Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 22

 

இருபது வருடக் கதை தொடர்ந்து திரைக்கதையாக தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் இடையே அரங்கேறிக் கொண்டிருந்தது.. சாப்பிட மட்டும் வீட்டுப்பக்கம் மற்ற நேரத்தில் எல்லாம் தோட்டப் பக்கம்.. அவர்களுக்கிடையே வேறொருவர் அத்துமீறி நுழைய அனுமதியில்லை.

காலையில் ஜெயாவை சமயலறையில் சந்தித்த பிறகு அங்கிருந்து நழுவிய பைரவி அதன்பிறகு அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.. அதை அத்துவும் கவனித்தேன் இருந்தான்..

தாத்தா.. தாத்தா.. என இருபது தடவைக்கும் மேல் இரு வீட்டுக்கும் இடையே நடந்து விடுவாள். இவன் இருந்த பொழுதுகளில் அப்படி.. மற்ற நேரத்தில் நிச்சயம் முழுநேரமும் இங்குதான் வாசமாக இருக்க வேண்டும் என்பது அவன் எண்ணம்.

மிதுன் இப்பொழுது முதுகலை படிப்பில் உள்ளான். மேலும் பார்ட் டைம் போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக ஒரு நாளிதழில் பணிபுரிந்து வருவதால் கவர் போட்டோவிற்காக கேமராவை தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான்.

ஜெயா வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.. ஆக அத்து மட்டும் என்ன செய்வது எனத் தெரியாமல் அமர்ந்து கொண்டிருந்தான்.. அப்பொழுது பைரவி மிதிவண்டியை தள்ளிக் கொண்டு வெளியேறுவது கண்ணில் பட,

“ அம்மா.. தோட்டம் வரைக்கும் போயிட்டு வந்திடறேன் ” எனக் குரல் கொடுத்துவிட்டு அவள் முன்பு நின்றிருந்தான்.

அவளோ அவசரமாக ஜெயாவைத் தேட..

“ நீ தேடுறவங்க வேலையா இருக்காங்க.. இப்போதைக்கு வரமாட்டாங்க ” குறுஞ்சிரிப்புடன்  அவன்… முறைப்புடன் அவள்..

“ காலையில அம்மா துண்டு கேட்க வந்தாங்க ” என்றான் அவள் விழியைப் படித்து..

“ சரி.. எங்க கிளம்பிட்ட.. ”

“ தோப்பு வரைக்கும் போலாம்னுதான் ”

“ சரி வா.. நானும் வரேன்.. போலாம் ” என அவன் முன்னடக்க இவள் அசையாது நின்றாள்..

“ என்னாச்சு பைரவி ” திரும்பி கேட்க

“ நான் போறது சின்ன மாமா காட்டுக்கு.. அது ரொம்ப தூரம்.. நடந்து போக முடியாது ” என்றவள் எப்படி அவனை அழைத்துச் செல்வது என தெரியாமல் நிற்க

“ ஒரு நிமிஷம் ” என்றவன் தோட்டக்கார அண்ணன் வைத்திருந்த சைக்கிளை எடுத்துவந்து “ போலாமா ” எனக் கேட்க

அழகாய் புன்னகைத்து தலையசைத்தாள்..

“ பைரவி.. நீ அகத்தியன் சார்க்கு ரொம்ப பிடிச்ச ஸ்டூடண்ட் போல ”

“ அப்படியெல்லாம் இல்லையே ”

“ போன வாரம் சாரை பார்த்தேன்.. பத்து நிமிஷத்துல உன்னை பத்தின பாராட்டு பத்திரம் தான் வாசித்தாரு..

நான் கூட நம்ம பைரவி அப்படிபட்ட பொண்ணு இல்லையே.. சார் ஒருவேளை மாத்தி சொல்றாரோன்னு யோசிச்சேன் ”

என வம்பிழுத்தபடி சென்றான்.

இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.. அதை உணர்ந்து ரசித்து வாழ்பவனையே ரசித்தபடி சென்று கொண்டிருந்தாள் பைரவி.. அவளைத்தான் அவன் வம்பிழுக்கிறான் என்பது தெரியாமலே.

