Advertisement

                                                                       உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 23

“ மாமா…. ” அவள் அதரங்கள் மென்மையாக உச்சரித்தன.

மனதின் ஓரம் ஒரு சந்தேகக் கீற்று.. மாமாவா அது ??

அவனுடைய மாமா என்றால் எப்பொழுதும் அவன் முகத்தில் அடம்பிடித்து இடம் பிடித்திருக்கும் அந்த குறும்பு புன்னகையும்.. துரு துரு கண்களும் எங்கே..?

ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவளது சிந்தனைக் கடலில் சீற்றமாய் சிந்தனை அலைகள்… புயலாக… சுனாமியாக.. இன்னும் கரையைக் கடந்த பாடில்லை.. மனம் முழுவதும் பாரமாக இருந்து அவளை பரிதவிக்க விட.. கோவிலுக்காவது சென்று வரலாம் என விடுதியில் அனுமதி கேட்டு வந்திருந்தாள்.

சூர்யாவைக் கேட்க.. அவள் அம்மாவுடன் எங்கோ செல்வதாகச் சொல்லி வர மறுத்திருந்தாள். ஆக பைரவி மட்டுமே வந்திருந்தாள்..

பெருவுடையார் கோவில் !!

அத்துவுடன் பலமுறை இங்கு வந்திருக்கிறாள்.. உள்ளே நுழைந்ததுமே அகம் அந்த சங்கரனைச் சரணடைந்து விட்டிருக்கும்… அதென்ன மாயமோ ??? மந்திரமோ ?? எல்லாம் அந்த திரிநேத்திரனின் திருவிளையாடலன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

திருக்கோவிலினுள் நுழைந்ததுமே கண்ட காட்சி இது தான் !

புதர் இல்லை என்றாலும் ஏறத்தாழ அந்த அளவிற்கு வருத்தம் ஊற்றி வளர்த்திருந்த தாடியுடன் களையிழந்த கசங்கிய முகமாய் விழிகளில் வெறுமையுமாய் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான் கலியுகத்தையன்…

இது நாள் வரை அவன் இந்தக் கோலத்தில் அவளுக்கு காட்சி கொடுத்ததில்லை.. நிச்சயம் ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது அவளுக்கு..

அருகில் செல்வதா ? வேண்டாமா ? என குழப்பத்துடன் நின்றிருந்தவளை கருவறையிலிருந்த கலியுகத்தையன் இழுத்துச் சென்றான் கலியுக கலியுகத்தையனிடம்…

“ மா… மா ”  தயக்கத்துடன் அழைத்து விட்டிருந்தாள்.

பயனிருந்தது.. சிந்தனை கலைந்திருந்தான்…

இவளைப் பார்த்த விழிகளில் அதுவரை அமர்ந்திருந்த வெறுமை போய் சற்றே வியப்பு ! அவளுக்கு அப்படித்தான் தோன்றியது..

அத்துவிடமிருந்து அவள் கற்றுக் கொண்ட முதல் பாடம் ! எதிரிலிருப்பவரின் விழிகளை வாசிப்பது..

இரண்டாண்டுகளில் ஓரளவு கற்றுத் தேர்ந்திருந்தாள்.. அது தான் யுகாவின் விழி வாசிக்க வழி வகை செய்திருந்தது.

“ ப… பைரவி.. ” மெல்ல அவன் உதடுகள் அவள் பெயரை உச்சரித்தன..

“ பையு…. எப்படி இருக்க ??  நீ எங்க இங்க.. ”

இவள் முகம் பார்த்ததும் இதமாய் ஒரு இளநகை அவன் இதழோரத்தில் !!

அவனது கேள்வியில் காரிகை குழம்பித்தான் போனாள்..

அவர்களுடைய பல்கலைக்கழகத்திற்கு அகரன் குழு வந்திருந்த போது அவளும் தானே அங்கிருந்தாள் சூர்யாவுடன்.. இவன் சூர்யாவிடம் பேசிக் கொண்டிருக்க இவள் சற்று ஒதுங்கி ஆனால் பார்வையில் படும்படி தான் நின்றிருந்தாள்.. அன்றைக்கு இவள் பேச தயங்கியதற்கு காரணம் அவன் தன்னை தெரிந்தவளாக காட்டிக் கொள்ளவில்லை என்று தான்..

அப்படியானால் மாமா என்னை பார்க்கவில்லையா ??

அதை விட்டுவிடலாம்.. அவனது வானொலி நிலையத்தில் தானே அவளும் பணிபுரிகிறாள்.. ஒரு முறை கூட தன்னை பார்க்கவில்லையா ?? விழிகளில் கேள்வியுடன் அவனைப் பார்த்திருந்தாள்.

