Advertisement

34

வாங்க சார் உள்ளே, நேத்து போன் பண்ணது நீங்க தானே”

ஆமா சார் எல்லாத்தையும் கொண்டு வந்திட்டேன். என்னோட பிரஸ் மீடியா எல்லாரும் வந்திருக்காங்க”

ஹா… அவங்க எதுக்கு சார்?? நீங்க உங்களுக்கு எந்த விளம்பரமும் பிடிக்காதுன்னு நேத்து சொன்னீங்க”

இப்பவும் அதான் சொல்றேன் எனக்கு எந்த விளம்பரமும் பிடிக்காது. ஆனா இங்க ஒப்படைக்கப் போறது சின்ன பொருள் இல்லை எங்க பரம்பரை சொத்து அவங்க பாதுகாத்து வந்த புதையல்”

அதனால தான் அதை அறநிலையத்துறைகிட்ட ஒப்படைக்கவே வந்தோம். இது மொத்தமும் கோவில்கள் திருப்பணிக்காக செலவு செய்யணும்ன்னு கேட்டுக்கறேன்” என்றான்.

கலெக்டர் சார் வந்தாச்சா??”

இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திடுவாங்க”

ஓகே அப்போ அவர் வந்ததும் அவர் முன்னாடியே இதை கொடுத்திடறேன். என்கூட என்னோட சித்தப்பா வந்திருக்காரு, என்னோட மனைவி சினமிகா அவங்கப்பா எல்லாரும் வந்திருக்காங்க”

எதுக்கு சார் இவ்வளவு பேரு??”

உங்களை நம்பாம எல்லாம் இல்லை. அவங்க எல்லார் முன்னாடியும் கொடுக்கணும்ன்னு தோணிச்சு அதான்” என்றவன் எதிரில் நின்றிருந்தவரை ஆழ ஊன்றிப் பார்த்தான்.

என்னாச்சு சார் யாரும் வருவாங்கன்னு எதிர்பார்க்கறீங்களா??”

இல்… இல்லையே”

போன் போகலையா அவங்களுக்கு, பீப் சவுண்ட் மட்டும் வருது போல” என்றான் அவன்.

அதெல்லாம் இல்லை என்ன சார் நீங்க என்னையவே சந்தேகப்படுறீங்களா??”

சந்தேகம் எல்லாம் இல்லை தெளிவாவே தெரியும். நீங்க எதிர்பார்க்கற ஆளு இப்போ நேராவே வருவாங்க இங்க. அவங்களையும் சாட்சியாக்கி இதெல்லாம் அரசாங்கத்துக்கிட்ட இன்னைக்கு நான் ஒப்படைக்கறது உறுதி” என்றவன் அவ்வறையில் இருந்து வெளியே சென்றான்.

என்னங்க இவ்வளவு நேரம்??” என்றாள் சினமிகா.

கலெக்டர் வந்ததும் ஸ்டார்ட் பண்ணிடலாம்”

எதுக்கு எல்லாரும்”

எதையும் சரியா செஞ்சிடறது நல்லது. உள்ள இருக்கவர் மேல எனக்கு நம்பிக்கை இல்லை”

எப்படி சொல்றீங்க??”

நேத்து சித்தியோட வீட்டில நாம சொல்லிட்டு வந்ததை வைச்சு அவங்க ஏதோ கெஸ் பண்ணியிருக்காங்க. எப்படியோ நான் இங்க வந்ததை தெரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. இங்க இருக்கவரை கைக்குள்ள போட்டுக்கிட்டு இதெல்லாம் மொத்தமா எடுத்துக்க பிளான் பண்ணுறாங்கன்னு தோணிச்சு அதான்”

எவ்வளவு நேரமாகும்??” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வாசலில் அரவம் கேட்க இவர்கள் திரும்பி பார்த்தனர். கலெக்டர் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்.

