Advertisement

பார்த்திபன் கனா 1 :
காக்க காக்க.. கனகவேல் காக்க..
நோக்க நோக்க.. நொடியினில் நோக்க..
தாக்க தாக்க.. தடையறத் தாக்க..
பார்க்க பார்க்க.. பாவம் பொடிபட..
“ஏய் மங்கம்மா… போதும் போதும்… உன் பக்தியைக் கண்டு அந்தப் பழனி மலை முருகனே படியிறங்கி வந்திடப் போறாரு…” என யாழ் மங்கையை வம்பிழுத்த யாழ்நிதியை “நிதி” என்ற பகவதியின் அதட்டல் அமைதியுறச் செய்து வேகமாக விழிகளை வேலவனிடம் வைக்கச் செய்தது.
“யாழ்மா… நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கோடா.. நமக்கு அவனை விட்டா வேற துணையில்ல.. ” என்ற அம்மாவிடம் தலையசைத்துவிட்டு மீண்டும் பார்வையை சேயோனிடம் சேர்த்தாள் யாழ்… யாழ் மங்கை.
அம்மாவிடம் தலையசைத்ததுடன் சரி.. இறைவனிடம் அந்தக் கோரிக்கையை வைக்கும் எண்ணம் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை. அதற்காக இறை நம்பிக்கை இல்லை என்றிட முடியாது.. அதெல்லாம் இருக்க வேண்டிய அளவு இருக்கிறது உள்ளத்தில்!
இப்போது என்றில்லை எப்போதுமே இதைத் தா.. அதைத் தா.. என யாரிடமும் வேண்டிப் பழக்கமில்லை.. பரம்பொருளிடம் கூட. கேட்கக்கூடாது என்றில்லை.. பழக்கம் வரவில்லை.
‘எது நடக்குமோ அது நடக்கட்டும்’ என்ற எண்ணம் தான் அவள் அகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
“சித்தி… நேரமாச்சு… கிளம்பிட்டீங்களா???” என உள்ளே வந்தான் நிரஞ்சன். யாழின் அண்ணன். பெரியப்பா மகன்.
“கிளம்பலாம் யாழ்..” என்றபடி பகவதி பூஜை அறையிலிருந்து வெளியே செல்ல.. கிடைத்த சிறு பொழுதில்
“ஏன் அக்கா ஒரு மாதிரி இருக்க?? உனக்கு ஓ.. ஓகே தானே?” பாவையின் முக பாவனை கண்டு அவளிடம் கேட்டு விட
“ஓகே இல்ல… எதுவுமே ஓகே இல்ல..” சொல்ல வேண்டும் போல் இருந்தது தங்கையிடம். ஆனால் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் எதையும் மாற்றிட முடியாது இப்போது. அனைவரிடமும் பயமும் பதற்றமும் பதைபதைப்பும் மட்டுமே எஞ்சி நிற்கும். வேண்டாம்.. அப்படியொரு நிலையை அவர்களுக்குக் கொடுக்கத் தான் காரணமாக வேண்டாம்.. என சொல்லிக் கொண்டு முகத்தில் புன்னகையைப் படரச் செய்து.. தங்கையின் தலை மேல் கை வைத்து..
“வா.. அம்மா சத்தம் போடுறதுக்குள்ள போலாம்..” என நகர, நிதிக்கு புன்னகையே பதிலாக அமைந்து விட.. அவளும் அக்காவை பின் தொடர்ந்தாள்.
நிரஞ்சனைப் பார்த்ததும் தயாராக வைத்திருந்த புன்னகை தடையின்றி வந்து சேர அவனும் புன்னகைத்தான்.
“வெளில பெரியம்மா பெரியப்பா இருக்காங்க.. அங்க போடா.. நானும் சித்தியும் எல்லாம் எடுத்திட்டு வரோம்” என்றான் அவன்.
