Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 24

 

அலுவலகம் முடிந்து வீட்டினுள் நுழைந்தான் அதுல்.

சட்டென ஜெயா “ நான் அப்புறமா பேசுறேன்.. ” என அழைப்பைத் துண்டிக்க குழப்பமாக பார்த்திருந்தான் அன்னையை.

இது எதேச்சையாக நடக்கிறது என்றால் சரி ஆனால் அது என்ன ஒவ்வொரு முறையும் அவன் வரும் பொழுது மட்டும்.. இதே போல் நான்கைந்து முறைகளுக்கு மேல் பார்த்து விட்டான்.

“ யாரும்மா அது.. ” அவரருகே அமர்ந்தபடி கேட்டான்.

“ என்னோட சித்தி மருமகன் ”

சித்திக்கு மகன் மட்டும் தானே. யார் அந்த மருமகன் ?? உள்ளுக்குள் எழுந்த கேள்வியைக்  கேட்டால் ?? கேட்கலாம் தான்.. அவரும் சொல்வார் தான்.. என்ன விளக்கம் மட்டும் ஒரு ஒருமணி நேரம் இருக்கும். இவன் மட்டும் என்றால் சரி இவர் மிதுனையும் அல்லவா அழைத்து உட்கார வைத்து விளக்கம் கொடுப்பார்..

ம்ஹும்.. என தலையை இடவலமாக அசைத்தவன் எழுந்து சென்று உடைமாற்றி வந்தான்.

“ அத்து நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வருவோமா ” எனக் கேட்டார் ஜெயா.

“ அப்பாவும் வர்றாரா மா ? ”

“ இல்ல நம்ம ரெண்டு பேரும் மட்டும் தான்.. அப்பாவும் மிதுனும் இங்கேயே இருக்கட்டும் நாம ரெண்டு பேரும் மட்டும் போயிட்டு வரலாம்.. ” என்று அவர் சொல்லி எழுந்து செல்ல இவன் யோசனையில் ஆழ்ந்தான்.

அதிகாலையில் எழுந்தவர்கள் பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அவர்களுடைய குலதெய்வமான வேணுகோபாலசாமி கோவிலை வந்தடைந்தனர்.

“ சாமி.. தம்பியோட ஜாதகம்.. சாமி பாதத்துல வெச்சுக் குடுங்க.. ” என்றதும் அதிர்ந்து போய் அன்னையைப் பார்த்தான்..

“ ம்மா ”

“ பேசாம சாமியை தரிசனம் பண்ணு ” என்றவர் திரும்பிக்கொள்ள இவனும் வீட்டிற்கு சென்று கேட்டுக் கொள்வோம் என விட்டுவிட்டான்.

வீட்டினுள் நுழையும் போதே “ ம்மா.. என்னம்மா நடக்குது இங்க.. ” விஷயத்தை ஓரளவு யூகித்து இருந்தான். ஆனால் அவர் வாயிலாக சொல்லட்டுமே என்றுதான் கேட்டான்

“ வந்ததும் வராததுமா என்னடா.. இரு நான் போய் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன் ” என உள்ளே சென்றுவிட்டார்.

“ இப்போ அது ரொம்ப முக்கியம் பாருங்க ” என முணுமுணுத்து மிதுன் அறைக்குச் சென்றான்.

“ அப்புறம் அண்ணா… அண்ணி ஓகே வா ? எனக்கு ஓகே டா.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க.. அவங்களை பார்த்ததுமே தோணுச்சு இவங்கதான் அத்துக்குன்னு.. உனக்கு எப்படி ?? ” என்றவன் அவனது திகைத்த முகத்தை பார்த்து அப்படியே நிறுத்தினான்..