பைரவி அவனை சோதித்துப்பார்க்க மிதிவண்டியில் திடீர் வேகம் எடுப்பதும் பின் வேகத்தை மட்டுப் படுத்துவதுமாய் இருக்க.. அத்து அவன் அறியாமலேயே அவளுக்கேற்ப வந்துகொண்டிருந்தான்.  இந்த சிறு செய்கையினால் பைரவியின் மனம் சிறகு விரித்ததென்றால் அவள் தாவணியோ அவனை தொட்டு தொட்டு ஆனந்தக் கூத்தாடியது. அந்த சிறு சாலையில் அவர்களது மிதிவண்டிகள் ஒன்றாய் பயணிக்க.. வழியோரம் உள்ள மரங்கள் எல்லாம் வழிப்போக்கர்களுக்கு தகவல் அளித்தனவோ ஒரு ராஜா ராணியுடன் உலா வருகிறாரென்று.. இருவரும் தோட்டம் செல்லும்வரை அவ்வழி ஒருவரும் வந்திலர்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இவளை நிற்க வைத்து பேச்சுக் கொடுக்க… இவன் ஒரு தலை அசைப்புடன் விடைபெற்றான் அவள் விழிகளின் விருப்பமறியாமல்…!

அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் விழிகளிரண்டும் வேந்தனின் மேல் தான்…

“ மிதுன்… ” என்றபடி அவனருகே வந்தான் அத்து.

“ வா அத்து…. ” என்றவன் மேலும் சில புகைப் படங்களை எடுத்துவிட்டு கேமராவை அண்ணனிடம் தந்தான்.

அவன் வாங்கிப் பார்த்துவிட்டு “ என்ன தீம் டா… ” என்று வினவ

 

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம்…..   

 

ம்ம்… வயலெல்லாம் வய… என இழுத்துக் கொண்டிருந்தவனை பார்த்தவன்       “ அதான் வரலையே.. விட்டுட வேண்டியது தானே.. ”

“ ப்ச் போ அத்து…  நானும் நாலு நாளா மனப்பாடம் பண்ணி பாக்குறேன்.. முடியல.. இன்னிக்கு  சொல்லாம போட்டோஷூட் முடிக்கிறதா இல்ல.. ” என அவன் வீர சபதம் எடுக்க..

‘ அப்போ இன்னிக்கு வீட்டுக்கு போன மாதிரி தான்… ’ என நினைத்துக் கொண்டு அந்த வயலின் வரப்பில் அமர்ந்துவிட்டிருந்தான் அதுல்..

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம்…. இம்முறை மாட்டை விட்டே தாண்ட முடியவில்லை..

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்….           

( சோழநாட்டு வளம் குறித்த வரிகள் )

 

என்றபடி வந்தாள் பைரவி.    

“ ஓஹ்.. அம்மணி தமிழாச்சே…. அதான் தமிழோடு விளையாடுறீங்க ” என்றான் மிதுன்.

“ நீங்களும் தமிழ் தான்… ” அழுத்தமாக அவள் சொல்ல..

“ நீயும் நானும் சொல்லிகிட்டா தான் உண்டு… ”

“ சரி எதுக்கு இந்த பாட்டு… ” எனக் கேட்டவளிடம் மிதுன் ஒரு புகழ்பெற்ற நிறுவனம் நடத்தும் புகைப்படப் போட்டியில் தான் பங்கு கொள்வது குறித்துச் சொல்ல அவனுக்கு வாழ்த்துக் கூறியவள் அவனது புகைப் படங்களை அத்துவிடம் இருந்து வாங்கிப் பார்த்தாள்.

அத்தனையும் கவித்துவமாய் கண்களைக் கவர்வதாய் தான் இருந்தன.. இயற்கை இளவரசியை அவள் எழில் மாறாமல் எடுத்திருந்தான்.. ஆனால் ???? என்னவோ ஒன்று…. அவள் சிந்தனையில் உதிக்க இருந்த வேளையில்

“ நல்லா இருக்கு மித்து.. நிச்சயம் நீ வின் பண்ணுவ… ” அருகிலிருந்த அத்துவை முறைத்துப் பார்க்கச் செய்தாள்..

‘ நான் என்ன பண்ணினேன்… ’ என பதில் பார்வை பார்த்தவனிடம்

“ நல்லா இருக்கு… ஆனா இது போதுமா என்ன ? ”

‘ வேற என்ன வேணும் ? ’ வினாவுடன் அவன் விழிகள்.

