Advertisement

நளனின் நங்கை

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு…

ஆர்ப்பரிப்பு அம்மாவிடம்.. அலைக்கழிப்பு என்னிடம்..

காபி ட்ரேவ என் கையில குடுத்து ஆல் இஸ் வெல் சொல்லி கட்டை விரலை உயர்த்தி தம்ஸப் பண்ணுறா என் அத்தை பொண்ணு அறிவுமதி.

காபி கைக்கு வரவும் கரண்ட் கைக்கு வந்த மாதிரி ஒரு ஆட்டம்..  

ஜில்லுன்னு ஒரு சுவாசம்…. மாதிரி ஆழ்ந்து ஒரு சுவாசம் எடுத்துட்டு மெல்ல கீழ வந்தேன். எல்லாருக்கும் காபி குடுத்தேன். யாரையும் நிமிர்ந்து பார்க்கல. குனிந்த தல நிமிராத பொண்ணுன்னு சொல்லி என்ன செலக்ட் பண்ண வாய்ப்பிருக்கில்ல அதான்.

பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?” காபி குடிச்சதும் சவுண்டா ஒரு குரல் வந்துச்சு.

நாம போட்ட காப்பியா இருந்திருந்தா இன்னேரம் சவுண்ட் வந்திருக்குமா!! ம்கூம்… பேச்சு மூச்சே இருந்திருக்காது எனக்குள்ள நானே ரன்னிங் கமெண்டரி.

அதெல்லாம் எங்க பொண்ணு நல்லா சமைப்பாங்க.. கிட்சன் சூப்பர் ஸ்டார் அவ எங்க அம்மா.

கேட்டாங்களா இல்ல கேட்டாங்களா உங்ககிட்ட! ஏன்மா??

பாட தெரியுமா ஆட தெரியுமான்னு தானே கேப்பாங்க!! நீங்க என்ன ஆன்டி சமைக்க தெரியுமான்னு கேக்குறீங்க??” அறிவு அறிவாளியா ஆன்டிய கேட்டு வைக்க.

அறிவு!!!! என் அத்தை பெத்த அன்னக்கிளிக்கு என்னிடம் இருந்து பார்வையிலேயே பறந்தது அன்பு முத்தங்கள்.

இப்போ எல்லா மாமியார்களுமே உசாராயிட்டாங்க.. சமைக்க தெரியும்னு சொன்னால் தான் பொண்ணு செலக்ட்..

அதுமட்டும் இல்லமா.. அடுத்து நாங்க வைக்குற டெஸ்ட்லயும் பாஸ் ஆகணும்.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

பிக் பாஸ் ஆன்டியா இது!!

அதெல்லாம் எங்க பொண்ணு எல்லா கேள்விகளுக்கும் டான் டான்னு சரியாய் பதில் சொல்லுவா.. நீங்க கேளுங்க.. கேட்டுகிட்டே இருங்க எங்க அப்பா..

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்றதுக்கு இது என்ன சூரியன் எப்.எம் ஆ.. ஏன் ப்பா??

காபி நீயே போட்டயா மா?? விடாக்கண்டன் ஆன்டியின் அடுத்த கேள்வி.

ஆமான்னு சொல்லு அறிவு சிக்னல் குடுக்குறா.. பரிதாபமா எங்கம்மாவை பார்த்தேன். பார்வையாலேயே எரிச்சுட்டாங்க.

ஆமாம்னு தலையை ஆட்டிவெச்சேன்

சரி மா சிம்பிளா ஒரு வெஜ் பிரியாணி மட்டும் செஞ்சு காமிச்சிரு போதும். முப்பது நிமிஷம் டைம். நீ மட்டும் கிட்சன் போ மா.. போன் எல்லாம் வெச்சிட்டு போயிரு பிட் அடிக்கக்கூடாது.. நேர்மை முக்கியம்..

டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.

அப்பா அம்மா அறிவு முகத்துல டென்ஷன்.

ஸ்டவ்வை பத்தவைக்க போறேன் கால் நடுங்குது.. கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு ஒன்னு டூ த்ரீ சொல்லி ஸ்டவ்வை பத்த வைக்க இப்போ கை நடுங்குது.. மூச்சை நல்லா இழுத்து விட்டுட்டு அகைன் ஒன்னு டூ த்ரீ சொல்லி ஸ்டவ் பத்தவைக்க..

சக்சஸ்..

நான் சக்சஸ் பார்ட்டி கொண்டாடறதுக்குள்ள

டைம் அப் அந்த ஆன்டி குரல்.

திடுக்கிட்டு திரும்புனா

எனக்கு இந்த பொண்ணு பிடிக்கலஆஆஆ மாப்ள பையன் வாய்ஸ்.

நோஓஓ………….

