Advertisement

31
திருமணத்திற்கு வந்திருந்த சந்திரா தங்கையின் பேச்சில் மனமுடைந்து சாப்பிடாமலே அங்கிருந்து கிளம்ப எங்கிருந்தோ வந்தார் முத்துலட்சுமி.
“என்னம்மா எங்கே கிளம்பிட்டே??”
“கல்யாணம் முடிஞ்சிருச்சுல்லம்மா அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். பாட்டி வீட்டில தனியா இருப்பாங்க, நான் போனா தான் அவங்களை கவனிக்க முடியும்”
“அவங்களையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம்லம்மா”
“அவங்களுக்கு கண்ணு சரியா தெரியலை. அதான் விட்டுட்டு வந்தோம்மா…”
“சரி சரி நான் வேலுகிட்ட சொல்றேன். இன்னைக்கு நீ எந்த சமையலும் செய்ய வேணாம் இங்க இருந்தே சாப்பாடு எடுத்திட்டு போ. கொஞ்சம் உட்காரு நான் கொண்டு வரச்சொல்றேன்”
“அதெல்லாம் வேணாம்மா மாமா வைவாங்க…”
“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நான் பேசிக்கறேன்ம்மா, ஆமா நீங்க சாப்பிட்டாச்சா” என்றார் அவளிடம்.
“இல்லம்மா நானும் வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன் நேரமாகிட்டு”
“நல்லா சொன்னே போ, கல்யாண வீட்டுக்கு வந்திட்டு யாராச்சும் சாப்பிடாம போவாங்களா. அதும் உன் சொந்த தங்கச்சி கல்யாணம் நீ போயிடுவியா, கூடவே இருந்து எல்லாமே நீதானே பார்க்கணும்” என்றார் அவர்.
மற்றவளோ அவரின் முன்னே தங்கையை விட்டுக்கொடுக்க முடியாமல் சிரித்து மழுப்பினாள். அவளுக்கு அங்கே இருப்பே கொள்ளவில்லை. தான் தூக்கி வளர்ந்த தங்கை தன்னை தூக்கியெறிந்து பேசியதை அவளால் இன்னமும் நம்பமுடியவில்லை. தங்கைக்கு பணம் கண்ணை மறைக்கிறது என்பது மட்டும் உறுதியாய் புரிந்தது அவளுக்கு.                                       
“ஏன்மா சந்திரா நீ சாப்பிட்டு முடிச்சதும் உன் புருஷன் புள்ளைங்களோட என்னை வந்து பாரும்மா… நீ பாட்டுக்கு கிளம்பி போய்டாத, என்னை பார்த்திட்டு தான் போகணும்” என்றுவிட்டு முத்துலட்சுமி நகர்ந்தார்.
சந்திரா சாப்பிட்டு முடித்ததும் தன் கணவர் குழந்தையுடன் முத்துலட்சுமியை தேட ராமசாமியுடன் அமர்ந்திருந்த இந்திரா அவளைப் பார்த்தாள்.
‘இவ இன்னும் வீட்டுக்கு கிளம்பலியா, வீட்டுக்குள்ள எதுக்கு இப்போ இவ வர்றா?? சும்மாவே இவளுக்கு என்னைப் பார்த்து பொறாமை, இப்போ வீட்டை வேற பார்த்தா அவ்வளவு தான் பொறாமையில பொசுங்கிடுவா’ என்று எண்ணிக்கொண்டே எழுந்து நின்றாள்.
“என்னாச்சு இந்து??” என்றான் ராமசாமி.
“இல்லை அக்கா…”
“போ… போய் பேசிட்டு வா…” என்று அவன் அனுமதி கொடுக்க இவள் அவளை நோக்கி வந்தாள்.
“இன்னுமா நீங்க கிளம்பலை??” என்று அவள் கேட்ட தினுசில் சந்திராவின் கணவனுக்கு கோபம் வந்தது.
“சந்திரா” என்றான் அழுத்தமான பார்வையுடன்.
“இங்க உள்ள எல்லாம் உன்னை யாரு வரச்சொன்னது??” என்று அவள் கேட்க “நான் தான்மா வரச்சொன்னேன், என்ன பேசிட்டு இருக்கீங்க அக்காவும் தங்கையும்” என்றவாறே முத்துலட்சுமி வந்தார் அங்கு.
சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக்கொண்ட இந்திரா “இல்லைத்தை கிளம்பறேன்னு சொன்னாங்க, அதான் பேசிட்டு இருந்தேன்” என்று மழுப்பினாள்.
