Advertisement

28
“நாம எங்கயோ தப்பு பண்ணுறோம் என்னன்னு தான் புரியலைம்மா…”
“எனக்கும் அதே தான் யோசனையா இருக்கு… எல்லாமே இப்போ நம்ம கையை விட்டு போய்ட்டுகிட்டு இருக்க மாதிரி தோணுது…”
“பக்கத்துலவே வைச்சுட்டு ரொம்ப தேடுறோம்ன்னு நினைக்கிறேன். இனி நமக்கு அதிக நேரமில்லை அவங்க நம்மளை கண்டுப்பிடிக்கறதுக்குள்ள அங்க இருக்கற எல்லா டாக்குமெண்ட்ஸ் எடுக்கணும்”
“உதிரனோட அப்பன் ஏதேதோ வரைஞ்சு வைச்சிருக்கான். அதை அடுத்தவன்கிட்ட காமிச்சா அவனுக்கு பங்கு கொடுக்கணுமோன்னு நான் இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்டேன்…”

“நம்மகிட்ட இருக்கறது கொஞ்சம் தான்… மிச்சம் எல்லாம் அவன் வேற எங்கயோ தான் வைச்சிருக்கணும்… உதிரனுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அவனோட ரூம் வரைக்கும் போக முடிஞ்சது”
“இப்போ என்னடான்னா அவன் பொண்டாட்டி அங்க இருக்கா. அவளைத் தான்டி போக முடியலை என்னால. முன்ன மாதிரி அந்த வீட்டுல நடமாட முடியலை…”
“நீங்க கொஞ்சம் இல்லைம்மா ரொம்பவே டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க. இப்போ பீல் பண்ணி என்னம்மா பிரயோஜனம்??”