அண்ணியா ??? என்ன நடக்கிறது இங்கே.. அம்மா அடிக்கடி போன் பேசுவதும்  இவன் வந்ததும் நிறுத்தியதும் இதற்குத்தானா.. அவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.. இன்றைக்கு ஜாதகம் சாமி பாதத்தில் வைத்து வாங்கியதுமே புரிந்து கொண்டான். ஆனால் இனிமேல் தான் அதற்கான வேலைகளில் இறங்கப் போவதாக அல்லவா இவன் நினைத்திருந்தான். இது என்ன ??

அத்துவின் அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட்டது.. தான் தான் உளறி வைத்துள்ளோம்.. இன்னும் அன்னை அவனிடம் எதுவும் சொல்லவில்லை என.

இப்போது ஏன் சொல்ல வில்லை என அத்துவிடமும்.. ஏன் சொன்னாய் என அம்மாவிடமும் வாங்கப் போகிறோம் என்பதும் புரிந்தது மிதுனிற்கு.

“ அண்ணா.. ”

அவனை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் வெளியேற இவனுக்குத்தான் வருத்தமாக இருந்தது..

“ மிதுன்.. ”

ஜெயா அழைப்பில் வெளியே வந்தான்..

“ இந்தா.. ஜூஸ் எடுத்துக்கோ…”

‘ அப்போ இன்னும் நீ சொல்லலையா ’ என்பதாய் ஒரு பார்வை அண்ணனிடம்.

அவனெங்கே இவனைப் பார்த்தான்.. சோபாவில் சாய்ந்து இரு விழிகளையும் மூடி சிந்தனையில் இருந்தான்..

அன்னையிடம் இருந்து பழச்சாற்றை வாங்கிய மிதுன் வேகமாக வாயினுள் கவிழ்த்துவிட்டு “ கதிர் மாமா வீட்டுக்குப் போறேன்.. ” என நழுவிவிட்டான்..

“ இதப்பாரு.. ” என்று அத்துவிடம் ஒரு கவரை நீட்டினார் ஜெயா..

பார்க்காமலே தெரிந்தது அது அவனுக்காக அம்மா பார்த்து வைத்திருக்கும் பெண்ணின் புகைப்படம் என. அவரிடமிருந்து வாங்கவில்லை.

‘ என்னம்மா இதெல்லாம் ’ என்பது போல ஒரு பார்வை. அதை எல்லாம் கண்டு கொண்டால் அவர் ஜெயா அல்லவே..

“ பிரிச்சி பாருடா.. ”

அவன் அதைத் தொடுவதாய் கூட இல்லை.

“ அம்மா இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் ?? ”

அவனுக்கு திருமணம் பற்றிய சின்ன ஆசை.. ஒரு ஆர்வம்.. ஒரு எதிர்பார்ப்பு.. இப்படி எதுவுமே இல்லை இந்த நிமிடம் வரை. அதை பற்றிய ஒரு சிந்தனை கூட இல்லை. அப்படி இருப்பவனை கொண்டு போய் பெண்பார்க்க நிறுத்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது ?

“ என்ன அவசரமா உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு அத்து ”

“ எனக்கு 27 தான் மா ஆச்சு.. ”

“ 27 ஆச்சு டா… ” அழுத்தமாக அவர்.

“ கதிருக்கும் உன்னோட வயசு தானே.. ”

“ அம்மா நானும் அவனும் ஒண்ணு கிடையாது.. ” சூடாக வந்தது இவனது பதில்.

“ நானும் அதைத்தான் சொல்றேன் என்னிக்குமே யாரும் என்னோட பையனுக்கு இணையாக முடியாது.. ” சற்றே அல்ல பொங்கப் பொங்கப் பெருமை பெருமிதம் அவர் குரலில்..

அவர் பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை அல்லவா ??

“ எங்க எல்லாருக்கும் பிடிச்சது இந்த பொண்ணு தான்.. ஜாதகம் கொடுத்துவிட்டு இருக்காங்க.. நீ சொல்றத வெச்சு தான் முடிவு பண்ணனும்.. பிரிச்சு பாரு ” எழுந்து உள்ளே சென்று விட்டார்.

