Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 21 ஆ

 

அதிகாலை வேளையில் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர் அதுலும் பைரவியும். இவர்களுடைய பேருந்து மட்டும் தான் வந்து சேர்ந்திருந்தது. மிதுனை அழைத்தவன் அவன் வருவதற்கு இன்னும் நேரம் ஆகும் என்றவுடன்

“ பைரவி… ட்ரெயின் ஏதோ ஸ்டேஷன்ல டிலே போல.. அவங்க வர நேரம்  ஆகுமாம் நாம போவோமா ” என்று கேட்டான்.

வேகமாக தலையாட்டினாள்.. இதற்காகத்தானே காத்திருந்தாள் அந்தப் பாலகுமாரி….

அத்துவுடனான அவளுடைய பயணம் ஆரம்பம்..

“ காபி சாப்பிடுறியா ”

அவள் மறுப்பாக தலையசைக்க..

“ சரி நான் போய் புக் வாங்கிட்டு வரேன்.. இன்னும் டைம் இருக்கு ” எனச் சொல்லிச் சென்று புத்தகம் வாங்கி வந்தான்.

“ நீங்க சரியா தூங்கலையா ! கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு.. ”

“ ம்ஹூம் ”

“ அவங்க உங்க மேலயும் சாஞ்சிட்டாங்களா.. நான் உங்ககிட்ட சொல்லாம இருந்திருக்கணும்.. என்னால உங்களுக்கு கஷ்டம் ” என வருத்தப்பட

“ பைரவி.. பைரவி.. தூக்கம் வரல தூங்கல.. இதற்கு நீயோ அவங்களோ காரணம் இல்ல ” என்றவன்

“ பஸ் கிளம்பப் போகுது.. வா போகலாம் ” என அழைத்துச் சென்றான்.

 

நீ காற்று.. நான் மரம்..

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…

 

பாரி [பேருந்தில்] யிலிருந்து கசிந்துகொண்டிருந்த சங்கீதத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு விழித்தாள்..

அருகிலிருந்த அவளவன் தென்றல் காற்று தொட்டுச் செல்ல.. இரவு முழுவதும் விழித்திருந்ததால் தன்னையறியாமல் கண்ணயர்ந்து அவள் மேல் சாய்ந்திருந்தான்.

அவன் ஸ்பரிசத்தில் அவள் உள்ளமும் சிலிர்த்து தான் போயிருந்தது அவளைப்போலவே !!

என்ன என்னவோ மாற்றங்கள் அவளுள்.. சொல்லத் தெரியவில்லை.. ஆனால் உணரமுடிந்தது. இத்தனை நாளாக புரிந்தும் புரியாமலும் இருந்தவை உணர்ந்தும் உணராமலும் இருந்தவை இன்று வெற்றி கண்டு இருந்தன..

மெல்ல விழி மூடி இவளும் அந்த கணத்தை ரசித்தாள்..

பேருந்து குலுங்களில் விழித்தவன் திகைத்துப் போனான் அவள் தோள் மேல் சாய்ந்து இருப்பது கண்டு..

அவசரமாக விலகி அவள் முகம் பார்க்க.. அவளோ உறக்கத்தில்.. அவன் அப்படித்தான் நினைத்துக்கொண்டான் ஆனால் இவனது ஒவ்வொரு அசைவையும் அசைபோட்டபடி விழி மூடியபடி அமர்ந்திருந்தாள் பைரவி. விழித்தால் அவன் சங்கடப்படுவான்.. அவனை அதற்கு அனுமதிக்க அவளது மனம் அனுமதிக்கவில்லை..

சற்று நேரத்தில் நிறுத்தம் வர இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். அவள் ஊரில் காலடி எடுத்து வைத்ததுமே தாய் மடியின் சுகம்.. இதம்.. அவளுள் பிரவேசித்து பரவியது..

மெல்ல அவனைப் பார்க்க.. அவனுக்கும் அதே போல் தான். ஆழ்ந்த மூச்செடுத்து தன் சுவாசத்தை நிரப்பிக் கொண்டவன் அவன் வருகைக்காக காத்திருந்து சாமரம் வீசிய மரங்களை புன்னகையுடன் கடந்தான்..

அவனுடனான அந்தப் பயணம் அப்படியே தொடராதா என்றிருந்தது அவளுக்கு.. நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா என்ன !!

அத்துவைப் பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி தாத்தாவிடம்..

“ அத்து.. ” என்றவருக்கு பேச்சே வரவில்லை.. அவர் எதிர்பாரா வேளையில் எதிர்பார்த்த உறவாக வந்து நின்றால் ?

