Advertisement

35

அசந்து உறங்கிக் கொண்டிருந்த உதிரனை யாரோ தட்டி எழுப்பியது போன்று தோன்ற அதிர்வோடு கண்களை திறந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் பார்க்க சினமிகா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

உதிரன் எழுந்து அமர்ந்து தண்ணீர் குடிக்க மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க கையை நீட்ட அவன் கையை தட்டினார் சட்டென்று அவன் முன் தோன்றிய பைரவர்.

திடிரென்று நடந்துவிட்ட நிகழ்வில் அதிர்ச்சியானாலும் ஏதோ நமக்கு உணர்த்தத்தான் வந்திருக்கிறார் என்று புரிந்தவனாய் இவன் எழுந்து நிற்க பைரவர் அவனுக்கு வழி நடத்தினார்.

இவன் கதவைத் திறந்து விட அவர் இவனுக்கு முன்னே படிகளில் ஏற என்னவாயிருக்கும் என்ற யோசனையோடு உதிரனும் பின்னோடு சென்றான். அவ்வறையின் முன் சென்று நின்ற பைரவர் இவனை திரும்பிப் பார்க்க அதன் பொருள் புரிந்தவன் போல இவன் அந்த அறையை திறக்க ஆக்செஸ் செய்தான்.

கீழே அறைக்கு ஆக்செஸ் வைத்த போதே மேலிருந்த அறையில் இருந்த கதவை மாற்றி ஆக்செஸ் டோர் மாற்றியிருந்தான். கதவை திறந்து உள்ளே சென்றவன் உள் விளக்கை ஒளிரவிட பைரவர் அருகே இருந்த அறைக்கு சென்று அப்பெண்மணியின் புகைப்படத்திற்கு முன்னே நின்றார்.

இவனும் சென்று என்னவென்று பார்க்க அவ்வோவியம் இல்லையில்லை அது ஓவியமாகவே அவனுக்கு தோன்றவில்லை அப்பெண்மணி அவன் எதிரில் நிற்பது போன்றே தோன்றியது அவனுக்கு.

“உதிரா” என்று அவர் வாய்விட்டு அழைக்க இவனுக்கு இமையோரம் நனைந்து போனது. காண்பது கனவென்று சத்தியமாய் அவன் எண்ணவில்லை. அது நினைவுகளாகவே இருந்தது அவனுக்கு.

“ஹ்ம்ம்”

“நன்றி பைரவா எந்த ஜென்மத்தில் ஆரம்பித்த பந்தம் இன்று வரை எங்களுக்கு பாதுகாவலாய் இருந்து காக்கிறாய்” என்று பைரவரைப் பார்த்து சொல்ல அவர் தன் வாலை ஆட்டினார் புரிந்தவிதமாய்.

பின் உதிரனிடம் மீண்டும் திரும்பியவர் “உன்னை எதுக்காக இங்க வரவைச்சேன்னு தெரியுமா” என்று கேட்க அவன் தெரியாது என்பது போல் தலையாட்டினான்.

“உன்னால ஒரு நன்மை நடக்கணும். அது மட்டும் தான் இனிமே வர்ற நம்ம சந்ததியோட சாபத்தை போக்கும், செய்வியா உதிரா” என்றவரின் குரலில் அப்படியொரு கனிவிருந்தது.

அன்றொரு நாள் கனலாய் விழித்த விழிகளா இது என்று அவன் பார்க்க “என்ன உதிரா என்னையே பார்க்கிறே”

“நீங்க நிஜமா என்கிட்ட பேசறீங்களா??”

“உன்கிட்ட பேச மட்டும் தான் இத்தனை நாளா நான் காத்திட்டு இருக்கேன். இனி என் ஜென்மமும் நிறைவாகும் உதிரா உன்னால”

“ஏன் நீங்க என்கிட்ட இவ்வளவு நாளா பேசலை??”

“நீ குணமானவன்னு நீ வளர்ந்தப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நீ எந்த சொத்துக்கும் ஆசைப்படாதவன்னு உங்கப்பா இறந்ததும் சொத்துக்காக வந்து நின்ன சொந்தங்கள்கிட்ட எந்த சச்சரவும் செய்யாம இதுவே போதும்ன்னு நீ சொன்னப்போ தெரிஞ்சுக்கிட்டேன்”

“இந்த வீடு கூட உங்கம்மாவுக்காக தான் இருக்கட்டும்ன்னு நீ நினைச்சே. உனக்கு எம்புள்ளை முத்துவோட வாரிசு எம் பேரன் கதிரவனோட குணம் அப்படியே வந்திருக்கு”