“ எப்படி சொல்றது… ம்ம்.. மிதுன் எடுத்திருக்க மாறியே இயற்கை காட்சிகளை நெறைய பேர் எடுக்க வாய்ப்பிருக்கு… இவரது கொஞ்சம் வித்தியாசமா.. ம்ம்.. இப்போ நம்ம நாட்டுல நடக்குற பிரச்சனையை பிரதிபளிக்குற மாறி ஏதும் எடுத்தா… ”

அண்ணனும் தம்பியும் ஒருவருக்கொருவர் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே சொல் என்பதாய் கை அசைத்தனர்..

“ இதுக்கு மேல ஒண்ணுமில்ல.. எனக்கு தோணுனத சொன்னேன்.. இனி நீங்க தான் சொல்லணும்.. ” அவளும் அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள்.

மிதுன் அவளிடம் யோசித்து யோசித்து ஐடியா சொல்ல.. அவள் சற்றும் யோசிக்காமல் மறுப்பு சொல்ல.. அத்து அவர்களைக் கண்டுகொள்ளாமல்  அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

மிதுனிடம் அவள் அத்துவைக் கண்காட்ட.. மிதுன் அண்ணனின் மீது கல் எடுத்து எறிந்தான்..

“ ஸ்.. ஏண்டா…”

“ நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சுகிட்டு இருக்கோம்.. நீங்க கண்டுக்காம காத்து வாங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்… ” அவள்.

‘ என்ன அர்த்தம்…’ என்ற அர்த்தத்தில் ஒரு பார்வை.

சட்டென அவள் மிதுனிடம் ஏதோ சொல்ல.. அவன் முகம் பிரகாசமாகியது.

அத்து புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. அவனை அப்படியே விட்டுவிட்டு இருவரும் கேமராவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் அவனை திரும்பி பார்த்தவள் அங்கிருந்தே அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

இவன் மறுப்பாக தலை அசைக்க..  

இருபுறமும் இடையில் கை வைத்துக் கொண்டு ‘ அப்போ எழுந்து வர மாட்டீங்க.. ’ என அபிநயம் பிடிக்க..  

‘ வர வர இந்தப் பொண்ணு என்னை நல்லா மிரட்ட ஆரம்பிச்சுட்டா… ’ என்றபடி எழுந்து சென்றான் அவர்களின் பின்னே.  

இருவரும் அங்கே காளை மாடு பூட்டி.. கதிரவனின் கருணையோடு.. வருணனின் வருகையோடு பயிர் செய்ய ஏதுவாய் நிலத்தை உழுது கொண்டிருந்த உழவரை புகைப்படம்  எடுக்க.. அவர்களின் அருகே வந்தவன் இருவரையும் வலிக்காமல் கொட்டினான்.

“ என்ன அத்து… ”

“ என்னடா பண்றீங்க… ”

“ பையு தான் ஐடியா கொடுத்தா.. விவசாயத்த வலியுறுத்துற மாதிரி ஏதும் பண்லாம்னு… ”

“ ஒஹ்… ” என்றவன் ஒரு பார்வை பார்த்தான் அவளை..

‘ இப்போ மட்டும் அவன் ஜெயிச்சிருவானா ’ அவளிடம் அவன் அப்படிக் கேட்பதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

அவன் ஏதோ யோசித்தான்.

அவனின் நா அவன் கன்னக் கதுப்பினுள் நர்த்தனம் புரிந்து கொண்டிருக்க.. அகிலத்தை அறவே மறந்து அத்துவை மட்டுமே பார்த்திருந்தாள்.

அவனோ அங்கிருந்த கிராமத்து மனிதரின் சும்மாட்டை பிரித்து… ஏதோ செய்து இவளிடம் வந்தான்.

அவளது தலையில் அழகாக அதனைப் பொருத்திவிட்டு “ ம்ம்… இது சரியா இருக்கு.. உள்ள இறங்கு.. ” என்றான் வயல்வெளியின் புறம் பார்வை வைத்து..

“ நானா…. நான் எதுக்கு…. ” என்றவளை இழுத்துக் கொண்டு போய் ஏர் கலப்பையிடம் நிறுத்தினான்..

“ உழவுக்கு வந்தனை !!! ”

புரியாமல் பார்த்தவளிடம்

“ நீ சொன்னது தான்… உழத்தியின் வந்தனை உழவுக்கு ! ”

“ ம்ஹும்…  நானெல்லாம் நிக்க மாட்டேன்… ” என ஓட முயன்றவளை பிடித்து நிற்க வைத்து அத்துவின் சித்தத்தில் அவள் வரைந்த வைத்த சித்திரத்தை சிறைபிடித்தான் மிதுன் அவனது கேமராவினுள்.                 