“ தாத்தா எப்படி இருக்கீங்க ? ” என்றான் அவர் காலடியில் அமர்ந்துகொண்டு கரங்களை எடுத்து தனக்குள் வைத்தபடி..

“ நல்லா இருக்கேன் பா.. ” என்றார் அவன் கன்னம் வருடியபடி.

“ நீ மட்டும்தான் வந்தியா ? ” என்றவரின் விழிகளில் அவரது உதிரத்தின் முதல் உறவுக்கான தேடல்..

“ ம்ம்.. நானும் பைரவியும் தான் வந்தோம் ” அவரது கேள்வி புரிந்தும் வேண்டுமென்றே மாற்றி பதில் தந்தான். ஏமாற்றம் மெல்ல மெல்ல அவர் முகத்தில் பரவி விட்டிருந்தது..

இருந்தும் அவனுக்குச் சொல்ல விருப்பமில்லை.. தந்தையை அவர்முன் நேரடியாக நிறுத்திவிடத் தான் ஆசை.

“ சரி தாத்தா.. நான் குளிச்சிட்டு வரேன் ” என்றவன் குளித்துமுடித்து வர பைரவியும் தாத்தாவும் காபி பருகிக் கொண்டிருந்தனர்.

“ ஏன் தாத்தா நீங்க பைரவியை மிஸ் பண்றீங்களோ இல்லையோ அவ காப்பியை மிஸ் பண்ணுவீங்க தானே ” என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தான்..

சட்டென இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.. இதற்கு முன்பும் அருகே அமர்ந்துள்ளான் தான்.. ஆனால் இன்று ஏனோ இனம் புரியாத இன்ப அவஸ்தை.. குறுகுறுவென அவனையே பார்த்திருந்தவளிடம்

“ என்ன பைரவி அப்படித்தானே ! ” எனக் கேட்க

“ஆ… ஆமா.. நான் போய் உங்களுக்கும் கொண்டு வரேன் என எழுந்து ஓடிவிட்டாள்.

அவள் கொடுத்த காபியை பருகியவன் “ என்னாச்சு பைரவி ” என்றான் அவள் விழிகளை பார்த்து..

திடீரென்று கேட்கவும் ஏதும் புரியவில்லை.. புருவங்கள் சுருங்கிட அவனை ஏறிட்டாள்..

“ இல்ல நான் எனக்கு சர்க்கரை போட வேண்டாம்ன்னு சொல்லலையே..

ம்ம்.. ” என புருவம் உயர்த்த

“ ஸ்ஸ்.. ” என நாக்கை கடித்துக்கொண்டாள்.

“ கொடுங்க நான் கலந்து கொண்டு வாரேன்.. ” என்றவளை அமரச் சொல்லி அவனை எழுந்து சென்று திரும்பி வந்தான்

“ என்ன அத்து லீவு ஏதும் விட்டாங்களா உனக்கு ? ” என்றார் தாத்தா.

அவன் வந்து சென்று ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மீண்டும் இத்தனை தூரம் பயணம்.. ஒருவேளை அலுவலகத்தில் விடுமுறையோ என்று தான் யோசிக்கத் தோன்றியது..

“ இல்ல தாத்தா.. நாளைக்கு கிளம்பிடுவேன்.. ஒரு முக்கியமான வேலை அதுதான் உடனே கிளம்ப வேண்டியதா போச்சு ” என்றவனை கேள்வியோடு பார்க்க..

“ இன்னும் கொஞ்ச நேரத்தில உங்களுக்கே தெரிஞ்சிடும்.. ”

அதன் பிறகு மூவரும் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்க வாயிற் கதவு திறக்கும் ஓசை கேட்டது..

மூவரும் திரும்ப மிதுன், ரவி, ஜெயா உள்ளே நுழைந்தனர்..

அத்து தாத்தா முகம் பார்த்தான்.. அவருக்கு வருபவர்கள் யாரென தெரிந்திருக்கவில்லை.. பார்வை சற்று மங்கித்தான் இருந்தது அவருக்கு.

“ அம்மாடி.. உன் மாமனார் கூட்டம் வறாங்க போல.. ” என்றார் பைரவியிடம்

தாத்தாவின் கேள்வியில் அத்து திகைத்து பைரவியைப் பார்க்க.. அவளும் அவனைப் பார்த்தாள் ஆனால் அவள் பார்வையில் நிச்சயம் திகைப்பில்லை..

“ நீ கிளம்புமா உங்க பெரிய மாமா பார்த்தா சத்தம் போடுவான்.. போய் வந்தவங்கள கவனி.. ” அவர் முடிவு செய்துவிட்டார் வருவது பைரவியில் மாமா குடும்பம் என்று..