“அத்தனை சொத்துப்பத்தி எல்லா தகவலும் அவன்கிட்ட தான் சொல்லிட்டு என் உசுரைவிட்டேன். எனக்கு எந்த சொத்தும் வேணாம் அது யாருக்கு கிடைக்கணும்ன்னு இருக்கோ அவங்களுக்கு கிடைக்கட்டும்ன்னு சொத்துக்கு காவலை பலப்படுத்தி புதிராக்கி வைச்சான்”

“என்னையே நினைச்சு என்னை ஓவியமா தீட்டினதும் அவன் தான். அவன் இருந்தவரை ஒவ்வொரு நாளும் என்கிட்ட மறக்காம வந்து பேசுவான். அவனுக்கு பிறகு எந்தவொரு ஆசையும் இல்லாம உன்னைத்தான் பார்த்தேன்”

“உன்னை மாதிரியே உன் மனைவியும் உனக்கேத்த துணையா அழகான மனைவியா வந்து அமைஞ்சிருக்கா. அழகுன்னு நான் சொன்னது அவளோட அகத்தை. நம்மோட குலசாமியான பைரவர் உன் மனைவியை அடையாளம் காட்டினார். அவளுக்கு கனவா எல்லாம் சொல்ல முயற்சி செஞ்சார்” என்று அவர் நீளமாய் பேசினார்.

“உனக்கு திருமணம் ஆனபிறகு தான் சொத்து உன் கைக்கு வரணும்ன்னு விதி. அதுவும் என் உயிர் பிரிஞ்ச அதே நாள்ல தான் அது உனக்கு கிடைக்கும்கறதும் விதி தான்”

“உனக்கு பரீட்சை வைச்சதா நினைக்காத உதிரா. இந்த குடும்பத்தோட வாரிசு நீ, இனி வர்ற தலைமுறை உன் பேரை சொல்லும், சொல்லணும். நீயே எல்லாம் தெரிஞ்சு வரணும்ன்னு நினைச்சேன், இதோ வந்து நிக்கறே என் முன்னாடி”

“உன்னோட சித்தியா இப்போ வந்து நிக்கறது என் மருமக இந்திராவோட வழித்தோன்றல். பேராசை பெரு நஷ்டம்ன்னு சொல்வாங்க அதுக்கு சிறந்த உதாரணமா அப்போ அவ இருந்தா, இப்போ உன் சித்தி லதா”

ஓவியத்தில் இருந்த முத்துலட்சுமி அவனிடத்தில் அப்போது நடந்ததனைத்தும் கூறினார். அவர் சொன்னதெல்லாம் நிதானமாய் கேட்டு முடித்திருந்தவன் “நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க, செய்ய காத்திருக்கேன்” என்றான்.

அவனைப் பார்த்து அரவணைப்பான புன்னகையை கொடுத்தவர் “கோவில் கட்டணும், சிவன் சொத்து குல நாசம்ன்னு சொல்வாங்க”

“சிவன் கோவில் கட்டணும்ன்னு ஆரம்பிச்சது, சொத்து ஆசை வந்ததுல எல்லாமே நாசமாகிடுச்சு. உன் வாழ்நாள் முடியறதுக்குள்ள நீ செய்ய வேண்டிய விஷயம் ஒண்ணே ஒண்ணு தான். அது கோவில் கட்டணும், சிவனுக்கு ஒரு கோவில் கட்டணும்”

“நம்மோட குலசாமியையும் அங்க வைக்கணும், நமக்கு இன்னொரு குலசாமியா இருக்கற பைரவரையும் எல்லாரும் அங்க வந்து வணங்கணும், செய்வியா உதிரா”

“நீங்க சொல்றது சின்ன விஷயமில்லை, என்னால முடியுமான்னு எனக்கு தெரியலை. என்னால மட்டும் தான் முடியும்ன்னு நீங்க நினைச்சா கண்டிப்பா நான் முயற்சி செய்வேன். அதை நடத்திக் கொடுக்கறது அந்த தெய்வத்து கையில தான் இருக்கு” என்று மேல் நோக்கி கும்பிட்டான் அவன்.

மெல்ல புன்னகைத்த முத்துலட்சுமியின் உருவம் நிஜத்தில் இருந்து மீண்டும் ஓவியமாகியது. அருகில் பார்க்க பைரவரும் இவனை பார்த்துக் கொண்டே செல்ல சட்டென்று மறைந்தும் போனார்.

சினமிகாவிடம் தன் கனவை அவன் விவரித்து முடிக்க பிரமிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். உதிரன் மட்டுமே அறிவான் அவன் சொன்னது கனவல்ல நினைவென்று.

——————–

இருளில் பதுங்கி பதுங்கி ஒளிந்து வந்த உருவம் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவ்வீட்டுக்குள் நுழைந்தது. “இப்போ தான் வருவியா அபி” என்று அபிஷேக்கை கடிந்தார் லதா.

