Advertisement

நான் சொல்றதை முழுசா கேளுங்க. அபிஷேக்கும் அப்போ அங்க வந்திருந்தான். அவன் தான் இதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுறது. சில சமயம் அவன் கீழ இருந்து இவங்களுக்கு சிக்னல் கொடுப்பான் யாரும் வர்றாங்களான்னு. சில சமயம் ரெண்டு பேருமே சேர்ந்து தேடியிருக்காங்க”

உனக்கெப்படி தெரியும் அவ்வளவு உறுதியா சொல்ற”

உறுதியா எனக்கு தெரியாது தான் இதெல்லாம் என்னோட கெஸ்ஸிங் தான். லதாவால கண்டிப்பா அலமாரியை நகர்த்துறதோ ஜாடியை தூக்குறதோ நிச்சயம் முடியாது”

மே பீ அவங்களோட கணவர் இருந்த வரை அவர் அவங்களுக்கு உதவி பண்ணியிருக்கலாம். அவரோட இறப்புக்கு பின்னாடி அபிஷேக்கை அவங்க தயார் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

ஹ்ம்ம்”

அபிஷேக் கதவை திறந்து கொடுத்திட்டு போயிட்டான்னு நினைக்கிறேன். அவங்க தேடிட்டு திரும்பவும் கதவை சாத்திட்டு போய்ட்டாங்கன்னு நானா நினைச்சுக்கிட்டேன். ரூம்ல சத்தமில்லாம இருக்கவும் நான் அந்த ஜாடியை நகர்த்த முயற்சி பண்ணப்போ தான் அது என் கால்ல விழுந்திடுச்சு”

ஆனா அவங்க போகலை போல. யாரோ அந்த ரூம்ல இருக்காங்கன்னு அவங்க கெஸ் பண்ணியிருக்கணும். எனக்கு  அலமாரி பின்னாடி இருந்து ஒரு சத்தம் வரவும் தான் நான் ஜாடியை நகர்த்த போய் அடிப்பட்டு கீழ விழுந்துகிடந்தேன்”

அப்போ தான் அந்த உருவம் வந்துச்சு, என் கழுத்தை பிடிச்சு நெறிக்க பார்த்துச்சு. இருட்டுல எனக்கு அவங்க யாருன்னு தெரியலை. அப்போ தான் நீங்க சரியா கதவை தட்டுறீங்க என்னால அந்த ஜாடியை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியலை. கதவு வேற பூட்டியிருக்கு, அப்போ தான் அந்த உருவம் சத்தமில்லாம கதவை திறந்துவிட்டுச்சு”

திரும்பவும் வேகமா அலமாரியை நல்லா நகர்த்தி அது வழியா அவங்க போகும் போது தான் அவங்க முகத்தை பார்த்தேன். ஒரு நொடி என்னை அப்படியொரு குரோத்தோட பார்த்தாங்க அவங்க”

என் கழுத்தை அவங்க நெறிக்க வரும் போதே எனக்கு அது ஒரு பெண் அப்படின்னு தோணிடுச்சு. அவங்க வெளிய போகவும் அபிஷேக் தான் கதவை சாத்தியிருக்கணும், நிச்சயம் அவ்வளவு வேகமா அவங்களால அதை செஞ்சிருக்கவே முடியாது”

அவங்க மேல் தாளை மட்டும் தான் திறந்துவிட்டாங்க. நீங்க கதவை ஓங்கவும் நடுதாள் தன்னால விலகி கதவு திறந்திடுச்சு. நீங்க வர்றதுக்குள்ள போகணும்ன்னு அப்படி பண்ணிட்டு போய்ட்டாங்க”

இத்தனை வருஷமா இந்த வீட்டில இருக்கோம் எப்படி இதை தெரிஞ்சுக்காம இருந்தோம்ன்னு எனக்கு புரியவே இல்லை சிமி”

அதொண்ணுமில்லைங்க அப்போ நீங்களும் அத்தையும் மட்டும் தான். யாரு எப்போ இருப்பா இல்லைங்கறது அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு அதனால தான் அவங்களால ஈசியா வர முடிஞ்சது. அவங்களுக்கு என்ன ஜோசியமா தெரியம் நீங்க என்னை கட்டிட்டு வருவீங்க, எனக்கு கனவு வரும்ன்னு”