“ பையு… உன்னை தான் கேக்குறேன்.. நீ எப்படி இங்க.. எல்லாரும் டூர் வந்திருகீங்களா என்ன ?? ”

யுகாவின் யூகம் அது தான்.. இவள் அவளது அம்மா மாமாவுடன் வந்திருப்பாள் என்று. இதில் இவளிடம் கேட்டுக் கொண்டே அவர்களைத் தேடவும் செய்தான்.

“ ஆங்.. மாமா.. நா இங்க தான் ரெண்டு வருஷமா இருக்கேன்.. ”

“ என்ன ?? ” மெல்லிய அதிர்வலைகள் அவன் முகத்தில் !!

“ நான் தமிழ் யுனிவெர்சிட்டில தான் பி.ஏ தமிழ் சேர்ந்திருக்கேன் மாமா..” என அவள் இங்கு வந்த விவரம் சொல்லச் சொல்ல அவளுக்காக அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.. அதனினும் மெல்லிய இளக்கம்..

“ ரொம்ப சந்தோஷம் டா… உன் படிப்பு பாதியில நின்னிருச்சுன்னு பெரியம்மா சொல்லிட்டு இருந்தாங்க.. அங்க ரெண்டு வீட்லயும் பிரச்சனை.. பேச்சு வார்த்தை இல்ல இப்ப வரைக்கும்.. அதான் ஊருக்கும் வர முடியலை.. ” சன்னமான சங்கடம் அவனிடத்தில் !

“ நாம பார்த்துகிட்டு அஞ்சாறு வருஷமிருக்குமில்ல… ” என்றவனின் பார்வை அவள் முகத்தில் பதிக்க… அவள் விழிகளோ அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் !

“ பைரவி…. ”

“ ம்ம்… ஆமா மாமா… ” என்றவளின் விழிகள் இன்னும் ஆராய்ச்சியை நிறுத்தியபாடில்லை..

இவளறிந்த யுகா அல்லவே இவன் ! அது தான் காரணம்..

ஏன் இந்த மாற்றம் ??

பைரவிக்கு யுகா விக்ரம் வழிச் சொந்தம்.. விக்ரம் தான் இவளது சின்ன மாமாவின் மகன்.. அவன் ஊருக்கு வரும்போதெல்லாம் யுகாவையும் அழைத்து வருவான்.. விக்ரம் இவளுக்கு மாமா.. அதனால் இவனும் யுகா மாமா..

சிறு வயதில் இவளுக்காக அவர்கள் இருவருக்குமிடையே சண்டை கூட வந்ததுண்டு.. ஆனால் எல்லாம் குறிப்பிட்ட வயது வரை தான்.. இவள் பெரியவளாகிய பின் பேசக் கூட முடிந்ததில்லை.. பார்த்தால் சிறு புன்னகை அடுத்தவருக்காக அவரவர்களது அதரங்களில் அரும்பும் அவ்வளவே !

இறுதியாக இவர்களைப் பார்த்தது அவளின் அப்பா இறந்த போது தான்.. அதன் பின் இருவரையுமே பார்க்க முடியவில்லை.. விக்ரமும் ஊருக்கு வருவதில்லை.. அவனிருந்தால் அல்லவா இவன் ?

காலம் தான் மாறிவிட்டிருந்தது.. இவர்களது உறவில் எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை.. வரவும் வராது.. பால்ய பருவத்தின் பசுமையான பரிசுத்தமான உறவு அது !

“ என்ன பைரவி அப்படி பார்க்கிற… ” அவனுக்குமே அவள் பார்ப்பதற்கான காரணம் தெரியும்.. ஆனால் இப்படி பார்த்தால் ? கேட்டு வைத்தான் வேறுவழியின்றி..

“ என்னாச்சு மாமா.. ஏன் இப்படி இருக்கீங்க… ” என்றவளுக்கு அவளுக்கிருந்த கவலை, குழப்பம், தவிப்பு, சஞ்சலம் எல்லாம் நினைவில் கூட இல்லை.

தற்போது அவள் கண்ணிலும் கருத்திலும் யுகா மட்டுமே !

பஞ்சத்தில் அடிபட்ட பரதேசியைப் போல இருந்தால் ? இத்தனை வருடம் கழித்து இப்படி ஒரு சூழலிலா பார்த்துக்கொள்ள பேசிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது அவளுக்கு.

பைரவிக்கான பதில் இருக்கிறது அவனிடம் ! ஆனால் சொல்லக் கூடிய நிலையில் அவன் இல்லை.

“ என்னாச்சு பையுமா.. எப்படி இருக்கேன்.. ” வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கேட்டான். இப்படி கேட்டால் அவன் இயல்பாக இருப்பதாக அர்த்தமோ ?