“போதும்டா ரொம்ப பேசாத. என் கைக்கு கிடைச்சதை எல்லாம் உங்கப்பாகிட்ட கொண்டு வந்து கொடுத்தா அவர் தேடறேன்னு அந்த அய்யனார் அருவிக்கு கிளம்பிட்டாரு”
“என்னம்மா சொல்றீங்க அய்யனார் அருவியா??”
“ஆமா அங்க தான் புதையல் இருக்குன்னு அந்த குறிப்புல இருந்துச்சு. அதை நம்பி அங்க போய் உங்கப்பா அந்த அருவில விழுந்து உங்கப்பா செத்தது தான் மிச்சம்”
“அப்பா அருவில தடுக்கி விழுந்து இறந்தது இதை எடுக்க போய் தானாம்மா”
“ஆமா…”
“அது ஏன்மா உண்மையா இருக்கக் கூடாது…”
“எனக்கு அப்படித்தான் தோணுச்சு முதல்ல. ஆனா அப்புறம் தான் இன்னொரு விஷயத்தை யோசிச்சேன்”
“என்னம்மா அது??”
“நமக்கு முன்னாடியே போய் உதிரனோட அப்பா ஏன் அதை எடுத்திட்டு வந்திருக்கக்கூடாது…”
“வந்திருக்கலாம் தான். ஆனா எனக்கொரு சந்தேகம்”
“கேளுப்பா”
“புதையல் அப்படிங்கறது ஒருத்தர் மட்டுமே கண்டுப்பிடிச்சாலும் இன்னொருத்தர் உதவி இல்லாம அதை கொண்டுட்டு வரமுடியுமாம்மா”
“இது நல்ல கேள்வி தான் ஆனா இதுக்கான பதில் என்கிட்ட இப்போதைக்கு இல்லை…”
“நீ சொல்ற மாதிரி வைச்சுக்கிட்டா உதிரனோட அப்பா தனியா அந்த புதையலை எடுத்திருக்க முடியாது தான்… ஆனா…”
“என்னம்மா ஆனா??”
“புதையல் விஷயத்துல எனக்கு இன்னொரு விஷயம் உதைக்குது”
“என்னம்மா அது??”
“உதிரனோட அப்பா நெறைய படம் வரைஞ்சு வைச்சிருக்கான். அதை வைச்சு பார்க்கும் போது அந்த பொக்கிஷம் ஒரே இடத்துல மட்டும் இருக்கும்ன்னு எனக்கு தோணலை…”
“இதை நான் ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன்ம்மா… நீங்க தான் அந்த ரூமை தவிர வேற எங்கயும் தேட மாட்டீங்கறீங்க??”
“நான் தேடலைன்னு உனக்கு தெரியுமா… அந்த வீட்டுல இருக்கற ஒவ்வொரு மூலையும் எனக்கு அத்துப்படி… நான் தேடி பார்க்காத இடமில்லை. உனக்கென்ன தெரியும் நான் அந்த ரூமை மட்டும் தான் பார்த்தேன்னு நினைச்சியா…”
“எல்லா ரூமையும் நான் தேடி இருக்கேன். எல்லா ரூமோட சாவியும் என்கிட்ட ஒரு செட் இருக்கு… உதிரனோட சித்தப்பா அத்தைங்கன்னு ஒருத்தர் ரூம் விடாம தேடி இருக்கேன், இப்பவும் தேடிட்டு இருக்கேன்”
“அம்மா அப்படி நீங்க தேடி இருந்தா இந்நேரம் நமக்கு அது கிடைச்சிருக்கணும். எங்கயோ நீங்க தவறவிடுறீங்க எங்கன்னு யோசிங்க”
“இதுக்கு மேல நமக்கு அதிக நேரமில்லை. நாமே வேற வினயாவோட அப்பா மூலமா உதிரனை கிளப்பிவிட்டிருக்கோம். அது நமக்கு சாதகமா முடிஞ்சா நல்லது, பாதகமா முடிஞ்சதுன்னா, எல்லாத்துக்கு ஒரு வழி யோசிக்கணும். இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு…”
“என்ன பதினைஞ்சு நாள் தான் இருக்கா?? என்னம்மா சொல்றீங்க அதென்ன கணக்கு, புதுசா சொல்றீங்க…”
“அந்த கணக்கு உனக்கு புரியாது…” என்று முடித்துவிட்டார் அவர்.
————
“என்னங்க ஒரு மாசத்துக்கு நாம கடை போட வேண்டாம்…”
“என்ன விளையாடுறியா சிமி??”
“விளையாடலைங்க நிஜமா தான் சொல்றேன்”
“எதுக்காக??”
“நான் தான் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேன்ல… என்னமோ நடக்கப் போகுதுன்னு…”
“அதுக்காக நம்மை பொழைப்பை பார்க்கக் வேண்டாம்ன்னு சொல்றியா??”
“நான் அப்படி ஒரேடியா இழுத்து மூட சொல்லலையே. ஒரு மாசம் தானே, ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க…”
“நம்மை நம்பி ஆர்டர் கொடுத்தவங்களுக்கு என்ன செய்ய??”
“அதெல்லாம் முடிச்சுக் கொடுத்திடலாம். எப்பவும் போல நீங்க ஆர்டர் எடுங்க அதை முடிச்சுக்கலாம். கடை மட்டும் இப்போ வேண்டாம்…”
“எதுக்காகன்னு சொல்லு??”
“ரெண்டு நாள்ல சொல்றேன்”
“வர வர இந்த வீட்டுல நடக்கறதும் எனக்கு புரியலை. நீ நடந்துக்கற விதமும் எனக்கு புரியலை… கண்டுப்பிடிக்கறேன் நீங்க சொல்லாமலே என்ன நடக்குதுன்னு நானே கண்டுப்பிடிக்கறேன்… இந்த பத்து பதினைஞ்சு நாளா எனக்கு பைத்தியம் பிடிக்க வைச்சுட்டீங்க”
“என்னங்க நான் சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டீங்களா??”
“நான் உன்னை தப்பா எடுத்துக்கவோ நீ சொன்னதை தப்பா புரிஞ்சுக்கவோ நினைக்கலை. எனக்கு உண்மை தெரியணும், நம்ம வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியணும், இவ்வளவு நாள் தெரிஞ்சுக்காம இருந்ததே தப்பு…”
“உங்க பேச்சுல ஒரு ஆவேசம் தெரியுது. நீங்களே தெரிஞ்சுக்கோங்க வேணாங்கலை, ஆனா கொஞ்சம் நிதானமா இருங்க…”