“நான் தான் கொஞ்ச நேரம் இருக்கச் சொன்னேன்” என்றவர் தன் கணவர் சின்னசாமியை அழைத்தார். அவர் வரவும் இருவருமாக சேர்ந்து ஒரு தாம்பாளத்தட்டில் அவர்களுக்கு துணிமணிகளை வைத்து கொடுத்தனர்.
“அம்மா இதெல்லாம் எதுக்கு??” என்றாள் சந்திரா.
“நீ இந்திராவுக்கு அக்கா மத்தவங்களுக்கு கொடுக்கற மாதிரி உனக்கு கொடுக்க முடியுமா. அதான்மா நாங்க கொடுக்கறோம்” என்றார் அவர்.
இந்திராவிற்கு அதைக்கண்டு காந்தினாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் புன்னகை முகம் காட்டி நின்றாள்.
“வாங்கிக்கோக்கா இதெல்லாம் யாரு கொடுப்பாங்க சொல்லு. இந்த மாதிரி நல்ல துணியெல்லாம் எடுத்துக்கொடுக்கவும் ஒரு மனசு வேணும்ல” என்று இந்திரா சொல்ல முகம் சுளித்தார் முத்துலட்சுமி.
“ஏன் இந்திரா அவங்களால நல்ல துணி எடுக்க முடியாதா என்ன. இது அவங்களுக்கு செய்யற மரியாதை…” என்று கண்டிப்போடு சொல்ல வாயை மூடிக்கொண்டாள் அவள்.
அவர்களுக்கு அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருக்க ஒருவாறு கிளம்பிவிட்டாள் சந்திரா. செல்லும் முன் “உன்கிட்ட எதுவும் பேசக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா சொல்லாம இருக்க முடியலை”
“உனக்கு நல்ல மாமியார் கிடைச்சு இருக்காங்க. நல்லவிதமா பொழைக்கிற வழியை பாரு” என்றாள் அவள் தங்கையிடம்.
“உன் அறிவுரைக்கு ரொம்ப நன்றி நீ கிளம்பு” என்றாள் தங்கை முகத்தில் அடித்தது போல்.
உடன்பிறந்த தமக்கையையே மதிக்காதவள் பெற்ற தகப்பனை சுத்தமாய் மதிக்கவில்லை. அவர் வந்தாரா சென்றாரா என்று கூட அவள் கவலைப்படவில்லை. மகளின் திருமணம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார் அவர். சந்திரா தான் வீட்டிற்கு சென்று அவரை தன்னுடன் அழைத்து சென்றாள்.
இந்திரா முழு அலங்காரத்துடன் தயாராகி இருந்தாள். ராமசாமியின் அறைக்கு அவளை கையில் பால் சொம்புடன் அனுப்பி வைத்தனர்.
ஒருவித படபடப்புடன் அவள் அறைக்கதவை திறக்க அசந்து போய் நின்றுவிட்டாள் அங்கேயே. மனைவியின் மலைத்த தோற்றத்தை கண்டு ராமசாமியே எழுந்து வந்து கதவை அடைத்துவிட்டு அவளை அழைத்துச் சென்றான்.
அழகிய வேலைப்பாடமைந்த அந்த பெரிய கட்டில் அறையின் நடுவில் வீற்றிருந்தது. கட்டிலை சுற்றிலும் பூக்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.
இந்திராவின் கண்கள் அறையையே சுற்றிசுற்றி வந்தது. அந்த அறையின் கால்வாசி தான் இருக்கும் அவளின் மொத்த வீடும். 
“என்ன இந்து பார்க்கறே??”
“எவ்வளவு பெரிய அறை!!”
“இதைவிட அம்மா அப்பாவோட அறை பெரிசு”
“வயசானவங்களுக்கு எதுக்கு அவ்வளவு பெரிய அறை,” என்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்தாள் அவள்.
“இப்படியெல்லாம் இனிமே கேட்டு வைக்காதே சரியா” என்றவனின் கரம் அவளின் வலக்கரத்துடன் பின்னிப் பிணைந்தது.
“பாலு” என்று ஞாபகம் செய்தாள் அவள்.
“கொடு” என்றவனுக்கு ஒரு கோப்பையில் பாலை ஊற்றிக்கொடுக்க அவன் குடித்துவிட்டு அவளின் புறம் நீட்டினான், அவளும் குடித்து முடித்து அவனருகே வந்து அமர அவள் கையருகில் தன் கரத்தை வைத்துப் பார்த்தான்.
“நீ தான் எவ்வளவு வெள்ளை” என்றான் சிலாகித்து.
“எங்கம்மா கலரு” என்றாள் அவள் வெட்கத்துடன்.
