட்டும் என்னவாகப் போகிறது என்று அமைதியானார்.

“ அத்து.. ட்ரெயின் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும் பைரவி இன்னும் வராம இருக்கா என்ன பண்றது ” என்ற மிதுனின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

இன்னும் சற்று நேரத்தில் கோவை ரயில் வந்து விடும்.. ஆம் ஜெயா மனம்மாறி ஊருக்கு கிளம்பிவிட்டார்..

அத்துவும் மிதுனும் பொங்கலுக்கு ஊருக்கு போய் வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அதன் பிறகும் சென்று வந்தனர் ஆனால் ஜெயாவின் மனம் மட்டும் இளகவேயில்லை. ரவியும் ஜெயாவின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செல்வதாக கூறி ஒரு வருடம் கடந்துவிட்டது. இறுதியாக அத்துவின் ஒரு கேள்வியில் ஆடித்தான் போய்விட்டார் ஜெயா..

சில தினங்கள் முன்பு மீண்டும் மிதுனுக்கும் ஜெயாவிற்கும் நடந்த வாக்குவாதத்தில் அத்து குறுக்கிட்டு

“ அம்மா நான் உங்கள ஒன்னு கேட்கவா ”

“ நீங்க என்ன சொன்னாலும் என்னால எதையும் மறக்கவும் முடியாது அங்க வரவும் முடியாது டா ”

“ சரி நீங்க வரவேணாம்.. எனக்கு பதில் மட்டும் சொல்லுங்க ”

என்ன சொன்னாலும் தான் மாறப்போவதில்லை என்ற உறுதியில்

“ ஹ்ம்ம் கேளு ” என்றார்.

“ இப்போ தாத்தா பாட்டிக்கு நடந்த மாதிரி நாளைக்கு உங்களுக்கு நடந்தா என்ன பண்ணுவீங்க ம்மா !! ”

“ என் பிள்ளைக என்ன விட்டுட்டு போமாட்டாங்க ” அத்தனை உறுதி பெற்றவளிடத்தில்.

“ போக மாட்டோம் தான் மா.. ஆனா பாட்டி நெனச்சு பாத்திருப்பாங்களா அவங்க ஒரே பையன் அவங்களை பிரிஞ்சு போவாருன்னு.. இல்லை தானே.. இல்லை நம்ம அப்பா தான் அப்படி பட்ட ஆளா ?

இதுக்கெல்லாம் யாரு காரணம்….

நீங்க இப்ப தாத்தாவுக்கு செஞ்சதையே நாளைக்கு நாங்க உங்களுக்கு செஞ்சா என்ன பண்ணுவீங்க….. ”

அவரை அசைத்துத் தான் பார்த்துவிட்டிருந்தன அத்துவின் அம்புகள் !!

அவரால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று அது.. தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அவரை உணரச் செய்த கேள்வி அது.. அவரது அத்துவிடமிருந்து..

ஜெயாவை சுழற்றி அடித்திருந்தது அவனது கேள்வி.. ஒரு விஷயம் பிறருக்கு நிகரும்போது அதன் தாக்கம் புரிவதில்லை நம்மிடத்தில்.. நமக்கு நேரும்போதுதான் உலகமே இருண்டதுபோலான உணர்வு.

ஜெயா மௌனமாக அமர்ந்திருக்க.. அவரது அருகில் அமர்ந்தவன் அவரது கையின்மீது தன் கை வைத்து

“ உங்களால கேட்கவே முடியல ஆனா தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எப்படி இருந்திருக்கும் நினச்சு பாருங்க.. பாவம் மா பாட்டி கடைசி வரைக்கும் அவங்கள நம்மளோ நம்மள அவங்களோ பார்க்கற குடுப்பனை இல்லாமையே போயிருச்சு..

இருக்கற தாத்தவையாவது கூட இருந்து நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்படறேன்.. ”

ஜெயா உள்ளுக்குள் உடைந்திருக்க மறுபேச்சில்லை அவரிடத்தில்.

“ அப்பா நம்ம ஊருல எப்படி இருக்கற வேண்டியவரு மதிப்பும் மரியாதையுமா.. ஆனா இங்க வந்து இத்தனை வருசமா வேலைக்கு போய் கஷ்டப்பட்டுட்டு இருக்காருன்னா என்ன காரணம் ?? ”

ஜெயா அத்துவை நோக்க..

