Advertisement

‘இவ என்ன சொல்ல வர்றா’ என்று அவர்கள் யோசிக்க “அத்தை இருக்க வரை இப்படித்தான் நடக்கும். நாம இப்படி தான் பூப்பறிச்சுட்டு உட்கார்ந்திருக்கணும்க்கா” என்றவள் குறிப்பை கொடுத்திருக்க மற்ற இருவரும் அதை தீவிரமாய் செயல்படுத்த முனைந்தனர்.
அன்று ஏகாதசி முத்துலட்சுமி ஒரு பொழுது மட்டுமே உணவருந்துவார். அவருக்கென்று தனியாகவே அன்று சமையல் நடக்கும். அதை பயன்படுத்திக்கொள்ள முயன்றார்கள் அவர்கள்.
அரளிவிதையை அரைத்து அவருக்கு கொடுக்கும் உணவு வகைகளில் அனைத்திலுமே கலந்திருந்தனர். பூஜை முடித்து வந்து அமர்ந்த முத்துலட்சுமிக்கு இலை போடப்பட்டது.
உணவை அவர்கள் வைத்திருக்க உள்ளிருந்து ஓடி வந்தார் சூர்யா. “அத்தை அதை சாப்பிட வேண்டாம்” என்று அவர் இலையில் பரிமாறியதை எடுத்துவிட “என்னாச்சு சூர்யா” என்றார் அவர்.
“சாப்பாட்டுல பல்லி விழுந்திருக்கு போல அத்தை. நம்ம வீட்டையே சுத்தி வருமே அந்த நாய் சாப்பாட்டுல வாயை வைச்சிடுச்சு போல. அதை சாப்பிட்டு அது வெளிய செத்து போச்சு அத்தை” என்றார் அவர் மற்றவர்களை ஒரு பார்வை பார்த்து.
“என்னம்மா சொல்றே??”
“இதென்ன நல்ல நாள்ல இப்படி நடக்குது. என் மனசுக்கு எதுவோ சரியாப்படலையே” என்றவரின் முகம் குழப்பத்தை தத்தெடுத்திருந்தது. “எங்கம்மா இருக்கு அந்த நாய்??”
“வெளிய இருக்கு அத்தை…” என்று அவள் சொல்லவும் இவர் எழுந்து வெளியே ஓடினார்.
“என் குடும்பத்தை காப்பாத்த நீ உயிரையே கொடுத்தியா பைரவா. நான் சாப்பிட்ட பிறகு என் குடும்பமே அந்த சாப்பாட்டை சாப்பிட்டிருக்குமே எங்களை காப்பாத்திட்ட பைரவா. இனிமே நீயும் எங்க குலசாமி தான் பைரவா”
“ஏதோ தெருவில போற நாய்ன்னு உன்னை நினைச்சுட்டேன் மன்னிச்சுடுப்பா” என்று கண்ணீர் உகுத்தார் அவர்.
ஒரு வாரம் ஓடியிருந்தது, கோவில் வேலைகளை தொடங்க வேண்டும் என்று நல்ல நாளை பார்க்கவும் ஜோசியம் பார்க்கவும் முத்துலட்சுமி தன் கணவருடன் முத்துசாமியின் மகனையும் அழைத்துக்கொண்டு அடுத்த ஊருக்கு சென்றிருந்தார்.
முத்துசாமியும் அவர் மனைவியும் கோவில் கட்ட கொடுத்திருந்த நிலத்தை பார்க்க சென்றிருந்தனர். அது தோப்பை ஒட்டிய இடம், தோப்பு, அங்கிருந்த வீடும் கூட அந்த நிலத்தின் ஒரு பகுதியில் தான் இருந்தது. அந்த தருணத்தை இந்திரா தனக்கு சாதகமாக்கிக் கொண்டிருந்தாள்.
