Advertisement

32
“இந்திரா எப்படியிருக்கே??” என்றாள் அவளை சில நாட்கள் கழித்து பார்த்த அவளின் தோழி.
“நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க??”
“ஹ்ம்ம் இருக்கேன்”
“ஆளு நல்லா பார்க்க பளபளன்னு ஆகிட்ட இந்திரா. காசு வந்தா அழகும் கூடிடும் போல…” என்று மற்றவளை புகழ்ந்து சொல்ல அதில் ஒரு மிடுக்கு வந்து அமர்ந்துக் கொண்டது இந்திராவினிடத்தில்.
“அப்படியா சொல்றே…”
“அப்படித்தான் இந்த ஊரே பேசிக்குது??”
“என்ன பேசுது??”
“உனக்கு வந்த அதிர்ஷ்டத்தை பத்தி தான் பேசுது”
“ஹ்ம்ம்”
“ஆனா இந்திரா மத்த மருமகளுங்களுக்கு இருக்கற மரியாதை உனக்கு இருக்க மாதிரி தெரியலையே” என்று அப்பெண் பேச இந்திராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“என்ன மரியாதை இல்லை எனக்கு புரியலையே”
“மத்த மூணு பேரும் நல்லா காசு பணம் உள்ளவங்க வேற வேற ஊர்ல இருந்து கல்யாணம் கட்டி வந்திருக்காங்க. முத்துலட்சுமி அம்மாக்கு அப்புறம் அவங்க பெரிய மருமகளைத் தான் எல்லாரும் நல்லவிதமா பேசுறாங்க…”
“என்ன சொல்ல வர்றேன்னு முழுசா சொல்லு அமுதா”
“என்னத்தை சொல்ல இந்திரா. நீ எங்கள்ள ஒருத்தியா அந்த வீட்டுக்கு போய்ட்டியாம், நல்ல விதமா சொல்ற அதே சனங்க தான் உனக்கு வந்த வாழ்வை பாரேன்னு பொறாமையில பொசுங்கறாங்க…”
அதை கேட்டு அவளின் முகத்தில் வன்மம் கூடியது. தன்னை மட்டுமே அனைவரும் உயர்வை பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியது அவளுக்குள்.
அன்றைய பத்திரப்பதிவை நிறுத்தி மற்றவைகள் தங்களுக்கு அடித்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்திருக்க முத்துலட்சுமி வந்த பின்னே நிலைமையே மாறிப் போனது. அதெல்லாம் கண் முன் நிழாலடியது அவளுக்கு.
———–
தன் மூத்த மகன் சொல்லி வீட்டிற்கு வந்திருந்தார் முத்துலட்சுமி. மருமகள்கள் நால்வரையும் அழைத்தார். “இங்க என்ன பிரச்சனை??” என்ற அவரின் ஆளுமையான குரலில் யார் சொல்வது என்று மற்ற மூன்று மருமகள்கள் தயங்கி நிற்க இந்திரா தான் பேசினாள்.
அவள் தான் தூண்டிவிட்டு அமைதியாக இருந்துக் கொண்டாளே, அந்த தைரியத்தில் அங்கு நடந்ததை அவளே அவரிடம் கூறினாள். அவளுக்கு எப்படியாவது முத்துலட்சுமியை தன் கைக்குள் போட்டுக்கொள்ளும் எண்ணம் தான்.
அதற்காக தான் அவரிடம் நல்லபிள்ளை போல அனைத்தும் சொல்லியிருந்தாள். அனுபவம் வாய்ந்த பெண்மணியாயிற்றே அவருக்கு தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று கணிக்க. தானாய் வந்து வாக்குமூலம் போல் சொல்லிக்கொண்டிருந்த இளைய மருமகளை பார்த்து ஒரு புண் சிரிப்பை உதிர்த்தார்.
இவளை பிறகு தான் பார்க்க வேண்டும். முதலில் பிரச்சனையை தீர்ப்போம் என்ற எண்ணத்தில் அவர் முதலில் அதை தீர்க்க வழி செய்தார். அவர் சற்று மெத்தனமாக இருந்துவிட்டார் இந்திராவின் விஷயத்தில். சின்னப்பெண் தானே சரி செய்துவிடலாம் என்ற நினைப்பில் இருந்துவிட்டார். 
“இந்த மாதிரி பிரச்சனை இதுநாள் வரைக்கும் வந்ததில்லையே” என்றவரின் பார்வை ஒவ்வொருவரையும் சந்தித்து இறுதியில் இந்திராவை தொட்டு நின்றது.
“அவன் தொழில் ஆரம்பிக்க பணம் கொடுத்தது நாங்க. மில் லாபத்துல போக ஆரம்பிச்சதும் அந்த பணத்தை முத்து எங்களுக்கு எப்பவோ திருப்பி கொடுத்திட்டான்”
“அவனோட உழைப்புல முயற்சியில இன்னொரு மில் ஆரம்பிக்கறான். அதை அவன் பொண்டாட்டி பேருல வாங்கறான். இதெப்படி தப்பாகும்” என்று அவர் கேட்க “காசை அவங்க எப்போ திருப்பி கொடுத்தாங்க…”
“அதை உங்க மாமா வருவாங்க அவங்ககிட்ட கேட்டுக்கோங்க…” என்று முடித்தார் அவர்.