அத்துவிற்கு புரியவே இல்லை.. எதற்காக அவர் இத்தனை அவசரப்படுகிறார் என. அதுவும் இத்தனை பிடிவாதம் இவன் மறுத்தும் கூட. ஆனால் அத்து தெளிவாக இருந்தான். தான் என்ன செய்யவேண்டும் என்பதில்.

அவனுக்கு முன்பிருந்த கவரை கையில் எடுத்தான்..

***

“ நீ எந்த நேரத்தில யுகா சார் கூட வேலை பார்க்க மாட்டோம்னு சொன்னியோ.. இப்ப வேலை என்ன அவரை கண்ணால கூட பார்க்க முடியல.. ஒரே ஆபீஸ் கண்ல கூட காட்ட மாட்டேங்குறாங்க.. நா என்னெல்லாம் பிளான் பண்ணி வச்சு இருந்தேன்.. ” என புலம்பிக் கொண்டே வந்தவளை புன்னகையுடன் பார்த்து இருந்தால் பைரவி.

“ சிரிக்காத பை.. யு.. ”

சரி.. சரி.. என தலையாட்டினாலும் அதரங்கள் சிரிப்பில் துடிக்க தான் செய்தன..

ஞாயிறு அன்று இரண்டு மணி நேர நிகழ்ச்சி இவர்களுடையது.. காலை 9 மணி் 11 மணி முதல் வரை இது ஒரு புது அனுபவமாகவும் நல்ல வாய்ப்பாகவும் அமைய இனிமையாக கழிந்தது அவர்களுடைய பொழுது.

உள்ளே வந்ததும் தேடிவிட்டாள்.. இன்றாவது யுகா விக்ரம் இருப்பார்களா என.. அகரன் பண்பலைக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது..

இன்னுமே அவர்களை இங்கு பார்க்கவில்லை.. அன்றைய கோவில் சந்திப்பில் ஒரு நிமிடம் சொல்லி விடலாமா என்று கூட நினைத்தாள். பின் அவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்.. எப்பொழுது பார்க்கிறார்களோ அப்பொழுது  பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டாள்..

“ ஹாய் கேர்ள்ஸ் உங்களுக்காக விக்ரம் சார்.. வெயிட்டிங்.. இன்னைக்கு உங்களோட அவரும் ஜாயின் பண்றாரு…கோ பாஸ்ட்.. லேட்டா போனா திட்டு விழும் ” அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறிய மற்றொரு ஆர்.ஜே விற்கு ஹாய் சொல்லியபடி விக்ரமிடம் சென்றனர்.

“ இன்னிக்காவது விக்ரம் மாமாவ பார்க்கலாம்.. ”

“ என்ன ?? ” என்ற சூர்யாவின் கேள்வியில் தான் வாய்விட்டுச் சொல்லி மாட்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

“ இன்னைக்காவது விக்ரம் சார மீட் பண்ண முடியுதுன்னு சொன்னேன் ” என சமாளிக்க பார்த்தாள்.

“ இல்ல மாமான்னு தானே கேட்டுச்சு.. ”

உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று சூர்யாவிடம் இருந்து கூர்மையான பார்வை..

“ இன்னும் அந்த கேர்ள்ஸ் வரலையா ” என்றபடி கதவைத் திறந்து வெளியே வந்தான் விக்ரம்.

பைரவியைப் பார்த்ததும் வியப்போடு கூடிய திகைப்பில் அவன் அதிர்ந்து நிற்க இதழ்களில் புன்னகையுடன் அவனை பார்த்திருந்தாள் பைரவி.

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சூர்யா.

“ பாப்பு.. ” என்றவன் அவளை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அத்தனை சந்தோஷம் அவனிடம்..