“நான் பார்த்துக்கறேன் சிமி. நீ எனக்கு சப்போர்ட்டிவா இருக்கவரை எதுவும் தப்பாகாது… முதல்ல வினயா விஷயத்துல இருந்து ஆரம்பிக்கறேன்” என்றான்.
————-
“என்னங்க நாளைக்கு நானும் அத்தையும் பைரவர் கோவிலுக்கு போறோம்”
“நீயும் சேர்ந்திட்டியா அந்த லிஸ்ட்ல” என்று அவன் கேட்க ஒரு சிரிப்பை கொடுத்தாள் அவனுக்கு.
“எப்போ வருவீங்க??”
“ஈவினிங் தான் வருவோம்”

“அதுவரைக்கும் நான் என்ன செய்ய??”
“என்ன வேணா செய்யலாம்… எவ்வளவோ செய்யலாம்…” என்று குறிப்பு கொடுத்து நகர்ந்தாள் அவன் மனைவி.
‘எதுக்கு இப்படி சொல்றா?? என்னமோ விஷயம் இருக்கு. ஒரு வேலை அப்பா ரூம்ல என்ன இருக்குன்னு நானே தெரிஞ்சுக்க தான் எனக்கு இந்த தனிமையை கொடுக்கறாளா??’ என்று என்னென்னவோ யோசித்தவனுக்கு இறுதியில் அவள் அதற்குத்தான் கூறியிருக்கிறாள் என்றே தோன்றியது.
மறுநாள் காலையில் மனைவியின் அன்னையும் கோவிலுக்கு கிளம்பிச் சென்ற பின்னே அவன் செய்த வேலை ஏராளம்…
———-
“உதிரா… உதிரா…”
“என்னம்மா??”
“இந்த ஸ்டாரே ரூம் லாக் திறக்க மாட்டேங்குதுப்பா…”
“இனிமே எது திறக்கறதா இருந்தாலும் என்னை கூப்பிடுங்கம்மா இன்னொரு செட் கீ ரெடியாகவும் உங்ககிட்ட கொடுக்கறேன்”
“என்னாச்சு உதிரா?? என்ன நடக்குது இங்க??”
“ஒண்ணுமில்லைம்மா எல்லா லாக்கும் பழசா இருக்கா அதான் புதுசு மாத்திட்டேன். என் பிரண்ட் ஒருத்தன் புதுசா பயோ லாக் சிஸ்டம் அவனே கண்டுப்பிடிச்சிருக்கான்ம்மா… அதை தான் இங்க மாத்தியிருக்கேன்…”
“அப்போ ஒரு ஒரு வாட்டியும் நான் உன்னை கூப்பிடணுமா, நீ வீட்டில இல்லாத நேரம் என்ன செய்ய?? என்னடா பண்றே நீ?? இங்க என்ன பெரிய புதையலா இருக்கு பெரிசா பூட்டு போட வந்திட்டான்” என்று அவர் சத்தம் போட்டார்.
“அம்மா திரும்ப சொல்லுங்க…”
“என்ன??”