தாவணியை இழுத்து இடையில் சொருகிக் கொண்டு… அவள் கலப்பை பிடித்திருந்த காட்சி !! அத்தனை அழகு… ரகசியமாய் அத்துவின் அகத்தினுள் அரியாசனமிட்டு அமர்ந்து கொண்டது..    

அடுத்த நாள் காலையில் எப்பொழுதும்போல் விழிப்பு தட்டிவிட எழுந்த பைரவி.. பால் கறந்துவிட்டு கோலப்பொடியுடன் வர.. வாசல் தெளித்து கோலம் போட்டிருந்தது.

கறந்த பாலை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவள் பூஜை அறைப் பக்கம் செல்ல..  விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. ஏனோ ஏமாற்றம் மனதினுள் !

இத்தனை நாட்களாக அவள் செய்யும் ஒன்று.. இன்று ஏற்பட்ட மாற்றம் மனதினுள் ஒரு மாதிரியான உணர்வைத் தர.. அப்படியே நின்றுவிட்டாள். பூஜை அறை வாயிலிலேயே நின்றிருந்த அவளை ஒரு கரம் பிடித்து இழுத்துச் சென்று நிறுத்தியது மீனாக்ஷி பாட்டியின் படம் முன்பு.

உள்ளுக்குள் உற்சாக ஊற்று.. வேறு யார் !! அவள் மனம் கவர்ந்த மன்னவன் தான்.. அவளருகே நின்றவனைப் பார்க்க.. கண்களால் விளக்கை காண்பித்தான். விழிகளின் வழியே காதல் வழிந்தோட தலையசைத்து திரும்பினாள்.

விளக்கை ஏற்றி வைக்க.. இருவரும் வணங்கிவிட்டு வந்தனர். அவளது மனவானில் வானவில்லின் வர்ணங்களைக் கொண்டு வண்ணம் தீட்டிய தூரிகையாய் அத்து.

அத்துவும் நேரமே எழுந்து விட்டான். ஜெயாவும் அங்கே செய்வது போல் இங்கும் சாணமிட்டு கோலமிட்டு விளக்கேற்றியதை பார்த்தவனுக்கு சட்டென பைரவியின் நினைவு வந்தது..

இதெல்லாம் அவள் செய்யும் ஒன்றாயிற்றே ! அதே போல் அவள் விழிகளில் அவன் எதிர்பார்த்த ஏமாற்றம் தென்பட.. அப்பொழுதுதான் பாட்டியின் படம் முன்பு விளக்கு இல்லாதது கண்டு அவளை அழைத்துச் சென்றான். ஜெயா அதை கவனிக்க மறந்து இருந்தார்.

“ பைரவியோட ஸ்பெஷல் காபி கிடைக்குமா ? ” என்றான் மெல்லிய சிரிப்போடு..

பத்து நிமிஷம்.. என விரல்களை மடக்கி காட்டியவள் சமையலறை பக்கம் எட்டு எடுத்து வைக்க

“ உள்ள அம்மா இருக்காங்க ”

அவன் எதிர்பார்த்தது அவள் தலைதெறிக்க ஓடுவது ஆனால் நடந்ததோ

“ அப்போ அஞ்சு நிமிஷம் ” என உள்ளே சென்று காபியோடு வந்திருந்தாள்.

“ பயம் விட்டுபோச்சு போல ” என்றான் அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டே..

“ பயமா.. எனக்கா.. ” என்றவள் தோள்களை குலுக்க

“ அம்மா ” என அழைத்திருந்தான்..

“ தாத்தா.. ” என ஓடியே விட்டாள்.

நேரம் தேர்க் காலில் சக்கரம் கட்டி கொண்டதைப்போல பறக்க அன்றைய மாலை நேரமும் வந்திருந்தது.

“ தாத்தா ” என அவரது அறைக்குள் வந்தான் அத்து.

“ அத்து.. ” என எழுந்து அமர்ந்தார் கட்டிலில்.

“ என்னப்பா இன்னிக்கே பயணம் ஆச்சா !! ” என்றார் அவன் தோற்றம் கண்டு.. மெல்லிய ஏமாற்றம் பரவியது..

