Advertisement

30
“என்ன ரெண்டு பேரும் அப்படியே திகைச்சு போய் நிக்கறீங்க பதில் சொல்லுங்க”
“டேய் மாமா பையா நீயாச்சும் சொல்லுடா??” என்றான் உதிரன் அபிஷேக்கை பார்த்து.
இப்போது அபிஷேக்கின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி. கடைசியில் தான் யார் என்பது வரையிலும் கூட இவன் கண்டுப்பிடித்துவிட்டானே என்று தான் பார்த்தான் அவன் மற்றவனை.
“சித்தீ…” என்று உதிரன் ராகமாக இழுக்க “வாயை மூடு” என்றார் அவர்.
“அப்போ நீங்களே பேசுங்க சித்தீ…” என்றான் மீண்டும் ராகத்தோடு.
“இன்னொரு தரம் என்னை அப்படி கூப்பிடாதேடா”
“ஓ அப்போ சின்னம்மான்னு கூப்பிடவா??”
“பல்லை உடைப்பேன்”
“என்னடா மாமா பையா உன்னோட அத்தை இல்லையில்ல அம்மா வேணாம் வேணாம் எப்படி சொல்ல ஹான் அத்தையம்மான்னு சொல்லுவோமா…”
“உதிரா!!” என்று பல்லைக் கடித்தார் அவர்.
“உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா சின்ன அம்மா”
“வேணாம்டா நீ ரொம்ப பேசறே??”
“இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கலையே, அதுக்குள்ள வேணாம்ன்னு சொன்னா எப்படி??”
“நீ எதுவும் பேச வேண்டாம்”
“நான் நிறைய பேசுவேன் நீங்க அதை கேட்டு தான் ஆகணும். அப்புறம் ஒரு விஷயம் கேட்கணுமே இதென்ன எங்கம்மாவோட புடவை மாதிரியே இருக்கு… ரொம்ப பலமா தான் கெட்டப் போட்டிருக்கீங்க போல”
“உங்களுக்கு ஒரு கதை சொல்றேன் கேக்கறீங்களா??”
“ஒரு ஊர்ல ஒரு பூனை இருந்துச்சாம். அது ஒரு நாள் காட்டு பக்கம் போயிருக்கு அங்க புலியை பார்த்துச்சாம், ஹைய் இதைப் பாருடா நம்மளை மாதிரியே ஆனா உருவத்துல பெரிசா இருக்கு இந்த புலின்னு நினைச்சுச்சாம்”
“நாமளும் புலி மாதிரி தானே இருக்கோம். என்ன நமக்கு உடம்புல இந்த கோடு தானே இல்லை, அதை போட்டா நாமும் புலி தான்னு நினைச்சுக்கிட்டு அது சூடு போட்டுக்கிச்சாம்”
“எப்படி இருக்கு சின்னம்மா கதை?? நல்லாயிருக்கா சொல்லுங்க…”
“டேய் பேசாம வாயை மூடிட்டு போடா??” என்று எகிறிக்கொண்டு வந்தான் அபிஷேக்.
அவன் வாயிலேயே ஒன்று போட்டான் உதிரன். அதில் அவன் உதட்டின் ஓரம் ரத்தம் கசிய “உதிரா அவனைத் தொட்டே உன்னை கொன்னுடுவேன்டா” என்றார் அவனின் சின்னம்மா.
“எவ்வளவு பாசம் உங்களுக்கு என் மேலே அடிக்கிற அளவுக்கு. ஆனாலும் அவன் வளர்த்த பிள்ளைல அதான் அங்க பாசம் ஓவரோ, இல்லை வேற எதுவும் பிளானா. ஓ!! ஆமால என் தங்கச்சியை கரெக்ட் பண்ண சொல்லி அனுப்பின சிறப்பான வளர்ப்புத்தாயாச்சே நீங்க”
“உதிரா வேணாம் நிறுத்திக்கோ”
“ஹேய் என்ன நிறுத்தணும் சொல்லு என்ன நிறுத்தணும். நீயெல்லாம் ஒரு பொம்பளையே இல்லை நீ சொன்னா நான் கேட்கணுமா”
“எனக்கு உன்கிட்ட தெரிய வேண்டியது ஒண்ணு தான். அந்த புதையல் ரகசியம் உனக்கெப்படி தெரியும். என் குடும்பத்து சொத்து மேல உங்களுக்கு அப்படியென்ன ஆசை. சம்மந்தமே இல்லாத உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை??”