“ உங்கள தப்பு சொல்லல்ல மா.. அப்பா படிக்காதவரு விவசாயத்தை தவிர அவருக்கு எதுவும் தெரியாத நிலையிலும் இங்க வந்து வேலைக்கு போய் கஷ்டப்பட்டது அவரை நம்பி வந்த உங்களுக்காகவும் எங்களை முன்னுக்கு கொண்டுவரவும் தாத்தாவுக்கு குடுத்த வாக்குக்காகவும் தான்.

எனக்கும் மிதுனுக்கும் ஒரே எண்ணம் தான் இருந்துச்சு மா அப்பாவுக்கு ஒய்வு குடுக்கணும்.. ரொம்பவே உழைச்சுட்டாரு.. இப்போ நானும் மிதுனும் நல்லா சம்பாரிக்கறதுனால அப்பாவுக்கு ஒய்வு கொடுத்தாச்சு.. ஆனா தாத்தாவை நெனச்சு பாத்தீங்களா இன்னுமே காடு மேடுன்னு பண்ணையம் பார்த்துட்டு இருக்காரு..

அப்பா மனசுல எவ்வளவு வேதனைன்னு உங்களுக்கு தெரியுமா மா.. ஒரு மகனா அவங்க அம்மாவுக்கு செய்யவேண்டிய கடமையையே செய்யமுடியாத நிலைமைக்கு ஆளாகிட்டார்.. அவரோட அப்பாவை கவனித்து தான் ஆறுதல் தேடிக்கணும்.. அதுக்கும் வழியில்லாம போன வாழ்க்கையே நரகம் தான் மா..

நீங்க அப்பாவை புரிஞ்சுக்கலைனு தான் மா எனக்கு தோணுது ”

என்று அவன் முடிக்க ஜெயாவின் அகத்தில் சத்தமில்லாமல் கத்தியை சொருகிய உணர்வு.. அவரது கணவரையே பார்த்திருந்தார். ரவியின் முகத்திலும் வேதனையின் சாயல்..

என்னதான் விதவிதமாக சமைத்துப்போட்டு மனம் நோகாமல் இத்தனை நாள் குடும்பத்தை நடத்தியிருந்தாலும் தன் பிடிவாதத்தினால் அவரது சந்தோஷங்களையும் அல்லவா துடைத்தெடுத்திருக்கிறோம்.. ஆனால் அவர் இதுவரை ஒரு விஷயத்தையாவது தன் மீது திணித்திருப்பாரா என்று எண்ணுகையில் ஜெயாவினுள் தகிக்கமுடியாத உணர்வுப் பெருக்கு.. பல வருடங்களாக பூட்டியிருந்த பூட்டுகள் அனைத்தும் திறந்துகொண்டது.

“ உறவு பூ மாதிரி தானா மலரணும்மா கட்டாயப்படுத்த முடியாது.. உங்க விசயத்துல இவ்வளவு நாள் அந்த பூ மலரத்தான் காத்திருந்தேன். உங்கள யாரும் வற்புறுத்த போறதில்லமா.. உங்கள மீறியும் நாங்க போமாட்டோம்.. அதே சமயத்துல என்னால தாத்தாவையும் விடமுடியதுமா ” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

ஜெயா அந்நாள் முழுதும் அழுது அழுது கரைந்து முடிவில் தன் வரட்டு பிடிவாதத்தையும் வீம்பையும் தூக்கி எறிந்து விட்டு புறப்பட்டு விட்டார் புகுந்த வீடு நோக்கி.. குடும்பம் மொத்தமும் ரயில்வே ஸ்டேஷனில்.

அதுல் தான் பைரவிக்கும் டிக்கெட் எடுத்து தன்னுடன் அழைத்துச் செல்ல நினைத்தான்.

விடுதிக்கு அழைத்தால் கிளம்பி விட்டதாக தகவல்.. இதுவரை அவள் வந்து சேரவில்லை..

“ மிதுன்.. நீ உள்ள போ. ட்ரெயின் வந்தா அம்மா அப்பா கூட கிளம்பிடு. நான் பைரவியை கூட்டிட்டு வரேன் ” என்றான் தம்பியிடம்

“ ஆனா அம்மா.. ” என இழுத்தவனிடம்

“ ப்ச்.. என்னடா.. அத்து பைரவியோடு வருவான்னு சொல்லு.. போ.. ” என எரிந்து விழுந்தவனை வியப்புடன் பார்த்துச் சென்றான் மிதுன்.

