Advertisement

பெரும் வலியுடன் தன் பேரனை கைப்பற்றி அழைத்து வீட்டுக்கு வந்திருந்தவர் வழி வழியாய் வந்த நகைகளையும் பொருட்களையும் பாதுக்காக்கும் பொக்கிஷத்தை யாரும் அறியா நிலவறையில் வைத்து பூட்டினார்.

அதன் மற்றொரு வழியைப் பற்றிய இரகசிய குறிப்பை தன் பேரனுக்கு மட்டும் சொல்லிவிட்டு தன் குடும்பம் அழிய காரணமாயிருந்த மற்றவர்களுக்கு சாபமிட்டு தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டார் அவர்.

அவரின் பேரனும் முத்துசாமியின் மகனுமான கதிரவன் யாருமில்லா அனாதையானான். அவனை யாருமே தங்களிடத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவனின் சித்தப்பா சித்தி எல்லாம் அவனை ஒதுக்கியிருக்க அதே வீட்டின் வாயில் புறம் இருந்த சிறு அறையில் அவன் தனித்திருந்துக் கொண்டான்.

வேளைக்கு அவனுக்கு உணவு கொடுத்தனர் அவ்வீட்டினர். அதுவும் கூட ஊர் எதுவும் சொல்லிவிடுமே என்ற எண்ணத்தில் தான். அவன் அதை புறக்கணித்தான், அவன் பெயரிலேயே அவ்வளவு சொத்தும் இருந்தாலும் எதையும் அனுபவிக்க அவனுக்கு துளியும் விருப்பமில்லை.

ஒன்பது வயது சிறுவனுக்கு அனைத்துமே புரிந்தது. ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு அவன் பெயரில் சொந்தமாய் நிலபுலன் இருந்தும் அடுத்தவரின் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றான்.

எந்நேரமும் அவன் அறையிலேயே இருந்துக்கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருப்பான் அல்லது வரைந்து கொண்டிருப்பான் அவன். ஒரு நாள் முத்துலட்சுமியின் ஓவியத்தை அவன் தீட்டி அவனறையில் ஒட்டியிருக்க அவ்வழியாக எட்டிப்பார்த்த இந்திரா அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டார்.

முத்துலட்சுமியின் ஓவியமாய் அது இல்லாமல் அவர் அவளை கனலாய் பார்த்ததிலேயே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கியது. இரவின் உறக்கத்திலும் கூட அம்முகம் அவளை உறங்கவிடவில்லை.

தினம் தினம் அது தொடர இந்திராவிற்கு மனநலம் பிறழ்ந்தது. பாவம் செய்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களுக்கான தண்டனையை அனுபவித்தனர்.

ஒரு நாள் அனைவருமே அவன் முன் வந்து நின்றனர் அவன் பெயரில் இருக்கும் சொத்தை வேண்டி. கொஞ்சமும் யோசிக்காது அதை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ஒரு சிரிப்புடன் அவன் நகர்ந்துவிட்டான்.

முத்துலட்சுமி எழுதிக் கொடுத்த குறிப்பை வைத்து நிலவறையில் இருந்து அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை நகைகளை எடுத்தவன் அதை பாதுக்காப்பாய் வேறிடத்திற்கு மாற்றி குறிப்பெழுதினான்.

காலங்கள் உருண்டது முத்துலட்சுமியின் குடும்பம் வேரோடு சாய்ந்தது. அவரின் குடும்பத்தில் மிச்சமிருந்த வாரிசுகளால் அப்பரம்பரை முழுதும் அழியாது, இதோ உதிரன் வரை வளர்ந்து நின்றது அக்குடும்பத்தின் சாபம் போக்க.

————-

“சார் கிளம்பிட்டாங்களா மேடம்”

“கிளம்பிட்டார்”

“எத்தனை மணிக்கு கிளம்புறீங்கன்னு சொல்லுங்க மேடம்?? நாங்க வண்டியை அனுப்பி வைக்கிறோம்”

“அதெல்லாம் வேண்டாம் நாங்களே வந்திடுவோம்” என்று சொல்லி போனை வைத்தாள் சினமிகா.

உதிரனின் வேண்டுக்கோளுக்கு செவி சாய்த்திருந்த அறநிலையத்துறை மறு வாரத்திலேயே நல்ல நாள் பார்த்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டியிருந்தனர்.

இதோ கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. உதிரன் தன் சார்பாய் பைரவருக்கும் தங்கள் குலதெய்வத்திற்கும் கோவிலில் பிரகாரம் கட்டுவதற்கு நிதி கொடுத்திருந்தான்.

கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு உதிரனின் குடும்பத்திற்கு அழைப்பு வந்திருந்தது. புதையல் விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்க அவனை மரியாதையாக பார்க்க ஆரம்பித்தனர் அவ்வூரில் உள்ளவர்கள்.

உதிரன் சினமிகாவின் இனிப்பு கடை இப்போது அவ்வூரில் மிகப் பிரசித்தம். முத்துலட்சுமியின் சாபம் விலகியிருக்க அக்குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் நல்ல முன்னேற்றமே.

