Advertisement

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி !
பார்த்திபன் கனா 2
இருவருக்கும் இடையில் இமைக்கா நொடிகள்……
திகைப்பும் அதிர்ச்சியும் அவளிடம் வரக் காரணம் நிச்சயம் அவனைப் பார்த்ததினால் அல்ல… அவனை அவ்விடம் பார்த்ததினால்….!
அவளைப்போலவே அவனுள்ளும் அதிர்வலைகள் வந்து போகிறதா??? அதை அறிந்து கொள்ள அவன் மனம் வைக்க வேண்டும்..! வைக்க மாட்டான்… உள்ளத்தில் உருவெடுத்த உணர்ச்சிகளை வெளிக்காண்பிக்காது அத்தனை அழுத்தம் அவனிடம்.
அவனிடம் இருந்து தன் விழிகளை விளக்கிக் கொள்ள விரும்பினாலும் இயலவில்லை இவளால். அவன் மீதே பார்வையைப் பதித்திருந்தாள்.
‘இவன் எப்படி இங்க…?’ இவள் யோசனையில் இருக்க..
அவனிடம் யாரோ வந்து நின்று எதுவோ கேட்க.. தன் கையில் வைத்திருந்த கோப்பை அவரிடம் கொடுத்து.. நகர்ந்தான் அவ்விடம் விட்டு.
பாவையிடமும் பார்வையால் விடைபெற்று விட்டுத்தான்..!
இதுவரை இல்லாத இனமறிந்த குற்ற உணர்வொன்று இப்போது இதயத்தைத் தாக்கி விட.. சற்று தடுமாறியவளை சட்டென பற்றினான் நளன்.
“யாழ்! பார்த்து….”
மெல்லிய தலைசைப்புடன் விலகி நின்றாள் யாழ்மங்கை.
அவர்களுக்கான பொன் நேரம் பொருந்தி வர… நளன், யாழ்மங்கையைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கையொப்பமிடச் செல்ல…
“என்னங்க……..” என்ற அவன் அன்னையின் கதறல் காதைத் தீண்டியது.
அவனுடைய அப்பா… நெஞ்சைப் பிடித்தபடி சுருண்டு விழுந்து கிடந்தார்..
“ப்பா……” அவரிடம் விரைந்தான் நளன். மூச்சு பேச்சற்றுக் கிடந்த அவர் தோற்றம் அவனுக்கு ஏதோ உணர்த்த… அப்படி இருந்துவிட கூடாது என திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டு ஆம்புலன்ஸை அழைக்கச் சொன்னான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் அவ்விடம் வந்து சேர.. அப்பாவுடன் அவன் அகன்றான். அவன் பக்க உறவுகளும் அடுத்தடுத்து சென்றுவிட யாழ்மங்கையின் அகத்தினர் மட்டும் அவ்விடம் நின்றிருந்தனர்.
அங்கிருந்தவர்களின் பரிதாப பார்வைகளையெல்லாம் பொறுத்துக்கொள்ள இயலாமல் வெளியேறினாள் யாழ்மங்கை.
அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சிகளை புரியாத பாவனையுடன் பார்த்திருந்தான் அவன்.
அவன் பார்த்திபன்…. ராஜ பார்த்திபன்.
தன் மனதின் மென் உணர்வுகளை மீட்டிய மங்கையை அப்படியே அகத்தினுள் சிறை பிடித்து வைத்திருக்கும் மன்னவன்.
நிரஞ்சனுக்கு அங்கிருப்பதா? ஹாஸ்பிடல் செல்வதா எனத் தெரியாமல் திணறினான். சித்தியையும் இரு தங்கையையும் அப்படியே விட்டுச் செல்ல முடியாது. அவன் அப்பாவிடம் சென்று அவரை மருத்துவமனை அனுப்பி விட்டு பகவதியிடம் வந்தான்.
வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார். அப்படி அவரைப் பார்க்க முடியவில்லை அவனால். ஒரு தனயனாக தாயின் நிலையை உணர முடிந்தது. சமாதானம் சொல்ல வேண்டுமா? என்ன சொல்ல வேண்டும்? சத்தியமாக அவனுக்குத் தெரியவில்லை. அண்ணனாக அவனும் அதிர்ச்சியில் இருக்கிறான்.