உதிரன் அவரைப் பார்த்து புன்னகைக்க பதிலுக்கு சிரிப்பைக் கொடுத்தவர் நேரே உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் உதிரன் அழைக்கப்பட உள்ளே நுழைந்தான் அவன்.

இவர் தான் சார் உதிரன்” என்று அங்கிருந்த அதிகாரி இவனை அறிமுகப்படுத்த “ஹலோ உதிரன் எப்படி இருக்கீங்க” என்றார் கலெக்டர்.

நல்லா இருக்கேன் சார்”

ரொம்ப பெரிய விஷயம் சார் நீங்க பண்ணுறது. அதுவும் உங்க பரம்பரை சொத்து, வழி வழியா வந்த புதையலை கொடுக்கவும் ஒரு மனசு வேணும். அதுவும் வீட்டோட முதல் ஆண் வாரிசுக்கு தான் இதெல்லாம் சேரும்ன்னு எழுதி இருந்ததா சார் சொன்னார்”

இந்த சொத்துக்கான எல்லா ப்ரூப் உங்ககிட்ட இருக்கு தானே சார். எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்களா??”

எல்லாமே இருக்கு சார். அப்பா தாத்தான்னு அவங்க எழுதிய குறிப்புகளை முடிஞ்ச வரை எடுத்து வைச்சிருக்கேன். அதெல்லாம் வைச்சு தான் இதை வெளிய எடுக்கவே முடிஞ்சது” என்றான் அவன்.

ரொம்ப நல்லதுங்க. ஆனாலும் ஒரு விஷயம் சார். புதையல் எல்லாம் எடுக்கறதுக்கு முன்னாடி எப்பவும் அரசாங்கத்துக்கு சொல்லி அவங்க முன்னாடி தான் அதை எடுக்கணும்”

தப்பா எடுத்துக்காதீங்க சார், இதுல நீங்க எடுத்து வைச்சுட்டு கூட கொடுத்திருக்கலாம்ன்னு அவங்க நினைக்க ஒரு வாய்ப்பிருக்கு அதுக்கு தான் சார் சொன்னேன்” என்று அவர் சொல்லவும் உதிரன் சிரித்தான்.

எதுக்கு சார் சிரிக்கறீங்க??”

எங்கம்மா ஒண்ணு சொல்வாங்க சார் அடிக்கடி தானம் பண்ணுற மாட்டைத் தான் பல்லை பிடிச்சு பார்ப்பாங்கன்னு. அப்படித்தான் இருக்கு நீங்க சொல்றதும்”

நீங்க எனக்கு பாராட்டு விழா நடத்தணும்ன்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா இப்படி அசிங்கப்படுத்தி இருக்க வேணாம்” என்றான் சற்று காட்டமாகவே.

சார் நான் மேலிடம் என்ன சொல்வாங்களோ அதை சொன்னேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க சார்…” என்றார் அவர்.

கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன் வந்த வேலையை பார்க்கலாமா சார்” என்றவன் பிரஸ் மீடியாவை முன்னிறுத்தி அவன் கொண்டு வந்ததை அனைவர் முன்னும் பார்வைக்கு வைத்து பின் அதை கலெக்டர் முன்னிலையில் அறநிலையத்திடம் ஒப்படைத்தான்.

அவர்கள் காட்டிய கோப்புகளில் இவன் கையெழுத்திட்டு அவன் கொடுத்ததெல்லாம் வரிசைப்படுத்தி இருந்ததை சரிபார்த்து அதிலும் கையொப்பமிட்டான் அவன். ஆளுக்கொரு நகலை பரிமாறிக் கொண்டனர். 

வேலை முடித்து இவன் கிளம்ப மீண்டுமொரு பரபரப்பு அங்கு. லதா சரியாய் அங்கு வந்து சேர்ந்தார். “யாரைக் கேட்டு இதெல்லாம் நீ இங்க கொண்டு வந்தே, இதுக்காக நான் எத்தனை வருஷம் பாடுபட்டேன் தெரியுமா” என்று இவன் சட்டையை பிடித்துவிட அங்கிருந்த மீடியா அதை படம் பிடித்தது.