அத்துவிற்கு பைரவியை பற்றிய கவலை வெகு நேரம் முன்பே கிளம்பியவள் இன்னும் வந்து சேரவில்லை.. ஏன் ?? அவனுக்குள்ளே கேட்டுக்கொண்டான். தான் போய் அழைத்து வந்திருக்க வேண்டுமோ.. அவள் வந்துவிடுகிறேன் என்றால் அப்படியே விட்டுவிடுவதா தன்னையே கடிந்து கொண்டவன் மிதுனின் அலைபேசியிலிருந்து கதிரை அழைத்தான்.

அவனுக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை.. ரயில் வந்து கிளம்பியும் ஆயிற்று ஆனால் பைரவி வரவில்லை.. எங்கிருக்கிறாள் எனவும் தெரியவில்லை..

“ ஹலோ மிதுன் ”

“ நான் அதுல் டா ”

“ சொல்லு அத்து கிளம்பிட்டீங்களா ?? ”

“ கதிர்.. பைரவி ” என்றவன் பைரவி ஆட்டோவில் வந்து இறங்குவதைக் கண்டு இணைப்பை துண்டித்து அவளிடம் ஓடினான்

“ பைரவி.. ”

“ சாரி வர்ற வழியில பஸ்ல ஏதோ பிரச்சனை.. இறக்கி விட்டுடாங்க.. எந்த ஆட்டோவும் வரல அதான் நேரமாகிடுச்சு..”

“ என்ன வைரவி ஒரு போன் பண்ணி சொல்ல.. ” என்றவன் அவளிடம் அலைபேசி இல்லை என்பது நினைவிற்கு வர அப்படியே நிறுத்தி விட்டான்.

“ போலாமா ” என்றவளுக்கு “ போலாம் ஆனால் அப்படி இல்ல.. இப்படி ” என ஜங்ஷன் வெளியேறும் வழியைக் காட்டினான்.

புரியாமல் பார்த்தவளிடம்..

“ பைரவி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்கன்னு எவ்வளவோ சொன்னேன்.. ஆனா டிரைவர் அண்ணா கேட்கவே இல்லை.. ட்ரெயினை கிளப்பிட்டு போயிட்டாரு ” என்றான் தோள்களை குலுக்கி

“ அப்படின்னா ட்ரெயின் போயிருச்சா.. ” அதிர்ச்சியுடன் அவள்..

“ ம்ம்.. ” வெகு இயல்பாக இவன்.

எப்படி இவரால் இப்பொழுது கூட இத்தனை இயல்பாய் இருக்க முடிகிறது என அயர்ந்து தான் போனாள் அவள்..

இந்நேரம் இதே இடத்தில் வேறு ஒருவர் இருந்தால் நடந்திருக்கும் காட்சியே வேறு.. யாராய் இருப்பினும் தாமதமாக வந்து இரயிலை தவற விட்டிருந்தால் கோபத்தில் வார்த்தைகளை விட்டிருப்பர் ஆனால் அத்து.. நிச்சயம் அத்துவிற்கு இணை அத்துவே

“ உங்களுக்கு கோபமே வரலையா !! ”

“ எதுக்கு ”

“ என்னால தானே நீங்களும் உங்க பேமிலியும் ட்ரெயின்ன மிஸ் பண்ணிட்டு நிக்கிறீங்க ”

“ ஒரு சின்ன திருத்தம்.. நானும் நீயும் மட்டும் தான். அப்பா அம்மா எல்லாம் கிளம்பிட்டாங்க.. வா நாம பஸ்ல தான் போகணும் ” என ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் அழைத்து வந்தான்..

அனைத்து பேருந்துகளும் கிளம்பியிருக்க ஒரே ஒரு பேருந்து மட்டுமே இருந்தது.

“ பைரவி இந்த பஸ்சும் ஃபுல்.. ஒரே ஒரு சீட் தான் இருக்கு.. ” அவளிடம் சொன்னால் அவள் மட்டும் என்ன செய்துவிட முடியும்.. ஆனால் அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை..

இரவு நேரத்தில் அவளையும் அழைத்துக்கொண்டு எப்படிச் செல்வது என தெரியவில்லை.. அவன் ஒருவன் என்றால் திருச்சி பழனி பொள்ளாச்சி என மாறி மாறி சென்று விடுவான். ஆனால் உடன் இருப்பது பைரவி.. அத்துவின் பொறுப்பு.. அவளை அப்படி எல்லாம் அழைத்துப் போக விருப்பமில்லை.

“ நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா ? ” தயங்கித் தயங்கியே வார்த்தைகள் அவளிடமிருந்து

என்ன என்பது போல் அவன் பார்க்க..

“ இல்ல ஒரு டிக்கட் இருக்கே.. நீங்க போயிடுங்க. நான் அப்படியே ஹாஸ்டல் போயி.. ” முடிக்க முடியவில்லை அவன் பார்த்த பார்வை அப்படி..

அவன் ஏதோ சொல்ல வர..

“ தம்பி உள்ள வாங்க ஒரு சீட் அரேஞ்ச் பண்ணியாச்சு ” நடத்துனரின் குரல் கேட்க பேருந்தில் ஏறினர்.

எதிரெதிர் இருக்கையில் அமர இடம் கிடைத்தது..

அப்பாவிற்கு அழைத்துச் செல்லலாம் என அலைபேசியை எடுக்க அது அணைந்து கிடந்தது. அதனை இயக்கியவுடன் ஏகப்பட்ட தவறவிட்ட அழைப்பிற்கான குறுஞ்செய்திகள் கதிரின் எண்ணிலிருந்து

‘ அச்சோ எப்படி கதிர மறந்தேன் ’ என தலையில் கைவைக்க.. அவனை பார்த்துகொண்டு இருந்தவள்

“ எ.. என்னாச்சு ” எனப் பதற

“ ஒன்னும் இல்லை கதிருக்கு கூப்பிட மறந்துட்டேன் அதான் ” என்றவாறு அழைப்பு விடுத்தான்.

“ கதிர் ”

“ அத்து.. எங்கடா இருக்க ? பைரவின்னு ஏதோ சொன்ன அப்புறம் கால் கட் ஆயிடுச்சு நான் திரும்ப ட்ரை பண்ணினேன் ஆனா ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துச்சு.. ஏதும் பிரச்சனையா !! ” என்றதும் இவனுக்கு குற்ற உணர்ச்சி அவனை அழைத்து தேவையில்லாமல் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று.

அவனிடம் விளக்கமாக சொன்னவன் தந்தைக்கும் அழைத்துச் சொல்லிவிட்டு கைப்பேசியை அணைத்து உள்ளே போட்டான்..

விழிமூடி இருக்கையில் சாய்ந்தவனுக்கு உறக்கம் வருவேனா என்றது.. எப்படி வரும் ! பசி இருக்க தூக்கம் எட்டிப்பார்க்குமா என்ன !

இரயிலில் இரவு உணவை உண்டு விடலாம் என எண்ணித்தான் ஜெயா சமைத்து எடுத்து வந்திருந்தார்.. இடையில் இப்படி ஆகும் என கண்டானா அவன் !

திரும்பி பைரவியைப் பார்க்க.. அவள் விழி மூடி அமர்ந்திருந்தாள்.

‘ பைரவி சாப்பிட்டாளா இல்லையான்னு தெரியலையே ’ என்றவன் ‘அத்து வர வர நீ நல்லா சொதப்புற எல்லா விஷயத்திலேயும் ’ என அவனை திட்டிக் கொண்டான்..

அவனது சொதப்பலில் எல்லாம் பெரிய சொதப்பல் இனித்தான் என அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை..

“ பைரவி.. பைரவி ”

விழி திறந்தவளிடம்

“ பசிக்குதா ? நீ சாப்பிட்டு வந்தயா ? ”

“ ஏன் உங்களுக்கு பசிக்குதா ? ”

‘ அதானே இவளாவது நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதாவது ’ என நினைத்தவன்

“ ஆமா பசிக்குது.. ட்ரெயின்ல சாப்பிடலாம்னு கிளம்பி வந்துட்டேன்.. பஸ் கிளம்பியதும் தான் பசி தெரியுது ”

அவளுடைய கைப்பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட் எடுத்து தந்தாள்.. இருந்த பசியில் மடமடவென உள்ளே தள்ளியவனைப் பார்த்தவள்

“ எனக்கும் பசிக்குது ” என்றாள் மெதுவாக.. அவனோ மும்மரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க

“ ம்க்கும் ” என்றாள்..

“ கூப்பிட்டியா ”

“ இது மட்டும் கேட்கும் போல ” என முணுமுணுத்தவள் “ எனக்கும் பசிக்குது…” என்றாள் சத்தமாக..