வினயாவை பற்றி நன்கு புரிந்து அறிந்துக் கொண்ட ஒருவர் அவளை திருமணத்திற்கு கேட்க அவர்கள் உதிரனிடத்தில் வந்து நின்றனர். அவனும் விசாரித்து இறுதி முடிவை வினயாவிடம் கேட்க அவள் தன் அண்ணனின் முடிவே இறுதி என்றுவிட அவளின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது.

சினமிகா, உதிரன் தம்பதிக்கு கடவுளின் வரமாய் அழகான பெண் குழந்தை பிறந்திருந்தாள். அவர்கள் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை பார்ப்போம்.

“சிமி” என்று உள்ளிருந்து கணவன் அழைக்க “என்னங்க??” என்றவாறே உள்ளே நுழைந்தவளை அப்படியே தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான் உதிரன்.

“நாம இப்போ கிளம்ப வேணாமா??”

“அதுக்கு”

“இது எதுக்கு??” என்று அவன் தன்னை கட்டிக் கொண்டிருப்பதை காட்டி அவள் கேட்க “எதுக்குன்னா என் பொண்டாட்டி நான் கட்டிக்கறேன்”

“உங்க பொண்டாட்டி தான் நீங்க தான் கட்டிக்கணும். யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க, ஆனா நாம கோவிலுக்கு போக வேணாமா இதெல்லாம் இப்போ தேவையான்னு கேட்டேன்”

“பிரச்சனை எல்லாம் ஓய்ஞ்சு இப்போ தான் மனசுக்கு ஒரு மாதிரி நிம்மதியா இருக்கு சிமி. காதலுக்கு நேரம் காலம் இருக்கா என்ன. கோவிலுக்கு போறதுன்னா உன்னை கட்டிக்க கூடாதா சொல்லு” என்றவன் அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி கேட்க அவளால் ஒன்றும் சொல்ல முடியாது போனது.

“என்ன பதிலே பேச மாட்டேங்கற”

“அதான் சொல்லிட்டீங்களே காதலுக்கு நேரம் காலம் இல்லையான்னு. உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு, எந்த வேலையும் பார்க்காம காதலே கதின்னும் இருக்க முடியாதுல. எல்லாத்துக்கும் காலம், நேரம், இடம், பொருள்ன்னு எல்லாமே இருக்கு”

“சூப்பர் நல்லா பேசறே” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசி ஒலியெழுப்பஎடுத்து பார்த்தவன் உடனே அட்டென் செய்தான். “இதோ கிளம்பியாச்சு வந்திடறோம்” என்றுவிட்டு மனைவியை பார்த்தான்.

“என்ன??”

“கிளம்பு போகலாம் நேரமாச்சு”

“எனக்கு லவ் மூட் வந்திடுச்சுப்பா காதலுக்கு நேரம் காலம் இருக்கா என்ன” என்றவள் அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள வாய்விட்டு சிரித்தான் அவள் கணவன்.

உதிரன், சினமிகா, சீதா, உதிரனின் சித்தப்பாக்கள், அவர்களின் குடும்பத்தினர், அத்தை வீட்டினர், சினமிகாவின் அம்மா, அப்பா என்று அனைவருமே கோவிலுக்கு வந்திருந்தனர்.

கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாய் நடந்து முடிந்திருக்க அவர்கள் குலசாமிக்கு பொங்கல் வைக்க சென்றனர். “உதிரா உன் பொண்ணு எங்கேப்பா கண்ணுலவே காட்டலை” என்று ஊர்க்காரர் ஒருவர் கேட்க இவன் திரும்பி பார்த்தான்.

குழந்தை சினமிகா தூக்கி வைத்திருந்தாள், அவளருகே சென்று “லட்சுமிம்மா” என்று சொல்லி அவன் குழந்தையை நோக்கி கையை நீட்ட அவனிடம் தவ்வினாள் குழந்தை. 

அழகான தன் சிரிப்பால் அனைவரையுமே கவர்ந்திருந்தாள் அம்மழலை. “இதான் உன் பொண்ணாப்பா. என்ன பேரு வைச்சிருக்கே??” என்றார் அவர்.

“முத்துலட்சுமி” என்றான் அவன்.

அவர்கள் யாருமே அறியாத ஒன்று கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் ஒரு காலத்தில் முத்துசாமி கோவில் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட இடம், முத்துலட்சுமியின் தாய் வீட்டு சொத்து. அதே இடத்தில் தான் கோவில் கட்டப்பட்டிருந்தது.

————-

“அபி இப்படி மொத்தமா கோட்டை விட்டுட்டு வந்து நிக்கறியேடா. கொஞ்சம் கூட உன்னால அவளோட மனசை மாத்த முடியலையே. போச்சு போச்சு இனி எதுவும் நம்ம கையில இல்லை. அந்த வினயா கழுதைக்கு கல்யாணம் ஆகிடுச்சு”

“அவளையெல்லாம் கட்டிக்க ஒரு கேனையன் வந்து வைச்சிருக்கான் பாரு, மானம் ரோஷம் இல்லாதவன். அடுத்தவன் குழந்தையை சுமக்கறவளை போய் கட்டியிருக்கான். இப்படியே பேசாம மரம் மாதிரி நிக்கறியேடா” என்று பொருமி தள்ளினார் லதா.