அவன் அவள் கன்னத்தை மெதுவாய் கிள்ள சிவந்தது அவளின் கன்னம். “எப்படி சிவக்குது??” என்று அதற்கும் சிலாகிப்பு தான் அவனிடத்தில்.
ராமசாமிக்கும் இந்திராவிற்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் சென்றிருந்தது. இந்திரா அந்த வீட்டுடன் நன்றாகவே சேர்ந்துக் கொண்டாள். ஒரு படி மேலே போய் அதிகாரமாய் தான் தன்னை காட்டிக்கொண்டாள் அவள்.
வேலையாட்களிடத்தில் அவளின் அதிகாரம் தூள் பறக்கும். மற்ற மருமகள்களின் முன்னே கூட அவள் தன்னை பெருமையாய் தான் காட்டிக்கொண்டாள்.
அவள் சற்று அடங்கியிருப்பது முத்துலட்சுமியின் முன்னே தான். இந்த நேரத்தில் தான் முத்துசாமியின் மில் பெரிதாய் வளர்ந்தது.
அவர் பக்கத்து ஊரில் இன்னொரு மில் ஆரம்பிப்பதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தார். மற்ற அண்ணன் தம்பிகள் இன்னமும் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து அவர் விலகி மில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது இந்திராவின் கண்களை உறுத்தியது.
முதல் நாள்தான் மில்லில் நல்ல லாபம் என்று சொன்ன முத்துசாமி அவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நகை வாங்கி பரிசளித்திருந்தார்.
அதைப் பார்த்த மற்ற மருமகள்களின் கண்களில் பொறாமை என்றால் இந்திராவிற்கு அந்த பொறாமை பெரும் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது.
அதை வைத்தே அவர் மற்ற மருமகளின் மனதில் விஷத்தை விதைத்தாள். “ஏன்கா பெரிய மாமா மில்லுல நல்ல லாபம் போல”
“ஹ்ம்ம் ஆமா, அவர் படிச்சிருக்காரு மில்லு ஆரம்பிச்சு நல்லா நடந்துறாரு. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்” என்று அங்கலாய்த்தார் இரண்டாம் மருமகள்.
“படிச்சா மட்டும் போதுமா என்ன?? படிப்பை வைச்சு மில் ஆரம்பிக்க முடியாதுல. காசு இருந்தா தானே மில்லு ஆரம்பிக்க முடியும்”
“ஆமா சும்மா எப்படி ஆரம்பிக்க முடியும். மில்லு ஆரம்பிக்க மாமா தானே காசு கொடுத்தாங்க…”
“இதென்னக்கா அநியாயம் அவங்க பெரிய மாமாக்கு மட்டும் மில்லு ஆரம்பிக்க காசு கொடுத்திருக்காங்க. அப்போ சின்ன மாமாவுக்கெல்லாம் காசு கொடுக்கலையா??” என்று அவள் தூபம் போட அது சரியாய் வேலை செய்தது.
மூன்றாம் மருமகள் சற்று தெளிவு “அவருக்கு மில் ஆரம்பிக்க காசு கொடுத்தாங்க. நமக்கு தான் நிலம் இருக்கே, அதுல விவசாயம் பார்த்திட்டு தானே இருக்கோம்”
“ஹான் நீங்க சரியா தான்க்கா சொல்றீங்க. நமக்கு ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் பங்கு இருக்கற நிலத்தை தானே கொடுத்து இருக்காங்க. நீங்க சொல்றது சரி தான்…” என்று அவள் சொல்ல எதுவோ புரிந்தது போல இருந்தது மற்ற மருமகள்களுக்கு.
“இந்திரா சொல்றது சரி தானேக்கா. இவங்க உழுற நிலம் எல்லாருக்கும் பங்கு வரும் தானே. ஆனா மில்லு அப்படியில்லையில, அது அவங்களுக்கு மட்டும் தானே உரிமையாகும்” என்று மூன்றாமவள் சொல்ல இரண்டாமவளும் அதை ஆமோதித்தாள்.
இந்திராவின் முகத்தில் திருப்தி ஓடியது. இனி தான் இதில் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதை மற்ற இருவருமே பார்த்துக் கொள்வர் எப்படியும் வீட்டில் இதற்காய் ஒரு சண்டை பிறக்கும் என்று காத்திருந்தாள் அவள்.
அவள் எதிர்பார்த்த அந்நாளும் விரைவிலேயே வந்தது. புது மில்லை தன் மனைவியின் பெயரில் வாங்க முத்துசாமி தன் மனைவியை தயாராய் இருக்குமாறு காலையிலேயே சொல்லிவிட்டு தான் வெளியில் சென்றிருந்தார்.