“ தாத்தா நான் மட்டும்தான் கிளம்புறேன்.. உங்க பையன் மருமகனை இங்கேயே விட்டுட்டு தான் போறேன்.. அதனால அந்த கவலை வேண்டாம் உங்களுக்கு சரியா ” என சுருக்கங்கள் நிறைந்த கன்னங்களை பிடித்து இழுத்தபடி கேட்டான்.

பெரியவரின் முகம் நொடியில் பிரகாசமானது அதனை கண்டவன் வம்பிழுக்கும் பொருட்டு

“ பார்த்தீங்களா.. நான் கிளம்புறேன்னு சொல்றேன் அது உங்களுக்கு கேக்கல.. உங்க பையன் இங்கே தான் இருக்கப் போறார்ன்னு சொன்னவுடனே முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. ம்ம்.. பையன் வந்ததும் பேரனை கண்டுக்க மாட்டேங்கிறீங்க ” என்றவனை விழிகளில் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பைரவி அறை வாயிலில் நின்று..

இந்த அத்து அவளுக்குப் புதிதல்லவா !! என்னேரமும் பொறுப்பு பருப்பு என்றிருக்கும் அத்துதான் அவள் அறிந்தது.. இந்தக் குழந்தை அத்துவை இன்னும் இன்னும் பிடித்தது.. அவளுள் காதலை பொங்கி எழச் செய்தான்..

“ பைரவி.. ” என்ற தாத்தாவின் அழைப்பில் உள்ளே வந்தாள்..

“ ஊருக்கு கிளம்பிட்டேன் தாத்தா.. போயிட்டு வரேன் ”

“ அம்மாடி நீயும் கிளம்பியாச்சா ? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமே.. ”

அவரது நீயும் கிளம்பியாச்சா என்ற கேள்வியில் தான் அத்துவை கவனித்தாள் ‘இவரும் ஊருக்கு வர்றாரா’ மனம் தகிட ததுமி ஆடியது..

“ பைரவிக்கு லீவு இல்ல தாத்தா.. இன்னும் ரெண்டு வாரத்தில் பரிட்சை ஆரம்பமாகுது.. ” அவனே பதில் கொடுத்தான். இருவரும் சொல்லிக் கொண்டு வெளியே வர.. ஜெயா எதிர்ப்பட்டார்.

“ அத்…தை நான் ஊருக்கு கிளம்பறேன் ”

உள்ளுக்குள் அத்தை என்று அழைத்ததற்கு ஏதாவது சொல்லி விடுவாரா என்ன திக்கென்று இருந்தது.

ஒருமுறை அத்து அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான். ரவியும் அன்று வீட்டில் இருக்க.. பைரவி அவருடைய நண்பனது மகள் என்று அறிந்ததில் அத்தனை மகிழ்ச்சி அவரிடம்.

“ மாமான்னே சொல்லிக் கூப்பிடு மா ” என்றார் அவள் பேசும்போது உறவுமுறையில் தடுமாறிய போது.

அவள் “ சார்.. ப்பா.. ” எனத் தடுமாறிக் கொண்டிருக்க அவர் சட்டென சொல்லிவிட்டார்.

அவளும் மாமா என்ற முறையில் ஜெயாவை “ அத்தை ” என அழைத்திட.. ‘அத்தையா’ என ஒரு பார்வை பார்த்து வைத்தார்.. அதன்பிறகு வீட்டு பக்கமே அவள் வரவில்லை.

இதோ இப்பொழுது தான் மறுபடியும் அழைக்க நேர்ந்துள்ளது ஆனால் அவள் பயத்திற்கு மாறாக

“ அப்படியா சரி பார்த்து பத்திரமா போயிட்டு வா ” என்றார் அவர். அத்து கூட அன்னையை விசித்திரமாக பார்த்து வைத்தான்.

“ சரிங்க அத்தை ” என்று அவள் நழுவிட அத்து மாட்டிக் கொண்டான்.

“ ஆபிஸ்க்கு லீவு சொல்லிடு.. நாம எல்லாருமே ஒரு வாரம் இருந்துட்டு போலாம் ” என்றார் முடிவாக

“ ம்மா.. ஒரு வாரம் எல்லாம் சொல்ல முடியாதும்மா ”

“ அப்போ ரெண்டு நாளாவது சொல்லு.. தரலைன்னா வேலையை விட்டுடு.. என்னோட சித்தி சொன்ன கம்பெனியில் சேர்ந்துக்கலாம் ” என்றவரை எப்படி சமாளிக்க எனத் தடுமாறி நின்றிருந்த வேளையில் ரவி வந்து காப்பாற்றினார்.