உண்மை தான் நீ வந்த பிறகு தான் இதெல்லாம் தெரிஞ்சுக்கவே முடிஞ்சது. நீ சொன்ன குறிப்பை வைச்சு தான் நானுமே அந்த புதையலை எடுத்தேன். எப்போ அந்த ஸ்டோர் ரூம்ல அக்செஸ் வைச்சேனோ அப்போ தான் ஒவ்வொண்ணா கண்டுப்பிடிச்சேன். நீ சொன்ன புள்ளிக்களவன் அப்படிங்கறது நண்டு தான். ஆனா புள்ளி வைச்ச நண்டோட படம்”

என்ன?? என்ன சொன்னீங்க?? நிஜமாவா சொல்றீங்க”

ஆமா நீயும் அம்மாவும் அன்னைக்கு வீட்டில இல்லை. அப்போ தான் இதை கண்டுப்பிடிச்சேன். ஸ்டோர் ரூம்ல இருந்த சுவத்துல அந்த படம் வரைஞ்சு இருந்துச்சு”

அதெல்லாம் நிச்சயம் அப்பா செஞ்ச வேலையா தான் இருக்கும். அப்பா தான் முதல்ல அந்த புதையலை எடுத்திருக்கணும், அவருக்கு ஏதோ சந்தேகம் வரவும் தான் அதை மறைச்சு வைச்சிருக்கார். தவிர இன்னொரு விஷயம் எனக்கு அப்போ தான் புரிஞ்சது”

என்னங்க??”

அப்பா அதுல இருந்து கொஞ்ச நகை எடுத்து வித்திருக்கார். அதை வைச்சு தான் மில்லை தொடங்கியிருக்கார்”

மில் வாங்க ஏதோ லோன் போட்டாங்கன்னு நகை வைச்சாங்கன்னு”

யாருக்கும் சந்தேகம் வந்திடக் கூடாதுன்னு அம்மாவோட நகையும் வித்து இருக்கார். மிச்ச காசை லோன்னு சொல்லியிருக்கார். நான் முழுக்க செக் பண்ணிட்டேன், அப்பா லோன் வாங்கினதுக்கான எந்த ப்ரூப் இல்லை”

நிஜமா தான் சொல்றீங்களா??”

ஹ்ம்ம் உண்மை தான் சிமி. அப்பாக்கும் கொஞ்சம் பேராசை இருந்திருக்கு, யாரும் உதவி பண்ணலைன்னதும் இப்படி செஞ்சிருக்கார். அவர் செஞ்சது சரியா தப்பான்னு இப்போ எனக்கு சொல்லத் தெரியலை”

அதுனால தானோ என்னவோ அந்த சொத்து எங்க கையில இல்லை. சித்தப்பாங்க கேட்கவும் நான் யோசிக்காம அதை கொடுத்திட்டேன்”

அப்புறம் அந்த ஸ்டோர் ரூம்ல படம் வரைஞ்சு இருக்கவும் ஏன் இங்க இப்படி ஒரு படம்ன்னு யோசனை வந்துச்சு. அந்த ரூம் முழுக்க தேடி பார்த்தேன் எனக்கு எந்த துப்பும் அதுக்கு பிறகு கிடைக்கலை. இதுக்கு மேல இங்க பார்க்கக் எதுவுமில்லைன்னு நினைச்சுட்டு அந்த படத்தை தடவிப்பார்த்தேன்”

அந்த சுவர் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு தட்டிப் பார்த்தா சத்தம் வேற மாதிரி வரவும் அதை நகர்த்தி பார்த்தா கதவு தன்னால திறக்குது”

அப்பாவுக்கு எப்படி இப்படியெல்லாம் யோசனை வந்துச்சுன்னு எனக்கு இப்போ வரை விளங்கவே இல்லை, அந்த கதவுக்கு மேலே படிக்கட்டு போகவும் ஏறினா அப்பாவோட ரூம் எல்லா மர்மத்துக்கும் விடை அந்த அறைன்னு எனக்கு உறுதியா தோணினது அப்போ தான்”

அப்புறம் நீ சொன்ன இன்னொரு குறிப்பு அதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. அந்த குறிப்பு உனக்கு ஞாபகமிருக்கா”

நல்லா ஞாபகமிருக்குங்க” என்றவள் அதை அப்படியே சொன்னாள்.