“ ஷ்ஷ்.. கேட்டா கொடுக்கப்போறேன்.. ஏன் கத்துற ” என்றவன் மீதமிருந்ததை அவளிடம் கொடுத்தான்.

 

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடிவா… திருக்கோவிலே ஓடிவா…

நீரின்றி ஆறில்லை நீ இன்றி நானில்லை

நீரின்றி ஆறில்லை…. நீயின்றி நானில்லை…

வேறின்றி மலரே ஏதம்மா..

வேறின்றி மலரே ஏதம்மா..

நித்தமும் நித்திரையில் யேசுதாஸ் உடனான அத்துவின் பயணம்…

 

இவன் இங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க பைரவியோ அவஸ்தையில் இருந்தாள். இரயில் பயணம்.. அறிமுகமில்லா முகங்கள்.. எதிர்பாரா சந்திப்பில் எதார்த்தமாக எழிலே உருவாக அரும்பும் நட்பு என ஒருவிதமான அழகான பயணம்..

அதேபோல் தான் தொலைதூர பேருந்து பயணமும்..

யன்னலோர இருக்கை.. சிலுசிலுவென்று ஈரக் காற்று இதமாய்.. இதயத்தை நனைக்கும் இசைச்சாரல் என அது கூட தனி சுகம் தான்.

ஆனால் எல்லாம் நம் அருகே அமர்ந்திருக்கும் சக பயணியை பொறுத்தே.. சிலருக்கு சுகமாய்.. சிலருக்கு சோகமாய்..

பைரவி இதில் இரண்டாவது ரகம். சோதனையும் சோகமும் தான். அவளுக்கு வந்த சோதனை அவளுக்கு அருகே அமர்ந்திருந்த மத்திம வயது அம்மணி பைரவியை தலையணையாக மாற்றிவிட்டார்..

இவளும் தள்ளித் தள்ளி அமர்ந்து நுனிக்கே வந்துவிட்டாள்.. அவர் இவள் மேல் சாய்ந்து சாய்ந்து கழுத்து வழியே வர வைத்து விட்டார். பொறுத்துப் பார்த்தவள் அத்துவை எழுப்பி விட்டாள்..

நடு இரவில் எல்லாருமே உறங்கிக் கொண்டிருந்தனர்.. அவளும் அத்துவும் இடம் மாறலாம் என்றால் அத்துவின் இருக்கைக்கு அருகே ஒரு இளைஞன்.. மாறமுடியாது.

“ ஒரு நிமிஷம் இரு பைரவி ” என்றவன் எழுந்து சென்று நடத்துனரிடம் பேசி வந்தான். முன்னிருந்த ஒற்றை இருக்கைக்கு அவளை மாற்றிவிட்டு அங்கிருந்தவரை அத்துவின் இருக்கைக்கு மாற்றி.. இவன் பைரவியின் இடத்திற்கு மாறினான்..

இவனது நல்ல நேரமோ என்னவோ அந்தப் பெண்மணி யன்னல் பக்கம்  சாய்ந்து கொண்டார்.

ஆனாலும் பைரவியை முன் அனுப்பிவிட்டு இவனுக்கு உறக்கம் வரவில்லை.. நடத்துனர் சில விளக்குகளை அணைத்திருக்க மிதமிஞ்சிய ஒளியில் அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்து கொண்டான்.

காதோரம் கவிபாடிய முடிகளை அடக்கி அடக்கிப் பார்த்தவள் அவளது மனம் போல் அவையும் கட்டுக்குள் வராமல் போகவே சுதந்திரம் அளித்து அப்படியே காற்றினில் அசைந்திருக்க விட்டிருந்தாள். விழாமல் இருக்க இருக்கையின் கம்பியை இறுக்கமாக பிடித்தபடி அமர்ந்திருந்தவள் சிறிது நேரத்திலேயே உறங்கிப்போனாள்..

பைரவியையே பார்த்திருந்த அத்துவின் அதரங்களில் அவளது ஒவ்வொரு அசைவிலும் ஒரு மென்னகை வரத் தவறவில்லை..

இருவரையும் சுமந்து சென்றிருந்த பேருந்து வெண்மேகப் போர்வைக்குள் நுழைந்து செல்லும் வெண்புரவியாய் சென்று கொண்டிருந்தது.

 

மேகம் கடக்கும்…

 

Advertisement