அத்து தான் “ தாத்தா வர்றது பைரவியோட மாமா இல்ல.. ” என்றான். என்ன சொல்லியிருப்பானோ அதற்கு மேல் அவன் கூறுவதைக் கேட்க அவள் அங்கிருக்கவில்லை..

“ வேற யாருப்பா நம்ம வீட்டுக்கு வர போறாங்க ”

“ எல்லாம் நமக்கு வேண்டியவங்க தான் தாத்தா ” என்றவன் விழிகளை வாசல் பக்கம் திருப்ப.. தாத்தாவும் திரும்பினார். மங்கலாகத் தெரிந்தவர்கள் அருகே வர வர தெளிவான பிம்பம் அவரிடம்..

அவருடைய முதல் உதிரத்து உறவு அல்லவா !! இருபது வருடம்.. இருபது வருடம் கழித்து தான் விதி கண்முன் காட்டியிருக்கிறது. வாழ்வெனும் விளையாட்டுக் களத்தில் கோல் அடிப்பது விதி அல்லவா..

இவர்களது வாழ்விலும் விளையாடிவிட்டுத் தான் சென்றிருந்தது இவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே..

தாத்தாவின் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் கோர்த்திருக்க.. மீண்டும் மங்கலான பார்வை..

“ ஹாய் தாத்தா ” என்றபடி வந்து கட்டிக்கொண்டான் மிதுன்.

தாத்தாவின் கரங்கள் அவனைத் தழுவினாலும் பார்வை மட்டும் எதிர்ப்புறம்..

“ அச்சோ.. என்ன தாத்தா இந்தக் குளிரிலும் உங்க கண்ணு மட்டும் வேர்த்திருக்கு.. ” என்ற தம்பியை “ டேய் உள்ள போய் பிரெஷ் ஆகு ” என்றான் அத்து. அவனுமே எழுந்து உள்ளே சென்று விட்டான் அவர்களுக்கிடையே இருக்க அவனும் விரும்பவில்லை..

ரவியின் விழிகளிலும் நீர்.. குற்ற உணர்ச்சியில் !! நல்ல கணவனாக நல்ல தந்தையாக இருந்தவர்.. இருப்பவர்.. நல்ல மகனாய் மட்டும் இருக்கவில்லை ஒரு அன்பான அப்பாவிற்கு என்ற குற்ற உணர்வு அது..

ஒரு நாளும் தந்தையை அவர் நினைக்க மறந்ததில்லை.. ஆனால் அதெல்லாம் அந்த வயதானவருடைய வலிகளுக்கு மருந்தாகுமா என்ன !! எத்தனை பெரிய கடமையைத் தவற விட்டுள்ளோம் என்பது கண் முன்னே அந்தக் கடமை கண்ணீர் விடும் போது தான் உரைத்து இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.

தாத்தாவும் ரவியும் அவரவர் சிந்தனைகளில் உழன்று கொண்டிருக்க ஜெயாவின் கேவல் தான் இருவரையும் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்திருந்தது.

“ அம்மாடி.. ஜெயா.. எந்திரிம்மா ” என தன் காலில் விழுந்திருந்த மருமகளை மேலே எழுப்பினார் தாத்தா.

“ மாமா மன்னிச்சிடுங்க மாமா.. புத்தி இல்லாம இப்படி பண்ணிட்டேன். நீங்க வீட்டுக்கு வந்தப்போ கூட நான் முகம் குடுத்து பேசல.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மாமா.. ” எனக் கதறுபவரை என்ன சொல்லி எழுப்புவது எனத் தெரியாமல் மகனின் முகம் காண..

ரவி வந்து “ ஜெயா.. எழுந்திரு.. பழசெல்லாம் இப்ப பேசி மறுபடியும் கிளற வேண்டாம் ” என ஜெயாவை எழுப்பி உட்கார வைத்தார்.

ஆனால் ஜெயாவிற்கு மனம் ஆற மறுத்தது.. எத்தனை பெரிய தவறை செய்துள்ளோம்.. புகுந்த வீட்டின் மகிழ்ச்சியை நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தானே அதை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்ட பாவியாகிப் போனோமென அவரை அவரே மன்னிக்க மறுத்தார்.

