Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 17

“ இத்தனை நாளா எங்கப்பா போயிட்டே ? ஒரு தகவலும் இல்ல.. பாவம் பைரவி ஒவ்வொருநாளும் உன்ன எதிர்பார்த்து காத்திருந்துது… ” என்று தாத்தா அவனது தாமதத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வினவினார்.

அதுலிடம் பதிலில்லாமல் ஒரு அமைதி குடிகொண்டிருக்க அவன் பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான். அவன் குஜராத் சென்றிருந்ததை பற்றியான சிந்தனை தான் அது.

ஒப்பந்தம் கைமாறிய சில தினங்களில்… ஒரு பரபரப்பான காலைப்பொழுதில் எம்.டியை சந்திக்க அவரது அறைக்குள் பிரவேசித்தான் அதுல். சிறிது நேர உரையாடலுக்குப்பின்

“ சார் நமக்கு குஜராத் கூட்ஸ் எல்லாம் சரியாய் வரும் நான் அத பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன் ” என்றான் உறுதியான குரலில்.

“ ராமநாதன் கிட்ட இன்போர்ம் பண்ணிட்டியா ” என அவர் கேள்வியாய் நோக்க.. அவன் இல்லை என்று தலையசைத்தான். ராமநாதன் தான் அவனது மேலாளர் அவரிடம் தான் அத்து முறையாக சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இவரிடமே நேரடியாக வந்துவிட்டான்.

அவனை கூர்ந்து பார்த்தவர் சில நொடி மௌனத்திற்குப்பின்,

“ நீயே ப்ரொசீட் பண்ணு.. எதாவது உதவி தேவைப்பட்டா என் பி.யே வை காண்டாக்ட் பண்ணிக்கோ.. ”

“ சார் நானா ” அதிர்ச்சியும் தயக்கமுமாய் அதுல்..  

“ நீ தான்.. இப் யு வாண்ட் தினேஷ் வில் அக்கம்பனி யூ ” என்றார் கேலி கலந்த குரலில் அவனது முக பாவங்களை கவனித்தபடி.

அவனோ எதையும் வெளிக்காட்டாமல், “ நோ ப்ரோப்லம் சார் லெட் மீ டூ ” என்று விடைபெற்று கிளம்பும்முன்

“ வெயிட் யங் மேன் ”

அவன் திரும்ப..

“ கால் ராமநாதன் அண்ட் தினேஷ் ” என்று தன் பி.யேவிடம் கூறினார். அவர் அடுத்து செய்யவிருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக புரிந்தது அதுலிற்கு.

உடனே செயல்படுத்த தயாராகிவிட்டாரே என்று எண்ணியபடி நின்றிருந்தான்.

ராமநாதனும் தினேஷும் வந்து சேர்ந்திருக்க..

“ சார் வர சொல்லிருந்தீங்க ” என்றார் ராமநாதன் மிகவும் பவ்யமாக

“ ஹ்ம்ம் காண்ட்ராக்ட் மிஸ்ஸான விஷயமா பேசத்தான் ”

“ அதுக்கு யார் காரணம்னு எல்லாருக்குமே தெரியுமே சார்.. நீங்க இன்னுமே ஆக்சன் எடுக்காதது தான் கோஒர்க்கர்ஸ் மத்தியில ஒரு கேள்வியா இருக்கு ” என்று குறுக்கிட்டான் தினேஷ்.

“ யார் மீது தவறிருந்தாலும் நான் கண்டிப்பா ஆக்சன் எடுப்பேன் மிஸ்டர் தினேஷ்.. யூ டோன்ட் ஒர்ரி.. அதுக்கு முன்னாடி தீர விசாரிக்கும் இல்லையா ” என்றவர்

“ உனக்கு யாராவது மேல சந்தேகம் இருக்கா அதுல்… ” என்று அதுலிடம் வினவ

அவரது எண்ணம் அறிந்து அவனும் “ இருக்கு சார் ” என்றான் தினேஷை பார்த்தபடியே அழுத்தமாக..

“ யார் மேல.. ”

இதற்காகவே காத்திருந்தவன் போல் “ என்ன தினேஷ் சொல்லட்டுமா ” என்றான் அமைதியாக அதேசமயம் வார்த்தைகளில் அழுத்தத்தை கூட்டி ஊடுருவும் பார்வையை அவன்மீது பதித்தபடி..