திரும்பி யாழைப் பார்த்தான். குழம்பிப் போனான். திருமணம் நின்றுவிட்டது அடுத்து என்ன? எந்த கலக்கமும் பயமும் இன்றி தெளிவாக இருந்தாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இப்போது தான் மலர்ந்து தெளிந்து இருக்கிறது அவள் முகம். எதிலிருந்தோ விடுபட்ட உணர்வுடன் அமர்ந்திருந்தாள்.
அவளிடம் பிறகு பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்தவன் முதலில் பகவதியை தேற்ற ஆரம்பித்தான்.  
“அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே நிரு…” விரக்தியான புன்னகையுடன் சொல்ல
“சித்தி… என்ன பேசறீங்க? அவருக்கு ஹார்ட் ப்ரோப்லம் இருக்கறது நமக்கும் தெரியுமே.. ஏற்கனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அவருக்கு இப்படி ஆகணும்னு இருக்கு.. ஆகிடுச்சு. இனி அடுத்து நாம என்ன பண்ணனும்? அத மட்டும் பார்க்கலாம்..” என்றான்.
சொல்லப் போனால் அவருக்குமே அடுத்து என்ன எனத் தெரியவில்லை. உடனிருந்து சொல்லவும் யாருமில்லை. அனாதையாய் நிற்பது போன்ற உணர்வு… கண்களில் கண்ணீர் வழிந்தோட..
“சித்தி….” என அவரது தோளைத் தொட்டான் நிரஞ்சன்.
அவர் பெறாத பிள்ளை நிரஞ்சன்.. அவருக்கு ஒரு பிள்ளை இருந்தால் கூட இத்தனை பாசம், பிரியம் வைத்திருப்பானோ என்பது சந்தேகம். அவனிருக்கும் வரை தானும் தன் பிள்ளைகளும் அனாதை அல்ல எனத் தோன்றும். ஆனால் அவனுக்கு என்று ஒரு குடும்பமும் வந்துவிட்டது இப்போது. இனியும் அவன் தோள்களில் சுமையாக இருக்க வேண்டாம் என்று தான் இத்திருமணத்தை நடத்த நினைத்தார்.
அவர் ஒன்று நினைக்க ஆறுமுகத்தான் ஒன்று நினைத்துவிட்டான் போலும்…!
கண்களைத் துடைத்துக் கொண்டவர், “இவங்க ரெண்டு பேரையும் வீட்ல விட்டுட்டு நாம அங்க போலாம் நிரு..” என எழுந்தார்.
“ம்மா… எது நடக்கனும்னு இருக்கோ அது நடந்தே ஆகும்.. நாம எதையும் மாத்த முடியாது. நீங்க அங்க போய்ட்டு அவருக்கு எப்படி இருக்குன்னு கால் பண்ணி சொல்லுங்க..” என மொழிந்தாள் மங்கை.
அவள் தெளிவு ஒன்றே அவரிடம் தைரியம் சேர்த்தது.
இருவரும் மருத்துவமனை வந்து சேர.. இவர்களுக்காய் காத்திருந்தார் நிரஞ்சனின் அப்பா.
“என்னப்பா சொல்றாங்க? அவர் இப்ப எப்படி இருக்கார்?”
‘எல்லாம் முடிந்தது’ என்பதாய் ஒரு தலைசைப்பு அவரிடமிருந்து.
பகவதியும் நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் அதிர்வுடன் பார்த்துக் கொள்ள.. “கொண்டு வரும் போது இறந்துட்டாரு நிரு.. இது மாசிவ் அட்டாக் போல.. நான் உனக்கு போன் பண்ணேன்.. ரீச் ஆகல”
“ப்பா….”
பகவதி அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டார். தன் மகள் மங்கையின் மணம் கூட மறந்து போயிருந்தது.. இங்கு மறைந்து போன மனிதரால்…..! அவருக்கு இருக்கும் இதய நோய் பற்றி அறிந்தே இருந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை இன்று நடந்துவிட்ட நிகழ்வினை.
“அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க நிரு… நாம இப்ப அவங்க வீட்டுக்கு போயிடலாம்.. இப்போதைக்கு வேற எதையும் பேச வேண்டாம்.. காரியம் முடியட்டும்..” என்றார் இருவரிடமும்.
அடுத்து அவன் அன்னையை அழைத்துக் கொண்டு வர.. நால்வருமாக நளன் வீடு நோக்கி பயணப் பட்டனர். உடைந்து போன உள்ளங்களின் சத்தம் தான் அவ்வீட்டினை நிறைத்து நின்றது. மாலை நேரம் வரை மாப்பிள்ளை வீட்டாரோடு உடன் நின்று உதவி செய்துவிட்டு வீடு திரும்பினர்.
“மா… பா… இங்க ஒரு இரண்டு நாள் இருந்துட்டு அப்புறமா ஊருக்கு போலாம்..” என்றிருந்தான் நிரஞ்சன். அதனால் அப்படியே பகவதியுடன் வீடு வந்தனர்.
இவர்கள் இப்படியிருக்க….. ராஜபார்த்திபன் அக ஆழியில் ஆவேசமாய் ஓர் ஆர்ப்பரிப்பு…! ஏமாற்றம்.. வலி.. சினம்.. தொடர் தாக்குதல்களை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறி நின்றது அவன் மனம்.   
அடக்கப்பட்ட ஆத்திரம் அகம் முழுவதும்…! ஏமாறுவதை விட ஏமாற்றப்படுவதின் வலி அதிகம். அந்த வலி தந்த வேதனை மொத்தமும் ஆத்திரமாய் உருவுகொண்டது அவனிடம்.
ஆம்… அவன் ஏமாந்துவிட்டான்… ஏமாற்றிவிட்டாள் அவள்.. யாழ்மங்கை. அவளுக்காக அவன் காதலுடன் காத்திருக்க… அவள் இன்னொருவன் கரம் பிடிக்க இருந்தாளே!
பதிவு அலுவலகத்தில் பாவையை பார்த்ததும் பார்த்திபன் இதயம் இமைப் பொழுதில் வெடித்துச் சிதறி… உணர்வுகள் மரத்துப் போய் நின்றான்.
சட்டென தன்னை மீட்டுக் கொண்டு அவ்விடம் விட்டும் அகன்றான்.
எப்படி? எப்படி எந்த தயக்கமும் தடுமாற்றமுமின்றி எனை நோக்கினாள்? குற்றமும் குறுகுறுப்பும் கொஞ்சமும் இல்லையா? இவளா என் மங்கை? என் காதல் இவளுக்கு வேடிக்கையா? இதை தொடர்ந்து வசைகள் பல வழங்கிவிட்டு குடிமக்கள் கூடத்தை நோக்கி நடந்தான்.
ஏதோ ஒரு உந்துதலில் வந்துவிட்டான்.. அதற்கடுத்து அவனுக்கு என்ன செய்ய எனத் தெரியவில்லை. விழிகளைச் சுழற்றினான். கும்பல் கும்பல்களாக குடிமகன்கள் காட்சி கொடுத்தனர்.
ஒரு பக்கம்… போதை தலைக்கேறி படம் காட்டியதில் குப்புற வீழ்ந்து கிடந்தனர் சிலர். சர்வீஸ் செய்பவர்கள் அப்புறப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம்… உள்ளே போன வஸ்து வஞ்சனை இல்லாமல் வேலை பார்த்ததில், வாயில் வந்த வார்த்தைகளை கேட்க முடியவில்லை. அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு. ஆனால் ஓடினால் அன்றைய தூக்கமும் ஓடிவிடும் என்பதால் வேறு வழியின்றி முன்னேறினான்.
உள்ளேயும் வந்துவிட்டான் தான்.. ஆனால் என்ன வாங்க எனத் தெரியவில்லை அந்தப் பால் வடியும் முகமுடைய பாலகனுக்கு.
சரியாக அந்த நேரம் பார்த்து வந்தது அழைப்பு.. அவன் தோழமையிடமிருந்து. ‘அப்பாடா’ வுடன் அழைப்பை ஏற்று
“மச்சி… ஒரு கோட்டர் சொல்லு” என்றான்.