“ என்ன பேசுற ஜெயா.. லீவு கொடுக்கலைன்னா வேலைய விடுறதா ? நீ கிளம்பு அத்து.. நாங்க அடுத்த வாரம் வர்றோம் ” என்றவர் “ அவன் போகட்டும் விடு அதுவுமில்லாம பைரவி தனியா ட்ரெயின்ல அவ்வளவு தூரம் போறது சரியா இருக்காது ” என்றார் மனைவிக்கு புரிய வைக்கும் நோக்கில்.

‘ அச்சச்சோ அப்பா ’ என் தலையில் கை வைத்துக் கொண்டான்.

அவன் பைரவிக்காகத்தான் கிளம்புகிறான் என ஜெயா அறிவார்.. அதனாலேயே உறுதியாக மறுத்தார் அவன் செல்வதை.. அவனும் அதை அறிந்தே சமாளித்து நின்றிருக்க.. அப்பா வந்து இப்படியா சொல்லி வைக்க வேண்டும் என்று இருந்தது அவனுக்கு.

“ வரேன் ம்மா.. வரேன் ப்பா ” என நழுவினான் ஒரு வாரம் கழித்து அம்மாவின் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணி.. அவன் அம்மாவோ மனதில் ஒரு முடிவுடனே அனுப்பி வைத்தார்..

****

“ தூரிகா.. இதுக்குமேல எங்கிட்ட காசும் இல்ல.. கடையில எந்த பொம்மையும் இல்ல.. ” என்றபடி ஒரு தலையாட்டி பொம்மை குவியலையே குவித்திருந்தான் யுகா.

அவனும் என்ன செய்வான் ! ஏதோ ஆத்திரத்தில் அன்று கோவிலில் அப்படி நடந்து கொண்டான்.. அதற்காக அவள் ஒரு வாரமாக பேசாமல் தவிக்க விட்டு விட்டாள். அவனது பொழுதே அவளது காலை வாழ்த்துச் செய்தியில் தான் விடியும்.. இரவும் அதேபோல இரவு வணக்கத்தோடே முடியும்.. இந்த ஒரு வாரமாக அதுவும் இல்லை..

இதெல்லாம் இந்த மூன்று ஆண்டு பழக்கம்தான். ஆனால் அவனும் பழகிக் கொண்டானே ! இப்போது மனம் எதிர்பார்க்கிறதே.. அவளுக்காக அடம்பிடிக்கிறது அவன் மனம் அவனிடமே..

இறுதியில் விழி பிதுங்கி நிற்கின்றான் அவளிடமே..

“ நான் தான் மன்னிப்பு கேட்டேனே.. அப்பவும் உன்னோட கோபம் குறையலையா ? சரி என்ன பண்ணினா கோபம் குறையும்.. சொல்லு.. ” என்று அவளிடமே கேட்டு விட்டான்.

நாள் முழுவதும் அவனுடனே இருக்கின்றாள் ஆனால் ஒரு வார்த்தை.. வார்த்தை என்ன பார்வை கூட இல்லை அவளிடம்.. வழக்கமாக அலுவல் என்றால் கூட அவனுக்குப் பெரிதாக இருந்திருக்காது இப்போது கூடவே இருந்து கொண்டு அமைதியாக இருப்பதை ஏற்க முடியவில்லை அவனால்..

தூரிகா எப்பொழுதுமே அமைதி.. ஆனால் அவனிடம் மட்டுமே ஆர்பாட்டமானவள். அவனும் கூட அவளிடம் மட்டும்தான் திறந்த புத்தகம்.. அவனது ஹியூமன் டைரி அவளே !

விக்ரமிற்கு பிறகு அவள் தான்.. எதிர்பாரா நேரத்தில் எதிர்பார்த்தபடி கிடைத்த உறவு.. அவனது ஒவ்வொரு உணர்வுகளையும் மிகச் சரியாக உணரக்கூடியவள் அவள் மட்டுமே. ஒன்றைத் தவிர..

தன் முன்னே நின்றவனைப் பார்த்து அவளுக்குமே பாவமாகத்தான் இருந்தது.. ஆனால் கோபம் அது அப்படியேதான் இருந்தது. அதனால்தான்

“ போய்.. உன்னால எவ்வளவு பொம்மை வாங்கிட்டு வர முடியுமோ வாங்கிட்டு வா ” என்று விட்டு அங்கிருந்து அவர்களது ஆர்.ஜே குழுவுடன் இணைந்து கொண்டாள்.