மீனாட்சி அத்தனை பேரின் முன் அவமானப்படுத்தினார் என்றால் தானும் தானே கையோங்கி அவரை அவமானப் படுத்தினோம்.. அவர் அப்படியே அடித்திருந்தாலும் அவரைத் தன் தாயாக நினைத்திருந்தால் நடந்த அசம்பாவிதங்களை தவிர்க்கலாமே…

அதைவிட்டு ஊரை விட்டுச் சென்று அவர்களின் கண் காணாமல் இருந்து தண்டித்தது எந்த வகையில் நியாயம் !! நியாயமில்லைதான்.. இப்பொழுதாவது உணர்ந்தோமே என்றுதான் இருந்தது.. உணர்த்திய அவரது மகவைளுக்குத் தான் மனதார நன்றி சொல்லிக் கொண்டார்..

தாத்தா மெல்ல ஆரம்பித்தார்..

“ ஜெயா.. நடந்து முடிஞ்சது எதுக்குமே நாம காரணம் இல்ல.. தப்புன்னு சொன்னா அது எல்லார் மேலயும் தான்.. அதனால அதை விட்டுட்டு இனியாவது சந்தோஷமா இருப்போமே.. ”

மருமகளின் கண்ணீரில் கரைந்து தான் போயிருந்தார் பெரியவர்..

மௌனமாக தலையசைத்தார் ஜெயா..

திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் இதம் தர மறுக்கும் போது அதை ஏன் நினைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தார்.

“ சரிங்க மாமா நான் உள்ள போறேனுங்க ” என எழுந்து சென்றார் அப்பாவுக்கும் மகனுக்கும் இடமளித்து..

“ அப்பா.. ” என அவர் கரங்களில் முகம் புதைத்துக் கொண்டார்.. பெற்ற தந்தையின் ஸ்பரிசத்திற்காக ஏங்கி தவித்த குழந்தைக்கு கிட்டிய மகிழ்ச்சியில் மனம் தத்தளித்தது..

மறந்தும் மன்னிப்பு கேட்கவில்லை.. மன்னிக்கக்கூடிய தவறாக அவர் செய்ததை கருதவில்லை..

“ து..துரை.. ” என்றவருக்கு நா தழுதழுத்தது.. இன்னும் எத்தனை வருடங்கள் போகட்டும் அவர் என்றுமே ரவியின் தந்தை என்பது மாறாது அல்லவா !! தொலைந்து விட்ட குழந்தை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் மனம் நிறைவாய் இருந்தது.. மனம் ஒரு நிலையில் இருக்க மறுத்தது அவருக்கு.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. மனம் பேசிக்கொள்ள வார்த்தை வேண்டுமா என்ன..

 

“ நீங்க ஏன் இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. ப்ளீஸ் நானே பாத்துக்கிறேன் ”

“ ….. ”

“ இப்போ நான் சொல்றத கேக்க போறீங்களா இல்லையா ! ” என அவள் பேச்சை கேட்காமல் சமையல் அறையில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தவனை கத்தி கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தாள் பைரவி.

“ எதுக்கு கேக்கணும் ? ம்ம்.. ஏன் நான் இதை செய்யக்கூடாதா ” என்று அவன் அவன் வேலையைத் தொடர.. இவளோ முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

வேலையை முடித்தவன் அடுப்பின் அருகே சென்று வதக்கவும் ஆரம்பித்தான். நிச்சயம் இன்று இவள்தான் சமைப்பாள் எனத் தெரிந்தவன் சத்தமில்லாமல் உள்ளே வந்து அவனுக்குத் தெரிந்தவற்றை செய்ய ஆரம்பித்து விட்டான்.

அவளோ முதலில் கெஞ்சினாள்.. பின் மிஞ்சினாள்.. ஆனால் கொஞ்சத்தான் முடியவில்லை..

பின்னாளில் அதுவும் செய்வாளோ..

“ ம்க்கும்.. ம்க்கும்.. ” எனச் செறும

“ என்ன பைரவி ” எனத் திரும்பியவன் ஜெயாவை கண்டு விழிக்க..

‘ எதைப் பார்த்து இப்படி முழிக்கிறாங்க ’ எனத் திரும்பியவள் ஜெயாவைப் பார்த்ததும் அவனுக்கு மேல் விழித்தாள்..

அவளை ஒரு முறை முறைத்தவர் அவர் பெற்று வைத்த பிள்ளையிடம் வந்தார்..

“ என்னடா இதெல்லாம் ? ” குரலில் அப்படி ஒரு காரம்.. பைரவிக்கு ஏதும் சொல்லிவிடுவாரோ என தொண்டை வரண்டது ஆனால் அவரது முத்துப்பிள்ளை..

“ அம்மா.. இது வரகு நெல்லிக்காய் சாதம் பைரவி செஞ்சது.. நீங்க சாப்பிட்டதில்லையே !! சாப்பிட்டு பாருங்க நம்ம வீட்டு மெனுல நீங்க கண்டிப்பா கொண்டு வந்துடுவீங்க..

