Advertisement

29
“சொல்லு சிமி இதுக்கு என்ன அர்த்தம்??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“நீ பிஏ தமிழ் தானே பண்ணே?? உனக்கு கண்டிப்பா இதுக்கு அர்த்தம் தெரியும் சொல்லு சிமி… புள்ளி களவன்னா என்ன?? அதை திருப்பிப்போட்ட வலி கொடுக்கும்ன்னு சொல்றாங்க… இது வழியா இல்லை வலியா”
“இதை நானும் படிச்சு பார்த்தேன் ஆனா மாமா இதை எதுக்கு எழுதினாங்கன்னு எனக்கு புரியலை”
“களவன்னா நண்டு… புள்ளி களவன்னா புள்ளிகளை உடைய நண்டுன்னு அர்த்தம்… அதை திருப்பிப் போட்டா ஏன் வலி கொடுக்கும்ன்னு சொல்றாங்கன்னு விளங்கலை. ஒரு வேளை அந்த நண்டு கொடுக்குல ஒரு போடு போடும்ன்னு சொல்ல வர்றாங்களான்னு எனக்கு தெரியலை”
“இங்க இது மாதிரி நண்டுகள் எங்கயும் பார்த்து இருக்கீங்களா… இந்த நண்டுகள் பெரும்பாலும் சின்ன குளம், குட்டையில தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று அவள் தனக்கு தெரிந்ததை அவனுக்கு விளக்கினாள்.
“ஓ!!” என்றவன் அமைதியாய் எதையோ யோசித்தான்.
“என்னங்க என்ன யோசிக்கறீங்க?? உங்களுக்கு எதுவும் புரிஞ்சுதா??”
“யோசிக்கறேன் இங்க இது போல நண்டு எங்க இருக்க சாத்தியமிருக்குன்னு யோசிக்கறேன்”
சினமிகாவுக்கும் அதே யோசனையே, சட்டென்று ஏதோ தோன்ற “ஏங்க அய்யனார் அருவில இருக்குமா??”
“ஹ்ம்ம் அங்க இருக்க வாய்ப்பிருக்கு, ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்” என்று யோசித்தான்.
அவன் அன்னை சொன்ன புதையலா இருக்கிறது என்ற வார்த்தை ஞாபகத்திற்கு வர இங்கு அது போல எதுவும் இருக்குமா என்று யோசனை போனது அவனுக்கு.
அவன் தந்தையின் அறையில் புதையல் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் பார்த்த ஞாபகம் அவனுக்கு. சில வருடங்களுக்கு முன் அவன் தந்தை அவனை பார்க்க வந்த போது அதை கையோடு கொண்டு வந்த ஞாபகம்.
அப்போது கேட்டபோது அது தன் நண்பருக்கு என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது பார்த்தால் அந்த புத்தகங்கள் அவரின் அறையிலேயே.
“என்னங்க யோசிக்கறீங்க??”
அவளுக்கு பதில் சொல்லாதவன் வேகமாய் எழுந்து வந்து அறையின் கதவை அழைத்து தாழிட்டான்.
“சிமி ஒரு விஷயம் தோணுது. அது எந்தளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியாது…”
“என்னன்னு சொல்லுங்க??”
“அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு விஷயம் சொல்லு”
“என்னங்க??”
“அன்னைக்கு அந்த கதவை திறந்தது யாரு??”
“வந்து அத்தை…” என்று முடிக்காமல் இழுத்தாள் அவள்.
“என்ன அம்மாவா!!”
அவள் அடுத்து சொல்லும் முன் “சினா இந்த வேலை பாதியில நிக்குது என்ன பண்ணனும்ன்னு சொல்லிட்டு போம்மா” என்றார் சீதா வெளியில் இருந்து.