“ இப்ப தான் பாப்புவ உங்களால கண்டுபிடிக்க முடியுதா.. நான் இங்க சேர்ந்து ரெண்டு மாசம் ஆச்சு.. ”

“ நிஜமா தெரியாதுடா ரெண்டு காலேஜ் ஸ்டுடென்ட் சேர்ந்து இருக்காங்கன்னு மட்டும் தெரியும்.. மத்த டீடெய்ல்ஸ் கேட்டுக்கல.. எனக்கு ஞாயிறு லீவுதான்.. அதான் உன்ன பாக்குறதுக்கு கூட வாய்ப்பு கிடைக்கல.. ”

இடவலமாக தலையசைத்தபடி அவள் உள்ளே சென்றுவிட

“ பாப்பு… பாப்பு.. ” என அவன் பின்னே சென்று விட்டான்.

‘ என்னடா நடக்குது இங்க ’ என முழித்துக் கொண்டு நின்றிருந்தாள் சூர்யா.

அத்தனை ஆச்சரியம் அவளிடம். பைரவி இத்தனை உரிமையாக நடந்து கொள்வது கண்டு. அவளும் தான் இரண்டு வருடங்களாக பார்க்கிறாளே எவ்வளவு நன்றாக பேசினாலும் பழகினாலும் ஒரு எல்லையில் தான் நிற்பாள். இப்பொழுது எப்படி என்ற சிந்தனையில் இருந்த சூர்யாவை விக்ரமின் அழைப்பு உள்ளே இழுத்துச் சென்றது.

நிகழ்ச்சி முடிந்ததும் காண்டீன் அழைத்துச் சென்றான் அவர்கள் இருவரையும்.

“ யுகா மாமா ?? ”

“ அவனுக்கு உடம்பு சரி இல்ல டா.. இன்னைக்கு அவன் வரவேண்டியது அவனால முடியுலன்னு தான் நான் வந்தேன் ”

“ என்னாச்சு மாமா…”

“ பீவர் தான் ” என்றவன் காபி எடுத்து வர செல்ல..

“ பைரவி… பைரவி.. யுகா மாமா வா… ?? ”  என்ற சூர்யாவிற்கு காலையிலிருந்து பைரவியினால் மேல் மாடம் சூடாகிக் கொண்டிருந்தது..

“ ஆமாம்.. ” என்றவள் எப்படி உறவு என்பதைச் சொல்ல எதிரிலிருந்தவளை முறைத்து வைத்தாள்.

“ ஒரு வார்த்தை என் கிட்ட சொன்னியா ? ” என்றவளுக்கு இத்தனை தூரம் பழகி தன்னிடம் மறைத்து விட்டாளே என்ற கோபம்.

“ சூர்யா ” ஆரம்பித்தவுடன் விக்ரம் வந்துவிட பேச்சு தடைபட்டது.

“ பைரவி இங்க பக்கத்துலதான் சித்தி வீடு. போய்ட்டு போகலாம்.. ” என்றான் விக்ரம்.

விக்ரமுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் சரி என ஒப்புக் கொண்டாள். சூர்யா அக்கா வீட்டிற்கு செல்ல வேண்டும் என மறுத்து கிளம்பிவிட்டாள்.

அவளை அழைத்துக் கொண்டு யுகா வீட்டிற்கு வந்தான்..

“ சித்தி.. சித்தி.. யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க… ” என அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

“ அம்மா மார்க்கெட் வரைக்கும் போயிருக்காங்க விக்கி.. ” உள்ளிருந்து யுகாவின் குரல்.

“ நான் போய் பார்த்துட்டு வரேன்.. ” என உள்ளே சென்றவன் யுகாவுடன் திரும்பி வந்தான்.

“ வா பைரவி.. ” என்றவன் காய்ச்சலில் சோர்ந்து தளர்ந்து போய் வந்தமர்ந்தான்.

“ இப்ப எப்படி மாமா இருக்கு.. ”

“ காய்ச்சலா அது நல்லா இருக்குமா.. என்ன விட்டு போக மனசே இல்ல போல.. அதான் ஒரு வாரமா என் கூடவே இருக்கு… ” என்றவன் உட்கார முடியாமல் அப்படியே படுத்துகொண்டான்..