அதற்குள் தான் வீட்டில் அக்கலவரம் வெடித்தது. முத்துலட்சுமியும் தன் கணவர் மற்ற மகன்களுடன் வயலுக்கு சென்றிருந்தார். அன்று அறுவடை நாள் என்பதால் வேலை அதிகமிருக்க அங்கிருந்தனர் அவர்கள்.
மூத்த மருமகளும் முத்துசாமியின் மனைவியுமான சூர்யாதேவி பத்திரப்பதிவு செய்ய கணவர் அழைக்க வருவாரே என்று தயாராகிக் கொண்டிருந்தார். மற்ற மூன்று மருமகள்களும் சமையலை முடித்து அப்போது தான் வந்து வராந்தாவில் அமர சூர்யாதேவி தயாராகி வெளியில் வந்தார்.
“என்னக்கா வெளிய கிளம்பிட்டீங்க போல” என்று ஆரம்பித்தது இந்திராவே தான்.
“ஹ்ம்ம் ஆமா இந்திரா உங்க மாமா கிளம்பி இருக்க சொன்னாங்க. மில்லு என் பேருல தானே வாங்குறாங்க அதுக்கு தான்” என்றார் அவர் வெள்ளந்தியாய்.
“யார் வீட்டு பணத்தை எடுத்து யாரு மில்லு வாங்குறது” என்று முணுமுணுத்தாள் மூன்றாமவர் குமாரசாமியின் மனைவி சாந்தா.
“என்ன சொன்னே சாந்தா என்ன பேச்சு இதெல்லாம். யார் பணத்தை நாங்க எடுத்தோம், நீ என்ன பேசறேன்னு புரிஞ்சு தான் பேசறியா”
“அவ எல்லாம் புரிஞ்சுதான்க்கா சொன்னா. உங்களுக்கு தான் எதுவும் புரியலை” என்றது இரண்டாமவர் துரைசாமியின் மனைவி பவானி.
“என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க”
“என்ன இஷ்டத்துக்கு பேசுறோமா. நாங்க ஒண்ணும் அப்படி பேசலை இங்க என்ன அநியாயம் நடக்குதோ அதைத்தான் பேசுறோம்”
“இங்க அப்படி என்ன அநியாயம் நடந்து போச்சு அதை சொல்லுங்க முதல்ல”
“என்ன நடக்கலை பெரிய மாமாவை அவ்வளவு காசு கொட்டி வெளிநாடெல்லாம் அனுப்பி படிக்கவும் வைச்சாச்சு. அவரு மில்லு ஆரம்பிக்கணும்ன்னு சொல்வாராம், அதுக்கு மாமா தானே காசு கொடுத்தாங்க”
“அந்த மில்லுல லாபம் வந்தா மட்டும் நகைநட்டுன்னு உங்களுக்கு அள்ளி போடுவாராம். இப்போ அதுல வந்த வருமானத்தை வைச்சு புது மில்லு வாங்குவாராம். இதெல்லாம் உங்களுக்கு அநியாயமா தெரியலையா” என்றாள் பவானி.
“அக்கா என்னக்கா பேசறே நீ. புது மில்லுக்கு கூட நம்ம மாமனார் தான் காசு கொடுத்திருப்பாரு. அவங்க தான் லாபத்துல நகையெல்லாம் வாங்கி போட்டுட்டாங்களே அப்புறம் என்ன” என்றார் சாந்தா.
“சாந்தா, பவானி இதென்ன பேச்சு. நீங்க எப்பவும் இப்படி பேச மாட்டீங்களே, இதை நான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கலை. உங்க வீட்டுக்காரங்க எல்லாம் தான் வயல்ல வேலை பார்க்கறாங்களே அப்புறம் என்ன”
“அவங்களை படிக்க வேணாம்ன்னு யார் சொன்னது. இவங்க படிச்சாங்க அதனால வெளிநாடு அனுப்பினாங்க. மில்லு ஆரம்பிக்க அவங்க வேற யார்கிட்ட போய் காசு கேட்கணும்ன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க”
“உங்க வீட்டுக்காரங்களுக்கு பொழைப்புன்னு ஒண்ணு இருக்கு. அவங்க வயல்ல வேலை பார்க்க போய்ட்டாங்க. இவங்களுக்கு மில்லு ஆரம்பிக்கணும்ன்னு ஆசை, அதான் மாமா காசு கொடுத்தாங்கஇதுல என்ன தப்பிருக்கு”
“வயல் எல்லாருக்கும் பொது தானே சொல்லுங்கக்கா எல்லாருக்கும் பொது தானே. ஆனா மில்லு அப்படியா??” என்றாள் இரண்டாமவள்.