நான் கத்துன கத்துல வீடே அலறுச்சோ இல்லையோ அறிவு அலறிபோய்ட்டா.

சாகித்யா..”

அறிவு என் தோளை பிடிச்சு உலுக்குறா.

என்னடி ஆச்சு.. எழுந்திரு மொதல்ல

அதல பாதாளத்துல விழுந்த என்ன தூக்கி விடுற மாறியே இருந்துது.

சாகித்யாகண்ணு.. என்னாச்சு டாஅம்மா பதறிப்போய் பக்கத்துல நிக்க

ம்மா.. ஒன்னு இல்லம்மா.. கனவு போல

டைம் ஆச்சு சீக்கிரம் ரெடி ஆகு மாப்பிள வீட்டுக்காரங்க கொஞ்சநேரத்துல வந்துருவாங்க

அம்மா எனக்கு நகை டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு வெளிய போய்ட்டாங்க..

தலையை பிடிச்சிட்டு உக்காந்துட்டேன். அறிவு என் தோள்மேல கைய வைக்க அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

அடையாளம் தெரியாம இருந்தா.. நாலு கோட்டிங் அடிச்சிருக்கணும் முகத்துக்கு.

பொண்ணு நீதான் பட் உனக்கு யாரு மேக்கப் பண்ணினதுனு கேட்டா!! அதான்.. எனக்கும் கொஞ்சம் டச்சப்கேட்காமயே விளக்கம்.

ஓஹ் பொண்ணு இவங்கதான் அவங்க போட்ருக்க மேக்கப் என்னுது டைலாக் ஆஹ்

ஹ்ம்ம்..

ஒழுங்கா உன் மூஞ்சிய கழுவிட்டு வா.. இன்னைக்கு எந்த பாங்க்சனும் நடக்காது. எனக்கு இதெல்லாம் வேணாம். இப்போவே இத ஸ்டாப் பண்ணனும். ஐ அம் நாட் பிட் போர் மேரேஜ்

ஏய் நீதானே அத்தை கிட்ட ஓகே சொன்னே.. உன்ன கேட்டுட்டுதான் வரசொன்னாங்க.. அதெல்லாம் எனக்கு தெரியாது நான் லிப்ஸ்டிக் ப்வண்டேஷன் மஸ்கராவோட வந்திருக்கேன். இன்னிக்கு உன் பங்க்சன்ல்ல நாலு செல்பி எடுத்து ஹாஸ்டக் கசின் அண்ட் மை பெஸ்டி பொண்ணு பார்க்குற பாங்க்சன்னு ஸ்டேட்டஸ் போட்டுட்டு தான் வீட்டுக்கு போவேன் உளறிட்டு உக்காந்திருந்தது அந்த உராங் உட்டான்.

விளையாடாத அறிவு நான் சீரியஸா பேசறேன். திடீர்னு அவங்க வர்றாங்கன்னு சொன்ன நான் எப்படி எடுத்துக்க.. யோசிக்க கூட டைம் இல்ல எனக்கு.. எதோ ஒரு யோசனைல அம்மா கிட்ட ஓகே சொல்லிட்டேன். இப்போ நெனச்சா எனக்கு இதெல்லாம் வேண்டாம்னு தோணுது.. எனக்கு இருக்குற பிரச்சனை தான் தெரியுமே உனக்கு!!”

இதெல்லாம் ஒரு பிரச்னையா!! என்ன மா நீ இப்படி பண்ணரீயே மா.. உன் பிரச்னையை வெளில சொன்னா சிரிப்பாங்க…..

நீ வேற யாருகிட்டயும் சொல்லலையே??” கண்களில் கலவரத்துடன் நான்.

நான் யாருகிட்டயும் சொல்லல.. சொல்லவும் மாட்டேன்.. நம்ம ரெண்டு வீட்டுக்கு மட்டும்தான் தெரியும்அடித்து கேட்டாலும் சொல்லமாட்டேன் என்ற பாவனையில் அவள்.

எனக்கென்னமோ சரியாய் படல.. அம்மாகிட்ட அவங்கள வர வேணாம்னு சொல்லிற போறேன். தெரிஞ்சே ஒருத்தரோட வாழ்க்கைல எப்படி விளையாட!! என்னால முடியாது

ஏய் ஏய் இரு.. இதெல்லாம் பார்த்தா நாட்டுல யாருக்குமே கல்யாணம் ஆகாது சாகித்யா.. இதுதான் உனக்கு வர்ற பர்ஸ்ட் சம்பந்தம் அதையேன் தடுக்குற??

வர்றவருக்கு உன்னோட பிரச்சனை எல்லாம் பெருசா தெரியாம உன்ன பிடிச்சிருந்தா என்ன பண்ணுவ??