       
மறுபுறமிருந்து வந்த மறுவார்த்தையில்… “பக்கி… பல்லை உடைப்பேன்… என்ன வாங்கன்னு தெரிலடா.. ஒரு நல்ல பிரேன்ட் சொல்லு”
இவனைக் கடந்து சென்ற ஒரு குடிகாரர் ‘இப்படியும் ஒரு பிறவியா?’ பார்வையை பறக்க விட்டுச் செல்ல.. அதோடு எதிர்பக்க நண்பனின் நக்கல் புன்னகை புண்பட்ட மனதை புகையச் செய்தது.
“நீ சொல்லவே வேணாம்… போன வை..” அழைப்பை துண்டித்து விட்டு
“அந்த பிங்க் கலர் பாட்டில் கொடுங்க…” என வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினான்.
“ச்ச… பார்த்திபா.. பார்வதி உலகம் தெரியாம உன்னை வளர்த்திடுச்சு… இப்ப பாரு கண்ட கண்ட குடிகாரங்க எல்லாம் உன்னை கேவலமா பார்க்கிறாங்க..” புலம்பலும் புகைச்சலுமாய் வீடு நோக்கிப் பறந்தான்.
இவனது மனக் குமுறலுக்குக் காரணம்… டாஸ்மாக் ஓனரிடம் பிங்க் கலர் பாட்டிலை கேட்டு வைக்க.. பதிலுக்கு பார்த்தாரே ஒரு பார்வை..! ‘எங்கிருந்து டா கிளம்பி வறீங்க’ என்பதாய்.
மிட்டாய் கடையின் முன் நின்று பெயர் தெரியாமல் பச்சை.. மஞ்சள்.. என விரல் நீட்டி கேட்பது போல் கேட்டால்… சிப்பு சிப்பா வருது என்ற நிலை தான்.
வீடு வந்து சேர.. அவனுக்காகக் காத்திருந்தார் வீட்டின் உரிமையாளர்.
“என்ன தம்பி… இன்னிக்கு ரொம்ப நேரமாகிடுச்சு போல… எப்பவுமே நேரமே வந்துடுவீங்க.. வேலை அதிகமோ?” எதார்த்தமாக கேட்க.. ஏமாற்றம் தந்திருந்த எரிச்சல் எகிறியது அவனிடம்.
ஆனால் அதைக் காட்டிட முடியாதே..! அதனால் “ஆமா சார்” என்பதோடு முடித்துக் கொண்டான்.
உள்ளே செல்ல முயன்றவனிடம் “தம்பி ஒரு உதவி பண்ணனும்.. அக்கா பையன் பெங்களூர் கிளம்பிட்டான். பத்து மணிக்கு அவனைக் கொண்டு போய் பஸ் ஸ்டாண்ட் வரை விட்டு வர முடியுமா?” என்று கேட்டார்.
முடியுமா எனக் கேட்டாலும் அவரது குரல் முடியணும்.. முடிந்ததே ஆகணும் என்பது போல் தான் வெளிப்பட்டது.
கையிலிருந்த பார்சலைப் பார்த்தவன்.. சரி என்பதாய் தலை அசைத்து உள்ளே வந்தான். பாட்டிலை பத்திரப்படுத்தி விட்டு சோபாவில் விழுந்தான்.
‘மனுஷனை கொஞ்சமாச்சும் நிம்மதியா விடுறாங்களா? எல்லாருக்கும் அவங்கவங்க தேவை.. அவங்க விருப்பம் மட்டும் தான்.. சுயனலவாதிங்க.. அவளைப் போலவே..
அதுனால தானே என்னை விட்டு அந்த வெள்ளக்காரனை கட்டிக்க போனா.. விட்டானா? அதுக்கும் வெச்சான்ல ஆண்டவன் ஆப்பு. என்னை ஏமாத்தணும்னு நினைச்சா அந்தக் கடவுளுக்கே பொறுக்காதுடி….’
குடிப்பதற்கு முன்னேயே மனதிலிருந்தவற்றை கொட்டி அமைதியாக்க முயன்றான்.. முயன்றான் அவ்வளவே. முடியவில்லை..! மனம் முழுக்க.. முழுக்க மங்கையவள் மணம் தான்…!