“ மாமா… நான் உங்கள யுனிவர்சிட்டிலையே பார்த்தேன்.. ”

சட்டென மாறிவிட்டிருந்தது அவன் முகம்.. அதனை கண்டு கொன்னடவள்

“ சூர்யா நியாபகம் இருக்காளா ? ” தொடர்ந்தாள்

அவளை எப்படி மறப்பான்.. குழந்தைத்தனமான முகமும் அகமும் கொண்ட அவனது ஆர்ப்பாட்டமான ரசிகை அல்லவா?

மெல்ல தலையசைத்தான்.

“ சூர்யா உங்க கூட இருந்த போது நானும் அங்க தான் இருந்தேன்.. ” அவன் முகம் பார்த்தாள்.

‘ இது வேறயா ’ என நினைத்தவன் ‘ மேலே சொல் ’ என்பதாய் அவளைப் பார்த்திருந்தான்.

“ இனி நீங்க தான் சொல்லணும்.. ” கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நிதானமாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

‘ விட மாட்டா போலவே ’ இந்த பைரவி அவனுக்கு புதிது.

“ ஹேய் வாலு.. சொல்லு சொல்லுன்னா என்ன சொல்றது… ” அவளது தலையில் செல்லமாகத் தட்டினான்.

“ ஸ்ஸ்.. இருங்க விக்ரம் மாமாகிட்ட சொல்றேன்.. ” என சிணுங்கியபடியே அவள் தலையைத் தேய்த்துக்கொள்ள..

இவன் முற்றிலுமாய் இருக்கம் தளர்ந்து இருந்தான். ம்ஹும்… தளர்த்தி இருந்தாள் அவள்.

சிறு வயதில் இவன் இப்படி ஏதும் சேட்டை செய்தால் அவனை விட உயரத்தில் பெரியவனான விக்ரமிடம் சென்று முறையிடுவாள்.. அதுவும் இவனிடம் சொல்லியே செல்வாள்.. அந்த நினைவுகளில் இவன் முகம் கனிந்தது..

ஆனால் அதெல்லாம் ஒருசில மணித்துளிகள் தான்… அவளுடைய விக்ரம் மாமா.. என்ற பதத்தில் அவன் முகம் வாடியது அவளுக்காக..

“ உனக்கு விக்ரம் மேல கோவமே இல்லையா பைரவிம்மா… ”

பின்னே விக்ரம் செய்து வைத்திருக்கும் செயலுக்கு எப்படி இயல்பாக இருக்க முடிகிறது இவளால்.. வியப்புடன் அவளைப் பார்த்திருந்தான்..

‘ கோவமா.. எதுக்கு ’ என்பதாய் அவள் பார்த்திட

“ இல்ல உனக்கும் அவனுக்கும் கல்யாணம்கிற பேச்சு வார்த்தை இருந்துச்சாமே… ” தயக்கமாய் அவள் முகம் பார்த்தான்.

இப்பொழுது அவள் முகம் மாறியிருந்தது.. அவள் எதை நினைத்து தனக்குள்ளே குழம்பி அமைதியின் முகவரியைத் தொலைத்து தவித்து.. ஆறுதலுக்காக ஆதிரை முதல்வனை தேடி வந்தாளோ அதைப் பற்றிய பேச்சு..

“ ஆனா பைரவி.. விக்ரம் மேல ஏதும் தப்பில்ல மா.. அவன்கிட்ட கலந்து பேசாம தான் பெரியப்பா கல்யாண பேச்சு வார்த்தை நடத்திருக்காரு.. அது தப்பு தானே.. வாழப் போறது அவன் தானே. அவன்கிட்ட பேசிருக்கணும்     இல்லையா.. நிச்சய தேதி குறிச்சிட்டு வந்து சொல்லவும் தான் ரொம்ப கோவம், வருத்தம்.. அதான் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டான்.. ”

அவள் விழிகளிலிருந்த குழப்பமும் வியப்பும் திகைப்பும் கண்டு யுகாவும் திகைத்துத் தான் போனான்.

அவனுக்கே இந்த விடயம் சில நாட்களுக்கு முன்பு விக்ரம் இவனிடம் பேசிய பின்பு தான் தெரிய வந்திருந்தது. இத்தனை நாட்களாக விக்ரம் பேசாது இருக்க இவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை.. பைரவி- விக்ரம்  திருமணம் குறித்து.

கேள்விப்பட்டதும் இவனுக்கே சற்று திகைப்பு.. அதிர்ச்சி தான்.. நிச்சயம் விக்ரம் இதற்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டான்.. பெரியப்பா ஏன் இப்படி பிரச்சனையை இழுத்து வைக்கிறாரோ என்று தான் இருந்தது. அதை விட பைரவியின் மனதிலும் விருப்பத்தை வளர்த்து வைத்திருக்கிறார்களே என்று தான் ஆத்திரம் வந்தது.