தலையசைத்து அவள் வெளியேற நிரஞ்சன் உள்ளே இருந்த பகவதியிடம் சென்றான். அறையிலிருந்த அலமாரியில் தனக்கான இடத்தைப் பிடித்துவிட்ட திருப்தியில் புன்னகைத்துக் கொண்டிருந்தார் அவன் சித்தப்பா.
அவர் முன்பு கலங்கிய விழிகளுடன் கை கூப்பி நின்றிருந்தார் பகவதி. இவனும் அமைதியாக போய் அவர் அருகே நின்றான்.
“அப்படியென்ன சித்தப்பா அவசரம்… வாழவே இல்ல.. அதுக்குள்ள வாழ்ந்தது போதும்னு எங்க எல்லாரையும் விட்டு கிளம்பி போயிட்டீங்க..” அவன் மனம் வழக்கமாக தொடரும் சண்டையை அவருடன் தொடர்ந்தது.
ஒரு சில மணித்துளிகளில் நிரஞ்சனிடம் திரும்பிய பகவதி, “அவங்களுக்கு கூப்பிட்டு பேசிட்டல்ல…” என்று கேட்க,
“ம்ம் பேசிட்டேன் சித்தி… நீங்க ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க ? எல்லாம் நல்ல படியா நடக்கும்.. கவலைபடாதீங்க.. எப்பயும் சித்தப்பா நம்ம கூட இருப்பாரு…” தனயனாய் தேற்றினான் தாய் அவளை.
ஆனாலும் அவர் முகம் தெளிய மறுத்து நின்றது. தெளிய வாய்ப்பில்லை..
யாருடைய துணை எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் என நினைத்து செயலை தொடங்குவாரோ… அவருடைய துணை… இன்று தான் செய்யவிருக்கும் செயலுக்கு இல்லை என நினைக்கும் போது கலக்கம் களம் இறங்கியது.
“அவசரப்படற பகவதி….” காதினுள் கணவரின் குரல் கேட்கவும் வியர்த்துப் போனது அவருக்கு. அவரையே பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு அவரது முகமாற்றம் விழிகளில் விழ
“சித்தி…. சித்தி… என்ன பண்ணுது…..” என பதறி அவரை அமர வைத்து ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
நீர்மம் நிலையை நிதானமாக்கிக் கொடுக்க சற்று தெளிந்தவர் விளக்கம் கொடுத்து கலக்கம் கொடுக்க விரும்பாமல் “வாடா நிரு..” என வெளியே வந்து விட, குழப்பம் குடியேற இடம் கொடுத்து அவரைத் தொடர்ந்தான்.
இனோவா வாயிலில் வீற்றிருக்க…. யாழ் அதன் துணைக்காய் நின்றிருந்தாள்.
நிதி முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, அவளது பெரியப்பா பெரியம்மா இருவரும் அவளுக்கு அடுத்து பின்புறத்தை பிடித்துக்கொண்டிருந்தனர்.
அம்மா வந்துவிடட்டும் என இவள் காத்திருக்க… கடிந்து கொண்டார் பகவதி.
“உள்ள போயி உக்காராம ரோட்ல என்ன வேடிக்கை வேண்டியிருக்கு….”
சாலையை ஒட்டியபடி இருந்த மூன்று சென்ட் நிலத்தையும் மொத்தமாக இரு அறைகள் ஒரு வரவேற்பறை கொண்ட வீடாக மாற்றியிருக்க காம்பவுண்டினுள் டூவிலர் நிறுத்த மட்டுமே இடம்.
அவர் எப்போதுமே வெளியில் நின்று வேடிக்கை பார்த்தால் சத்தமிடுவார் எனினும் இன்று அவரும் வேறொரு மனநிலையில் இருந்துவிட கடிதல் கொஞ்சம் காரம் தான்.