அப்போதும் தினேஷ் தைரியமாகத் தான் நின்றிருந்தான் அவன் தவறிழைத்ததற்கான ஆதாரம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை… அத்து பழிபோட்டலுமே அவனால் நிரூபிக்க முடியாது என்ற தைரியம். அத்துவை ஒரு பார்வை பார்த்துவிட்டு

“ சார் அவன் செஞ்ச தவறை மறைக்க இப்படி கதை விடுறான்.. ப்ரூப் காட்டச்சொல்லுங்க அவன்கிட்ட எதுவும் இருக்காது.. இவனை எல்லாம் முதல்ல நீங்க டிஸ்மிஸ் செய்யணும்.. எக்ஸ்பிரிஎன்ஸ் இல்லாத ஆளுங்ககிட்ட இதுமாறி பெரிய பொறுப்பெல்லாம் குடுத்தா இப்படி தான் இவங்கனால உங்களுக்கும் கெட்டபெயர் கம்பெனிக்கு கெட்டபெயர் ” என்றான் அனல் அடிக்க.

“ அதுல்.. டோன்ட் வேஸ்ட் அவர் டைம்.. டூ யூ ஹேவ் எனி ப்ரூப் ?? ” எம்.டிக்கே உரிய கம்பீரமான குரலில்

“ எஸ் சார்.. ஹியர் இட் ஈஸ் ” என்றவன் தனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பென்ட்ரைவை எடுத்தான்.. தினேஷின் விழிகள் அதிலேயே நிலைத்திருந்தது.

அதுல் அதை எம்.டியிடம் நீட்ட அவர் அந்த பென்ட்ரைவை கையில் வாங்கி சில நொடி ஆராய்ந்துவிட்டு மடிக்கணினியில் சொருக.. தினேஷ் கொஞ்சம் விதிர்த்துதான் போய்விட்டான்.

எம்.டி திரையில் ஒரு பார்வையும் தினேஷின் முகத்தில் ஒரு அதிர்ச்சிப் பார்வையுமாய் இருக்க.. அவரது முக மாற்றங்களை படித்தவனுக்கு கொஞ்சம் உதறலெடுக்க ஆரம்பித்தது. மடிக்கணினியை மூடியவர் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு

“ ஐ டிடண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரம் யு கைஸ் ” என்று இருவரையும் கூர்ந்து நோக்க.. தினேஷிற்கு இப்போது வேர்த்து கொட்ட.. ராமநாதனுக்குமே முகம் சற்று வெளிறியது.

“ சார் அது வந்து.. அதுல் எதோ ட்ராமா செஞ்சிருக்கான் நீங்க இத்தனை வருசமா உங்க கூட இருந்த எங்களையே சந்தேகப்படறீங்களா ? நாங்க ஆரம்ப கட்டத்துல இருந்து கம்பெனிக்காக உழைத்ததெல்லாம் உங்களுக்கே நல்லாத் தெரியும் இருந்தும் நீங்க.. ” என்று அவன் முடிக்கும்முன் மடிக்கணினியை விரித்து ஒரு விடியோவை பிளே செய்து அவன் புறம் நீட்டினார்.

வாக்கியத்தை முடிக்காமல் வாயை பிளந்தபடி அதிர்ச்சியில் நின்றிருந்தான். முக்கிய கோப்புகள் வைத்திருந்த அறையும் அதில் காலையிலிருந்து  பிரவேசித்த நபர்களும் திரையில் மூவிங் பிக்ச்சராய் ஓடிக்கொண்டிருக்க..

‘ ஹிடேன் கேமரா இருக்கற விஷயம் நமக்கு தெரியாம போச்சே.. காரிடார்ல ரெசெப்ஷன்ல இருக்கிற சீசீடிவி கேமராஸ் அண்ட் பூட்டேஜ் எல்லாம் கவனிச்சு மாட்டிக்காம தானே ஸ்கெட்ச் போட்டிருந்தேன்.. இந்த அதுல் எப்போ இதை ராமநாதன் ரூம்ல பிக்ஸ் பண்ணி வெச்சிருந்தான் !! இவன் அதுனாலதான் நம்மள பாக்குறப்போ எல்லாம் ரொம்ப கூலா ஹாய் சொல்லிட்டு போனானா !! இப்படி மாட்டிகிட்டோமே ’ என்று தன்னயே நொந்துகொன்டு நின்றிருந்தான் தினேஷ்.