“கடைசியா என்ன சொன்னீங்க ஏதோ புதையல்ன்னு…”
“ஆமா இங்க என்ன புதையலா இருக்கு எவனோ தூக்கிட்டு போகப்போறான்னு நீ பூட்டு போடறியே??” என்று அவர் பேசிக்கொண்டிருக்க எதுவோ புரிந்தவன் போல் அவருக்கு பதில் கூட சொல்லாமல் உதிரன் அவன் தந்தையின் அறை நோக்கி ஓடினான்.
சென்ற வேகத்தில் கையில் காகிதங்களை எடுத்து வந்தவன் “சிமி… சிமி…” என்று கூவினான்.
“இதோ வந்திட்டேன் எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க…” என்றவாறே சமையலறையில் இருந்து வெளியில் வந்தாள் அவள்.
“இவ்வளவு நேரம் எங்க போயிருந்தே??”
“அந்த கல்யாண ஆர்டர் எடுத்தீங்கல்ல அதுக்கு சாமான் வாங்க போயிருந்தேன்…”
“ஓகே கொஞ்சம் உள்ள வா…” என்றவன் அவர்களை அறைக்கு சென்றான்.
பின்னோடே அவளும் உள்ளே நுழைந்தாள். “இங்க பாரு…” என்று அவள் முன் அவன் நீட்டியதை பார்த்திருந்தாள்.
“என்ன இது??”
“உனக்கு புரியலைன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன்”
“நிஜமாவே எனக்கு புரியலைங்க…” என்று சொல்லி அவள் குருஞ்ச்சிரிப்பை தவழவிட “எனக்கு புரிஞ்சுடுச்சு, உனக்கு புரிஞ்சதுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு…”
“இதுல எழுதியிருக்கறதுக்கு எனக்கு அர்த்தம் சொல்லு…” என்றவன் ஆள் கையில் ஒரு காகிதத்தை கொடுத்தான்.
புள்ளி களவன்
திருப்பிப்போடு
வலி கொடுக்கும்
புது வழி பிறக்கும்
————–
“போச்சு போச்சு எல்லாம் போச்சு…”
“என்னம்மா எப்போ பார்த்தாலும் புலம்பிட்டே இருக்கீங்க??”
“உன்னைய மாதிரி புத்தியே இல்லாத புள்ளை இருந்தா புலம்பாம என்ன செய்ய முடியும்”

“அம்மா…” என்றவனின் கண்கள் ஒரு கணம் கலங்கிவிட அதை கண்டவர் தன் வாயை மூடிக் கொண்டார்.
“மன்னிச்சிடுப்பா உன்னை கஷ்டப்படுத்தணும்ன்னு நினைச்சு நான் சொல்லலை… நான் அப்போவே சொன்னேன்ல உதிரன் அவன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்”

“என்ன செஞ்சான்னு சொல்லுங்கம்மா அப்போ தான் அடுத்து என்ன செய்யறதுன்னு பார்க்க முடியும்”
“ஹ்ம்ம்…” என்றவர் “வீட்டுல இருக்கற எல்லா டோர்ஸ்க்கும் வேற லாக் மாத்திட்டான். கை ரேகை வைக்குற மாதிரி மாத்தி வைச்சிருக்கான்…”

“அவன் ஏன்மா இப்படி லூசு மாதிரி பண்ணுறான்”
“அவன் லூசா… அவன் எவ்வளவு தெளிவா இதை செஞ்சிருக்கான். இப்படி செஞ்சிருக்கான்னா அவனுக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்குன்னு தானே அர்த்தம்… அடுத்து அவன் நம்மளை தான் நெருங்க முயற்சி செய்வான்…”
“ஏன்மா வீட்டில நடமாட்டம் இருக்கறதை வைச்சு அவனுக்கு ஏதோ டவுட்டு வந்திருக்கும். அதனால இப்படி செஞ்சிருப்பான்…”
“நீ முட்டாள்ன்னு நான் ஏன் சொல்றேன்னு உனக்கு புரியுதா… அவனுக்கு டவுட்டு மட்டும் வந்திருந்தா எல்லா ரூமுக்கும் வேற பூட்டு போட்டிருப்பான் அவ்வளவு தான்…”
“அவன் வேற எதையோ தெரிஞ்சுக்கிட்டு இருக்கான். இல்லைன்னா நாம ஏதோ தப்பு செஞ்சிருக்கோம் அவன் கண்ணுலபடுற மாதிரி. கவனமா இருக்கணும் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்”
“நாம யாருன்னு தெரியாத வரைக்கும் நம்மோட நடமாட்டம் அந்த வீட்டில இருக்க முடியும்”
“தெரிஞ்சிடும்ன்னு பயப்படுறீங்களாம்மா”
“பயமில்லை எனக்கு. அப்படி இருந்தா இவ்வளவு நாள் நான் அங்க போயிருப்பேனா… நான் யாருன்னு அவங்க கண்டுப்பிடிச்சாலும் நட்டம் அவங்களுக்கு தான் எனக்கு எதுவும் ஆகாது…” என்று சொன்னவரின் குரலில் அப்படியொரு உறுதி தெரிந்தது.

Advertisement