“அடியே மங்கம்மா….. இம்ச பண்ணாம இங்க இருந்து போடி….. என்னை வேண்டாம்னு போயிட்டல்ல… நீயும் எனக்கு வேணாம்டி..” இதயத்தில் இருந்தவளிடம் இவன் பேசிக் கொண்டிருக்க.. வாயில் புறம் அழைப்பு மணி அழைத்தது.
வீட்டின் உரிமையாளர் தான். “தம்பி நேரமாகிடுச்சு.. இப்போ கிளம்பினா பஸ் வரதுக்கும் சரியா இருக்கும்”
“இதோ போறேன்..” என வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டான். அடுத்த அரை மணி நேரத்தில் வீடு திரும்பியவன் கைகளில் சைட் டிஷ் வகையறாக்கள்.
வரும் வழியில் தான் அதுவும் நினைவிற்கு வந்து. இப்போது இவனுடன் இவன் வீடு சேர்ந்திருக்கிறது. அனைத்தையும் பிரித்து வைத்துக் கொண்டு குவளையைக் கவிழ்க்க… வாயருகே கொண்டு சென்றான். அவ்வளவே… உள்ளிருந்து உருண்டு வந்ததில் மாலை நேரத்து சிற்றுண்டி அப்படியே வாஷ்பேஷனில்.      
ஒரு காட்டு காட்டி விட்டது. உள்ளிருந்த குடல் உறுவி வந்துவிடும் என்ற நிலை பார்த்திபனுக்கு. சுத்தம் செய்து வர.. மறுபடியும் அழைப்பு மணிச் சத்தம்.
“கடவுளே… இந்த ஆள் இன்னிக்கு என் உயிரை வாங்காம போக மாட்டாரு போல..” திட்டிக் கொண்டே திறந்தவன் திகைத்து நின்றான்.
“ராஜா… தூங்கிட்டியா…” உள்ளே நுழைந்தார் பார்வதி. பார்த்திபனின் வாழும் தெய்வம். அதிர்ச்சியில் அவரை தடுக்கக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான்.
எதிர்பார்க்கவில்லை அவரை. அதுவும் அந்த நேரத்தில்…! வருவதாகச் சொல்லக் கூட இல்லை.. ஏன்? என்பதில் இவன் மனம் இருக்க..
“ரா……ஜா…” அன்னையின் அதிர்ச்சி அவனைத் தாக்கியிருக்க ‘அச்சோ… அம்மா..’ தலையில் அடித்துத் திரும்பினான்.
என்ன சொல்லுவான் அவரிடம்? இல்லை என்ன சொல்லத்தான் முடியும் ஒரு அன்னையிடம்? விளக்கமா? அது இவன் செயலை இன்னும் கீழ் இறக்கும்.
“ம்மா….” என்றவனுக்கு அவர் பார்வையை எதிர் கொள்ளும் திடம் துளியும் இல்லை. தலை குனிந்தான் தாய் முன்..!
“நீ ஏன்டா தலை குனியுற… நான் தான் தலை குனியனும்” என்றவர்
“ஏன்னா… என்னோட வளர்ப்பு தானே சரியில்ல..” விரக்தி வீறு கொண்டிருந்தது. அவனை வாள் கொண்டு கொன்றிருக்கலாம் வார்தை கொண்டு கொல்வதற்கு. என்ன வார்த்தை சொல்லிவிட்டார்… வளர்ப்பு சரியில்லை… இதை விட கடும் தண்டனையை கொடுத்திட முடியாது.
குறுகி நின்றான் அவர் முன்பு. ஒரு பார்வை பார்த்தவர் விலகிச் செல்ல..
“ம்மா… நான் குடிக்கல மா..” என்றான் மெல்லிய குரல்.
“இனியும் உன் மேல நம்பிக்கை இருக்கும்னு எப்படி நம்புற?” கேட்டுவிட்டு கதவடைத்துக் கொள்ள… இவனுக்கு வாங்கி வந்ததை தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போலிருந்தது. அதையும் செய்துவிட்டு தான் வந்து படுத்தான்.