இதில் விக்ரமையும் எதுவும் சொல்லிட முடியாது.. அவனை கேட்டுக் கொண்டா எல்லாம் செய்தார்கள் ? விக்ரமிற்கு அவள் எப்போதுமே ‘ பாப்பு ’ தான். அப்படியிருக்க என்ன இதெல்லாம் ? எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? இன்னமும் அத்தைப் பெண் மாமா பையன் என்று .

அவன் அப்பாவிடம் சண்டை போட்டு விக்ரம் வெளியே வந்துவிட்டான்.. இப்போது யுகாவுடன் தான் இருக்கிறான்.. அவனுடைய நண்பன் ஒருவனுடன் இருந்து கொண்டு வேலைக்கு வந்து கொண்டிருந்தான்.. அவன் மேலுள்ள கோவத்தில் யுகாவும் எதையுமே கண்டு கொள்ளவில்லை.. விக்ரமும் இவனிடம் எதுவும் பேசியிருக்கவில்லை.

ஆனால் அன்றொரு நாள்… ஆக்சிடென்ட் என்று யுகா வந்து நின்றதுமே உள்ளுக்குள் பதறிப் போனான்.. தூரிகாவிடம் பேசியதை வைத்து அடி எதுவுமில்லை என தெரிந்து கொண்டாலும் மனம் என்று ஒன்று உள்ளதே.. அது தமையனுக்காகத் தவித்துத் தான் போனது..

அதனால் தான் அன்று யுகாவையே நிகழ்ச்சியை தொடர சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டான். அடுத்த நாள் மனம் கேளாமல் அவன் முன்பு போய் நின்றிந்தான்..

அத்தனை நாள் அவனைத் தவிர்த்து தவிக்க விட்டதிற்கு யுகாவிடம் இருந்து வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு மொத்தமாக கொட்டியிருந்தான் உள்ளத்தை..

“ நம்ம பாப்புவ போய் எப்படி டா… ” அத்தனை வலி அவனிடம்.

சமாதனப்படுத்தியவன் விக்ரமை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அதன் பின் விக்ரம் சற்று இயல்பாகி விட்டிருந்தான். ஆனால் யுகாவிடம் பைரவி குறித்து இருந்த கேள்விக்குத் தான் விடை இல்லாமலே இருந்தது.

இன்று அவளைக் கண்டதும் வியப்பு மகிழ்ச்சி மட்டுமே ! இடைப்பட்ட விடயங்களை மறந்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..

விக்ரமைப் பற்றி அவள் இயல்பாகப் பேசியதும் இவனுக்குத்தான் குவிகிறது குற்ற உணர்ச்சி..

“ பைரவி.. ” அவள் திகைப்பிலிருந்து வெளிவந்தாளில்லை..

இவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அத்தனை அதிர்ச்சி.. சொல்லப் போனால் ஆனந்த அதிர்ச்சி தான்.. ஆனால் எதிர்பார்க்காத ஒன்றல்லவா ?

உண்மையில் யுகாவிற்கு தெரிந்தது கூட அவளுக்குத் தெரியாது.. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஏதோ ஜாதகப் பிரச்சனை.. திருமணம் தள்ளிப் போயிருக்கிறது என்பது தான்.. அப்படியிருக்க இதென்ன இவன் திருமணம் நின்று போனதுக்கு விளக்கம் கொடுத்து இவளுக்காக வருத்தப் பட்டு கொண்டிருக்கிறான்..

“ மாமா…. ”

அதற்குள் யுகாவின் அலைபேசி அலற.. எடுத்துப் பார்த்தான்..

திரையில் ‘ விக்கி.. ’

சட்டென ஒரு யோசனை.. விக்ரமும் இங்கு இருந்தால் எல்லா மனக்கசப்பிலிருந்தும் எல்லோருக்கும் விடுதலை.

அழைப்பை ஏற்றவன் “ கோவில்ல இருக்கேன்.. உடனே கிளம்பி வா.. ” என்றிருந்தான்.                       

“…..”

“ எமேர்ஜென்சின்னு ஆப் எடுத்துட்டு வா.. ”

“….”

“ ப்ச்.. இப்போ வர போறியா இல்லையா… ”

“…..”

“ ம்ம்ம் வா சீக்கிரம்.. ”

அழைப்பை துண்டித்து விட்டிருந்தான்.. பத்து நிமிடத்தில் அங்கே வந்துவிட்டிருந்தான் விக்ரம்.

“ யுகா என்னடா இதெல்லாம்… இப்படி திடுதிப்புன்னு கிளம்பி வான்னா அது எங்க தாத்தா ஆபிசா… ” எனக் கேட்டுக் கொண்டே வந்தவன் பைரவியைப் பார்த்ததும் ப்ரேக் அடித்து அப்படியே நின்றான்.

“ பாப்பு… ” என்றவன் நிச்சயம் அவளை எதிர்பார்த்திருக்கவில்லை..