“என்னடா சம்மந்தம் இல்லை என்ன சம்மந்தம் இல்லை. நான் உனக்கு யார்ன்னு தெரிஞ்சு தானே வந்தே?? அப்புறம் என்ன??”
“அதனால தான் கேட்கறேன் உங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் இருக்கறது ஒரே ஒரு சம்மந்தம் தான். அந்த சம்மந்தத்தை வைச்சு எங்க குடும்பத்தையே ஆட்டி பார்த்து இருக்கீங்க. கொஞ்ச நஞ்சமல்ல நீங்க செஞ்சது…”
“என்ன ஆட்டி வைச்சேன். ஒண்ணுமே செய்யலையே நானு…”
“போதும் போதும் உங்க நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் வேணா சிபாரிசு பண்ணுறேன் போதுமா”
“போடா போ… நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா, போ என்ன பண்ண முடியும் உன்னால… என்ன வேணா பண்ணிக்கோ, எதுவும் செய்ய முடியாது உன்னால”
“உன் பொண்டாட்டி இல்லைன்னா நீ இப்போ இங்க வந்து நின்னிருப்பியா… போய் அவ பின்னாடி ஒளிஞ்சுக்கோடா…”
“என்ன தூண்டிவிட பாக்குறியா. அதெல்லாம் என்கிட்ட நடக்காது. ஆமா என் சிமி இல்லைன்னா எனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்காது தான் அதுக்கென்ன இப்போ. என் பொண்டாட்டி பின்னால நான் ஒளிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்ன”
“என் சிமி என்னை முன்னாடி நிக்க வைச்சு எனக்கு பின்னாடி உறுதுணையா நிக்கற. அதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை, பெருமையா தான் உணர்றேன். நீ பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
“உன் தங்கச்சி வாழ்க்கை கெட்டு போகக்கூடாதுன்னு நீ நினைக்கிற தானே”
“இவனை மாதிரி கேடு கெட்டவனை கட்டிக்கிட்டா தான் அவ வாழ்க்கை கெட்டு போகும். அவ பிரச்சனையை வைச்சே உங்க ரெண்டு பேரையும் உள்ளத்தள்ள என்னால முடியும் செய்யவா”
“எங்க செய்…”
“செய்ய மாட்டேன்னு நினைக்காதே??”
“நீங்கலாம் மான அவமானத்துக்கு பயந்தவங்கடா அந்த தைரியம் எல்லாம் உங்களுக்கு எப்பவும் வராது. ஒழுங்கா இங்க இருந்து கிளம்புற வழியை பாரு”
“எனக்கு அந்த மாதிரி சென்டிமென்ட் எல்லாம் கிடையாது. நீங்க இன்னும் பழைய காலமா இருப்பீங்க போல, காலம் மாறிடுச்சு. அவளை வைச்சே இவன் மேல கம்பிளைன்ட் கொடுக்க வைக்கவா”
“வைச்சுக்கோ, அப்பவும் உங்க மானம் தான் போகும். அவளோடே போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் போன் நம்பரோட நெட்ல வரும் அதுவும் பரவாயில்லைன்னா என்ன வேணா பண்ணிக்கோ” என்றார் அவர் வெறிப்பிடித்தவர் போல்.
——————
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மறுநாள் ராமசாமிக்கு திருமணம் அந்த பெரிய வீடும் வாழைமரம் கட்டி அலங்கார தோரணையுடன் கம்பீரமாய் வீற்றிருந்தது.