“அம்மா நான் இப்போ நல்லவன் வேஷம் போட்டுக்கிட்டு இருக்கேன்ம்மா. அப்போ நான் கொஞ்சம் கவனமா தானே இருக்கணும். அதுக்காக இதெல்லாம் செய்ய வேண்டி இருக்கே”

“அவங்க நம்பிட்டாங்களா??”

“வினயாவோட அப்பா நம்பின மாதிரி தான் இருக்கு. வினயாக்கும் கொஞ்சம் லேசாய் ஒரு நம்பிக்கை இருக்கு, விட்டு பிடிப்போம்ன்னு வெயிட் பண்ணுறான்னு நினைக்கிறேன்”

“ஆனா அந்த உதிரனும் அவனோட பொண்டாட்டியும் தான் என்னை சந்தேகமாவே பார்க்கறாங்க. அதான் அதிக கவனமா இருக்க வேண்டி இருக்கு”

“எல்லாம் போச்சு அபி அந்த உதிரன் புதையலை அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைச்சுட்டான். இனி என்ன பண்ணுறதுன்னே தெரியலை, அவனை மாதிரி ஒரு மடையன் முட்டாள் இந்த உலகத்துலவே இருக்க மாட்டான்” என்று பொரிந்தார் லதா.

“நமக்கு கிடைச்சிருக்க வேண்டிய புதையல் அது. இப்படி மொத்தமா தூக்கிக் கொடுத்திட்டான்” என்று விடாது புலம்பினார் அவர்.

“அவனோட அப்பன் சீதான்னு நினைச்சு என்னை கட்டிக்கிறியான்னு கேட்டு என் மனசுலயும் ஆசையை விதைச்சு ஏமாத்திட்டான். அந்த புதையல் எப்படியும் எடுத்திடலாம்ன்னு நினைச்சிருக்க அவனோட மகன் அதை கெடுத்திட்டான்”

“எத்தனை வருஷ கனவு தெரியுமா அபி. உங்கப்பா உதிரனோட அப்பாவுக்கு நண்பர் தான். ஒரு நாள் சீதா வீட்டுக்கு போகும் போது தான் அவங்க பேசிக்கிட்டு இருக்கறதை கேட்டேன்”

“ஆனா அப்போ என்னால எதுவுமே செய்ய முடியலை. அப்போ தான் ஒரு நாள் உங்கப்பாவை ஒரு கடை வாசல்ல பார்த்தேன். நானே போய் பேசினேன், உதிரனோட அப்பாக்கு பிரண்டு தானேன்னு கேட்கவும் அவரோட முகமே மாறிடுச்சு”

“அவன் ஒரு ஏமாத்துக்காரன்னு சொல்லிட்டு எனக்கு பதில் சொல்லாம போனாரு. அவரை தனியா கூட்டிட்டு போய் எல்லா விஷயத்தையும் வாங்கினேன். அதுக்கு பிறகு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் திட்டம் போட்டோம் அவங்க எடுத்த புதையலை அந்த உதிரனோட அப்பாக்கே தெரியாம எடுக்கணும்ன்னு”

“அந்த நேரத்துல எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். அந்த புதையல் கிடைக்கும்ன்னு நான் அந்த வீட்டில பழியா கிடந்திருக்கேன். சீதாவோட புடவை மாதிரி எடுத்து அவ இல்லாத நேரத்துல அந்த வீட்டில நடமாடின்னு என்னென்னவோ பண்ணியும் அது நம்ம கையில கிடைக்கவே இல்லையே” என்று ஆற்றாமை தீராது பேசிக் கொண்டிருந்தார் அவர்.

“அம்மா விடுங்கம்மா இனி எதுவும் செய்ய முடியாது??”

“செய்யணும் இனி தான் அவங்களை எதுனா செய்யணும். அந்த வினயாவை விடவே கூடாது, அவ தான் நமக்கு துருப்புச்சீட்டு எப்படியாச்சும் அவளோட மனசை மாத்தி அவளை கல்யாணம் பண்ணிக்கோ அபி”

“அப்புறம் நீயும் ராஜ பரம்பரை ஆகிடுவே. அந்த வினயாவோட அப்பனுக்கே நிறைய சொத்து தேறும், உதிரனோட வீட்டை பார்த்தல்ல அதுவே பல லட்சங்கள் போகும். அப்படியொரு அரண்மனையில வாழ்ந்தாலே போதும் அபி. உனக்கு அது கிடைக்கணும், நீ வினயாவை மட்டும் கெட்டியா பிடிக்கப் பாரு” என்றார் லதா.

—————-

சில வருடங்களுக்கு முன்

ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கும் முன் நல்ல நாளும் நேரமும் பார்ப்பது அவசியம் என்பதால் முத்துலட்சுமி ஜோசியரிடம் சென்றிருந்தார் தன் கணவர் மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு.