“இதோ வர்றேன் அத்தை” என்றவள் எழுந்திருக்க “சிமி உட்காரு உன்கிட்ட இன்னைக்கு நான் பேசியே ஆகணும்”
“அத்தை கூப்பிடுறாங்க…”
“இல்லை உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அதை நாம தெளிவா பேசியே ஆகணும்”
“எனக்கும் உங்ககிட்ட நெறைய பேசணும், மாமாவோட இன்னொரு குறிப்பு எனக்கு கிடைச்சது. அதையும் இதையும் பார்த்தா நாம ஒரு முடிவுக்கு வரமுடியுதான்னு பாருங்க…” என்றவள் அதை அவனிடம் நீட்டினாள்.
அதை கையில் வாங்கியவன் இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தவன் வாய்விட்டு படித்தான்.
வரையினிலே
மஞ்ஞை கூட்டம்
அகில் மரத்தின்
அருகினிலே
சுனையொன்றின் ஓட்டம்
பாறை இடுக்கினிலே
வழி பிறக்கும்
மறைந்திருக்கும் 
பொக்கிஷமே
உனக்கென்றும் வரமே!!
அதில் பொக்கிஷம் என்பதை தவிர வேறொன்றும் அவனுக்கு அர்த்தப்பட்டிருக்கவில்லை. மறைந்திருக்கும் பொக்கிஷம் வரமா இருக்குமா யாருக்கு வரமா இருக்கும் என்று விடை காண முற்பட்டான்.
 “இதுக்கு அர்த்தம் எனக்கு புரியலையே??” என்று செல்லும் அவளிடம் சொல்ல “சொல்றேன்” என்றவன் வெளியேறி இருந்தாள்.
————–
“என்னங்க இதை எல்லாம் கொண்டு போய் அந்த கல்யாண வீட்டுக்காரங்ககிட்ட கொடுத்திட்டு வந்திடுங்க. நாளைக்கு கல்யாணம் அவங்க சீர் அடுக்குவாங்க கிளம்புங்க”
“சரி சிமி நான் போய் முதல் ஆட்டோ கூட்டிட்டு வந்திடறேன், வந்து ஏத்திக்கறேன்” என்றுவிட்டு வெளியே சென்றவன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தான்.
ஆட்டோவில் பலகாரங்களை ஏற்றி முடிக்கவும் “சரி சிமி நான் போயிட்டு வந்திடறேன். அம்மா எங்கே??”
“அத்தை இன்னைக்கு காலையில கோவிலுக்கு போக முடியலைன்னு இப்போ கிளம்பி போய் இருக்காங்க… சரி பத்திரமா இரு நான் சீக்கிரம் வந்திடறேன்” என்றுவிட்டு கிளம்பினான்.
திருமண வீட்டில் பலகாரங்களை கொடுத்துவிட்டு அதற்கான மீதிப்பணத்தையும் வாங்கிக்கொண்டு அவன் வெளியில் வர எதிரில் வினயா நடந்து போவதை பார்த்தான்.
“வினயா…” என்று ஒரு முறை அழைக்க அவள் சுற்று முற்றும் திரும்பி பார்த்தாள். அவன் குரலில் இன்னும் சிலரும் திரும்பி பார்த்திருக்க நாக்கை கடித்துக் கொண்டவன் தெருவை கடந்து அவள் முன் சென்று நிற்க அவள் அதிர்ச்சியாக நின்றாள்.
அவள் முகத்தில் ஏதோ ஒரு பரபரப்பு பதட்டம் இருந்தது. “எங்க போயிட்டு இருக்கே வினயா??”
“கா… காலேஜ்க்கு அண்ணா…”
“இந்த நேரத்துல உனக்கு எந்த காலேஜ் திறந்து இருக்கு. காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போற நேரத்துல காலேஜ்ன்னு சொல்ற??”
“இல்லை அது வந்து அண்ணா காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அதை தான் சொல்ல வந்தேன்”
“வெறும் ஹேண்ட்பேக் மட்டும் தான் இருக்கு. டிஜிட்டல் ஆகிடுச்சா உங்க காலேஜ்ல புக்ஸ் இல்லாம நோட்ஸ் இல்லாம கிளாஸ் எடுக்கறாங்களோ” என்ற அவன் குரலில் அவளுக்கு கண்கள் கரிப்பது போல இருந்தது.