ஆல்ரெடி அப்பா அம்மாக்கு பிடிச்சுப்போச்சு இப்போ நீதான் உன் பதிலை சொல்லணும்

அவங்க வந்துட்டு போகட்டும்.. நீ மொதல்ல அவருகிட்ட பேசிப்பாரு.. அப்பறம் டிசைட் பண்ணிக்கலாம்.

உனக்கு பிடிக்கலைன்னா நீயே நிறுத்திரு சிம்பிள்

அதுவும் சரியாய்பட நானும் ரெடியானேன். வேண்டாம் என சொல்லிவிடலாம் என்ற தீவிரத்தோடு.

அம்மா அலெர்ட் சவுண்ட் விட்டதும் அபாய சங்கு எனக்குள்ள.

அத்தை.. அவங்க வந்தாச்சா?” அறிவுக்கு ஒரே ஆனந்தம்.

வந்துட்டாங்கம்மா இங்கயே இருங்க நான் கூப்பிட்டதும் வாங்கஅதே ஆனந்தத்தில் அம்மா சென்றுவிட,

நான் புலம்ப.. அவள் பூரிக்க.. நான் நகம் கடிக்க.. அவள் நாக்கை கடித்து செல்பி எடுக்க என்று நாழி நகர்ந்தது.

பதட்டத்துல கை நடுங்குனா இந்த கர்சீப் வெச்சு சமாளிச்சிக்கோ அறிவு அவளுக்கு இல்லாத அறிவை வெச்சு எனக்கு ஐடியா கொடுத்தா.

அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல அப்பா அம்மா குரல் ஹால்ல இன்னும் சிலரோட சேர்ந்து ஒலிக்குது.

நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல… கை லிப்ஸ்டிக் போட்டுட்டு இருந்தாலும் எனக்கு இல்லேங்க அவளுக்கு தான் போட்டுட்டு இருக்கா.. இதோட நூறாவது முறை இதை சொல்லுறா அறிவு.

நான் தலையை ஆட்ட

சாகித்யா.. வா மா அம்மா கூப்பிட்டாங்க

மெல்ல கீழே வந்தேன்.

காபி கொடுமா

எல்லாருக்கும் கொடுத்தேன்.

மாப்ள பையன் பெர்ப்பியூம் சூப்பர் ஸ்மெல்.

ஆளு எப்படி? நான் கொஞ்சமே கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க.. அவன் காந்தக் கண்கள் என்னை ஈர்க்க.. ப்பா என்ன ஒரு ஸ்மைல்..

ஷோ ஈஸ்வரா பாலன்ஸ் மிஸ் ஆகுதே எனக்கு.. தட்டு தடுமாறின்னு நான் தட்டோட தடுமாற.. வேகமா திரும்பி வந்துட்டேன்.

எல்லாரும் என்னை தான் பார்த்தாங்க.. அந்த ஆன்டி அங்கிள் கிட்ட மட்டும் ஒரு சின்ன சிரிப்பு.

நான் அறிவை பார்க்க.. அவ தலையில அடிச்சுகிட்டு என் கையில இருந்த காபி ட்ரேவ காட்டுனா

அங்க என்ன!! நானும் பார்த்தேன்..

அட கடவுளே அவன் காபி எடுக்கவே இல்லையா!! அதுக்குள்ளயே நான் பாக் அடிச்சுட்டேனா!!

சங்கடமா நான் இப்போ அம்மாவை பார்க்க.. கொண்டுபோய் குடுன்னு கண்ணுலயே கட்டளை.

அசந்தாப்புள அள்ளிபுட்டானே

அடிமனதில் அண்டிபுட்டானே

மிளகாய்பூ போல என்னுள்

அழகாப் பூ பூக்கவிட்டானே

வெட்கத்துல விக்க வச்சானே

வெட்கத்துல சிக்க வச்சானே

பசப்புறனே மழுப்புறனே

சொதப்புறனே…..

அட இந்த அறிவு கெட்ட அறிவு.. அவ போன் அடிக்குது அதை எடுக்காம நிக்குறா.. அதுவா அடிச்சுதா இல்ல இவ பாட்டை போட்டு விட்டாளாண்ணு தெரியல.. அவளை அப்பறம் கவனிச்சுக்கிறேன்.

ரோபோ மாறி போன நான் லெஃப்ட் எடுத்தேன். தட்டை நீட்டுனேன். அவன் எடுக்கறானான்னு பார்த்தேன். அப்படியே கம்முன்னு வந்து கும்முன்னு இருந்த அறிவு பக்கத்துல நின்னுக்கிட்டேன்.

காபி சூப்பர் மா வந்திருந்த ஆன்டி சொன்னதும் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்.

அம்மா தான் போட்டாங்கஉண்மையை உரக்கச் சொல்லும் நான்.

உன்ன கேட்டாங்களாடி அவங்க????