கையை எடுங்க” என்று சினமிகா அவரைப் பார்த்து கத்த அப்போதும் அவன் சட்டையின் பிடியை அவர் தளர்த்தவேயில்லை.

உள்ளிருந்து கலெக்டர் வேகமாக வந்தவர் “என்ன பிரச்சனை சார்??” என்க “சார் இவங்க அந்த சொத்தை அடைய ரொம்ப வருஷமா பிளான் பண்ணிட்டு இருந்தாங்க”

அவங்ககிட்ட இருந்து காப்பாத்தி தான் அதை நாங்க உங்ககிட்ட ஒப்படைச்சோம். அதுக்காக தான் அவங்க இவர் மேல கோபப்படுறாங்க. அவங்க மேல நான் கம்பிளைன்ட் கொடுக்கறேன் சார். என்ன செய்யணுமோ அதை செய்ங்க” என்றாள் சினமிகா.

சிமி அதெல்லாம் வேண்டாம்” என்றான் உதிரன்.

சார் நீங்க சொல்லுங்க நான் என்ன பண்ணணும்” என்றார் கலெக்டர்.

பரவாயில்லை அவங்களை விட்டிடுங்க. எனக்கு அவங்க எதிரியில்லை, இதுக்கு மேல அவங்க பிரச்சனை பண்ணா கண்டிப்பா உங்ககிட்ட சொல்றேன்” என்றான் அவன்.

சினமிகாவிற்கு என்றுமில்லாத கோபம் உதிரனின் மேல். அவனை திரும்பி முறைத்தவள் முறைத்தபடியே நின்றாள்.

சார் உங்ககிட்ட அறநிலையத்துறை அமைச்சர் பேசணும்ன்னு சொன்னார். நீங்க இருக்கீங்களான்னு பார்த்திட்டு போன் பண்றேன்னு சொன்னேன். பேசறீங்களா சார்”

என்கிட்ட பேசணுமா எதுக்காக சார்??”

டிவில இங்க நடந்தது லைவ் போயிருக்கும் போல சார். பேஸ்புக் லைவ்ல கூட யாரோ போட்டிருக்காங்க. அதை பார்த்திட்டு உங்ககிட்ட பேசணும்ன்னு ஆசைப்படுறார் சார்” என்று சொல்லி அவர் போனில் இருந்தே போன் செய்து அறநிலையத்துறை அமைச்சரிடம் உதிரனை பேச வைத்தார்.

மறுநாள் அவர் நேரிலேயே வந்து அவனை காண விரும்புவதாக சொல்லியிருந்தவர் சொன்னது போலவே அவனை வந்து பார்த்து மனதார பாராட்டி சென்றார்.

உதிரனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அவ்வூரில் உள்ள கோவில்களை சீரமைத்து தருவதாகச் சொன்னார். உதிரன் அவரிடம் மற்றொரு கோரிக்கை ஒன்றையும் வைத்தான். அது அவ்வூரில் கோவில் ஒன்று கட்டித்தருமாறு, அதைப்பற்றி மேலிடத்தில் பேசி பின் தகவல் சொல்வதாக சொல்லி சென்றிருந்தார் அவர்.

உதிரன் நிகழ்காலத்திற்கு வந்திருந்தான். மங்கையர்க்கரசியும் ராஜேஸ்வரியும் இன்னமும் அவன் மேல் கோபத்தில் தானிருந்தனர்.

சினமிகாவிற்கு இப்போது வரை அவன் மீது கோபம் தான். லதாவின் மீது அவன் எந்தவித கம்பிளைன்ட் கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டான் என்ற எண்ணம் இப்போது வரை அவளுக்கு உண்டு.