“பேசாம இருக்கப் போறியா இல்லையா நீ. நானே கொலைவெறியில இருக்கேன். அந்த வினயா என்னை நம்புற மாதிரி நடிச்சிருக்கான்னு எனக்கே இப்போ தானே தெரியும்”

“நான் முதல்ல அவளை ஏமாத்தினேன் இப்போ பதிலுக்கு அவ என்னை நம்புற மாதிரியே ஆக்ட் பண்ணி என்னை பழிவாங்கிட்டா. அவளை கட்டிக்க போறவனுக்கும் இந்த குழந்தை விஷயத்தை பத்தி ஒரு ஆளு மூலமா சொல்ல வைச்சேன்”

“அந்த உதிரன் இருக்கானே எமகாதகன் எல்லா விஷயத்தையும் சொல்லித்தான் அந்த மாப்பிள்ளையவே தேர்ந்திடுத்தானாம். நான் இன்னும் எவ்வளவு தான் செய்யறது. உன் பேச்சை கேட்டு கேட்டு கடைசியில என் வாழ்க்கை எங்க வந்து நிக்குது பாரு”

“அன்னைக்கு வெறும் வாய் வார்த்தைக்கு சொன்னேன். இப்போ மனசார நொந்து போய் சொல்றேன். என்னை பெத்தவ இருந்தா இப்படி நடந்திருக்குமா. என்ன இருந்தாலும் நீ அத்தை தானே எனக்கு”

“அதான் என்னை உன் கூட இருக்க வைச்சு என் வாழ்க்கையே கெடுத்திட்ட, நான் உண்மையா மனசு திருந்தி அந்த உதிரன் கால்ல விழுந்திருந்தா கூட வினயா எனக்கு கிடைச்சிருப்பா”

“நீ சொன்னியே மட்டும் நான் அவளை விரும்பலை எனக்கும் அவளை பிடிச்சிருந்தது. எப்படியாச்சும் அவ எனக்கு கிடைக்கணும்ன்னு உன் பேச்சை கேட்டது தான் நான் வாழ்க்கையிலேயே செஞ்ச மிகப்பெரிய தப்பு” என்று அவன் பதிலுக்கு பேச லதாவின் முகம் விழுந்தது.

“அபி”

“போதும் என்னை விட்டிரு, உன் கூட இருந்தா நான் இன்னும் பாழா போவேன். என் வழியை நான் பார்த்துக்கறேன்”

“அபி நான் சொல்றதை கேளு அபி. அந்த வினயாவை நம்ம பக்கம் இழுக்க இப்போக்கூட ஒரு நல்ல சந்தர்ப்பம் இருக்குது அபி” என்று அவர் சொல்ல நடந்தவன் அப்படியே நின்றான்.

இவர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே திருந்தப் போவதில்லை. வினயாவின் வாழ்க்கையில் இவர்கள் சிக்கல் ஏற்படுத்த நினைத்தால் உதிரன் விட்டுவிடுவானா என்ன??

—————

“லட்சுமி எங்கே இருக்கே??” என்று சினமிகா கேட்டுக் கொண்டிருக்க “மேலே இக்கேன்ம்மா” என்ற சுட்டிக் குழந்தை மேலிருந்த அறையில் தான் விளையாடிக் கொண்டிருந்தாள்.

விளையாட்டின் போது நங்கென்று அவள் அங்கிருந்த ஜாடியில் இடித்துக் கொண்டு கத்த கணவனும் மனைவியும் மேலே ஓடினர் குழந்தையை தூக்க. உதிரன் குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே இறங்கியிருக்க சினமிகா அப்போது தான் அதை கவனித்தாள்.

ஜாடியில் புள்ளி வைத்த நண்டை செதுக்கி இருந்தனர். அது எதையோ அவளுக்கு உணர்த்த அருகே சென்று பார்த்தவள் அசந்து நின்றாள். அது மண் ஜாடி என்று நினைத்திருக்க ஜாடியின் ஓரத்தில் கெட்டியாய் இருந்த மண் உதிர்ந்து உள்ளே சொர்ணமாய் ஜொலித்தது. 

இவள் திரும்பிப் பார்க்க பைரவர் காலை தூக்கிக் காட்டினார் சினேகமாய் பின் அவர் அமைதியாய் வெளியேறிவிட்டார். இன்னமும் தேடப்படாத பொக்கிஷங்கள் இருக்கிறது என்ற உண்மையை அவளுக்கு உணர்த்திவிட்டு பைரவர் சென்றது அவளுக்கு புரிந்தது.

புள்ளி களவன்

திருப்பிப்போடு

வலி கொடுக்கும்

புது வழி பிறக்கும்

முற்றும்

Advertisement