“ ஒரு வாரமா….. ஹாஸ்பிடல் போனீங்களா மாமா ” என்றவள் விக்ரமை பார்க்க..

“ டேப்லெட் எடுத்துக்கிறான்.. ஆனா எதுவும் கேக்குற மாதிரி இல்ல. டெஸ்ட் எல்லாம் கூட எடுத்து பார்த்தாச்சு எல்லாம் நார்மல் தானாம்..”

சற்று சிந்தித்தவள் “ மாமா என் கூட ஹாஸ்டல் வரைக்கும் வரீங்களா என்கிட்ட சில மூலிகை இருக்கு மாமா.. மூணு வேளை கொடுத்தா போதும் ” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்று மூலிகைகளை எடுத்து வரவும் யுகாவின் அம்மா வீடு திரும்பியிருந்தார்.

மூலிகை சாற்றைப் பிழிந்து கொடுத்தவள் அவனை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு இவர்களுடன் வந்தமர்ந்தாள்.

யுகாவின் அம்மா “ விக்கி இவனுக்கும் தூரிகாக்கும் இடையில ஏதும் பிரச்சனையா.. ”

“ இ.. இல்லையே சித்தி… ” விக்ரமின் தடுமாற்றம் பைரவியையும் சிந்திக்க வைத்தது.

“ இல்ல… நீங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி அந்தப் பொண்ணு வந்துட்டு போச்சு.. இவன் வான்னும் கூப்பிடல.. பேசவும் இல்ல.. அந்தப் பொண்ணும் கொஞ்ச நேரத்துல கிளம்பி போயிட்டா.. எனக்கே கொஞ்சம் கஷ்டமா போச்சு… அதான் உனக்கு எதுவும் தெரியுமான்னு கேட்டேன்.. ”

‘ இவனையெல்லாம்…. ’ என உள்ளுக்குள் யுகாவை வைதவன் “ அப்படி எல்லாம் இல்ல சித்தி.. அவுங்க ரெண்டு பேராவது பேசாம இருக்கிறதாவது.. ” என சமாளித்து வைத்தான்.

உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவனின் விழிகளில் கோர்க்கப்பட்டது அவன் காதலுக்கான கண்ணீர் முத்துக்கள்..

சொல்லப்போனால் அவனுக்கே அவனைப் பிடிக்கவில்லை.. தூரிகாவிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வான் என அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை..

உதாசீனம்…. உணர்வை உயிரை உள்ளத்தை வலிக்க வலிக்க உறையச் செய்யும் ஒன்று ! அதை தான் அவளுக்குச் செய்து கொண்டிருந்தான்.. அத்தனைக்கும் காரணம் காதல்.. அவன் காதல் ! அறியாமையால் அழிக்க முடியா தவறை செய்ய முயன்று கொண்டிருக்கிறான்…  

எத்தனை ஆசைகளுடனும் கனவுகளுடனும் இருந்தான் அவளுடனான அவனது வாழ்வு குறித்து.. கனா கண்ட நாட்களெல்லாம் கரைந்து போயிருந்தன காலத்தின் கோரத்தில்.

எப்போது தன் காதலை அவளை உணரச் செய்ய வேண்டும்.. அவள் உணர்ந்த பின் இவனது காதலை உணர்த்த வேண்டும்… என பல பல கனவு கண்ணிகள்.. ஆனால் எல்லாவற்றையும் அவனே தகர்த்து விடக்கூடும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை..

அந்த நாள்.. அவன் வாழ்வில் வந்திருக்கவே கூடாது.. அவன் தூரிகாவுடன் அவளது அம்மாவைப் பார்க்கச் சென்றிருக்கவே கூடாது.. அவன் காதலுக்கு வந்த சோதனை அது.

மெல்ல அன்றைய தினத்தை புரட்டிப் பார்த்தான்..