அடுத்து இருக்கறது திணை பாயாசம்.. இது எனக்கு புதுசுமா இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை.. சாப்பிட்டு பார்த்து அப்புறம் சொல்றேன்..

அடுத்து.. ” என்றவனை தடுத்து நிறுத்தியவர்..

“ நீ எதுக்கு இங்க இருக்க ? உனக்கு இந்த வேலை தேவையா ? ” என்றவர் பைரவியிடம் திரும்பி

“ இங்க பாரு உன்னால முடிஞ்சா செய்.. இல்ல பேசாம இரு.. அத விட்டுட்டு என் பையன வேலை வாங்காத.. ” என சத்தம் போட.. அவள் வேகமாக தலையை ஆட்டி வைத்தாள்.

அத்து ஜெயாவைத் தடுத்து “ அம்மா நான் ஒன்னும் பண்ணல.. அப்படியே பண்ணினாலும் என்ன தப்பு.. சரி விடுங்க இப்போ அதெல்லாம் எதுக்கு நீங்க போய் குளிச்சிட்டு வாங்க ” என அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டு வேகமாக இவளிடம் வந்தான்

“ பைரவி.. சாரி சாரி.. என்னால அம்மாகிட்ட திட்டு வாங்க வேண்டியதா போச்சு..

மன்னிச்சுக்கோ ப்ளீஸ் ” என கண்களை சுருக்கி அவன் மன்னிப்பு கேட்ட விதத்தில் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தாள் அத்துவை

“ பைரவி.. ” என உரக்க அழைக்க

“ என்னாச்சு ”

“ என்ன ஆச்சு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்கேன் நீ என்னடான்னா நின்னுகிட்டே தூங்குற ”

கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு “ இப்படித்தான் மன்னிப்பு கேட்க சொல்லிக் கொடுத்தாங்களா உங்க ஊருல.. ம்ம்.. ” எனக் கேட்க

“ ஊர்ல சொல்லிக்கொடுக்கல.. எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க ” என்றதும் அவள் அட்டென்ஷனில் நிற்க அவன் வாய் விட்டு சிரித்தான்..

“ ஷ்ஷ்.. சிரிக்காதீங்க போனவங்க திரும்பி வந்திடப் போறாங்க ” என வாசல் பக்கம் பார்த்தவளிடம்

“ அம்மா இப்போதைக்கு வர மாட்டாங்க நாம சமைக்கலாம் வா  ” என நகர்ந்தவனை

“ ஓய்.. எங்க போறீங்க அப்படியே வெளியிட ஓடிடுங்க ” என கத்தியை குறுக்கே வைக்க..

“ அத்து.. ” என உள்ளே வந்த ஜெயா பார்த்துவிட்டார்..

“ இல்ல.. அவரு.. கத்தி.. சமையல்.. கேட்டாரு ” என வாய்க்கு வந்ததை உளரியவள்

“ எங்க அம்மாவை பார்த்துட்டு வந்துடறேன் ” என ஓடியே விட்டாள்

“ பைரவி.. ஓடாத.. பார்த்துப் போ ” எனக் கத்தியவன் “ அம்மா ஏன் அவளை இப்படி மிரட்டுறாங்க உங்க பெயரை கேட்டாலே மிரண்டுபோறா ” என்றான் அன்னையிடம்

“ துண்டு உன்னோட பேங்க்ல இருக்கு எடுத்து குடு ” என்றவர் வேண்டுமென்றே அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் திரும்பினார்.

யோசனையுடனே அன்னையை பின்தொடர்ந்தான். அவனுக்கும் புரியவில்லை பைரவியை ஏன் ஜெயாவிற்கு பிடிக்கவில்லை என.. ஆரம்பம் முதலே அதாவது முதன் முதலாக அவள் அனுப்பிய கடிதத்தை அவனிடம் கொடுக்கத் தவறியது.. ஒருமுறை வீட்டுக்கு அழைத்து வந்தபோது இவர் நடந்து கொண்டது.. இதோ இப்பொழுது அவள் மீது தவறே இல்லாமல் குற்றம் சாட்டியது.. என அனைத்திலிருந்தும் அவன் தெரிந்து கொண்டது அவருக்கு பிடித்தம் இல்லை.. ஆனால் ஏன் ?? விடை தெரியவில்லை அவனுக்கு..

 

விடையே அவனாக இருப்பின் என்ன செய்வானாம்?

 

மேகம் கடக்கும்…  

 

Advertisement