சட்டென காரிகை முகம் கசங்கிவிட.. ஏனென்று தெரியாமல் இரண்டொரு துளிகளும் விழிகளில் துளித்துவிட.. அதனை மறைக்க மண்ணை நோக்கினாள்.
“ஷ்ஷ்… சித்தி என்னது இது? விடுங்க… நீங்க ஏறுங்க முதல்ல…” என அவரை உட்கார வைத்தவன்
“யாழ்மா… இன்னும் நீ சின்ன பிள்ளையா? அம்மா திட்டுறாங்கன்னு கண்ணை கசக்கிட்டு நிக்குற…” என அவள் நிலவு முகம் நிமிர்த்தி விழிகளை துடைத்துவிட்டவன்
“நீ எப்பவுமே அழக்கூடாது… அதுவும் இன்னைக்கு பிக் நோஓஓஒ…. சித்தி பார்த்தா இன்னும் மனசு கஷ்டப்படுவாங்க…” என்றவுடன்
“சாரிண்ணா…. சட்டுன்னு தண்ணி வந்திடுச்சு….”
“என்ன குழாயில வர்றது போல சொல்ற…” என புன்னகைக்க… இவளும் இளம் புன்னகையுடன் ஏறி அமர்ந்தாள்.
நல்ல நேரம் பார்த்து நிரஞ்சன் காரினை எடுக்க… அவரவர் எண்ணங்களில் அவரவர்! மறந்தும் யாரும் யாரிடமும் பேச்சுக் கொடுக்கவில்லை.
நிலவிய நிசப்தம் மூச்சுக் காற்றை முடக்கி வைத்து மூச்சு முட்டச் செய்வது போல இருக்க.. நிதி வாயைத் திறந்தாள்.
“அண்ணி எப்போண்ணா வர்றாங்க…” நிரஞ்சனிடம் பேச்சுக் கொடுத்தாள். அவன் மட்டுமே அளவளாவும் நிலையில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு.
அக்காவும் அம்மாவும் அதிகாலையிலேயே அதரங்களுக்கு 144 தடை போட்டது போல இருக்கிறார்கள். பெரியம்மா… பெரியப்பாவிடம் அதையும் மீறிய இறுக்கம்.. நிரஞ்சன் மட்டுமே இயல்பாக இருந்தான்.. அவனும் இருந்தானோ அல்லது இருப்பதைப் போல காட்டிக் கொண்டானோ அவனுக்கே வெளிச்சம்.
“அடுத்த வாரம் வருவாங்க நிதிக்குட்டி…”
“குட்டி சொல்லாத…” மறுப்பு மொழி தங்கையிடம் இருந்து.
நிரஞ்சனின் நிதிக்குட்டி.. என்ற பதம் இவளது நட்புக்களை எட்டிய தினத்தை இன்னமும் நாட்காட்டியிலிருந்து அழிக்க முடியவில்லை… வைத்து வைத்து செய்த செயல்களெல்லாம் வருடம் எடுக்கும் எப்படியும் மறக்க.
அவளோ நெற்றிக்கண்ணை திறந்து வைக்க… நிரஞ்சனோ
“பழகிடுச்சுடா குட்டி….” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
இருவர் மட்டுமே மொழிந்து கொண்டு, அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“இங்கயே இறங்கி நில்லுங்க… நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்.. இங்க க்ரவுடா இருக்கு.. நான் பின்பக்கம் நிறுத்துறேன்..” என்று சொல்ல அனைவரும் இறங்கி நின்றனர்.
யாழ் தாய் மண்ணை தலை வணங்கி நிற்க.. பகவதி அவளது பெரியப்பா.. பெரியம்மாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
நிதியின் விழிகள் அங்கு வந்திருந்த மணமக்களை ஆர்வமாய் தழுவியது.
ஆம்! அவர்கள் வருகை புரிந்திருப்பது சார்பதிவாளர் அலுவலகம். கோவிலில் உறவுகள் சூழ உரியவளை முடிச்சிட்டு உறவாக்கி பெற்றோருடன் வந்திருந்தனர் சிலர்.