வரையினிலே

மஞ்ஞை கூட்டம்

அகில் மரத்தின்

அருகினிலே

சுனையொன்றின் ஓட்டம்

பாறை இடுக்கினிலே

வழி பிறக்கும்

மறைந்திருக்கும் 

பொக்கிஷமே

உனக்கென்றும் வரமே!!

அதுல வரைன்னா குன்றுன்னு தெரிஞ்சது, அடுத்து மஞ்ஞைன்னா மயில் அப்படிங்கற குறிப்பை நெட்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு குறிப்பு ஏன்னு அந்த ரூம் முழுக்க அலசினப்போ கூட எனக்கு கிடைக்கவே இல்லை”

அப்புறம் சோர்ந்து போய் கட்டில்ல உட்கார்ந்திட்டு பாட்டியோட படத்தை பார்த்தேன். நீ அந்த போட்டோவை நல்லா கவனிச்சு இருக்கியா சிமி”

அதுல கவனிக்க என்னங்க இருக்கு உங்க பாட்டி தான் இருந்தாங்க அதுல”

அதில்லை பாட்டி நின்னுட்டு இருந்த இடம் அதை கவனிச்சியா. அது ஒரு மலைப்பகுதி, பாட்டி பக்கத்துல இரண்டு மயில்கள் இருந்துச்சு, பின்னாடி மரங்கள் இருந்துச்சு. தூரத்துல பாறை இடுக்குல தண்ணி கூட வழிஞ்சுட்டு இருந்துச்சு”

இவ்வளவும் அதில இருந்துச்சா”

ஹ்ம்ம் ஒரு வேளை புதையல் அங்க இருந்திருக்கணும்”

போட்டோவிலயா??”

இல்லை அந்த போட்டோவுல இருந்த இடம் நிஜமாவே இங்க எங்கயோ இருந்திருக்கணும். அங்க இருந்து தான் அப்பா அந்த புதையலை யாரோட உதவியோட எடுத்திருக்கணும்”

புரியுதுங்க ஆனா நீங்க எப்படி எடுத்தீங்கன்னு இன்னும் சொல்லலையே??”

நான் தான் சொன்னேன்ல அப்பா புதையலை கொண்டு வந்து இந்த வீட்டில தான் வைச்சுட்டு இருந்திருக்கார். நமக்கு கிடைச்ச குறிப்புகள் எல்லாம் எப்பவோ எழுதி வைச்ச குறிப்புகள்”

அதை அப்பா மறுபடியும் அவர் கைப்பட எழுதி வைச்சிருந்திருக்கார். எதுக்கா தெரியுமா அவர் அதை ரீகிரியேட் பண்ணியிருக்கார். அதுக்கு முதல் படி தான் அப்பாவோட ரூம்ல இருந்து ஸ்டோர் ரூம்க்கான வழி”

அந்த வழி முதல்ல இருந்தே இருந்திருக்கணும் அதை பின்னாடி எந்த காரணத்துக்காகவோ அடைச்சிருக்கலாம். அப்பா புதையலுக்கு வழியா அதையே யூஸ் பண்ணிக்கிட்டாங்க. ஸ்டோர் ரூம்ல இந்த ரூம்க்கு வர்ற வழி புரியணும் அப்படிங்கறதுக்காக அந்த படத்தை அங்க வரைஞ்சு வைச்சிருக்கார்”

அடுத்ததா பாட்டியோட படத்துக்கு பின்னாடி இருக்கற மரக்கதவுக்கு பின்னாடி எல்லா புதையலையும் ஒளிச்சு வைச்சிருக்கார்”

நீங்க சொல்றது நிஜமா அந்த போட்டோவுக்கு பின்னாடி மரக்கதவு இருக்கா”