அம்மா பார்க்குறாங்க அறிவு முறைக்குறா அப்பா சிரிக்குறார்.

என் பொண்ணு எப்போவும் உண்மை தாங்க பேசுவா கேப்புல டாடி கிடா வெட்ட

அய்யனார் கணக்கா உக்காந்திருந்த மாப்பிளை என்ன ரியாக்சன்னு தெரிஞ்சுக்க மெல்ல அவன் புறம் பார்த்தப்போ ஆழ்ந்த பார்வை அவனிடம்..

இப்படியே ஓடிரு இல்லைனா உனக்குத்தான் ஆழ்ந்த அனுதாபங்கள் பார்வையிலேயே செய்தி சொல்ல முயற்சித்தேன் நான். அவனுக்கு புரியலைப்போல திரும்பிட்டான்.

சரி எப்படியும் தனியா பேசுவாப்ல அப்போ பார்த்துக்கலாம்னு நான் தலையை குனிஞ்சுக்கிட்டேன்.

பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்

என்ன மாப்ள வாய்ஸ் லேடீஸ் வாய்ஸ் மாறி இருக்குனு நிமிர்ந்தா அந்த ஆன்டி எழுந்திரிக்குறாங்க..

இவங்க என்ன தனியா பேசப்போறாங்க? சரி இவங்க கிட்டயாவது நம்ம குறைய சொல்லுவோம்ன்னு மாடிக்கு கூட்டிட்டு போனேன்

உனக்கு என்ன பிடிச்சிருக்கா மா

அவங்க பையனை பத்தி கேப்பாங்கன்னு பார்த்தா இவங்கள பிடிச்சிருக்கான்னு கேக்குறாங்க

ஹ்ம்ம் என தலையசைத்தேன்

அது வந்து ஆன்டி எனக்கு..”

அறிவு சொன்னா மா.. அதெல்லாம் எங்களுக்கு பிரச்னையில்லை மா.. நான் இருக்கேன் நீ கவலை படமா எங்க வீட்டுக்கு வரலாம் கன்னத்தை வாஞ்சையாய் தடவி விட்டு போய்ட்டாங்க  

என்னடா இது!! அறிவு என்ன சொல்லிருப்பா!!

யோசனையோடு திரும்புனா அங்க அங்கிள் நிக்குறாரு..

அங்கிள் அதிர்ச்சியில் நான் அழைக்க..

என்கிட்ட எதாவது சொல்லனுமா மா அமைதியே உருவாய் அவர்..

அது அங்கிள் எனக்கு.. ஒரு பிரச்சனை..”

அது தெரிஞ்சுதான் உங்கிட்ட பேச வந்தேன்

இவருக்கு எப்படி தெரிஞ்சுது!!

அங்கிள் அது வந்து

நானும் உனக்கு அப்பா தான் டா நீ பயப்படாம எங்க வீட்டுக்கு வரலாம் நாங்க பார்த்துக்கறோம் உன்ன

இதுக்குமேல என்ன சொல்ல.. அப்பான்னு சொல்லிட்டாரே

அங்கிள் ஆன்டிக்காக இந்த கல்யாணம் பண்ணிக்கலாமா ஒரு எண்ணம். நோ நோ அவன் பாவம். எப்படி பார்த்தாலும் அவனோட வாழ்க்கைல விளையாட என்னால முடியாது.

சாரி அங்கிள் என்ன மன்னிச்சிருங்க இப்படி ஆரம்பிக்கலாம்னு திரும்புன நான் திடுக்கிட்டு நின்னேன்.

அங்க அங்கிள் போய் அவரு மகன் நின்னுட்டு இருக்க.. சாரி சொல்ல வந்த என் வாய் சா லயே நிக்க  

ஹாய் சாகித்யா.. நான் சாணக்கியன்

அதே அழகான புன்னகை அவனிடம்.

சாணக்கியா சாணக்கியா

ஏதோ தந்திரம் செய்தாய்..

உன் மதியால் என் மனதை

நீதான் வசியம் செய்தாய்..

அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்

இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா..

காதலுக்காக உந்தன் நெஞ்சை

கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா..

தீராதா உன் அன்பினால் போராடி

என்னை வென்றதால்

என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்…..

ச்சை ச்சை ஸ்டாப்.. எனக்கு நானே போட்டுக்கிட்ட ம்யூசிக்க தற்காலிகமா தடை செஞ்சுக்கிட்டேன்.

நான் யோசிக்கறத பார்த்து

என்னாச்சு??? என்றான்.