“சரிண்ணா டைம் ஆச்சு நான் வீட்டுக்கு போகணும், கிளம்பறேன்” என்று அவனை தாண்டிக் கொண்டு செல்ல முற்பட “வீட்டுக்கு அப்புறம் போய்க்கலாம், உன் கூட கொஞ்சம் பேசணும் என்னோட வா…”
“இல்லைண்ணா அம்மா திட்டுவாங்க டைம் ஆச்சு…”
“நீ என் கூட வர்றீயான்னு நான் கேட்கலை, வர்றே சரியா… சித்தப்பாக்கு போன் பண்ணி நான் சொல்லிடறேன்” என்றவன் கைத்தட்டி ஆட்டோவை அழைத்தான்.
இருவரும் அதில் ஏறிக்கொள்ள அவன் சொல்ல ஆட்டோ வந்து நின்றது பைரவர் கோவிலின் முன்னே. ஆட்டோவிற்கு காசைக் கொடுத்து செட்டில் செய்தவன் “என்னை என்ன பார்க்கறே உள்ள போ” என்றான்.
“இங்க எதுக்கு அண்ணா??”
“உன் கூட வீட்டில ப்ரீயா பேச முடியாது. நீ கோவில்ல வைச்சு பொய் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன். உள்ள வந்து சாமி கும்பிடு. அப்புறம் பேசுவோம்…” என்றுவிட்டு அவளுடன் உள்ளே நுழைந்தான்.
வினயாவுடன் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தது உண்மை தான் இப்படி தானே அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. 
ஏதாவது அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்திருந்தவன் பைரவர் கோவிலுக்கு வந்தது ஏதோவொரு உந்துதலில் தான்.
இதோ இருவரும் சாமி கும்பிட்டு வெளியில் வந்து அமர்ந்தனர். சன்னதியில் இருந்த குருக்கள் “இப்போ தான் உங்கம்மா வந்திட்டு போறாங்க… நீங்க பின்னாடியே வர்றீங்க” என்றார்.
“அம்மா வீட்டில இருந்து வந்தாங்க. நான் வெளிய ஒரு வேலையா போயிட்டு வந்தேன் சாமி. தங்கச்சியை கூட்டிட்டு அப்படியே வந்தேன்” என்று பதில் சொல்லியிருந்தான் அவரிடம்.
அமைதியாக அவனருகில் அமர்ந்திருந்த வினயா அவனுக்கு புதிது. “சொல்லு வினயா என்ன பிரச்சனை உனக்கு??”
“ஒண்ணுமில்லை அண்ணா”

“இங்க பாரு என்னை உண்மையாவே உன்னோட அண்ணனா மதிக்கறதா இருந்தா உண்மையை சொல்லு…”
“நிஜமா எதுவும் இல்லை அண்ணா”
“சரி நீ கிளம்பு… இனிமே நமக்குள்ள அண்ணன் தங்கைங்கற உறவில்லை. எதுக்காகவும் நீயோ உங்க குடும்பத்தை சேர்ந்த யாரா இருந்தாலும் என்னைத் தேடி வராதீங்க” என்றவன் கோபமாய் எழுந்திருக்க அவன் காலை யாரோ சுரண்டுவது போல் தோன்ற திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.
அவன் கனவில் பார்த்த அதே பைரவர் அவனருகில். ஆச்சரியத்துடன் அவர் மீது பார்வையை செலுத்தியவன் இன்னமும் அதே இடத்தில் அமர்ந்திருந்த வினயாவை திரும்பிப் பார்க்க அவள் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.
“வினயா எதுக்கும்மா அழறே?? என்னன்னு சொல்லுடா உனக்கு ஒண்ணுன்னா அண்ணன் பார்த்துக்க மாட்டனா சொல்லு வினயா” என்றான்.
“அவன் பேரு என்ன??” என்று அவன் கேட்கவும் அழுதுக்கொண்டே நிமிர்ந்து உதிரனை பார்த்தாள்.