விக்ரமின் பாக்கெட்டையும் காலி செய்தே இரண்டாயிரம் தான் சேர்ந்தது.. அள்ளிக் கொண்டுவந்து குவித்து விட்டான்..

“ ஹே.. யுகா ! சொல்லவே இல்ல.. சொல்லியிருந்தா நாங்களும் இந்த மாதிரி யுனிக்கா ஏதும் வெச்சு நம்ம ஊரை ரெப்ரெசென்ட் பண்ணியிருப்போம் ” என்ற நண்பர்களைக் கண்டு சிரிக்கத்தான் முடிந்தது அவனால்.

அங்கு கலாச்சாரம் பண்பாடு குறித்த கண்காட்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவன் தஞ்சை பண்பாடு குறித்து விளக்கும் விதமாக பொம்மைகளை வாங்கி வந்து விட்டான் என நினைத்து விட்டார்கள் நண்பர்கள்.

அதன் பிறகு ஏதேதோ சொல்லி ஆர்.ஜே குழுவை சமாளித்து கொண்டிருந்தவனை பார்த்து இதழோர புன்னகை அவளிடம்.. அதனைக் கண்டவன் இப்பொழுது முறைத்து நிற்க.. இவளோ கண் சிமிட்டினாள்.

அவளது புன்னகையில் இவனது அகமும் முகமும் அதுவாகவே மலர்ந்தது.

“ ரொம்ப படுத்திட்டே.. ” என அவள் தலையில் தட்டியபடி வந்தமர்ந்தான்.

“ நீ மட்டும் என்ன அடிக்கலையா ? ”

அவன் முகம் சட்டென வாடியது.. அவன் அடித்தது அவளுக்கு வலித்ததோ இல்லையோ அவனுக்கு உயிர் வரை வலித்தது.. தூக்கமே இல்லை அன்றைய தினம்.. அடுத்த நாளிலிருந்து இவள் பேசாமல் தவிக்கவிட்டு அவன் தூக்கத்தை தொலை தூரப் பயணம் செய்ய வைத்திருந்தாள்

அவன் முகம் மாறுவதை கண்டவள்

“ சரி அத விடு.. அம்மா உன்னை வரச் சொன்னாங்க.. ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம் ” என பேச்சை மாற்றினாள்

“ என்ன விஷயம் ”

அவள் தோள்களை குலுக்க..

“ ஈவினிங் வர்றேன் ”

விஷயம் அறிந்திருந்தால் அவளுடன் சென்றிருக்க மாட்டானோ ! பின்னாளில் அதற்காக தன்னை மன்னிக்க மறுக்கப் போகிறான்..

***

“ சூர்யா.. சூர்யா.. ” மெல்லிய குரலில் அருகே தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பிக் கொண்டிருந்தாள் பைரவி.

அவளிடம் அசைவு கூட இல்லை.. தூங்கினால் பரவாயில்லை தூக்கத்தில் வேறு உலகத்திற்கு சென்றிருந்தவளுக்கு இவளது அழைப்பு எப்படி கேட்கும் !

“ சூர்யா.. ” எனக் கிள்ளி வைத்ததும்..

“ ஆங்.. உள்ளேன் ஐயா ” என எழுந்து நின்றவளை விசித்திரமாய் பார்த்து வைத்தனர் வகுப்பினர்.. அகத்தியனும் அதில் அடக்கம்.

“ சூர்யா.. நல்ல உறக்கமோ ? ” அகத்தியனிடமிருந்து கேள்வி

ஆம் என்றாலும் பிரச்சனை இல்லை என்றாலும் பிரச்சனை என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.. பைரவியோ தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

சூர்யாவின் நல்ல நேரம் பியூன் வடிவில் வந்து சேர்ந்தது அவளிடம்.

துறைத்தலைவர் பைரவியையும் சூர்யாவையும் அழைத்து .வருமாறு கூறியிருக்கிறார்

“ சூர்யா.. விழிப்புடன் நட.. ” அப்பொழுதும் விட்டார் இல்லை அகத்தியன்.. வகுப்பறையில் மெல்லிய நகை ஒலி.

பைரவியை முறைத்த வண்ணம் அவரிடம் தலையாட்டிவிட்டு வெளியே வந்து சேர்ந்தாள்.