ம்கூம் தலையை மட்டும் ஆட்டுனேன்

என்ன பிரச்னைனாலும் சொல்லுங்க நான் இருக்கேன் பார்த்துக்கலாம்

என்னடா குடும்பமே வாசன் ஐ கேர் குடும்பமா இருக்கும் போல.. எல்லாரும் நாங்க இருக்கோம் டோன்ட் வொரி சொல்றாங்க   

நான் இருக்கேன் பார்த்துக்கலாம் இந்த வார்த்தைல மனம் விரும்புதே உன்னைனு… மெல்ல மெல்ல மனம் மன்னவன் புறம்.

சொல்லிடலாமா??

தைரியமா சொல்லுங்க ஊக்குவிக்குறான்.

அது எப்படி சொல்லறதுன்னு

எப்படியாவது சொல்லுங்க

எனக்கு மகெய்ரோகோபோபியா (Mageirocophobia) இருக்குங்க

வாட்?? மயங்காத குறையாய் மன்னவன்.

அதாங்க.. போபியா.. பயம்.. சமையல் செய்ய..” மணிரத்தினம் பட நாயகியாய் நான்.

அவன் முகவாயை தடவியபடி யோசிக்க

ரொம்ப யோசிக்குறானே எப்படி வேண்டாம்ன்னு சொல்ல நினைக்குறானோ அவனுக்கு ஏன் கஷ்டம் நாமளே ஐடியா கொடுப்போம்

நீங்க வெளில போய் எங்க அப்பா அம்மாகிட்ட இதுல இஷ்டம் இல்லைனு சொல்லிருங்க.. நான் உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிறேன்

ஹ்ம்ம் என விரைந்து கீழே இறங்கினான்

அடப்பாவி உடனே கிளம்பிட்டான் ஒரு பேச்சுக்கு தானடா சொன்னேன்.

அது சரி எல்லாரும் தனக்கு வரப்போற வைப் நல்லா சமைக்கணும்னு தானே எதிர்பார்ப்பாங்க.

ஒரே டிசப்பாய்ண்ட்மெண்ட்ல ஒவ்வொரு படியா நின்னு நின்னு வந்தேன்.

கீழே வரேன் என்னமா உன் முடிவு என்ன?” அங்கிள் கேட்குறாரு

குழப்பத்துல அவனை பார்த்தா.. அவன் அறிவுகூட சிரிச்சு பேசிட்டு இருக்கான்..

டேய் கொஞ்சம் என்ன பாருடா என்னடா சொல்லிவெச்ச மைண்ட்வாய்சில் நான்.

அவரோட முடிவு என்னவோ எனக்கும் அதுதான் அங்கிள் சாகித்ய சாமர்த்தியம்.

எல்லாரும் சிரிக்க எதுக்கு சிரிக்கிறாங்கனு புரியாம நானும் சிரிச்சுவெச்சேன்.

சம்பந்தி சீக்கிரமே ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லறோம் அப்போ நாங்க கிளம்புறோம் என எல்லாரும் கிளம்பியதும் ஒரே அதிர்ச்சி எனக்குள்ள.. என்னடா நடக்குது.

அறிவை என் அறைக்குள்ள அழைச்சிட்டுப்போய் அவங்க என்ன சொன்னாங்கன்னு விசாரணையை ஆரம்பிச்சேன்

நீ என்ன சொன்ன அவருகிட்ட அவ முந்திகிட்டா.

உண்மையை.. என் மனசுல பட்டதை சொன்னேன்

அவரும் அவரு மனசுல பட்டதை சொன்னாரு

அதான் என்ன சொன்னாரு

அவரு மனசுல பட்டதை சொன்னாரு

வாழைப்பழ காமெடி தான்.

நான் டென்ஷன் ஆகுறத பார்த்து அறிவு வாய் திறந்தாள்

சூடா எதாவது குடுக்க சொன்னா நீ சுடுதண்ணி கொண்டுபோய் கொடுத்தயாம்ல

நானா!! சுடு தண்ணியா!! அதற்கெல்லாம் வாய்ப்பில்லையே!! அப்படினு நான் யோசிக்கும்போதே

நீயே சூடு பண்ணல.. யாரோ வெச்சிருந்ததா எடுத்துப்போய் கொடுத்திருக்க.. அதுவும் கப் அண்ட் சாசர்ல.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே எங்களுக்கு!!”  

புரியாமல் நான்.

சாணக்கியன் அண்ணாவை தெரியலையா உனக்கு??”

போட்டோ தான் குடுக்கலையே பட் இன்னைக்கு நேர்ல பார்க்கும்போது எங்கயோ பார்த்த பீல்.. யோசனையில் நான்.

அபிஷேக் அத்தான் இருக்காரில்ல..என்று அந்தரத்தில் நிறுத்திவிட்டு அறிவு வெட்கப்பட எனக்கு சுவரில் முட்டிக்கொள்ளாத குறை.