தூரிகாவுடன் அவளது வீட்டிற்கு வந்திருந்தான்.. எதற்காக அவள் அம்மா  அழைத்திருப்பார் என சிறு யூகம் கூட இல்லை யுகாவிடத்தில்..

“ யுகா… வாப்பா… ” என வரவேற்றவர்

“ தூரிகா.. கடைக்கு போய் பால் வாங்கிட்டு வந்துடுறியா.. வாங்கி வெக்க மறந்துட்டேன் டா.. ” என்றதுமே விடயம் அவளைப் பற்றியது என அறிந்துவிட்டிருந்தான்..

“ ஒரு அஞ்சு நிமிஷம்… வந்துடுறேன்… அதுவரைக்கும் அம்மாவோட மொக்கையை தாக்கு பிடிச்சுகோடா… ”

“ அடிக் கழுத… ” என அவர் எழ… எஸ்கேப்… என பறந்துவிட்டிருந்தாள் அவள்.

அவளை அனுப்பிவிட்டு அவர் அவனிடத்து சொன்ன செய்தியில் திகைத்து போய் சுவாசிக்க மறந்து அமர்ந்திவிட்டிருந்தான் யுகா..

தான் கேட்டது சரிதானா ?? அவன் செவிகளை தற்சமயம் நம்ப முடியவில்லை..

ஆனால் நம்பித்தானே ஆகவேண்டும் நம்ப வேண்டியவற்றை.. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை..

ஆனால் முடியுமா என்னால் ? என் மேல் இவருக்கு இத்தனை நம்பிக்கையா ? அதை உடைக்கத்தான் முடியுமா என்னால் ? முடியாது.. நிச்சயம் அது மட்டும் தன்னால் முடியாது.. தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

தன்னைத் தானே தேற்றிக் கொண்டு இதழ்களில் இதமான புன்னகையை இடம்புக விட்டிருந்தான்.. ஆனால் உள்ளுக்குள் இருக்கும் இருதயத்தை யாரோ இறுக்கிப் பிழிவது போன்ற இம்சை.. அவள் வந்துவிட்டால் முகத்தை இயல்பாக வைத்திருப்பது போல் நடிக்க முடியுமா ?? தெரியவில்லை… அவசர வேலை என ஆசுவாசப்படுத்திக் கொள்ள அங்கிருந்து அகன்றுவிட்டிருந்தான்..

அன்றிலிருந்து மெல்ல மெல்ல அவள் அறியாமலே அவளிடம் இருந்து விலக ஆரம்பித்தான்.. இனியும் அவளது யுகாவாக அவனால் நிச்சயம் இருக்க முடியாது..

எவ்வளவு சீக்கிரம் அவளிடமிருந்தும் அனைவரிடமிருந்தும் விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும்.. அதற்கான ஆயத்தப் பணிகளில் அப்பொழுதே இறங்கிவிட்டிருந்தான்..

நினைவுகளில் அலைந்து கொண்டிருந்தவனை கரை சேர்த்தது குறுஞ்செய்தி..

தூரிகாவின் அம்மாவிடமிருந்து.. என்னவாக இருக்கும் எனத் தெரிந்தே இருந்தது..

திரையில் இருந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தான்.. சிரித்துக் கொண்டிருந்தான் அதுல் ரவிச்சந்திரன் !!

அதே நேரம் தன் கையில் இருந்த புகைப்படத்தை இமைக்க மறந்து பார்த்திருந்தான் அத்து வியப்பில்…

ஆற்றோரங்கரையில் அஸ்திவாரமிட்டு அரசனைப் போல் அமர்ந்திருந்த ஆலமரத்தின் கிளையில் ஊஞ்சலிட்டு அதில் கைகளை விரித்தபடி உள்ளத்து உவகையை உதட்டில் உரித்தாக்கிய படி காட்சி கொடுத்திருந்தாள் தூரிகா..

              

                                                                                     

மேகம் கடக்கும்…           

Advertisement