வீடு நிறைய ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ஊருக்கே துணிமணி எடுத்துக் கொடுத்திருந்தனர் திருமண விழாவிற்கென்று. அந்த வீட்டின் கடைசி திருமணம் என்பதால் ஊரையே அழைத்து விருந்து வைத்தனர் அவர்கள்.
ராமசாமி விரும்பிய பெண்ணையே மணமுடிக்க பெரியவர்கள் ஒப்புக்கொண்டு இதோ மணநாளும் வந்திருந்தது. வீட்டின் மற்ற மருமகள்களுக்கும் மகள்களுக்கும் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும் யாரும் எதிர்த்து எதுவும் பேசிவிடவில்லை.
வசதி குறைந்த வீட்டுப்பெண் தங்களுக்கு இணையா என்ற எண்ணம் அவர்கள் அனைவருக்கும் அதனாலேயே சிறு மனக்கசப்போடு இருந்தனர் அவர்கள்.
ராமசாமி கட்டினால் அந்த பெண்ணைத்தான் கட்டுவேன் இல்லையென்றால் செத்துவிடுவேன் என்று சொல்லியிருக்க முத்துலட்சுமியும் சின்னசாமி வேறு வழியின்றி ஒத்துக்கொண்டனர்.
முத்துலட்சுமிக்கு அந்தஸ்து பற்றிய கவலையெல்லாம் இல்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு அவர்களுக்கு சொத்து இருந்தது. அதை கட்டியாளவே ஏழு ஜென்மம் வேண்டும் என்னும் போதில் வீட்டிற்கு வரும் பெண் கொண்டு வந்து தான் ஆகப் போகிறதா என்ன என்ற மனோபாவம் அப்பெரியவர்கள் இருவருக்கும் உண்டு.
மற்ற பிள்ளைகளுக்கு நல்ல மாப்பிள்ளையாகவும் பெண்களாகவும் தேடினார்களே தவிர வசதியாக அவர்கள் தேடவில்லை. ஆனால் அமைந்தது வசதி கொண்டவர்களாக தான் இருந்தனர். நல்ல சம்மந்தம் என்று தான் முடித்து வைத்திருந்தனர் அவர்கள்.
முத்துலட்சுமிக்கு ஏனோ இந்த திருமணம் பேசியதில் இருந்தே மனதிற்கு ஒப்பவில்லை. மகனுக்காக என்று தான் பேசாமல் இருந்தார் அவர்.
பெண் நல்ல அழகி மற்ற மருமகள்களை விடவும் அழகாக நல்ல நிறமாக இருந்தாள். அதுவும் கூட மற்றவர்களுக்கு கொஞ்சம் அதிருப்தி தான். வருபவள் எப்படி இருப்பாளோ என்று. 
திருமண நாளும் விடிந்தது, ஊரார் கூடியிருக்க மணப்பெண் இந்திராவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார் ராமசாமி.
இத்தனை நாட்களாக இப்படியொரு தருணத்திற்காக தான் காத்திருந்தாள் இந்திரா. வாழ்ந்தால் இப்படியொரு வீட்டில் வாழ வேண்டும் என்பது அவளின் சிறுவயது கனவு.
அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கூரைவீட்டில் தான். அவள் தந்தையின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவள் தான் அவள். அவளின் அன்னையும் அவளை பெற்ற சில வருடங்களிலேயே தவறிவிட்டிருந்தார்.
அவளை வளர்த்தது மூத்த தாரத்தின் மகள் தான். அவளுக்கும் பதினாறு வயதிலேயே அவளின் தாய்மாமனை மணமுடித்து அவள் தந்தை அனுப்பிவிட இவள் பத்து வயதில் இருந்து தனித்து தான் வளர்ந்தாள்.
வெளியே செல்லும் தருவாயில் ராமசாமியின் வீட்டை கடந்து தான் செல்வாள். அப்போதிருந்தே அவள் மனதில் ஒரு எண்ணம் இது போல நல்ல வசதியான வீட்டில்  இருக்க வேண்டும் என்று. அந்த கனவு அவளறியாமலே நனவாக ஆரம்பித்தது அவளின் பதின்ம வயதில்.