அபிஷேக் எனக்கு அண்ணன் முறை. தூரத்து சொந்தம். அந்த அண்ணா பேரை சொன்னா அறிவு எதுக்கு அடிக்கடி வெட்க படுறான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. இப்போ வரைக்குமே இருக்கு.

அதற்குள் அம்மா என் அறை கதவை தட்ட விசாரணையை பாதியில் விட்டிட்டு வந்து கதவை திறந்தா.. சாணக்கியன் சார் அவரோட சாவிய மேல மிஸ் பண்ணிட்டாராம்!! அம்மா என்னைப்போய் தேடி தர சொன்னாங்க. சரின்னு நானும் போனேன் தாய் சொல்லை தட்டாத பிள்ளை அதான்.

மேல வந்தா அங்க ஷர்ட் பாக்கெட்குள்ள கைய விட்டுட்டு சாவிய எடுத்து என் முன்னாடி ஆட்டிட்டு நிக்குறாரு திருவாளர் சாணக்கியர்.

என்னை உனக்கு தெரியலையா!!” ஏமாற்றத்தில் அவன்.

ம்கூம்…. எனக்கு அம்னீசியாவோ என்ற குழப்பத்தில் நான்.

அபிஷேக்கும் நானும் ப்ரெண்ட்ஸ். டூ இயர்ஸ் பாக்.. அவனை பார்க்க அவன் வீட்டுக்கு வந்திருந்தேன். நீயும் அறிவும் அங்கதான் இருந்தீங்க.. அப்போ நீங்க பைனல் இயர் படிச்சிட்டு இருந்தீங்க..”

எனக்கு ஞாபகம் வருதான்னு பாக்குறான் எனக்கு அப்போவும் ஒன்னும் ஞாபகம் வரல..

நல்ல மழை அப்போ.. உங்க அத்தை எனக்கு சூடா எதாவது குடிக்க கொடுக்க சொன்னாங்க.. நீ கப் அண்ட் சாசர்ல..

என் கண்கள் விரிய.. அதோட போதும்னு நிறுத்தீட்டான். ஞாபகம் வந்திருச்சு அவன் சொல்ல வர்றதும் புரிஞ்சிருச்சு.  

ஒரு சின்ன சிரிப்போடு சொன்னான்

அப்போ இருந்தே உன்ன நான் கவனிக்க ஆரம்பிச்சேன். மல்ட்டி டேளெண்டெட் பெர்சன் நீ.. எதுல பார்ட்டிசிபேட் செஞ்சாலும் கப் உன் கைல தான்.

பெயிண்டிங்ஸ் நா ரொம்ப இஷ்டம்.. நீ வரைஞ்ச பெயிண்டிங்க்கு கிடைச்ச கேஷ் ப்ரைஸ சைல்ட் கேர் சென்டெர்க்கு டொனேட் பண்ணிட்ட.

சாகித்யாக்கு அதிகாலை வெயில் ரொம்ப பிடிக்கும் அதனால தினமும் அப்பாவையும் அழைச்சிட்டு வாக்கிங் போவ..

செடி வளர்க்கிறது ரொம்ப பிடிக்கும் அடிக்கடி நர்சரிக்கு விசிட் குடுப்ப.. உன் வீட்டுல யெல்லோ ரோஸ் மட்டும் நாலு வெரைட்டிஸ் இருக்கு யெல்லோ உன்னோட பேவரைட் கலர்.

கோல்டன் ரெட்ரீவர் ரொம்ப பிடிக்கும் எங்க பார்த்தாலும் அது பின்னாடியே போய்டுவ. ஆனா வீட்ல வளர்க்க உங்க அம்மா தடை போட்டுட்டாங்கன்னு வருத்தம்.

மழை வந்தா போதும் பேப்பர் போட் விட கிளப்பியிருவீங்க மேடம்..”

அவன் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல ஆச்சர்யம் குறையாமல் அவனையே பார்த்திருந்தேன் என் இதழ்களில் அரும்பிய சின்ன சிரிப்புடன்..

நீ செய்யற ஒவ்வொரு விஷயமும் பிடிக்க ஆரம்பிச்சுது ஆனா உன்ன எப்போ பிடிக்க ஆரம்பிச்சுதுனு தெரியல..

அப்பறம் தான் உணர்ந்தேன் உன்ன பிடிச்சதால தான் நீ செய்யற ஒவ்வொரு விஷயமும் எனக்கு அவ்வளவு பிடிச்சுதுன்னு  

இங்க யாரும் காதலை இவ்வளவு அழகா சொல்லிட முடியாது!!!! இதை நான் சொல்லியே ஆகணும் அவன்கிட்ட.