கோவிலில் இருந்து சினமிகாவின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்திருக்க அவளின் அன்னையும் தந்தையும் வந்திருந்தனர்.

என்னம்மா சினா வீடே கமகமங்குது??” என்றார் அவளின் தந்தை.

மாமா உங்க பொண்ணு என்னைக்கு புதுசா ஒரு ஸ்வீட் செஞ்சிருக்கா அதான் அப்படி”

என்னம்மா ஸ்வீட்??”

மேங்கோ கோவாப்பா”

புதுசா இருக்கே”

இருங்க எல்லாருக்கும் கொண்டு வர்றேன்” என்று உள்ளே சென்றவள் மற்றவர்கள் இனிப்பை தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்.

முதலில் உதிரனுக்கு கொடுத்துவிட்டு அவன் முகம் பார்த்திருந்தாள். “என்னை எதுக்கு பார்க்கறே?? அத்தை மாமா அம்மாக்கெல்லாம் கொடு” என்றான் அவன்.

பர்த்டே பேபி நீங்க தான், அதனால நீங்க தான் முதல்ல சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும்”

அவள் கொடுத்த இனிப்பை எடுத்து அவன் வாயில் போட அது அப்படியே கரைந்தது. மாம்பழ சுவையுடன் பால்கோவாவின் சுவையும் சேர்ந்து தொண்டை வரை இனித்தது அதன் சுவை.

அட்டகாசமா இருக்கு. இதையும் இனிமே நம்ம மெனுவில சேர்த்துக்கலாம் சிமி” என்றான் அவளிடம்.

அவள் மற்றவர்களுக்கும் கொடுக்க அவர்களும் நன்றாக இருப்பதாக கூறினார்கள். “ம்மா சினா ஸ்ரீவில்லிபுத்தூர்ல கடை ஒண்ணு வருது. அதை வாங்கி உங்களுக்கு கொடுக்கலாம்ன்னு எனக்கொரு எண்ணம்”

இப்போ எதுவும் எங்களால வாங்க முடியாதுப்பா வேண்டாம்” என்று அவரின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.

மாமா அந்த இடத்தை குத்தகைக்கு கொடுப்பாங்களான்னு கேளுங்க. நாம அங்க ஸ்வீட் ஸ்டால் வேணா போட்டிருலாம்” என்றான் உதிரன். அது சினமிகாவிற்கும் சரியென்றுப்பட்டது.

அப்போ என் பொண்ணுக்குன்னு நான் எதுவுமே செய்யக்கூடாதா??” என்றார் அவர்.

அப்பா எனக்கு நீங்க நெறையவே செஞ்சிருக்கீங்க. அது போதும் எனக்கு. இப்போ இவர் கேட்ட மாதிரி செய்ங்க”

அப்போ அந்த குத்தகை பணம் நான் தான் கொடுப்பேன்” என்று சிறுப்பிள்ளை போல் அடம் பிடித்தார்.

மாமா அதெல்லாம் வேண்டாம்”

அது உங்க பிறந்த நாளைக்கு நான் கொடுக்கறேன்னு நினைச்சுக்கோங்க. உங்கப்பா கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா” என்றுவிட சீதாவும் “அவர் அவ்வளவு தூரம் சொல்றார்ல நீங்க ரெண்டு பேரும் ஏன் பிடிவாதம் பிடிக்கறீங்க” என்று சொல்ல ஒருவழியாய் சம்மத்தித்தனர் கணவனும் மனைவியும்.

அவர்கள் கிளம்பிவிட சீதா தன்னறைக்கு சென்றுவிட்டார். உதிரனும் அவர்கள் அறையில் இருந்தான். சினமிகா அப்போது தான் அறைக்குள் நுழைந்தாள்.

உட்காரு” என்றவன் அவளை நோக்கி கையை நீட்ட கைக்கொடுத்தவள் அவனருகே வந்து அமர்ந்தாள்.

Advertisement