ஜோசியரும் நல்ல நாள் மட்டும் பார்க்காது பலனும் பார்த்தார். அவர் சோழி போட்டு பார்க்க அது அத்தனையும் நினைத்த பலனை கொடுக்காது போக முத்துலட்சுமியுடன் வந்திருந்த அவரின் பேரனிடம் கொடுத்து சோழியை போடச் சொன்னார்.

அப்போதும் சாதகமான பலன் வராது போக சங்கடமாய் முத்துலட்சுமியை ஏறிட்டார் அவர். “என்னன்னு சொல்லுங்க எதுவும் நாள் சரியில்லையா??”

“நல்ல நாள் பலது இருக்கும்மா ஆனா நீங்க ஆரம்பிக்க போற காரியம் தடைப்படும்மா அதைத்தான் சோழி காட்டுது”

“என்ன சொல்றீங்க நீங்க?? இதுக்கு எதுவும் பரிகாரம் செய்ய முடியாதா” என்று முத்துலட்சுமியின் கணவர் சின்னசாமி ஜோசியரை கேட்க அவர் கடவுளின் முன் அமர்ந்து கண் மூடி நிதானித்தார்.

சில நொடிகளுக்கு பின் கண் திறந்தவர் “இதை இப்போ செய்ய வேணாம்மா. உங்க குடும்பத்துக்கு இது நல்ல நேரமில்லை, திசைக்கொன்னா எல்லாரும் பிரியப் போறாங்க. துர்மரணமும் நிகழப் போகுது”

“என்னென்னவோ சொல்றீங்களே எனக்கு பயமா இருக்கே”

“நீங்க தைரியமானவங்கன்னு தான் உங்ககிட்ட உண்மையை உடைச்சே சொன்னேன்ம்மா. உங்க குடும்பத்துக்கு பெரிய சாபம் வரப்போகுது. இனி எல்லாமே அந்த கடவுள் செயல் தான்”

அந்த சாபத்தை தானே தான் கொடுக்கப் போகிறோம் என்பதறியாது அதற்கான வழியை கேட்டார் முத்துலட்சுமி அந்த ஜோசியரிடம். “இதெல்லாம் சரிசெய்யவே முடியாதா??”

“இவர் என்னமோ கண்டதும் சொல்றார் முத்து. நீ கிளம்பு போகலாம், நம்ம குடும்பம் நல்லா இருக்கறது இவருக்கு பிடிக்கலை. அதான் இப்படியெல்லாம் சொல்றார். நீ வா போவோம், நம்ம கோவில் பூசாரிகிட்ட கேட்டா நல்ல நாள் குறிச்சு கொடுத்திருவாரு” என்ற சின்னசாமி எழுந்திருக்க அவர் கையை பற்றி அழுத்தினார் முத்துலட்சுமி. 

“நீங்க சொல்லுங்க” என்றார் ஜோசியரை பார்த்து.

“இந்த ஜென்மத்துல முடியாது, உங்க குடும்பத்தோட ஆண் வாரிசு ஒருத்தரால தான் அந்த சாபம் தீரும். அது நடக்க சில தலைமுறைகள் ஆகும். இன்னைக்கு நீங்க வந்த இதே நாள்ல பல நல்ல விஷயங்கள் அந்த ஜென்மத்துல நடக்கும்”

“இப்போ எந்த பரிகாரமும் இல்லையா”

“அம்மா நான் சொல்ல வர்றது” என்று அவர் இழுக்க அவரின் பேச்சிலேயே புரிந்தது முத்துலட்சுமிக்கு. இதற்கு மேல் அவரிடம் கேட்க எதுவுமில்லை என்று. ஒன்றும் சொல்லாது விருட்டென்று எழுந்துவிட்டார்.

கோபம் தான் அவரின் மேல் உண்மையே ஆனாலும் இப்படி உடைத்து சொன்னதில் கோபமும் வருத்தமும். மனதில் பெரும் பாரமொன்று ஏறிக் கொண்டிருக்க அவர் வெளியில் வரவும் முத்துசாமியும் சூர்யா பற்றிய சேதி காதில் விழவும் ஓட்டமும் நடையுமாய் அங்கு சென்றவர் பார்த்தது எரிந்துக் கொண்டிருந்த அந்த வீட்டைத்தான்

அவர்களை காப்பாற்றுகிறேன் என்று சென்ற தன் கணவரும் அந்த தீயிலே கருகியிருக்க அவரின் நெஞ்சில் நெருப்பெரிந்தது. கண்ணை மூடி நிதானத்தவருக்கு நடந்த முடிந்த நிகழ்விற்கு காரணமாய் இருந்தவர்கள் மீது அப்படியொரு கோபம் எழுந்தது.

Advertisement