சட்டென முகமலர்ந்து “ பாப்பு.. நீ எங்கடா இங்க ? ”

இயல்பாக வந்து அவர்களிருவருக்கும் இடையில் அமர்ந்தான்.. யுகா அவனை முறைக்க பைரவி புன்னகையுடன் பார்த்திருந்தாள். விக்ரமிற்குமே சிரிப்பு தான்.. இது என்ன இன்னமும் குழந்தைப் போல.. என்று ? என்ன செய்வது ? சில விஷயங்கள் முயன்றாலும் மாற்றிவிட முடியாதல்லவா ? அப்படித்தான் விக்ரமிற்கு அவள் பாப்பு.

என்ன தான் யுகா அவன் தம்பி.. தோழன்.. என இருந்தாலும் அவன் பைரவியோடு விளையாடிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருந்தால் போய் நடுவில் அமர்ந்து கொள்வான்.. இன்று கூட இவர்கள் இருவரையும் அருகருகே பார்த்ததும் அவனுக்கு அப்படித் தான் அமரத் தோன்றியது.

அவன் அவள் பதிலிற்காக காத்திருப்பது கண்டு “ நான் காலேஜ் இங்க தான் மாமா சேர்ந்திருக்கேன்… ” என்றாள் இதழில் முகிழ்ந்த புன்னகைக் கீற்றோடு..

“ காலேஜா….” என்றவன் வியப்புடன் யுகாவைப் பார்க்க அவன் சற்று முன் பையுவிடமிருந்து கிடைத்த தகவலை அவனிடம் பகிர்ந்தான்.

“ சூப்பர் டா பாப்பு…. ” என்றவனுக்கு அவளைக் குறித்து அத்தனை மகிழ்ச்சி.. ஆனால் அதைக் கூட வெளிபடுத்த முடியாமல் தடுத்தது அவர்களது திருமண விஷயம்..

அவளிடம் என்ன பேசுவது ? எப்படிப் பேசுவது எனத் தெரியாமல் புரியாமல் அவன் உள்ளே தடுமாறிக் கொண்டிருக்க.. அவனை வெறுப்பேற்றும் விதமாக இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

‘ இவன ’ என யுகவைப் பார்த்து பல்லைக் கடிக்க..

“ பாப்பு.. ஆள் வளர்ந்தா மட்டும் போதாது அறிவும் வளரனும் இல்ல.. ” யுகா அவனிடம் வம்பிழுக்கும் பொருட்டு பேச

“ ம்ம் ஆமா மாமா.. ” என்றாள் விக்ரமைப் பார்த்துச் சிரித்தவாறே..

சட்டென இருவரது காதையும் பிடித்து திருகியவன் “ என்னடா ரெண்டு பேர்த்துக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது… ” என்றான்

“ பாப்பு சொல்லிடுவோமா.. ”

“ அவள பாப்பு சொல்லாத டா… ” – விக்ரம்

விக்ரமைப் பொருத்தவரை அவன் மட்டுமே அவளைப் பாப்பு என அழைக்க வேண்டும்.. அதை யுகாவிடம் சொல்லியும் விட்டான்.. அவனும் அதன் பிறகு கூப்பிடவில்லை.. ஆனால் இருவருக்குமிடையே சண்டையோ இல்லை ஏதும் வம்பிழுக்க வேண்டும் என்றாலோ சட்டென ‘ பாப்பு ’ விற்கு மாறிடுவான்.

இன்று கூட விக்ரம் வந்த பிறகு பல பாப்புக்கள் போட்டு விட்டான்.. அவனுக்கு அதில் ஒர் அற்ப ஆனந்தம்..

“ பாப்பு… எனக்கு அப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு.. ” விக்ரமை விடுவதாய் இல்லை யுகா.

“ டேய் !! ” என்றவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“ ஹா ஹா… ”

“ நீங்க இன்னும் மாறவே இல்லை மாமா… ” உணர்ந்து சொன்னாள் அவள்.

மாற்றம் என்ற ஒன்று மாறாதது தான்.. ஆனால் சில நேரங்களில் மாற்றங்கள் மனதை மரத்துப்போகச் செய்யக்கூடியதாக அமைந்துவிடும்.. யார் தான் அதனை விரும்புவர் ?

சில விஷயங்களும் சிலரும் மாறாமல் இருந்தாலே போதும்..! மனதில் மகிழ்ச்சி மலர்ந்து மனம் பரப்பும்…  

அவளது மனம் நிறைந்து இருந்தது.. முழுக்க முழுக்க ஆனந்த தூறல் தான்.. இப்படி கோவிலுக்கு வர வேண்டும்.. யுகா விக்ரம் மாமாவை சந்திக்க வேண்டும்.. அவளை இத்தனை நாள் அழுத்திக் கொண்டிருந்த விஷயம் அழிந்து போக வேண்டும்.. இப்படியான உறவு உரிமையாக புதுப்பிக்கப் பட வேண்டும்… கனவிலும் நினைத்தாளில்லை…

“ பைரவி… ” விக்ரம் தயங்கி அழைத்ததே அவன் எந்த விஷயத்திற்கு வருகிறான் எனப் புரிந்தது.