பின் மெதுவாய் “அபிஷேக்” என்றாள்.
“என்ன பண்ணான்னு சொல்லு??” என்று அவன் கேட்கவும் மூன்று விரலை காட்டினாள் அவனிடம்.
“இப்படித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன். சரி சொல்லு கட்டினா அவனைத்தான் கட்டணும்ன்னு நினைக்கிறியா??”
“இல்லைண்ணா வந்து…”
“என்ன??”
“எதுவும் பண்ண முடியலை??”
“நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்ப்பார்க்கலை. ஒருத்தனை பார்த்தா உன்னால ஜட்ஜ் பண்ண முடியாதா அவன் நல்லவனா கெட்டவனான்னு…”
“அவர் நல்லவர் தான் அண்ணா”
“நல்லவர் செய்யக்கூடிய காரியமா இது… நீ எப்படி கவனமில்லாம இருந்தே??”
“அண்ணா ப்ளீஸ்…”
“தங்கச்சிகிட்ட கெட்ட வார்த்தை பேசக்கூடாதுன்னு நினைக்கிறேன். இது வீடா இருந்திருந்தா நடக்கறதே வேறயா இருந்திருக்கும்”
“அண்ணா!!”
“அவனுக்கு என்ன வேணுமாம் இப்போ??”
“அது வந்து…”
“இப்படித்தான் அன்னைக்கு வந்து போயின்னு உளறிட்டு இருந்திருக்கே… என்ன வேணும் அவங்களுக்கு?? அப்பாவோட ரூம்ல என்ன எடுக்கப் போறாங்க…அவங்க நோக்கம் வீடா இல்லை வேற எதுவுமா??” என்ற அவனின் நேரடியான கேள்வியில் திணறினாள் அவள்.
“இப்படி வாயே திறக்காம இருந்தா எதையும் மாத்த முடியாது வினயா… பேசு முதல்ல சித்தப்பாவும் மென்னு முழுங்கறார் நீயும் அப்படியே இருக்க…”
“அவன் அம்மா அப்பா யாரு?? என்ன பண்றான் அவன்?? அவனோட எதிர்பார்ப்பு என்ன??” அனைத்தையும் ஒரே கேள்வியில் கேட்டான்.
“அவர் அபிஷேக், கம்ப்யூட்டர் என்ஜினியரா இருக்காரு. அம்மா மட்டும் தான்…”
“அவங்க வீடு எங்கே இருக்கு??”
“தெரியாது…”
“உனக்கெப்படி அவனை தெரியும்”
“எங்க காலேஜ் பக்கத்துல தான் அவரோட பிரௌசிங் சென்டர் இருக்கு… நாங்க எல்லாரும் அங்க தான் ப்ரௌஸ் பண்ண போவோம்”
“உங்களுக்கெல்லாம் வீட்டுல லேப்டாப் எதுக்கு வாங்கி கொடுத்திருக்காங்க. அதை விட்டுட்டு அங்க என்ன வேலை உங்களுக்கு…”
“அண்ணா ப்ளீஸ்ண்ணா நீ கேட்கறது எனக்கு என்னவோ போல இருக்கு”
“ஆம்பிளை பசங்களுக்கு மேல இருக்கீங்க நீங்களும்” என்று முறைத்தான் தங்கையை.
“அவனுக்கு என்ன வேணுமாம் அதை முதல்ல சொல்லு”
“பெரியப்பா ரூம்ல ஏதோ டாக்குமென்ட் இருக்காம் அதை எடுத்திட்டு வரச் சொன்னாங்க என்னை…”
“அந்த ரூம்ல டாக்குமென்ட் இருக்கறது அவங்களுக்கு எப்படி தெரியும்??”
“நம்ம ராஜபரம்பரையில வந்தவங்கன்னு அவங்களுக்கு தெரியும்”
“எப்படி??”