இராமநாதன் தன் அறையை சில நாட்களுக்கு முன்பு தான் மாற்றியிருந்தார்.. அதில் கேமரா ஏதும் பொருத்தப்பட்டிருக்காதது தினேஷிற்கு அன்று சாதமாகப்பட்டது இன்று ??     

அவன் யோசிக்கும் நேரத்தில் மடிக்கணினியை வேகமாக தன் புறம் திருப்பிய எம்.டி “ இன்னும் நெறய வீடீயோஸ் இதுமாறி இருக்கு.. சொல்லு தினேஷ் எதற்காக அதுல் கோட் பண்ணுனதை மாத்தி வெச்ச ” புருவங்கள் முடிச்சிட தினேஷை பார்க்க..

கையும் களவுமாக மாட்டியபின் தப்பிக்க வழியில்லை என்று உணர்ந்தவன் அப்ரூவராக மாறியாவது வேலையை காப்பாற்றிக்கொள்ளும் வேலையில் இறங்கலானான்.

அனைத்தையும் தன் வாயால் ஒப்புக்கொண்டான்.

ஒப்பந்த விஷயத்தில் அனைவரிடமும் கருத்துக்களை கேட்டிருந்தாலும் அதுலின் கருத்துக்களை ஏற்றதோடு இல்லாமல் அதுலிடமே முழு பொறுப்பையும் ஒப்படைத்தது அதே துறையில் இருக்கும் தினேஷுக்கு புகைச்சலை ஏட்படுத்த.. அவனும் அதுலைப் போலவே ஒரு ஆவணத்தை தயார் செய்து வைத்திருந்தான். ராமநாதனிடம் பேச்சுக்கொடுத்தபடியே மேசைமீது வைத்திருந்த அவரது லக்கரின் சாவியை அவர் அறியாமல் எடுத்து சென்றுவிட்டு யாருமில்லாத இடைவேளை நேரத்தில் ராமநாதனின் அறையில் இருந்த முக்கிய கோப்புகள் வைத்திருக்கும் லாக்கரை திறந்து அதுலின் ஆவணத்தை எடுத்துவிட்டு இவன் வைத்திருந்ததை அங்கு மாற்றிவிட்டான். அதன்பின் சாவியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டதால் இதை ராமநாதன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ராமநாதன் கடைசியாக அதை அனுப்பும்போது அதுல் சரியாகத்தான் வைத்திருப்பான் என்ற நம்பிக்கையில் கடனுக்கு செயல்பட்டதால் சரிபார்க்கத் தவறிவிட்டார்.

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் அந்த ஆவணத்தில் இருந்த முக்கிய கருத்துக்களை காண்பித்து இதற்கு முழு காரணம் தான்தான் என்று வெளிக்காட்ட நினைத்த தினேஷிற்கு.. அவன் தயாரித்த ஆவணம் போதிய அம்சங்களை பெறாமல் இருந்த காரணத்தால் நிராகரிக்கப் பட்டுவிட்டது.. இப்படி அவன் எதிர்பாராமல் ஒப்பந்தம் கைநழுவியது தெரியவர அதுல் எதிர் நிறுவனத்தாரிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வேண்டுமென்றே தங்களது நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்காதபடி செய்து அவப்பெயரை உருவாக்கிவிட்டான் என்று கதை கட்டி விட்டான்.

ராமநாதனுக்கு அதுலைப் பற்றி தெரிந்திருந்தும் தனது லாக்கரில் இருந்து ஆவணம் மாறி இருப்பதால்.. தன் மீது பழி வந்துவிடுமோ என்று சுயநலமாக அமைதி காத்துவிட்டார். அவருக்கும் இதை செய்தது யாரென்று தெரிந்திருக்க வில்லை.. அதுலயும் காப்பாற்ற முன்வரவில்லை.