“ மாமா.. நீங்க சொல்றதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லவா ? ”

மௌனமாக தலையசைத்தான்.

“ ஹே பாப்பு.. மொதல்ல சாமி கும்பிட்டு வரலாம்.. அப்புறம் வந்து நம்ம கதையை பேசலாம்… ” வேகமாக வெள்ளத்தின் குறுக்கே விழுந்து வைத்தான். வேறு யார் ? யுகாவே !

‘ ஏண்டா இப்படி ? ’ ஒரு பாவமான பார்வை பாசக்கார தம்பிக்கு பார்சல் !!

‘ ஏதோ என்னால முடிஞ்சுது பா.. ’ தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவன் எழ மூவரும் மூலவரை வணங்கி விட்டு வந்தமர்ந்தனர்.

பைரவி சிந்தனை வயப்பட்டு இருப்பதைக் கண்டு விக்ரம் யுகாவைப் பார்க்க.. அவன் இட வலமாக தலையசைத்தான்.  

“ பாப்பு.. ” மெல்ல அழைத்தான்.

“ ஆங்.. மாமா.. ” என்றவள் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு சொல்லத் தொடங்கினாள்.
“ மாமா.. யுகா மாமா சொல்லற வெச்சு பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல.. உங்களுக்கு தெரியாமலே சின்ன மாமா பெரிய மாமாகிட்ட பேசிருக்காரு.. உங்களுக்கு தெரிய வந்த போது நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டாங்க.. நீங்க வேணாம்னு சொல்லி.. உங்களுக்குள்ள சண்ட வந்து நீங்க வீட்ட விட்டு வந்து.. இப்ப ரெண்டு வருஷம் ஆகிடுச்சு இல்லையா.. ” நிறுத்தி அவன் முகம் பார்க்க..

அவன் தலையசைத்தான்..

“ ரெண்டு வருஷமா நீங்க.. நா என்ன நினைச்சிருப்பனோன்னு தெரியாம வருத்தப்பட்டு இருந்திருக்கீங்க… ”

“ ம்ம்.. ”

“ நீங்க ஏன் மாமா என்னை வந்து பார்க்கல.. ”

அவள் கேட்பது சரி தானே.. இவள் போய் பார்த்திருக்க வேண்டுமல்லவா ? அதை விட்டு இங்கு வயலின் வாசிப்பதில் யாருக்கு என்ன பிரயோஜனம் ?

“ நீங்க என்னை வந்து பார்த்திருக்கணும் மாமா.. ” குற்றம் சாட்டுவதைப் போல் இருந்தது அவளது குரல்.. ஆனால் குற்றமும் இவனிடம் தானே !

அவன் அமைதியை பதிலாக்க..

“ நீங்க வந்து பார்த்திருந்தா.. என் கூட பேசிருந்தா.. நான் என்ன நினைகிறன்னு தெரிஞ்சிருந்தா… என் விருப்பம் புரிஞ்சிருந்தா.. ” என அவள் நிறுத்த விக்ரம் நொந்தே போனான்..

யுகாவிடம் மனம் விட்டு பேசிய இந்த கொஞ்ச நாட்களே அவன் அக அழுத்தம் இன்றி சுற்றித்திருந்தான். இதோ இப்பொழுது இவள் பேசிப் பேசி பரங்கி மலையை பெயர்த்து அவன் மனதில் வைத்தது போல பாரமாய் இருந்தது.

“ பைரவி… போதும் பைரவி.. அவன் ஊருக்கு வராம இருந்தது தப்பு தான்.. ஆனா அங்கப் பாரு.. நீ பேசறது கேட்டு பையன் நொந்துட்டான்… பாவம் விட்டுடு.. ” உதவிக்கு வந்தான் யுகா..

“ அப்படியா மாமா ?? ” குறுஞ்சிரிப்பில் கொஞ்சம் புரிவது போல் இருந்தது.. எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் எனக் காத்திருந்தான்.

இதழ்களில் முளைத்த இளம்கீற்று புன்னகையுடன் “ நான் கல்யாணத்த பத்தி யோசிச்சதே இல்ல மாமா… ”

‘ இது என்ன ’ என்பதைப் போலப் பார்த்தான்.

“ அப்பா…. ” என்றவளுக்கு தொண்டை அடைக்க.. சற்று நிதானித்து..

“ அப்பா இறந்ததுக்கு பிறகு படிக்க சூழ்நிலை அமையல.. அதுக்கப்றம் கேட்டப்போ மாமா விடல.. ஆனா என்னோட யோசனை முழுக்க முழுக்க படிப்பு மட்டும் தான் மாமா.. ”

அவள் சொல்லச் சொல்ல அதுவரை அவன் பிடித்து வைத்திருந்த பாரம் எல்லாம் பறவையின் இறகாய் காற்றில் பறந்து அவன் மனம் இதமாய் இருந்தது.