அரும்பு மீசையுடன் வரப்பில் நின்று தன் அண்ணன்மார்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்த ராமசாமியின் பார்வை அவர்களின் வயலில் அறுப்பிற்காக வந்திருந்த இந்திராவின் மீது ஆர்வத்துடன் படிந்தது.
சுண்டினால் ரத்தம் வந்துவிடுமோ என்ற நிறத்தில் இருந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவளுக்கு தெரியவில்லை அவனின் பார்வை தன்னை தீண்டுவது. ஒரிரு மாதங்களுக்கு பின்னால் தான் தெரிந்தது அவளுக்கு.
அன்று அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை என்று சொல்லலாம். பெரிய வீட்டின் மகன் தன்னை பார்க்கிறான் என்பதில் உண்டான களிப்பு அவளை அவ்வபோது சிவக்க வைத்துக் கொண்டிருந்தது.
நாளாக ஆக அவளுக்கு அந்த வீட்டின் மருமகளாக செல்லும் எண்ணம் அதிகரித்தது. ராமசாமியின் பார்வைக்கு அவளும் பதில் பார்வை கொடுத்தாள். அது ராமசாமியை ஆகாயத்திலேயே மிதக்க வைத்தது.
முத்துலட்சுமியின் வீட்டினர் அவளின் வீட்டிற்கு வந்து சம்மந்தம் பேச வரும் வரையிலும் கூட சற்று கலக்கமாகவே இருந்தது ஒரு வேளை அவர்கள் வாராது போய்விட்டால் என்று.
ஆனால் ராமசாமிக்கு அவள் மீதிருந்த ஆசை வீட்டினரை எதிர்க்க வைத்து இதோ அவளின் கழுத்தில் தாலியை கட்ட வைத்திருந்தது.
இந்திராவின் முகத்தில் தன்னைப் போல ஒரு மிதப்பு வந்து அமர்ந்துக்கொண்டது. கழுத்து நிறைய நகையும் கை நிறைய தங்க வளவிகளும் விலையுயர்ந்த பட்டு புடவை அணிந்திருக்க அது அவளை இன்னும் பெருமை கொள்ளச் செய்தது. 
“இந்திரா ரொம்ப சந்தோசமா இருக்குடி, நல்ல பெரிய இடத்துல வாக்கப்பட்டிருக்க. இந்தா இதை வாங்கிக்க” என்று தங்கைக்கு தன் பரிசாய் ஒரு பெரிய குத்துவிளக்கை கொடுத்தாள் அவளின் தமக்கை சந்திரா.
“இதை எதுக்கு இங்க தூக்கிட்டு வந்தே. பார்த்தல்ல இங்க எல்லாரும் எப்படி வந்திருக்காங்கன்னு. இவ்வளவு சின்ன குத்துவிளக்கை வாங்கிட்டு வந்திருக்கே. தங்கத்துல ஒரு குண்டுமணியாச்சும் வாங்கிட்டு வந்திருந்தா எனக்கும் கவுரவமா இருந்திருக்கும். இது எனக்கு வேணாம் நீயே எடுத்திட்டு போய்டு” என்று தங்கை சொல்ல அதிர்ந்து பார்த்திருந்தாள் சந்திரா.
“நீ ரொம்ப மாறிட்ட இந்திரா” என்று மட்டும் சொன்னாள்.
“மாறித்தானே ஆகணும் நான் ஒண்ணும் ஒண்ணுமில்லாத ராசப்பனோட பொண்ணு இல்லை இப்போ. சின்னசாமியோட மருமக, ராமசாமியோட மனைவி, இந்த பெரிய வீட்டு மகாராணி” என்றாள் அதீத மமதையுடன்.