அவருக்குத் தெரியாமல் எப்படி இது நடந்ததென்று அவரிடம் கேள்வியெழுப்ப.. அதுலிடம் தான் ராமநாதனின் லாக்கரின் ஸ்பேர் சாவி இருக்கும்.. இவ்விஷயத்தை மேற்கோலிட்டுவிட்டார். அதனால் அங்குள்ள அனைவரும் அதுல் முதலில் கூறியது ஒன்று இறுதியில் ஒப்புதலுக்காக காண்பித்தது ஒன்று கடைசியில் அனுப்பியது ஒன்று என்றுதான் தவறாக எண்ணிவிட்டனர்.

தினேஷ் அனைத்தையும் தன் வாய்மொழியில் மொழிந்துரைக்க..

அதன் பின்னரே ராமநாதனுக்கு தெரிந்தது அவரது லாக்கரை திறந்து ஆவணத்தை மாற்றியது யாரென்று.. அவர் கூனி குறுகிப்போய் அதுலை பார்க்கமுடியாமல் தவிப்போடு நின்றிருந்தார். அவன் அவருக்கு செய்தது எத்தனை இன்று அவனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் இவர் துரும்பையும் அசைக்கவில்லை அவன் மீது சுமையைத்தான் ஏற்றிக்கொண்டிருந்தார். எல்லாம் நினைவுவர மனசாட்சி விழித்துக்கொண்டு அவரை துளைத்துக் கொண்டிருந்தது.

அடுத்தநொடி எம்.டியின் நடவடிக்கை கஜா புயலின் கோர தாண்டவத்தை விட பலமாக இருந்தது. அவர்களைப் பார்த்து சிரித்தது டிஸ்மிஸல் லெட்டர்..

தினேஷ் என்ன கூறியும் எவ்வளவு மன்னிப்பு கேட்டும் அவர் மனம் மாறவில்லை.. உலைக்களமாய் கொதித்திருந்தார். அவர் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருந்தார். ராமநாதனின் மீது இதில் தினேஷ் அளவிற்கு தவறில்லை என்றாலும் தனது பணியை சிறப்பாக செய்யாமல் ஒரு அலட்சியம்.. அதற்காகவே அவரது அலட்சிய போக்கிக்காகவே அவர்மீதும் இந்த நடவடிக்கை. அதுவும் தினேஷின் மீது போலீஸ் கம்பளைண்ட் அளிப்பதற்கு தயாரானவரை அதுல் தடுத்துவிட்டான். அது ஒன்றை மட்டுமே அவனால் தடுக்க முடிந்தது மற்றபடி அவன் அவ்விருவருக்காகவும் பரிந்து பேசியும் எதுவும் செல்லவில்லை எம்.டி அவரது முடிவில் தீர்க்கமாக இருந்தார்.

இவனுக்கு நாம் இவ்வளவு செய்தபின்னும் நமக்காக பரிந்து வேறு பேசுகிறான்.. என்ன மனிதன் இவன் !! என்று தான் அதுலைப் பற்றி அவ்விருவரும் நினைத்தனர். சில விஷயங்களை மூடி மறைக்கும்போது யாருக்கும் பெரிதாய் புலப்படுவதில்லை உண்மை வெகுநாள் உறங்கி கொண்டிருக்காதென்று.. அது வெளிச்சத்திற்கு வரும்போது நம்மை காரிருளில் தள்ளிவிடும். அதைவிட தவறிழைத்தவனின் மனசாட்சி விழித்துக்கொண்டால் அதைவிட பெரிய தண்டனை உண்டோ ஒருவருக்கு !! கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். அறையிலிருந்து வெளியேறுமுன் ராமநாதனும் தினேஷும் அதுலிடம் மனதார மன்னிப்பை யாசித்துவிட்டே சென்றனர்.

அவர்கள் இருவரும் சென்றபின் எம்.டி அதுலிடம் அவனது பென்ட்ரைவை நீட்டி “ இந்தாடா உன்னோட ப்ரூப்.. பத்திரமா வெச்சுக்கோ ” என்று குறுநகையுடன் அளிக்க அவனுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

“ அவன் வாயாலேயே எல்லா உண்மையையும் கொண்டுவர வெச்சுடயே கில்லாடிதான் டா நீ ” என்று புகழாரம் சூட்ட..

“ சார் எல்லாம் உங்களாலதான் ரொம்ப தேங்க்ஸ் என்மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சதுக்கு ” என்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க.. பார்வையில் பல பரிமாற்றங்கள் இருவரது அதரங்களிலும் மென்னகை தவழ்ந்திருந்தது.