இன்னும் சிலர்… காதல் கிளிகள்… அவர்களிடையே தூது சென்று காதலை வளர்க்க உதவிய வள்ளல்களை உடன் கொண்டிருந்தனர்.
மணமக்களின் பொருத்தம் பற்றிய அலசலில் இருந்த நிதியிடம் திருப்தி துளியளவும் இல்லை.
‘பொண்ணு நல்லா இருக்கா…. ஆனா பையன் கொஞ்சமும் மேட்ச் இல்ல…’
‘பையன் செம ஹன்ட்சம்…. பொண்ணு கொஞ்சம் கம்மி தான்..’ என்பதே நிதியின் நினைவலைகளில் நிகழ்ந்தவை.
இல்லறம் நல்லறமாக சிறக்க… மனப் பொருத்தமல்லவா முக்கியம்?? பக்குவப் படாத பைங்கிளிக்கு புரிய காலமெடுக்கும்.
அதே நேரம் அங்கு வந்த ஆடியிலிருந்து ஆறடியில் இறங்கியவனைப் பார்க்கவும் அத்தனை மலர்ச்சி அவளிடம்… திரும்பி அக்காவைப் பார்த்தாள்.
“என் அக்காவும் மாமாவும் தான் தி பெஸ்ட்…..” சொல்லிக் கொண்டாள் உள்ளுக்குள்.
தான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்த பகவதி, “அக்கா.. அவங்க எல்லாம் வந்துட்டாங்க…” என்றார் காவேரியிடம்.
அதுவரை ஆன்ட்ராய்டினுள் தலையை விட்டிருந்தவர் நிமிர்ந்து, “நாம உள்ள போலாம்.. நிரஞ்சன் வரட்டும்” என்றார்.
“அதில்ல அவனும் வந்த…” அவர் நினைத்ததை சொல்லாக்கும் முன் இருவரும் முன்னே சென்றிருக்க… நிரஞ்சன் வருகிறானா எனப் பார்த்துவிட்டு யாழின் கைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிதியுடன் நகர்ந்தார் பகவதி.
”ஹாய் மாமா…” மாமாவைப் பார்த்ததும் மலர்ந்து போனவளிடம் தானும் புன்னகையுடன் “ஹாய் நிதி..” என்றுவிட்டு யாழைப் பார்த்தான் அவன்.
நளன்…. மங்கையை மணமுடிக்கவிருக்கும் மணாளன். விழிகளில் தாங்கி நின்ற ஆர்வத்துடன் தத்தையை நோக்க…..
யாழ் இன்னும் தாய் மண்ணே வணக்கம் மோடில் தான் இருந்தாள்… அருகில் இருந்த பகவதியிடம் புன்னகைக்க… அவரும் புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு அமைதியானார்.
“ஷ்… அக்கா மாமா பார்க்குறாரு… நிமிர்ந்து பாரு” என நிதி மெல்லிய குரலில் சொல்ல… அவளது பெரியம்மா அதிருப்தியை அப்படியே பார்வையில் படிய விட..
“நிதி வாயை வெச்சிட்டு சும்மா இரு..” பகவதி இடம் பொருள் உணர்ந்து பதமாய் சொல்ல.. நிதி மியுட் மோடை ஆன் செய்து கொண்டாள்.
நிரஞ்சன் அவ்விடம் வந்து சேரவும் தான் நிம்மதி பகவதியிடம்.
“ஹாய் மாப்ள…” என மணமகனுடன் கை குலுக்கியவன் சற்று தள்ளி இருந்த அவன் வீட்டாரிடம் வணக்கம் வைத்தான்.
அதன் பிறகு யாழின் அருகில் சென்று நின்று கொண்டான்.. இவர்களது பதிவு திருமணத்திற்கு இன்னும் நேரமிருந்தது.. இருக்கும் நேரத்தை எப்படி கழிப்பது என யோசனையில் இருந்தார்களே தவிர யாரும் எதையும் செய்ய முன்வரவில்லை.