அவனை இத்தனை நாள்கள் பாரபட்சமின்றி போட்டு புரட்டி எடுத்த விஷயங்கள் அழுத்திய பாரங்களை எல்லாம் அவள் அழித்திருந்தாள்.

‘ பைரவியின் மனதில் ஆசை ஏதும் இருந்திருக்குமோ ? தன்னுடைய பாப்புவை தானே வருத்தப்பட வைத்துவிட்டோமே ? ’ என அவன் சிந்தித்து சிந்தித்து சித்தம் சிதறி உள்ளுக்குள் இறுகிப் போயிருந்தான். இன்று அதெல்லாம் எங்கே போனதாம் ?? மாயம் செய்துவிட்டாள் மாமன் மகள்..!

“ பாப்பு தாங்க்ஸ் டா.. ” பேச்சே வரவில்லை.

ஏன் அவளுமே இவன் வரும் முன்பு யுகா அவளிடம் விளக்கிய போது அவளும் அப்படித்தான் உணர்ந்தாள்.. பேச்சே வரவில்லை..!

அவள் சிறையில் சிக்கித் தவித்த போது.. சத்தமில்லாமல் வந்து சிறை மீட்டு எடுத்து விடுதலை பெறச் செய்துவிட்டதைப் போல இருந்தது.

“ நான் தான் மாமா.. உங்களுக்கு நன்றி சொல்லணும்.. ” சட்டென சொல்லிவிட்டிருந்தாள்.

இருவரும் அவளை வியப்புடன் ஏறிடவே சொல்லிய செய்தி புத்தியைச் சென்றடைந்தது.

“ அது… நீங்க வேணாம்னு சொல்லவும் தானே பெரிய மாமா.. படிக்க சம்மதிச்சாரு.. அத சொன்னேன்.. ” சமாளித்து வைத்தாள்.

சற்று நேரம் அவர்களுடன் அமர்ந்து பால்ய பருவத்தை பாசத்தை பால் வார்த்தவன் “ சரி நான் கிளம்புறேன் பாப்பு… யுகா நீ ? ” என எழ

“ நான் பைரவிய விட்டுட்டு வந்திடறேன்.. நீ கிளம்பு.. ”

விக்ரம் விடைபெற்றதும் “ சொல்லுங்க மாமா ..” என்றாள்.

‘ என்ன ’ என்பதாய் ஒரு பார்வை..

“ நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல.. ” அவனை கூரிய விழிகளால் குறுகுறுவென பார்க்க..

“ தாடி வளர்த்தினது ஒரு குத்தமா.. விடு நாளைக்கே ட்ரிம் பண்ணிட்டு வந்து உன் முன்னாடி நிக்குறேன்.. இப்போ போலாமா ?? ” என்றவன் மேலும் அவளைப் பேச விடாது இழுத்துச் சென்றான்.

விடுதியில் இறக்கிவிட்டவன் “ பையு உன் நம்பர் சொல்லு… ” என்றான் அலைபேசியை எடுத்த படி.

“ என்கிட்ட போன் இல்லையே மாமா… ”

வியப்புடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“ உன் கூட பேசணும்னா… ” அவன் இழுக்க..

“ இங்க இருக்க லேன்லைன் நம்பர்க்கு கூப்பிடுங்க..” என்றவள் அவனிடம் எண்ணை தந்துவிட்டு விடைபெற்றாள்.

அவளை இறக்கி விட்டவன் அகரன் பண்பலைக்கு வந்து சேர்ந்தான்..

வெகு நாட்களுக்கு பிறகு அகத்தில் ஆம்பல் பூவின் அலர்ச்சி ஆனந்தமாய் ! உள்ளுக்குள் நொருங்கியிருந்தவனை உலகம் வெறுத்திருந்தவனை இதயத்தில் பாரத்தை சுமந்திருந்தவனை பைரவி, விக்ரமுடனான பால்ய நினைவுகள். பேச்சுக்கள் ஆறுதல் படுத்தின.. ஆனால் எல்லாம் இங்கு வரும் வரை..

முன்பெல்லாம் எப்பொழுதடா அலுவலகம் முடியும்… ஓடிப் போய் தூரிகாவிடம் நிற்க வேண்டும் என நினைத்திருந்தவனுக்கு இப்பொழுதெல்லாம் ஏனடா இங்கு வருகிறோம் என்றிருந்தது. உள்ளுக்குள் உடைந்து அழுது ஏங்கி இருப்பவனால் வெளியில் சிரித்து நடிக்க முடியவில்லை. அதுவும் அவளிடம்.. ம்ஹும்… வாய்ப்பே இல்லை !