எம்.டி தினேஷிடம் காண்பித்த வீடியோவில் இருந்தது இன்று காலை ராமநாதனின் அறைக்குள் நடந்த காட்சிகள் மட்டுமே.. அதிகாலையில் தான் அவ்வறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தியிருந்தனர். அவ்வறையில் பல நாட்களாக ரகசிய கேமரா ஒன்று இருப்பதுபோல் சித்தரிக்கப்படவே இந்த ஏற்பாடு. அதுலிடம் நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் போகவே அவனால் தினேஷின் மீது தான் தவறென்று உறுதியாக கூற முடியவில்லை. நன்கு யோசித்தவன் எம்.டியிடம் ஒரு கேமராவை அங்கு பொருந்தும்படி வேண்டுகோளிட்டு அதில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து தீட்டியதே இந்த திட்டம். அதுல் மீதிருந்த நன்மதிப்பில் அவரும் அவனுக்குத் துணைபோக.. எம்.டியே இப்படி ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு விசாரிக்கும்போது அனைத்தையும் உண்மை என்று நம்பிய தினேஷ் தனக்கு எதிராக ஆதாரம் சிக்கிவிட்டது தான் மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து அனைத்தையும் உளறிக்கொட்டிவிட்டான்.

அதுலின் மதிநுட்பத்தை மெச்சியவர் “ எப்படி கெஸ் பண்ணுன தினேஷ் தான்னு ” என்று வினவியதும் அவனது யூகத்தை தெரிவித்தான்.

ஒப்பந்தம் கைமாறியதுமே ஏதோ ஒன்று தவறென்று சந்தேகித்த அதுல் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பிய இறுதி ஆவணம் எதுவென்று தேடியெடுத்து சரிபார்க்கவும் தான் தெரிந்தது அது தான் தயார் செய்த ஆவணம் இல்லை என்று.

அதிலிருக்கும் தகவல்களை படித்தவனுக்கு அன்று தினேஷ் கூறிய சில கருத்துக்கள் நினைவுவர.. எல்லாம் ஒத்துப்போக.. இவை அனைத்தும் தினேஷின் வேலையாக இருக்குமோ என்று யூகித்திருந்தான்.

அப்போதிருந்த நிலையில் இதை வெளிகாட்டிகொல்லாமல் தங்களது நிறுவனத்திற்கு தற்போது தேவைப்படும் கூட்ஸ் அனைத்தும் வேறெங்காவது கிடைக்குமா என்ற தேடுதலில் ஈடுபட்டான். அவர்கள் எதிர்பார்பதுபோல் மொத்தமாக ஒரே இடத்தில கிடைக்கவில்லை சில இடங்களில் இருப்பு கம்மியாகவும் தொகை கூடுதலாகவும் தரம் குறைவாகவும் இருக்க.. எதையும் தேர்ந்தேடுக்க வில்லை. போட்டி நிறுவனத்திடம் இருக்கும் பொருட்களின் அளவு தரத்தை இவர்கள் தந்து ஆகவேண்டும்..

இதற்கிடையில் இதே பொருட்கள் எல்லாம் குஜராத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது என்று அறிந்தவன் அதை உறுதி செய்துவிட்டு எம்.டியிடம் பேச வந்திருந்தான்.

வந்தவன் அவனது திட்டத்தை கூற அவர் அந்நொடியே செயல்படுத்தி உண்மையை கண்டறிந்துவிட்டார். அதன்பின் எம்.டி கூறியபடி அதுலனும் குஜராத் கிளம்பிச்செல்ல அவர்கள் எதிர்பார்த்ததுபோல் சிறந்த தரத்தில் கணிசமான தொகையில் பொருட்கள் இருந்தது.