நிதியிடம் அவன் சித்தியிடம் பேச்சுக் கொடுக்குமாறு கண் காட்டிவிட்டு தனது அப்பாவிடம் மாப்பிள்ளை வீட்டாருடன் பேச்சில் கலந்து கொள்ள சொன்னான். அதன் பிறகே அவர் நகர்ந்தார். அவன் அம்மாவிடம் அவன் சொல் செல்லாது என்பதால் அவரிடம் அமைதியை அனுப்பினான்.
நளன் அவன் நண்பர்களுடன் சேர்ந்துகொள்ள… யாழும் நிரஞ்சனும் மட்டும். அவளோ அளந்து அளந்து பதில் சொல்ல.. பார்வையை பதிவகத்தில் இருந்த புதுமணமக்களிடம் வைத்தான் அண்ணன்.
அதிகாலை சுப வேளையில் வேள்வி வளர்த்து மும்முடிச்சிட்ட கையோடு வந்து சேர்ந்தவர்களைப் பார்க்கப் பார்க்க… வருத்தம் வந்து சேர்ந்தது இவனிடம்.
இப்படியா நடக்க வேண்டும் அவன் தங்கையின் திருமணம்?? சித்தப்பா இறைப்பணி ஏற்றுக்கொண்டு விட இவன் பொறுப்புணர்ந்து தமையனாய் தந்தையாய் மாற்றம் கொண்டான். அவன் அப்பா அம்மா… ப்ச்.. அவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்தவன் தன்னை உயர்த்திக் கொண்டான்.  
பகவதிக்கு யாழ் திருமணத்தை குறித்த கனவு இருப்பதையும் அவன் அறிவான். ஆனால் யாருமே எதிர்பார்க்கவில்லை… அவளது திருமணம் இப்படியாய் அவசரகதியில் அமையும் என!
நளன்… பொறியியல் முடித்து மென்பொருள் துறையில் வாஷிங்டனில் வாசம் செய்பவன்.
சொந்த ஊர்.. இவர்கள் இருக்கும் இதே பழனி.. வசதி வகையிலும் இவர்களை விட மேற்படி தான்.. விரும்பி வந்து பெண் கேட்க.. திருப்தி இவர்களிடம் இருக்க… சம்மதம் சொல்ல… அடுத்த கட்டம் வந்து நின்றது அதிர்ச்சியுடன்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து கல்யாணம் செய்ய ஆயிரம் கண்டிஷன்.. நளனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையாம் அதனால் திருமணம் எளிதாக பதிவுடன் முடித்துவிடலாம் என்று சொல்ல, திகைத்துப் போய்விட்டனர்.
யாருக்குமே அதில் விருப்பமிருக்கவில்லை.. நிரஞ்சனின் அம்மாவும் அப்பாவும் அதில் தலையிட விரும்பவில்லை.. உன் பொண்ணு.. அவ கல்யாணம்.. உன் முடிவு என தள்ளியே நின்றுவிட.. பகவதிக்கு பக்க பலமாய் நிரஞ்சன் மட்டுமே!!
“வேற இடம் பார்க்கலாமா சித்தி?” என்ற அவன் யோசனையைக் களைந்து இதையே முடித்துவிட முனைந்தார். இரண்டு மூன்று வருடங்களாகப் பார்க்கிறார் எதுவுமே அமைய மறுத்த நிலையில் அம்சமாய் அமைந்த வரனை விட மனமில்லை.
தொலைதூரம் என்ற ஒன்றும் இடையில் நின்றது. நளன் திருமணம் முடிந்த கையோடு அமெரிக்கா பறந்து விடுவோம் என சொல்லிவிட்டான். ஒரு வருடம்  அல்லது இரண்டு வருடம் ஒரு முறை தான் வர முடியும் என்ற நிதர்சனத்தையும் அவர்கள் முன் வைத்திருந்தான்.