“ரொம்ப ஆடாதே இந்திரா, நீயும் இந்த வீட்டுக்கு வாழ வந்த ஒரு மருமக அவ்வளவு தான். அதாவது இந்த வீட்டுல நீயும் ஒருத்தி, நீ ஒரு போதும் மகாராணி ஆகமுடியாது. முத்துலட்சுமி அம்மா மட்டும் தான் அதுக்கு பொருத்தமானவங்க” என்று தங்கைக்கு பதில் கொடுத்தாள் அவள்.
அந்த பேச்சு தான் இந்திராவிற்க்கு தூபமாக அமைந்துவிட்டது. அவளுக்கு அந்த வீட்டின் மகாராணியாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாய் வேரூன்ற ஆரம்பித்தது.
————
“வினயா” என்ற உதிரனின் அழைப்பில் உள்ளே வந்திருந்தாள் அவள் ஆக்ரோஷமாய்.
“கேட்டியா அவங்க சொன்னதை எல்லாம்”
“கேட்டேன்…”
“இப்பவும் இவன் உனக்கு வேணுமான்னு சொல்லு”
அவள் பதில் சொல்லாமல் மரக்கட்டையாய் நின்றிருந்தாள். அபிஷேக் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.
“வினயா உன்னோட போட்டோஸ் வீடியோஸ் எல்லாம்…”
“போடுங்க நெட்ல தானே போடுங்க…” என்றாள்.
“வினய் என்ன உளறல் இது” என்றான் அபிஷேக் கண்டிப்பாய்.
“செருப்பு பிஞ்சிடும் அப்படி கூப்பிடாத இனிமே. வெக்கமா இல்லை உனக்கு. நான் என்ன அவ்வளவு முட்டாள்ன்னு நினைச்சியா, நீ என்னை உண்மையா விரும்பினேன்னு தானே நம்புனேன்”
“அதை வைச்சு என் வாழ்க்கையே சீரழிச்சுட்டியே. இவளாம் உனக்கு அம்மாவா. வளர்த்தவங்க எல்லாம் பெத்த அம்மா ஆக முடியாது. இவங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு என் வாழ்க்கையை முடிவு பண்ண நீ யாரு”
“அண்ணா எனக்கு இவன் வேணாம். என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க. செத்தாலும் இவனை நான் பார்க்கவே கூடாது”
“முட்டாள் மாதிரி பேசாதே வினயா உன் வாழ்க்கை அப்படியே முடிஞ்சு போய்டும்” என்றார் உதிரனின் சின்னம்மா.
“உன் புள்ளை கையில சிக்கி சின்னாபின்னமாகுறதுக்கு பதில் நான் தனியாவே இருந்துக்குவேன்”
“நீ ஏன் தனியா இருக்கணும் வினயா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சுக் கொடுப்பேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கு தானே…”
“இருக்குண்ணா”
“உன்னை புரிஞ்ச விஷயம் தெரிஞ்ச ஒருத்தனை உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கறேன்”
“வெக்கமா இல்லை உனக்கு இன்னொருத்தன்கிட்ட கெட்டு போனவளுக்கு போய் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்றே. எவன் கட்டுவான் இனி அவளை…”
“அதைப்பத்தி உங்களுக்கு எதுக்கு கவலை… இப்போ நம்ம கதைக்கு வருவோமா… சொல்லுங்க என்ன திருட்டுத்தனமெல்லாம் நீங்க இதுவரைக்கும் செஞ்சிருக்கீங்க…”
“எனக்கு இப்போ பெரிய சந்தேகமே வந்திருக்கு. எங்கப்பா அவரோட கடைசி காலத்துல ரொம்ப குழப்பத்துல இருந்தாரு. அவரோட மரணமே உங்களாலையோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு… அவரை என்ன பண்ணீங்க??”
“உங்கப்பன் செத்தது என்னால இல்லை…”
“அப்போ யாரால”
“அவங்க நேரடியா அதுக்கு காரணமில்லைங்க” என்றவாறே உள்ளே வந்திருந்தாள் சினமிகா.

Advertisement