முத்துலட்சுமியை சூர்யா காப்பாற்றியதில் மற்ற மூன்று மருமகள்களும் பயங்கர கடுப்பில் இருந்தனர். மறுநாள் சூர்யா தன் கணவருடன் மில்லுக்கு ஏதோவொரு வேலையாக சென்றிருக்க எப்போதும் போல் இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர்.
“நம்மளால எதுவும் செய்ய முடியாதுன்னு மறுபடியும் தெரிஞ்ச்சு போச்சு…” என்று இம்முறையும் பேச்சை இந்திரா தான் தொடங்கியிருந்தாள்.
“எனக்கும் அதான் புரியலை. அத்தைக்கு ஆயுசு கெட்டி போல அதான்…”
“செய்யறவங்களை எதுவும் செய்ய முடியாது. இனிமே செய்யவிடாமலே செஞ்சிட்டா…” என்று பொடி வைத்து பேசினாள் இந்திரா.
அது மற்ற இருவரையும் யோசிக்க வைக்க “அப்போ” என்று சாந்தா பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்திருந்தான் அவளின் கணவனும் பவானியின் கணவனும்.
அவர்கள் வரவும் இந்திரா அங்கிருந்து நகர்ந்தாள். அவர்கள் இருவரும் ஏதோ போல இருந்தனர். “என்னங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” என்றாள் பவானி தன் கணவனிடம்.
“என்னத்தை சொல்ல நாங்க என்ன ஒண்ணும் இல்லாமலா ஆகிட்டோம்” என்றான் அவன் மொட்டையாய்.
“என்ன சொல்றீங்க ஒண்ணும் புரியலையே”
“சாந்தா நீ சொன்னது சரி தான்” என்றான் இப்போது அவளின் கணவன் குமாரசாமி.
“என்ன சரின்னு சொல்லுங்க இப்படி பாதி பாதியா பேசினா எப்படி??” என்றாள் அவள்.
“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய அண்ணன் மேல தான் ரொம்பவும் பாசம். முதல்ல மில்லுக்கு பணத்தை கொடுத்தாங்க, அண்ணன் அதை வைச்சு புது மில்லு வாங்கிருச்சு”
“இப்போ கோவில் கட்டப் போறேன்னு சொல்லியிருக்கு. அதுக்கு இப்போ அவங்க நிலத்தை கொடுத்து இருக்காங்க. நாங்க கஷ்டப்பட்டு நிலத்துல எங்க உழைப்பை போடுறோம் ஒரு புண்ணியமும் இல்லை…”
“ஊரெல்லாம் அவனுக்கு தான் நல்ல பேரு. நாங்க உழைச்சு என்ன கிடைக்குது எங்களுக்கு. உங்களுக்கும் இதுவரைக்கும் பெரிசா எதுவும் செஞ்சதில்லை. உங்களுக்கு செய்யணும்ன்னு எங்களுக்கும் ஆசை தான் ஆனா முடியலையே” என்று தன் ஆதங்கத்தை இருவருமே வெளிப்படுத்தினர்.
“ஆமா பவானி அவன் சொன்னது தான் எனக்கும் தோணுச்சு. வர்ற வழியில மோகன் மாமாவை பார்த்தோம். அவரு வேற உங்கண்ணனை மாதிரி உங்களுக்கு பொழைக்க தெரியலையே”
“அப்படி இப்படின்னு ரொம்ப பேசிட்டாரு. அவன் பொறுத்து பொறுத்து பார்த்து அவர்கிட்ட சண்டையே போட்டான்”
“அவரு எங்கே இப்போ??”
“அம்மா தோப்புல இருக்காங்க அவங்ககிட்ட போய் பேசப்போறேன்னு போயிருக்கான்”
“பேசி என்னாகப் போகுது உங்கம்மாவும் அப்பாவும் பெரிய புள்ளைய தான் கொண்டாடுவாங்க. நமக்கும் நம்ம பிள்ளைகளுக்கும் எதுவும் மிஞ்சப் போறதில்லை”
“இப்படியே போனா அதுக்கு முடிவு தான் என்ன”
“நாம எல்லாம் ஒண்ணா நடுத்தெருவுல நிக்கறது தான்…”
“பவானி” என்று அதட்டினார் துரைசாமி.