தொடர்பு கொள்ள முடிந்த தொலை தூரம் தான்… ஆனாலும் நினைத்து நேரம் வந்து நிற்க முடியாதே! இது எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருந்தான் நளன்.
மணமகனாய்… மருமகனாய்… மனதை நிறைத்திருந்தான்.
அதனாலேயே எல்லாவற்றிற்கும் தலையாட்டிவிட.. இவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“யாழ்… கொஞ்சம் சிரிச்ச மாதிரி முகத்தை வெய்… எல்லாரும் உன்னையே பார்க்குறாங்க..” என்றதும் நிமிர்ந்து அண்ணனைப் பார்த்தாள் வலியுடன்.
அவனுக்கும் அவளது மனதும் அதில் நிறைந்து போயிருக்கும் வலிகளும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அவனால் மட்டும் என்ன செய்து விட முடியும்? எதையும் மாற்ற முடியாது என்ற நிதர்சனம் நிரஞ்சனிடம் நின்றதால்
“எப்படியும் ஒரு மூணு மாசத்துல நான் அங்க வந்துருவேன்டா.. அதுவரை கொஞ்சம் சமாளிச்சுக்கோ..” என்றான் வாஞ்சையான வருடலுடன்.
அவன் வந்தால்? அவன் வந்துவிட்டால் மட்டும் அவளால் அங்கிருந்து விட முடியுமா என்ன? நிச்சயம் முடியாது.
அகம் அத்தனையும் அழுத்தம்…. அயல் நாட்டில் அடைக்கலம் புக. அவளைப் பற்றி ஆதி அந்தம் அறிந்த அன்னையே இந்த திருமணத்திற்கு தலையாட்டிவிட.. அதன் பிறகு எல்லாவற்றிற்கும் இவள் சிறு தலையசைப்பே!.. இழுத்து வந்து இங்கு நிறுத்தியிருக்கிறது.
நளனின் நண்பன் ஒருவன் வந்து உள்ளே செல்ல அழைக்க.. நிரஞ்சன் முன்னே நகர்ந்தான்.
சற்று முன்னால் நண்பர்களுடன் இருந்தவன் இவள் வர காத்திருக்க.. நிரஞ்சன் வேக எட்டுகளை வைத்து முன் சென்றுவிட.. யாழுடன் இணைந்து நடந்தான் நளன்.
அத்தனை ஆதாரங்களும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க.. மீண்டும் சரி பார்க்க அவர் கால அவகாசம் எடுக்க.. இவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
“யாழ்… இப்பவாவது என்னைக் கொஞ்சம் பார்க்கலாம்… இல்ல.. நீ பார்க்கிற மாதிரி இல்லடான்னு சொன்னாலும் ஓகே.. ஆனா என்னைப் பார்த்துச் சொல்லு..” மெதுவாக இவள் செவிகளில் அவன் குரல் இறங்கிட.. நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்.
புலர்ந்த புன்னகையை அடுத்து அவர்களுடன் நின்றிருந்த நண்பர் கூட்டம் வந்த வேலையான வாரலை செய்ய.. நளனும் அமைதியாகிவிட்டான்.
இவர்களுக்கு முன்னே பதிவை முடித்த இணைகள் இவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல.. சிறு புன்னகையும் தலையசைப்பையும் கொடுத்து திசை திரும்பியவளின் விழிகளில் விழுந்தான் அவன்…
நம்பியவன் விழிகளும் நங்கையிடம் தான் நங்கூரமிட்டிருந்தன……!
அவன் விழியின் மொழியினை மொழி பெயர்த்தவளிடம் திகைப்பும் அதிர்வும்..
‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா……………………………..’
கனவு நனவாகும்…….
    
 

Advertisement