ஐம்பது சதவீதத் தொகையை முன்பே செலுத்திவிட்டு சரக்குகளை வாங்கிக்கொண்டு தயாரிப்புகளை வெளியிட்டபின் மீதம் உள்ள ஐம்பது சதவீதத் தொகையை லாபத்திற்கேட்ப செலுத்தலாம்.. லாபம் அதிகரிக்கும் பட்சத்தில் முன்பு செலுத்திய தொகையை விட கொஞ்சம் கூடுதலாகவும் நஷ்டம் ஆகும் பட்சத்தில் அதே தொகையை செலுத்திக்கொள்ளலாம்.. எப்படிப் பார்த்தாலும் தயாரிப்புகளை வெளியிடுமுன்னரே ஒரு தொகையை நிர்ணயம் செய்து ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கும்போது நிறுவனத்திற்கு லாபம் தான் கிட்டும் என்று அதுல் முன்னமே தெரிவித்திருந்தான். இதற்குத்தான் அனைவரும் ஒப்புதல் அளித்திருந்தனர் தினேஷின் குளறுபடியால் நடந்ததோ வேறு.

இப்போது அதையே பின்பற்ற.. உடனே அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி அங்குள்ள ஒரு தொழிற்சாலையிலேயே ப்ரொடக்ச்சனை துவங்க எம்.டி வழிசெய்துவிட்டார். விஷயம் வெளியில் தெரியாமல் இருக்கவும் பார்த்துக்கொண்டனர்.

டே அண்ட் நைட் ஷிப்ட்டுகளை மாறி மாறி போட்டு அயராது உழைத்தது தயாரிப்புகளைக் கொண்டுவந்துவிட்டனர். மூன்று மாதத்தில் போட்டி நிறுவனம் அதன் தயாரிப்புகளை வெளியிடும்முன்னரே இவர்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதனால் இவர்களுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபமும் கிட்ட.. போட்டி நிறுவனத்தின் பங்குகளும் குறைந்துவிட்டது. வேலை முடியும் வரை அதுல் அங்கேயே தங்கிவிட்டான்.

அவன் திரும்பியதும் அவனுக்காக காத்திருந்தது ப்ரோமோஷன். ராமநாதனின் பதவி இன்று அதுலிடம்..

அனைவரையும் மீட்டிங்கிற்கு அழைத்த எம்.டி தங்களது வெற்றியை பகிர்ந்துகொண்டு இதற்கு காரணமான அதுல் பற்றிக் கூற.. கிடைத்த சந்தர்ப்பத்தில் அவனை கீழே தள்ளியவர்கள் தான் இன்று தூக்கி தலையில் வைத்து பேசிக்கொண்டிருந்தனர்.

காலம் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது ஒருவரை. மனித மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள். அவனை பாராட்டுபவர்களுக்கு அவனிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே..

கதிருக்குத் தான் சொல்லிக்கொள்ள முடியாத ஆனந்தம் இதில்.

வந்த பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் விலகியிருக்க.. அவனுக்கு சில தினங்கள் விடுப்பளித்திருக்க.. அவன் செய்த முதல் காரியம் புகழ்பெற்ற அந்த கல்லூரி வளாகத்திற்குள் சென்று அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கூட செல்லாமல் சரளைப்பதிக்கு வந்தது தான்.

தாத்தாவின் குரலில் நிதர்சனத்திற்கு வந்தவன்

“ என்ன தாத்தா கேட்டீங்க ?? ”

“ நீ ஏன் பா கடுதாசியே போடல ? பாவம் பைரவி உன்கிட்ட இருந்து பதில் வரும் வரும்ன்னு காத்திருந்துது. ரெண்டாவது முறையும் பதில் இல்லாமப் போக ரொம்ப சோர்ந்திருச்சு ” என்றார் வருத்தத்துடன்.

“ தாத்தா.. லெட்டர் என் கைக்கு வரவே இல்லையே.. அதுவும் இல்லாம மூணு மாசமா நான் ஊர்ல இல்லை.. வேல விஷயமா வெளியூர் போயிருந்தேன் வந்ததும் இங்க நேரா வந்துட்டேன்.. மன்னிச்சிருங்க தாத்தா.. இனி பாருங்க எல்லாத்தயும் எவ்வளவு சீக்கிரம் சரிசெய்யுறேன்னு ” என்று உறுதியாய் கூறியவனை ஒரு நிறைந்த புன்னகையோடு பார்த்திருந்தார்.

கடிதம் கைக்கு கிடைக்காமலே சொன்ன வாக்கைக் காப்பாற்ற அவன் இங்கு மீண்டும் வந்திருக்கிறான் என்பதே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

மேகம் கடக்கும்…

Advertisement