போட்டோவை எடுத்து பார்த்தா வெறும் சுவர் போலத்தான் இருக்கும். நான் போட்டோவை பார்த்து யோசிச்சுட்டு இருக்கும் போது அந்த போட்டோ கீழ விழுந்துச்சு”

அதை எடுத்து மாட்டலாம்ன்னு போகும் போது போட்டோக்கு பின்னாடி ஒரு இடத்துல தடிப்பா இருந்துச்சு, என்னன்னு பார்த்தா அது ஒரு சாவி”

போட்டோவை கீழ வைச்சுட்டு எந்த ரூமோட சாவின்னு யோசிச்சேன். சட்டுன்னு ஒரு எண்ணம் கீழ சுவர் மாதிரி இங்கயும் இருக்கலாமோன்னு, தடவி பார்க்கும் போது அதே வித்தியாசம்.  லேசுல அதை திறக்கவே முடியலை. தள்ளிப் பார்த்தும் திறக்கலை உடைக்கணுமோன்னு கூட நினைச்சேன்”

கீழே இருந்து அதை மேல தள்ளணும் போல. நான் கீழே வைச்சிருந்த போட்டோ என் கால்ப்பட்டு பின்னாடி இடிச்சு விழுந்துச்சு. அப்போ நங்குன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. அதை வைச்சு தான் கண்டுப்பிடிச்சேன்”

நீங்க என்கிட்ட எல்லாமே சொல்லிட்டீங்களா??” என்றாள் அவன் மனைவி சந்தேகமாய்.

உன்கிட்ட மறைக்க எனக்கு எதுவுமே இல்லை சிமி. எனக்கு என்னமோ பாட்டி தான் எனக்கு உதவி பண்ணாங்கன்னு தோணிச்சு. பாட்டியோட போட்டோவுல கீழ ஒரு தேதி இருந்துச்சு. அது அவங்க பிறந்த தேதியா இல்லை இறந்த தேதியான்னு எனக்கு தெரியலை”

இதுல ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா. நான் புதையலை எடுத்த தேதியும் அந்த தேதியும் ஒண்ணு” என்று சொல்லவும் சினமிகா விழிவிரித்து பார்த்தாள் ஆச்சரியமாய்.

இப்படி கூட நடக்குமான்னு இருக்குங்க. கோவில்ல உங்க சித்தப்பா சொன்னதை கவனிச்சீங்களா. சொத்துக்காக கூடப்பிறந்தவங்களே அடிச்சுக்கிட்டாங்கலாம். ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சுன்னும் சொன்னாங்க”

ஹ்ம்ம் ஆமா”

இன்னொரு விஷயமும் அவங்க சொன்னாங்க. அவங்க கோவில் கட்டணும்ன்னு ஆசைப்பட்டாங்கலாம், தெரிஞ்சோ தெரியாமலோ அன்னைக்கு அந்த அமைச்சர்கிட்ட நீங்க கோவில் கட்டித் தரமுடியுமான்னு கேட்டீங்க ஏன்??”

தெரியலை”

தெரியும் உங்களுக்கு”

புதையல் எடுத்த அன்னைக்கு எனக்கு கனவு வந்திச்சு. எப்பவும் உனக்கு வர்ற கனவு எனக்கு அன்னைக்கு வந்துச்சு. பைரவர் தான் என்னை வழிநடத்திட்டு வந்து இந்த ரூம்ல பாட்டி முன்னாடி நிக்க வைச்சுட்டு என் பக்கத்துல நின்னுக்கிட்டார்” என்றவனது எண்ணத்தில் அந்த கனவு இன்னமும் பசுமையாய் ஞாபகத்தில் இருந்தது.

சினமிகா அவனருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், உதிரனும் தான். யாரோ அவனை உற்றுப்பார்க்கும் உணர்வு அவனுக்கு. கண் விழித்து பார்க்க பைரவர் நின்றிருந்தார். சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தான் அவன்.

அவர் முன்னே செல்ல இவனும் பின்னோடு சென்றான். படிகளில் ஏறிய பைரவர் அந்த அறையின் முன் நின்றார்.

Advertisement