அப்பா அம்மா தான் சாகித்யா உலகம். லவ் இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அப்பா அம்மா பார்க்குற மாப்பிளைக்கு தான் மேடம் ஓகே சொல்லுவீங்க. நான் முன்னமே வந்திருந்தா ரிஜெக்டட் தான். பேசாம அரேன்ஞ் மேரேஜ் பண்ணிடலாம்னு என் போட்டோ கூட கொடுக்காம  நேர்ல வந்தேன். உன் ரியாக்சன் பார்க்க.. மேடம்க்கு தான் என்னை சுத்தமா ஞாபகம் இல்ல.. இதுல போபியா பிரச்சனை வேற கல்யாணமே வேண்டாம்னு சொன்னாயாமே!!

அப்போ உங்களுக்கு என் பிரச்னையும் முன்னமே தெரியுமா எப்படி??”

அறிவு…

அடிப்பாவி சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு ஊரு பூரா சொல்லிருக்கா..

தெரிஞ்சும் என்ன ஏன்?? என்னால ஸ்டவ்வே பத்த வைக்க முடியாதே

இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. சொல்லப்போனா உன்ன இன்னும் இன்னும் அதிகமா தான் பிடிக்குது. எதையும் மறைக்காம என்கிட்ட சொல்லற இந்த குணம்.. இதைவிட வேற என்ன வேணும்

என் தெளியாத முகம் கண்டு

நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பண்ணிருக்கேன். நம்ம ஹோட்டல் மூணு பிரான்ச் அடையார்லயே இருக்கு.. நம்ம வீட்டுல மூணு பேருக்குமே நல்லா சமைக்க தெரியும் நீ வந்து தான் ஸ்டவ் பத்த வைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. நீ எங்க வீட்டு குத்துவிளக்கை மட்டும் பத்த வெச்சா போதும்

பெரிய பாரம் என்னை விட்டு போனமாதிரி இருந்துச்சு. நல்ல வேலை நமக்கு நெருப்பை பார்த்து பயம் இல்லைன்னு ஒரு நிம்மதி. பின்ன குத்து விளக்கு ஏத்தணும்ல.

என்ன?? என் வீட்டுக்கு வருவதானே!!”

நான் ஏன் வரணும்!!”

அவன் நிச்சயம் என் கண்களை படித்திருப்பான். என் மனதின் தற்போதைய எண்ணங்களை அறிந்தும் இருப்பான் இருந்தும் அவன் பதில் என்னவாக இருக்கும் என்ற பேராவலில் நான் கேட்டேன்.

நம்ம சேர்ந்தே வாக்கிங் போகலாம்.. என் வீட்டு கார்டென்ல நிறையவே இடம் இருக்கு உன்னோட யெல்லோ ரோஸ் வருகைக்காக..

நம்ம ரூம்லயே ஒரு சின்ன ட்ராயிங் ரூம் இருக்கு உனக்காக டிசைன் பண்ணுனது.

கோல்டன் ரெட்ரீவர் நீ அங்க வந்து வளர்த்தலாம். நோ அப்ஜெக்சன்.

மழை வந்தா நானே போட் செய்து கொடுக்கிறேன்..

என் வீட்டுக்கு வந்துறேன்!

வார்த்தைக்கு வாய்ப்பின்றி எம் மௌன மொழிகள் காதல் பேசிட.. அகத்தில் ஆர்ப்பரித்த அலைகளில் மிதந்து தவழ்ந்த என் நெஞ்சம் அவனில் தஞ்சம்.

என்னை கல்யாணம் பண்ணிக்குறீங்களா சாகித்யா சகாதேவன்??”

கண்களில் மிளிரும் காதலோடு என்னவன் கேட்கும்போது என்னவாக இருக்கும் என் பதில்!!

சாகித்யா சகாதேவனில் இருந்து சாகித்யா சாணக்கியனாக மாறுவதை தவிர..

நான்கு மாதம் கழித்து….

அதாகப்பட்டது எங்களது திருமணம் முடிந்த இரண்டாம் நாள்.

சகி.. இந்த புக்ஸ் எல்லாம் படி.. ஸ்டெப் பை ஸ்டெப்பா இருக்கு ஹவ் டு ஓவெர்க்கம் போபியா.. மொதல்ல அடுப்பை பத்தவைக்க கத்துக்கலாம்.. நான் ஹெல்ப் பண்ணறேன் நீ பயப்படாதஅப்ரோன்ஸ் எல்லாம் மாட்டிவிட்டு என்னவன் குக்கிங் கிளாஸ் எடுக்க..