“நான் பேச்சு வாக்குல ஒரு தரம் சொன்னேன். நம்ம பெரியப்பா அவங்க அப்பாவை ஏமாத்தி சொத்து எழுதி வாங்கிட்டதா ஏதோ சொன்னாருண்ணா”
“அப்புறம் வேற என்ன கதையெல்லாம் அவன் விட்டான் அதை நீங்க நம்புனீங்கன்னு சொல்லுங்க…”
“அவங்க அம்மா அப்பாகிட்ட இந்த கல்யாணம் நடக்கணும்ன்னா அந்த டாக்குமென்ட் வரணும் இல்லைன்னா வீடு வேணும்ன்னு சொல்லி இருக்காங்க”
“யாரோட வீடு??”
“அந்த பெரிய வீடு தான் கேட்டு இருக்காங்க”
“பெரிய சித்தப்பாவுக்கும் விஷயம் தெரியுமா??”
“இல்லை அப்பா அவங்ககிட்ட வேற ஏதோ சொல்லி தான் கூட்டிட்டு வந்திருக்காங்க…”
“நீ அப்படி அவனை நம்புனே வினயா, நீ ரொம்ப தெளிவான பொண்ணுன்னு நினைச்சேன் இப்படி போய் சாக்கடையில விழுந்திருக்கே…”
“எங்க வீட்டுல என்னமோ நடக்குது அதுக்கு தான் ஆளாளுக்கு இப்படி எங்க வீட்டை சுத்தி சுத்தி வர்றாங்க. அந்த அபிஷேக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு. எனக்கு அவனை பார்க்கணும் கூட்டிட்டு போ”
“நானும் அவரும் எப்பவும் வெளிய தான் மீட் பண்ணுவோம் அண்ணா…”
“எங்க மீட் பண்ணுவீங்க??” என்ற அவன் கேள்விக்கு அவள் இடத்தை சொல்ல “அவனை போன் பண்ணி உடனே வரச்சொல்லு”
“அண்ணா…”
“நான் வர்றேன்னு நீ சொல்ல வேண்டாம். நீயா அவனை மீட் பண்ற மாதிரியே பண்ணு. நான் இடையில வர மாட்டேன், எனக்கு அவனை தூரத்துல இருந்தே பார்த்தா போதும்…”
“இப்போ தான் அவரை பார்த்திட்டு வர்றேன், உடனே எப்படி??”
“எங்க அப்பா ரூம்ல இருந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் உங்கப்பா எடுத்திட்டு வர்றார்ன்னு சொல்லு”
“சரிண்ணா…” என்றவள் அபிஷேக்கிற்கு போன் செய்ய அவள் விஷயத்தை சொன்ன அடுத்த அரைமணியில் அவன் அவளை பார்க்க வந்திருந்தான்.
————
“டேய் என்னடா சொன்னா அவ?? கொஞ்ச நேரம் முன்னாடி தானே போய் பார்த்திட்டு வந்தே?? மறுபடியும் எதுக்கு கூப்பிட்டா??”
“அம்மா அவங்கப்பாகிட்ட நம்ம சொன்ன வேலையை அவர் செஞ்சிட்டாராம். நீங்க சொன்ன அந்த பூப்போட்ட பைலை எடுத்திட்டு வந்திட்டாருன்னு தெளிவா சொன்னாம்மா…”
“நிஜமாவா??”
“ஆமாம்மா…”
“அபிஷேக் சீக்கிரமே நம்மோட காத்திருப்புக்கு பலன் கிடைக்க போகுதுன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு…” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னே ஏதோ சத்தம் கேட்டது.
திரும்பி பார்க்க உதிரன் அங்கு நின்றிருந்தான் ஒரு சின்ன சிரிப்புடன் “எதிர்பார்த்தேன்ம்மா நீங்க தான் அதுன்னு நான் எதிர்பார்த்தேன்…”
“ஆமா நான் உங்களை எப்படி கூப்பிடணும் அம்மான்னா இல்லை சின்னம்மான்னா??” என்று கேட்க முகம் வெளிறி நின்றிருந்தனர் அம்மாவும் பிள்ளையும்.

Advertisement