“அக்கா சொல்றது தான் சரி. இப்படியே போனா நாளைக்கு அது தான் நடக்கும்”
“நாளைக்கு என்ன நடக்கும்ன்னு பேசுறதுக்கா உங்ககிட்ட சொன்னோம்”
“வேற எதுக்கு சொன்னீங்க??”
“நாமளும் எதாச்சும் பண்ணணும் அதுக்கு ஒரு வழியை சொல்லுங்க”
“உங்கண்ணனுக்கு இனிமே உங்கம்மா செய்யாம இருக்கணும்ன்னா அவங்களை தான் எதாச்சும் பண்ணணும்”
“என்னது!!” என்று அதிர்ந்தனர் அவர்கள் இருவரும்.
“எங்களுக்கு தெரியுங்க உங்களால அதெல்லாம் முடியாதுன்னு. போங்க போய் நீங்க அந்த நிலத்தை உழுங்க. அங்க இருக்க எருதுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை”
“உங்களை தேவைக்கு தான் உபயோகம் பண்ணிக்குவாங்க. உங்களுக்குன்னு ஒண்ணும் கொடுக்க மாட்டாங்க” என்று பெண்கள் இருவரும் மாற்றி மாற்றிப் பேச அது அவர்களை உசுப்பேற்றியது.
“இருந்தாலும் அண்ணனை போய்…”
“அவங்களை கொல்லவா சொன்னோம்”
“அப்போ என்ன சொன்னீங்க??”
“கொன்னா தான் பிரச்சனை இருக்காது. ஆனா அதை நாம செய்ய முடியுமா, என்ன இருந்தாலும் உங்க கூட பிறந்த அண்ணன் அவருக்கு தான் உங்க மேல பாசமில்லை. நீங்களும் அப்படியே இருப்பீங்களா என்ன” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேச அவர்களின் ஆத்திரம் தலைக்கேறியது.
மொத்தத்தில் முத்துசாமியின் குடும்பத்தை வேரறுப்பது என்ற முடிவிற்கு வந்திருந்தனர் அவர்கள். இதோ அதற்கான தருணமும் வந்திருந்தது.
நல்ல நாள் பார்க்க முத்துலட்சுமியும் சின்னசாமியும் தங்கள் மூத்த பேரனை அழைத்துக் கொண்டு சென்றிருக்க அந்த புறம் முத்துசாமியும் சூர்யாதேவியும் நிலத்தை பார்க்க சென்றிருந்தனர்.
இவர்கள் வரும் முன்னேயே அந்த வீட்டில் எண்ணெய்யை ஊற்றி வைத்திருந்தனர் அவர்கள். முத்துசாமியும் சூர்யாதேவியும் நிலத்தை சுற்றிப்பார்த்துவிட்டு ஓய்வெடுப்பதற்காய் வீட்டிற்குள் நுழைய அவர்கள் இரண்டாம் அடுக்கிற்குள் நுழையும் வரை பார்த்திருந்து வெளிக்கதவை அடைத்துவிட்டு தீப்பந்தத்தை அந்த வீட்டின் மேலே எறிந்திருந்தனர் அவர்கள்.
இதற்கிடையில் தான் நல்லவள் என்று நிரூபிப்பதற்காய் இந்திரா ஒரு வேலை செய்திருந்தாள். முத்துலட்சுமி இருந்த இடத்திற்கே தகவல் அனுப்பியிருந்தாள் இது போல முத்துசாமியையும் சூர்யா தேவியையும் கொல்ல ஏற்பாடு நடப்பதாய்.