அதற்கு மேல் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. அவர் காசை திருப்பி கொடுத்த பிறகு என்ன சொல்ல முடியும். அது அவர் காசு அவர் பணம் அதில் அவர் மனைவிக்கு நகை வாங்குவார், மில்லை கூட எழுதி வைப்பார். 
இதில் தாங்கள் குறுக்கே போக முடியாதே என்ற நினைப்பில் அமைதியாகிவிட்டனர். இந்திரா அப்படியிருக்கவில்லை, மாமியார் பிரச்சனையை தீர்க்க அப்படி சொல்லியிருக்கார் என்றே நினைத்தாள்.
மாமியாரின் பார்வை வேறு அவளை குற்றம் சொல்வது போல் இருந்ததை குறித்திருந்தாள். எப்படியாவது வேறு வகையில் தான் இதில் தலையிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். 
இதோ இப்போது அவள் தோழி வேறு உனக்கு முக்கியத்துவம் இல்லை என்று பேசவும் அவள் மனதில் இருந்த கங்கை ஊதிவிட்டார் போன்றானது அது.
மாமியாரை அப்புறப்படுத்திவிட்டால் மற்றவர்களை சுலபமாய் பிரித்துவிட முடியும் என்று அவளுக்கு தோன்றியிருக்க விபரீதமான முடிவொன்றை எடுத்திருந்தாள்.
முத்துலட்சுமி உயிருடன் இருக்கும் வரை தங்களுக்கென்று எந்த தனித்தன்மையும் இருக்காது, தாங்கள் தனித்து செயல்பட முடியாதென்பது அவளுக்கு புரிந்து போனது. அவள் மனதில் இருந்த விஷத்தை அவள் மற்ற இரு மருமகள்களுக்கு ஏற்றினாள்.
முத்துலட்சுமி, அவரின் கணவர் மற்றும் அவர்களின் மற்ற மூன்று பிள்ளைகளும் வயலுக்கும் தோப்பிற்குமாய் சென்றிருந்தனர். பிரச்சனை முடிந்ததால் முத்துசாமி தன் மனைவியை அழைத்துக்கொண்டு பத்திர பதிவு செய்ய சென்றிருந்தார்.
மற்ற மூன்று மருமகள்கள் மட்டுமே வீட்டிலிருந்தனர். ஆளுக்கொரு வேலையை பார்த்து கொண்டிருந்த மூவரின் முகத்திலும் மருத்திற்கும் சிரிப்பில்லை.
“இன்னைக்கு பத்திரபதிவு” என்று ஆரம்பித்தாள் இந்திரா.
“அது தான் எனக்கும் ஆறவே மாட்டேங்குது…” என்றாள் இரண்டாமவள் பவானி.
“இதுக்கு மேல நாம இதுல தலையிடவே முடியாது. அதான் அவங்க காசை திருப்பி கொடுத்திட்டாங்கன்னு அத்தையே சொல்றாங்களே” என்றாள் மூன்றமவளான சாந்தா.
“அது நம்புற மாதிரியா இருக்கு??” என்று சந்தேகத்தை கிளப்பி விட்டாள் இந்திரா.
“எது எப்படி இருந்தாலும் இனிமே இதை நாம பேசவே முடியாது” என்றாள் பவானி.
“நம்ம இப்படியே இருந்தா நமக்குன்னு நாளைக்கு எதுவுமே இருக்காதேக்கா. பெரிய மாமாவை பாருங்க அக்கா மேல எவ்வளவு அன்பிருந்தா அவங்க பேர்ல மில்லை ஆரம்பிக்கறாங்க”
“ஏன் நம்ம மாமனாரை எடுத்துக்கோங்க. அவங்க வாங்கின நிலமெல்லாம் அத்தை பேருல தானே இருக்கு. நமக்கு தான் அந்த கொடுப்பினை எல்லாம் இல்லை” என்றாள் இந்திரா.
“உனக்கென்னம்மா உன் புருஷன் ஒண்ணுமில்லாத உன்னை விரும்பி கட்டிக்கிட்டான். எம்புட்டு ஆசை உன் மேல இருந்தா கட்டியிருப்பாங்க…” என்று சாந்தா சமயத்தில் இந்திராவின் மீது இருந்த பொருமலை வெளியேற்றிவிட்டார்.
அது இந்திராவை நல்ல விதத்தில் யோசிக்க விடாது ‘என்னையா குத்தி காட்டுறே, உனக்கும் ஒரு நாள் ஆப்பு வைக்குறேன்டி’ என்று கறுவிக்கொண்டாள்.
“ஆமா சாந்தா நீ சொல்றது சரி தான். பார்க்கப் போனா உன் புருஷனையும் என் புருஷனையும் தான் எதுலயும் சேர்த்துக்கவே முடியாது” என்றாள் பவானி.
வெளியில் சிரிப்பது போல காட்டிக்கொண்டாலும் அந்த குத்தல் தனக்கானது என்பதை உணர்ந்திருந்தாள் இந்திரா. அந்த நொடி அவளால் எதுவும் பேச முடியாது அமைதி காத்தாள்.