“ சூர்யா.. சூர்யா.. மன்னிச்சிடு ப்ளீஸ் ” எனக் கெஞ்சிக் கொண்டே துறைத் தலைவரின் அறைக்குள் வந்தாள் பைரவி.

துறைத் தலைவர் கூறிய செய்தியில் இருவரது முகமும் சட்டென மலர்ந்தது. அவரது வாழ்த்தைப் பெற்று வெளியே வந்தவள்

“ பைரவீவீ.. என்னால நம்பவே முடியல.. யுகா சாரோட நாம வொர்க் பண்ணப் போறோம் ” என கட்டிப் பிடித்து சுத்தியவளை அங்கிருந்தோர் விசித்திரமாக பார்த்து வைக்க.. பைரவிக்கு ஐயோ என்று இருந்தது.

“ சூ.. சூர்யா.. விடு.. என்னதிது.. எல்லாரும் பாக்குறாங்க ” என அவளிடமிருந்து பிரித்து நிற்க வைத்தாள்.

“ ப்ச்.. இப்ப அதுவா முக்கியம்.. யுகா பைரவி.. யுகா.. ” என குதூகலித்த அவளை  கண்டு புன்னகைத்தவள்,

“ நாம அவர் வேலை செய்யற எப்பமுக்குத் தான் போறோம்.. அதுவும் வாரத்தில் ஒருநாள். அவரோட எல்லாம் செய்யப் போறதில்லை ” என்றவளை முறைத்தாள் இவள்.

விஷயம் இதுதான்.. யுகா தூரிகாவின் வானொலி நிலையத்தை சார்ந்தவர்கள் இவர்களது பல்கலைகழகதிற்கு வந்திருந்தபோது ஒரு ஆடிஷன் நடத்தியிருந்தனர். ஆர்.ஜேவாக விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். சூர்யாவும் பைரவியும் கலந்திருந்தார்கள்.

பைரவிக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும் சூர்யாவின் வற்புறுத்துதல் பங்கேற்றாள். அதன் முடிவுதான் இன்று வந்திருந்தது. சூர்யாவும் பைரவியும் அதில் தேர்வாகி இருந்தனர். கல்லூரி மாணவர்கள் என்பதால் வாரத்தில் ஞாயிறு அன்று மட்டும் ஒரு புதிய நிகழ்ச்சி இவர்களுக்காக..

சூர்யாவின் ஆர்ப்பாட்டத்திற்கு அதுதான் காரணம்.. யுகாவைப் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் இருக்க.. இவளோ அதற்கு எதிராக பேசிக்கொண்டிருந்தால் !!

“ இன்னிக்கு எல்லாமே ராங் ராங்கா பண்ற பைரவி ” என்றவள் வகுப்பறை நோக்கி நடந்தாள்

கோபித்துக் கொண்டாளோ என ஓடிவந்து முகம் பார்க்க.. அவளோ யுகாவுடனான நிகழ்ச்சியில் ! கனவில் தான்..

“ சூர்யா.. மறுபடியும் தூங்காத ” என உலுக்க

“ நீ எழுப்பாத ”

“ நாளைக்கு எக்ஸாம் வெச்சிட்டு படிக்காம என்ன விளையாடிட்டு இருக்கே சூர்யா.. ” கண்டிப்புடன் பைரவி கேட்க

“ பைரவி.. எனக்கும் புரியுது.. ஆனா என்ன பண்ண ? படிப்பு வரல சரி தூக்கமாவது வருதேன்னு தூங்குறேன்.. இதுல என்ன தப்பு ? ” எனத் தப்புத் தப்பாக கேட்பவளிடம் என்ன சொல்வாள் ? எப்படியோ போ என விட்டுவிட்டாள்.

அடுத்த வாரம் முதல் இருவரும் அங்கு சேர்ந்திருந்தனர்..

“ அறிந்த தமிழ் அறியாத வரலாறு ” என்ற நிகழ்ச்சி அவர்களுக்கென..

பைரவிக்கு எல்லாமே புதிதாக இருந்தது.. இங்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது.. நினைத்துப் பார்க்கவே நிறைய மாற்றங்கள்.. அகத்தியனுடன் இணைந்து ஆராய்ச்சி.. அத்துவின் மீதான அவளது காதல்.. இப்போது ஆர்.ஜேவாக.. வாழ்க்கைப் பயணம் இனிமையாக.. இதமாக..

 

மேகம் கடக்கும்…

Advertisement