பசி பாத்திரம் உருட்டியது வயிற்றினுள். ஆனால் சாப்பிடும் எண்ணமுமில்லை.. சாப்பாடும் இல்லை. கோட்டரை நம்பி மோசம் போனது தான் மிச்சம்.
எந்த தூக்கத்திற்கு பயந்து இதுவரை நாடாததை நாடினானோ அதுவும் போய்… இருந்த நல்ல பெயரும் போய்… தூக்கமும் டாட்டா காட்டி தூர போய்விட்டது. அம்மாவின் நினைவில் மங்கம்மாவை அடியோடு மறந்தான்.
விடிய விடிய வால் கிளாக்கிற்கு வாட்ச் மென் வேலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
பார்வதி அவன் பார்வையில் படவும் வேகமாய் அவர் முன்பு போய் நின்றான். அவர் விழிகள் வேறு திசையில் நோக்க..
“மா…. நான் உன் புள்ள மா…”
“என் புள்ளையா இருந்தா அந்த கிரகத்தை நினைச்சும் பார்த்திருக்கமாட்டான்..  எத்தனை வருஷப் பழக்கம் ம்ம்ம்???” குரலின் காரம் அவனை சுட்டுவிட
“தப்பு தான்…. தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேன்… தெரிஞ்சே தான் பண்ணினேன்.. ஆனா தப்பு பண்ணல.. இதுக்கு முன்னாடியும் இப்படியொரு தப்ப பண்ணதில்ல…” தெளிவாகச் சொல்ல
“இப்ப என்னடா பிரச்சனை உனக்கு? வேலை இல்லையா.. பங்காளி சண்டையா… இல்ல காதல் தோல்வியா?…” தெரிந்து கொள்ள வேண்டி அவர் கேட்க..
அவன் மனமோ, ‘ம்ம்ம்… எனக்கும் என் பொண்டாட்டிக்கும் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் சரியில்ல…’ என்றது.
மங்கை மனதளவில் அவனுக்கு மனைவி. அந்த நினைவு தான் அவன் நிலை  தடுமாறக் காரணம். நொறுங்கிப் போனது அவன் மனம். நேற்று இருந்த கோவம் கூட இல்லை இப்போது. ஏமாற்றம் மட்டுமே எஞ்சி நின்றது.
“நான் கேட்கிறேன்… பதில் சொல்லாம இருந்தா என்னடா அர்த்தம்?”
“ம்ம்… சொல்ல பதில் இல்லைன்னு அர்த்தம்..”
தப்பு செய்ய நினைத்தான் அவ்வளவே. செய்யவில்லை. இவர் வராமல் இருந்திருந்தால் கூட அது வாஷ்பேசன் வாய்க்குள் தான் போயிருக்கும்… அதனால் முன்னிரவு முளைத்த குற்றவுணர்வு இப்போது இல்லை. அவரை எதிர்கொள்ள முடிந்தது.
அவர் முறைத்தபடி நகர.. தடுத்தவன்
“பேசிட்டு இருக்க.. இருக்க போனா என்ன அர்த்தம் மா?” எனக் கேட்க
“உன்கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம்..”     
“ஆனா எனக்கு இருக்கே…. இப்ப நீ என்கூட பேசல.. அப்புறம் இந்த பார்வதியோட புள்ள பழனி மலைக்கு பக்கத்து மலைல போய் உட்கார்ந்திடுவேன். வான்னாலும் வரமாட்டேன்… சொல்லிட்டேன்…” இளமுறுவலுடன் மிரட்டல் விடுக்க..
“போடா…” என்றுவிட்டு போனவரின் முகத்தில் போர்த்தியிருந்த இறுக்கம் விடைபெற்று இருந்ததை கண்டு கொண்டவன்
“பார்ரூ..ஊ… சூடா ஒரு கப் காபி வேணும்… குடிச்சுட்டு தூங்கணும்…” என்றபடி சோபாவில் சாய்ந்தான்.
எல்லோரும் துயில் களைய காபி குடித்தால்… இவன் துயில் கொள்ள குடிக்கும் ரகம். இதில் மட்டுமல்ல.. எல்லாவற்றிலும் சற்று மாற்றி யோசிக்கும் ரகம் தான் ராஜா…!
கனவு நனவாகும்…..     
  
 
 

Advertisement