கண்ணை மூடி சாமி கும்புட்டுட்டு ஒருவழியா லைட்டரை கையில் எடுத்தேன். கை நடுங்குது. அவரு என் கைய பிடிச்சு ட்ரைனிங் கொடுக்க.. இருவரும் இணைந்து லைட்டரை அழுத்த

பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

அந்த குரல்ல வாசலுக்கே ஓடிட்டேன். பின்னாடியே வந்தவர்

உன்ன என்கரேஜ் பண்ண கத்தினேன் அதுக்குன்னு இப்படியா ஓடுவ.. சரி வா சாப்பிடலாம்.. இன்னைக்கு இது போதும்

என்னை உக்காரவெச்சு பரிமாறுறாரு என்ற ஊட்டுக்காரரு.. இதுதான் கட்டின மனைவியை காலம்பூரா உட்காரவெச்சு சோறு போடுறதா!! கண்ணு கலங்குது. நான் பீலிங்ஸ்ல இருக்கேன்னு ஊட்டி வேற விடுறாரு..

இதை பார்த்த எங்க அப்பா அம்மா கண்ணும் சேர்ந்துல கலங்குது..

நான்கு மாதம் கழித்து

பார்த்து மா.. முட்டையை நடுவுல பார்த்து உடைஎங்க ஆன்டி.  

பயமா இருக்கு அத்தைபயத்துக்கே பயம் காட்டுற நான் உடைக்க அது சுவரில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது.

சரி விடு அது சரிவரல.. நீ கரண்டியை வெச்சு ட்ரை பண்ணு மாமாவின் ஐடியாவை பின்பற்ற

ஓங்கி அடித்தால் ஒன்றை டன் வெயிட் டா முட்டை தெறித்து டைலில் விழ, மூன்று முட்டை வீணானபின் முடியாது என்ற முடிவில் நான் திரும்ப.. நாங்க இருக்கோம் டோன்ட் வொரி மூன்று பேரும் அதே பாவனை.

அவர்களுக்கு பின்னால் ஆனந்தக் கண்ணீரில் அறிவு. அவளுக்கும் பின்னால் அபிஷேக் அண்ணா.

அவங்க கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கு நான் தான் அழைத்தேன்.

வராத அவள் கண்ணீரை துடைத்துவிட்டு.. விரைந்து கிச்சனை சுத்தம் செய்து அவளை அமர்த்தி என் கையால் பரிமாற சுடச்சுட பிரியாணியை ஒரு பிடி பிடித்தவள்

யார் செஞ்சது செம டேஸ்டா இருக்கு என்றுவேறு கேட்டுவைத்தாள்.

நம்ம சாகித்யா தான் கோரஸில் என் ஆன்டி அங்கிள் கெத்தாக கூற

சுடுதண்ணி வைக்க பயந்த சாகித்யாவா இன்னைக்கு சுடச்சுட பிரியாணி செஞ்சிருக்கா!!

நம்பமாட்டாமல் அவள்.

நம்பிக்கை அதானே எல்லாம் என நான்.

தூரத்தில் இருந்து தம்சப் காட்டும் என் தலைவன்.

அழகான கணவன் அன்பான துணைவன்

அமைந்தாலே பேரின்பமே!!

ஒவ்வொரு பெண்ணின் சமயலுக்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு ஆண் உண்டு. அதை என் வரலாறு உரக்க கூறட்டும். நளபாகத்தில் அந்த நளமகாராஜாவே என்னவன்..

நளனின் நங்கை நான்.

அறிவும் அபி அண்ணாவும் கிளம்பியதும் என்னருகில் வந்த என்னவன்

கலக்கிடீங்க சாகித்யா.. போபியா எல்லாம் போயே போச்சேஎன் காதில் கிசுகிசுக்க..

எனக்கு இன்னும் பிரச்சனை இருக்குங்க முழுசா சரியாகலைகவலையுடன் நான்.

அதான் வெஜ் டிஸஸ் எல்லாமே நல்லா குக் பண்ணுறியே!! தென் வாட்??”

மகெய்ரோகோபோபியா சரியாகிடுச்சுங்க.. பட்.. எனக்கு இன்னும் ஒவொபோபியா அண்ட் கார்னோபோபியா இருக்குங்க

“Carnophobia ? Ovophobia ?”

பியர் ஆப் மீட் அண்ட் எஃக்.. நீங்க கூட பார்த்திங்களே!! எனக்கு முட்டையை உடைக்க பயமா இருந்ததை..”

ஹ்ம்ம்.. அதுக்கும் ட்ரைனிங் கொடுப்போம்.. அதுக்கு மொதல்ல உனக்கு எனர்ஜி கொடுப்போம்என கண்களில் காதலும் குறும்பும் போட்டியிட என் அருகில் வர..

பின்னோக்கி நகர்ந்த நான் அங்கிருந்த திட்டில் இடித்து தப்பிக்க வழியின்றி முழிக்க.. என் இடையின் இருபுறம் விலங்கிட்ட கைகளுக்குள்  விரும்பி மாட்டிக்கொண்டேன் 

போபியா எக்ஸிட் ஆக எங்களுக்குள் ரொமான்ஸோ பிலியா என்ட்ரி!!

Advertisement