அகப்பட்டுக் கொள்வேனோ என பயந்து பயந்து தவிர்த்து வருகிறான்.. ஒரு மாதத்திற்கும் மேலாயிற்று.. அவளிடம் சரியாக பேசி.. சரியாக என்ன ? பேசியே மாதம் இருக்கும்.. வாழும் போதே நரகம் கேள்விப்பட்டு இருக்கிறான்.. ஆனால் தற்போது உணர்ந்து அனுபவிக்கிறான்.

“ விக்கி.. ” என வந்து நின்றவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு..

காதல் ஒருவனைப் பாடாய்ப் படுத்தும்.. கேள்விப் பட்டிருக்கிறான்.. ஆனால் யுகா வழியே விழி வழியே பார்க்கிறான்.. உணர்கிறான்.. ‘ நல்ல வேளை நாம தப்பிச்சோம்.. ’ உள்ளுக்குள் இருந்து அப்பாடா என்ற அவன் ஆழ் மனதின் குரல் விக்ரமிற்கு.

“ என்னடா.. ”

“ பைரவிகிட்ட போன் இல்லையாம்.. நீ.. ”

“ நாளைக்கு இருக்கும்.. ” முடித்திருந்தான் விக்ரம்.

“ இந்த வாரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் டா.. அம்மா ரொம்ப சந்தோசப் படுவாங்க… ”

“ ஹ்ம்ம் போலாம் போலாம்… ஆனா வானதி வானிலை அறிக்கையை அவங்க அக்காவுக்கு அனுப்பாம இருந்தா சரி.. ” என யுகாவின் தாய் தன் தாயிடம் பகிர்வதைச் சொல்லி கேலி செய்ய..

“ அறிக்கை பெரியம்மா வரைக்கும் தான் போகும்.. பெரியப்பாவுக்கு சிக்னல் கிடைக்காத மாறி பண்ணிடுவோம்… ” என்றான் சிரிப்போடு.

சிறிது நேரம் அவனுடன் அமர்ந்து பேசியவன் “ நேரமாச்சுடா  ” என எழுந்து ஆன் ஏர் செல்ல.. விக்ரம் அவனைப் பின் தொடர்ந்தான்.

கதவு திறந்ததும் உள்ளே வந்தவனைக் கண்டதும் மலர்ந்த தூரிகாவின் முகம் பின்னே வந்த விக்ரமைப் பார்த்ததும் அப்படியே வாடியது..

வாழ்க்கை ஒவ்வொரு நொடியும்

மாறிக் கொண்டு தான் இருக்கும்

ஆனால்

நாம் தான் மாற்றத்திற்கு தயாராக இருப்பதில்லை

இருந்தால்….

ஏமாற்றத்தை தவிர்க்கலாமே…!

 

அகரன் பண்பலை 143 லிருந்து விடைபெறுவது ஆர்.ஜே தூரிகா.. அவனைப் பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தவள் விருட்டென வெளியேறினாள்.

‘ உப் ’ என்ற பெருமூச்சுடன் அமர்ந்தான் யுகா.

இதைத் தான் அவன் எதிர்பார்ப்பது.. அவன் அவளை தவிர்ப்பதை விட அவளாக தவிர்க்க வேண்டும்.. அதற்காக விக்ரமை கூடவே வைத்துக் கொண்டு அலுவலகத்தை சுற்றி வருகிறான்..

விளையாட்டு போல அவளே சொல்லியிருக்கிறாள்.. விக்ரம் கூட பேச ஆரம்பிச்ச பிறகு நீ ஏதோ தூரமா போயிட்ட பீல்.. கண்டுக்கவே மாட்டேங்குற.. விளையாட்டை வினையாக்கியிருந்தான்..

“ பார்த்துக்கலாம் விடு டா… ” அவன் தோளின் மீது கை வைத்துச் சொன்னான் விக்ரம்.

‘ ப்ச் ’ மறுப்பாக தலையசைத்தவன் காதில் ஹெட் போனை மாட்டினான்.

‘ யுகா தேவை இல்லாமல் குழப்பிக் கொள்கிறானோ…. ’ விக்ரமின் சிந்தனை..

“ வணக்கம் நேயர்களே… யுகா பேசுகிறேன்… ” என ஆரம்பித்தவன் மனதில் இருந்தவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்ச்சியில் இணைந்தான்..

ஆனால் அவனே அறியாமல் அவன் அன்று செய்த ஒன்று..! அவனைப் பற்றிய நினைவுகளை அங்கே பகிர்ந்தான்.. அருகிலிருந்த விக்ரமும் அவனின் அன்பிற்குரிய ஒருவரும் அதைக் கேட்டு உணர்ந்தனர் என்பதை அவன் உணர வாய்ப்பில்லை..!               

 

மேகம் கடக்கும்…

Advertisement