மாதங்கள் மெல்ல உருண்டோடியது, அவர்களின் மனங்களில் தீய எண்ணங்களும் வேரூன்றிப் போனது.
புதிதாய் ஆரம்பித்த மில் முன்பிருந்ததை விட பெரும் வளர்ச்சி கண்டது. லாபம் அதிகரித்திருக்க அதை மனைவி மக்களுக்கு முத்துசாமி செய்ய நினைத்திருக்க அவர் மனைவியோ சூர்யாவோ வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
“ஏன் சூர்யா வேணாங்கறே?? இப்போதைக்கு ஆம்பிளை பிள்ளைங்க தானே அதுனால வேணாங்கறியா. நாளைப்பின்ன உனக்கு பொம்பிளை பிள்ளை பிறந்தா தேவைப்படும், அவன் செய்யறேன்னு சொல்றதை வேண்டாம்ன்னு சொல்லாத” என்றார் முத்துலட்சுமி.
‘இந்தம்மாவுக்கு மூத்தபிள்ளையும் அந்த மருமகளும் தான் கண்ணுக்கு தெரியுமா எங்களை எல்லாம் கண்ணுக்கே தெரியாதா’ என்று மற்ற மருமகள்கள் புலம்பினர்.
“இல்லைத்தை இப்போ எதுவும் வேணாம். எனக்கு ஒரு விஷயம் தோணுது அதை செய்யலாம்ன்னு”
“சொல்லும்மா”
“என்னன்னு சொல்லு சூர்யா செஞ்சிடலாம்” என்று முத்துசாமியும் சொல்ல சூர்யா அதை சொல்ல ஆரம்பித்தார்.
“நாம கோவில் திருப்பணிக்கு இந்த பணத்தை உபயோகப்படுத்தலாமே. அப்புறம்…”
“அப்புறமென்னம்மா” என்று அங்கு வந்தார் சின்னசாமி.
“வாங்க மாமா”
“என்னமோ சொல்லிட்டு இருந்தியே என்னம்மா??”
“ஒண்ணுமில்லை மாமா”
“நீங்க பேசிட்டு இருந்ததெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். மேல என்னன்னு சொல்லும்மா” என்றார் அவர். ராமசாமியை தவிர மற்ற மகன்களும் அங்கு தானிருந்தனர். 
“நம்ம கோவில் ஒண்ணு கட்டலாமா??”
“இது எங்களுக்கு தோணாம போய்டுச்சே” என்ற முத்துலட்சுமி “தாராளமா பண்ணலாம்மா” என்றார்.
“என்னங்க நீங்க என்ன சொல்றீங்க??”
“கண்டிப்பா செய்யலாம்” என்றார் அவரும்.
அவர்கள் அடுத்து இடத்தை பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்க முத்துலட்சுமி தன் தாய் வீட்டு சீதனமாக அவருக்கு வந்திருந்த ஒரு இடத்தை கோவிலுக்கு கொடுப்பதாக சொல்லிவிட்டார்.
மற்ற திருப்பணிகளை சூர்யாதேவி சொன்னது போல முத்துசாமி செய்யவதாக ஏகமனதாக பேசி முடித்தனர்.
தாய் அவரின் பெயரில் இருந்த சொத்தை கோவிலுக்கு கொடுப்பதாகச் சொன்னதும் மற்ற இரு மகன்களுக்கு அதில் விருப்பமில்லாது போனது. அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்க முத்துலட்சுமியின் முடிவை யாராலும் மாற்ற முடியவில்லை.
அதே பொருமலுடன் மற்ற மூன்று மருமகளும் இருந்தனர். வீட்டின் பின்னால் இருந்த செடியில் பூப்பறித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்திரா அங்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தாள். “ஏன்கா நம்மால எதுவுமே செய்ய முடியலையே”
“முதல்ல பணத்தை கொடுத்தாங்க, இப்போ எல்லாருக்கும் பங்கு வர வேண்டிய இடத்தையும் கொடுத்திட்டாங்க. நமக்கு போகத் தானேக்கா மத்த எல்லாத்துக்கும். ஏன்கா இவங்க இப்படி பண்றாங்க” என்றார் சாந்தா.
“எனக்கும் என்ன பண்ணன்னு தெரியலை. எதுக்கும் கேள்வி கேட்காத என் புருஷனே கேட்டுட்டார் எதுக்கு இதெல்லாம்ன்னு. அது அவங்க பேர்ல இருக்கறதை அது பத்தி முடிவெடுக்க அவளுக்கு மட்டும் தான் உரிமையிருக்குன்னு சொல்லிட்டாங்களே என்ன செய்ய”
“நம்மால எனக்கா செய்ய முடியும்” என்று தன் கையை விரித்து காண்பித்தாள் இந்திரா.
அதில் அரளி விதை இருந்தது. மற்ற இரு மருமகள்களும் சாமிக்கு தொடுக்க பூப்பறித்துக் கொண்டிருக்க இவள் விதையை பறித்திருந்தாள்.

Advertisement