வாயடைத்துப் போனார் சூர்யா அவர்களின் கேள்வியில். அவர்கள் முட்டிக்கொள்வதை ஒருவித களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்திரா.
“இப்போ என்ன நாங்க மில்லு வைச்சிருக்க கூடாது அதானே…”  என்றார் சூர்யா.
“நாங்க ஒண்ணும் அப்படி சொல்லலை”
“அப்போ நீங்க பேசினதுக்கு என்ன அர்த்தம்??”
“சொத்து எல்லாம் தனித்தனியா இருந்தா இந்த பிரச்சனை வராதுன்னு அர்த்தம்”
“இதை எதுக்கு என்கிட்ட சொல்றீங்க, அத்தையும் மாமாவும் வருவாங்க அவங்ககிட்டவே பேசுங்க” என்ற சூர்யா அறைக்குள் சென்று முடங்கினார்.
சிறிது நேரத்தில் முத்துசாமி வீட்டிற்கு வர அவர் எவ்வளவு அழைத்தும் சூர்யா அவருடன் செல்ல மறுத்துவிட்டார். கணவரிடம் வீட்டில் நடந்ததை அவர் சொல்ல ‘இதென்ன புது பிரச்சனை, இதெற்கென்ன செய்ய’ என்று யோசித்தவர் நேராய் சென்று நின்றது தன் தாய் முத்துலட்சுமியின் முன்பு தான்.
——
“எங்கப்பா செத்ததுல எனக்கு சந்தேகமா இருக்கு. அதுக்கு நீங்க தான் காரணமோன்னு தோணுது… சொல்லுங்க அவரை என்ன பண்ணீங்க” என்றான் விதுரன்.
“விட்டா உன் குடும்பத்துல செத்தவங்க எல்லாத்துக்கு நான் தான் காரணம்ன்னு சொல்லுவ போல இருக்கே”
“அப்படியும் சொல்லலாம் தானே அதுல என்ன தப்பிருக்கு??”
“உங்கப்பன் செத்ததுல என்னால இல்லை”
“அப்போ யாரால??”
“அவங்க நேரடியா அதுக்கு காரணமில்லைங்க” என்றவாறே உள்ளே வந்திருந்தாள் சினமிகா. விதுரன் தான் அங்கு கிளம்பி வருவதற்கு முன்பு சினமிகாவிற்கு அழைத்து விபரம் சொல்லியிருந்தான் அங்கு வருவதைப் பற்றி.
முதலில் அவன் தங்கையை அழைத்துக் கொண்டு வந்திருக்க இதோ சினமிகாவும் வந்திருந்தாள் தன் மாமியாரையும் அழைத்துக் கொண்டு.
சினமிகாவின் பேச்சைக் கேட்டவர் “ஏய் உனக்கென்ன தெரியும்ன்னு உன் இஷ்டத்துக்கு பேசறே…”
“அவ பேசக்கூடாதுன்னா அப்போ நான் பேசலாமா லதா” என்றார் சீதாதேவி. அவரைக் கண்ட லதா பேச்சற்று போயிருக்க அபிஷேக்கும் எந்த உணர்ச்சியும் இன்றி இறுக்கமாய் நின்றிருந்தான்.
“என்ன லதா எதுவும் பேச மாட்டேங்குற??” என்றார் சீதா.
“உன்னை யாரு இங்க வரச்சொன்னது??” என்று பதிலுக்கு சீறினார் சீதாவின் உடன்பிறந்த தங்கை லதா.
“நான் வரக்கூடாது சரி நீ எதுக்கு என் வீட்டுக்கு வந்தே??”
“அது நான் வாழ வேண்டிய வீடு, என் வாழ்க்கையை நீ தானேடி தட்டிப்பறிச்ச” என்றார் லதா ஆங்காரமாய்.
“லதா நீ மாறவே மாட்டியா என்ன பேச்சு இதெல்லாம். உனக்கு எத்தனை தடவை சொல்றது நானும் அவரும் தான் விரும்பினோம்ன்னு”
“அவர் உன்கிட்ட வந்து கேட்டாரா நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு, என்கிட்ட தான்டி வந்து கேட்டாரு, நீ தான் குறுக்க வந்திட்டே, என் வாழ்க்கையை கெடுத்ததே நீ தான்… நீ தான் போ இங்க இருந்து போடி…” என்று ஆவேசமாய் கத்தினார் லதா.

Advertisement