விஷயத்தை கேள்விப்பட்டு அவர்கள் வரும் போது தான் அவர்கள் கண்ணாலேயே பார்த்திருந்தனர் தங்களின் மற்ற மகன்களும் மருமகள்களுமாக அந்த வீட்டை கொளுத்திவிட்டு அங்கிருந்து செல்வதை.
தங்களின் கண் முன்னேயே மூத்த மகனும் மருமகளும் எரிந்து சாம்பலாவதை. அவரின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது. அதில் கண்ணீர் மட்டுமல்ல கனலும் கூடி கண்கள் சிவப்பேறியது.
அதையே பார்த்திருந்தவருக்கு அந்த வீட்டை நோக்கிச் சென்ற கணவரை கவனிக்கவில்லை. அப்போது தான் அவர் அதை கவனிக்க காற்றில் கொழுந்துவிட்டு எறிந்த நெருப்பு அவர் கணவரையும் பற்றிக்கொள்ள பெரும் ஓலமெழுந்தது அவரிடத்தில். 
தன் பேரனின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தவர் கண்ணகியின் கோபத்தை கொண்டிருந்தார். தன் வீட்டை நோக்கி நடைப்போட்டார். கண்ணில் படும் எவரையும் எரித்துவிடும் தோற்றம் அவரிடத்தில்.
அவரின் எண்ணங்களில் இரண்டு நாட்கள் முன்பு சூர்யா தேவி சொன்னதே ஓடிக்கொண்டிருந்தது. வெளியே கல்லில் அரளிவிதை அரைத்து ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை பார்த்ததாகவும் அது சமையல் பாத்திரத்திற்கு பக்கத்தில் கொஞ்சம் கிடந்ததை பார்த்ததையும் சொல்லியிருந்தார்.
சாப்பாட்டை சாப்பிட்டு நாய் இறந்த பிறகு தான் அவர் அந்த இடத்தையே பார்த்திருந்தார். இந்திரா சுற்று முற்றும் பார்த்து பின்னால் அரளிவிதை அரைத்த இடத்தை சுத்தம் செய்ததை பார்த்தாக சொல்லியிருந்தார். அவள் தான் அதைச் செய்தாள் என்று உறுதியாக தெரியாது என்பதால் அப்போதைக்கு அதை பெரிது படுத்தியிருக்கவில்லை.
யோசித்தால் அவளின் வரவிற்கு பின்பே வீட்டில் அத்தனை பிரச்சனைகளும் துவங்கியிருக்கிறது என்பதை அப்பெண்மணி உணர்ந்துக் கொண்டார். எதையும் நேருக்கு நேராக துணிந்து பேசி தான் அவருக்கு வழக்கம்.
இப்படி முதுகுக்கு பின் குத்தும் வழக்கம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை. மூத்த மகனை கொன்றதால் மட்டுமே அவருக்கு இந்த கோபம் வந்திருக்கவில்லை. முத்துசாமி சேர்த்த அத்தனை சொத்துக்களிலும் தம்பிகளுக்கென்று ஒரு பங்கை அவர் பிரித்து வைத்திருந்தார்.
அதையறியாத மூடர்கள் இப்படி செய்தது தான் அவரை இன்னும் இன்னும் ஆத்திரம் கொள்ளச் செய்திருந்தது. கலைந்த தலையும் முகத்தில் ஆங்காங்கே பரவியிருந்த கரியுமாக அவர் வர அழுது (நடித்து) கொண்டு ஓடி வந்தார் இந்திரா.
“அத்தை சூர்யாக்காவும் மாமாவும் போன வீடு தீப்பிடிச்சு எரிஞ்சிடுச்சாமே. இப்போ தான் ஒருத்தர் அதை பார்த்துட்டு வந்து சொல்லிட்டு போறாரு அத்தை” என்று அவள் அழ அவளை துச்சமென பார்த்தார் அவர். ஒன்றும் பேசவில்லை அவளிடத்தில், அவளின் நீலிக்கண்ணீரை கண்டுக்கொண்டார் அவர். ‘எனக்கா தெரியாதுன்னு நினைச்சே’ என்ற பார்வை பார்த்து கடந்து சென்றார்.
வீட்டு வாயிலில் நின்றவர் “கொன்னுட்டீங்களேடா என் புள்ளையை கொன்னுட்டீங்களேடா…” என்று கத்த மற்ற அனைவரும் ஓடிவந்தனர். “என்னம்மா சொல்றீங்க யாரு கொன்னா??” என்று கேட்ட இளையமகனை ஓங்கி ஒரு அறைவிட்டார் அவர்.
“எல்லாரும் சேர்த்து என் புருஷன் புள்ளைன்னு மொத்தமா கொன்னுட்டீங்களேடா… கொன்னுட்டீங்களேடா பிள்ளைத்தாச்சி பொண்ணையும் சேர்த்து கொன்னுட்டீங்களேடா”
அப்போது சூர்யா மூன்றாவதாய் கருவுற்றிருந்தார். முத்துசாமியின் இரண்டாவது வாரிசான அவர்களின் பெண்ணையும் அவர்கள் அன்று நிலத்தை பார்க்க அழைத்துச் சென்றிருந்தனர்.
“உங்களுக்கு அவங்க என்னடா பாவம் பண்ணாங்க… கூடப்பிறந்தவன் நல்லா வந்தா மத்தவன் அதைப்பாத்து சந்தோசம் தான் படணுமே தவிர இப்படி பொறாமை பிடிச்சு அலையக் கூடாது…”
“உங்களை மட்டும் சொல்லி என்னாகப் போகுது. கேட்பார் பேச்சை கேட்டுட்டு நீங்க எதுக்காக இதெல்லாம் செஞ்சீங்களோ அது எதுவுமே உங்களுக்கு கிடைக்காதுடா, கிடைக்கவே கிடைக்காது”
“உங்களுக்குன்னு இருக்கறதும் உங்களை விட்டு போகும், உங்க வம்சம் தழைச்சு வளராது. அப்படியே வளர்ந்தாலும் நீங்க காசு பணத்துக்கு நாயா பேயாய் தான் நீங்க அலைவீங்க. இது என்னோட சாபம்” என்று ஆங்காரமாய் உரைத்தார் அவர்.
பத்திரகாளியே வந்து இறங்கினார் போன்று அவர் பேசிக் கொண்டிருந்தார். “இதையும் கேட்டுக்கோங்க இனி இந்த குடும்பத்தோட சொத்து மூத்த வாரிசுக்கு மட்டும் தான் போகும். முத்துசாமியோட கனவை யார் நினைவேத்துறாங்கலோ அன்னைக்கு தான் போகும் இந்த சாபம்…” என்றவர் தன் மூத்த பேரனை பார்த்தார் இப்போது.
அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு. விரித்த தலையோடே வீட்டிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். வெகு நேரம் கழித்து திரும்பி வந்தவரின் கையில் இருந்த சில பத்திரங்களை வெளியில் தனித்து நின்றிருந்த தன் மூத்தப் பேரனின் கையில் கொடுத்தார். “அம்மா” என்று வந்தார்கள் மகன்கள்.
“ஒரு அடி எடுத்து வைச்சாலும் உங்க அத்தனை பேரையும் நான் கொளுத்திடுவேன்” என்றவரின் மீது எண்ணெய் வாடை அடிப்பதை அப்போது தான் உணர்ந்தார்கள் அவர்கள்.
அங்கு வெந்நீர் வைக்க அடுப்பெரிந்துக் கொண்டிருக்க அதில் எரிந்துக் கொண்டிருந்த விறகை எடுத்து தன் மீது வைத்துக்கொண்டார் அவர்…

Advertisement